6 – வேரோடும் நிழல்கள்
“எனக்கு பைத்தியம் பிடிச்சிரிச்சின்னு கூட்டிட்டு வந்தீங்களா?” என நிழலினி அந்த இடத்தினைப் பற்றி தெரிந்ததும் கேட்டாள்.
“இப்படியே போனா கண்டிப்பா நீ பைத்தியம் ஆகிடுவ.. அதான் இங்க கூட்டிட்டு வரச் சொன்னேன்.. இது மெண்டல் ஹாஸ்பிடல் இல்ல.. உள்ள வா..” என சக்தி கோபமாக பேசிவிட்டு உள்ளே சென்றான்.
“பாரேன் நம்ம ரூல்ஸ் ரங்கசாமிக்கு இங்க வந்ததும் கோவமெல்லாம் வருது.. கண்டிப்பா இவர் நல்ல டாக்டர் அஹ் தான் இருக்கணும். வா வா.. எல்லா படத்துலையும் காட்டறமாதிரி உன்னை ஒரு சேர்ல படுக்க வச்சி.. உனக்கு இப்போ 5 வயசு குறஞ்சிடிச்சி இப்ப நீ என்ன பண்ணிட்டு இருந்தன்னு கேக்கறாங்களா பாப்போம்..” என விஷாலி அவளிடம் வளவளத்துக் கொண்டே உள்ளே வந்தாள்.
தரணி சிரிப்புடன் அவளை பார்த்துவிட்டு, அருகே அமைதியாக இருந்த நிழலினியைப் பார்த்தார். இவளா? என கண்ணசைத்து கேட்டுவிட்டு உள்ளே சென்றார்.
“ஏண்டா சசி நாங்க வந்ததும் அவரு உள்ள போறாரு?”
“உன்னால தான். கொஞ்ச நேரம் அமைதியா தான் இரு பாப்போம்.. லொடலொடன்னு தான் எப்பவும் இருக்க..” சக்தி எரிச்சலாக கூறினான்.
“ஏண்டா உன்ன நம்பி இவள இங்க தூக்கிட்டு வந்தேன்ல.. அவரு நிஜமா டாக்டர் தானா ? இல்ல உன்னமாதிரி டுபாக்கூர் அஹ்?”
“ஏய்.. கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இரு.. இவரு சைக்காலஜில phd பண்ணிட்டு இருக்காரு.. ரொம்ப கேட்டு இவர்கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? நினி இவள பாரு..”
இவர்களின் சம்பாஷனைகள் எதற்கும் அவள் பதில் கூறாமல் அந்த அறையை வலம் வந்துக் கொண்டிருந்தாள். மனதை அமைதிப் படுத்தும் வெளிர்நீல நிறமும், அதில் ஆங்காங்கே வரையப்பட்டிருந்த குழந்தைகள் விரும்பும் படங்களும், தொங்கவிடப்பட்டிருந்த பூந்தொட்டிகளும் என அந்த இடமே அவளுக்கு பெரும் அமைதியை கொடுத்தது.
நேற்று மாலையில் இருந்து அலைகலைத்து கொண்டிருந்த உடலும், மனமும் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி நிலைக்கு திரும்பி மீண்டும் அவள் மருத்துவரை சந்திக்கையில் முகம் ஓரளவிற்கு தெளிவாக இருந்தது. முன்பிருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும் பெரும் வித்தியாசம் அவளது முகத்தில் தெரிந்தது. அதில் அவரும் புன்னகைத்தபடி சண்டையிட்டுக் கொண்டிருந்த விஷாலி மற்றும் சக்திசிவன் முன்பு வந்தமர்ந்தார்.
“உங்க ரெண்டு பேருக்குமா நான் கவுன்சிலிங் குடுக்கணும்? சக்தி உனக்கு கல்யாணம் எப்ப ஆச்சி எனக்கு சொல்லவே இல்ல?” என தரணி கேட்டதும் விஷாலி முழிக்க நிழலினி சிரித்தாள்.
“நல்ல ஸ்மைல் உங்களுக்கு.. பிளீஸ் உக்காருங்க..” என தரணி கூறவும் அவர் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் நிழலினி.
நிழலினி அந்த மேஜையில் இருந்த பொருட்களில் கண்களை ஓட்டவும், தரணி சக்தியிடம் பேசத் தொடங்கினார்.
“சொல்லு சக்தி என்ன விசேஷம்? வீட்ல என்ன சொல்றாங்க? டிவோர்ஸ்க்கு வீட்ல ஓகே சொல்லிட்டாங்களா?” என மேலும் மேலும் கேள்விகளாக கேட்டுக் கொண்டே சென்றார்.
“அண்ணா.. என்னன்னா நீ? எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல. நீ டிவோர்ஸ் வரைக்கும் பேசற?”
“நீங்க ரெண்டு பேரும் அப்படி தான் பண்ணிட்டு இருக்கீங்க.. உன் ஃப்ரெண்ட் கூட நான் பேசவேணாமா? ரெண்டு பெரும் வெளிய போங்க..” என அவர்களை தூரத்திவிட்டார்.
விஷாலி சென்றதும் நிழலினி தவிப்புடன் அவள் செல்வதையே பார்த்தாள். “உங்களுக்கு உங்க ஃப்ரெண்ட் இங்க இருக்கணுமா?” என தரணி கேட்டதும் ஆமென தலையசைத்தாள்.
“ஒரு நிமிஷம் சக்தி..” என இருவரையும் அழைத்து சோபாவில் அமரக் கூறி தானும் அங்கே வந்து அமர்ந்து கொண்டார். நிழலினி மெல்ல எழுந்து விஷாலி அருகே அமர்ந்துக் கொண்டாள்.
“சொல்லுங்க டீ பிடிக்குமா ? காப்பி பிடிக்குமா?” எனக் கேட்டபடி ஃபோன் எடுத்தார்.
“டாக்டர் காலைல இருந்து இன்னும் சாப்பிடல நம்ம ஹோட்டல் போய் சாப்பிடலாமா? அங்க நீங்க கேக்கற எல்லாம் கூட கெடைக்கும்.. சசி பில் கட்டிருவான்..” எனக் கூறியபடி விஷாலி எழுந்திரிக்க, நிழலினியும் உடன் எழுந்தாள். அவளும் நேற்று இருந்து ஒன்றும் சாப்பிடவில்லை என்று சக்தி அறிந்ததால் சாப்பிட செல்லலாம் என்று தரணியிடம் பேசியபடியே வண்டியை எடுத்தான்.
நால்வரும் ஒரு ரெஸ்டாரெண்ட் உள்ளே சென்று அவர்களுக்கு விருப்பமான உணவை கூறிவிட்டு அமர்ந்திருந்தனர். அது குடும்ப அறை என்பதால் வெளியாட்கள் இடையூறுயின்றி நால்வரும் சகஜமாக பேசி கொண்டு உணவருந்த தொடங்கினர். நிழலினி மட்டும் மிகவும் அரிதாகவே பேசினாள். அதுவும் விஷாலியின் தூண்டுதலில் என்பதை நன்றாக குறித்துக் கொண்டார் தரணி.
ஒரு மணிநேரம் கடந்தபின் மீண்டும் நால்வரும் அதே ஷோபாவில் அமர்ந்து இருந்தனர்.
“இப்ப ஆரம்பிக்கலாமா?” என தரணி கேட்டுவிட்டு ஒரு கையேடு எடுத்துக் கொண்டார்.
“உங்க பேரு..?”
“நிழலினி”
“அப்பா அம்மா பேரு?”
“ஞானப்பெருமாள் – விஜயம்”
“ரெண்டு பேரும் உங்க கூட தான் இருக்காங்களா?”
“ஆமா”
“நல்லா இருக்காங்களா?”
“புரியல..”
“நல்லா நடமாட்டிட்டு இருக்காங்களா?”
“ம்ம்..”
“அவங்களுக்கு ஏதாவது மெடிக்கல் கேர் எடுக்கறீங்களா?”
“இல்ல..”
“மெண்டல் கேர் எடுக்கறீங்களா?”
“……”
“உங்களோட அவங்க நல்லா பழகறாங்களா?”
“ம்ம்..”
“அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்காங்களா? அதாவது ஒரு சராசரி கணவன் மனைவியா இருக்காங்களா?”
“இல்ல..”
“ஏன்?”
“நெறைய சண்டை. . வாக்குவாதம்.. பேசறதே இல்ல..”
“எப்ப இருந்து?”
“எனக்கு விவரம் தெரியறதுக்கு முன்ன இருந்தே..”
“சரி.. அவங்க வாக்குவாதம் நடக்கறப்ப இல்ல சண்டை போடறப்ப நீங்க என்ன பண்ணுவீங்க?”
“என்னால முடிஞ்சவரை சமாதானம் பண்ணுவேன்..” எனக் கூற கூற அவளது கண்கள் கலங்க தொடங்கியது.
விஷாலி அவளது கையை அழுத்தவும் தரணி வேண்டாமென தலையசைத்தார்.
“உங்க முகம் பார்த்தா அமைதியாவாங்களா?”
“இல்ல.. அவங்களோட வாதம் எல்லாம் கொட்டின அப்பறம் தான் அமைதி ஆவாங்க ரெண்டு பெரும்..”
“உங்களுக்கு இதனால பாதிப்பு இருக்குன்னு நினைக்கறீங்களா?”
“எனக்கு தெரியல..”
“சரி நீங்க என்ன பண்றீங்க?”
“ஸ்கூல் டீச்சர்..”
“வாவ்.. என்ன வயசு பசங்களுக்கு கிளாஸ் எடுக்கறீங்க ?”
“8த்ல இருந்து எடுக்கறேன் டாக்டர்..”
“நீங்க எனை பேர் சொல்லியே கூப்பிடலாம்.. டீன்ஏஜ் பசங்கள எப்படி ஹாண்டில் பண்றீங்க?”
“புரியல டாக் .. தரணி..” என தயங்கியபடிக் கேட்டாள்.
“இந்த வயசு பசங்கள ஹாண்டில் பண்ண நமக்கு அந்த அளவுக்கு பொறுமையும், அவங்கள சமாளிக்கற திறனும் இருக்கணும். அதான் எப்படி ஹாண்டில் பண்றீங்கன்னு கேக்கறேன்.. உங்க ஸ்டூடண்ட்ஸ் உங்ககூட பேசுவாங்களா?”
“பேசுவாங்க.. “
“என்ன சப்ஜெக்ட் எடுக்கறீங்க ?”
“கம்ப்யூட்டர் சயின்ஸ்..”
“சரி.. உங்ககிட்ட ஈஸியா பசங்க பேச முடியுமா? லிபரல் அஹ் இருப்பீங்களா? இல்ல ரொம்ப கெடுபிடியா படிப்பு பத்தி மட்டும் தான் பேசுவீங்களா?”
“பொதுவா ஓரளவு லிபரலா தான் இருப்பேன். பசங்கள கட்டி வைக்கறது எனக்கு பிடிக்காது. அவங்க போக்குல விட்டு தான் போவேன். இந்த வயசு பசங்களுக்கு நம்ம கட்டாயம் செஞ்சாலோ, கெடுபிடியா இருந்தாலோ பிடிக்காது.. அவங்கள நாமளும் நெருங்க முடியாது..”
“நல்ல புரிதல்.. ஆனா இத ஏன் நீங்க உங்க வீட்ல உபயோகப்படுத்தறது இல்ல?”
“அவங்க சின்ன பசங்க..”
“மனசளவுல வளராம, புரிஞ்சிக்காம, வயசுக்கு தகுந்த மனமுதிர்ச்சி வராதவங்களும் சின்ன பசங்க கணக்கு தான் நிழலினி.. உங்கள நான் தப்பு சொல்லல.. ஆனா உங்க பார்வை மாறணும்.. எல்லாருக்குமே இங்க ஒரு தனி வாழ்க்கை இருக்கு. அதே போல கல்யாணம் ஆகிட்டா அப்பா அம்மாவாவும் அவங்க ஓரளவாது சரியா இருக்கணும். உங்க வீட்ல அது நடக்கல.. அதனால உங்களுக்கு கணவன் மனைவி உறவு மேல நம்பிக்கை வரல. இன்னும் சொல்லப்போனா குடும்பம் கல்யாணம்னு நெனைச்சாலே உங்களுக்கு பயம் வருது. நீங்க சொல்றத வச்சி பாத்தா உங்களுக்குள்ள இருக்க ஏக்கமும், பாதிப்பும் உங்கள சரியா யோசிக்க விடாம பயமுறுத்திட்டே இருக்கு..” எனச் சொல்லிக்கொண்டே சென்றவன் நிழலினி கண்களில் கலக்கம் கண்டு தனது பேச்சை நிறுத்தினான்.
“இது பெரிய பிரச்சனை இல்ல மிஸ்.நிழலினி.. நீங்க அடல்ட் அதனால உங்களால இத ஈஸியா ஹாண்டில் பண்ணி வெளிய வர முடியும். உங்களால முடியுங்கற நம்பிக்கை மட்டும் உங்கமேல வைங்க போதும்..”
“அண்ணா..” என சக்திசிவன் ஆரம்பிக்கும்போது தரணி தடுத்துவிட்டு மேலும் நிழலினியை பார்த்து பேசத் தொடங்கினான்.
“இந்தாங்க.. இந்த கேள்விக்கு எல்லாம் பதில் எழுதுங்க.. நாங்க மூணு பெரும் வெளிய இருக்கோம். எந்த இடையூறும் இல்லாம இத நீங்க உங்க மனசும் மூளையும் மட்டுமே வச்சி பதில் சொல்லணும்.. இது உங்கப்பா அம்மா எப்படி இருக்கணும்ங்கற ஆசை, தவிர மூணாவது மனுஷியா நின்னு யோசிச்சி அவங்க எப்படி இருக்கணும்ன்னு எழுதுங்க.. நீங்க கூப்பிடறவரை நாங்க மூணு பெரும் வெளிய இருக்கோம்.. சரியா?”
“என்கிட்ட சொல்லமுடியாத அளவுக்கு பிரச்சனை இருக்கா டாக்டர்?” நிழலினி சிறுபிள்ளைப் போல கேட்டாள்.
“எவ்ளோ பெரிய பிரச்சனையா இருந்தாலும் அத தாண்டி வர்ற தைரியம் உங்ககிட்ட இருக்கு. இப்ப நீங்க உங்கள தெரிஞ்சிக்க தான் இந்த கேள்விகள்.. இது செய்யறப்ப எந்த தொந்தரவும் இருக்கக்கூடாதுன்னு தான் வெளிய போறோம்.. இல்லன்னாஹ் நாங்க இங்க இருக்கோம் நீங்க வெளிய போய் எழுதறீங்களா?”
“இல்ல டாக்டர் நான் இங்கயே எழுதறேன்..” எனக் கூறிவிட்டு அந்த கேள்விகளுக்கு பதில் எழுத ஆரம்பித்தாள்.
மூவரும் வெளியே வந்து மரத்தின் அடியில் இருந்த கல் இருக்கையில் அமர்ந்தனர்.
“அண்ணா.. அவ எப்படி இருக்கா?” சக்திசிவன் கேட்டான்.
“அவங்க மனசளவுல பாதிப்பாகி தான் இருக்காங்க சக்தி. அவங்களோட குழந்தை பருவம் முழுக்க வலியும், அழுகையுமா தான் இருந்திருக்கு. நீங்க சொல்லுங்க உங்களுக்கு தெரிஞ்சவரை அவங்க அப்பா அம்மா எப்படி?” என தரணி கேட்டான்.
“எனக்கு டீச்சர் ட்ரைனிங்ல இருந்து தான் நினிய தெரியும். விஷாலி தான் அவ வீட்டு பக்கம் இருக்கா..”
“வழக்கமா எல்லா அப்பா அம்மாவுக்கும் வர்ற சண்டை போல தான் வரும். ஆனா அந்த சண்டை முடியறப்போ மத்த கணவன் மனைவி மறந்து சகஜம் ஆகறமாதிரி இவங்க சகஜம் ஆகறதே இல்ல. எனக்கு விவரம் தெரிஞ்ச அப்பறம் இருந்து இன்னிக்கி வரை தினம் வீட்ல சண்டை நடக்கும். இவ பார்க் போய் இருட்ட வெறிச்சிட்டு உக்காந்திருப்பா, இல்லையா வாசல்ல தலைய கவுத்திட்டு உக்காந்திருப்பா.. காலேஜ் போக ஆரம்பிச்ச அப்பறம் கோவில் போய் உக்காந்துக்கறா.. அவங்கள இவ சத்தம் போடறதோ அதட்டறதோ இல்ல.. அதே மாதிரி அவங்க சண்டைன்னு கடந்து போறதும் இல்ல. உள்ளுக்குள்ள மருகிக்கிட்டே இருப்பா.. முன்ன எல்லாம் ரெண்டு பேருக்கும் சமாதானம் பேசுவா, இப்ப யார்கிட்டயும் பேசறது இல்ல. மனசு வெறுத்துட்டா.. நீங்க சொன்னத தான் நானும் நெனைச்சேன். குடும்ப வாழ்க்கை மேல இவளுக்கு நம்பிக்கை இல்ல. அது வர்ற மாதிரி அவங்க வீட்ல இருக்கறவங்க நடந்துக்கல.. மோர்ஓவர் ரெண்டு பேரோட ஈகோ க்ளாஷ் அவ மனச அதிகம் காயம் படுத்திரிச்சி..” விஷாலி கூறியதும் தரணி கைகள் தட்டினான்.
“நீங்க பி. டி டீச்சர் தானே? சைக்காலஜி படிச்சீங்களா ?”
“பசங்க இயல்ப கவனிக்க டீச்சர் ட்ரைனிங்ல சொல்லி தரப்போ உங்க சப்ஜெக்டும் வரும் டாக்டர்..” எனக் கூறவும் தரணி கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்.