7 – விடா ரதி…
“ராக்கி…. முதல் வண்டிய நிறுத்துங்க…..”
“முடியாது….”
“நான் சுந்தரி வீட்ல இன்னிக்கி தங்கறேன்னு சொல்லிட்டேன்… நீங்க இப்படி என்னை கூட்டிட்டு போறது நல்லா இல்ல… என்னை அங்கேயே கொண்டு போய் இறக்கி விடுங்க….”
“மாட்டேன்… எனக்கு கல்யாணம் ஆகி இன்னும் ஒருவாரம் கூட முழுசா முடியல… அதுக்குள்ள நீ தனியா சந்தோசமா இருக்கலாம்னு நெனைக்கறியா?”
“யோவ்…. “
“யோவ் ஆ?” ராக்கி அதிர்ந்து திரும்பிப் பார்த்துவிட்டு, “உன்ன இதுக்காகவே விடமாட்டேன்… வீட்டுக்கு வா உன்ன பேசிக்கறேன்…” எனக் கூறிவிட்டு வீட்டின் முன்னே காரை நிறுத்தி, அவளைத் தூக்கி கொண்டு உள்ளே சென்றான்.
“இறக்கி விடுங்க மொத … இது என்ன இப்படி சின்ன பசங்கமாதிரி….” ரதி முறைத்தாள்.
“சின்ன பசங்க இப்படியா பண்ணுவாங்க? நானே ரொம்ப பொறுமையா இருக்கேன்.. வீணா என்னை நீ கிளப்பிவிடாத….” ரகுவும் ஆத்திரத்துடன் கூறினான்.
“யாரு இப்ப யார கெளப்பறது? எனக்கும் கோவம் வரும் பாத்துக்கோங்க…”
“எனக்கு அதுக்கு மேல வரும்…”
“வரும் வரும்… எல்லா கோக்குமாக்கு வேலையும் பண்ணிட்டு உங்களுக்கு கோவம் வேற வருமோ?” சண்டைகோழியாக விடைத்துக் கொண்டு நின்றாள்.
“ஆமா டி… அப்படி தான் கோவப்படுவேன்… அப்படி என்ன பெருசா பண்ணிட்டேன்” அவனும் அவளின் முகத்திற்கு அருகில் வந்து முறைத்தபடிக் கேட்டான்.
“என்ன பண்ணல நீங்க? என்னை என்ன பொய் சொல்லி இங்க வரவச்சீங்கன்னு ஞாபகம் இருக்கா?”
“ஆமா பொய் தான் சொன்னேன். அதுக்கு என்ன இப்ப?”
“அதுக்குன்னு சொல்ற பொய்க்கு ஒரு வரைமுறை இல்லையா? நான் எப்படி பதறிட்டு வந்தேன் தெரியுமா?“
“என்ன பெருசா சொல்லிட்டேன்? உங்கம்மா அப்பா கோமால இருக்காங்க.. உன் தம்பி கருணை கொலை பண்ண சைன் போட்டுட்டான்…. இன்னொரு புள்ளையா நீயும் வந்து போடுன்னு லாயர் கூப்டாரு… அவ்ளோ தானே?” எனக் கூறிவிட்டு மெல்ல அவளை விட்டுத் தள்ளி நின்றான்.
“நில்லு யா….”
“முடியாது”
“இங்க வா…”
“மாட்டேன்…”
“ஒழுங்கா வந்துடு இங்க…” தன் அருகில் கைக்காட்டினாள்.
“வாடா….”
“டா வா?”
“ஆமா டா…. உன் இஷ்டத்துக்கு என்ன வேணாலும் சொல்லுவியா நீ? ஒரு மனுஷியோட மனச நீ புரிஞ்சிக்கவே மாட்டல்ல? உன்ன……” என அவனைச் சரமாரியாக அடித்தாள்.
அவனும் சில அடிகள் வாங்கி, சிலதில் இருந்துத் தப்பித்து வீட்டின் உள்ளேயே ஓடிக் கொண்டிருந்தான்…..
கிட்டதட்ட அரைமணிநேரம் அவளிடம் அடி வாங்கிவிட்டு அவளின் கைகளைப் பிடித்து, பின்பக்கமாக வளைத்து நிறுத்தி அவளின் முகத்தைப் பார்த்தான்.
“இங்க பாரு… நான் அப்படி பொய் சொன்னது தப்பா இருக்கலாம்… ஆனா அப்படி சொன்னதால தான் இப்போ நாம இப்படி இருக்கோம்…. அடிச்சாலும் புடிச்சாலும் நீயும் நானும் தான் இனிமே கடைசி வரைக்கும்…. நீ சொன்னது உண்மை தான்… உன் மனச நான் அப்பவும் புரிஞ்சிக்கல, இப்பவும் உன் வலிய நான் யோசிக்கல… இனிமே நான் யோசிப்பேன்…. உன்னோட காதல நீ சொன்னதுல இருந்து என்னால உன்ன விட்டு இருக்க முடியல… அதனால் தான் உன்னை தூக்கிட்டு வந்தேன்…. நீ போகணும்னு விருப்பப்பட்டா தாராளமா நாளைக்கு ஒன்னா கல்யாணத்துக்கு போகலாம்…” எனக் கூறி அவளைத் தூக்கிக் கொண்டுத் தங்கள் அறைக்குச் சென்றான்.
அவள் இன்னும் அவன் முகத்தை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“என்ன டி அப்படி பாக்குற?” அவளின் பார்வையைக் கண்டுக்கேட்டான்.
“உன்ன எதுல அடிச்சா இனி என் கை வலிக்காதுன்னு யோசிக்கிறேன்….” சிரிக்காமல் அவள் கூறியவிதம் அவனுக்கு அடக்கமுடியாதச் சிரிப்பைக் கொடுத்தது.
“அப்ப காலம் முழுக்க என்னை அடிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டியா?” அவள் அருகில் வந்துக் கேட்டான்.
“வேற வழி… போயும் போயும் உன்ன லவ் பண்ணி தொலச்சேன் பாரு….”
“உன் மாமனுக்கு என்ன டி கொறச்சல் இப்ப?” என அவன் கேட்டவிதம் அவளுள் குறுகுறுப்பை ஏற்படுத்தியது.
அவனைத் தலை முதல் கால் வரை அளந்தாள். 5 அடி 11 அங்குலம், நல்ல சிவந்த நிறம், கருகருவென அடர்ந்த மீசை, தினம் சவரம் செய்யும் வழவழப்பான கன்னங்கள், அழுத்தமான உதடுகள், அவளை விழுங்கும் பெரிய கண்கள், அகலமான தோள்கள், உடற்பயிற்சியின் காரணமாக உடலும் கட்டுக்கோப்பாகத் திடமாக இருந்தது, மார்பில் வளர்ந்திருந்த சுருண்ட முடியின் மேல் தலை வைத்துபடுக்கும் ஆவல் அதிகமாகியது, அவனது குரல் ஒரு வித போதை தான். இவற்றை எல்லாம் விட அவனிடம் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அவனருகில் அவள் அவளாகவே இருக்கிறாள். எந்தக் கோட்பாடும், எல்லையும், தயக்கமும், அவனிடம் ஏற்படவில்லை. அவளின் ஆழ்புதைந்த உணர்வுகளை அவன் அருகில் எந்த விதமான விகல்பமும் இல்லாமல் வெளியிட முடிந்தது.
அப்படித்தான் காலையில் அவனிடம் எந்த யோசனையும், தயக்கமும் இன்றி அனைத்தையும் கூறினாள். அவனை இன்னொரு தனிமனிதனாக அவள் நினைக்கவில்லை, தன் எல்லாமும் இனி அவனிடம் வடிகட்டல்கள் இன்றி பகிரலாம் என்ற எண்ணம் இந்த ஒரு வாரத்திற்குள் வந்திருந்தது. அவனின் அண்மை அவளைத் திடமாக்கியது. நிஜமான அவளை மெருகேற்றுகிறது.
“என்னை சைட் அடிக்கறத நிறுத்திட்டு போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா தங்கம்….” என அவளின் மூக்குரசி கூறிவும், அவள் விலுக்கென பின்னால் நகர்ந்து அவனை முறைத்தாள்.
“எப்படி என்னை கல்யாணம் பண்ணனுங்கற எண்ணம் வந்துச்சி உங்களுக்கு?” அவன் அருகில் வந்து கண்பார்த்துக் கேட்டாள்.
“நான் கல்யாணம் பண்ணி தான் ஆகணும்ன்னு வீட்ல ஒரே ரகளை…. அப்போ தரகர் உன் ஜாதகம் குடுத்தாரு.. நீயும் இன்னும் கல்யாணம் பண்ணாம என்ன பண்றன்னு விசாரிச்சேன். கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு வெளிநாட்ல உக்காந்து இருக்கான்னு சொன்னாங்க… சரி ஒரு காலத்துல என்னை சைட் அடிச்ச பொண்ணாச்சே, எனக்கு எப்படியும் வாழ்க்கை குடுப்பாங்கற நம்பிக்கை தான்….”
“ரொம்ப மனசு கஷ்டப்பட்டீங்களா ராக்கி?” அவன் கன்னங்களைக் கையில் ஏந்திக் கேட்டாள்.
“கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது…. ஆனா இந்த சமுதாயத்தை புரிஞ்சிக்கிட்டேன்…. ஒரு மனுஷன் கொஞ்சம் சறுக்கினா என்ன எல்லாம் பேசறாங்கல்ல?” கட்டிலில் அமர்ந்து அவளையும் அருகில் அமரவைத்து, அவளது கைகளை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.
“அந்த பொண்ணுக்கு நீங்க பண்ணது பெரிய உதவி ராக்கி……“
“வேற ஒருத்தன மனசுல வச்சிட்டு மருகற பொண்ண என்ன சொல்ல முடியும்? அந்த பொண்ணு வேற ஒருத்தன காதலிக்கிறேன்னு சொல்லியும் கேக்காம நிச்சயம் பண்ணி இருக்காங்க…. எப்படியோ பத்திரிக்கை குடுக்க முன்ன சொல்லிச்சு…. வீட்ல பேசி அந்த பொண்ணு லவ் பண்ண பையனுக்கு கல்யாணம் செஞ்சி வச்சாச்சி….. ஆனா… அதுக்கப்பறம் நான் பாத்த மனுஷங்க முகம் எல்லாம்…… ரொம்ப நோகடிச்சானுங்க…. அதுவும் என் பின்னாடி நெறைய பொண்ணுங்க சுத்தி நிறைய பசங்கள ரிஜெக்டு பண்ணது வேற இருந்தது. எல்லாரோட வயித்தெரிச்சலோ என்னமோ?“
“இவளோ வருஷம் ஏன் நீங்க கல்யாணம் பண்ணிக்காம இருந்தீங்க?”
“கொஞ்சம் ஆசுவாசம் தேவைப்பட்டுச்சி… அதுக்கப்பறம் உன்னப்பத்தி பிரியாகிட்ட விசாரிக்க நெனப்பேன்… ஆனா ஒரு தயக்கம் இருந்தது. ஒரு தடவ கோவில் விஷேஷத்துல உன்னப்பத்தி டாக் வந்தது. நீ கல்யாணம் வேணாம்னு சொல்றதா… எங்க சொந்தக்காரங்க ஒருத்தங்க பையனுக்கு உன்னை கேக்கலாம்ன்னு பேசிட்டு இருந்தாங்க… உன் முகம் அப்போ என் மனசுல வந்தது.. என்னை அறியாமலே உன்னை நான் அதிகம் கவனிச்சு இருந்தேனா இல்ல, உன் எண்ணங்களோட தாக்கமா தெரியல, நீ அடிக்கடி என் கனவுல வந்த…. நீ என்னை கடைசியா ஊருக்கு போறதுக்கு முன்ன பாத்த பார்வை எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு… கண்ல தண்ணி தேங்கி நின்னு என்னை பார்த்த…. என் மனசு ஆடிரிச்சி அன்னிக்கி…. உன்ன அதிகம் பாதிச்சிட்டேன்ன்னு அப்போ தான் எனக்கு புரிஞ்சுது…“
“அப்பறம் நீ இந்தியா வரவே இல்லன்னு தெரிஞ்சது. என் மனசு அதிகமா உன்னை தேட ஆரம்பிச்சது… உன் அப்பா அம்மாகிட்ட பேசினேன்… ஏற்கனவே கல்யாணம் முடிவாகி நின்ன எனக்கு உன்னை கட்டிக்குடுக்க சம்மதமான்னு…. அவங்களும் கொஞ்சம் யோசிச்சிட்டு சுந்தரிகிட்ட கேட்டு இருக்காங்க.. அவ என்கிட்ட நேர்ல வந்து பேசின அப்பறம் தான் நீ என்னை லவ் பண்ணதே தெரிஞ்சது. என்னை நினைச்சிட்டு தான் இன்னும் கல்யாணம் வேணாம்னு சொல்றன்னு உங்கப்பா அம்மாவுக்கும் புரிஞ்சுது. உடனே ஒரு டிராமா போட்டு வரவச்சி கல்யாணம் பண்ணி, இதோ இப்போ கதை சொல்லிட்டு இருக்கேன் உன்ன என் மடில படுக்க வச்சி தாலாட்டு பாடுற மாதிரி…” அவன் குனிந்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
“ஆனா உங்க கல்யாணம் நின்னது எனக்கு தெரியாது ராக்கி… தெரிஞ்சிருந்தா இத்தன வருஷம் உங்கள விட்டு இருக்கமாட்டேன்…”
“என்ன செஞ்சி இருப்ப பேபி?’
“உங்கள தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணி இருப்பேன்…. உங்கப்பாம்மா சொத்து குடுக்கலன்னா கூட நான் வேலை பாக்கறேன் சோ கவலைபடாம வாங்கன்னு கூட்டிட்டு போய் இருப்பேன்…. சே… மிஸ் பண்ணிட்டேன்….” அவள் கூறிய விதம் அவனுக்கு ஒரு நிறைவைக் கொடுத்தது. அவன் சிரித்தபடி அவளது கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சி, ”இனிமே நீ கவலையே பட வேணாம் பேபி… விட்டத எல்லாம் இனிமே பிடிச்சிடலாம்….” என அவளின் இடையைப் பிடித்து இழுத்தான்.
“நோ நோ நோ…… நான் தூங்கணும்… இதுலாம் இன்னும் கொஞ்சம் டைம் எடுக்கும் மை டியர்…. குட் நைட்….” என அவனைத் தள்ளிவிட்டு விட்டு எழுந்துக் கொண்டாள்.
“ஹேய்… இதுலாம் அநியாயம் டி… இன்னிக்கி தான் நம்ம ரெண்டு பேரும் புரோபோஸ் செஞ்சோம்… அதுக்காகவாது ஒரு மெமொரபல் (memorable) மொமெண்ட் கிரியேட் பண்ணலாமே…” எனச் சிணுங்கினான்.
“நீ புரோபோசே இன்னிக்கி தான் செஞ்சிருக்க மேன்… இன்னும் கொஞ்ச நாள் காத்திரு… லவ் பண்ணி பழகு.. அப்போதான் என் காதல் தவிப்பு உனக்கு புரியும்…. என்னை இத்தன வருஷம் சுத்தல்ல விட்டல்ல…. “ என நாக்கைத் துருத்திப் பழிப்புக் காட்டினாள்.
“இதுலாம் நியாயமே இல்ல டி… இப்பவும் நான் தான் பிளான் போட்டு உன்ன கல்யாணம் பண்ணி இருக்கேன். நீ என்கிட்ட பேசவே இல்லை அப்போ….”
“ஏண்டா ஒரு பொண்ணு அந்த பார்வை பாக்கறாளே அதுக்கு என்ன அர்த்தம்ன்னு புரியாது…. நீயும் அப்பப்ப பாத்துட்டு தானே இருந்த… வந்து பேசினா என்ன? உனக்கு நிச்சயம் ஆனது தெரிஞ்சி நான் எவ்ளோ ட்ரை பண்ணேன் தெரியுமா அந்த நாதாரீ சதிஷ்கிட்ட பேச… அந்த எரும ரூட் போடவும், வெட் சாட் பண்ணவும் தான் கடைசில பேசினான். செம்ம காண்டு ஆகி அவன திட்டிட்டு பிளாக் பண்ணிட்டேன்…. உன்மேல அவனுக்கு பயங்கர பொறாமை டா… எப்படி தான் அவன எல்லாம் பிரெண்ட் அஹ் வச்சிருந்த?” பொரிந்துத் தள்ளினாள்.
“அவனா அப்படி பேசினான்? “ அதிர்ச்சியுடன் கேட்டான்.
“ஆமா… அவனே அப்படி பேசறான் நீ எப்படி இருப்பியோங்கற எண்ணம் எனக்கு வந்துருச்சு…“
“அவ்ளோ கேவலமாவா டி என்னை நினைச்ச?”
“உன் க்ளோஸ் ப்ரெண்ட் அவன். அவன விட்டு இணைபிரியாம நீ சுத்தின…. உன் மூஞ்ச பாத்தா நல்லவன் மாறி தெரிஞ்சாலும் ஒரு பயம் மனசுக்குள்ள…. ஆனாலும் உன்ன மறக்க முடியல அதான் இம்சையா இருந்தது….” என அலுப்புடன் கூறிவிட்டு கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
“நான் இன்னும் மனுஷங்கள சரியா புரிஞ்சிக்கணும்ல….” விட்டத்தைப் பார்த்தபடிக் கேட்டான்.
“மெல்ல ரெண்டு பேரும் சேர்ந்து புரிஞ்சிப்போம் இனி… படுங்க நேரமாச்சி… காலைல 5 மணிக்கு அலாரம் வைங்க… “ எனக் கூறிவிட்டு அவன் முகம் பார்த்த வாக்கில் படுத்துவிட்டாள்.
அவன் தான் உறக்கம் வராமல் எழுந்து அறையில் நடந்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அவன் நடப்பதை அரைக் கண்திறந்துப் பார்த்தவள், அவன் வாடிய முகம் கண்டுப் பொறுக்காமல் எழுந்து அவன் கைப்பிடித்து இழுத்துவந்து கட்டிலில் படுக்கவைத்து அவன் கைவளைவில் படுத்துக் கொண்டாள்.
அவனும் மென்னகையுடன் தன் மார்பின் மீது அவளைக் கிடத்தி அணைத்தபடிப் படுத்துக் கொண்டான். அத்தனை நேரம் இருந்தக் குழப்பமும், மனபாரமும் அவளை அணைத்த நொடிக் காணாமல் போனது. இருவரின் உதட்டிலும் புன்னகை உறைந்திருந்தது.