6 – விடா ரதி…
“ரதி….” என அவன் தவிப்புடன் பேச ஆரம்பிக்கவும், “இதுல உங்க தப்புன்னு நான் எதுவும் சொல்ல முடியாது ராக்கி… நான் தான் உங்ககிட்ட பேசவே இல்லயே…… நான் பேசி நீங்க மறுத்திருந்தா உங்கள மறக்க முடியலன்னாலும், என்னோட தவிப்பாவது கொறஞ்சி இருக்கும்…. ஆனா நான் எதுக்குமே வாய்ப்பு ஏற்படுத்திக்கல….”
ரகு அவள் கூறுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் அருகில் வந்து, “இப்போ நீங்க என் புருஷன் … ஆனா என்னால தான் அந்த உரிமைய முழுசா எடுத்துக்க முடியாம கொஞ்சம் நெருடல் இருக்கு….“
“ஏன்?”
“என்னை நீங்க அப்போ லவ் பண்ணதா நான் நெனைச்சேன்…. உங்க ஆர்வமான பார்வை, தினம் நீங்க அதே நேரத்துல வந்தது, காளியம்மன் கோவில்ல ஏன் அதுக்குள்ள கெளம்பிட்டன்னு இன்னொருத்தர்கிட்ட பேசற மாதிரி நான் உங்க பக்கம் வந்தப்போ கேட்டதுன்னு சில விசயங்கள் வச்சி நான் உறுதியாக இருந்தேன்… ஆனா நான் முட்டாள்தனமா நம்பிகிட்டு இருந்திருக்கேன்ன்னு லேட்டா தான் புரிஞ்சுது….” சில துளி கண்ணீர் வெளிவர முனைந்தது அவளது கண்களில்.
அதை லாவகமாக உள்ளிழுத்துக் கொண்டு, “சாரி….. உங்கள நான் குத்தம் சொல்லல… என்னை நானே தான் திட்டிக்கறேன்…”
“நீ குத்தம் சொல்லலாம் ரதி.. உன்னோட ஆர்வம், உன் எண்ணம் எல்லாமே எனக்கு புரிஞ்சும் உனக்கு நானும் ஆர்வமா இருக்கமாதிரி சிலநேரம் காட்டிட்டேன்… இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கு… என் நிச்சயம் முடிஞ்சி நீ என்னை வேதனையோட பாத்துட்டு போன பார்வை…. அப்போவாது உனக்கு நான் புரியவச்சிருக்கணும். ஏதோ ஒரு தயக்கம்.. சாரி ரதி….. I let you to live in pain for years…… (உன்னை வலியோடவே இத்தன வருஷம் வாழவிட்டுட்டேன்)” என அவள் கரம்பிடித்து தன் கரத்தினில் வைத்துக்கொண்டான்.
“ராக்கி … ஆனாலும் நாம இப்படி வயலின் வாசிக்ககூடாது…. சுந்தரி அங்க கோபத்துல இருப்பா…. நாம அப்பறம் பேசலாம்….” என விலக எத்தனித்தாள்.
“ஒரு நிமிஷம் ரதி……” எனக் கூறி அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
“ஐ லவ் யூ…” என அவளது முன்னுச்சியில் முத்தமிட்டு விலகினான்.
அவள் தான் அவன் கூறிய வார்த்தையில் உறைந்து நின்றாள்.
அவளது முகத்தை ஒரு முறை ஆழப் பார்த்துவிட்டு, “இனிமே நம்ம வாழ்க்கை ஒரே வழில தான் போகும்…. உன் ஆசையெல்லாம் இனிமே நிறைவேத்திக்கோ….” எனக் கண்ணடித்துக் கூறிவிட்டுச் சென்றான்.
“ஹேய் பப்ளிமாஸ்…. “ என அழைத்தபடி ஒரு தோழி அவளது தோளில் அடித்தாள்.
“ஹேய் ஸ்வீட் பொட்டேட்டோ…. எப்படி இருக்க?” என இவளும் அவளைக் கட்டிக் கொண்டாள்.
“நல்லா இருக்கேன்… நீ எப்ப இந்தியா வந்த? ஹேய் உனக்கு கல்யாணம் எப்ப ஆச்சி?” என அவளது கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றைப் பார்த்துக் கேட்டாள்.
“போன வாரம் தான் இந்தியா வந்தேன். வந்ததும் கட்டி வச்சுட்டாங்க டி.. அது பெரிய கதை அப்பறம் சொல்றேன்… நீ மட்டுமா வந்திருக்க? நம்ம புள்ளைங்க யார் யார் வராங்க?” என அவளை அழைத்துக்கொண்டுச் சுந்தரி அறைக்குச் சென்றாள்.
“ஏண்டி ஒரு ஊசி நூல் வாங்க எவ்ளோ நேரம் உனக்கு?” சுந்தரி கத்தினாள்.
“சாரி பேபி… இதோ வாங்கிட்டு வரேன்… நீ இவகூட இரு…” என மீண்டும் வெளியே ஓடினாள்.
“வா சவி…. எங்க நீ மட்டும் வந்திருக்க உன் படைய காணோம்?”
“என் படையா?”
“ஆமா உன் படை தான்… நீங்க தான் நினைச்சா மீட் பண்றீங்க…. நாங்க எல்லாம் யாரோ தானே?” என சுந்தரி முறுக்கிக் கொள்ளவும், சவி அவளைச் சமாதானம் செய்தாள்.
“சரி ரதிக்கு ஏன் திடீர் கல்யாணம்? எங்களுக்கு எல்லாம் சொல்லவே இல்ல… யாரு அவளோட புருஷன்?”
“அவ கல்யாணம் அவளுக்கே தெரியாது… வேணாம் வேணாம்னு சொல்லிட்டு நாள தான் தள்ளறா… மாப்ள அவள தான் கட்டிப்பேன்னு முடிவு பண்ணதும், அவரே பிளான் போட்டு வரவச்சிட்டாரு… வந்ததும் அமுக்கி கல்யாணம் பண்ணிவச்சிட்டாங்க….”
“இன்ட்ரெஸ்டிங்…. அப்பறம்?”
“அப்பறம் என்ன? இப்போதான் abcd படிக்க ஸ்டார்ட் பண்ணி இருக்கா….” எனச் சிரிப்புடன் சுந்தரி கூறவும், ரதி இடுப்பில் கைவைத்து முறைத்தபடி நின்றிருந்தாள்.
“அச்சச்சோ… இவ எப்ப வந்தா?”
“அவ என் கல்யாணம் பத்தி பேச ஆரம்பிக்கறப்போவே வந்துட்டேன்… இது எல்லாமே அவன் பிளான் தானா?” என முறைத்தபடிக் கேட்டாள்.
“ஆமா… அவரு உன்ன தான் கட்டுவேன்னு சொன்ன அப்பறம் என்ன பண்றது? நீயும் ஒரு காலத்துல அவர டாவ் அடிச்சிட்டு தான இருந்த? அதான் நானும் அவரோட பிளான்ல பார்ட்டிசிபேட் பண்ணேன்….“
“ஏண்டி இப்படி வில்லத்தனம் பண்றீங்க?”
“நல்ல விதமா சொன்னா கேப்பியா நீ? அதான் இப்படி பண்ணேன்…. வந்து பூவ சரியா வச்சிவிடு வா…” சுந்தரி அசால்டாகக் கூறிவிட்டு அமர்ந்தாள்.
“பயம் இல்லாம போச்சி டி உங்களுக்கு எல்லாம்…. ஒரு நாள் சிக்குவ அன்னிக்கி வச்சிக்கறேன் டி உன்ன…”
“அப்ப பிளான் போட்டவர?” சவி சிரிப்புடன் கேட்டாள்.
“அதான் கல்யாணமே ஆகிரிச்சே இனி வச்சிகிட்டாலும் பிரச்சினை இல்லை சவி…” எனச் சுந்தரிக் கூறவும், ரதி அவளது தலையில் ஊசி வைத்து படபடவென கொண்டைக்குப் பக்கவாட்டில் பூவை இறுக்கிக் கட்டும் சாக்கில் குத்தினாள்.
“பிசாசே… வலிக்குது டி… உன் புருஷனை போய் கேளு டி… நான் ஜஸ்ட் உனக்கு பார்லர், ப்ளவுஸ் மட்டும் தான் ரெடி பண்ணேன்….”
“வீட்ல போய் பேசிக்கறேன் அவன…. காலைல இருந்து என்ன டிராமா பண்றான் தெரியுமா? நான் கூட ஏமாந்துட்டேன்…. பிராடு…. பூராவும் பிராடுங்க…” ஆத்திரமாக வந்தது.
“சரி டி… ஃபோட்டோவாது காட்டு டி உன்னோடது…… ஏன் கல்யாணத்துக்கு கூப்பிடலன்னு யாரும் சண்டை கூட போடமுடியாது இப்ப உங்கிட்ட….” சவி அங்கிருந்த சேரில் அமர்ந்தாள்.
“யார்கிட்டேயும் சொல்லாத… எல்லாருக்கும் சர்ப்ரைஸ் அஹ் இருக்கட்டும்…” எனச் சுந்தரி கூறியதும் சவிதா சரியென்றுக் கூறினாள்.
ரதியும், சுந்தரியும் அர்த்தப்பார்வைப் பார்த்தபடித் தயாராக, நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தேறின.
சுந்தரியும், முகுந்தனும் மோதிரம் மாற்றிக்கொண்டே ஒருவரை ஒருவர் பார்வையால் வருடிக்கொண்டிருந்தனர்.
“சீக்கிரம் மோதிரம் போடுங்க மாப்ள… எவ்ளோ நேரம் அந்த கைய புடிச்சி இழுத்துட்டு இருப்பீங்க?” ஒரு கிழவி வாய் திறந்தது.
“காலம் முழுக்க அவ கைய தான் இனி பிடிச்சாகணும், இன்னும் கொஞ்ச நேரம் பிடிச்சி ஃபோட்டோ போஸ் குடுத்தா என்னவாம் ஆத்தா?” இன்னொருவர் பதில் கொடுக்க, அந்த இடமே கலக்கப்பானது.
“சவி… நீ இங்கேயே தங்கிக்க…” சுந்தரி தன்னுடன் தங்கவைத்துக் கொண்டாள்.
“சரி…. ஹே ரதி உடனே கெளம்பறியா?”
“இல்ல…. நைட்டு தான் போவேன்…“
“இங்கேயே இருவேன்…. நாம ஒண்ணா இருந்து எவ்ளோ நாள் ஆச்சு…? ஸ்வேதா எப்ப வரா?”
“நாளைக்கு தான் வந்து சேருவா…. எப்படியும் மதியம் வந்துடுவா இங்க…”
“மத்தவங்க எல்லாம்?”
“நீ தான் சொல்லணும்….”
“பிரியா, மீனா எல்லாம் நாளைக்கு வராங்களாம்… மத்தவங்க ரிசப்ஷன் தான்….”
“சரி சரி…. டிரஸ் மாத்திட்டு வா போ…” என அவளை அந்தப் பக்கம் அனுப்பிவிட்டு, சுந்தரியும் ரதியும் தங்களுக்குள் சிறிதுப் பேசிக்கொண்டு, அடுத்த நாளுக்குத் தேவையான ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர்.
“ரதி… உன் வீடு எங்க இருக்கு? அவரு பேரு என்ன? என்ன பண்றாரு?” சவிக் கேட்டாள்.
“ரகு… கிளோத் ரீடெயில் ஷாப் வச்சிருக்காரு…. இங்க இருந்து 5 கி.மீல வீடு இருக்கு….”
“உன் வேலை?”
“பாத்துட்டு தான் இருக்கேன். இப்போ பத்து நாள் லீவ் எடுத்து இருக்கேன்.. “
“ஆள் ஓகே வா?”
“என்னை கேட்டா முடிவு பண்ணாங்க? எப்படி இருந்தாலும் கொஞ்ச நாள் ஓடினா தான் தேறுமா தேறாதான்னு தெரியும்…..” சலிப்புடன் கூறினாள்..
“என்னடி இப்படி சொல்ற?”
“வேற என்ன சொல்ல… சரி என் கதைய விடு… உன் புருஷன் எப்படி இருக்காரு? உனக்கு லைஃப் எப்படி போகுது?”
“அது நல்லா போகுது…. ஒரு பையன்… மூணு வயசு… செகண்ட் எக்ஸ்பெக்ட் பண்ணிட்டு இருக்கேன்….” எனச் சிரிப்புடன் கூறினாள்.
“சூப்பர் டி… எப்போ குட் நியூஸ் சொல்வ?”
“இப்போ தான் பிராசஸ் ஆரம்பிச்சு இருக்கேன்… இன்னும் ரெண்டு மூணு வாரம் ஆகலாம்…” என அவள் கூறியதும், சுந்தரி அவள் வாயைப் பொத்தி உள்ளே இழுத்துச் சென்றாள்.
“நீ மட்டும் மாறவே மாட்ட சவி… எங்க இருந்தோம் நாம….. என்ன பேசற நீ?” சுந்தரிக் கடிந்தாள்.
“இருக்கறத தான் டி சொன்னேன்… கல்யாணம் ஆனா அடுத்த புரொமோஷன் அது தானே?” சவியும் சுந்தரியும் மாறி மாறிப் பேசிக்கொண்டு இருந்தனர்.
புரொமோஷன் என்ற வார்த்தையில், ரதி காலையில் கணவனுடன் வார்த்தையாடியது நினைவு வர, கன்னங்கள் சிவப்பேற மெல்லப் புன்னகைத்தாள்.
“ஹேய்… நீ என்னடி தனியா சிரிச்சிட்டு இருக்க? உன் புருஷன் நெனப்பு வந்துறிச்சா?” எனச் சவி அவளைக் கிண்டல் செய்யவும் நேரம் போனது தெரியாமல் வார்த்தையாடிக் கொண்டிருந்தனர்.
ரகு விஷேசம் முடிந்து மனைவியை உடன் வரக் கூறியபோது, முடியாது எனக் கூறிக் கோபப்பார்வை பார்த்தது மனதில் இனிமையாக நின்றது. சுந்தரி முன்பே அவனிடம் அவன் தான் அவளைத் திட்டம் போட்டு வரவைத்தது முதல் நடந்த நாடகமெல்லாம் தெரிந்துவிட்டது எனத் தகவல் அனுப்பியிருந்தாள். அதன் வெளிப்பாடாக அவளின் கோபத்தை எதிர்பார்த்துத் தான் இருந்தான்.
ஆனாலும் அவள் இல்லாமல், அவளைச் சீண்டாமல் நேரம் செல்லவில்லை அவனுக்கு. காலையில் அவளுக்கு தன் மனதை வெளிப்படுத்தியது முதல் உடலும், உள்ளமும் அவளது நெருக்கத்தை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவளோ கோபமுகம் எடுத்து கண் காணா தூரத்தில் இருந்துக் கொண்டாள்.
கடையில் இருந்தவரைக் கூட சமாளித்துவிட்டான், இனி கஷ்டம் என்று புரிய, அவளுக்குத் தொலைப்பேசியில் தொல்லைக் கொடுக்க அழைத்தான்.
அவன் எண்ணைக் கண்டதும், தொலைப்பேசிக்குத் தொந்தரவு செய்யாதே என்றக் கட்டளையைக் கொடுத்துவிட்டு, தோழிகளுடன் ஐக்கியம் ஆகிவிட்டாள். அவ்வப்போது அலைப்பேசியைக் காணவும் மறக்கவில்லை.
“ஃபோன் எடுத்து பேசிட்டு வாடி… அண்ணா எனக்கு கால் பண்றாங்க…”என சுந்தரி கூறியும் முடியாது எனக் கூறிவிட்டு, சவியுடன் சாப்பிடச் சென்றுவிட்டாள்.
“அண்ணா அவ செம கோவத்துல இருக்கா……“
“நான் அங்க வரேன் அவள கூட்டிட்டு போக… சாப்ட்டு ரெடியா இருக்க சொல்லு…. “ எனக் கூறி வைத்துவிட்டான்.
“அண்ணா… அண்ணா…” , சுந்தரி மொபைல் பார்த்தபடி, ‘இவங்களுக்கு நடுவுல இருந்து எப்படி தப்பிக்கறது ?’, எனத் தீவிரமாக யோசித்தாள்.
“ஐடியா…” என யோசனைச் செய்தபடி சவி அருகில் சென்று அவள் காதில் மெல்ல விசயத்தைக் கூறிவிட்டு வேறுபக்கம் சென்றாள்.
ரதி அனைத்தும் கவனித்தும் கவனியாதது போல சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்.
“என்னவாம் அவளுக்கு?”
“அவ ஆள் கூட ஃபோன் பேச போறாளாம் நாம அப்பறமா ரூமுக்கு வரதாம்….” சவிக் கூறிவிட்டு எழுந்துக் கைக்கழுவச் சென்றாள்.
இருவரும் பேசியபடி வீட்டின் முன்னால் இருந்தப் பந்தலில் சேர் போட்டு அமர்ந்துப் பேசிக்கொண்டிருக்க, ரகு அங்கே காரில் வந்தான்.
அவனைக் கண்டு ரதி முகம் திருப்பிக் கொள்ள, ரகு தானாக சவியிடம் அறிமுகம் செய்துக்கொண்டு அவள் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு கார் அருகில் சென்றான்.
“உனக்கு டிரஸ் எடுத்துட்டு வந்தேன் சரியா இருக்கா பாரு…” எனக் காரின் பின்பக்கக் கதவைத் திறந்துவிட்டான்.
அவள் கவரை வெளியே எடுக்கவும், “ஜூவல்ஸ் இருக்கு உள்ள உக்காந்து பாரு…” எனக் கூறி அவளை உள்ளே அமரவைத்துக் கதவை அடைத்துவிட்டு, காரைக் கிளப்பினான்.
“ரகு… என்ன பண்றீங்க நீங்க?”
“தெரியல….? உன்ன கடத்திட்டு போறேன் செல்லம்… “ எனக் கூறியபடி வேகமாக வீடு நோக்கி விரைந்தான்.