66 – ருத்ராதித்யன்
கஜ பத்ரன் பிளிறியதும் உள்ளிருந்து கூட்டமாக ஓடி வந்தன சில கஜ யாளிகள்.
ஆதியின் சுவாசத்தை உணர்ந்த வயசான கஜயாளி ஒன்று நிலத்தில் கால்களை உந்தி மேலே தாவியது. அங்கிருந்த மரங்களை எல்லாம் விட உயரமாக பறந்து வந்து கஜபத்ரன் அருகே குதித்து நின்றது.
“ருத்ர விக்னா ….”, ஆதி முணுமுணுப்பாக கூறவும் அவனை துதிக்கையில் வாரி தூக்கிகொண்டு மீண்டும் எம்பி குதித்து தனது சந்தோசத்தை வெளிப்படுத்தியது. நீண்டிருந்த கூரிய தந்தத்தில் அவனைப் படுக்கவைத்து நான்கு ஐந்து சுற்றுகள் அவனைத் தூக்கிக் கொண்டு சுற்றிய பிறகே நிலத்தில் நின்றது.
குட்டி யானையின் சிணுங்கல் போல ஆதியுடன் அது மேற்கொண்ட சம்பாஷனையும், அன்புத் தழுவலும், கோபமும், சண்டையும் என அனைத்தும் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.
நானிலன் விழுந்து கிடப்பதைக் கூட யாரும் இன்னும் பார்க்கவில்லை. அவனை சுமந்து வந்த சிங்கம் தான் அவனை நாவல் நக்கி எழுப்பிக் கொண்டிருந்தது.
அவனும் மெல்ல கண்களை திறக்க முற்படும் போது சிங்கம் தன் முகத்தின் அருகே வாயை திறந்துக் கொண்டு வருவது பார்த்து மீண்டும் அலறினான்.
அவன் அலறளில் சிங்கம் கோபம் கொண்டு அவனை உருட்டிவிட்டு விட்டு பின்னால் சென்று நின்றுக் கொண்டது.
சிங்கத்தின் தயவால் அவன் கஜபத்ரன் அருகே உருண்டு நின்றான். பத்ரன் தன் துதிக்கையினால் எல்லையிலேயே அவனை நிறுத்தியது என்று கூறலாம்.
பத்ரனைக் கண்டும் அலறியவனை அர்ஜுன் வேகமாக வந்து வாயை பொத்தி அமைதியாக இருக்கும்படிக் கூறினான்.
அர்ஜுன் அவனை நாகத்தின் அருகே கொண்டு வந்ததும் இன்னும் பயந்து அர்ஜுன் இடுப்பில் ஏறி அமர்ந்து அவனைக் கழுத்தோடு கட்டிக் கொண்டான்.
“சார்… சார்…. ப்ளீஸ் சார்…. என்னை வீட்டுக்கு கொண்டு போய் விற்றுங்க சார்… இனிமே கோவில்ல யார்கிட்டேயும் பேசவே மாட்டேன் சார்….. சாமிகிட்ட கூட சத்தமா பேசமாட்டேன் சார்… எனக்கு எந்த சுவடியும் வேணாம், எதுவும் தெரிஞ்சிக்கவும் வேணாம்… நான் இப்படியே இருந்துடறேன்… பிளீஸ் சார்….. பிளீஸ்…”, என அழுதபடி அரற்றிகொண்டு இருந்தான்.
அவனை தூரத்தில் இருந்து ஒரு யாளி குறுகுறுவென பார்த்துக் கொண்டு இருந்து தன் எல்லையை கடந்து அவன் இருக்கும் பக்கம் வந்தது.
அர்ஜுன் தயங்கி பின்னால் செல்லவும், யாளி அவனைத் தடுத்து தன் கண் பக்கமாக நிறுத்தி வைத்து, துதிக்கையால் நானிலன் மேனியை முகர்ந்துப் பார்த்தது.
யாளியின் துதிக்கைப் பட்டதும் நானிலன் கத்தவும் திராணியற்று அப்படியே அர்ஜுனை இன்னும் இறுக்கிக் கட்டிக் கொண்டான்.
“நானிலன்…. இங்க வா…”, ஆதியின் குரலில் அத்தனை கம்பீரம் இதுவரை யாரும் கண்டதில்லை.
அவன் குரலுக்கு கட்டுப்பட்டு நானிலன் நடுங்கியபடி ஆதியின் முன்னே சென்றான்.
“இவன் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தூய ஆத்மாவில் முதலாமவன்….”, என ருத்ர விக்னனுக்கு அறிமுகப்படுத்தினான்.
கஜ பத்ரன் அவனை முழுதாக ஆதிக்கு பரிசோதனை செய்தது போல செய்தது. அவனும் மேல் சட்டை கழற்றிவிட்டு கஜபத்ரன் அருகே தலைக் குனிந்து நின்றான்.
“நுவலியம்மை…..”, ஆதி அழைக்கவும் அவளும் முன்னே சென்றாள்.
அவளின் தொப்புள் இருக்கும் பகுதியை மட்டும் உடை நகர்த்தி பரிசோதித்து நானிலன் அருகே தள்ளி நிறுத்தியது.
“கண்மயா……”
“இவள் தான் அம்மை அப்பன் இருவரும் கலந்த அற்புத பிறவி…. அனைத்து உயிர்களின் வலியை பற்றியும் சிந்திக்கும் புனிதமான ஆத்மா….”, எனக் கூறினான்.
ருத்ர விக்னன் மூவரையும் துதிக்கையினால் அருகில் இழுத்து முகர்ந்துப் பார்த்து, ஆதியைத் தடவியது.
மூவரையும் தனக்கு எதிர் நிற்கவைத்து ஒரு முறை பிளிற காடே அதிர்ந்து அடங்கியது.
நானிலன் நுவலியின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு நடுங்கியபடி நின்றிருந்தான்.
அவன் நடுக்கத்தை கவனித்த யாளி ஒன்று அவன் தலைக்கு மேலே துதிக்கையினால் வேகமாக மூச்சை ஊதி அவன் பயம் தெளிய வைத்தது.
நானிலன் உடலும் கொஞ்சம் கொஞ்சமாக நடுக்கம் குறைந்து இயல்பாக ஆரம்பித்தது. அவன் மனதில் சூழ்ந்திருந்த பய மேகங்கள் விலகி தைரியம் ஊறத் தொடங்கியது.
“அவன் என் உடன் பிறந்தவன்…. நாகார்ஜுன இளஞ்செழியன்….. இப்போது காவலனாக உருமாறி கொண்டிருக்கிறான்….”
கருநாகம் அர்ஜுனை முன்னால் நகர்த்தி எல்லையில் நிறுத்தியது.
ருத்ர விக்னன் அர்ஜுனை தூக்கி தன் பின்னால் நின்ற நான்காவது யாளியின் மேலே அமர்த்தியது. அந்த யாளி மெல்ல அவனை காட்டிற்குள் சுமந்து சென்றது.
“இவர் சுடரெழில் நாச்சியார்…. இவ்விடம் நான் வர உதவியவர்….”, என ஆதி கூறியதும் நாச்சியாரை கஜ பத்ரன் தன்னருகே நிறுத்தி சோதனை செய்தது.
அவளின் கண்களில் ஒளிரும் சுடரைக் கண்டு அவளின் ஆத்மாவின் உரத்தினையும், நல்லெண்ணத்தினையும் உணர்ந்து அவளை மற்றொரு யாளியின் மேலே அமரவைத்தது.
ஆதி வல்லகியை பற்றி கூறும் முன்னே யாளி வல்லகியை தன்னருகில் இழுத்து துதிக்கையில் தூக்கி அவளது கண்களைப் பார்த்தது.
யாளியின் சுவாசமும், வல்லகியின் சுவாசமும் இரண்டற கலக்க, இரு உயிர்களும் ஒருவரை ஒருவர் உணரத்தொடங்கினர்.
“இவர் வல்லகி….. என்னை உணர செய்தவர்… காற்றினில் கலந்திருக்கும் காலச்சுவடுகளை படிக்கும் ஆற்றல் உள்ளவர்…..”
கஜபத்ர யாளியின் மீது அவளை அமர செய்த ருத்ர விக்னன் சிம்மேசனை கண்டு சத்தம் எழுப்ப, சிம்மேசன் முதல் அங்கிருந்த அத்தனை மிருகங்களும் யாளிக்கு தலை வணங்கி நின்றன.
இதுவரை கண்ட காட்டுப் பகுதிகளை விட இது மிகவும் வித்தியாசமாக வெளிச்சம் உள்ளே வரக்கூடிய அளவிற்கு நிறைய மரங்கள் சாய்ந்து கிடந்தன.
அவைகள் விழுந்து கிடக்கும் நிலைக் கண்டால் போரில் சிக்கிய விழுதுகள் போல தெரிந்தது. ஆக இங்கே யாளிகளுக்குள் நடக்கும் யுத்தத்தில் பல மரங்கள் சாய்ந்து வீழ்கின்றன என தெரிந்தது.
நாச்சியார் செல்லும் தடங்களை தனது மனதினில் குறித்துக் கொண்டே சென்றாள்.
வல்லகி கஜ பத்ரன் மீது அமர்ந்து அதன் உடலையும், உயிரையும் உணர முற்பட்டு அப்படியே அதன் மேல் படுத்துக்கொண்டாள்.
அவளின் இறுகிய பிடி யாளிக்கு எறும்பின் ஊறல் போல கூட தெரியவில்லை, ஆனால் அவள் மனதின் உணர்வுகளை தெளிவாக உணர்ந்தபடி அவளுக்கு வழியில் கண்ட அல்லி மலரினை பறித்து கொடுத்தது.
அவளும் அல்லிக்கு நிகராக முகம் மலர்ந்து யாளிக்கு முத்தம் கொடுத்து தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினாள்.
சந்தோஷ பிளிறல் ஒன்று பத்ரனிடம் இருந்து வந்தது. அதை தொடர்ந்து மற்றவர்களை சுமந்த யாளிகளும் சந்தோச கூச்சல் எழுப்ப, அந்த தீவின் ஒலி அதிரலில் கடலில் அலைகள் பெரிதாக எழுந்தன.
இவர்கள் சென்ற இடத்தினை இனம் காண துடித்துக் கொண்டிருந்த ரிஷித் கண்களுக்கு கடலின் மாறுதல் தெளிவாக தெரிய, அவன் அந்த இடத்திற்கு தனது சாப்பரில் கிளம்பினான்.
“அங்க நிலம் இல்ல ரிஷி….”, ராஜ் அவனை தடுக்க உடன் பயணித்தபடி கூறினான்.
“அங்க என்ன இருக்குன்னு நேருல பாத்தே தெரிஞ்சிக்கறேன் ராஜ்…. அவன் அந்த சிலைய எடுத்துட்டு வந்துட்டா, ஆருத்ரா என் கைவிட்டு போயிடுவா… அவ போயிட்டா என் இத்தனை வருஷ முயற்சிகள் எல்லாமே வீணா போயிடும்… அவங்க சேர கூடாது…. அவன் சிலையோட வெளிய வரக்கூடாது..”
“அவள தூக்கிடலாம் டா… நாம ஏன் கடலுக்குள்ள ரிஸ்க் எடுக்கணும்?அது புயல் எழுந்த அடையாளமா இருந்தா நாம பத்திரமா திரும்ப முடியாது..”
“உனக்கு உயிர் பயம் இருந்தா இப்பவே குதிச்சிடு ராஜ்.. என்னை தடுக்காத….”
அந்த மிருக காவலாலினிய மீறி நாம ஆருத்ராவ நெருங்க முடியாது…..”
“ஆதி கூட அர்ஜுன் இருக்கான் ல?”
“அவன சமாளிக்கலாம்… அவன் மனச ஆட்டுவிக்கலாம்… எனக்கு அடிமையா அவன மாத்த வாய்ப்பிருக்கு….. அவனும் அம்மன் சிலைய தொட்டுட்டா என் கைவிட்டு போயிடுவான்….“
“உனக்கு இதுலாம் யாரு சொன்னா? நீ என்ன கைல முத்திரைகள் மாத்தி மாத்தி வச்சிட்டு இருக்க? இந்த செயின் என்ன?”, என அவனது கழுத்தில் தொங்கி கொண்டிருந்த சிவப்பு கல் பதித்த பெரிய சங்கிலியை தொட்டான்.
தொட்ட நொடி ராஜ் ரிஷித் கண்களில் தன்னை தொலைத்து மறுவார்த்தை பேசாமல் அவன் கூறியதை மட்டும் செய்ய ஆரம்பித்தான். அவனது மனமும் மூளையும் இப்போது ரிஷித் கட்டுப்பாட்டில் இருந்தது.
அந்த தீவு ரிஷித் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தது. ஹெலிகாப்டர் அந்த தீவிற்கு சில அடி தூரம் முன்னதாகவே பறக்க முடியாமல் தடுமாறத் தொடங்கியது. ரிஷித் ராஜ் கர்ணாவுடன் ஹெலிகாப்டரில் இருந்து குதித்தான்.
நீந்தி அந்த தீவின் கரையினை தொட்ட நொடி யாளி கடும் சினம் கொண்டு பிளிற கடல் அலைகள் இன்னும் பெரிதாக எழுந்து ரிஷித்தை கடலுக்குள் இழுத்தது.
ரிஷித் உச்சரித்த மந்திரங்கள் எதுவும் அவனுக்கு இப்போது உதவவில்லை. அவன் நாவு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது. ராஜ் கர்ணா உணர்வு பெற்று கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையைக் கண்டு, ரிஷித்தை வேகமாக இழுத்துக் கொண்டு அந்த தீவின் கரை நோக்கி நீந்தத் தொடங்கினான்.
ரிஷித்தின் இடைவிடாத மந்திர உச்சாடனம் அவனை கரையை விட்டு தூரமாக தள்ளியது. யாளியின் உறுமல் விடாது கடலை உசுப்ப, கடலும் யாளியின் உத்திரவுக்கு இணங்கி அவனை அந்த தீவினை விட்டு வெகு தூரமாக கொண்டு சென்றது. கால் நாளிகைக்குள் அவன் பல கிலோமீட்டர் தூரம் அடித்து செல்லப்பட்டான்.
திடீரென எழுந்த பத்ரனின் பிளிறலில் ருத்ர விக்னன் திரும்பி அவனை பார்த்துவிட்டு, வேகமாக முன்னே சென்றது.
“என்னாச்சி விக்னா?”, வல்லகி கேட்டு அவன் தலையில் உள்ளங்கை பதிக்க, ரிஷித் வருகையை உணர்ந்தாள்.
இந்த யாளி இங்கிருந்தே அவனை விரட்டிய விதம் உணர்ந்து இன்னமும் ஆச்சர்யம் கொண்டு, அவற்றின் உணரும் சக்தியை வியந்து பார்த்தாள்.
கொஞ்சம் கொஞ்சமாக காட்டின் உள்ளே செல்ல செல்ல, மற்ற பகுதிகளை விட இது மிகவும் பெரிதாக இருப்பது போல தோன்றியது. உருவங்களுக்கு ஏற்ப நிலமும் தேவை தான் என நினைத்து, அந்த இடத்தின் காற்றினை உள்ளிழுக்க முனைந்தாள்.
ருத்ர விக்னன் அவளை வேண்டாம் என மறுத்து தலையாட்ட, “வல்லகி… நீ இங்கே காற்றை படிக்க வேண்டாம்….”, என ஆதி கூறினான்.
“ஏன்?”
“இங்கே வெறும் காலத்தின் சுவடுகள் மட்டுமல்ல, கண்ணிற்கு தெரியாத பல சூட்சும அதிர்வுகள் இவ்விடத்தை நிறைத்து உள்ளது.. இதை மனித மனம் தாங்காது…. உன் பலமும் இதனால் பாதிப்படைய வாய்ப்புள்ளது…”
“ஆனா என்னால என்னை கட்டுப் படுத்த முடியல ஆதி சார்….. என் உடம்புல இருக்க நரம்பு எல்லாமே அதீத மின்சாரம் பாயிச்சிட்டு இருக்கு…. என் உடம்புல இருக்க மர்ம புள்ளிகள் எல்லாம் தானா அழுந்துது… என்னோட இன்னொரு பரிமாணம் இங்க நிகழ வாய்ப்பு அதிகம்….”, எனக் கூறியபடி கஜ பத்ரனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
அவள் உள்ளமும், உடலும் அவளின் கட்டுப்பாட்டை மீறி தனக்குள் பல வகையான மாற்றங்களைத் தொடங்கி இருந்தன. அவள் பலமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைவது போல உணர்ந்தாள்.
நாச்சியார் தவிப்புடன் தங்கையை கண்டு மனம் வருந்த, அவளை சுமந்து கொண்டிருந்த யாளி, வல்லகி அருகில் சென்று நின்றது. இந்த யாளியில் இருந்து அந்த யாளிக்கு 15 அடி அகலத்தை நாச்சியார் கடக்க முடியாது தவிக்க, மற்றொரு யாளி தனது தந்தத்தை நடுவில் நீட்டவும் நாச்சியார் அதில் ஏறி வல்லகி அருகே சென்று அவளை தன் மடியில் கிடத்திக் கொண்டாள்.
வல்லகி உடலில் பல மாற்றங்கள் தானாக நிகழ்ந்தன. அது இயற்கையின் செயலாக நிகழ்ந்து கொண்டிருக்க, யாளியும் மெல்ல நடக்க ஆரம்பித்து, அத்தீவின் வடகிழக்கு மூளைக்கு சென்று அவர்களை கீழே இறக்கி விட்டன.