8 – ருத்ராதித்யன்
மகதன் அந்தச் சிறுக்குன்றைத் தாண்டி மறுபக்கம் செல்லும் போது ஆயுஸ் கூட்டம் அவனைப் பார்த்துவிட்டது.
கிஷான், “மிட்டல் நீங்க நாலு பேரும் அந்த பக்கமா சுத்தி வளைங்க…. “, எனக் கட்டளையிட்டு மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கிகள் இரண்டெடுத்து ஆயுஸிடம் ஒன்றைக் கொடுத்தவன், மற்றொன்றுடன் மகதனைப் பின்தொடர்ந்தான்.
மகதன் சுற்றிலும் ஆட்கள் நடமாடும் அரவமும் வாசனையும் உணர்ந்ததும், அதன் பச்சைக் கண்கள் கோபத்தில் மின்னத் தொடங்கின.
அடி வயிற்றிலிருந்து எவரையும் நடுங்க வைக்கும் உறுமல் சத்தத்துடன், பதுங்கி நடக்க ஆரம்பித்து சுற்றிலும் பார்வையைச் சுழற்றியது.
கிஷான் அதன் பின்னால் சற்று தூரத்தில் மறைந்து மறைந்து குறிப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
மிட்டல் சற்று தூரம் சுற்றி புலிக்கு எதிர்பக்கம் வந்தான். ஆயுஸ் பக்கவாட்டில் மரங்களுக்கு நடுவே மறைந்துக் குறிப்பார்த்தான்.
மகதன் சுற்றிலும் மனித வாடையை உணர்ந்து வெறி கொண்டது. இருந்த இடத்தில் இருந்து ஒரே தாவலில் மிட்டலைக் கொன்றது.
அவனுடன் நின்ற நான்கு பேரையும் தாக்கி திரும்பி பார்க்க கிஷான் அதன் கண்ணில் பட்டான்.
கிஷான் ஒவ்வொரு அடியாக பின்னால் நடக்க மகதன் ஒவ்வோர் அடியாக முன்னால் வந்தது.
ஆயுஸ் அதனைச் சுடவும், மகதன் உயரக் குதித்து கிஷானைப் பற்றவும் சரியாக இருந்தது.
மயக்க மருந்து உடலில் ஏறியதால் மகதன் கிஷானின் மேலேயே மயங்கி விழுந்தது.
அப்பொழுதும் கிஷானை நகங்கள் கொண்டு தோளில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியே மயங்கியது.
மகதனின் கனம் தாங்காமலும்,ஏற்பட்ட காயத்தின் வலியிலும் கிஷான் மிகவும் சிரமப்பட்டு மகதனைத் தள்ளப் பார்த்து முடியாமல் அவனும் மயங்கினான்.
ஆயுஸ் அவசரமாக வந்து, “கிஷான்….
எழுந்திரி…. எழுந்திரி”, என மகதனை மற்ற ஆட்களின் துணையோடு தள்ளிக் கிடத்திவிட்டு ஆயுஸை மீட்டான்.
தன் கூட்டத்தில் சிறந்த ஐவரைக் கொன்ற மகதனின் மேல் ஆயுஸிற்கு கொல்லும் அளவிற்கு கோபம் வந்தது. ஆனால் உயிரோடு ஒப்படைக்க கூறிய காரணத்தால் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கிஷானுக்குத் தேவையான முதல் உதவியைத் துவக்கினான்.
“ருதஜித் ஜி….. அந்த புலி என் ஆளுங்கள கொன்னுடுச்சி. என் கிஷானையும் பயங்கரமா தாக்கிரிச்சி….. அத கொன்னுடவா ? “, ஆயுஸ் அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான்.
“அத கொன்னா நீ மட்டும் இல்ல என்னையும் கொன்னுடுவாங்க ஆயுஸ்….. எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்… அத பத்திரமா நான் சொல்ற இடத்துக்கு அனுப்பி வைக்கணும் “, ருதஜித் அதட்டலுடன் அவசரமாகக் கூறினான்.
“ஜி…. எனக்கு பணம் முக்கியமில்லை… என் திறமையான ஆளுங்க 5 பேர இது கொன்னுடுச்சி…. கிஷானுக்கு ஆழமான காயத்த ஏற்படுத்திரிச்சி….”, ஆயுஸ் குரலில் கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“ஆயுஸ்…… நான் பேசிட்டு இடம் சொல்றேன். புலி பத்திரமா இருக்கணும்”, என ருதஜித் அழுத்தமான ஆணையாகக் கூறிவிட்டு அழைப்பை முடித்தான்.
மகதன் அரை மயக்கத்தில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது. அருவம் மகதன் அருகில் வந்து அதனைக் கண் கலங்கப் பார்த்துவிட்டுப் பறந்தது.
கன்னியாகுமரி …..
நம் பாரத தேசத்தின் தென்முனை…. முன்று பக்கமும் கடல் சூழ்ந்த ரம்மியமான இடம்.
குமரி அம்மன்…. அவ்வூரின் மிகப் பிரசித்திப்பெற்ற கோவில் கொண்டுள்ள தெய்வம்.
குமரிப் பற்றி பல தகவல்கள் இன்று மட்டுமல்ல பல காலங்களாகவே நாம் அறியமுடியாத சூட்சமமும், மர்மமுமான இடமுமாக விளங்குகிறது.
அங்கிருந்த பரதவ குப்பத்தில் ஒருவன் ஒருவரிடம் கடலில் செல்ல பேரம் பேசிக் கொண்டு இருந்தான்.
“அண்ணே….. இரண்டாயிரம் தரேன் பெட்ரோல் செலவும் நானே பாத்துக்கறேன்…. “, அவன்.
“முடியாது தம்பி…. அந்த இடம் ரொம்பவே ஆபத்தானது….. அதுவும் இல்லாம அது எல்லைல இருக்கு அந்த பக்கம் போனாலே பக்கத்து நாட்டுக்காரன் சுட்டு தள்ளிடுவான்ப்பா…. நீ அந்த இடத்த தவிர வேற இடம் சொல்லு”, படகுக்காரர்.
“சரிண்ணே…. ஐஞ்சாயிரம்… எல்லா செலவும் என்னோடது… இப்ப என்ன சொல்றீங்க?”, அவன்.
“தம்பி நீ பத்தாயிரம் குடுத்தாலும் இங்க யாரும் அந்த இடத்துக்கு வரமாட்டோம். நீ கிளம்பு”, என அவர் அவனின் பேரத்திற்குப் படியாமல் மறுத்தனுப்பினார்.
“சே….. எவனும் வரமாட்டேங்கிறானுங்க….. எப்படி அந்த இடத்துக்கு போறது”, என தனக்குத் தானே பேசியபடி கடலலையில் கால்களை நனைத்தான்.
“டேய்… நிலன்….. “, என ஒருவன் அழைத்தபடி ஓடி வந்தான்.
“டேய்……”, என அழைக்க இவன் திரும்பாமல் கடலையே வெறித்தபடி நின்றிருக்க, ஓடி வந்தவன் முதுகில் தட்டினான்.
“டேய் நிலன்…. கூப்பிடறது காதுல விழல? வாடா உனக்காக தான் எல்லாரும் காத்திருக்காங்க…. அப்பறம் அந்த பேரிக்காய்
மண்டையன் கத்த ஆரம்பிச்சா ஊர் போய் சேந்தாலும் நிறுத்தமாட்டான்”, என வந்தவன் அவனை அழைத்துச் சென்றான்.
நன்னிலன் ….. வழக்கமான பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவன். மனதில் வேறு ஆசை இருந்தாலும் பெற்றோர் ஆசைக்காக படித்துக் கொண்டிருப்பவன்.
திருச்சியில் ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் மூன்றாமாண்டு பயில்கிறான்.
சமீபகாலமாக அவனின் தேடல் எதையோ அவனுக்கு உணர்த்த முற்படுகிறது.
அதன் பலனாக திருவானைக்காவல் சென்ற போது அவனுக்கு ஓர் துணிச்சுருல் கையில் கிடைத்தது.
குடும்பத்துடன் திருவானைக்காவலில் தரிசனத்தை முடித்து பிராகாரம் சுற்றி வரும்பொழுது, ஒரு பழுத்த கிழம் தட்டுத்தடுமாறி கீழே விழும் சமயம் இவன் தாங்கிப் பிடித்து அவரை ஆசுவாசப்படுத்தினான்.
“ரொம்ப நன்றிப்பா….. “, எனக் கூறினார் பெரியவர்.
“இருக்கட்டும் தாத்தா… கூட துணைக்கு யாரையும் அழைச்சிட்டு வரலியா? தள்ளாடுற வயசுல இப்படி வந்து இருக்கீங்க?”, என ஆசுவாசம் படுத்தியபடியே கேட்டான் நன்னிலன்.
“இது ரொம்ப கால தேடல் தம்பி…. நமக்கு சுமையாவோ, நாம ஒருத்தருக்கு சுமையாவோ இருந்தா தேடறது அத்தனை சீக்கிரம் கிடைக்காது…..”, என தத்துவம் பேசினார் பெரியவர்.
“ஹாஹாஹா….. சரிதான்… இத்தனை காலம் நீங்க சுமையா இருந்தீங்களா? இல்ல உங்ககிட்ட சுமை இருக்கா?”, என சிரித்தபடிக் கேட்டான் நன்னிலன்.
அப்படி அவன் கேட்டதும் அவனைக் கூர்ந்து பார்த்தவர் சட்டென்று தன் பையில் இருந்து ஒரு துணிச் சுருளை அவனிடம் கொடுத்துவிட்டு, “என் சுமைய இறக்கிட்டேன். நான் கிளம்பறேன்”, என அங்கிருந்து வேகமாக எழுந்து கூட்டத்தில் மறைந்து போனார்.
இவன் கையில் இருக்கும் துணிச்சுருளைப் பார்த்துவிட்டு அவரைத் தேடினான். அந்த கூட்டத்தில் அவரைக் காணவில்லை.
பின் அவனே அதை தன் பையில் பத்திரப்படுத்திக் கொண்டு தன் குடும்பத்தினருடன் வீடு வந்து சேர்ந்தான்.
“ஹேய் நிலன்….. என்னடா அப்பப்ப எங்கயோ போயிட்ற…. “, என நண்பன் விவேக் கேட்டான்.
“ஒன்னுமில்ல டா…. வா”, என தன் கல்லூரி கூட்டத்தில் ஐக்கியமானான்.
அனைவரும் குமரி அம்மனை தரிசிக்க காத்திருந்தனர்.
அடடா……
என்ன அழகு?
குமரித்தாய் நம் கண் முன்னே பாவாடை சட்டையில், ஜொலிக்கும் மூக்குத்திப் போட்டு, சர்வ அலங்காரத்தில் மந்தகாச புன்னகையோடு நிஜத்தில் நிற்பது போலவே இருந்தது.
நன்னிலன் தன்னை மறந்து குமரித்தாயை கையெடுத்துக் கும்பிட்டு மனமெங்கும் பரவசம் பரவ கண் கலங்க நின்றிருந்தான்.
“என்னடா பக்தி பரவசத்துல இருக்கியா? முன்ன எல்லாம் கோவில் போலாம்னு சொன்னாலே வரமாட்டேன்னு அடம்பிடிப்ப வந்தாலும் ஒரு சல்யூட் வச்சிட்டு அந்த பக்கம் போவ…. இப்ப இப்படி நிக்கற…. என்னடா நடக்குது?”, என விவேக் கேட்க நன்னிலன் அமைதியைப் பதிலாகக் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.
“நிலன்…..”, என ஒருத்தி அழைக்க திரும்பினான்.
“ஹேய் நிலன்…. போட்டிங் போகணும் பசங்கள நீ கைட் பண்ணு… மேம் கூட நாங்க அங்க நிக்கறோம். சார் டிக்கெட் எடுக்க போக உங்கள கூப்பிட்டாரு”, எனக் கூறி அவள் சென்றாள்.
“நிலன்… என்னடா அமைதியா இருக்க?” , விவேக்.
“எனக்குள்ள நிறைய மாற்றம் நடக்குது டா… எனக்கு என்னனு சொல்லத் தெரியல…. ஏதோ ஒன்ன நான் தேடறேன்…. அது இங்க கிடைக்கும்னு தோணுது…. “, எனக் கூறி பெருமூச்செறிந்தவன், “சரி வா டிக்கெட் எடுக்க போலாம்”, என அவனைத் தன்னோடு அழைத்துச் சென்றான் நன்னிலன்.
இங்கே மேகமலையில் வளைகாப்பு விழா ஆரம்பிக்க சிரஞ்சீவ் இதழியைக் கைப்பிடித்து அழைத்து வந்து மணையில் அமரவைத்து தானும் அருகில் அமர்ந்தான்.
ஆருத்ரா மனதிற்குள் அந்த சூழலையும், அங்கிருப்பவரையும் இரசித்தாலும் கண்களில் கூட அதை வெளிக்காட்டாது சாதாரணமாகப் பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருந்தாள்.
கயல் கூறக் கூற வெண்பாவும், யாத்ராவும் அனைத்தையும் அவ்விடத்தில் ஏற்பாடு செய்தனர்.
வெண்பாவின் தாயும் கஜேந்திரனுக்கு ஒரு பக்கம் வேலைக் கூறி செய்துக் கொண்டிருக்க, வயதிலும் மனதிலும் மூத்தோரை அழைத்து விழாவைத் தொடங்கக் கூறினார் தமிழன்பன்.
பின்னர் வரிசையாக அனைவரும் இதழிக்கும், சிரஞ்சீவ்விற்கும் நலுங்கு வைத்து, வளைப்பூட்டி ஆசிர்வதித்தனர்.
தமிழன்பன் ரணதேவ் விக்கிரமரை ஆசிர்வதிக்க அழைக்க, அவர் ஆருத்ராவுடன் சென்றார்.
“போம்மா…..”, என அவளை முன்னே அனுப்பினார்.
தான் கொண்டு வந்திருந்த தங்க வளையல்களை எடுத்து இதழியின் கைகளில் போட்டு விட்டு அங்கிருந்த கண்ணாடி வளையலும் அணிவித்து நலுங்கு வைத்து வாழ்த்துக் கூறினாள்.
ரணதேவ் நலுங்கு வைத்து ஆசிர்வதித்தார்.
தமிழன்பனும் கயலும் அவர்கள் இருவரையும் நன்றாக கவனித்துக் கொள்ளும்படி கூறி அர்ஜுனிடம் சாப்பிடும் இடம் அழைத்துச் செல்லக் கூறினார்.
“வாங்க சார்…. வாங்க மேம்….”, என அவனும் அவர்களை அழைத்துச் சென்றான்.
“சார் வேணாம் தம்பி தாத்தான்னே கூப்பிடுங்க…. என்ன பண்றீங்க நீங்க? உங்க அண்ணன் கூடவே தொழில் பண்றீங்களா?”, ரணதேவ் பேச்சு கொடுத்தார்.
“இல்ல தாத்தா. நான் வேலையில் இருக்கேன்…. அண்ணா தான் இங்க பாத்துக்கறான்”, அர்ஜுன் மென்னகையுடன் பதிலளித்தான்.
“என்ன வேலை தம்பி பாக்கறீங்க?”, ரணதேவ்.
“சென்ட்ரல் கவர்மெண்ட் ஜாப் தாத்தா…… ஆதி…..”, என பதிலளித்து ஆதியை அழைத்தான்.
“வாங்க தாத்தா…. நான் பாத்துக்கறேன் நீ ஸ்டேஜ் போ “, என அவனை அனுப்பி வைத்தான்.
“இவங்க என் பேத்தி ஆருத்ரா”, என ரணதேவ் இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
“வணக்கம் மேடம்…. எங்க வீட்டு விஷேசத்துக்கு வந்தது ரொம்ப சந்தோஷம்…. பரத்….. அந்த பக்கம் கார்னர்ல இரண்டு சேர் இருக்கா?”, ஆதி.
“வீட்லயே விஷேசத்த நல்லா ஆர்கனைஸ் செஞ்சிருக்கீங்க. ஏற்பாடு எல்லாமே நல்லா இருக்கு”, ஆருத்ரா.
“ரொம்ப நன்றிங்க. ஒரே தங்கச்சி அவளுக்கு எல்லாமே நல்லா செய்யணும்னு எங்களோட ஆசை… இப்படி வாங்க”, என அவர்கள் அமர இடம் ஒதுக்கி அழைத்துச் சென்று அமரவைத்தான்.
“கஜா….. ஸ்வீட் கொண்டு வா”, ஆதி.
“ஸ்வீட் யாத்ராகுட்டி கிட்ட இருக்கு ஆதி”, கஜா அந்த பக்கம் இருந்து பதில் கொடுத்தான்.
“பரத் … இங்க பாத்துக்க வரேன்… யாது எங்க?”, எனக் கூறி யாத்ராவைத் தேடினான்.
அவன் அந்த பக்கம் சென்றதும் கண்மயாவுடன் யாத்ரா இந்த பக்கம் வந்து பரிமாற ஆரம்பித்தாள்.
“கண்மணி….. நீ இந்த ஸ்வீட் வை… நான் பால்கோவா வைக்கறேன்”, என இருவரும் வைத்துக்கொண்டு வந்தனர்.
யாத்ரா பால்கோவா இலையில் ஒன்றும் தன் வாயில் ஒன்றுமாக வைத்தபடி வந்தாள்.
சரியாக ரணதேவ்விற்கு வைத்து ஆருத்ராவிற்கு வைக்கும்போது ஸ்வீட் முடிந்து இருந்தது.
வாயில் ஸ்வீட்டை மென்றபடி, “அத்தான்….. பால்கோவா முடிஞ்சி போச்சி இன்னொரு பாக்ஸ் அனுப்புங்க”, எனக் கத்தினாள்.
ஆதி முறைத்தபடியே வந்து, “உன்கிட்ட யாரு ஸ்வீட் குடுத்தா? வந்ததுல இருந்து இரண்டு பாக்ஸ் ஸ்வீட் நீயே காலி பண்ணிட்ட…. டேய் கஜா…. இளாவ கூப்பிடு டா”, எனக் கத்தினான்.
“அத்தான்…. இப்படியெல்லாம் பொய் பேசாதீங்க….. நான் கொஞ்சமா தான் வாயிலே போட்டேன். கஜாவும் பரத்தும் தான் அதிகமா சாப்டாங்க.. வேணும்னா நீங்க என் கண்மணிய கேளுங்க”,என கண்மயாவை இழுத்தாள்.
கண்மயா சிரித்தபடி ஆதியைப் பார்க்க, அவனும் மென்னகையோடு கஜா கொண்டு வந்த ஸ்வீட் பாக்ஸை திறந்து ஆருத்ராவிற்கு வைத்துவிட்டு நகரப்போனான்.
“அத்தான் நில்லுங்க நில்லுங்க…. இந்த லைன் நான் தான் ஸ்வீட் வச்சிட்டு இருக்கேன். நான் வைக்கலன்னா இவங்க பீல் பண்ணுவாங்க.. குடுங்க நானும் ஒன்னு வைக்கறேன்”, என ஒன்றை ஆருத்ரா இலையில் வைத்துவிட்டு ஆதி வைத்ததை எடுத்துக் கொண்டாள்.
“ஹேய்….”, என ஆதி சங்கடமாக ஆருத்ராவையும், ரணதேவ்வையும் பார்க்க இருவரும் யாத்ராவின் செய்கையில் சிரித்தபடி இருந்தனர்.
“யாதும்மா…..”, ஆதி பல்லைக் கடிக்க , “யாது…. இந்தாங்க”, என ஆருத்ரா தானே அந்த ஸ்வீட்டை எடுத்து அவளுக்கு ஊட்டினாள்.
அவள் செய்ததை ரணதேவ் ஆச்சரியம் பொங்க பார்த்துக் கொண்டு இருந்தார்.
அர்ஜுனும் நந்துவும் அவ்விடம் வர ஆருத்ரா யாத்ராவிற்கு ஸ்வீட் ஊட்டுவதைப் பார்த்துக்கொண்டே வந்தனர்.
ஆருத்ரா தன் தாய் தந்தையர் இறந்த பிறகு, அவரையன்றி யாரிடமும் இளகிய மனதோடு நடப்பதில்லை. அப்படிப்பட்டவள் இன்று யாரென்றே அறியாத பெண்ணிற்கு ஊட்டிவிடுவதை ஆச்சரியமும், சந்தோஷமும் பொங்கப் பார்த்தார்.
“தேங்க்யூ சோ மச் குயின்”, என யாத்ரா நன்றியுரைத்தாள்.
“நான் ஆருத்ரா….. ”
“நான் யாத்ரா….. நீங்க ரொம்ப அழகா கம்பீரமா இருக்கீங்க…. உங்க அட்டையர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு….”, யாத்ரா மனதில் இருப்பதைக் கூறினாள்.
“நீங்க குழந்தை தனமான அழகோட இருக்கீங்க. வாங்க நீங்களும் சாப்பிடலாம்… எல்லாரும் ஒன்னா சாப்பிடலாமே கூட்டம் குறைஞ்சிடிச்சில்ல”, என ஆருத்ரா கேட்கவும், யாத்ரா முதலில் ஆருத்ரா அருகில் அமர்ந்தாள்.
மற்றவர்களையும் அருகிலும் எதிரிலும் அமரவைத்து சாப்பிடக் கூறி, ஆருத்ராவிடம் கதை அளந்தபடியே சாப்பிட்டாள்.
ரணதேவ் ஏதும் பேசாமல் தன் பேத்தியின் முகத்தில் இருக்கும் சிரிப்பை இரசித்தபடிச் சாப்பிட்டு முடித்தார்.
“யாத்ரா… உன்கூட டைம் போனதே தெரியல. இன்னும் இரண்டு நாள் நான் தனுப்பா கூட தான் இருப்பேன். கண்டிப்பா வீட்டுக்கு வா. கண்மயா நீயும் வரணும்”, என தன் விசிடிங் கார்ட்டைக் கொடுத்தாள்.
பின் அனைவரிடமும் விடைபெற்று, இல்லம் வந்த பின்னும் ஆருத்ரா முகத்தில் புன்னகை குறையாமல் இருந்தது.
“ஐயா….. மிதிலன் வந்து இருக்கானுங்க….”, என வேலன் வந்து அழைத்தார்.