74 – ருத்ராதித்யன்
“மகதா இதென்ன இன்னொரு மலர் தருகிறார் அன்னை ? இதற்கு என்ன அர்த்தம் ?”, நரசிம்மன் கேட்க மகதன் மெல்ல உருமியபடி அன்னையின் பாதம் பணிந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
“டேய் மகதா நில்லடா .. எனக்கும் அதென்ன செய்தி என்பதை கூறுவாயாக ..”, என நரசிம்மன் அழைத்தும் மகதன் நிற்காமல் மலைவிட்டிறங்கத் தொடங்கவும், நரசிம்மன் அந்த மலரைத் தனியாக பத்திரப்படுத்திக்கொண்டு அன்னையை மீண்டும் வணங்கிவிட்டு அவனும் மலையிறங்கத் தொடங்கினான்.
ஒரு நாழிகையில் அடிவாரம் வந்து சேர்ந்தவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு அங்கிருந்து வட-கிழக்குத் திசை நோக்கித் தங்களதுப் பயணத்தைத் தொடங்கினர்.
வடகிழக்கு பகுதி என்பது பெரிதும் பாறைக்காடுகள் நிறைந்த இடங்கள். அங்கே தான் பாறைக்கூட்டம் என்ற இடத்தில் மகரயாளி வாழ்வதாக கேள்வி. இதுவரை யாளிகளை யாரும் பழக்கவில்லை. அதை அருகில் சென்று பார்க்க கூட யாளிகளின் ஆவேஷமும், அதிபுத்திசாலிதானமும் விடவில்லை என்பது தான் உண்மை. நரசிம்மனுக்கு 30 அடிக்கும் மேலே உயரம் கொண்ட யாளியை பழக்கி தன் படையாக்கிக் கொள்ளவேண்டும் என்ற ஆசை அவனது சிறுவயது முதலே உருவாகி, இப்போது விருட்சமாக வளர்ந்து நின்றது. இத்தனை ஆண்டுகளாக அவன் தந்தை அவனை தனது கண்காணிப்பிலேயே வைத்திருந்து யாளிகளின் இருப்பிடம் செல்லவிடாமல் பார்த்துக் கொண்டார்.
ஆனால் இன்று மலர் சேகரிக்க இவன் அனைத்து வகை யாளிகளின் வசிப்பிடம் வழி தான் மலைகளை அடைந்து தேவியின் தரிசனம் காணமுடியும். அதில் இவன் மிகவும் சந்தோஷமாகவும், ஆர்வமுடனும் பயணத்தை மேற்கொண்டிருந்தான்.
“மகதா .. நாம் அடுத்து உயரிய அருவிக்காட்டில் உறைந்திருக்கும் தேவியை தரிசிக்க வேண்டும். உனக்கொன்று தெரியுமா ? அந்த வழியில் தான் மகரயாளிகள் வசிப்பிடம் இருக்கிறது.. நமது கோட்டை அகழியில் இருக்கும் முதலையை விட பல மடங்கு நீளமும், அகலமும், உயரமும் கொண்டவை மகரயாளிகள்.. அவற்றை மட்டும் நாம் பழக்கிவிட்டால், நமது குகைகளுக்கு எல்லாம் காவலுக்கு நிறுத்திவிடலாம்.. ஒருவனும் அவற்றை மீறி குகையினுள் நுழைய முடியாது.. நமது செல்வங்கள் மற்றும் மூலிகைகள் மிகவும் பத்திரமாக காலத்திற்கும் சேமித்து வைத்து பாதுகாத்துக் கொள்ளமுடியும்… இம்முறை ஒரு மகரயாளியையாவது நாம் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் ..”, நரசிம்மன் கூறியபடி வேகமாக அந்த இடம் நோக்கிப் பயணித்தான்.
இங்கே நரசிம்மன் அனுப்பிய பருந்து சில நாழிகைகளுக்குள் அமரபுசங்கனை வந்துச் சேர்ந்தது. அதில் இருந்த செய்தியை அரசருக்கு உடனடியாக தெரிவிக்க அரசரின் அறைக்கு செல்லும் போது, வனயாத்திரை ஆருத்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது பார்த்து அங்கே சென்றான்.
“நீ இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளக்கூடாது யாத்திரை.. இது மிகவும் ஆபத்தானது… இதனால் நாட்டில் பல குழப்பங்கள் ஏற்படும்… இந்த எண்ணத்தை இத்தோடு விட்டுவிடு..”
“நிச்சயமாக என்னால் இந்த முயற்சியை கைவிடமுடியாது தமக்கையே .. உங்களின் ஆராய்ச்சியை விட இது அத்தனை ஆபத்தானது இல்லை.. நான் முழுதாக மனிதனை தான் குடுவையில் உருபெற வைத்து உருவாக்கப் போகிறேன்..”
“எதற்கு இத்தனை பிடிவாதம் யாத்திரை ?”, ஆருத்ரா அவளிடம் பேசிப் பேசி களைத்துக் கேட்டாள்.
“நமது அரசரின் வம்சம் என்றென்றும் தழைத்து வளர, இது மிகவும் சிறந்த வழி ..”
“நீ கூறும் வார்த்தையின் பொருள் என்ன யாத்திரை ? நமது இளவசரர் ஏதும் ஆபத்தில் சிக்கியுள்ளாரா ?”, அமரபுசங்கன் கேட்டார்.
“இல்லை .. அப்படி ஆபத்து அவரை சூழ்ந்திருந்தாலும் அவருக்கு ஒன்றும் ஆகாது.. இனி வரும் காலங்களில் மனிதனும், மற்ற உயிர்களும் இன்றிருக்கும் உரத்தோடும், பலத்தோடும், ஆற்றலோடும் பிறக்கப்போவதில்லை.. இனி படிப்படியாக மரபணுக்களின் பலமும் ஆற்றலும் குறைந்து, உயிர்களும் இன்றைய பலத்தினில் இருந்து சில சதவீகங்கள் குறைந்து தான் பிறப்பார்கள். அப்படி படிப்படியாக 10 வீதம் குறைந்து கொண்டே சென்றாலும் பலமற்றவர்களாகவும், நோய் கொண்டவர்களாகவும் தான் இப்புவியில் பிறப்பார்கள். அதை தடுக்க இன்றிலிருந்து நல்ல பலமும், திறமும், உரமும், ஆற்றலும் உள்ள வம்சங்களை எல்லாம் காக்க இப்படியான ஆராய்ச்சி நமக்கு கைக்கொடுக்கும். மரபணுவினால் தோன்றும் நோய்களை தீர்க்கவும் நாம் வழி தேடலாம்.. இதன் ஆரம்பம் வெறும் ஒரு புள்ளி தான் ஆனால் இதன் பின்னால் நமது எதிர்கால சந்ததிகளின் விதியும், கதியும் அடங்கியுள்ளது.. இன்றிலிருந்து இன்னும் 300 வருடங்களில் இந்த மாற்றம் மனிதர்களிடமும் தொடங்கும். அதற்கு ஆதாரமாக மரங்களில் இன்று பலவீனம் தொடங்கியுள்ளது.. இனிவரும் காலத்தை நாம் கணிக்க வேண்டும்..”, எனக் கூறிவிட்டு தனது கைப்பையில் இருந்த ஒரு ஓலைக்கட்டை அவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
ஆருத்ராவும், அமரபுசங்கரும் அந்த சுவடியை படிக்க படிக்க ஆச்சரியம் மேலிட ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு பளிங்கு மண்டபத்தில் வந்தமர்ந்தனர்.
“இத்தனை தகவல்களும் இவளுக்கு எப்படி கிடைத்தது ? எங்கிருந்து கற்றாள் இவள் ?”, என அமரபுசங்கர் கேள்வி எழுப்பவும் ஆருத்ரா வதனத்தில் மென்னகைப் படர்ந்தது.
“இது எல்லாம் சிங்கதுரியனின் கற்பிக்கும் முறை அமரபுசங்கரே.. வனதேவியின் அருள் பரிபூரணமாக நிறைந்த ஓர் ஆத்மா அவர்.. எனது அந்தரங்க உதவியாளரின் மகன். வனயட்சியின் வளர்ப்பு..”, என ஆருத்ரா கூறினாள்.
“உன் உதவியாளரின் மகன் இயற்கையை அனுமானிக்கும் அளவிற்கு பாடங்கள் கற்றவரா ?”, வியப்புடன் கேட்டார்.
“அவர்களை பொறுத்தவரையில் நமது உடலும் இயற்கையும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்த நரம்பியல் மண்டலம்.. எந்த நரம்பினை தொட்டால் எந்த நரம்பு வேலை செய்யும் என்ற வர்ம புள்ளிகளைப் போல நாம் கூர்ந்து கவனிக்காமல் விடும் இடைவெளி தான் அந்த பாடங்கள்.. அரண்மனை வாருங்கள் பரிட்சயம் செய்து வைக்கிறேன்.. தவிர இனி அவர் வரும்வரை அந்த ஆராய்ச்சி கூடத்தின் பொறுப்பாளர் சிங்கதுரியன் தான் .. “, எனக் கூறிவிட்டு அமரபுசங்கர் கையில் இருக்கும் ஓலையைக் காட்டி வினவினாள்.
“உங்களின் சண்டையில் இதை விட்டுவிட்டேன் .. இது நரசம்மன் அனுப்பியிருக்கிறான்.. யாத்திரை கூறியதற்கான ஆதாரமாக, விஸ்வக்கோட்டை சமஸ்தானத்தின் அதிகாரியின் பெயர் நமக்கு கிடைத்திருக்கிறது… அவன் புதிதாய் குட்டியை ஈன்ற பெண்யானையை வேட்டையாடி வரும்படி கட்டளை கொடுத்திருக்க, சிலர் நரசிம்மன் தங்கிய இடத்தின் அருகே கொல்ல முயன்று இருக்கின்றனர். இவனும் மகதனும் அவர்களை தகவல் சேகரித்ததும் துண்டாக வெட்டி வீசிவிட்டு நமக்கு ஓலை அனுப்பியிருக்கிறான்.. அந்த இளவரசனையும், அந்த சமஸ்தானத்தையும் கவனிக்கச் சொல்லி யுவராஜனின் கட்டளை வந்துள்ளது…”
“என்ன கொடூரம் .. குட்டியை ஈன்ற யானையை கொல்லச் சொன்னவன் கழுத்தை துண்டாக்க வேண்டும் சகோதரா .. அந்த நவ-வர்ம நாட்டின் இளவரசன் கேட்டால் பெண்களிலும் ஆண்களிலும் அத்தனை வகை இரத்த மாதிரி உள்ளவர்களையும் இவன் அனுப்பி வைப்பான் போலவே ? அங்குள்ள மக்களுக்கு என்னென்ன இன்னல்கள் இதுவரை நேர்ந்ததோ ? அங்கிருக்கும் அடவி வாழ் உயிரினங்கள் எல்லாம் என்ன பாடுபடுகின்றனவோ ? நினைக்க நினைக்க நெஞ்சம் வேகிறது.. அரசர் இப்போது சயனத்தில் இருப்பாரே சகோதரா .. எப்படி செய்தி கூறுவது ?”
“மகாராணியார் முழித்துக் கொண்டுதானிருப்பார் .. அவரிடம் இந்த ஓலையை சேர்ப்பித்துவிட்டால் போதும்.. காலையில் இதற்கான கட்டளையும் ஆட்களும் தயாராக நின்றிருப்பர்.. இருவரில் ஒருவர் எப்போதும் முழித்திருந்து அரச அழுவல்களை கவனித்துக் கொண்டுதானிருப்பர் ஆருத்ரா .. “, சிரிப்புடன் அவன் சொல்வதைக் கேட்டவள் ஆச்சர்யமுற்றாள்.
“பேரரசர் என்ற பட்டம் அடைந்தபின் ஊணும், உறக்கமும் கூட ஊறுகாய் அளவிற்கு தான் கிடைக்கும் போலவே ..”
“ஊறுகாய் அளவிற்கு கிடைக்கிறதே என்று சந்தோஷித்துக் கொள்ளவேண்டும் மகளே.. மகாராணியார் இப்போது தான் சயனிக்க சென்றிருக்கிறார். என்னிடம் கூறுங்கள் என்ன விஷயம் ?”, எனக் கேட்டபடி அரசர் அங்கே வந்தார்.
“வணங்குகிறோம் அரசே .. நாம் முன்னிரவில் உரையாடிய விஷயங்களுக்கான ஆதாரத்தை யுவராஜர் அனுப்பியிருக்கிறார்.. அந்த சமஸ்தானத்தின் அதிகாரி ஒருவரின் பெயர் கிடைத்திருக்கிறது..”
“யாரவன் ? விளக்கிச் சொல்”, அரசர் கேட்டதும் ஓலையின் சாரம்சத்தை முழுதாக எடுத்துக் கூறினான்.
“சமஸ்தானத்தின் அதிகாரிக்கு நல்ல வேலை தான்.. அவனை கூர்ந்து கவனமாக கண்காணிக்க ஆட்களை அனுப்பு .. நமக்கு தகவல்கள் அதிகமாக வந்து சேரவேண்டும் .. உளவு வேலையை திறமையாக செய்பவர்கள் தேவை நமக்கு அதிகமிருக்கிறது… நீ நாளை ஆருத்ராவையும், யாத்திரையையும் ருத்ரக்கோட்டையில் விட்டுவிட்டு உனது சமஸ்தானம் சென்று வேண்டிய வேலைகளை கவனி.. நான் மற்ற சமஸ்தானங்களின் நிலைப்பாட்டை தீர கண்காணிக்க செல்கிறேன் .. ஒரு வாரத்தில் உனது கோட்டைக்கு வருவேன்.. “, என அரசர் தீர்க்கமாக சிந்தித்துவிட்டு கூறினார்.
“உத்தரவு அரசே.. இங்கே மகாராணியார் தனியாக ?”, என அமரபுசங்கன் ஆரம்பிக்கும்முன்னே, “உனது கோட்டையும் ஆள்பவன் இல்லாமல் தான் இருக்கிறது.. அம்மாவும், மகனும் நான் அந்த பக்கம் சென்றதும் இங்கே கொஞ்சி குழாவலாம் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தால் இப்போதே மறந்துவிட்டு வேலையை ஆரம்பியுங்கள். யுவராஜன் இங்கே திரும்பி வரும் முன்னர் நமது வேலைகள் முடிந்திருக்க வேண்டும்..”, கண்டிப்போடு கூறியவர் வனத்தினை நோக்கி நடந்தார்.
“சிறிது நாட்கள் நான் இங்கிருந்தால் என்னவாம் ? எங்கிருந்தாலும் வேலை செய்தால் போதாதா ? எங்களை பிரிப்பதே இவருக்கு வேலை..”, என அமரபுசங்கன் முனங்கவும் ஆருத்ரா சிரித்தாள்.
“தமையரே ஆனாலும் நீங்கள் இப்படி இருக்க கூடாது .. சரி நான் நித்திரை கொள்ள போகிறேன் .. நீங்களும் சற்று உறங்கி எழுந்திருங்கள் ..”, என ஆருத்ரா செல்ல அமரபுசங்கனும் தனது அறைக்கு சென்றார்.
விஸ்வக்கோட்டை சமஸ்தானம்…
“எப்படியடா அத்தனை பேரும் மாண்டனர் ? நாளை இளவரசன் இங்கே வருகிறார்.. அவர் வரும்போது அவர் கேட்ட அத்தனை மிருகங்களும் இங்கே இருக்கவேண்டும்.. ஒரு பெண்யானையை கொல்ல முடியாதா உன் ஆட்களினால் ?”, அரசகேசரி சேயோனிடம் கத்திக் கொண்டிருந்தான்.
“எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை அரசே.. புலி அடித்து சாப்பிட்டதாக தான் தகவல் வந்திருக்கிறது ..”
“எத்தனை புலிகளடா சேர்ந்து வேட்டையாடும் ? பன்னிருவரை கொன்று தின்னும் கோரப்பசியுடைய புலி அடவியில் திரிகிறதா ?”
“அரசே .. இன்று வேறு கூட்டத்தை அனுப்பியிருக்கிறேன் .. நிச்சயமாக இன்று இரவிற்குள் பெண்யானையை கொண்டு வந்துவிடுவோம் .. “, சேயோன் தலைக்குனிந்தபடி மொழிந்தான்.
“இங்கே பார் .. இன்று நள்ளிரவில் உயிருடனோ, சடலமாகவோ பெண்யானையை இங்கே நீ கொண்டு வந்தே ஆகவேண்டும்.. இல்லையென்றால் இளவரசின் அடுத்த ஆராய்ச்சியில் நீ தான் கூடத்தில் படுத்திருப்பாய் ..”
“நிச்சயமாக கொண்டு வந்து விடுவேன் அரசே .. எனை நம்புங்கள் .. நானே கிளம்புகிறேன் ..”, என்று நகர்ந்தவனை, “நில்.. நரசிம்மன் யுவராஜ பட்டாபிஷேகம் நடந்து முடிந்ததாக தகவல் வந்ததே அது நிஜம் தானா ?”, அரசகேசரி கேட்டான்.
“ஆம் பிரபு .. ஆனால் 8 திக்கில் முதல் எந்த திக்கில் செல்வார் என்பது யாருக்கும் தெரியாது.. அது ஆதித்த வம்சத்தினர் மட்டுமே அறிவர்.. 21 நாட்களில் அனைத்து தேவியிடமும் ஆசிப்பெற்று வந்து விடவேண்டும் என்ற விதி மட்டும் கேள்வியுற்று இருக்கிறேன்… “
“அப்படியென்றால் நேற்று நரசிம்மன் தான் நமது ஆட்களை கொன்றிருக்க வேண்டும்.. அவன் தேசச்சுற்று முடிந்து அரண்மனை திரும்பும்வரை எந்த மிருகத்தையும் வதைக்க வேண்டாம்.. கடத்தி மட்டும் வரச்சொல்..”, எனக் கூறியவன் தனது அரசவை நோக்கி நடந்தான்.