69 – ருத்ராதித்யன்
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்…
அகண்ட பாரத கண்டத்தின் தென்கிழக்கு பகுதி ஆதித்த நாடு என்று பெயர் கொண்டு விளங்கியது. இன்றைய பாரதத்தோடு இலங்கை தாண்டியும் பல நூறு மைல்கள் நிலமாக அப்போது இருந்தது. வங்க கடலும், அரபிக் கடலும் உள்வாங்கி தான் இருந்தது. மிகவும் அகண்ட தென் பிரதேசமாக, பச்சை பசேலென இருந்த முழு நில பரப்பையும் ஒற்றை கொடையின் கீழ் ஆதித்த வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆண்டு வருகின்றனர்.
குறுநிலமாக இருந்த அவர்கள் ஆட்சி, பல வருட உழைப்பின் பலனாக பேரரசு எனும் தகுதியை அடைந்து 200 வருடங்கள் கடந்து இருந்தது. சுமார் பத்தாயிரம் ஆண்டுகள் முன்பு இருந்த கலாச்சாரமும், அறிவும், அறிவியல் நுட்பமும், இயற்கை சார்ந்த வாழ்வியலும், நாகரீகமும் என அந்த பாரத கண்டமே பொற்காலமாக திகழ்ந்தது.
அதோ அந்த பேரரசின் இயற்கை எழிலும், எக்கு கோட்டை போன்ற அரணும், காடே கோட்டையாக மூன்று பக்கமும் நின்றிருக்கும் விதமும், வாசல் பக்கம் மட்டுமே சற்று நகரத்தின் வாயில் போல கற்கள் பதித்து இருந்தது. அவ்வழியாக ரதமும், யானையும், பல வகையான ரோந்து வண்டிகளும் அங்கே உருண்டு செல்லும் சத்தம் அந்த காலை நேரத்தில் அதிகமாகவே கேட்டன.
மற்ற மூன்று பக்கமும் மிருகங்களின் சத்தமும், பல பறவைகளின் கலவையான குரல்களும் என மனதிற்கு இனிமையும், குதூகலமும் கொடுக்கும் படியாக இருந்தது.
அதோ ஒருவர் வேகமாக சென்று கொண்டிருக்கிறார். யாரையோ அவரது கண்கள் தேடிக் கொண்டிருக்கிறது. நடையுடை கண்டால் நிர்வாகத்தில் பெரும் பதவி வகிப்பவர் போல தெரிகிறது.
எதிர்பட்டவர்களை எல்லாம் ஒரு வேலை கொடுத்து கோட்டை வாயிலுக்கு விரட்டிக் கொண்டிருந்தார்.
ஏதோ விசேஷம் போல, பலரும் புது பட்டு உடுத்தி, நன்றாக அலங்காரம் செய்து, வண்ண மலர்களை கூடைகளில் வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர்.
அன்று அவர்களது இளவரசன் குருகுலவாசம் முடிந்து அரண்மனை திரும்புகிறார். அன்றே அவருக்கு யுவராஜா பட்டமும் சூட்ட அரசர் எண்ணம் கொண்டிருக்க, அதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன.
“மந்திரியாரே…… இளவரசனை வரவேற்க எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்கிறதா?”, என கேட்டபடி கம்பீரமாக வைரம் பாய்ந்த உடலுடன், பாதி வெள்ளிக்கம்பிகளாக மாறி இருந்த மீசையை நீவியபடி, மெல்லிய ரத்தின கொடியோடும் கிரீடம் தாங்கி, தோள் வரை புரண்ட கேசத்தினை கிரீடம் கொண்டே சரிசெய்து அரண்மனை பலகணியில் வந்து நின்றார் வரத யோகேந்திர ஆதித்தனார்.
ஆதித்த நாட்டின் அரசர், பல்லுயிர் இனங்களை பாதுகாத்து அவற்றின் இனம் வளரவும், அவை நிம்மதியாக வனத்தில் உலாவவும் எல்லா ஏற்பாடுகளும் செய்து, இயற்கையை தன் ஆத்மாவின் உள்ளே வைத்து பாதுகாத்து வருகிறார்.
அவரை வணங்கியபடி முதல் மந்திரியார் அவரின் அருகே வந்து பதில் கூற தொடங்கினார்.
“108 தீபங்கள் முதல் தேங்காய், பூசணி, 108 வகை மலர்கள், 108 வகை நறுமண பன்னீர் வகைகள், யானை குதிரை முதல் மகதன் வரை தயாராக வாசல் அருகே இருக்கின்றனர் பிரபு….”
“மகதனுமா?”, ஆச்சர்யமாக கேட்டார்.
“ஆம் பிரபு… அமரபுசங்கர் அருகில் இருக்கிறார்… “
“மகதனுக்கு ஜனக்கூட்டம் கண்டாலே பிடிக்காதே அவன் எப்படி வந்தான்… யாராவது கட்டாயப்படுத்தினார்களா?”
“இல்லை மகாராஜா…. மகதனே நமது கோட்டை வாசல் வரை வந்து அமரபுசங்கரை அழைத்தான். அவனிடம் நமது அமரபுசங்கரும் அனைத்தும் பேசிப் பார்த்து உறுதிபடுத்திக் கொண்டு பெயருக்கு சங்கிலியை தனது கையில் மட்டும் வைத்து நின்று கொண்டு இருக்கிறார்….”
“ஜாக்கிரதை… சிறு குழந்தைகள் சேட்டை செய்து அவனை கோபம் கொள்ள வைத்து விடக்கூடாது…. அவன் இனத்தில் அவன் ஒருவன் தான் இருக்கிறான்… அவனை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்… அவனுக்கு இணையை தேட கூறி இருந்தேனே என்னவாயிற்று?”, வரத யோகேந்திர ஆதித்தனார் நடந்தபடியே மந்திரியிடம் பேசிக்கொண்டு அரண்மனை மாடம் வந்து நின்றார்.
“தென் பாரதம் முழுதும் அலசியாகிவிட்டது பிரபு.. அவன் இனத்தில் பெண் புலி கிடைக்கவில்லை… வட பாரதத்தில் இருக்கலாம் என்று நமது தேடல் குழு தலைவன் கூறுகிறார். ஆனால்…..”
“என்ன ஆனால்…?”, கண்கள் சுருக்கி அவர் பார்த்த விதத்தில் மந்திரியாருக்கு வியர்த்து கொட்டத் தொடங்கியது.
“சமீபகாலமாக மிருகங்களை வதைக்கும் கும்பல் அங்கே பெருகி இருப்பதாக தகவல் வந்ததாம். வடகிழக்கில் ஒரு இளவரசன் அரியவகை மிருகங்களை வைத்து ஆராய்ச்சி செய்து வருகிறானாம்…. இயற்கையை அழித்து அவன் உருவாக்கும் இனங்கள் மட்டுமே இந்த பூமியில் வாழ வேண்டும் என்று நினைக்கிறானாம். நாம் இணை தேடி செல்வதால் நம் நாட்டின் பக்கம் அவன் பார்வை…..”, என கூற வந்ததை கூறாமல் அவர் நிறுத்தினார் அரசரின் சிவப்பேறிய கண்கள் கண்டு.
“என்ன மந்திரியாரே ….. யாரை நினைத்து யார் பயம் கொள்வது? அவன் இயற்கையை அழிக்க வந்திருந்தால் நாம் இயற்கையை காக்க வந்திருக்கிறோம்…. அவன் அழிவு நமது கைகளால் நிகழும் என்றால் அது நடந்தே தீரும்….. பல நூறு மலைகள், நூற்றுகணக்கான ஆறுகள், முப்பக்கமும் பெருங்கடல் என தென் பாரதம் முழுதும் நாம் ஆட்சி செய்து வருகிறோம்.. இப்பூமியில் இயற்கையால் பிறந்தவர்கள் தான் அனைவரும்… அதை அழிக்க எந்த மூடன் எப்படிபட்ட சக்தியாக வந்து நின்றாலும் அவனை அழிப்பது நமது கடமை. மகதனின் இனம் இன்னும் 2 வருட காலத்திற்குள் பெருகியே ஆக வேண்டும்…. இன்னும் 2 குழுக்களை வட மேற்கிழும், வடகிழக்கிலும் அனுப்புங்கள்….. அந்த நாட்டை பற்றியும் உளவு அறிய கூறுங்கள்…. “, என தீர்க்கமாக கூறிவிட்டு தூரத்தில் தெரியும் புழுதியை கண்டார்.
சற்றே மெல்லிய கீற்றாக அவரின் இதழ் மென்னகைத்து மீண்டும் நேராக முகத்தில் எவ்வித உணர்வும் காட்டாமல் நின்று கொண்டார்.
நொடிக்கும் குறைவான நேரத்தில் அவரது முகம் காட்டிய பாவனையை மந்திரியார் கண்டு அவரும் மென்னகைத்து கொண்டார்.
மகதன் காற்றில் வந்த வாசனையை வைத்து கண்கள் மின்ன கோட்டை வாசல் வெளியே சென்று நின்று கொண்டான்.
மெல்லியதாக ஆரம்பித்த அவனது உறுமல் உச்சஸ்தாயில் சென்று கொண்டிருந்தது.
புழுதி வரும் பக்கமும் பல உறுமல் சத்தங்கள் எழ, மகதன் இன்னும் குஷியாகி குதித்து தனது வரவேற்பை தொடங்கினான்.
மகதனின் குதியாட்டம் கண்டு மக்களும் ஆரவாரத்தை ஆரம்பிக்க, வாத்தியமும், மேளமும் கொட்டத் தொடங்கினர். அமரபுசங்கன் மகதன் அருகிலேயே அவனை தொட்டுக் கொண்டு நின்றிருந்தார்.
அமரபுசங்கன்…..வரத யோகேந்திர ஆதித்தனாரின் மூத்த தமக்கையின் மகன். அமரக்கோட்டை சமஸ்தானத்தின் அரசன். அமரதேவ நேத்திரர் மற்றும் காஞ்சன ரத்னா தேவியின் அருமை புதல்வன்.
தாய் தந்தை இருவரும் மிருகங்களை பாதுகாக்கும் பணியில் ஒன்றாக உயிர் துறந்துவிட, மகாராணி சௌந்தர்யதிலகவதி தேவியார் தான் அவனை தன் மகவாக பாவித்து வளர்த்தார்.
உரிய பருவம் வந்ததும் அவனுக்கு அரசர் முடிசூட்ட, அவன் அதிகாரத்தின் கீழ் வரும் பகுதியை அற்புதமாக செங்கோல் ஆட்சி செய்து வருகிறான்.
வரத யோகேந்திர ஆதித்தனார் அவனுக்கு தந்தையாக அனைத்தும் போதித்து கடுமையை காட்டி வளர்க்க, மகாராணி அவனை தரைதொடா சேய் போல மடியினில் தாங்கி வளர்த்தார். தாய் தந்தையை இழந்த சோகம் எல்லாம் இவர்களின் அன்பினால் நீர்த்து போனது. முக்கியமாக தன் சோதரனாக இருந்த நரசிம்ம யோகேந்திர ஆதித்தனால் அவனது மிச்சமிருந்த வருத்தமும் காணாமல் போய் இருந்தது.
ஆதித்த கோட்டையில் இருந்து இரண்டு நாள் பயண தொலைவில் அவனது சமஸ்தானம் இருந்தது. ஆகையால் நினைத்த நேரம் இங்கு வந்து தங்கி, அரசருக்கு உதவியாக, ராணிக்கு மகனாக அன்பு செலுத்தி இங்கே சில நாட்கள் தங்கி, அசரர் முறைக்கவும் தன் சமஸ்தானம் செல்வதை வழக்கமாக வைத்திருந்தான் அமரபுசங்கன்.
“அவன் இன்னும் சிறிது நாட்கள் இங்கிருந்தால் என்ன உங்களுக்கு? அவனை என்னிடம் இருந்து பிரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்…”, மகாராணி அவனுக்காக சண்டையிடுவார்.
“அவன் இங்கேயே இருந்தால் அங்கிருக்கும் மக்களும் மற்ற உயிர்களும் எப்படி இருக்கிறார்கள் என எப்படி அறிவான் அவன்?இன்னும் சிறு குழந்தை அல்ல… அவனுக்கு அடுத்த வருடம் மனம் முடிக்க வேண்டும்…. அவன் மனையாட்டி வந்தபின்னும் இதே பழக்கம் தொடர்ந்தால் வீட்டிலும் நாட்டிலும் கலகம் தான் பிறக்கும்… அன்பையும் அளவாய் வெளிக்காட்டி பழகு மகாராணி….”, என கோபமாக மொழிவார் அரசர்.
“நான் பெற்றவனும் என்னோடு இருப்பதில்லை, நான் பெறமால் கிடைத்த பிள்ளையை நீங்கள் விரட்டுகிறீர்கள் …. இப்படியே போனால் நான் என் மகன்களோடு பேசவே கூடாது என்பீர்கள் போல…..”
“திலகா….. அவர்கள் இருவரும் வளர்ந்து விட்டனர்…. இனி நாம் எட்டி நின்று தான் பழக வேண்டும்…. அது அனைவருக்கும் நல்லது… உனக்கு யாருக்கேனும் உணவு ஊட்டி மடியில் வைத்து சீராட்ட ஆசை வந்தால் நமது காடுகளுக்குள் சென்று அங்கிருக்கும் பல இனங்களின் வாரிசுகளை தூக்கி மடியில் வைத்து கொஞ்சி மகிழ் …. உன் மகன்களுக்கு திருமணம் செய்து வைத்து பேர பிள்ளைகளை கொஞ்சி விளையாடு…”, மகாராணி முகம் சுறுக்கியதும் அமைதியாக ஆறுதல் கூறுவார் அரசர்.
“இவர்களிடம் நான் மக்களை பெற்று கொடு என்று கேட்பதற்கு நான் காட்டினில் நிரந்தரமாக தங்கி அங்கிருக்கும் பல்லுயிர்களை கொஞ்சி கொள்ளலாம்…. “, மெல்லிய சிரிப்புடன் கூறினார் ராணி.
“ஏதேது நீயே இப்படி கூறினால் அவர்களுக்கு யார் திருமணம் செய்து வைப்பது?”, என மகாராஜா சிரிப்புடன் கேட்டார்.
“நீங்கள் தான்… என்னால் மகதனுக்கு கூட இணை தேடி வைக்க முடியும் இவர்களை ஒன்றும் செய்ய இயலாது பிரபு… இவன் திருமணம் செய்யாமல் அவன் செய்ய மாட்டான், அவன் செய்யாமல் இவன் செய்யமாட்டான் என்று இருவரும் நம் தலையை தான் இடிப்பார்கள்…. “
“அப்படியென்றால் மகதனின் இணை தேடும் பொறுப்பை நீ எடுத்துக் கொள்கிறாயா?”, அரசர் கண்கள் மின்ன கேட்டார்.
“ஏற்கனவே அதற்கான குழுவை ஏற்பாடு செய்துவிட்டேன் பிரபு… தாங்கள் அக்குழுவை ஒருமுறை பார்த்து சரியென்று கூறினால் தேடுதல் பணிக்கு அனுப்பிவிடலாம்…. அண்டை தேசங்களும் செல்ல வேண்டிய அனுமதி ஓலை தேவை…”, என மென் சிரிப்புடன் கூறிய ராணியை ஆரத்தழுவி கொண்டு, “என் மனம் எண்ணும் காரியத்தை நீ முடித்துவிடுகிறாய் திலகா….. எப்போது இதை செய்தாய்?”, மகிழ்வுடன் கேட்டார்.
“நமது மிருக காவலர் குழுவின் தலைவன் வந்து பேசும் போதே அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்து விட்டேன் பிரபு… மகதன் உடல் தேறியதும், மருத்துவரும் கூறினார் அல்லவா?”
“ஆம்… அவன் இனம் அநியாயமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது . அதை எப்படியேனும் தடுத்தாக வேண்டும்…. “
“நிச்சயம் அதற்கான வழி நமக்கு கிடைக்கும் பிரபு… தங்கள் மைந்தனும், ருத்ர கோட்டை சமஸ்தான இளவரசியும் இணைந்து ஒரு காரியம் செய்ய போவதாக செய்தி வந்தது…..”
“எனக்கும் வந்தது திலகா… ஆனால் அவர்கள் முயற்சி எந்த அளவிற்கு வெற்றி பெரும் என்பது நமக்கு தெரியாது… அம்மையும் அப்பனும் மட்டுமே அறிவார்கள்…”, என கூறி வேறு காரியங்கள் பற்றி ராணியிடம் ஆலோசனை செய்தார்.
மகாராணியார் பற்றி எண்ணிக் கொண்டிருக்கும் போதே வாசலில் அவர் வந்து நிற்பது அரசர் கண்களில் விழுந்தது.
முதலில் மூன்று குதிரைகள் வருவது கண்களுக்கு தெரிந்தது. மெல்ல மெல்ல குதிரையின் பின்னே சில சிங்கங்களும், வேட்டை நாய்களும், சிறுத்தை புலிகளும் குதிரைக்கு முன்னே பாய்ந்து கோட்டை வாசலுக்கு வந்தன.
கடிவாளம் ஏதும் இல்லாத அந்த வளர்ந்த குதிரையின் மேல் இருந்து சிறு பெண் ஒருத்தி குதித்து இறங்கினாள் .
இடையில் தொங்கிய ஆயுதங்கள், முதுகின் பின்னால் இருந்த வில் பானங்கள், முகத்தில் இருந்த தேஜஸ், கண்களில் இருந்த கூர்மை என அவள் நிமிர்ந்த நடையில் வந்த விதம் கண்டு, கூடி இருந்த மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்து பூமாரி பொழிந்தனர்.
மக்களின் அன்பை தலை வணங்கி பெற்று, அரசியார் பாதம் பணிந்து, அரசருக்கும் தன் வணக்கங்கள் தெரிவித்தாள்.
அவள் வந்து இறங்கிய சில நிமிடங்களில் சிங்கத்தின் பிடறியை இறுகப்பிடித்து சிங்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து சவாரி செய்தபடி, புழுதி சூழ வந்தான். சிங்கத்தின் மேலே அமர்ந்த நிலையில் இருந்து உற்சாகமாக கத்தியபடி குதித்து இறங்கினான் நரசிம்ம யோகேந்திர ஆதித்தன்.
மகதன் அவனைக் கண்டதும் பாய்ந்து கீழே தள்ளி முகம் முழுக்க நாவால் நக்கி தன் அன்பை வெளிப்படுத்தியது.
மகதனை கீழே தள்ளி அவன் மேல் ஏரியவனை மகதன் உடல் உதறி கீழே தள்ளினான். இருவரும் சில நிமிடங்கள் மல்யுத்தம் செய்ய, சுற்றி இருந்த மக்கள் ஆரவாரத்தோடு கைத்தட்டி இரண்டு பக்கமும் உற்சாகப்படுத்தி கொண்டிருந்தனர்.
“மகதா…. உனக்கும் பிடறி இருந்தால் தெரிந்திருக்கும்…. வழு வழுவென உடலை வளர்ந்து வைத்திருக்கிறாய்….. “, என மகதனை கொஞ்சியபடி மக்களை பார்த்தான்.
அவர்களுக்கு சிரம் தாழ்த்தி தன் வணக்கங்கள் வைத்ததும் மேள சத்தமும், மக்கள் ஆரவார சத்தமும் காட்டை அதிர வைத்தன. பின் அவனுக்கு ஆரத்தி எடுத்து, பன்னீர் தூவி, திருஷ்டி கழித்து, என மகாராணி முன்னால் வந்து நிற்க, அவரும் அவனுக்கு ஆழம் சுற்றி மகனை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தார்.
அமரபுசங்கனும் அவனை கட்டித் தழுவி தன் அன்பை பகிர்ந்து கொண்டான்.
பட்டத்து யானை ஆசீர்வதிக்க, பெரியோர்கள் வாழ்த்த, குருகுலம் முடித்து வந்த இளவரசனை யுவராஜனாக்க அடுத்த ஏற்பாடுகள் தொடங்கின.
“அத்தான்……”, என குரல் அழைக்கவும் தான் அவளை அருகில் அழைத்து தாயிற்கு அறிமுகம் செய்தான்.
“அம்மா… இவள் நித்யவன யாத்திரை…. ருத்ர சமஸ்தானத்தின் இளைய இளவரசி…..”
“நான் நன்கு அறிவேன்… இன்னோர் மகன் எனக்கு பிறந்திருந்தால் இவள் தான் இளைய மருமகளாக வந்திருப்பாள்…”
“இப்போதும் தங்களுக்கு இளைய மருமகளாக நான் வர தயார் தான் மகாராணி…. அத்தானுக்கு சம்மதமா என்று மட்டும் கேளுங்கள்…”, என கூறி கண்ணடிக்க ஆதித்தன் முறைத்தான், அமரபுசங்கன் சிரித்தான்.