68 – ருத்ராதித்யன்
நாச்சியார் தான் எடுத்த குறிப்புகளோடு, எடுத்த புகைப்படத்தையும், சுவடியில் இருந்த வரிகளையும் பார்த்து சிலை எங்கே இருக்கிறது என ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
வல்லகி இன்னும் தன்னிலை திரும்பவில்லை. அங்கிருக்கும் அதிர்வலைகளை அவள் உடல் தாங்க முடியாமல், வலியில் சன்னமாக முனகல் எழுந்தது அவளிடம்.
அவளை சுமந்து வந்த யாளி அவளின் அருகில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
மெல்ல தனது துதிக்கையை மீச்சிறு உருவமாக படுத்திருப்பவள் அருகே வைத்து அவளது விரல்களை தொட்டபடி நின்றது. ஏதோ ஒரு பரிமாற்றம் இருவருக்கும் நிகழ்கிறது போலும்…
அர்ஜுன் அந்த யாளியை தொட்டு தடவிவிட்டு ஆதி அருகில் சென்றான்.
தலை தரையில் தாழ்ந்து உடலும் தரை தொட்டு, பெரும் கரிய மலை போல படுத்திருந்த அந்த யாளியை இப்போது தான் அனைவரும் முழுதாகக் கண்டனர்.
நுவலி, நானிலன், கண்மயா மூவரும் கஜபத்ரன் பின்னே நின்றிருந்தனர். அந்த கருத்த மலையுருவத்தினை கண்டு அனைவரும் பயத்தில் நடுங்கிக் கொண்டு தான் நின்றிருந்தனர்.
அது மகர யாளி…. முதலையின் தலையமைப்பை கொண்டது. நிலத்திலும் நீரிலும், அடிபாதாளத்திலும் இவைகள் சுலபமாக நுழைந்து நிலத்தின் இடுக்கில் வாழக் கூடியவை. அடர் கருப்பு நிறமும், ஜொலிக்கும் மஞ்சள் விழிகளும், கொஞ்சம் சிறிய முன்னங்கால், நன்கு வளர்ந்த பின்னங்கால் உடன் நீண்ட வால் பகுதியும் கொண்ட கருப்பு பாறை தான் அவை. கிட்டதட்ட 30 அடி நீளமும், 10 அடி உயரமும், அதற்கேற்ற அகலமும் கொண்டிருந்தது.
அவை நகர்ந்தால் பெரும் பாறைகள் ஊர்ந்து நகர்வது போலவே இருக்கும். இருட்டினில் அதன் விழிகள் மட்டுமே அத்தனை பிரகாசமாக ஜொலிக்கிறது. இரத்தம் சுவைத்து தன் தலைவனை இனம் கண்டு கொண்ட வஜ்ரா எனும் மகரயாளி ஆதிக்கு அடிபணிந்து கிடப்பது கண்டு அர்ஜுன் தவிர மற்றவர்கள் அதிசயித்து திகைத்து அப்படியே நின்றனர்.
“கண்மயா… இங்க வா…”, நாச்சியார் குரல் கொடுத்தாள்.
அவளை சுமந்து வந்த யாளி அவளுக்கு அரணாக அவளின் முன்னே நின்றிருந்தது. அவள் குரல் கேட்டதும் வழிவிட்டு நகர்ந்தது.
மகரயாளி அவள் குரல் கேட்டு அந்த பக்கம் பார்த்ததும் பூமி பிளந்து இன்னொரு யாளி அவள் பக்கம் வேகமாக சென்றது.
நாச்சியாரை சுமந்து வந்த யாளி அதனை காலால் மிதித்து, துதிக்கையில் தூக்கி வீசி உறுமியது.
“வஜ்ரா… அனைவரும் நம்மவர்கள்…. உன் படையை அமைதிப்படுத்து…”, ஆதி கட்டளையிட்டதும் வஜ்ரா மீண்டும் பூமியின் உள்ளே சென்று உறும மற்றவைகள் அப்படியே பின்தங்கியபடி தங்களது இடத்திற்கு செல்ல ஆரம்பித்தன.
இத்தனை நேரமாக ஆடிய நிலம் இப்போது ஸ்திரமாக நின்றது.
நம்மவர்கள் சற்று ஆசுவாசமாக அப்பாடா என்று அமரும் போது வஜ்ரா மீண்டும் வேகமாக வெளியே வந்தது.
நிலம் மீண்டும் ஆட்டம் காண, “ஏண்டா.. பொறுமையா தான் வாங்களேன் டா….”, என நானிலன் வாய் விட்டே புலம்பினான்.
“ஹாஹாஹா.. பரவால்லயே நிலன் உனக்கு பயம் கொறஞ்சி போச்சி போல..”, அர்ஜுன் சிரித்தபடி கூறினான்.
“ஒரு தடவ ரெண்டு தடவ இதயம் அதிர்ந்தா பரவால்ல, இங்க பொறப்பட்டதுல இருந்தே அப்டி தான் இருக்கு சார்… பயம் தாண்டி வெறுமை வந்திருச்சு அங்க…”, என கூறியபடி நாச்சியார் அருகே சென்றான்.
ஆதி கஜபத்ரன் மேலே இருந்து இறங்கி வஜ்ரா அருகில் சென்று அதன் நீண்ட முகத்தை தடவிக் கொடுத்தான்.
வஜ்ராவும் வாகாக அவனுக்கு தாடையை தூக்கி காட்டியது.
“நலம் தானா? வெகுகாலம் காக்க வைத்துவிட்டேன். மன்னித்துவிடு….”, என அவன் கூறியதும் சின்ன உறுமல் வெளிப்பட்டது.
“அம்மை நலமா?”, என அந்த பாறையையொத்த உருவத்திடம் பேசிக்கொண்டே சிறிது தூரம் அவன் நடக்க, அது ஒரு அடி எடுத்து வைத்தது.
இதற்கு நடுவில் நாச்சியார் கண்மயா மற்றும் நானிலன் உதவியோடு அம்மன் சிலை இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்திருந்தாள்.
“அர்ஜுன் …. இங்க இருந்து சரியா 100 அடில அம்மன் சிலை இருக்கு….”, என அனைத்தையும் கிரகித்து கூறினாள்.
“எந்த திசைல?”
“சரியான வடகிழக்கு புள்ளி மையம்….”
நானிலன் தனது திசை காட்டியை எடுத்துப் பார்த்தான். மையத்தை கணக்கு வைத்து, அந்த நிலப்பரப்பை அடைந்தனர்.
ஆதி இன்னும் வஜ்ராவிடம் தான் பேசிக்கொண்டு இருந்தான். அவனின் இதனை கால முயற்சியில் இருந்த தடையை இன்னமும் தீர்க்க முடியாமல் இருக்கும் நிலையை பகிர்ந்து கொண்டிருந்தான்.
வஜ்ரா அவனின் மன உணர்வுகளை துல்லியமாக கவனித்து அவனை பேசவிட்டு பாரத்தை குறைத்துக் கொண்டிருந்தது.
“பத்தாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அம்மையையும், அப்பனையும் ஒன்றாக சேர்க்க முடியவில்லை என்று எனை நானே நிந்தித்துக் கொண்டிருக்கிறேன் …”, என ஆதி கூறி வருத்தமாக தலை தாழ்ந்தான்.
ஓர் உறுமல் ஆதியின் பக்கவாட்டில் கேட்கவும் அங்கே திரும்பி பார்த்தான். சிம்மேசன் கஜபத்ரன் உத்திரவு பெற்று அங்கே வந்து நின்றான்.
ஆதியின் கண்களை சிம்மேசன் பார்த்த பார்வையில், இனி எப்போதும் மனம் தளராதே எனும் பாவனை தான் தெரிந்தது.
அர்ஜுன் நாச்சியார் கூறிய திசையில் 100 அடி சென்று பார்க்க அங்கே வெறும் தரை தான் இருந்தது. சில அடிகள் தோண்டி பார்த்தும் கூட அங்கே எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
நானிலன் திசைகாட்டியை வைத்து மையத்தை குறித்த இடத்தில் நாச்சியார் சொன்ன அடையாளம் இல்லை.
கண்மயா, நுவலி இருவரும் வடக்கிழக்கு பக்கத்தை அனுமானமாக வைத்து அந்த இடங்களை ஆராய்ந்தனர்.
எங்கும் ஒரு குகையோ, தடமோ, சிறு கருங்கல் பாறையும் கூட அவர்கள் பார்த்த இடத்தில் மண்ணில் நட்டுவைக்கப் படவில்லை.
அர்ஜுன் தோராயமாக சில இடங்களை பார்த்து சோதித்தும் கூட எதுவும் அங்கே இருப்பதாக தெரியவில்லை.
“எங்கேயும் எந்த அடையாளமும் இல்லயே நாச்சியார்….. “, அர்ஜுன் கூறினான்.
“நாலு கல் தூண் சரியான அளவுகள் விட்டு நடப்பட்டு இருக்கும்…. அதுக்கு மையத்துல தான் பாதை இருக்கு….. “, அவள் மீண்டும் தான் கண்டறிந்த விசயங்களை சரிப் பார்த்து கூறினாள் .
“ஆனா இங்க நம்ம தேடி பார்த்த எடத்துல எந்த தூணும் இருக்க அடையாளம் கூட இல்லையே… வெறும் மண் தான் இருக்கு….. பத்தாயிரம் வருஷம் முன்ன வச்ச தூண் இன்னமும் இருக்குமா? அது மண்ணோடபுதைஞ்சி போய் இருக்கலாம் இல்லையா?”, அர்ஜுன் தனது சந்தேகத்தைக் கேட்டான்.
“இல்ல அர்ஜுன்.. இந்த நிலமே செயற்கையாக உருவாக்க பட்டிருக்குன்னு நீங்களும் சொன்னீங்க… இதுவே இத்தனை வருஷம் கழிச்சி கூட கடல் நடுவுல இருக்கறப்ப அந்த தூண்களும் இங்க தான் இருக்கும்…. “
“ஆனா நம்ம பார்த்த திசைல எங்கேயுமே இருக்க மாதிரி தெரியலியே…. 50 அடி வரைக்கும் கூட தோண்டி பார்த்துட்டேன்…. அங்க எந்த கல் மண்டபமும் இருந்த அடையாளமும் இல்ல…”
“சார்… எனக்கு ஒரு சந்தேகம்…. நம்ம பூமி சில வருஷங்கள் ஒரு முறை லேசா திரும்பும் இல்லையா.. அதுபடி நம்ம இடத்த கொஞ்சம் வேற திசைலையும் தேடி பாக்கலாம் இல்லையா?”, நானிலன் கேட்டான்.
“இப்போ 23 ½ டிகிரி சாய்ந்த வாக்குல சுத்துது, இந்த மண்டபம் கட்டின அப்பவும் அதே சாய்வாக்குல தான் சுத்திச்சா?”, கண்மயாவும் தனது சந்தேகத்தைக் கேட்டாள்.
“தெரியலியே…. ஆதி தான் இதுக்கு பதில் சொல்லணும்….”, அர்ஜுன் ஆதியை பார்க்க, அவன் இன்னும் வஜ்ர யாளியின் மேல் சாய்ந்தபடி சிம்மேசன் தலையை வருடிக் கொண்டிருந்தான்.
“அப்ப 22 ½ ல பூமி சுத்தினது நாச்சி…. “, என கூறியபடி வல்லகி அங்கே வந்து நின்றாள்.
“வல்லா…”, என அழைத்தப்படி அவளைக் கட்டிக் கொண்டாள்.
“நமக்கு நேரம் குறைவா இருக்கு…. வாங்க.. . ஆதி சார கூப்பிடுங்க…..”, என கூறியபடி தான் படுத்திருந்த பாறையில் இருந்து வடகிழக்கு மையத்தை மனதினில் கணக்கிட்டு நடக்க, எதிரே பெரிய பாறை குன்று இருந்தது. அதன் மீது அவள் லாவகமாக நடந்து அந்த நீண்ட பாறையின் முடிவில் வந்து நின்று அர்ஜுனை அழைத்தாள்.
“இங்க தான் இருக்கு…. “, என காட்டினாள்.
“மொட்ட பாறையா இருக்கே வல்லா…..”, நாச்சியார் கூறினாள்.
“தூண் இங்க தான் இருக்கு…. ஆதி சார் இங்க வாங்க.. உங்க சிம்மேசன் உதவியும், வஜ்ரா உதவியும் இப்போ தேவை….”, என கூறிவிட்டு நான்கு இடங்களில் குறியீடு இட்டு அந்த இடத்தை உடைக்க கூறினாள்.
மற்றவர்கள் அந்த இடத்தை விட்டு தள்ளி நிற்க, வர்ஜா தனது நகத்தினால் அந்த பாறையை தோண்ட ஆரம்பிக்க சிம்மேசன் 5 அடி தோண்டியதும், குழியின் மையத்தில் தனது பாதத்தை அழுத்த அங்கிருந்த நடுப்பகுதி உடைந்து துவாரம் தெரிந்தது.
அந்த துவாரத்தில் சிம்மேசன் தனது உறுமல் சத்தத்தை அனுப்ப, மெல்ல மெல்ல அந்த நீண்ட பாறையில் விரிசல் விழுந்தது.
இதே போல நான்கு மூலையிலும் வஜ்ராவும் சிம்மேசனும் செய்து முடிக்க, அவர்கள் நின்றிருந்த இடம் மெல்ல மெல்ல உடைந்து விழ ஆரம்பித்தது.
சிம்மேசன் ஆதியை தன்மேல் அமர்த்திக் கொண்டு தரையினில் குதிக்க, வஜ்ராவும் கீழே குதித்து நின்றது.
அர்ஜுன் மற்றவர்களை இன்னும் தள்ளி தூரமாக நிறுத்திவிட்டு, வல்லகியின் அருகில் நின்றான்.
ஆதி நிலம் அதிர தொடங்கவும் தன் நினைவுகளில் பின்னோக்கி சென்றுக் கொண்டிருந்தான்.
மெல்ல மெல்ல பெரும் பாறையின் உள்ளிருந்து அழகாக செதுக்கிய தூண்கள் கண்களுக்கு புலப்பட ஆரம்பிக்கவும் அவனது விட்டுப்போன பழைய நினைவுகள் அவனின் கண்முன்னே விரிய தொடங்கியது.
சிம்மேசன் மீதிருந்து கீழிறங்கியவன் கண்களில் நீர் பெருக, “ஆரு…………….” , என அலறியபடி மயங்கி விழுந்தான்.
அவன் நினைவுகள் 10,000 ஆண்டுகள் முன்னோக்கி சென்றன. அங்கிருந்த கடந்த கால நினைவுகள் அவனது ஆன்மாவை உசுப்பி விட்டு அமைதியாக நின்றது.
அன்று அவன் இழந்த அத்தனையும், அதன் வலியும், துரோகமும், தோற்றுப் போன செயலாற்றலும் என அனைத்தும் அவனை அழுத்த, அந்நினைவுகளின் பாரமும், அழுத்தமும் தாளாமல் அவன் கண்களில் நீர் வழிந்தது.
“வந்துவிட்டேன் அமரா….. சிங்கத்துரியனை மீட்க வந்துவிட்டேன்…….”, என அவனது உதடுகள் முணுமுணுத்தன.
அதோ அவன் முழுதாக கடந்த காலம் சென்றுவிட்டான். வாருங்கள் நாமும் உடன் சென்று அங்கு நடந்த விபரீதங்களை அறிந்து கொள்ளலாம்….