73 – ருத்ராதித்யன்
“அரசே .. நாம் உடனடியாக செயலில் இறங்கினால் அவர்கள் சுதாரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.. இன்னும் சிறிது காலம் காத்திருப்பது உகந்தது என்பது எனது அபிப்ராயம் ..”, என ஆருத்ரா கூறினாள்.
“என்ன சகோதரி கூறுகிறாய்.. இதற்கு மேலும் காத்திருந்து இன்னும் எத்தனை உயிர்களை நாம் பலி கொடுக்கவேண்டும் ?”, அமரன் உள்ளம் கொதித்துக் கேட்டான்.
“இத்தனை ஆண்டுகள் நமது கண்களுக்கும் கருத்திற்கும் அவர்களின் உறவு ஏன் வராமல் போனது ? தென்திசை ஆளும் நாம் அத்தனை பலகீனமாகவா இருக்கிறோம் ? இத்தனை ஆண்டுகள் இவர்களை பற்றிய செய்திகள் வரவில்லை. ஆனால் சிறிது மாதங்களாக மட்டும் ஏன் அடிக்கடி இவர்களைப் பற்றிய செய்திகள் நமக்கு வந்த வண்ணம் இருக்கின்றன என்பதை நாம் முதலில் ஆராய வேண்டும்.. இத்தனை காலமாக நமக்கு செய்திகள் கிட்டாமல் செய்தவர் யார் ? இப்போது நமக்கு கிட்டும்படி செய்கிறவர் யார் என்று முதலில் நாம் அறியவேண்டும்.. தவிர அந்த வடக்கு திசை இளவரசனை நாம் தீவிரமாக மறைந்திருந்து கண்காணிக்க வேண்டும். நமது கண்களும் காதுகளும் புத்தியும் இதை நேரிடையாக பரிசோதித்த பின் நமது எதிர்வினை செயல்கள் தொடங்குவது உசிதம் என கருதுகிறேன் ..”, ஆருத்ரா நீளமாக பேசி அவளுக்குள் இருந்த சந்தேகங்களையும் வரிசையிட்டு கூறினாள்.
“உண்மை தான்.. இதை தான் நானும் சிந்தித்துக் கொண்டிருந்தேன் .. அமரா.. புதிய வீரர்களை அழைத்து இப்பணிகளை கொடுக்க வேண்டும் அதற்கான ஏற்பாட்டினை தொடங்கு.. அரசி .. உனது படையில் சிறந்த பெண்களை தயார் செய்.. காற்றோடு கலந்து பயணித்து உளவு பார்க்கும் நபர்கள் தான் நமக்கு முதல் தேவை.. ஆருத்ரா கூறியது போல நாம் நமது நேரடி கண்காணிப்பில் இதை அறியலாம்.. பல குள்ளநரிகள் நமது நாட்டிற்குள் இருக்கிறது என்று நினைக்கிறேன்.. அவைகளின் வேஷம் கலைக்க வேண்டிய காலம் வந்தது.. “, என கூறி இன்னும் சில மணிநேரங்கள் அவர்கள் உரையாடிவிட்டு உணவுன்ன சென்றனர்.
இங்கே நரசிம்ம யோகேந்திர ஆதித்தன் மகதனுடன் விளையாடியபடி அடவிக்குள் முதல் வனதேவி கோவிலை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான். வடக்கு நோக்கி முதலில் சென்று கொண்டிருந்தான்.
மகதன் சுற்றிலும் மோப்பம் பிடித்தபடி முன்னால் மெல்ல நடந்து கொண்டிருந்தான். அவனுக்கு பசியெடுக்க ஆரம்பித்திருந்தது. வேட்டையாட ஏதேனும் கிடைக்குமா என்று கூர்மையாக கண்ணும், காதும், மூக்கும் வேலை செய்து கொண்டிருந்தது.
“என்ன மகதா பசிக்கிறதா ? இரை எதுவும் தென்படவில்லையா ?”, ஆதித்தன் அவனது நடவடிக்கைகளை பார்த்துக் கேட்டான்.
சத்தம் எழுப்பாதே எனும் கட்டளை மகதன் திரும்பி அவனை பார்த்த பார்வையில் இருந்தது. அதன் பிறகு இருவருமே இரை தேடி மெல்ல முன்னேறினர். தூரத்தில் அருவியின் சத்தம் கேட்டது. நரசிம்ம ஆதித்தன் மகதனுக்கு சங்கேத குரல் அனுப்பிவிட்டு அந்த பக்கமாக சென்றான்.
அங்கே கூட்டமாக பன்றிக் கூட்டம் ஒன்று சென்று கொண்டிருந்தது. காட்டுப் பன்றிகளை அத்தனை எளிதாக வீழ்த்தி விடமுடியாது. அதுவும் கூட்டமாக இருக்கும் பொழுது நம்மை சுலபமாக வீழ்த்தி கொன்றுவிடும்.
“இன்று நமக்கு நல்ல வேட்டை தான் நண்பா..”, என நரசிம்ம ஆதித்தன் கூறியபடி மெல்ல அம்பை நாணில் வைத்து குறிவைத்து நன்கு கொழுத்த இளம் பன்றியை குறிவைத்து அடித்தான்.
அவனது அம்பு நாணில் இருந்து புறப்பட்ட வேகத்தில் பன்றியை தூக்கியபடி சில அடிகள் பறந்து விழுந்தது. மகதன் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவனுக்கு தேவையான பன்றியை ஒரே பாய்ச்சலில் அடித்து வீழ்த்தினான்.
திடீர் தாக்குதலில் அந்த பன்றிகள் கூட்டம் திணறி திசையறியாமல் சிதறி ஓடியது.
“என்னடா பெரிதாக பிடித்து விட்டாயா ?”, என மகதனைப் பார்த்துக் கேட்டான்.
“உர்ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ..”
“சரி சரி நீ அந்த பக்கமாக எடுத்து சென்று சாப்பிடு.. நான் கறியை சுத்தம் செய்ய போகிறேன் ..”, எனக் கூறிவிட்டு நீர் ஓடும் இடத்தின் அருகே சென்றான்.
மெல்ல கத்தியை எடுத்து மேல் தோலை நீக்கிவிட்டு, கறியை தூண்டுகளாக்கி நீரில் போட்டு கழுவினான். சுற்றிலும் பார்வையை சுழற்றியபடி நெருப்பை மூட்ட ஏற்பாடுகள் செய்தான்.
நேரமும் சென்று இருள் கவியத் தொடங்கியது. மகதன் தன் இரையை சாப்பிட்துவிட்டு, நீரில் குதித்து விளையாடி தன்னை சுத்தம் செய்துக்கொண்டு நரசிம்ம ஆதித்தன் அருகே வந்தான்.
“வயிறு நிரம்பியதா நண்பா ? நாம் இது போல அடவிகளில் ஆடித்திருந்து பல மாதங்கள் ஆனது தானே ? இரவை கழிக்க தோதான இடம் காண வேண்டும் ..”, என பேசியபடி நெருப்பில் கறியை சுட்டு லேசாக மிளகையும், உப்பையும் தூவி சாப்பிட ஆரம்பித்தான்.
மகதனும் மீதமிருந்த சுட்டக் கறியை சாப்பிட்துவிட்டு ஆதித்தனை அவனது மேலாடையை பிடித்து இழுத்தான்.
“போதும் மகதா விளையாட்டு.. வயிறு மூட்ட சாப்பிட்டு விட்டேன். நன்றாக உறங்க வேண்டும். அதற்கொரு இடம் தேடுவோம்.. “
“உர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ..”, என உறுமிவிட்டு முன்னே சென்றான்.
நரசிம்மன் மகதனின் செய்கையை புரிந்து கொண்டு அவன் பின்னால் சென்றான். அங்கே ஒரு குகை இருந்தது. அங்கே சிறிது நாட்களுக்கு முன் சிங்கமோ புலியோ இருந்திருக்க வேண்டும் என்று தெரிந்தது.
“நல்ல இடத்தை தேடி பிடித்தாய்.. நன்றாய் உறங்க வேண்டும். நீ எனக்கு முன் அணைக்கட்டி படுத்துக்கொள்.. “, எனக் கூறி தன் உடலில் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்த பைமுடிச்சுகளை எல்லாம் கழட்டி பத்திரமாக அங்கிருந்த பாறையின் பின்னே வைத்துவிட்டு, தனது உடைவாளை மட்டும் தலையின் அருகே கைப்பிடியில் வைத்துக் கொண்டான்.
நள்ளிரவு தாண்டிய நேரத்தில் குகைக்கு வெளியே அரவம் எழுந்தது. ஒருவரோ இரண்டு மூன்று பேரோ சத்தம் செய்யாமல் காலடிகளை எடுத்து வைக்க முயன்று சருகுகளின் மேல் காலை வைத்ததில் எழுந்த சத்தம் அது.
நரசிம்ம ஆதித்யன் அரைக் கண் விழித்துப் பார்த்து மகதனை கண்டான். மகதன் நல்ல உறக்கத்தில் இருந்தான் போலும் அசைவில்லை. சற்று உருண்டு மகதனின் தலையை தாண்டி மேலே ஊர்ந்து வந்து வெளியே பார்த்தான்.
அங்கே கருப்பு உடையணிந்து சிலர் அருவி இருக்கும் இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
இந்நேரத்தில் பதுங்கி பதுங்கி செல்பவர்களைக் கண்டு சந்தேகம் கொண்ட நரசிம்மன், மெல்ல மகதனை தட்டியெழுப்பி செய்கை செய்துவிட்டு முகத்தை மறைத்தபடி அவர்கள் பின்னே சென்றான்.
மூன்று பேர் கருப்பு உடையணிந்து மெல்ல மெல்ல பாறைகளின் பின்னால் பதுங்கி பதுங்கி சென்று கொண்டிருந்தனர்.
அவர்களின் நடவடிக்கைகள் முற்றிலும் ஏதோ தவறான செயலுக்கான முகாந்திரமாக தான் நரசிம்மனுக்கு தோன்றியது.
எதிரே கூட்டமாக சில யானைகள் ஓடும் நீரில் இறங்கி நீர் குடித்துக் கொண்டிருந்தன.
நான்கு தந்தங்களை கொண்ட அந்த யானைகள் வானளவு உயர்ந்து நின்றது. யானைக்கூட்டத்தை நான்கு பக்கமிருந்தும் கருப்பு உடையணிந்த சிலர் சூழ்ந்து நின்றனர். மற்ற மூன்று பக்கமும் மும்மூன்று பேர் கைகளில் அம்போடு யானைகளை குறிப்பார்த்தபடி வந்தனர்.
இரண்டு ஆட்கள் உயரத்திற்கு நாணும், அம்பும் பிடித்தபடி அவர்கள் நிற்பதைக் கண்டால் இதே வேலையாக இவர்கள் காடுகளில் திரிகிறார்கள் என்பது புரிந்தது. காட்டின் உயிரோட்டம் யானைகளை நம்பி தான் இருக்கிறது. அவைகளின் எண்ணிக்கை குறைந்தால் காடும் அழிவை நோக்கி செல்லும். இத்தகைய பாதகத்தை செய்பவன் யாராக இருக்கும் என்று எண்ணம் நரசிம்மன் மூலையில் எழுந்த நொடி, நாணில் இருந்து அம்பு விடுபட்டு ஒரு பெண் யானையை நோக்கி சென்றது. நரசிம்மன் யானை மொழியில் எச்சரிக்கைக் குரல் அனுப்ப யானைகள் சட்டென முன்னால் மண்டியிட்டு ஓடும் நீரில் படுத்துக் கொண்டன.
கருப்பு உடையணிந்த பன்னிரெண்டு பேரும் நரசிம்மனை தாக்க முனைந்தனர். அந்த நேரம் சரியாக மகதன் அறுவரை ஒரே பாய்ச்சலில் கீழே சாயித்து மேலே படுத்துக் கொண்டான்.
மீதமுள்ளவர்களை நரசிம்மன் வாள் வீச்சில் இரண்டு நிமிடங்களில் கை கால்களை இழந்து நிலத்தில் விழுந்து கிடந்தனர்.
“யாரடா நீங்கள்? யானைகளை அதுவும் புதிதாக குட்டியை ஈன்ற பெண் யானையை கொல்ல முயல்கிறீர்கள் ?”, என உருமினான்.
“நாங்கள் மிருகங்களை வேட்டையாடுபவர்கள்.. பொற்காசுகள் கொடுத்து அவர்கள் கேட்கும் மிருகங்களை மட்டும் வேட்டையாடி கொடுப்போம்… உதிரம் அதிகமாக போகிறது.. எங்களை காப்பாற்றுங்கள்..”, என ஒருவன் கூறினான்.
“காசு கொடுத்தால் எதுவேண்டுமென்றாலும் செய்வாயா நீ? இது யானைகள் ஒன்றிணைந்து பேறு பார்க்கும் காலம் என்று தெரியாதா ? யானைகளை இப்போது வேட்டையாட வந்திருக்கிறாய்.. யாரவன் குட்டியை ஈன்ற பெண் யானையை கொல்ல சொன்னவன் ?”
“எங்களுக்கு மிருகத்தை கொல்லும் பணி மட்டும் தான் கொடுக்கப்படும்.. மற்ற விவரங்கள் எங்களுக்கு மேலே ஒருவன் இருந்து கூறுவான் ஐயா..”
“யாரவன்?”
“அது ..”
“ம்ம்.. மிச்சமிருக்கும் தொடையை அறுத்தால் அடுத்த நொடி இங்கே ஓநாய்களும், நரிகளும் வந்து உங்களை பிச்சி திண்ணத்தொடங்கும்..”
“விஸ்வக்கோட்டை சமஸ்தானத்தில் அரசவையில் இருக்கிறான்.. பெயர் சேயோண்..”, என சொன்ன நொடி அவனது தலை துண்டானது.
மகதனும் மற்றவர்களின் கழுத்தை மிதித்துக் கொன்றுவிட்டு நரசிம்மன் அருகே வந்தான்.
“நண்பா.. நீராடிவிட்டு வா.. ஓலை அனுப்ப வேண்டும்..”, எனக் கூறிவிட்டு நரசிம்மன் யானைகள் அருகே சென்று அவற்றின் பாஷையில் பேசி அவைகளை ஆசுவாசப்படுத்தி அங்கிருந்து செல்ல வைத்தான்.
யானைகளும் மெல்ல ஒலியெழுப்பியபடி இன்னும் குட்டியையும், பெண் யானையையும் பாதுகாப்பாக அழைத்து சென்றன.
அவற்றின் கோபமும், எச்சரிக்கை உணர்வும் அவை செல்லும் வேகத்திலும், நடையிலும் நன்றாக தெரிந்தது.
நரசிம்மன் நின்று சில நிமிடங்கள் பார்த்துவிட்டு மகதனோடு குகைக்கு சென்று சீட்டியடிக்க, ஓர் பருந்து பறந்து வந்தது.
மூட்டையில் இருந்த ஓலைக்கட்டில் இருந்து ஒரு இலையை எடுத்து குறிப்புகள் எழுதி அமரபுசங்கனிடம் கொண்டு சேர்க்கும்படி நரசிம்மன் கூற பருந்தும் ஓலையோடு பறந்து சென்றது.
“இதற்கு மேல் உறக்கம் வராது.. வா கிளம்புவோம்.. இன்று வடதிசை அடக்காடு (அடர்ந்த காடு) வனதேவியின் அருள் பெற்றே ஆக வேண்டும்.. “, எனக் கூறியபடி நரசிம்மன் குதிரையின் மேல் ஏறி அமர, மகதன் முன்னே பாய்ச்சலில் சென்றான்.
அன்று பகல் முழுதும் பயணம் செய்து அந்த பெருமலையின் அடிவாரம் வந்து சேர்ந்தனர் இருவரும்.
“இதானடா வனதேவி வீற்றிருக்கும் மலை.. இப்பொழுதே ஏறுவோமா ?”, என கேட்டான்.
மகதன் கோபமாக உருமியபடி வேறுபக்கம் செல்ல, நரசிம்மனும் அவனை பின்தொடர்ந்தான்.
பசியாற வேட்டைக்கு தயாராக நின்ற மகதனை நரசிம்மன் தட்டிக் கொடுத்துவிட்டு, தனக்கு பழங்கள் பறிக்க வேறு பக்கமாக சென்றான்.
ஒரு நாழிகையில் இருவரும் பசியாறிவிட்டு அதே அடிவாரத்தில் வந்து மண்ணில் விழுந்து கும்பிட்டுவிட்டு குதிரையையும் அங்கே பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு மலை ஏறினர்.
பெரும் பாறைகளில் நடந்து மரங்களின் கிளைகளை பிடித்து தாவி, உரசிய முட்களை எல்லாம் கண்டுகொள்ளாமல், தாயின் முகம் காண இருவரும் வேகமாக அடர்ந்த காட்டின் இடையே சென்றுக் கொண்டிருந்தனர்.
3 நாழிகை நேரம் கடந்த பின் அந்த மலையின் உச்சிக்கு வந்து சேர்ந்தனர்.
அங்கே தேவி சிரித்த முகமாக கைகளில் சூலம் முதலான ஆயுதங்களை பன்னிரு கைகளில் தாங்கி அப்பகுதியை காவல் காத்துக் கொண்டிருந்தாள்.
நரசிம்மன் தேவிக்கு சிகப்பு நிறமில்லாத மலர்கள் சமர்பித்து, பழங்களை படையல் வைத்து வாளினால் கையை கீறி ரத்தத்தை பாதத்தில் சிந்தி, “உயிருள்ள வரையிலும் இயற்கையை காப்பேன்.. இயற்கையை அழிக்க நினைப்பவனை உயிர் பிரிந்தாலும், மீண்டும் ஜென்மம் கொண்டு வந்து அழிப்பேன்.. இது எனது ஆத்மாவின் மேலும், உன்மேலும் ஆணை தாயே..”, என்று சபதம் எடுக்க, தாயின் கையில் இருந்து ஒரு சிகப்பு மலர் அவனது கைகளில் விழுந்தது.
மகதன் சந்தோஷ உறுமலை எழுப்பினான். நரசிம்மன் நெடுஞ்சாண்கிடையாக தாயின் பாதத்தில் விழுந்து எழ, மற்றொரு சிகப்பு மலர் அவன் தலையில் விழுந்தது.
நரசிம்மன் குழப்பத்தோடு தாயின் முகம் பார்த்து நின்றான்.