8 – காற்றின் நுண்ணுறவு
அவர்கள் எழுந்த பொழுது ஒருவனை தர்மதீரன் துரத்தியபடி அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகில் வந்தான்.
ஓடிவந்தவன் சட்டென கத்தியை வல்லகியின் கழுத்தில் வைத்து தர்மதீரனைத் தடுத்தான்.
“ஒழுங்கா உன்கிட்ட இருக்கறத குடுத்துட்டு போயிடு… இல்ல இந்த பொண்ண கொண்ணுடுவேன்”, எனக் கூறிய படிக் கத்தியை அவளது கழுத்தில் வைத்தான்.
பாலா பதறிப்போய் ,” அய்யோ… சார்…. விட்றுங்க சார்…. வகி கழுத்துல கத்திய வச்சிருக்கான் சார் அவன்…. கேக்கறது குடுத்துறுங்க சார்…. ப்ளீஸ் சார்….”,என அவள் தர்மதீரனிடம் கெஞ்சினாள்.
“அதுல என்ன இருக்குன்னு இப்ப வரை நான் பாக்கல. இனி போய் கண்டிப்பா பாப்பேன். உன்ன அனுப்பனது யாருன்னு சொல்லு நீ உயிரோட இங்கிருந்து போலாம்”, தர்மதீரன் அசிரத்தையாகவே அப்பொழுதும் உரையாடினான்.
“சார்…. என்ன சார் நீங்க… அவன் வகி கழுத்துல கத்திய வச்சி இருக்கான். என் பிரண்ட் சார் அவ…. அவளுக்கு எதாவது ஆச்சு உங்கள நான் சும்மா விடமாட்டேன். அவன் கேக்கற கருமத்த தூக்கி போடுங்க சார்…. ரவுடி சார்… அவள விட்றுங்க சார்…. உங்க பிரச்சினைல எங்க கழுத்துல ஏன் கத்திய வைக்கறீங்க…? நாங்க பாவம் சார்.. சின்ன பொண்ணுங்க சார்… விட்றுங்க…. “,பாலா கண்களில் நீர் வழிய கெஞ்சினாள்.
அது சற்று ஒதுக்குபுறமான இடமாக இருந்ததால் மற்றவர்கள் பார்வைக்கு இங்கு நடப்பது சுத்தமாக தெரியவில்லை. படகுகளும் இருக்க இன்னும் மறைவாய் போனது.
வல்லகி அமைதியாக அந்த ரவுடி இழுத்த இழுப்பிற்கு சென்றவள் தர்மதீரனைப் பார்த்தபடி நின்றாள்.
“உன்ன அனுப்பிவன் யாருன்னு சொல்லு”, தர்மதீரன்.
“ஹேய் சொன்னா புரியாதா உனக்கு….. உங்கிட்ட இருக்கற பார்சல குடுத்துட்டு போ…. இல்ல இவள இங்கயே அறுத்துபோட்டுட்டு.. நீ தான் பண்ணன்னு போலீஸ் கிட்ட நானே போவேன்”, ரவுடி மிரட்டினான்.
“முடிஞ்சா பண்ணு டா…. “,எனக் கூறி அங்கிருந்த படகில் சாய்ந்து நின்றான் தர்மதீரன்.
“ஹேய் ஏய்….…. என்ன சார் நீங்க? உங்களுக்கு என்ன ரவுடி சார் வேணும். நான் எடுத்து தரேன்…. ப்ளீஸ் அவள விட்றுங்க…. “, பாலா தானாக அவனிடம் தலையைக் கொடுத்தாள்.
“நீயா…. அவன உனக்கு தெரியுமா?”, அவன் பாலாவிடம் பேசிக்கொண்டிருக்கும் சமயம் வல்லகி தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறிய மடக்கு கத்தியை எடுத்தாள்.
“தெரியும் சார்.. அவர் வேலை பாக்கற ஆபீஸ்ல தான் நானும் வேலை பாக்கறேன்….உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க ரவுடி சார்…..”, பாலா அழுதபடி கேட்டாள்.
“அவன் பிரண்ட் கிட்ட ஒரு பார்சல் இருக்கு அத வாங்கிட்டு வந்து குடுத்துட்டு இந்த பாப்பாவ நீ கூட்டிட்டு போ….ஓடு ஓடு… “, என பேசி முடிக்கும் முன் வல்லகி அவன் தாடையில் தன் முஷ்டியால் இடித்து, அவன் காதில் விரல் கொண்டு அழுத்திவிட்டு, அவன் கையை முறுக்கி பின்னால் இழுத்து மடக்கியபடி, தன் கையில் இருந்த கத்தியை அவன் கழுத்தில் வைத்தாள்.
நொடியில் நிகழ்ந்த நிகழ்வால் அந்த ரவுடி திடீரென வாங்கிய அடியில் உடலில் இருந்த சக்தி முழுதும் வடிந்தது போல உணர்ந்தான்.
தர்மதீரன் அவளை விட்டு தன் கண்ணை எடுக்காமல் அவளருகில் வந்தான்.
“ஒரு அடிக்கு தாங்கல… இவன தொறத்திட்டு வேற வரீங்க… பிடிங்க இவனை… “, என அந்த ரவுடியை தர்மனிடம் தள்ளிவிட்டாள்.
“நீ என்ன செஞ்ச இவன? இந்த வித்தைக்கு பேர் என்ன?”, தர்மதீரன் அவளின் கண் பார்த்துக் கேட்டான்.
“வர்மக்கலை….”, எனக் கூறிவிட்டு திரும்பி நடந்தாள்.
“ஒரே அடில ஆள சாச்சிடலாமா?”.
“இவன் பேசிக்கா அடியாள் இல்ல…. அதான் ஒரே அடில கிறங்கிட்டான். எதுவா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சி பொறுமையா பண்ணுங்க..”, எனக் கூறிவிட்டு அவ்வளவு நேரம் வாய் பிளந்து நின்றிருந்த பாலா அருகில் சென்றாள்.
வல்லகி அவளை உலுக்கவும்,”ஹேய் வகி… உனக்கு ஒன்னும் இல்ல தானே? என்னடி பண்ண அவன? இத நீ எங்க கத்துகிட்ட? எனக்கும் சொல்லித்தரியா? “, என இடைவிடாமல் கேள்வி கேட்டாள்.
“கொஞ்சம் மூச்சு விடு பாலா. வா போய் எதாவது நல்ல ரெஸ்டாரெண்ட்ல சாப்டு போலாம்”, பாலாவை அழைத்துகொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
“வல்லகி … ஒரு நிமிஷம்”,எனக் கூறிய தர்மா வல்லகியின் அருகில் வந்து அவள் கணணோடு கண் பார்த்து, “நானும் உங்களோட டின்னர்ல ஜாயின் பண்ணிக்கலாமா?” எனக் கேட்டான்.
வல்லகியும் அவனை கண்னோடு கண் பார்த்துவிட்டு, அந்த ரவுடியைப் பார்த்தாள்.
அவள் பார்வையின் பொருள் புரிந்த தர்மா,” இவன சுதாகர் பார்த்துப்பான்”.
“அப்ப அவருக்கு பசிக்காத சார்?”, பாலா தன் அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்டாள்.
இது தான் பாலா நொடியில் தன்னை சமன்படுத்திக்கொண்டு சூழ்நிலையை லகுவாக்கிவிடுவாள்.
“அவனுக்கு பார்சல் வாங்கிக்கலாம்”, என பாலாவை சிறுபுன்னகையுடன் பார்த்துக் கூறினான்.
“ஆமா… எனக்கு ஒரு சந்தேகம்? நீங்க என்ன மப்டில இருக்க போலீஸா? எதுக்கு இவன துறத்திட்டு வந்தீங்க? எப்பவும் வெறப்பாவே சுத்தறீங்க? ஆபீஸ்ல கூட முறைச்சிட்டே இருக்கீங்க? எங்க பேனல் பக்கம் வந்து கூட எங்கள நேரா பாத்து பேசாம, பாத்தும் பாக்காத மாதிரி வகிய மட்டும் ஓரக்கண்ணாலே முறைச்சிட்டே போனீங்க…. ஏன்? யார் நீங்க?”, பாலா அத்தனையும் தாடையில் விரல்வைத்து யோசித்தபடி ஒவ்வொன்றாக கேட்டு முடித்தாள்.
ஆனால் எதிரில் தான் அவன் இல்லை. அந்த ரடிவுயை சுதாகரிடம் ஒப்படைத்துவிட்டு அப்பொழுது தான்
திரும்பி வந்தான்.
அவள் கேள்விகளை கேட்க ஆரம்பிக்கும் பொழுதே சுதாகரும் பின்னோடே வந்திருந்தான். அவனிடம் இவனை பத்திரமாக கொண்டு செல்லுமாறு கூறிவிட்டு அப்பொழுது தான் அவர்கள் அருகில் வந்தான்.
வல்லகி சுதாகர் வந்ததும் அவனை கவனித்தபடி பாலாவை விட்டு சற்று தள்ளி நின்றிருக்க பாலா தனியாக உரையாடுவது போலானது.
சுண்டல் விற்றுக்கொண்டு செல்லும் சிறுவன் அவளை ஒருமாதிரி திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றது கண்டு பாலா காண்டாகி தர்மதீரன் அருகில் சென்று,” ஒரு மனுஷி பேசினா முதல்ல நின்னு கேக்கணும். இப்படியா ஆளுக்கு ஒரு பக்கம் தனியா என்னை விட்டுட்டு போவீங்க? சே…. அவமானம்… வகி நீயும் என்னை விட்டுட்டல்ல…..”, என போலியாக கண்ணீர் வடிந்து துடைப்பதைப் போல பாவ்லா செய்தாள்.
அவள் செய்கையில் இருவரும் மென்னகை சூடிக்கொள்ள பாலாவை நடுவில் விட்டு ஆளுக்கு ஒரு பக்கமாக நடந்தனர்.
சற்று தூரத்தில் பீச் அருகிலேயே ஒரு ரெஸ்டாரெண்ட் நன்றாக இருக்கும் என தர்மதீரன் அழைத்துச் சென்றான்.
வரும் வழி எல்லாம் சென்னைப் பற்றியும்,அவர்கள் தங்கி இருக்கும் இடத்தின் அருகினில் இருக்கும் சில தடங்கள் முதல் பிரபலமான கடைகள் வரையாக பாலாவும் தர்மனும் பேசியபடி வந்தனர்.
வல்லகி ஒரு பக்கம் இவர்கள் உரையாடுவதை கேட்டபடியே கடல் அலைகளை இரசித்தபடி நடந்துக் கொண்டிருந்தாள்.
இவர்கள் அந்த ரெஸ்டாரெண்ட் உள்ளே சென்று, உணவு வகைகளை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தனர்.
அப்பொழுது ஜிதேஷ்-உடன் எட்டு பேர் இவர்கள் அமர்ந்திருக்கும் டேபிளைச் சுற்றி நின்றனர்.
“இன்னும் சாப்பாடே வரல அதுக்குள்ள டிப்ஸ்க்கு இத்தனை பேரா?”, என பாலா விளையாட்டாக கூறவும் , ஜிதேஷ் கோபம் கொண்டு பாலாவின் தலை முடியைப் பற்றி எழுப்பினான்.
வல்லகி திடுக்கிட்டு செயல்படும் முன் தர்மதீரன் ஜிதேஷின் முகத்தில் முஷ்டியால் தாக்கி அவனின் இருகைகளையும் பின்னால் மடக்கி மண்டியிட வைத்து போர்க் ஸ்பூனை கழுத்தில் வைத்தான்.
அவனது எதிர்பாராத தற்காப்புச் செயலில் வல்லகி மெச்சுதலான பார்வைப் பார்த்துவிட்டு தானும் செயல்பட தயாராகி நின்றாள்.
“யாராவது கிட்ட வந்தீங்க … இவன் முழுசா இருக்கமாட்டான். போங்க… பின்னால போங்கடா…. வல்லகி போலீஸ்க்கு கால் பண்ணுங்க”, எனக் கூறினான்.
ஜிதேஷூடன் வந்த எட்டு பேரும் என்ன செய்வதென புரியாமல் தர்மனின் சொல்படி நடந்தனர்.
அந்த ரெஸ்டாரெண்ட் மேனேஜர் வல்லகி போன் எடுத்து டயல் செய்வது பார்த்துவிட்டு அருகில் வந்தார் .
அந்த ரெஸ்டாரெண்ட் விட்டு வெளியே வந்ததும்,” எதுக்கு என்ன விடாம தொறத்தற? , என ஜிதேஷ் கேட்டான்.
“நீ என்ன பண்ற…. ஏது பண்றன்னு… நான் இப்பவரை கேட்டது இல்ல. ஆனா நீ ஆபீஸ் ஸ்டாப்ஸ் கிட்ட நடந்துக்கறது பிடிக்காம தான் கம்ப்ளைண்ட் செஞ்சி உன்ன தூக்க சொல்லி இருக்கேன். நீ செய்றது பாத்தா சராசரி மனுசனா தோணல. ஏதோ பெரிய தப்பு பண்றன்னு மட்டும் புரியுது”, தர்மதீரன் அழுத்தமாகக் கூறினான்.
ஜிதேஷ் திமிற முடியாமல்,” நீ மட்டும் என்னவாம்? அந்த சுதாகர வச்சி எவ்வளவு வேலை பாக்கற… நீ எதுக்கு முயற்சி பண்றன்னு எனக்கு நல்லா தெரியும். அது நடக்க விடமாட்டேன். இப்ப என்ன நீ விடல உனக்கு தான் பிரச்சனை”, என அந்த நிலையிலும் மிரட்டினான்.
வல்லகி அவன் அருகில் வந்து உடலில் சில இடங்களில் அழுத்தம் கொடுத்ததில் அவன் கை கால்கள் ஒழுங்காக செயல்பட முடியாது திசைக்கொரு பக்கமாக திரும்பிக்கொள்ள, நிற்கவே முடியாமல் சரிந்து விழுந்தான்.
“என்ன பண்ண ? ஏன் இவன் இப்படி ஆகிட்டான்?”,தர்மதீரன் பதற்றமாகக் கேட்டான்.
“ஓவரா பேசறான் அதான் கொஞ்சம் சைலண்ட் பண்ணேன்”, எனக் கூறிவிட்டு பாலாவை அழைத்துக்கொண்டு தாங்கள் அமர்ந்திருந்த டேபிளுக்குச் சென்றாள்.
அவள் அந்த பக்கம் நகர்ந்ததும் தான் மற்ற ஆட்களை பார்த்தான், அனைவரும் சக்தியிழந்து அரைமயக்கத்தில் இருந்தனர்.
தர்மதீரன் மனதில் உள்ளூற புன்னகையும், அதிர்ச்சியும் தோன்றியது.
“கில்லாடி தான்”, என முணுமுணுத்துவிட்டு சுதாகரை அழைத்து விவரம் கூறவும், ஆட்களோடு வந்து அவன் இவர்களைத் தூக்கிச் சென்றான்.
“இன்னும் என்ன என்ன வித்தை கைல வச்சிருக்க?”, எனக் கேட்டபடி தர்மதீரன் அவள் எதிரில் அமர்ந்தான்.
“வித்தையெல்லாம் பெருசா ஒன்னுமில்ல. தற்காப்புக்கு சில டெக்னிக்ஸ்….”, சாப்பிட்டபடி பதிலளித்தாள்.
“எனக்கும் சொல்லித்தறியா?”,ஆர்வமாக கேட்டான்.
ஒரு நொடி அவனை ஆழமாகப் பார்த்துவிட்டு,”சரி… வீக் எண்ட்ல ஷெட்யூல் போடலாம். இந்த வாரம் நான் ஊருக்கு போகணும். அடுத்த வாரம் இருந்து பாக்கலாம்”, எனக் கூறிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள்.
தர்மதீரன் அவளை ஒரு சில நொடிகள் பார்த்துவிட்டு,” இது என் கார்ட். நம்பர் இதுல இருக்கு. நாளைக்கு இருந்து என் டீம்ல உங்கள மாத்திடறேன்”.
“தேவையில்ல…. நான் அந்த ஜிதேஷ் -அ கம்பெனிய விட்டு அனுப்பிட்டு அப்பறம் யோசிக்கறேன்” .
“அவன் கம்பெனிக்கு இனி வரமாட்டான்”.
“இந்நேரம் அவன் உங்க பிரண்ட் கிட்ட இருந்து தப்பிச்சி இருப்பான்”, எனக் கூறி அவள் வாய் மூடும் முன் சுதாகர் அவனை அழைத்து அவர்களை வேறொரு கும்பல் தூக்கிச் சென்றதாக கூறினான்.
தர்மதீரன் அவளைப் பார்க்கவும் ,” அத்தனை பேரும் வேற ஒருத்தனுக்கு கீழ வேலை செய்யறாங்க… ஏதோ தப்பான வேலை. அந்த பார்சல்ல என்ன இருக்குன்னு பாத்துட்டு அடுத்த ஸ்டெப்ஸ் எடுங்க. எங்க பில் நாங்க பே பண்ணிட்டோம். நீங்க உங்களுக்கு பே பண்ணிக்கோங்க”, எனக் கூறிவிட்டு திரும்பியவள் மீண்டும் அவனைப் பார்த்து,” போலீஸ் கிட்ட போறது நல்லது”, எனக் கூறிவிட்டு நிற்காமல் சென்றாள்.
தர்மதீரன் எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் தான் கட்டவேண்டிய பணத்தைக் கட்டி விட்டு கருணாகரன் இல்லம் நோக்கி சென்றான்.
இடையில் சுதாகர் அந்த பார்சலை பிரித்து பார்த்து விட்டு அதில் இருந்த பொருட்களை வேறு இடத்தில் பத்திரப்படுத்தி வைத்துவிட்டு அவனும் கருணாகரன் இல்லம் நோக்கிச் சென்றான்.