7 – அகரநதி
வாசலில் நின்றிருந்த அகரன் போன் வந்ததால் பார்கிங் ஏரியா பக்கம் இருந்த லானில் நடந்துக் கொண்டே பேசிக்கொண்டு இருந்தான்.
பார்கிங்கில் வண்டியை நிறுத்திய மைக்கேல் கேங் மற்றும் நதி லானில் காத்திருக்கலாம் என, அகரன் நடந்துக் கொண்டு இருந்த இடத்திற்கு அருகில், குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல் முதல் சருக்குபாலம் எல்லாம் இருக்க அங்குச் சென்றனர்.
“ஏய்….. நான் தான் அங்க ஊஞ்சல்ல உக்காருவேன்”, என மைக் ஓட அவனைத் தொடர்ந்து அனைத்து வானரமும் பின்னே ஓடியது.
“டேய் எருமைங்களா அது குழந்தைங்க உக்கார்ற ஊஞ்சல்…. காட்டெருமை கணக்கா இருக்கீங்க……. நீங்க எல்லாரும் அதுல உக்காராதீங்க, ஒடஞ்சிடும் டா”, என மீரா கத்தினாள்.
“போ மீரா …. எத்தனை நாள் ஆச்சி ஊஞ்சலாடி .வீட்ல கேட்டா ஊஞ்சல் வாங்கி தரமாட்டேங்கறாங்க”, எனக் கூறியபடி மைக்கின் நண்பன் அமுதன் ஒரு ஊஞ்சலில் ஆடத் தொடங்கினான்.
“மூனு கழுதை வயசாகுது உனக்கு. விளையாட ஊஞ்சல் கேட்டா திட்டாம இடுப்புல தூக்கி வச்சி கொஞ்சுவாங்களா மச்சி”, எனக் கேசவன் நக்கலடித்தான்.
“டேய் கம்முனு இருங்க டா. மீரா அவங்க வரவரைக்கும் தானே…. நீயும் வா இந்த ஊஞ்சல்ல உக்காந்துக்கோ”, என அந்தப் பக்கம் இருந்த ஊஞ்சலைக் காட்டினான்.
“உடஞ்சா நீ தான் பொறுப்பு. பிரேகேஜ் காஸ்ட் உன்னதுன்னு சொல்லு வரேன்”, மீரா.
“அதுல்லாம் முடியாது…. வேணும்னா ஆடுங்க இல்லையா விட்றுங்க”, என மைக்கேல் கூறினான்.
“ஹேய் யாள்…. அங்க என்ன பண்ற?”, மீரா.
“மீரா அங்க இருக்காரே அவர எங்கயோ பாத்தமாதிரி இருக்கு”, என அகரனைக் கைக்காட்டினாள் நதியாள்.
“யார டி சொல்ற?”, மீரா.
“அதோ அங்க பாரு டி. அந்த நேவிபுளூ கோட் போட்டு இருக்காரே அவர் தான்”, நதியாள் அகரனை கைக்காட்டிக் கூறினாள்.
அவளை யோசிக்கவிடாமல் மீரா ,”நாம வெளியே வரப்ப இந்தமாதிரி எங்கையாவது பாத்து இருப்ப. நீ வா அங்க பாரு அந்த குரங்கு கூட்டம் எல்லாம் ஊஞ்சல்ல ஆடிட்டு இருக்கு”, என மைக்கேல் கேங்கைக் காட்டிக் கூறினாள்.
“இம்சை டி உங்கள வச்சிட்டு. வா”, என அவர்களை நோக்கி நடந்தாள் நதியாள்.அத்துடன் நதியின் சிந்தனை தடைபட்டது.
அங்கு சென்றவள் நான்கு ஊஞ்சலிலும் குரங்கு போல தொத்தி கொண்டிருந்தவர்களை பார்த்துவிட்டு, ” நமக்கு ஊஞ்சல் இல்லாம போச்சே…. அந்த ஹேன்சம்அ வேடிக்கை பாத்துட்டு ஊஞ்சல விட்டுட்டியே நதி”, என மனதிற்குள் பேசிக்கொண்டாள்.
“ஐ …. சருக்குமரம்…. நான் அதுல விளையாட போறேன். மீரா நீயும் வா”, என நதியாள் சரக்கு மரம் நோக்கி ஓடினாள்.
மீரா தலையில் அடித்துக் கொண்டு,”போயும் போயும் இவளை இவனுங்கள திட்ட கூட்டிட்டு வந்தேன் பாரு, என்னை அடிக்கணும்”, என முணுமுணுத்தாள்.
“மீரா அது கால்ல இருக்கு”, என நதியாள் அங்கிருந்து கத்தினாள்.
“இங்க வா உன்ன அடிக்கறேன்”, மீரா.
நதியாளின் கத்தலில் திரும்பி பார்த்த அகரன் அவள் சருக்குமரத்தில் விளையாடுவதைப் பார்த்தான்.
மீரா தலையில் கைவைத்தபடி நிற்பதும், மற்றவர்கள் ஊஞ்சலில் ஆடுவதும், அவள் கத்திகொண்டு விளையாடுவதும் அகரனின் முகத்தில் புன்னகைப் பூக்க வைத்தன.
தனியாக சிரித்துக் கொண்டு இருந்த அகரனை சரண் தோளில் தட்டி,”அங்க என்னடா பாத்துட்டு இருக்க?” எனக் கேட்டான்.
“காலேஜ் ஸ்டுடண்ஸ் போல டா. ஜாலியா விளையாடிட்டு இருக்காங்க. நாம அதலாம் மிஸ் பண்றோம்ல னு தோணுது”, அகரன்.
“வேணும்னா வா நாமலும் இப்ப அங்க போய் அவனுங்க கிட்ட சண்டை போட்டு ஊஞ்சல் ஆடலாம். அந்த பொண்ண தள்ளி விட்டுட்டு சருக்குமரத்துல சொய்ங்னு கீழ வரலாம் மேல ஏறலாம்”, சரண்.
“டேய்….. அவங்க சின்ன பசங்க விளையாடறாங்க.. நாமலும் அப்டி விளையாட முடியுமா அதுவும் இந்த ஹோட்டல்ல”, அகரன்.
“ஏன் இந்த ஹோட்டல்ல விளையாடக்கூடாதா?”, சரண்.
“நம்ம கம்பெனிக்கு அடுத்த ப்ராஜெட் இதுவும் தான்”, அகரன்.
“இதுக்கு எப்படா கொடேசன் அனுப்புன?”,சரண்.
“பர்சனல் ஆ இங்க சிலத மட்டும் டிசைன் பண்ண சொல்லிக் கேட்டு இருக்காங்கடா. இனிமே தான் கொடேசன், டிசைன்லாம் ரெடி பண்ணணும்”, அகரன்.
“சரி வா முதல்ல சாப்ட போலாம்”, என சரண் திரும்ப அமுதனை கேசவன் துரத்திக் கொண்டு வர, சரணை இடித்து மூவரும் கீழே விழுந்தனர்.
“ஹேய்…. ஸ்டுபிட்ஸ்…. அறிவில்ல இப்படி தான் பப்ளிக் ப்ளேஸ்ல ஓடி வந்து தள்ளிவிடுவீங்களா?”, சரண் திட்டிக் கொண்டே எழுந்தான்.
“சாரி சார் தெரியாம இடிச்சிட்டோம்”, அமுதன்.
“கண்ணு தெரியுதா இல்லையா உங்களுக்கு ?”,சரண் திட்டினான்.
“ஹலோ மிஸ்டர். அவங்க தான் சாரி சொல்றாங்கல்ல அப்பறமும் ஏன் வார்த்தைய விடறீங்க?”, எனக் கேட்டபடி நதியாள் வந்தாள்.
“தள்ளிவிட்டுட்டு சாரி கேட்டா போதுமா?”, சரண்.
“வேற என்ன பண்ணணும்னு சொல்றீங்க? உங்களுக்கு தான் ஒன்னும் ஆகலல்ல”, நதியாள்.
“ஏன் எதாவது ஆகணும்னு ஆசைபடறீங்களா?”, சரண்.
“டேமேஜ் ஆனா ஆஸ்பத்திரியில சேத்துடறோம் பில்லும் கட்டிடறோம் .அதான் அடிபடலல்ல சும்மா கத்தாதீங்க சார்”, நதியாள்.
“இங்க பாரு பாப்பா ஓவரா பேசாத. நான் யாருன்னு தெரியாம பேசிட்டு இருக்க”, சரண்.
“தெரியாது தான் அதுக்கு என்ன இப்ப? ஏதோ எங்க மேல தப்பு இருக்குன்னு அமைதியா பேசினா ஓவரா பேசறீங்க. என்ன முடியுமோ பண்ணிகோங்க. வாங்கடா அமுதா கேசா”, என அங்கிருந்து நகர்ந்தாள் நதியாள்.
போகும் பொழுது அகரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனைக் கடந்து சென்றாள். அந்த பார்வையில் இருந்தது என்னவென்று அவனும் அறியவில்லை அவளும் அறியவில்லை.
அவள் அருகில் வருவது முதல் பேசியது, முறைத்தது , சரணிடம் மல்லுக்கு நின்றது, திமிருடன் பதில் கொடுத்தது என அனைத்தும் அமைதியாகப் பார்த்துக் கொண்டு அல்ல அல்ல இரசித்துக் கொண்டு இருந்தான் அகரன். ஓர் நொடியில் ஓராயிரம் கதை சொல்லும் கண்கள் என காவியத்தில் படித்திருக்கிறான் நிஜத்தில் அந்த நொடி கண்டுவிட்டான்.
அவளின் நிமிர்ந்த நடையிலும், திமிரான பார்வையிலும், பயமில்லா இதயத்தாலும் அகரன் கவரப்பட்டான் அவனறியாமலே.
“ஏன்டி இப்படி பேசற? கொஞ்சம் பொறுமையா பேசி இருக்கலாம்ல?”, மீரா.
“பின்ன என்ன தெரியாம இடிச்சி கீழ மூனு பேரும் தானே விழுந்தாங்க . சாரி சொன்னா சரின்னு விடணும். தேவையில்லாம வார்த்தைய விட்டா இப்படிதான்”, நதியாள்.
“டேய் எரும மாடுங்களா. உங்களால தான் இப்ப பிரச்சனை. கம்முனு நடந்து வரமுடியாதா உங்களால?”, மீரா அவர்களை திட்டினாள்.
“மீரா….”, நதியாள் முறைத்தாள்.
“விடு யாள். அவங்க வந்துட்டாங்க பாரு”, மைக் ஹோட்டல் வரவேற்பு கட்டிடம் அருகில் சென்றான்.
“ஸ்டெல்லா ஏன் லேட்?”, நதியாள்.
“இந்த திலீப் தான் பொண்ணு பாக்க போறமாதிரி ரெடி ஆகறான். இழுத்துட்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடிச்சி”, ஸ்டெல்லா.
“சரி வாங்க உள்ள போலாம்”, சஞ்சய்.
அவர்கள் உள்ளே செல்லும் வரையில் ஒரு வார்த்தை கூட பேசாமல் அகரனின் பார்வை அவர்கள் மேலேயே இருந்தது.
“சார் சைட் அடிச்சி முடிச்சிட்டீங்களா?”, சரண் முறைத்துக் கொண்டே கேட்டான்.
“இல்லடா … அதுக்குள்ள உள்ள போய்டாங்க”, எனக் கூறி நாக்கைக் கடித்தான் அகரன்.
“இங்க ஒருத்தன் கீழே விழுந்து கடக்கறேன்…. என்னையும் தூக்கி விடல….. அவங்கள ஒரு வார்த்தை கூட திட்டலை நீயெல்லாம் பிரண்டா டா?”,சரண்.
“அதான் அவங்க சாரி சொல்லிட்டாங்கல்ல” ,அகரன்.
“சாரி சொன்னா விட்றனுமா?”, சரண்.
“சும்மா அதையே பேசாத டா. தெரியாமத்தான் இடிச்சாங்க. சின்ன விஷயத்துக்கு சின்ன பசங்க கிட்ட மல்லுக்கு நின்னா இப்படிதான் ஆகும். வா உள்ள போலாம்”, அகரன் அவனை இழுத்துக் கொண்டு உள்ளே வந்தான்.
ரெஸ்டாரெண்ட் உள்ளே நுழைந்ததும் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அனைத்தும் அனைந்துவிட, அகரனும் சரணும் அப்படியே நடையின் வேகத்தைக் குறைத்தனர்.
“ஹேப்பி பர்த்டே டூ யூ…. ஹேப்பி பர்த்டே டூ யூ. ஹேப்பி பர்த்டே டியர் மைக்கேல்…. ஹேப்பி பர்த்டே ஹேப்பி பர்த்டே ஹேப்பி பர்த்டே டூ யூ காட் பிளஸ் மை டியர் மைக்கேல்”, எனப் பிறந்தநாள் வாழ்த்து பாடியபடி நதியாளும், ரிஸ்வானாவும் கேக்கை எடுத்துக் கொண்டு வந்தனர்.
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நதியாளைக் கண்ட அகரனின் மனதில் ஏதோ இடம்மாறி நழுவியதாகத் தோன்றியது.
அகரன் அசையாமல் நிற்பதைக் கண்ட சரண் அவன் நோக்கிய திசையில் பார்க்க, ரிஸ்வானா அவன் கண்களுக்கு தேவதையாகத் தெரிந்தாள்.
ரிஸ்வானா ஐந்தரை அடி உயரம், அல்லிமலரின் நிறம் கொண்டதோடு, மெல்லிய இடை கொண்டவள். அவளின் கண்களை கண்ட சரண் அவளிடம் மனதைப் பறிக்கொடுத்தான்.
“கேக் கட் பண்ணு மச்சி”, நதியாள்.
“ஹேய்…உனக்கு எப்படி தெரியும்… என் பர்த்டே இன்னிக்கு தான்னு?”, மைக்கேல்.
“நீ பர்த் சர்டிபிகேட்ல இருக்க டேட் இல்லைன்னு சொன்னதும் அப்பா கிட்ட கேட்டேன் சொல்லிட்டாரு”,நதியாள் சிரித்துக்கொண்டே கூறினாள்.
“கேள்வி கேட்டது போதும் மச்சி கேட் கட் பண்ணி குடுடா”, கேசவன்.
“அலையாதீங்க டா”, மீரா.
“சீக்கிரம் மைக்”, திலீப்.
“எல்லாம் சோத்து மூட்டைங்களா இருக்குங்க”,என ஸ்டெல்லா தலையில் அடித்துக் கொண்டாள்.
“ஏன் உனக்குலாம் பசிக்காதா?”, திலீப்.
“சண்டைய நிறுத்துங்க டா”, சஞ்சய்.
“அடச்சே வாயமூடுங்க எல்லாரும். மைக் நீ கேக் கட் பண்ணு டா”, நதியாள்.
மைக் கேக் கட் பண்ணியதும், அவர்களுக்குள் ஊட்டி விட்டுக்கொண்டனர். பின் அருகில் இருந்தவர்களுக்கும் பீஸ் கேக் கொடுக்கப்பட்டது. அங்கிருந்த மற்றவர்களுக்கும் சர்வர்கள் மூலமாக அனுப்பட்டது.
“பாத்தியா மச்சான். பர்த்டே செலப்ரேசன் எப்படியெல்லாம் பிளான் பண்றாங்க”, அகரன்.
“ஆமா மச்சி. பொண்ணுங்க எல்லாமே சூப்பர் அந்த ரவுடிய தவிர”, என நதியாளைக் கைக்காட்டினான் சரண்.
“அந்த பொண்ணுக்கு என்னடா குறைச்சல்? அவளும் நல்லாதான் இருக்கா”, அகரன்.
“குறையே இல்ல வாயும் சேர்த்து”, சரண்.
“சரி சாப்டு. வேலை இருக்கு. ஸ்வப்னா கால் பண்ணா”, அகரன்.
“என்ன விஷயம்?”, சரண்.
“ஆபீஸ்ல போய் பேசிக்கலாம் சாப்டு”, அகரன்.
“ஆர்டர் பண்ணுடா முதல்ல”, சரண்.
“ஹேய்ய்ய்ய்ய்….. அது எனக்கு… அந்த லெக்பீஸ் எனக்கு …… அந்த பிஷ் பிரை இங்க வை”, என நம் வானர பட்டாளம் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது.
“அங்க பாரு மொத்த ரெஸ்டாரெண்ட் ஐட்டம்ஸ்யும் அங்க தான் இருக்கு”, சரண் அவர்களைக் காட்டினான்.
“உனக்கு அதுல எல்லாம் ஒரு பிளேட் வேணும் அவ்வளவு தானே”, அகரன்.
“ஹீஈஈஈஈஈஈ…… கககபோ”, சரண்.
“மூடு…. வழியுது”, அகரன் .
சாப்பாட்டை ஆர்டர் கொடுத்துவிட்டு நதியாள் கேங்கை இருவரும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
“மீரா இந்தா எடுத்துக்க….”, என அமுதன் ஒரு பிளேட்டை அவள் பக்கம் தள்ளினான்.
மைக் பிளேட்டில் இருந்து திலீப்பும் யாளும் அவனுக்குத் தெரியாமல் சிக்கன் பிரையை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
“அங்க பாத்தியா எப்படி திருடி சாப்பிடறான்னு”,சரண் நதியாளைச் சுட்டிகாட்ட, அகரன் ,” நீ பிளேட்டையே தூக்கிட்டு போறதுலாம் மறந்துபோச்சா?”, என முறைத்துக் கொண்டே கேட்டான்.
“ஹீஈஈஈஈஈ….அதுல்லாம் ஏன் மச்சி இப்ப சொல்ற? அது எப்பவோ பண்ணது”, சரண் சமாளித்தான்.
“போன வாரம் பண்ணது தான்”, அகரன் முறைத்துக் கொண்டு கூறினான்.
“சரி விடு மச்சி. தோ நம்ம ஆர்டர் பண்ணது வந்துடிச்சி”, என உண்ண ஆரம்பித்தான் சரண்.
அகரனும் அங்கொரு கண் இங்கொரு கண் என சாப்பிட ஆரம்பித்தான்.
சாப்பிட்டு முடித்தவுடன் நதியாள் மற்றவர்களை வெளியே அனுப்பிவிட்டு மேனேஜரைக் காணச் சென்றாள்.
“எதுக்கு மேனேஜர பாக்க போறா?”, சஞ்சய்.
“நைட்டுக்கு எதாவது பார்சல் வாங்கிட்டு வருவாளோ?”, திலீப்.
“நீ திங்கறதுலயே இரு”, என ஸ்டெல்லா அவனைக் கலாய்த்தாள்.
“அவ பில் செட்டில் பண்ண போய் இருக்கா”, ரிஸ்வானா.
“மைக் தான் கட்டிட்டானே”, கேசவன்.
“பர்த்டே செலப்ரேசனுக்கு, கேக்குக்கு எல்லாம் தனியா குடுக்கணும்”, ரிஸ்வானா.
“எப்ப வந்து அரேஞ்ச் பண்ணா இத?”, அமுதன்.
“ஒரு வாரம் முன்னாடி”,மீரா.
அங்கே மேனேஜர் அறையில் நதியாள்,”மே ஐ கம் இன் சார்”.
“எஸ் கம் இன்”, மேனேஜர்.
“ஹலோ சார்…. குட் நூண்”, நதியாள்.
“குட் நூண் மா. எப்படி போச்சு பர்த்டே செலப்ரேசன்?”, மேனேஜர்.
“நல்லா இருந்தது சார். மெனுவும் நான் சொன்னமாதிரியே செஞ்சு குடுத்தாங்க. அதான் தேங்க் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்”, நதியாள்.
“அதுதான் நம்ம ரெஸ்டாரெண்டோட ஸ்பெஷாலிட்டி. நீங்க என்ன கோர்ஸ் படிக்கறீங்க?”,மேனேஜர்.
” ஆர்கிடெக்ட் அண்ட் இன்டீரியர் டெகரேசன் சார்”, நதியாள்.
“ஓ நைஸ்…..இது பைனல் இயரா?”, மேனேஜர்.
“ஆமா சார்”, நதியாள்.
“ஓகே. ஆல் த பெஸ்ட் . ரீச் ஹை இன் லைப்”, எனக் கைக்குழுக்கினார் மேனேஜர்.
“தேங்க்யூ சார்.. ஓகே சார் . நான் வரேன்”, என அங்கிருந்து கிளம்பினாள் நதியாள்.
“ஹாய் பக்கீஸ்… வாங்க போலாம்”, நதியாள்.
“ஹேய் யாள். நாங்க வரதுக்கு முன்ன சண்டையாம். என்ன சண்டை?”, ஸ்டெல்லா.
“சண்டைன்னு சொன்னவங்க என்ன சண்டைன்னு சொல்லலியா?”, நதியாள் சிரித்துக்கொண்டே கேட்டாள்.
“நீ சொல்லு”, ஸ்டெல்லா.
“அது இந்த ரெண்டு குரங்குகளும் குதிச்சிட்டு வந்து ஒரு தடிமாட இடிச்சி கீழ தள்ளிட்டானுங்க. அந்த தடிமாடு சாரி கேட்டா விடணும்ல ஓவரா பேசினான் முடிஞ்சத பண்ணிக்கனு சொல்லிட்டேன். சில்லி பெலோ”, நதியாள்.
“யாரு டி அது?”, ஸ்டெல்லா.
அங்கே சுற்றும் முற்றும் பார்த்தவள் பார்கிங் நோக்கி சென்று கொண்டிருந்தவர்களைச் சுட்டிக்காட்டினாள்.
“அதோ அங்க இரண்டு பேர் போறாங்கள்ள அதுல கோட் போடாதவன்”, நதியாள்.
ஸ்டெல்லா திரும்பி பார்க்கும் பொழுது அகரன் கோட்டை கழட்டி இருக்க மீண்டும் அடையாளம் காட்டச் சொல்லி நச்சரித்தாள்.
” அந்த மெரூன் சர்ட்”, நதியாள்.
“ம்ம்… ரெண்டு பேரும் பாக்க சூப்பரா தான் இருக்காங்க. யார் அவங்க?”, ஸ்டெல்லா.
“போய் விசிட்டிங் கார்ட் வாங்கி பாரு. அட்ரஸ் போன் நம்பர் எல்லாமே தெரிஞ்சிக்கலாம்”, மீரா நக்கலாகக் கூறினாள்.
“பாத்துடலாமா ரிஸ்?”,ஸ்டெல்லா.
“ஹேய்…என்னை ஏன் இதுல இழுக்கற?”,ரிஸ்வானா பதறியபடிக் கேட்டாள்.
“நீ இல்லாம நான் எங்கயாவது போய் இருக்கேனா ரிஸ்?”, நவரசம் பொங்கப் பேசினாள் ஸ்டெல்லா.
“ஏன் நேத்து போல சினிமாக்கு?”, நதியாள்.
“அது வேற இது வேற. நீ வா ரிஸ் போய் பசங்க யாரு என்னனு விசாரிச்சிட்டு மெரட்டிட்டு வரலாம்”, ஸ்டெல்லா.
“நான் வரல”, ரிஸ்வானா நதியாளின் பின்னே பதுங்கினாள்.
“என்னை தள்ளிவிட்றாதீங்க டி ரெண்டு பேரும் சேர்ந்துட்டு”, நதியாள்.
“வா ரிஸ்”, என ஸ்டெல்லா அவளை இழுத்தாள்.
“அப்ப நதியும் வந்தா நான் வரேன்”,ரிஸ்வானா.
“அம்மா தாயிங்களா கம்முன்னு இருங்க. ஆணிய புடுங்க வேணாம். இவள பாத்தா அந்த ஆளு மறுபடியும் சண்டை போட ஆரம்பிச்சிட போறான். யாரையும் நீங்க விசாரிக்க வேணாம். கிளம்புங்க”, மீரா.
“கம்முன்னு இரு மீரா. நாங்க மூனு பேரும் போறோம்”, என ஸ்டெல்லா நதியையும் ரிஸ்வானாவையும் இழுத்துக் கொண்டு சென்றாள்.
“இரு டி”, நதியாள் கத்திக்கொண்டே வந்தாள்.
ஸ்டெல்லா இழுத்து கொண்டு ஓடியதில் அவர்கள் அருகில் சென்று சடாரென நிற்க முடியாமல் நதியாள் அகரனின் மேல் விழப் போன சமயம் ஸ்டெல்லா ,” யாள் “, எனக் கத்த அகரன் பின்னால் திரும்பி நதியாளை இடைத்தாங்கினான்.
“சாரி சார் ஓடி வந்ததுல சடனா நிக்க முடியல”, என நதியாள் கூறிக்கொண்டே நேராக நின்றாள்.
“உங்களுக்கு எல்லாம் நடந்து வரவே தெரியாதா? ஓடி வந்து நிக்கத்தெரியாம அடுத்தவன தள்ளி விடறது தான் வேலையா?”, சரண் பொறிந்துத் தள்ளினான்.
“உன்மேலயா விழுந்தேன் இவர் மேல தானே விழுந்தேன். சும்மா டைனோசர் கணக்கா வாய தொறக்காத. வாய உடச்சிருவேன்”, நதியாள் எகிறினாள்.
“அந்த அளவுக்கு தைரியம் இருக்கா உனக்கு . வா இன்னிக்கு நீயா நானான்னு பாத்துடறேன்”, என சரண் சட்டையின் கையை மேலேற்றி விட்டு முன்னே வந்தான்.
“வா பாக்கலாம்”, என நதியாளும் கையை மடக்கினாள்.
“அய்யய்யோ… இவள இழுத்துட்டு வந்து இன்னொரு பிரச்சனை வந்துரிச்சே .. இப்ப என்ன பண்றது”, என ஸ்டெல்லா மனதில் புலம்பினாள்.
இங்கே நதியாள் சட்டையின் கையை மேலேற்றி மடிக்கியதும் மைக், சஞ்சய் ,மீரா மூவரும் ஓடிவந்தனர்.
“என்னாச்சி யாள்?”, மைக்.
“இந்த ஆள் ஓவரா பேசறான்”, எனச் சரணைக் காட்டினாள்.
“என்ன சார் அதான் அப்பவே சாரி கேட்டுட்டோம்ல. இன்னும் ஏன் பிரச்சினை பண்றீங்க?”, மைக்.
“அது இல்ல. இந்த பொண்ணு ஓவரா பேசுது. என் பிரண்ட் மேல விழுந்து இருக்கும் இன்னேரம். ஒழுங்கா நடந்து வரத்தெரியாதான்னு கேட்டா எகிறுது”, சரண்.
“யோவ் நீ தான் ஓவரா பேசற. அதான் சாரி கேட்டுட்டேன்ல. அவரே கம்முன்னு இருக்காரு நீ ஏன் சும்மா கத்திட்டு இருக்க?”, நதியாள் அகரனின் கையைப் பிடித்து இழுத்து அருகில் நிறுத்தினாள்.
“என்ன யோவ் ஆ? உன்ன இன்னிக்கு அடிச்சு பொளக்காம விடமாட்டேன்”, என சரண் கீழே அடிக்க பொருள் தேடினான்.
“ஹேய் யாள் கம்முனு இரு. அண்ணா சாரி அண்ணா”, என மீரா சரணிடம் கேட்டாள்.
“மீரா நீ ஏன் சாரி கேக்கற?”, நதியாள்.
“நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு யாள்”, மீரா.
இவர்கள் கூட்டமாக பேசுவதைப் பார்த்து கேசவன், அமுதன், திலீப்பும் வந்துவிட்டனர்.
“சார் என்ன இப்ப உங்களுக்கு அதான் அவரே கம்முன்னு இருக்காருல்ல. விடுங்க. கிளம்புங்க”, சஞ்சய்.
“டேய் அகர்.. அகர்….”, சரண் அகரனை உழுக்கினான்.
தன்னிலை வந்தவன் நதியாளிடம் கை நீட்டினான் ,” ஹாய் ஐ ம் அகரன்”.
அவனை யோசனையாக பார்த்து கொண்டே,” ஐ ம் நதியாள்”, என இருவரும் கைக்குழுக்கினர்.
சில விநாடிகள் இருவரும் மௌனமாக கையைப் பிடித்தபடி நின்றுவிட்டனர். கை ஸ்பரிசத்தில் ஏதேனும் தகவல் பறிமாறப்பட்டதோ?
கண்கள் எதிர்கொண்டதில் தான் இருவரும் தங்களை இடம்மாற்றி கொண்டனரோ?