7 – ருத்ராதித்யன்
ஆருத்ரா மலைக்கு சென்ற முதல் நாள்…….
மகதன் இரண்டு நாட்களாக ஏதும் உண்ணாமல் கண்களில் வெறியுடன் வெளியே செல்லும் மார்க்கத்தைப் பார்த்தபடி இருந்தது.
அருவம் பைரவக்காட்டில் இருந்து மகதனைக் காண அவ்விடம் வந்தது,
“மகதா….. நீ ஏன் இங்குள்ளாய்?”, அருவம்.
“ர்ர்ர்…….”, மகதன் உறுமி தன் கோபத்தை வெளிப்படுத்தியது.
“இந்த மனித பதர்கள் உன்னையும் அடைத்து வைத்து விட்டனரா? இது…. இது…. நிச்சயமாக அவர்களின் செயலாகத் தான் இருக்கும்….. உன்னை இன்னும் கொல்லாமல் வைத்திருப்பதன் அர்த்தம் யாதென அறிய விழைகிறேன்…….!!!? இறைவா…….”, என கேள்விக் கேட்டபின் இறைவனைத் தியானித்து மகதன் வெளியேறும் மார்க்கம் காட்டிக் கூண்டின் தாழ்ப்பாளைத் திறந்தது.
மகதன் சுற்றும் முற்றும் கண்களால் இடத்தை அளந்தபின் மெல்ல அந்த அறைக் கூண்டை விட்டு வெளியே வந்தது.
சுற்றிலும் தோப்பாக இருக்க நடுவில் இந்த வீடு இருந்தது. வீட்டின் ஓர் மூலையில் தான் மகதன் அடைக்கப்பட்டு இருந்தது.
சுற்றிலும் கண்களை சுழற்றிய அருவம், “வரும் வளர்பிறை துர்காபஞ்சமி திதியன்று உன்னை எதிர்ப்பார்த்து காத்திருப்பேன்…. வந்துவிடு”, எனக் கூறி காற்றோடுக் காற்றாய் மறைந்தது.
மகதன் முகத்தில் கலவையான உணர்வுகள் காட்டி கோப முகம் எடுத்துக் கொண்டு வேட்டையாடப் பதுங்கிப் பதுங்கி நடந்தது.
அச்சமயம் வீட்டின் பின்கதவு திறந்திருக்க அவ்வழியே உள்ளே சென்ற மகதன் அவ்விடம் இருந்த ஒருவனை வேட்டையாடித் தன் பசியைப் போக்கிக் கொண்டது.
தீரன் மேகமலையில் இருந்து ஒருவிதமான ஒலியை எழுப்ப, அதைத் தொடர்ந்து அவ்வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் இருந்த மலையில் ஏறத் துவங்கியது.
மகதன் மலை ஏறிய சிறிது நேரத்தில் பண்ணை வீட்டிற்கு வந்தவர்கள் மகதன் உண்டபின் மீதமிருந்த உடலைக் கண்டு அதிர்ச்சியுற்று நின்றனர்.
மகதனைக் கடத்தக் கூறியவன் அவ்விடம் வந்து பார்த்தபின் ஆயுஸை அழைத்தான்.
“அந்த புலி தப்பிச்சி போயிரிச்சி…. மலை பக்கம் ஏறி தான் போயிருக்கு…. உடனே வந்து அத பிடிங்க….”, அவன்.
“ஜீ… பாக்கி பணமே இன்னும் எங்களுக்கு வரல…. “, ஆயுஸ்.
“நாலு மடங்கு தரேன்…. எனக்கு உயிரோட அந்த புலி வேணும்…. உடனே கிளம்பி வாங்க…. மேற்கு தொடர்ச்சி மலைல ஏறிட்டா பிடிக்கறது கஷ்டம்…. எப்படியும் மூனு நாள் ஆகும் அது அந்த மலைக்கு போக. அதுக்குள்ள பிடிச்சிடுங்க”, எனக் கூறி வைத்தவன் வேறொருவருக்கு அழைத்தான்.
அழைப்பு ஏற்கப்படாமல் போக சிறிது நேரத்தில் அழைப்பு வந்தது.
“சொல்லு ருதஜித்….. அந்த புலிய எப்ப இங்க அனுப்பற?”, அந்த பக்கம் இருந்து அதிகாரமாக ஓர் குரல் ஒலித்தது.
“ராஜ் ஒரு பிரச்சனை…..”, என ருதஜித் இழுத்தான்.
“என்ன பிரச்சினை? புலி உன் வீட்ல தானே இருக்கு?”, என ராஜ்கர்ணா அழுத்தமான குரலுடன் கேட்டான்.
“இன்னிக்கு தப்பிச்சிரிச்சி….. ஆயுஸ் டீம் மறுபடியும் கூப்பிட்டு இருக்கேன்… “, என எழும்பாத குரலில் கூறினான் ருதஜித்.
“யூ பிளடி **********…… எவ்வளவு அசால்டா சொல்ற நீ? உனக்கு இத்தனை கோடி குடுத்து அத பிடிச்சி குடுக்க சொன்னா இப்படி தப்ப விட்டுட்டு எனக்கு கால் பண்ற…… இன்னும் இரண்டு நாள்ல என்கிட்ட அந்த புலிய நீ அனுப்பி வச்சே ஆகணும்”, என கத்தினான் ராஜ்.
“ராஜ்…. கொஞ்சம் டைம் குடு. கண்டிப்பா அனுப்பி வைக்கிறேன்…. அது ரொம்ப தூரம் போக வாய்ப்பு இல்ல… நானே கிளம்பறேன் இப்ப”, ருதஜித் ராஜ்கர்ணாவை சமாதானம் செய்தான்.
“ஸ்டுப்பிட்….. நீ காட்டுக்கு போயிட்டா எனக்கு யார் இன்போ(info) பாஸ் பண்ணுவா? மீதி இருக்கற மிருகங்கள பிடிக்கற வழிய பாரு… ஆளுங்கள அத தேட சொல்லி அனுப்பு….. ஆயுஸ் எவ்ளோ கேட்டாலும் மறுக்காத… மூனு நாள்ல அது என் இடத்துல இருக்கணும்…. “, எனக் கூறி கால் கட் செய்துவிட்டான் ராஜ்கர்ணா.
ருதஜித் முகத்தில் பயமும், பதட்டமும் காட்டாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டான்..
ஆட்களை மகதனைத் தேடிச் செல்ல அனுப்பிவிட்டு, அவனுக்கு கொடுக்கப்பட்ட அடுத்த வேலையைக் கவனிக்க ஆயத்தமானான்.
மதுரை வந்திறங்கிய நந்து மேகமலைக்கு செல்லும் ஏற்பாட்டினை கவனித்துவிட்டு யாத்ராவிற்காக காத்திருந்தான்.
அர்ஜுனும் நந்துவை சந்தித்து பின் நலம் விசாரித்து இருவரும் பேசியபடி ஏர்போர்ட் சாலையில் கொஞ்சம் தள்ளி காரை நிறுத்திவிட்டுக் காத்திருந்தனர்.
அச்சமயம் ஒரு பெண்ணை சிலர் துரத்தியபடி வர, அந்த பெண் அர்ஜுனின் காரின் பின்னால் ஒளிந்துக்கொண்டாள்.
“டேய் எங்கடா போனா அவ?”, ஒருவன் கேட்டான்
“இந்த பக்கம் தான் போய் இருக்கணும்”, மற்றவன் கூறினான்.
“அந்த குட்டிய தவறவிட்டா நம்மல உப்புகண்டம் போட்றுவாரு டா … தேடுங்க தேடுங்க…..”, என இன்னொருவன் அவசரப்படுத்தினான்.
அர்ஜுனும், நந்துவும் சிலர் கைகளில் ஆயுதங்களுடன் சற்று தொலைவில் நிற்பதைக் கண்டு காரை விட்டு இறங்கி நின்றனர்.
அச்சமயம் அந்த பெண் காரின் உள்ளே ஏறி பின் பக்க சீட்டின் அடியில் மறைந்துக் கொண்டாள்.
“வாங்க டா…. இப்படி போய் பாக்கலாம்”, ஒருவன் கூற, “அது ஏர்போர்ட் டா. இப்டியே போனா நம்மல தூக்கி உள்ள வச்சிருவாங்க… இந்த சந்துல தான் அவ ஓடி இருக்கணும்”, என சற்று புதர் போல இருக்கும் இடத்திற்கு அருகில் இருந்த சந்தில் அனைவரும் ஓடினர்.
“யார்ரா இவனுங்க? கையில வெபன்ஸ் ஓட ஓடிட்டு இருக்கானுங்க”, என நந்து கேட்க அர்ஜுன் அந்த ஏரியா இன்ஸ்பெக்டருக்கு கால் செய்து விவரம் கூறிப் பார்க்கச் சொன்னான்.
“லோக்கல் ரவுடி கும்பலா இருக்கும் டா”, அர்ஜுன் பதிலளித்தான்.
“யாரையோ தேடி வந்த மாதிரி தான் இருக்கு”, நந்து சுற்றும் முற்றும் பார்த்தபடிக் கூறினான்.
“அந்த பொண்ணு நம்ம கார்ல தான் இருக்கு வா என்னனு கேக்கலாம்”, எனக் கூறி முன்னே நடந்தான் அர்ஜுன்.
“இது எப்படா? நான் கவனிக்கவே இல்ல”, என நந்து பேசியபடி காரின் பின் கதவருகில் நின்றான்.
“மேடம் வெளிய வாங்க… அவங்க போயிட்டாங்க “, என அர்ஜுன் அழைக்கவும் அப்பெண் பயந்தபடித் தலைத் தூக்கிப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கினாள்.
“யார் நீங்க? உங்கள ஏன் அவங்க தொரத்தறாங்க?”, நந்து விசாரிக்க ஆரம்பித்தான்.
அப்பெண் இன்னும் பயம் விலகாமல் சுற்றும் முற்றும் பார்த்தபடி இருந்தாளே தவிர வாய் திறக்கவில்லை.
“நீங்க எந்த ஊரு? உங்க வீடு எங்க இருக்கு? சொல்லுங்க நாங்களே வீட்ல பத்திரமா விட்டுடறோம்”, அர்ஜுன் அப்பெண்ணைக் கண்களால் ஆராந்தபடிக் கேட்டான்.
பார்க்க படித்த பெண் போல சற்று மாடர்னாக இருந்தாள். 5’4″ உயரம், ஒல்லியான தேகம், மருண்ட விழிகள், பயத்தில் துடிக்கும் உதடு, கையில் ஒரு சிறிய பையை இறுக்கிப் பிடித்தபடி சுற்றிலும் பார்வையை சுழற்றியபடி நின்றிருந்தாள்.
“மேடம் வாய் திறந்து பேசுங்க… அப்ப தான் உங்களுக்கு எங்களால ஹெல்ப் பண்ண முடியும்”, என நந்து இழுத்து வைத்த பொறுமையுடன் பேசினான்.
அப்போதும் அப்பெண் அமைதியாக நிற்க அவள் வைத்திருந்த பையில் இருந்து போன் ரிங் வந்தது.
நந்து அவளிடம் பையை வாங்கி அந்த போனை எடுத்து பேசினான்.
சற்று கரகரப்பான குரல், “சகஸ்ரா… எங்கம்மா இருக்க? நல்லா இருக்கியா மா? உனக்கு எதுவும் ஆகலியே?”, என உண்மையான பரிதவிப்புடன் கேட்டது.
“ஹலோ…. நான் நந்தன். ஏர்ப்போர்ட் என்ட்ரி ரோட்ல நிக்கறேன். இந்த பொண்ணு எதுவும் பேசாம நின்னுட்டு இருக்கு. இவங்கள தொரத்திட்டு வந்தவங்க யாரும் இங்க இல்ல…. நாங்க போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணி அவங்கள பிடிக்க சொல்லிட்டோம். நீங்க எங்க இருக்கீங்க சொல்லுங்க நாங்களே வந்து ட்ராப் பண்றோம்”, என வரிசையாக அனைத்தும் கூறி அட்ரஸ் கேட்டான்.
“ரொம்ப நன்றி சார். அவளுக்கு பயம் வந்துட்டா பேச வராது சார். பையில ஒரு சின்ன பாட்டில்ல டேப்லட் இருக்கும் . அதை எடுத்து குடுங்க. அத சாப்டதும் 15 மினிட்ஸ்ல பேச்சு வந்துடும். நானும் அங்க வந்துடறேன் அதுவரை பாத்துக்கோங்க சார்”, எனக் கூறி அவசரமாக வைத்துவிட்டது அந்த குரல்.
அர்ஜுன் அந்த பையை வாங்கி முழுதாய் ஆராய்ந்தபடி மாத்திரை எடுத்து கொடுத்தபின், தன் காரில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை நந்துவை எடுக்கச் சொன்னான்.
அப்பெண் மாத்திரை போட்டு பத்து நிமிடத்தில் படபடப்பு அடங்கி, சற்றே முகம் தெளிவடைந்தது.
“தேங்க்யூ சார்…. “, எனக் கூறினாள்.
“ம்ம்…. நீங்க சகஸ்ரா… ரைட்?”, அர்ஜுன்.
“ஆமா சார்”, சகஸ்ரா.
“என்னாச்சி ? ஏன் அந்த ரௌடிங்க உங்கள துரத்தறாங்க?”, அர்ஜுன் கண்களைக் கூர்மையாய் வைத்தபடிக் கேட்டான்.
“சாரி சார். உங்க உதவிக்கு நன்றி. வேற எதுவும் கேக்காதீங்க… உங்களுக்கு அது தேவை இல்லை”, என பேச்சை முடித்தாள்.
“ஹலோ மிஸஸ் சகஸ்ரா…. உங்கள நாங்க காப்பாத்தி இருக்கோம்.. என்ன ஏதுன்னு கேட்டா இப்படிதான் சொல்வீங்களா?”, என நந்து கோபமாகக் கேட்டான்.
“மிஸ்டர்…. ஐ ம் மிஸ் சகஸ்ரா…. ஹௌ டேர் யூ டு கால் மீ லைக் தட்?”, அவள் கொதித்தாள்.
“பாத்தா அப்படி தான் இருக்கு…. கேட்டா ஒழுங்கா பதில் சொல்லணும் அத விட்டுட்டு ஓவரா பேசற…. “, என நந்துவும் எகிறினான்.
“நந்து…..”, என அர்ஜுன் அவனை அடக்கவும் அவர் வந்து சேரவும் சரியாக இருந்தது.
சூடிதார் அணிந்து, சால் பின் செய்து கூந்தலை அழகாக பராமரித்து முகத்தில் மிதமான அலங்காரம் கொண்டு தெய்வீகமான அமைப்புடன் இருந்தா(ன்)ள்.
ஆம் அவர் ஒரு திருநங்கை…
“வணக்கம் சார்… நான் கண்மயா…. சகஸ்ரா கஸின்…. நான் தான் உங்ககிட்ட போன்ல இப்ப பேசினேன்”, என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
“வணக்கம்… நான் அர்ஜுன்…. இவன் நந்து என் பிரண்ட்… உங்க பிரண்ட்கிட்ட என்ன பிரச்சனைன்னு விசாரிச்சா எதுவும் சொல்ல மாட்டேங்கறாங்க…”, என தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு விஷயத்தை ஆரம்பித்தான்.
“சார்… அது… நீங்க யாருன்னு நாங்க தெரிஞ்சிக்கலாமா? “, எனத் தன்மையாக கேட்டாள் கண்மயா.
“பைன்… அவங்க சிபிஐ ஆபீசர்ஸ்… நான் இவரோட லவ்வர்”, என யாத்ரா தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு கைநீட்டினாள்.
“ஹலோ”, என கண்மயாவும் கைகுலுக்கினாள்.
“கண்மயா ரைட்…… யூ லுக் சோ கார்ஜியஸ்…. வாங்களேன் சாப்டுட்டே பேசலாம்… “, என அவர்களையும் அழைத்தாள்.
கண்மயா வந்த காரில் யாத்ராவும் சகஸ்ராவும் ஏறிக் கொண்டனர்.
சகஸ்ராவும் நந்துவும் முறைத்தபடியே இருந்தனர்.
யாத்ரா, “பைன்…எவ்ளோ நாளாச்சி நம்ம மதுரை சமையல் சாப்டு…. சோ எல்லாரும் என்ன சாப்டலாம்? எனக்கு ….”, என மெனு கார்ட்டை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள்.
நந்து தலையில் அடித்துக் கொள்ள அர்ஜுன் சிரித்தபடி, “உனக்கு ஸ்பெஷல் க்ரில் ஆல்ரெடி சொல்லிட்டேன் டார்லிங்…. இன்னிக்கு நீ சாப்பிட்றது எல்லாமே என்னிஷ்டம் தான்…. டீல்?”, கண்ணடித்துக் கேட்டான்.
“அப்ப நீ சாப்டறது நான் செல்ற மெனு தான் … ஓக்கே?”, என யாத்ராவும் சிரித்தபடிக் கேட்டாள்.
நந்து இருவரையும் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டான்.
பின்னர் அர்ஜுன் ஏற்பாடு செய்தது போன்று அனைத்தும் யாத்ரா சாப்பிட வந்தது.
அர்ஜுனும் யாத்ராவும் ஒரே தட்டில் உண்டபடி பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.
சகஸ்ரா கண்மயாவிடம், “நாம எதுக்கு இவங்க கூட இருக்கணும்? வா கிளம்பளாம். நமக்கு நேரம் ரொம்ப கம்மியா இருக்கு”, எனக் கிசுகிசுத்தாள்.
“இரு. இவங்க சிபிஐன்னு சொல்றாங்க. நம்ம பிரச்சினைய சொன்னா சால்வ் பண்ணுவாங்கல்ல…. பாப்போம்”, என கண்மயா முணுமுணுத்தபடி அர்ஜுன் யாத்ராவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு அவர்கள் இருவரையும் மிகவும் பிடித்துவிட்டது. அதுவும் தன்னிடம் எந்த ஒதுக்கமும் காட்டாமல் கலகலப்பாக பேசியது மிகவும் மனதிற்கு இதமாக இருந்தது.
அவர்கள் கண்களில் உண்மை தெரிவதால் நம்பிக்கையும் கொண்டாள். சகஸ்ரா யாரையும் அவ்வளவு எளிதில் நம்ப மாட்டாள், அதனால் அவர்களை சந்தேகக் கண்கொண்டே பார்த்தாள். அதுவும் நந்துவிடம் ஏற்பட்ட மோதல் இன்னும் சமரசம் ஆகாமல் இருப்பதால் கடுப்புடன் அமர்ந்திருந்தாள்.
நந்து ஓரக்கண்ணால் சகஸ்ராவையும், கண்மயாவையும் கவனித்தபடியே உண்டுக் கொண்டிருந்தான்.
அச்சமயம் கஜேந்திர நெடுமாறன் அங்கு வரவும் யாத்ராவை பார்த்துவிட்டு அவர்களிடம் வந்தான்.
“யாத்ரா குட்டி…..”, என அழைத்தபடி வந்து அவளைக் கட்டிக் கொண்டான்.
“ஹேய்…. வளந்தமாடே… எப்படிடா இருக்க? ஏன்டா இப்படி இளைச்சிட்டா? உட்காரு… செழியன் இங்க பாருங்களேன்…. “, சந்தோஷத்தில் குதித்தபடிப் பேசினாள்.
“என் மாப்ளய நான் பார்க்காமலா? ஈவினிங் ப்ளைட்லயே வரதா சொன்ன ஏன்டா லேட்?”, என அர்ஜுன் அவனைக் கட்டிக்கொண்டு கேட்டான்.
“வேலை முடிய லேட் ஆகிரிச்சி டா. மறுபடியும் விஷேசம் முடிஞ்சி போகணும்… ஹே நந்து…. எப்படி டா இருக்க?”, என நெடுமாறன் அர்ஜுனுக்கு பதில் கொடுத்துவிட்டு நந்துவை விசாரித்தான்.
“அப்பாடா உனக்காவது நான் இருக்கறது கண்ணுக்கு தெரியுதே… சந்தோஷம் வா வந்து இங்க உட்காரு”, என தன்னருகில் அழைத்தான் நந்து.
“ஏன்டா…. நீ இருக்கறது யாருக்கு தெரியல இப்ப?”, நெடுமாறன் கேட்டபடியே அவன் அருகில் அமர்ந்தான்.
“இதோ… இவங்க இரண்டு பேரும் இந்த உலகத்துலயே இல்ல… இதோ இவங்க ரெண்டு பேரும் என் பக்கமே திரும்ப மாட்டேங்கறாங்க… எனக்கு செட் இல்லாம முழிச்சிட்டு இருந்தேன் நல்ல வேலை நீ வந்துட்ட”, என தோளில் கைப்போட்டபடிக் கூறினான் நந்து.
புதிதாய் இருப்பவர்களைக் கண்ட கஜேந்திர நெடுமாறன், “ஆமா யார் இவங்க? இதுவரை பார்த்தமாதிரி இல்லையே”, எனக் கேட்டான்.
“பிரண்ட்ஸ் டா…. என்ன சாப்பிட்ற? பேரர்….”, என யாத்ரா குரல் கொடுத்ததும் நெடுமாறனுக்கு வேண்டியதை அவளே ஆர்டர் செய்து அனுப்பினாள்.
“இவங்க சகஸ்ரா…. இவங்க கண்மயா”, என அர்ஜுன் இருவரையும் அறிமுகப்படுத்தினான்.
“இவன் கஜேந்திர நெடுமாறன்”, என யாத்ரா அறிமுகப்படுத்த, நெடுமாறன் சம்பிரதாயமாக தலையசைத்து வணக்கம் கூறினான்.
“இவர் வெண்பா கம்பெனி ஓனர் தானே?”, என கண்மயா கேட்க, நெடுமாறன் அவள் மீது அழுத்தமானப் பார்வைப் பதித்து மீண்டான்.
“ஆமா…..”, என நெடுமாறன் ஒற்றை வார்த்தையில் பதில் உரைத்தான்.
நேரமாவதை உணர்ந்த கண்மயா, “சார்…. நாங்க கிளம்பறோம்…. டைம் ஆச்சி”, எனக் கூறினாள்.
“நாளைக்கு என் நாத்தனாருக்கு வளைகாப்பு… நீங்களும் வாங்களேன்….. செழியன் சொல்லுங்க”, என அழுத்திக் கூறினாள்.
“செழியன்?”, என சகஸ்ரா சந்தேகமாகக் கேட்டாள்.
“இவன் முழு பேர் நாகார்ஜுன இளஞ்செழியன்…. எனக்கு செழியன்”, என யாத்ரா விளக்கம் கொடுத்தாள்.
“ஓ…ஓக்கே…. “, சகஸ்ரா.
அப்பொழுது அர்ஜுன் அழைத்துப் பேசிய இன்ஸ்பெக்டர் வர சகஸ்ராவும், கண்மயாவும் திடுக்கிட்டு எழுந்தனர்.
“ஏன் எந்திரிக்கறீங்க?”, நந்து சந்தேகமாய் வினவினான்.
“இல்ல… டைம் ஆச்சி”, சகஸ்ரா.
“உட்காருங்க… போலாம்”, என யாத்ரா கூறி இன்ஸ்பெக்டரைப் பார்த்துவிட்டு நெடுமாறனிடன் கண் காட்டினாள்.
நெடுமாறன் புரிந்துக் கொண்டு பரத்திற்கு செய்தியனுப்பி அவரைப் பற்றி விசாரிக்க கூறினான்.
“அர்ஜுன்னு எனக்கு கால் பண்ணது?”, என அவர்கள் அருகில் வந்துக் கேட்டார்.
“நான் தான்….. வாங்க”, என வேறு பக்கம் அவரை அழைத்துச் சென்றான்.
“அந்த ஆளுங்கள பிடிச்சிட்டீங்களா?”, அர்ஜுன்.
“எட்டு பேர்ல ஆறு பேர பிடிச்சிட்டோம் சார். மீதி இரண்டு பேர் எஸ்கேப் ஆகிட்டாங்க. அந்த பொண்ண எதுக்கு துரத்தறீங்கன்னு கேட்டா இவங்களுக்குத் தெர்ல… எஸ்கேப் ஆன இரண்டு பேர்ல ஒருத்தனுக்கு தெரிய வாய்ப்பிருக்கு”, இன்ஸ்பெக்டர்.
“யாரோட ஆளுங்க? யார் அனுப்பினாங்க?”, அர்ஜுன்.
“அதுவும் இவங்களுக்கு தெர்ல சார்… எல்லாம் காசு குடுத்தா வர கைக்கூலிங்க”, இன்ஸ்பெக்டர்.
“ஓஓ…..”, அர்ஜுன்.
“சார்… நான் அவங்க துரத்துன பொண்ணை விசாரிக்கலாமா? “, இன்ஸ்பெக்டர்.
“இல்ல… தேங்க்யூ.. நான் பாத்துக்கறேன்…. இது யாருக்கும் தெரிய வேண்டாம்” , எனக் கூறி அர்ஜுன் அனுப்பி வைத்தான்.
“சரி… வாங்க எல்லாரும் கிளம்பலாம்…. கஜா… நீ எங்க கூட வர தானு இப்ப?”, அர்ஜுன்.
“சார்… நாங்க?”, கண்மயா இழுத்தாள்.
“வாங்க கண்மயா…. விஷேசத்துக்கு தானே கூப்பிடறேன். அப்பறம் உங்க கஸின் வச்சிருந்த பைல் இப்ப என்கிட்ட…. எதுவா இருந்தாலும் அங்க போய் பேசிக்கலாம். எங்களை நம்பலாம்”, எனக் கூறி முன்னே நடந்தான்.
பைல் அவன் கையில் இருக்கிறதெனக் கூறியதும் திடுக்கிட்ட இருவரும் எதுவும் பேசாது அமைதியாக அவர்களுடன் நடந்தனர்.
அர்ஜுன் காரில் கண்மயா, சகஸ்ரா இருவரும் ஏறிக் கொண்டனர்.
நெடுமாறனும் யாத்ராவும் கண்மயா வந்த காரில் ஏறிக் கொண்டனர்.
நந்து நெடுமாறனின் காரை எடுத்துக் கொண்டான்.
அர்ஜுன் நந்து இருவரும் முதலில் மேகமலைக் கிளம்ப, யாத்ரா அர்ஜுனிடம் கண்களால் சைகைக் காட்டிவிட்டு, நெடுமாறனுடன் வேறு இடத்தை நோக்கிச் சென்றாள்.
விடிகாலையில் யாத்ரா நெடுமாறன் இருவரும் மேகமலை வந்திறங்கினர்.
ஆருத்ராவும் அதே சமயம் தான் மேகமலை ஏறிக்கொண்டிருத்தாள்.
யாத்ரா வந்து சிறிது நேரம் உறங்கிவிட்டு எழுந்து சீக்கிரம் தயாராகத் தொடங்கினாள்.
மாதங்கி அங்கேயே தங்கிவிட்டார், விஷேசம் வரை இருக்க வைத்துவிட்டாள் இதழி. அவர் யாத்ராவை புடவை கட்டச் சொல்லித் திட்டிக் கொண்டிருக்க, அர்ஜுன் அவரை அனுப்பிவிட்டு தான் வாங்கி வந்திருந்த புடவையைக் கொடுத்தான்.
“என்ன செழியன் நீங்களுமா?”, என யாத்ரா சலித்தாள்.
“உன்ன இதுவரை புடவையில் நான் பார்த்ததே இல்ல ரதும்மா…. நானும் வேஸ்டி கட்றேன்”, எனக் கண்களில் காதல் மின்னக் கேட்டான்.
“ஓக்கே… “, எனக் கூறி தயாராகி வந்தாள்.
வெண்பாவின் தாய், வெண்பா, பரத், என அனைவரும் இரண்டு நாட்களுக்கு முன்பே வந்திருந்தனர்.
கண்மயா ஒருவித தயக்கத்துடனும், அச்சத்துடனும் நடமாடிக் கொண்டிருக்க, யாத்ரா அவளைத் தன்னருகில் வைத்துக்கொண்டு ஆசுவாசப்படுத்தினாள்.
சகஸ்ரா இதழிக்கு உதவியபடி அவளுடனேயே இருந்தாள்.
விழா முகூர்த்தம் நெருங்கவும் விருந்தினர் வரத் தொடங்கினர்.
ஆருத்ராவும் தன் தாத்தாவுடன் நேர்த்தியான பருத்தி புடவையில் மிதமான அலங்காரத்தோடு கம்பீரமாக வந்திறங்கினாள்.
அவளைக் கண்ட யாரும் மறுமுறை அவளின் கம்பீரம் காண இச்சை கொள்வர்.
ஒரு போன் வரவும் ஆருத்ரா பின்தங்கிவிட, தாத்தாவை முன்னே செல்லும்படி சைகை செய்துவிட்டுத் தனியாகச் சென்றாள்.
ஆதித்யா ரணதேவ்வை வரவேற்று உபசரித்தான்.
தமிழன்பனும் கயலும் வந்திருந்த அனைவரையும் முறையாக வரவேற்று உபசரித்தனர்.
சிரஞ்சீவ் இதழிக்கு எவ்வித கஷ்டமும் இருக்கக் கூடாது என அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்துக்கொண்டிருந்தான்.
வீட்டிலேயே விழா ஏற்பாடு செய்திருந்ததால் ஆருத்ரா போன் பேசிய படியே தீரன் இருக்கும் இடம் வந்திருந்தாள்.
ஆருத்ராவைக் கண்ட தீரன் வேகமாகக் கயிற்றை அவிழ்த்துக் கொண்டு ஓடி வந்தது.
நந்து கன்று ஒடிவருவதைக் கண்டு ஆருத்ராவைக் காக்க ஓடி வந்தான்.
ஆருத்ரா கன்று கத்தும் சத்தத்தில் திரும்பி பார்க்க, அது நாய்குட்டி போல அவளின் சேலையில் தலையை உராய்ந்தபடி நின்றது.
கன்றே இத்தனை பெரிதா என வியந்தவண்ணம் அவளும் அதைத் தடவிக் கொடுத்த சந்தோஷத்துடன் ‘மாஆஆஆ’ எனக் கத்தியது.
சாமியய்யா ஓடி வந்தவர் அக்காட்சியைக் கண்டு குழம்பி புலம்பியபடி அருகில் வந்தவர்,
“அம்மா…. கொஞ்சம் நகர்ந்துக்கோங்க. கயிறு லூசா இருந்தது போல அதான் அவுந்துட்டு வந்துரிச்சி. உங்களுக்கு ஒன்னும் ஆகலியே” , எனக் கேட்டார்.
“எனக்கு ஒன்னும் இல்லைங்க ஐயா… கன்னுக்குட்டி எப்ப பிறந்தது?”, ஆருத்ரா.
“பிறந்து ஒரு வாரம் தாங்க ஆகுது”, சாமி ஐயா.
ஆருத்ரா மனதில் ‘ஒரு வாரம் தானா?’, என நினைத்துவிட்டு, “நல்லா கம்பீரமா இருக்கு… என்ன வகை இது?”, ஆருத்ரா.
“காங்கேயம் வகை தான் ஆனா இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு. பிறந்ததுல இருந்து வித்தியாசமா தான் செய்யுது…. விஷேசம் ஆரம்பிக்கற நேரமாச்சி நீங்க உள்ள போங்கம்மா”, எனக் கூறியபடி தீரனை இழுத்துக்கொண்டுச் சென்றார்.
ஆருத்ராவைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி, அதுவும் அமைதியாகச் சென்று தன்னிடத்தில் நின்றுக் கொண்டது.
நந்து அருகில் வந்து ஆருத்ராவிடம், “நீங்க ஆருத்ரா மேடம் தானே?”, எனக் கேட்டான்.
“ஆமா…. நீங்க?”, ஆருத்ரா பதில் கேள்வி கேட்டாள்.
“நான் முகேஷ் நந்தன். உங்கள பத்தி கேள்விப்பட்டு இருக்கேன். வாங்க இந்த பக்கம் போகலாம்”, என உள்ளே அழைத்துச் சென்றான்.
சகஸ்ரா இவையனைத்தும் மற்றொரு இடத்தில் இருந்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
விஷேசத்தில் ஆதி, அர்ஜுன், நெடுமாறன் மூவரும் நிற்காமல் சுற்றியபடி இருக்க, யாத்ராவும் கண்மயாவை தன்னுடன் வைத்தபடி வந்தவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.
ஆருத்ரா கண்களில் யாத்ரா படவும் ஏதோ உள்ளுணர்வு தோன்ற அவளையே கவனித்தபடி இருந்தாள்.
ஆருத்ராவும் யாத்ராவும் எதிரெதிர் சந்திக்கும் வாய்ப்பு விரைவிலேயே அமைந்தது…
அதே சமயம் ஆயுஸ் கூட்டம் மகதனைக் கண்டுபிடித்திருந்தது…