85 – ருத்ராதித்யன்
“மகதா.. நீரின் போக்கில் அடிபடாமல் செல்.. உன் பின்னோடு வருகிறேன்..” நரசிம்மன் கூறிமுடிக்கும் முன் மகதன் வெகுதூரம் நீரினால் அடித்து செல்லப்பட்டான்.
அவ்விடத்தில் ஆறுகள் ஒன்று கலப்பதால் நீரின் போக்கும் ஒரு பக்கமாக இன்றி எதிரும் புதிரும் அடித்துக் கொள்வது போல ஓடிக்கொண்டிருந்தன. அங்கே சுழல்களும் அதிகமாக உருவாகி தன் பக்கம் வரும் அத்தனையையும் உள்ளே இழுத்துக் கொண்டிருந்தன. நரசிம்மன் ஒரு சுழலில் சிக்கி அதிலிருந்து வெளிவரும்போது மீண்டும் இன்னோர் சுழலில் சிக்கிக் கொண்டான்.
நரசிம்மன் அருகே நீரின் அடியே பெரும் பாம்பு ஒன்று சுழலில் சிக்கி புதைமணலில் இருந்து விடுபட முயன்றுக்கொண்டிருந்தது.
நரசிம்மன் கால்களில் அதன் தலை தட்டுப்படவும் அவன் அதனைப் பிடித்துக் கொண்டு, நிலத்தின் பக்கமாக நீந்தத் தொடங்கினான். அது சுமார் நாற்பது அடி நீளம் இருக்கும் பாம்பு, அவன் தரையை தொடும் வரையிலும் அவனுக்கு பிடிமானமாக தனது தலையை கொடுத்தது. அவன் மேலே ஏறியதும் அதன் தலையை பிடித்து இழுத்தான்.
நீரின் வேகமும், நீரோட்டமும் அவனை நீரின் அருகே மீண்டும் இழுத்தன. அந்த பாம்பு நன்றாக சுழலுக்கு அடியில் இருந்த சகதியில் சிக்கிக் கொண்டு அடிதட்டில் இறங்கிக் கொண்டிருந்தது.
நரசிம்மன் பாறையின் பின்னால் அமர்ந்து தனது பலம் மொத்தமும் ஒன்று சேர்த்து பாம்பின் உடல் அதிர்வுகளை வைத்து, அதை கொஞ்சம் கொஞ்சமாக நீரில் இருந்து வெளியே இழுத்தான்.
பாம்பும் தனது உடலை அசைத்து நரசிம்மனுக்கு உதவியது. கொஞ்சம் கொஞ்சமாக தலை பகுதிக்கு மேல் கொஞ்சம் இழுத்து நிலத்தில் கிடத்தினான். அருகே இருந்த மரத்தின் வேரினை பாம்பினை சுற்றிக் கொள்ளும்படி செய்கை செய்ய, பாம்பும் அவனது கையோடு மெல்ல மெல்ல சுற்றி தனது உடலை நிலத்தில் ஸ்திரமாக நிறுத்திக் கொண்டு, மரத்தினை சுற்றத் தொடங்கியது.
பாறைகளின் இடையே இருந்து நரசிம்மன் அதன் உடலை சரியாக நகர்த்திவிட்டு அது மேலே முழுதாக ஏற உதவி கொண்டிருந்தான். அரை நாழிகையில் இருவரும் வெள்ளத்தினை விட்டு முழுதாக நிலம் ஏறி ஆசுவாசமாக அமர்ந்திருந்தனர்.
நரசிம்மனுக்கு அதன் பின்தான் மகதன் எங்கே கரை ஏறியிருப்பான் என்ற எண்ணம் வந்தது. இருவருக்கும் இருக்கும் சங்கேத ஒலி மூலமாக மரத்தின் மேலே ஏறி நின்று ஒலிபெருக்கி மூலமாக ஒலியெழுப்பினான்.
அவனது ஒலிபெருக்கி சுமார் இரண்டு காத தூரம் வரையிலும் ஒலித்தது. மகதன் அந்த தீவின் மறுகோடியில் கரை ஏறி அப்போது தான் நிலத்தில் வீழ்ந்தான்.
மகதன் அந்த ஒலியை கேட்டதும் தானும் உருமினான். அவனது உறுமல் ஒன்றரை காத தூரம் வரையிலும் கேட்கும். மகதனுக்கும் நரசிம்மனுக்கும் ஒரு காதம் அளவே தூரம் இருந்ததால் இருவரும் ஒருவரின் நலனை மற்றவர் ஒலியின் மூலமாகவே அறிந்து கொண்டனர். ஒரு நாழிகை நேரத்திற்கு பின் மெல்ல நரசிம்மன் மகதன் ஒலி வந்த திசையில் நடக்கத்தொடங்கினான்.
அந்த பாம்பும் அவனோடு மெல்ல ஊர்ந்து வந்தது. அதை கண்டவன், “நீ ஏன் என்னுடன் வருகிறாய்?” என பாம்பு மொழியிலியே கேட்டான்.
“நான் உடன் வருகிறேன். எனை ஆபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறாய். உன் தோழனுடன் நீ சேரும் வரையிலும் உடன் வருகிறேன்..”
“சரி.. நீ எந்த வகை பாம்பு? உனை பார்த்தால் மலைப்பாம்பும், கருநாகமும் கலந்தது போல இருக்கிறது. உன் உடலின் மினுமினுப்பு அதீதமாக இருக்கிறது. உடலும் கனத்து இருக்கிறாய்.. விஷம் கொண்டவனா நீ?”
“ஆம்.. ஆனால் விஷத்தை பயன்படுத்தமாட்டோம். நாங்கள் தனி இனம். எங்களது இருப்பிடம் இந்த தீவின் அடிதட்டு நிலம். இது எங்களின் காவல் கோட்டை. மாற்றான் யாரும் இங்கிருந்து எதுவும் எடுத்து செல்ல முடியாது. இந்த நிலப்பகுதியை காப்பதே நாங்கள் தான்..”
“உங்கள் இனம் இங்கே மட்டும் தான் இருக்கிறதா? வேறெங்கேனும் வசிக்கிறார்களா?”
“வடக்கில் இருக்கும் மலை தொடரில் ஒரு சிலர் இருக்கிறார்கள். ஆனால் அங்கே அவர்கள் அழிந்து போனதாக தெரிகிறது. மாதம் ஒருமுறை அங்கிருந்து யாரேனும் இங்கு வந்து தேவியை தரிசித்து செல்வார்கள். கடந்த இரண்டு மாதமாக யாருமே வரவில்லை. அவர்களை தேடி தான் நானும் மேல்நிலத்திற்கு வந்தேன்.”
“என்ன ஆனது?” நரசிம்மன் பரிவோடு கேட்டான்.
“அங்கே யாருமே இல்லை. புதிதாக ஈன்ற குட்டிகளின் தாயை கொன்றுவிட்டு ஒருவன் தூக்கி சென்றான். அந்த குட்டிகளையும் தூக்கி சென்றுவிட்டார்கள்..” என கோபத்துடன் சீரியது.
“யார் அது?” நரசிம்மனும் கோபத்துடன் கேட்டான்.
“அதை நான் அறியமுடியவில்லை. ஒரு குகைக்குள் கொண்டு சென்றுவிட்டார்கள். அந்த குகையினை எந்த மிருகமோ, பாம்போ, ஏன் மனிதனோ கூட நெருங்கமுடியாது. அத்தனை உயரத்தில் சுற்றிலும் பூச்சிகள் அண்டமுடியாத மூலிகைகளை பயிரிட்டு அந்த இடத்தினை மிகவும் ஜாக்கிரதையாக பாதுகாத்து வருக்கிறனர். நிச்சயம் ஏதேனும் அரசனின் கட்டளை தான்.”
நரசிம்மன் உடனே, “நீ சென்றது நவ வர்ம நாடா?” எனக் கேட்டான்.
“இல்லை. அதனை தாண்டி இருக்கும் மற்றொரு மலைநாடு..”
“நவ -வர்ம நாட்டின் எல்லை தானே?”
“ஆமாம்..”
“ம்ம்.. அவனாக இருக்கும் வாய்ப்பு அதிகம்..”
“யாரென்று உனக்கு தெரியுமா?”
“ஓர் கணிப்பு இருக்கிறது ஆனால் முடிவாக தெரிந்து கொள்ளாமல் கூறமுடியாது. ஒருவேளை அவன் அந்த குட்டிகளை கடத்தி சென்று இருந்தால், உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன்.”
“வாக்கு கொடுக்கிறாயா?”
“அக்குட்டிகள் உயிரோடு இருந்தால் நிச்சயமாக கொண்டு வந்து தருகிறேன். இது எனது வாக்கு..”
“அப்படி நீ செய்தால் உன் ஆராய்ச்சிகள் அனைத்திற்கும் நான் உதவி புரிவேன். இதுவும் எனது வாக்கு..” என அந்த பாம்பும் கூறியது.
“உனது பெயர் என்ன?”
“எனது பெயர் சிவநேசன்.. கருஞ்சி பாம்பினத்தின் தலைவன்..”
“நீங்கள் மொத்தம் எத்தனை பேர் இருக்கிறீர்கள்?”
“இங்கே சுமார் இருபதாயிரம் பேர் இருக்கிறோம்… அவற்றில் வயது முதிர்ந்து இறப்பை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் எண்ணிக்கை எட்டாயிரம். அவர்கள் அடுத்த மாத பௌர்ணமியில் தங்களது உடலை விடுத்து வானுலகம் சென்றுவிடுவார்கள்.”
“எட்டாயிரம் பேரும் ஒன்றாகவா?”
“ஆமாம்.. எங்களது கருஞ்சி இனத்தில் கூட்டமாக தான் இறப்பும் பிறப்பும் நிகழும். குறைந்தது சில நூறு குட்டிகள் ஒன்றாக ஒரே நேரத்தில் பிறக்கும். ஒரே நேரத்தில் சில நூறு பேர் இறப்பர். ஆனால் வடக்கில் பிறந்த குட்டிகள் தனித்து பிறந்தன. இப்போது தனித்தும் வளரப்போகின்றன” என கூறிய பாம்பின் கண்களில் வருத்தம் நன்றாகவே தெரிந்தது.
“கவலைப்படாதே.. நான் உங்களை காப்பேன்..”
“ஆதித்ய நாட்டின் இளவரசன் நரசிம்ம யோகேந்திரர் கொடுக்கும் வாக்கு காலம் சென்றாலும் காக்கப்படும் என்பதை அறிவேன்..”
“எனை நீ அறிவாயா?”
“நீ எனது தலையை தான் சுமார் ஒரு நாழிகை பிடித்திருந்தாய். உனது உடலில் ஓடும் ரத்தம் முதல் ஒவ்வொரு நரம்பினையும் நான் அறிவேன். இதே ரத்தவாடை தான் உனது பாட்டானாரும் கொண்டிருந்தார். அவரையும் நான் தலைவன் ஆன புதிதில் சந்தித்து இருக்கிறேன். எங்களுக்கென்று இந்த நிலத்தினை பிரித்து சுற்றிலும் நதிகள் ஓடும்படி செய்தவர் அவர் தான்.”
நரசிம்மன் ஆச்சரியத்துடன் சிவநேசனை பார்த்தான். சிறிது தூரத்தில் மகதன் நடந்து வருவது கண்டு அவனுக்கும் அந்த திசையினை சுட்டிக்காட்டினான்.
“அவனுக்கும் உன்னை அறிமுகம் செய்யவேண்டும் என்னுடன் வருவாய் அல்லவா?”
சிவநேசன் எனும் பாம்பும் நரசிம்மனுடன் மெல்ல நகரத்தொடங்கியது.
மகதன் எதிரே பாம்புடன் நரசிம்மன் வருவது கண்டு வேகமாக தாவி ஓடி வந்தான்.
அவன் வந்த வேகத்தில் சிவநேசனை உருட்டி கொண்டு மரத்தின் இடையே அழுத்தி நிறுத்தினான். சிவநேசன் அவனை தாக்கவில்லை. தன்னை தற்காத்து கொள்ள மட்டும் தனது உடலை சுழற்றி தரையில் அடித்தது.
“மகதா.. நில்..” நரசிம்மன் கர்ஜனையாக கூறினான். அவனது குரலுக்கு கட்டுப்பட்டு மகதன் சிவநேசன் உடலை கவ்வியபடி நின்றான்.
“அவனை காயப்படுத்துவதை நிறுத்திவிட்டு இந்த பக்கமாக வா..”
மகதன் சிவநேசனை ஒரு முறை ஆழ பார்த்துவிட்டு நரசிம்மன் முன்னே வந்து நின்றான்.
“அவன் நமது நண்பன். நாம் காக்கவேண்டிய உயிர். அவனிடம் மன்னிப்பு கேள்..” என நரசிம்மன் கூறியதும் மகதன் முறைத்தபடி சிவநேசனை பார்த்துவிட்டு நரசிம்மனையும் பார்த்தான்.
“ம்ம்.. மன்னிப்பு கேள்.. ஓர் இனத்தின் தலைவன் அவன்.. உன்னையும் என்னையும் விட பல வருடங்கள் மூத்தவன்..”
மகதன் ஓர் நொடி நரசிம்மனை முறைத்துவிட்டு சிவநேசன் அருகே சென்றான். அவனோ இவனை தூக்கி சுழற்றி சருகுகள் நிறைந்த புதரில் வீசினான்.
“சிவநேசா..” நரசிம்மன் கண்டிப்போடு அழைக்க, “இது எங்களின் விஷயம். எங்களின் கணக்கை நாங்கள் முடித்துக் கொள்வோம்..” எனக் கூறிவிட்டு மகதனுடன் சண்டைக்கு சென்றான்.
“பெரிதாக அடிபடக்கூடாது. அவனோடு நான் ஆலய தரிசனங்கள் செய்ய வேண்டும்..”
மகதனும் சிவநேசனும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கி கொண்டனர். ஆங்காங்கே உடலில் இருந்து ரத்தம் வழிந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இருவரும் மல்யுத்தம் செய்து கொண்டிருந்தனர். ஏற்கனவே பெய்திருந்த அதீத மழையில் மரங்கள் எல்லாம் சாய்ந்து இருந்தன. இதில் இருவரும் உருண்டு பிரண்டு சண்டையிட்டதில் பல செடிகளும் கொடிகளும் அவர்களது உடலில் சுற்றிக்கொண்டு நசுங்கின.
ஓர் நாழிகை நீண்ட யுத்தத்தில் இருவருமே வெற்றியும் பெறவில்லை, தோல்வியும் அடையவில்லை. பின் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு நரசிம்மன் அருகே வந்தனர்.
“முடிந்ததா?” நரசிம்மன் உச்சகட்ட கோபத்தில் கேட்டான்.
“உர்….”
“ஷ்..”
“நல்லது.. நான் வருகிறேன்..” எனக் கூறிவிட்டு நெடுநெடுவென நரசிம்மன் அங்கிருந்து கிளம்பினான்.
“வனதேவி ஆலயம் இந்த பக்கமிருக்க தாங்கள் அந்த பக்கம் சென்றால் எப்படி?” சிவநேசன் கேட்கவும் நரசிம்மன் திரும்பி பார்த்தான்.
“நான் தேவியின் காவலன். தங்களை அழைத்து செல்ல வந்திருக்கிறேன். தங்களுடன் வந்த இந்த புலி உண்மையில் உரம் கொண்டுள்ளதா என்றே பரிட்சித்து பார்த்தேன். நல்ல திறம் கொண்டு தான் வளர்த்து இருக்கிறார் மகாராணி.. உடல் எத்தனை இறுக்கினாலும் எழும்பினை நொறுக்கும்முன் உடலை வளைத்து வெளிவந்துவிடுகிறான். நிச்சயமாக நல்ல தேர்வு தான்..”
“அவனை நான் தேர்ந்தெடுக்கவில்லை..”
“அவன் தங்களை தேர்ந்தெடுத்தான். தங்களிடம் வந்திருக்கிறான். உடல் பொருள் ஆவி என அனைத்தும் தங்களுக்கு சமர்பிப்பான். மிகச்சிறந்த தோழன். காப்பான்..” என சிவநேசன் மகதனை பார்த்தபடி கூறியது.
அதன்பின் மூவரும் மலர்கள் சேகரித்துக் கொண்டு தேவியின் இருப்பிடம் நோக்கி சென்றனர். அந்த தீவின் பாறை பிளவில் கீழிறங்கி, ஓர் சுரங்கத்தின் வழியே அரை காத தூரம் நடந்தனர். அது நிலத்தின் அடித்தட்டு. உள்ளே நீரின் மத்தியில் தேவி அம்சமாக வீற்றிருந்தாள்.
நரசிம்மனும், மகதனும் நீரின் உள்ளே மூழ்கி அவளின் பாதத்தில் தலை வைத்து எழுந்தனர். பின்னர் மஞ்சள் நிறம் இல்லாத அத்தனை மலர்களையும் அம்மனுக்கு சாற்றினர்.
மகதன் சிறிது நேரம் நீரில் மிதந்தபடி தேவியை சுற்றி வந்தான்.
ஒரு நாழிகை நேரம் நீரில் அமர்ந்து தியானம் செய்தபின் நரசிம்மன் தலையில் மஞ்சள் நிறப் பூக்கள் விழுந்தது. மொத்தம் 108 மலர்கள் அவன் மேல் விழுந்தன. அத்தனையும் எடுத்து பத்திரப்படுத்தி வைத்தான். இறுதியாக இரண்டு பெரிய மஞ்சள் நிறப்பூக்கள் தேவியின் கைகளில் இருந்து நரசிம்மன் தலையில் விழுந்தது.
நரசிம்மன் யோசனையுடன் சிவநேசனை பார்க்க, “108 மலர்கள் பைரவக்காட்டினை அடைய உதவும். இந்த இரண்டு மலர்கள் தான் உனது அரியாசனத்தின் வாழ்த்து மலர்..” எனக் கூறியது.
“பைரவக்காடா? அங்கே நான் போவேனா?” என நரசிம்மன் அதிர்வுடன் கேட்டான்.