67 – ருத்ராதித்யன்
ரிஷித் அந்த தீவினை கண்ட பின்பு மிகவும் தீவிரமாக மந்திரங்களை கூறத் தொடங்கினான். அவன் மந்திரங்களை எந்த அளவிற்கு ஆழமாக உணர்ந்து உச்சரித்தானோ? அந்த அளவிற்கு கடலின் ஆழத்திற்கு கொண்டு செல்லப்பட்டான்.
ராஜ் கர்ணா அவனை இழுக்க தானும் ஆழமாக உள்ளே நீந்தி ரிஷித் கைகளை இழுத்து அவனை முத்திரைகளை களைத்து மேலே இழுத்துக் கொண்டு வந்தான்.
ரிஷித்தின் கண்கள் நிறம் மாறி சாம்பலாக காட்சியளித்தது. அந்த நீரின் மேலே பறந்த கடற்பறவையை கண்களால் வசியம் செய்து கீழே இழுத்து, அதன் கழுத்துப் பகுதியினை பற்களால் கடிக்க இரத்தம் வடிய தொடங்கியது.. தலையை துண்டாக்கி இரத்தம் குடித்தான். வெறி பிடித்தவன் போல கிட்டதட்ட நூற்றுக்கணக்கான பறவைகளை காவு வாங்கி இருந்தான் சில நிமிடங்களுக்குள்.
ராஜ் கர்ணாவிற்கு உடல் உதறத் தொடங்கியது. நண்பனை இந்த நிலையில் காண மனம் பயம் கொண்டது. அவனின் இந்த மாற்றத்தை அவனும் எதிர்பார்க்கவில்லை. அவன் தான் சிறந்த மாந்திரீகர்களை சாலக்குடியில் நண்பனிடம் அறிமுகப்படுத்தினான். ஆனால் அவர்களுடன் பழகிய பின் அருணாச்சல பிரதேசம் சென்று அங்கிருந்த பிசாசு வழிபாட்டு ஆட்களை சந்தித்து, அதன்பின் அதர்வண வேதத்தின் மூலத்தை கண்டுபிடித்து அதை முழுதாக இந்த 4 வாரங்களுக்குள் அவன் கற்று தேர்ந்த வேகம் யாருமே எதிர்பார்க்கவில்லை.
அவனின் அறிவியல் மூளையை மாந்திரீக செயல்பாடுகளில் அவன் காட்டிய விதம் கண்டு விநாயக் விக்கித்து போனான். அவனுடன் ராஜ் கர்ணாவும் ஒருமுறை ஆயிரம் பசுவை கொன்ற நிகழ்விற்கு சென்றிருந்தான். அதுவும் சில நூறு பசுக்கள் கருதாங்கி இருந்தது.
ராஜ் கர்ணாவிற்கு இந்த உயிர்கள் மேல் பச்சாதாபம் எழவில்லை. ஆனால் விநாயக் துடித்துவிட்டான் அத்தனை பசுக்களின் இறந்த சடலம் கண்டு.
ரிஷித் உள்ளுக்குள் வேறு ஒருவனாக மாறத் தொடங்கி பல ஆண்டுகள் கடந்து இருந்தது. ஆனாலும் இன்று அவன் மனதினில் இருக்கும் குரூரம் ராஜ் கர்ணாவிற்கு பயத்தை ஏற்படுத்தியது.
அங்கே பறவைகள் செத்து வீழ, இங்கே மிருகங்கள் சத்தம் எழுப்பத் தொடங்கின. அவற்றினால் அந்த பறவைகளின் வலியை தாள முடியவில்லை. முதல் பகுதியில் இருந்த ஓநாய்கள் எல்லாம் இரத்த வாடையில் சித்தம் பிறழ அங்கும் இங்கும் ஓடி உடன் இருக்கும் நாய்களை தாக்கத் தொடங்கின.
நாய்கள் அவற்றுடன் சண்டையிட முடியாமல் அங்குமிங்குமாக ஓடி தங்களை காத்துக் கொள்ள பதுங்கின.
யானைகள் மெல்ல மெல்ல பிளிறல் தொடங்க, சிங்கங்களும் புலிகளும் உறுமலை தொடங்க, கருநாகம் சீற்றமாக சீற, ருத்ர விக்னன் உள்ளிருந்து சிம்மேசனுக்கு கட்டளை எழுப்ப, சிம்மேசன் காற்றினை கிழித்துக் கொண்டு அனைத்து பகுதிகளையும் கடந்து தீவின் எஎல்லையில் இருந்து ரிஷித் இருக்கும் திசை பார்த்து அடி வயிற்றிலிருந்து உறும, அலைகள் அந்த உறுமலின் அதிர்வை பெற்று கடத்தி ரிஷித்தின் உடலையும் மனதையும் அடக்கி வெகு தூரமாக வீசி நிலத்தில் கிடத்தியது. சிம்மேசனின் கர்ஜனை உயிர் இழந்த பறவைகளையும் உயிர்பிழைக்க செய்ய, பறவைகள் வேகமாக அங்கிருந்து பறந்து சென்றன சிங்கத்திற்கு நன்றி செலுத்தியபடி.
இந்த நிகழ்வுகள் நடக்கும் போதே வல்லகிக்கு தனது உச்சந்தலையில் ஆணி அடித்தாற்போல வலி எடுத்தது. காற்றை உள்ளிழுத்து தெரியும் காட்சிகள் எல்லாம் இப்போது கண்கள் மூடியதும் தெரிந்தது. அவளது உடலில் ஏற்பட்ட அழுத்தம், அதை தாழ முடியாமல் அவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய, அவளை சுமந்து கொண்டிருந்த கஜயாளி அவளின் வலியை உணர்ந்து ருத்ர விக்னனுக்கு செய்கை காட்டியது. அவளை தனது துதிக்கையில் தூக்கி ருத்ர விக்னனிடம் கொடுத்தது.
“அவள் உடல் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறாள் ருத்ரா….. அவளுக்கு அமைதியை கொடு….”
வேகமாக ருத்ர விக்னன் வடகிழக்கு மூலைக்கு ஓடியது. அங்கிருந்த அகலமான பாறையின் மீது அவளை கிடத்திவிட்டு ஆதியை கீழே இறக்கி விட்டது.
அவர்களுக்கு முன் அர்ஜுன் அங்கே வந்திருந்தான். அவன் உடல் உயரமும், இறுகிய உடற்கட்டும், நீண்டு வளர்ந்திருந்த கூந்தலும், அவன் அமர்ந்திருக்கும் விதமும் கண்களை கட்டி இழுத்தது.
சில நிமிடங்களில் அவன் மொத்தமாக மாறி இருப்பதாக தோன்றியது. ஆதி அவனை கண்டு பெருமை பொங்க பார்த்தான்.
வல்லகி அங்கே வந்த சில நிமிடங்களில் மற்றவர்களும் அவ்விடம் வந்து சேர்ந்தனர்.
நாச்சியார் நெஞ்சம் கலங்க தங்கையை பார்த்து யாளி கீழே இறக்கி விட்டதும் ஓடி வந்தாள்.
“அவளுக்கு ஒன்றும் ஆகாது நாச்சியார் அவர்களே….. அவளின் மற்றொரு பரிணாமம் நடந்து கொண்டிருக்கிறது. சில நிமிடங்களில் தெளிவாகி எழுந்து கொள்வாள்….. இந்த இடத்தின் அழுத்தம் அவருக்கு நன்மையை மட்டுமே கொடுக்கும்… தாங்கள் கலங்க வேண்டாம்…”, ஆதி தூய தமிழில் பேச பேச நானிலன் முழித்தபடி நுவலி அருகில் வந்து நின்று கொண்டான்.
“அதில்ல ஆதி சார்… அவளுக்கு எந்த வகைலையும் நான் உதவ முடியலன்னு தான் வருத்தம்….. அவ சாதாரண மனுஷி இல்ல தான்….. அவ படற கஷ்டம் பாத்து மனசு வலிக்குது….”, என கூறி அவள் அந்த பாறையின் அருகே சென்று நின்றாள்.
“நாச்சியார் அவர்களே… இனி நீங்கள் தான் எங்களுக்கு வழியறிந்து கூற வேண்டும்.. இந்த இடம் வரையில் தான் மிருகங்கள் வழிகாட்டும். அம்மையை எடுக்க தாங்கள் தான் வழி கூற வேண்டும்….”
“அம்மன் சிலையை எடுக்கற முறைகள் இங்க கல்வெட்டுக்களா இருக்கும்ன்னு சுவடில இருக்கு…. கல்வெட்டு எங்க இருக்குன்னு தேடணும் ….”, தன்னை சரி செய்தபடி கூறினாள் .
“நாங்க தேடறோம் ஆதி சார்….”, கண்மயா நுவலி நானிலன் மூவரும் அங்கிருந்த ஒவ்வொரு பாறையையும் வெளிச்சம் காட்டி பார்த்து தேட துவங்கினர்.
இன்னும் இரண்டு மணி நேரத்தில் சிலையை எடுத்துக் கொண்டு அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து கிளம்ப வேண்டும்.
அர்ஜுன் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டிருந்தது. ஆதியும் கல்வெட்டை தேடியபடி சில இலைகளை பறித்துக் கொண்டு இருந்தான்.
அப்போது கண்மயா இரு பாறைகளின் இடையே ஏதோ தெரிய மற்றவர்களை அழைத்தாள்.
அந்த இரு பாறைகளின் இடையில் தான் கல்வெட்டு போல எழுத்துக்கள் இருப்பது போல தெரிந்தன. அந்த பாறையை அவர்களால் திருப்ப முடியவில்லை.
உருவத்தில் சிறிதாக இருந்தாலும், அதன் கனம் யாராலும் ஊகிக்க முடியாதபடி இருந்தது.
ஆதி ருத்ரனிடம் உதவி கேட்க, கஜ பத்ரன் அங்கே வந்து பாறை திருப்ப உதவியது.
பத்ரன் பாறையை திருப்ப திருப்ப அங்கே நிலம் இடம் பெயர்ந்தது. அனைவரும் தள்ளாடி கீழே விழ, மரங்கள் சட சடவென கீழே சாய்ந்தன. பூகம்பம் தான் வந்து விட்டதோ என என்னும் அளவிற்கு பூமி அத்தனை அதிர்வை வெளிப்படுத்தியது.
யாளிகள் அனைத்தும் அர்ஜுன் பின்னால் சென்று நின்று கொண்டன. அர்ஜுன் அந்த நில அதிர்வில் கண் விழித்து, எதிரில் பார்க்க நுவலியும் நானிலனும் ஒரு மரத்தின் கிளையைப் பற்றிக் கொண்டு தொங்கி கொண்டிருந்தனர்.
நிலத்தின் அடியே ஏற்பட்ட சுரங்க பாதையில் கருப்பாக ஒரு உருவம் ஊர்ந்து வருவது நுவலிக்கு தெரிந்தது.
அதன் ஊர்தல் நீளம் வைத்து பார்த்தால், வருவது ஒன்றா ? அல்லது பல மிருகங்களா என்று அவளால் ஊகிக்க முடியவில்லை.
நானிலன் மேலே தான் பார்த்துக் கொண்டு இருந்தான். இன்னும் கீழே பார்க்கவில்லை. அவன் பார்க்காமல் இருப்பதே நல்லது என்று நினைத்தபடி நுவலி அவனை மேலே இருக்கும் கிளையை எக்கி பற்றும்படி கூறிக் கொண்டிருந்தாள்.
இவர்கள் தொங்கிக் கொண்டிருப்பது கண்டு அந்த உருவம் வேகமாக மேலே வந்தது. பிளந்த வாயோடு இரத்தம் சுவைக்க வரும் வேகம் கண்டு நுவலி மனதில் பயம் தோன்றியது. அவளது கண்கள் கலக்கத்தில் அங்கும் இங்கும் வேகமாக அந்த கிளை விட்டு நிலத்தின் மேலே சென்று விடவேண்டும் என்ற எண்ணத்தில் அலைபாய்ந்தது.
அவளது பயத்தை உணர்ந்த யாளிகள் மெல்ல சத்தம் எழுப்ப நானிலன் இப்போது பயந்து நுவலியை பார்த்தான்.
அவள் பார்வை பிளவில் இருப்பது கண்டு அங்கே பார்க்கவும் அடர்ந்த இருட்டின் கருப்பு நிறத்தில் ஒரு உருவம் ஊர்ந்தபடி வருவது அவனது கண்களுக்கு தெரிந்தது. அத்தனை இருட்டிலும் அந்த மஞ்சள் கண்கள் நெருப்பு கங்குகளை போல ஜொலித்தது.
நானிலன் கத்தவும் திரானியற்று நுவலியை தன் பக்கம் இழுத்துக் கொண்டு மேலே இருந்த கிளையில் ஏறி நிலத்தில் குதிக்கும் சமயம் அந்த உருவம் நிலம் தொட்டு அவர்களை தன் வயிற்றிற்கு அனுப்ப திட்டம் கொண்டு வாயை பிளந்தபடி அவர்கள் குதிக்க நினைத்த இடத்திற்கு வந்து நின்றது.
அர்ஜுன் நொடியில் அமர்ந்த நிலையில் இருந்து குதித்தெழுந்து அந்த உருவத்தை தலையில் தன் முஷ்டி கொண்டு அடித்து, அருகே இருந்த பாறைகளை அதன் வாயிற்குள் அடைத்தான்.
சுமார் 30 அடிக்கும் அதிகமான நீளமும், குறுகிய கால்களும், பாறை போன்ற உடலும், அதன் மீது எது பட்டாலும் அதற்கு ஒன்றும் ஆகாது என்பது போல தான் இருந்தது.
“வஜ்ரா…..”, என்ற ஆதியின் குரலில் அந்த உருவம் குரல் வந்த திசையை பார்த்தது.
அர்ஜுன் வஜ்ரா என்னும் அந்த மகரயாளியின் முன்னே நெஞ்சம் நிமிர்த்தி நானிலன் நுவலியை தனக்கு பின்னே மறைத்துக் கொண்டு நின்றான்.
“அவன் மிருக காவலன்…. அவனுக்கு கட்டுப்பட்டவன் நீ….. மன்னிப்பு கேள்….”, என ஆதி அதட்டலாக கூறவும், அந்த முதலை முகம் கொண்ட யாளி அர்ஜுனை அலட்சியமாக பார்த்துவிட்டு ஆதி அருகே சென்றது.
அந்த கருப்பு நிறமும், மஞ்சள் கண்களும், நிலம் ஊர்ந்து செல்லும் அந்த உடலும், பார்ப்பவருக்கு மலையே ஊர்ந்து செல்வது போல தான் இருக்கும்.
ருத்ர விக்னன் முன்னே வந்து சத்தம் எழுப்ப அந்த மகரயாளி ஆதியின் இரத்தம் கேட்டது.
இவர்கள் இங்கே இப்படி பிரமித்து நின்றிருக்க, நாச்சியார் பிளந்த பாறையின் அருகே சென்று அந்த பாறையில் இருந்ததை வேகமாக தனது கையேட்டில் குறித்துக் கொண்டு, புகைப்படமும் எடுத்துக் கொண்டாள்.
அவள் சென்றதும் அந்த வழியாக இன்னும் 4 மகரயாளிகள் வெளியே வந்தன.
அர்ஜுன் அவைகளை மேலே வரவிடாமல் பெரிய பாறைகள் கொண்டு அந்த பிளவை அடைத்தான்.
அப்படியும் நிலத்தை பிளந்துகொண்டு இரண்டு யாளிகள் மேலே வந்தன..
அர்ஜுன் அவற்றை எப்படி தடுப்பதென யோசிக்கும்போது கஜபத்ரன் மகரயாளியை துதிக்கையால் தூக்கியது பிளந்து கொண்டு வந்த நிலத்தில் வீசி, தனது தந்தம் கொண்டு பாறைகளையும் மரங்களையும் நகர்த்தி அந்த மகரயாளியை மிதித்து அதன் மீது திணித்து, அதன் பிடிமானத்தை இழக்க செய்தது.
ஆதி தன் ஒரு துளி இரத்தத்தை அந்த யாளியின் நாக்கில் தடவி விட்டு ருத்ர விக்னன் மீது அமர்ந்து கொண்டான்.
அந்த இரத்தம் தந்த செய்தியில் அந்த மகரயாளி அவன் முன்னே மண்டியிட்டு மண்ணோடு அமர்ந்தது.