86 – ருத்ராதித்யன்
“ஆம் யுவராஜனே.. உனது வாழ்நாளில் நீ செய்யும் அனைத்தும் சேரும் ஒரே புள்ளி பைரவக்காடு தான். சில நூறு வருடங்கள் முன்னே உனது பாட்டனார் அந்த பாதையைக் கணித்து ஓர் கல்லில் வடித்து வைத்துள்ளார். அவரது மனைவி இறந்துபோனதால் அவரால் அங்கே செல்லமுடியவில்லை. தாம் தம்பதி சமேதராக அங்கே செல்வது உறுதிப்பட்டுவிட்டது. தங்களது தர்மபத்தினி அந்த பாதையை கண்டுக்கொண்டார். இன்னொரு பெண்ணும் அறிந்து கொண்டாள். அவளால் மிகப்பெரும் அதிசயம் நிகழும். ஆனால் அதற்கு முன் நீங்கள் அனைவருமே பல இன்னல்களை சந்திக்க வேண்டும். அதற்கு தங்களது ஆத்மாக்களை தயார் செய்து கொள்ளுங்கள்..”
“ஆத்மாக்களையா?” நரசிம்மன் சந்தேகத்துடன் கேட்டான்.
“ஆம். இது வெறும் உடல் கொண்ட இனம் சம்பந்தப்பட்ட போராட்டம் அல்ல இளவரசே.. இது வலி கொண்ட ஆத்மாக்களின் போராட்டம், அதில் வலி தான் வலிமையாக மாறும். நீங்கள் கண்முன்னே இருக்கும் வாசலை அடையக்கூட தேவையான பலமும், வலிமையும் கொண்டிருந்தால் மட்டுமே உங்களால் அந்த வாசலை தாண்டமுடியும். அது போல தான் இந்த பைரவக்காடும். அதன் சட்டமும், நியாயமும், தர்மமும் இந்த பிரபஞ்சமும் கூட முழுதாக அறிய முடியாது. இது ஒரு நெடும்பயணம். அதிலே பலரும் உடன் வருவர். பலர் பல பரீட்சைகளிலும் தேர்வாகி இறுதிவரை நடக்க வேண்டும். அதன் பின் தான் பைரவக்காட்டின் துவாரமானது தங்களது பாதங்களை அனுமதிக்கும். நினைவில் கொள்ளுங்கள், யாரும் கற்பனையிலும் எண்ணியிராத பல பரீட்சைகள் இனி தொடங்கும். இறுதிவரை செல்லவேண்டுமென்று நினைத்தால், இன்று முதல் நீங்கள் கடைசி அடியில் உங்களுடன் இருக்கவேண்டிய உயிர்களை பாதுகாக்க ஆரம்பிக்க வேண்டும். வெள்ளம் வடிந்துவிட்டது. இனி தாங்கள் இங்கிருந்து கிளம்பலாம். இனி எங்கும் இரவில் தங்காமல் மீதமிருக்கும் 4 தேவிகளையும் ஓய்வில்லாமல் தரிசித்து தங்களது கோட்டைக்கு செல்லுங்கள்..” எனக் கூறிய சிவநேசன் அவர்களை தன் உடலில் சுற்றி தூக்கி எதிரே தெரிந்த கரையில் இறக்கிவிட்டு நீருக்குள் மறைந்தது.
“மகதா.. இது என்னடா?” என நரசிம்மன் கேட்டான். மகதன் அவன் அருகே வந்து அவன் உயரத்திற்கு எழுந்து தோளில் கால் வைத்து நின்று அவனது இதயத்தை நாவால் நக்கினான்.
அவனது அச்செயல் நரசிம்மன் மனதில் பெரும் பொறுப்பையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்த அவனும் மகதனை கட்டியணைத்து நெற்றியில் முத்தம் கொடுத்தான்.
இருவரும் சில நொடிகள் மற்றவரின் ஆறுதலை உள்ளுக்குள் நிரப்பிக் கொண்டனர். இரு நிமிடங்களில் மகதன் தன்னிலை திரும்பி முன்னால் வேகமாக ஓடினான்.
“அடேய் மகதா .. நில்லடா.. நானும் வருகிறேன்.” என நரசிம்மனும் பின்னாலேயே ஓடினான். அன்று நள்ளிரவில் நிலங்களை தாண்டி அந்தக் கடற்கரை வந்து இருவரும் நின்றனர்.
அங்கிருந்து 5 காத தூரத்தில் பெருங்கடல் நடுவே ஓர் மலை உயர்ந்து நின்றுக் கொண்டிருந்தது. அங்கே தான் கடல் ஆளும் தேவி வீற்று இருக்கிறாள்.
“மகதா.. இங்கிருந்து நாம் அந்த மலைக்கு செல்ல வேண்டும். 5 காத தூரம் நீரில் நீந்துவது சாத்தியமல்ல. நமக்கு அதற்கான நேரமும் இல்லை. ஆதலால் நான் கட்டுமரத்தினை தயார் செய்கிறேன். அதற்குள் நீ உணவுக்கு ஏதேனும் வேட்டையாடி கொண்டு வா..” என அவனிடம் கூறிவிட்டு அங்கிருந்து மூங்கில் மரங்கள் வளர்ந்திருக்கும் திசைநோக்கி நடந்தான்.
மகதனும் கரையின் ஓரமாகவே நடந்து மிருகங்கள் வருகிறதா என்று பார்த்தான். ஆமைகள் முட்டை வைக்கும் இடம் வந்த மகதன் அங்கே பெரிதான ஆமை இருக்கிறதா என்று பார்த்தான். சிறிய ஆமைகள் தான் அங்கே பரவிக்கிடந்தன. அது ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் காலமாதலால் கரை ஓரத்தில சில காத தூரங்கள் ஆமைகள் பரவிக்கிடந்தன. அங்கே பல நூறு ஆமை முட்டைகள் மணலுக்குள் இருந்தன.
மகதன் அவற்றில் சிலத்தை வாயினால் கவ்விக்கொண்டு வந்து நெருப்பின் அருகே வைத்தான். நரசிம்மன் சில மரங்களை வெட்டிக்கொண்டு வந்து மணலில் கிடத்தி நெருப்பு மூட்டி ஒன்றாக மரங்களை வரிசைப்படுத்தி, மரத்தின் வேரினால் இருக்கிக் கட்டிக் கொண்டிருந்தான். முயல்கள் ஓடும் சத்தம் மகதன் அறிந்ததும் அந்த திக்கில் சட்டென ஓடினான்.
நரசிம்மன் சிந்தனையுடனே அந்த முட்டைகளை ஆராய்ந்து இன்னும் உருபெற ஆரம்பிக்காத முட்டைகளை மட்டும் நெருப்பில் சுட ஆரம்பித்தான். உருபெற ஆரம்பித்து இருந்த முட்டைகளை அங்கே ஒரு இடத்தில் குழி தோண்டி வைத்துவிட்டு, பழங்களை பறித்து வந்து உண்ண ஆரம்பித்தான்.
மகதன் சில காட்டு முயல்களை வேட்டையாடி உண்டுவிட்டு முகத்தில் ரத்தக்கரையுடன் நரசிம்மன் முன்னே வந்து நின்றான்.
“சென்று நீராடி ரத்தக்கரையை கழுவி வா.. எனக்கும் ஏதேனும் வேட்டையாடி கொண்டு வந்தாயா?”
மகதன் லேசாக உருமியபடி நீருக்கு சென்று நீரடிவிட்டு கரைக்கு வந்தான்.
“என்னடா எனக்கு ஏதேனும் கொண்டு வந்தாயா எனக் கேட்டால் உருமிவிட்டு போகிறாய்? ஆளுக்கு ஒரு வேலை செய்தால் தானே விரைவாக கோட்டை செல்ல முடியும்.. உனக்கு சிவநேசன் கூறியதில் ஏதேனும் புரிந்ததா?” என அவன்மேல் படுத்தபடி கேட்டான்.
அப்போது கரையின் ஓரத்தில் யாரோ ஓடிவரும் காலடி சத்தம் கேட்டது. இருவரும் இருட்டினைக் கிழிக்கும் பார்வையை அந்தப் பக்கம் செலுத்தினர்.
சிலர் ஒரு பெண்ணை துரத்தியபடி வந்தனர். அப்பெண் அவர்களிடம் இருந்து எப்படியேனும் தப்பிவிட முயன்று தன் உடல் கொண்ட பலம் மொத்தமும் கால்களில் செலுத்தி ஓடிக்கொண்டிருந்தாள். அதைக் கண்ட நரசிம்மன் மகதனை அந்த ஆட்களை தடுக்க ஏவிவிட்டு, அந்த பெண்ணை பாதுகாக்க மறுப்பக்கம் ஓடினான்.
சிறிது நேரத்தில் கால்தடுக்கி அந்த பெண் கீழே விழுந்தாள். அவளை துரத்தி வந்தவர்கள் சிரிப்புடன் அவளை நெருங்கினர்.
“இப்போது என்ன செய்வாய்? உன் அக்காளை நான் தான் கொன்றேன் என தலைவரிடம் கூற சென்றாயே இப்போது இங்கேயே சிதிலமடைந்து மண்ணோடு மண்ணாக போகிறாய். அதற்கு முன் எங்களை சந்தோஷப்படுத்திவிடு நுவலியம்மை. இளமை அரும்பும் வயதில் உனக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை? இந்த பகுதியில் எனை மீறி நீ வாழ முடியுமா?” என ஆணவத்துடன் வினவியவனை மகதன் ஒரே தாவலில் கீழே சாய்த்து படுத்துக் கொண்டான். பின்னாலேயே நரசிம்மன் வந்து நுவலியம்மை என்ற பெண்ணை எழுப்பிவிட்டு தனக்கு பின்னால் நிறுத்திக் கொண்டான்.
“பெண்ணே.. யார் இவர்கள்? எதற்கு உனை துரத்தி வருகிறார்கள்?”
“ஐயா.. அவன் என் அக்காளை திருமணம் செய்து மூன்று மாதம் முன்பு அழைத்து சென்றான். நான் இன்று என்னுடன் பிறந்தவளைக் காண அங்கு சென்றபோது தான் அவளை கொன்றுவிட்டதாக இவன் இவர்களிடம் கூறி நகைத்துக் கொண்டிருந்தான். அதனால் தான் இவனைப் பற்றி புகார் கொடுக்க எங்கள் தலைவரை சந்திக்க வந்து கொண்டிருந்தேன். இவர்கள் எனை தடுத்து என்னையும் கொல்ல முயல்கிறார்கள்.. எனை காப்பாற்றுங்கள்..” என கண்களில் நீருடன் தேம்பியபடிக் கூறினாள்.
நரசிம்மன் அந்த பெண்ணைப் பார்த்தான். அழிந்திருந்த மை அவளது விழிகளில் தனி பொலிவை கொடுத்தன. கண்களில் உண்மையும், நேர்மையும் நன்றாக தெரிந்தது. உதடுகள் அவளது உடன் பிறந்தவளை எண்ணி துடித்துக் கொண்டிருந்தன. பதினான்கு அகவை கொண்ட சிறுபெண் தான் அவள். அவளை கொல்லவும், துன்புறுத்தவும் எண்ணியவர்களை கண்டம் துண்டமாக வெட்டும் கோபம் நரசிம்மனுக்கு எழுந்தது.
“அடேய் யார் நீ?” அவர்களில் ஒருவன் கேட்டதும் மகதன் உருமியபடி அவனை பார்த்தான்.
அந்த பார்வையில் யாரும் ஓடவும் திராணியற்று அப்படியே உறைந்து நின்றனர். மகதன் எழுந்து நன்றாக அவனது வயிற்றில் படுத்து, முகத்தினை அளந்து கொண்டு நகத்தினால் கீறல் லேசாக கிழித்தான். அடியில் இருந்தவனுக்கு பாதி உயிர் அவனது உடல்விட்டு சென்றிருந்தது, மீதி உயிரும் தொண்டை குழியில் சிக்கிக் கொண்டிருந்தது. எந்தவிதமான அசைவும் இன்றி அவன் மகதனின் அடியில் படுத்துக் கிடந்தான்.
“எந்த சமஸ்தானத்தை சேர்ந்தவர்கள் நீங்கள்? இந்த நேரத்தில் காவல் வீரர்களை மீறி எப்படி காட்டில் உலாவிக் கொண்டு இருக்கிறீர்கள்?” நரசிம்மன் மெல்ல நடந்தபடி அவர்கள் அருகே வந்துக் கேட்டான்.
“நாங்கள் முதல் அம்புவிக் கோட்டை சமஸ்தானத்தை சேர்ந்தவர்கள்..”
“ஆமைகள் முட்டையிடும் இடத்தில் நீங்கள் எப்படி வந்தீர்கள்? இது தடை செய்யப்பட்டிருக்கும் அல்லவா?” என கண்களில் கூர்மையுடன் வினவினான்.
ஆதித்திய பேரரசு 8 சமஸ்தானங்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு சமஸ்தானமும் பெரும் நிலப்பகுதியைக் கொண்டிருந்தன. அதிலே தெற்கு பக்கம் கடல் முனையில் இருக்கும் சமஸ்தானம் தான் அம்புவிக் கோட்டை. முன்பு அது ஒன்றாக இருந்தது இடையே ஏற்பட்ட நீர்கோள்களினால் அந்நிலம் இரண்டாகப் பிரிந்து, இடையே சிறிய கடல் போல நீர் பிரித்து ஆங்காங்கே நிலத்தினை தனிமைப்படுத்தி இருந்தன. இன்னும் சொல்லப்போனால் நீரானது நிலத்தினை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்தது. கடந்த நாற்பது ஆண்டுகளில் சில நிலங்கள் நீருக்குள்ளும், நீருக்குள் இருந்த நிலங்கள் மேலேயும் எழுந்து இருந்தன.
அதனால் கடந்த 4 ஆண்டுகளாக கடுமையான மழைப் பொழிவும் அந்த பகுதியில் பொழிந்துக் கொண்டிருந்தன. சிறு பிளவாக ஆரம்பித்த நீர் வரத்து நாள் செல்ல செல்ல ஆழமாகவும், விரிவாகவும் படர்ந்துக் கொண்டிருந்தது.
அதனால் அம்புவிக் கோட்டை இரண்டாக பிரிந்து, கிழக்கும்-தெற்கும் கொண்ட பகுதி முதல் அம்புவிக் கோட்டையாகவும், மேற்கும்-தெற்கும் கொண்ட பகுதி இரண்டாம் அம்புவிக் கோட்டை எனவும் பிரிக்கப்பட்டு தனித் தனியாக நிர்வகித்து வருகின்றனர். அங்கே கடலும், மலைகளும் ஒன்றாக இருந்தன. மலைகள் முடியும் அடிவாரம் கடலாக இருந்தது. சரியான தென் முனைக்கு இடது பக்கம் தான் லேசான விரிசல் கண்டு இப்போது நீரினால் பிரிக்கப்பட்டு நிற்கிறது. இயற்கையின் வண்ணத்தை யாரும் கலைக்காமல் இருக்கும் இடங்களை பாதுகாப்பானதாக மட்டும் அவர்கள் மாற்றிக் கொண்டு வந்தனர்.
“தாங்கள் யார்?” ஒருவன் மெல்லக் கேட்டான்.
“உனக்கு அவசியமாக தெரிய வேண்டுமா?” நரசிம்மன் அடிக்குரலில் கேட்டதும் கப்பென அனைவரும் வாய் மூடிக் கொண்டனர்.
“பெண்ணே.. உனது பெயர் என்ன?” மற்றவர்களை மகதனை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அந்த பெண்ணை சற்று தூரமாக அழைத்து வந்து அமரவைத்து பருக நீர் கொடுத்துவிட்டு பேச்சை ஆரம்பித்தான்.
“எனது பெயர் நுவலியம்மை ஐயா. அம்புவிக்கோட்டையில் இருக்கும் தென்கிழக்கு மலைகளில் வாழ்கிறேன். என் அக்காளை கீழ்க்காடு கோட்டையில் இருக்கும் இவருக்கு மனம் முடித்து அனுப்பி வைத்தோம். எங்களுக்கு தந்தை மட்டும் தான். தாய் நான் பிறந்ததும் இறந்துவிட்டார். ஆறு மாதமாக எனது அக்காளை இவர் விரும்புவதாக கூறி எங்கள் ஐயனிடம் பேசி ஊரார் பொதுவில் வைத்து மணம் செய்து அனுப்பி வைத்தோம். அதன் பிறகு நான் பூப்படைந்து விட்டேன். என் அக்காளை பார்க்க செல்லமுடியவில்லை. சென்ற மாதம் என் ஐயன் கடல்கரை அருகே ஒரு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். சென்றவர் உயிருடன் திரும்பவில்லை. நான் தனியாளாக நின்றுவிட்டேன். அதனால் தான் அக்காளுடன் சில காலம் இருக்கலாம் என்று நேற்று புறப்பட்டு இன்று அங்கே சென்று சேர்ந்தேன். அங்கே என் தந்தைக்கு முன்பே அவள் இறந்துவிட்டாள் போலும். அவள் இறந்த விதத்தை தகாத வார்த்தைகள் பேசி இவர்களிடம் கூறி சிரித்துக் கொண்டிருந்தான். அதனால் தான் அவனிடம் சண்டையிட்டுவிட்டு உடனே எங்கள் மலைக்கு திரும்பி கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்கு முன் இவர்கள் நான் பழங்கள் சேகரிக்கும் இடத்தில் வந்து குதித்தனர். அங்கிருந்து தூரத்தி வருகின்றனர்.” என மொத்தமும் கூறிமுடித்தாள்.
“நீ சமஸ்தான எல்லை தாண்டும் பொழுது வீரர்கள் யாரும் அடுத்த சமஸ்தான வீரரை காணும் வரையில் உடன் வரவில்லையா?”
“வந்தார்கள் ஐயா. இடையே அவரின் மனைவி பிரசவ வலி கண்டுவிட்டதாக மற்றொருவர் வந்து கூறினார். அதனால் தான் நான் அவரை அனுப்பிவிட்டேன். இன்னும் ஒரு காதம் தான் அதன்பிறகு எங்கள் சமஸ்தான வீரர்கள் அந்த காட்டின் முகப்பிலேயே அமர்ந்திருப்பார்கள்.”
“தனியாக செல்ல பயம் இல்லையா?”
“ஆதித்திய அரசர் இருக்கும்போது எனக்கு தனியே செல்வதில் பயமில்லை ஐயா.. ஆனாலும் இவர்களை போன்ற சில முட்செடிகள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிபட்ட ஒருவனிடம் என் தமக்கை சிக்கி இறந்து போனது தான் வேதனையளிக்கிறது.”
நரசிம்மன் அந்த சிறுபெண்ணின் கூற்றில் மனம் கனத்து அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்து மன்னிப்புக் கேட்டான்.