84 – ருத்ராதித்யன்
கிழக்கு மலைகளில் இருந்து வெளியே வந்ததும் நரசிம்மனும், மகதனும் தென்கிழக்கு திசை நோக்கி தங்களது பயணத்தை தொடர்ந்தனர். அவர்களை தேடி சென்ற சேயோன் ஒரு நாள் பொழுதை காடுகளில் கழித்து விட்டு இல்லம் சென்றான். அவனைத் தேடி அரசனின் பணியாளும் வந்து நின்றான்.
“அரசர் தங்களை உடனே வரச்சொன்னார்..” பணியாள்.
“இரண்டு நாழிகையில் வருகிறேன். இப்போது தான் காட்டில் இருந்து வந்தேன் என்று அரசரிடம் தெரிவி..” எனக் கூறியவன் அவசரமாக குளித்து உடைமாற்றிக் கொண்டு தன் ஆட்களில் சிலரை அழைத்து காட்டினில் வேட்டையாடிய மிருக உடல்களை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்லக் கூறிவிட்டு அரசரைக் காண விரைந்தான்.
“தந்தையே.. அரசர் வரச்சொல்லி ஆள் அனுப்பியிருக்கிறார்.. நான் செல்கிறேன். தாங்கள் இதை மட்டும் இன்று முடித்து விடுங்கள் என்று ஓலை ஒன்றை அவரிடம் கொடுத்துவிட்டு குதிரையில் ஏறிச் சென்றான்.
அரச கோட்டையை அடைந்ததும், நேராக அரசரின் அந்தரங்க அறைக்கு சென்றான். அங்கே அரசகேசரியுடன் ஒரு மந்திரவாதி நின்றுக் கொண்டிருந்தார். உடலில் பல மிருகங்களின் எழும்பும், மனிதனின் முதுகெழும்பை மாலையாக கோர்த்து சரம் சரமாக கழுத்தில் அணிந்திருந்தார். தரை தொடும் ஜடாமுடியும், சிறுத்தையின் தோலை இடையில் கட்டியிருந்தார். அவர் உடலில் நீர் பட்டு பல வருடங்கள் இருக்கும் என்று யூகித்தபடி சேயோன் அரசனின் முன் சென்று நின்றான்.
“வா சேயோன்.. எங்கே சென்றிருந்தாய் நேற்று உன்னை காணவில்லையே?”
“தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றும் முயற்சியில் இருந்தேன் அரசே.. தாங்கள் உடனடியாக வரும்படி ஆணையிட்டதாக கூறினார்கள். இல்லம் சென்று சேர்ந்தவுடன் கிளம்பி வந்தேன்..” என பணிவுடன் அவனருகில் வந்து கூறினான்.
“நல்லது.. இவர் வடநாட்டில் இருந்து வந்திருக்கிறார். நமது யுவராஜரின் குரு.. இவர் தங்க ஏற்பாடு செய்..”
“இல்லை.. வனத்தில் எனக்கு விருப்பப்படும் இடங்களில் தங்கிக்கொள்வேன். மிருகத்திற்கு அஞ்சாத இருவரை என்னுடன் அனுப்பு போதும். உயிர்பலிக்கு தேவையான ஆயத்தங்களை ஆரம்பி.. யுவராஜன் வந்ததும் பூஜைகள் தொடரும்.” எனக் கூறியபடி அந்த ஜடாமுடிதாரி அங்கிருந்து சென்றார்.
அரசகேசரி அவரின் பாதம் பணிந்து எழுந்து அவரை வழியனுப்பிவைத்தான். இந்த விஸ்வக்கோட்டையில் எங்கும் அவர் செல்லலாம் என்ற ஓலையுடன் இரு வீரர்கள் அவரின் பின்னே ஓடினர்.
“அரசே..”
“நமக்கு நிறைய வேலைகள் இருக்கிறது சேயா.. என்னுடன் வா..” என தனது அறைக்கு சென்றவன் அங்கே ஒரு இரண்டு ஆள் உயர கரையான் புற்றை தரையோடு பெயர்த்து எடுத்து வந்து உப்பரிகையில் வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
“அரசே.. எதற்கு இதை இங்கே வைக்கிறார்கள்?” சேயோன் குழப்பத்துடன் கேட்டான்.
“விஷயம் இருக்கிறது பொறு.. செம்மண் நிறைய கொண்டு வந்து அடியில் நிரப்புங்கள். இந்த மூலிகைகளை மருத்துவ துறையில் உடனடியாக கொண்டு வரச்சொல்லுங்கள்..” என ஒரு ஓலையும் கொடுத்து ஆட்களை அனுப்பிவிட்டு அறைக் கதவை சாற்றும்படி சேயோனிடம் கூறினான்.
அரசகேசரியின் முகத்தில் வழக்கத்தை விட தேஜஸ் அதிகமாக இருப்பதை வந்ததும் உணர்ந்த சேயோன், அவன் கூறியபடி அனைத்தும் செய்துவிட்டு அருகே வந்து நின்றான்.
“இன்று தங்களின் முகத்தில் சந்தோஷக்களை தாண்டவமாடுகிறதே.. என்ன நல்ல செய்தி அரசே?”
“கூறுகிறேன்.. அதற்கு முன் இந்த பெட்டியை திறந்து உள்ளிருக்கும் கூடையை எடுத்து அந்த புற்றுக்கு அருகே கொண்டு வா..” எனக் கூறியவன் தன் கைகளில் பட்டு துணியை நன்றாக சுற்றிக்கொண்டு தலைக்கும் போரில் அணியும் கவசத்தை அணிந்துக் கொண்டான்.
ஏதோ விபரீதமாக இதில் இருக்கிறது என்பதை புரிந்துக்கொண்ட சேயோன் தானும் ஒரு கவசத்தை எடுத்து அணிந்து கொண்டு கைகளுக்கு துணியை சுற்றிக் கொண்டு அந்த கூடையுடன் அரசனிடம் சென்றான்.
மூன்று அடி உயரமும் அகலமும் கொண்டு, சதுரமான வடிவமைப்பில் இருந்த அந்த கூடைக்குள் நிறைய பாம்பு குட்டிகள் படுத்திருந்தன.
“அரசே.. பாம்பினை தங்கள் அறையில் வைத்துக் கொள்ளப் போகிறீர்களா? இது அபாயம்.” அந்த கூடையினை திறந்ததும் பார்த்த காட்சியைக் கண்டு கூறினான்.
“சத்தம் போடாதே.. இவை நேராக நமது குடலுக்குள் சென்றுவிடும்..”
“குடலுக்கா?” நெஞ்சில் உதித்த அச்சத்தினால் சத்தமே வராமல் வெறும் வாய் அசைப்பில் கேட்டான்.
“ஆம். இவை வாழ்நாளில் மொத்தமே மூன்று மனிதரின் குரலை தான் கேட்க விரும்புமாம். வேறு யாரின் குரலை கேட்க நேர்ந்தாலும், அவர்களின் வாயின் வழியாக குடலுக்கு சென்று, அவரை தின்று வளருமாம். அப்படி ஒரு மனிதனை இது தின்றால் ஒரே நாளில் 2 அடி வளருமாம். அப்படி இது எத்தனை மனிதனை தின்கிறதோ அதற்கு ஏற்ப அதன் வளர்ச்சி அதிகரிக்கும். மிருகங்களை தின்றால் அதற்கு ஏற்ப வளர்ச்சி கூடுவதும் குறைவதும் இருக்கும். இது பெருங்கடலில் இருக்கும் பாம்புத் தீவில் இருந்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். இவை அதிசயமும், ஆபத்தும் அதிகமாக கொண்ட பாம்பு இனத்தை சேர்ந்தவை ..”
சேயோன் மீண்டும் பேச ஆரம்பிக்கும்போது அமைதியாக இரு என்று கூறிவிட்டு பாம்பு கூட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து அந்த புற்றுக்குள் விட்டுவிட்டு இருவரும் வெளியே வந்தனர்.
“அரசே.. இத்தனை ஆபத்தான பாம்புகளை தாங்கள் ஏன் இங்கே வைக்க வேண்டும்? தனியாக ஓர் அறையில் வைத்துக் கொள்ளலாம் அல்லவா?”
“இல்லை இவை நம்மோடு வளர்ந்தால் தான் நமது உணர்வுகளைப் புரிந்து, நமது எண்ணங்களின் அலைவரிசையை புரிந்து நடந்து கொள்ளும். இவைகள் எங்களது பாதையில் பெருமளவு உதவியாக இருக்கும் என்று யுவராஜன் இங்கே கொடுத்து அனுப்பினான். அவனும் விரைவில் இங்கே வந்து விடுவான். நமக்கு நேரம் வெகு குறைவாக இருக்கிறது. நீ நேற்று சென்ற காரியம் என்ன ஆனது?”
“நேற்று இங்கே வந்து சென்றது யுவராஜர் நரசிம்மர் தான் அரசே.. உடன் அந்த பச்சை கண் கொண்ட புலி. மகதன் எனும் பெயர் கொண்டு அழைக்கிறார்கள். அந்த புலியை குறி வைத்து அடித்து இருக்கிறான் ஒரு சிறுவன். ஆனால் நொடிக்கும் குறைவான நேரத்தில் தன்னை அது தற்காத்து கொண்டிருக்கிறது. அதன் புத்திசாலித்தனம் நாம் எண்ணியும் பார்க்காத அளவிற்கு இருக்கிறதாம். இறந்தது போலவே பல நிமிடங்கள் மூச்சை விடாமல் அது படுத்து கிடந்து இருக்கிறது. என் வீரன் ஒருவன் அதன் அருகே சென்று அதன் கண்களை இமை பிரித்து பார்த்திருக்கிறான்..”
“நிஜமாகவா? அத்தனை சாதுர்யம் அந்த புலிக்கு இருக்கிறதா?” அரசகேசரி சந்தேகத்துடன் வினாவினான்.
“ஆம் பிரபு.. அவன் குறி வைத்து தாக்கிய இடத்தை காட்டினான். நானும் அதன் காலடி தடம், படுத்து கிடந்த இடம் அனைத்தும் பார்த்தேன். நன்றாக வளர்ந்த புலி. இணை தேடும் காலம் இது. இணையும் தேடுவதாக தகவல் அறிந்தேன்..”
“ஓஹோ.. இங்கே எந்த கோவிலுக்கு வந்து சென்றான் அவன்?” அரசகேசரி யோசனையுடன் கேட்டான்.
“தெரியவில்லை பிரபு.. நானும் ஒரு நாள் முழுக்க தேடினேன். அந்த அடர்ந்த காட்டினில் எந்த வனதேவி சிலையும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு என் கண்ணில் படவில்லை.. அவர்கள் மட்டுமே அறிந்த ரகசிய கோவில் இங்கே இருக்கலாம் என்று தோன்றுகிறது.. தவிர நமது கோட்டைக்கு ரகசிய பாதைகளும் அவர்கள் வைத்திருக்கலாம். யுவராஜரை காண நினைத்து நான் காட்டிலும், என் தந்தை காட்டு கோட்டையிலும் இருந்தோம். எங்கள் இருவர் கண்கங்களுக்கும் சிக்காமல் ஒரு மனிதனும், ஒரு புலியும் இந்த இடத்தை விட்டு வெளியே சென்று இருக்கிறார்கள் என்றால் இங்கே அவர்களின் ரகசிய சுரங்கமோ, வேறு பாதைகளோ நிச்சயம் இருக்கவேண்டும்..”
“பாதைகள் இருக்கலாம் சேயா.. நான் குருகுலம் சென்று வரும்வரை அவர்கள் தானே ஆட்சி செய்தார்கள். பல விஷயங்கள் நமது கண்களுக்கு தெரியாமல் இங்கு நடந்து கொண்டு தானிருக்கும். அதனால் தான் சுதந்திர நாடாக நாம் வளர வேண்டும் என்று கூறுகிறேன். நிச்சயம் இன்னும் சில காலத்தில் நாம் சுயமாக ஆட்சி செய்து கொள்ளும் சுதந்திர நாடாக மாறுவோம். அதற்காக தானே இத்தனை முயற்சிகளும், ஏற்பாடுகளும், கஷ்டமும், ஆராய்ச்சிகளும்..”
“அரசே எனக்கொரு சந்தேகம்..” சேயோன் தயங்கியபடி கேட்டான்.
“நாம் சுதந்திர நாடாக மாற அவர்களிடம் போர் தானே செய்ய வேண்டும். ஏன் இத்தனை மிருகங்களை ஒன்று சேர்த்து வைக்க வேண்டும்? இந்த பாம்புகள்.. அந்த மந்திரவாதி.. இதெல்லாம்?” என கேட்டவன் அரசகேசரியின் முறைப்பை கண்டதும் அப்படியே வாயை மூடிக் கொண்டான்.
“இதெல்லாம் சொன்னால் உங்கள் யாருக்கும் புரியாது. சொல்வதை செய்து முடி, பின்னால் நடப்பதை பார். யாரும் கற்பனையிலும் செய்திராத விஷயத்தை தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். இன்னும் 7 நாட்கள் தான் யுவராஜர் அபராஜித வர்மர் இங்கே வந்துவிடுவார். எத்தனை வீரர்களை வேண்டுமானாலும் எடுத்துக் கொள். எனக்கு வேலை முடியவேண்டும். பெரிய மிருகங்களை குரு பார்த்துக் கொள்வார். நீ மற்ற விலங்குகளை கொண்டு வந்து சேர்த்து வை. ஒரே இடத்தில் வைக்காமல் பல இடங்களில் பிரித்து வை. நம்மை தவிர மற்ற எந்த சமஸ்தானத்தை சேர்ந்தவனுக்கும் நமது செயல்கள் தெரியக்கூடாது.. புரிகிறதா?”
“புரிகிறது அரசே. தங்களின் கட்டளையின் பேரில் அனைத்தும் செய்து வருகிறேன். நிச்சயம் மீதமிருக்கும் விலங்குகளை 7 நாட்களில் கொண்டு வந்து சேர்ப்பேன்..”
“நல்லது.. நான் கடற்கரை வரையிலும் சென்று வருகிறேன். நீ இன்று அவையை பார்த்துவிட்டு என்னிடம் வா.. உனது தந்தை சாவிலாரையும் அழைத்து வா..” எனக் கூறிவிட்டு தனது ரதத்தில் கடற்கரை நோக்கிச் சென்றான்.
தென்கிழக்கு பக்கமாக தங்களது பயணத்தை தொடர்ந்த நரசிம்மனும், மகதனும் ஒரு நாள் பயணத்தில் நதிகள் சூழும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
“மகதா.. இதோ நமது ஆறுகள் சுற்றி சூழும் இடம் வந்துவிட்டோம். இங்கு நாம் சிறிது உண்டுவிட்டு ஓய்வு எடுக்கலாம். மாலை மலர்கள் சேகரித்து தேவியை தரிசிக்க செல்லலாம்.”
மகதன் அவன் கூறுவதை எல்லாம் காதில் வாங்காமல் தேவி ஆலயம் இருக்கும் இடம் நோக்கி நடந்து கொண்டே இருந்தான். அவனை அழைத்தபடி நரசிம்மனும் மகதன் பின்னாலேயே பல மைல்கள் ஓடி வந்து நதித் தீவு பார்வையில் படும் இடத்திற்கு வந்து நின்றான்.
அங்கே 3 ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வந்து தண்ணீர்க்காடாக காட்சியளித்தது. அந்த ஆறுகளை தாண்டி இருக்கும் நதித்தீவுக்கு எப்படி செல்வதென நரசிம்மன் யோசனையுடன் நிற்க, மகதன் நீரில் குதித்து நீந்த ஆரம்பித்தான். நரசிம்மனும் அவன் பின்னோடு குதிக்க, அந்த தீவினை சுற்றி ஓடிய அத்தனை ஆற்றிலும் நீர் பெருக்கு அதிகமாகி அவர்களை சுழற்றி அடித்துக் கொண்டு சென்றது அந்நதிகள்…