87 – ருத்ராதித்யன்
“தாங்கள் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள் ஐயா? இது எங்களின் தவறு தான். ஒரு மனிதனின் சொல்லை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்று ஓர் உயிரை இழந்தபின் தான் புரிகிறது. இவனைப் பற்றி அப்போதே இங்கே ஆள் அனுப்பி விசாரித்து இருந்தால் இப்படியொரு நிலை அவளுக்கு வந்திருக்காது. என் ஐயன் ஊர் தலைவர் கூறினார் என்ற ஒரே காரணத்திற்காக வேறெந்த கேள்விகளும் இன்றி பெண்ணை மனம்முடித்து கொடுத்தார்..” எனக் கூறியவள் அக்காளின் நினைவிலும், தந்தையின் நினைவிலும் கண்ணீர் சிந்தினாள்.
“இல்லையம்மா.. இந்நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் அருகிருப்பவரின் நலனில் அக்கறை எடுக்கவேண்டியது கடமை. உனை நான் வீரர்கள் இருக்கும் எல்லை வரையிலும் கொண்டு வந்து விடுகிறேன். இவர்களையும் அவர்களிடம் ஒப்படைக்கிறேன். சமஸ்தான எல்லையில் இந்த வழக்கை பதிவு செய்து வழக்குஎண் பெற்றுக் கொள். உங்கள் ஊர் தலைவரை இந்த கோட்டை பஞ்சாயத்தார் முன் வரவைத்து நீதி கேள்..” என நரசிம்மன் அவள் அடுத்து செய்ய வேண்டிய முறைகளை விரிவாக கூறியபடி மகதன் அருகே வந்தான்.
“மகதா.. இப்பெண்ணை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டிய நேரம் இது. இவர்களை கயிற்றில் பிணைத்து உன்னுடலில் கட்டிவிட்டு நான் முன்னே செல்கிறேன் நீ பின்னே விரைவாக வா..” என அவனது காதுகளில் கூறிவிட்டு இடையில் இருந்த கயிற்றை அறுவரின் கைகளில் பின்னபக்கமாக கட்டி அதை மகதன் உடலில் சுற்றி கட்டிவிட்டு நரசிம்மன் முன்னே நடந்தான்.
“ஐயா.. எங்களை விட்டுவிடுங்கள். இனி இவனுடன் நாங்கள் எந்த உறவும் வைத்து கொள்ளமாட்டோம்.” என மற்றவர்கள் கெஞ்சியபடி மகதன் இழுப்பிற்கு ஓடமுடியாமல் உடல் தரையில் இழுத்தபடி கதறிக் கொண்டிருந்தனர்.
மகதன் ஓர் உறுமல் செய்யவும் பயத்தில் வாய்மூடி உடலில் ரத்தம் சொட்ட சொட்ட இழுபட்டுக் கொண்டு வந்தனர்.
நான்கு நாழிகையில் அடுத்த சமஸ்தான வீரர்களின் கொட்டகை தென்பட்டது. நுவலியை அருகே இருந்த மரப்பலகையில் அமரவைத்துவிட்டு உள்ளே சென்று ஆதித்திய அரசவை அதிகாரியின் முத்திரைக் காட்டி நுவலிக்கு தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுத்துவிட்டு அவளருகே வந்தான். அதற்குள் மகதனும் வந்துவிட, வீரர்களை அழைத்து அவர்களை சிறையில் அடைக்கக் கூறினான்.
“மிகவும் நன்றி ஐயா. தங்களின் வேலையை விடுத்து என்னுடன் இத்தனை தூரம் வந்து உதவி புரிந்தீர்கள். தங்களுக்கு ஏதேனும் எங்கள் மலைப்பகுதியில் உதவி தேவைப்பட்டால் கூறுங்கள். எனக்கு மலைகள் அத்தனையும் அத்துப்படி.. தாங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா?” எனக் கேட்டாள்.
“நான் ஒரு முக்கியமான வேலையாக ஓர் தீவிற்கு செல்லவேண்டும்”
“ஓ அதற்கு தான் மூங்கிள்களை கட்டிக் கொண்டிருந்தீர்களா? இது மழைக் காலம் ஐயா. அந்த மூங்கில் எல்லாம் நமது ஆழ்கடல் புரியும் நடனத்தில் தங்களையும், தங்களது நண்பனையும் தாங்கி கொண்டு செல்வது கடினம். இன்னும் சிறிது தூரத்தில் எனது தந்தையின் படகு ஒன்று இருக்கிறது. பத்து பேர் வரையில் அதில் பயணிக்கலாம். கணமும், இந்த கடலின் ஆர்பரிப்பையும் தாங்கும். அதை எடுத்து செல்லுங்கள். தங்களது வேலை முடிந்ததும் மீண்டும் அதே இடத்தில் விட்டுவிடுங்கள்.”
“உதவிக்கு உதவியா பெண்ணே?” என நரசிம்மன் அவளது முகத்தைப் பார்த்துக் கேட்டான்.
“நான் ஒரு இக்கட்டில் இருக்கும்பொழுது தாங்கள் கேட்காமலேயே இத்தனை தூரம் வந்து உதவும்பொழுது, தங்களின் தேவை அறிந்தபின்னும் நான் உதவாமல் போனால் அது மனிதருக்கு பண்பல்லவே.. தவிர என்னால் இதை எந்த சிரமமும் இன்றி செய்ய முடியும் எனும்போது வீணாக தங்களின் நேரத்தை இன்னமும் கடத்துவது சரியல்ல..” என நுவலி கூறிய விதத்தில் அவளின் அறிவையும், சமயோஜித புத்தியையும், மற்றவர் மேல் காட்டும் அன்பான அக்கறை குணத்தினையும் நன்றாக உணரமுடிந்தது.
‘சிவநேசன் கூறியது போல நான் கடைசி படிகளை கடக்கும் பொழுது இந்த பெண் அருகே இருந்தால் நன்றாக இருக்கும்..’ என நரசிம்மன் நினைத்த நொடி நுவலியின் உச்சந்தலையில் ஓர் மழைத்துளி விழுந்து அவளுடலில் உள்ளிறங்கி அவளது ஆத்மாவில் சென்று சேர்ந்தது.
“அஹ்..” என நுவலி வலியில் முனகினான்.
“என்னவாயிற்று பெண்ணே?” அருகே ஏதேனும் பூச்சி பாம்பு அவளை கடித்துவிட்டதோ என சுற்றிலும் பார்த்தான்.
“இல்லை என் தலையின் உள்ளே ஏதோ ஊசி கொண்டு நுழைத்தது போல ஒரு வலி சட்டென வந்து மறைந்து விட்டது..” நுவலி தலையை தேய்த்தபடி கூறினாள்.
“சரி வா உள்ளே விருந்தினர் அறையில் தங்கிக்கொள். உனக்கு தேவையானதை எல்லாம் இந்த கணையாழி காட்டி வாங்கி கொள்” என ஒரு கணையாழியைக் கொடுத்தான்.
“தாங்கள் யாரென்று நான் அறியலாமா ?”
“நான் ஒரு அரசதிகாரி. இது எனது தேவைக்கு நான் செல்லும்போது கொண்டு செல்வது வழக்கம். உனக்கு இப்போது இங்கே தேவை அதிகம் இருக்கிறது. அதனால் நீ கையில் வைத்துக் கொள். கவனம். மீண்டும் நான் உன்னை சந்தித்து பெற்றுக் கொள்கிறேன்.”
“அப்படியா? சரி.. எனது பெயரும், ஊரும் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை நாட்களில் மீண்டும் நீங்கள் எனை வந்து சந்திப்பீர்கள்? நீங்கள் வந்தால் மட்டும் தான் இந்த கணையாழியை கொடுப்பேன்.”
“நான் நேரில் வந்தே வாங்கி கொள்கிறேன். இன்னும் மூன்று மாதங்களில் வந்து வாங்கிக் கொள்கிறேன்..”
“அதற்குள் தாங்கள் வரவில்லை என்றால்?”
“உன் வயதையொத்த ஓர் பெண் வருவாள். அவள் பெயர் யாத்திரை. அவளிடம் கொடுத்துவிடு.”
“அவள் பார்க்க எப்படி இருப்பாள்? எனக்கு அவள் தான் என்று எப்படி உறுதிசெய்து கொள்வது?”
“அவளது இடை சுற்றி எப்போதும் ஆயுங்கள் நிரம்பி வழியும், தவிர இடது மேல் கையில் மூவர்ணத்தில் பச்சை குத்தி இருப்பாள். வலது கையில் இப்படி ஒரு காப்பு அணிந்திருப்பாள்” என அவன் கைகளில் இருந்த ஒரு காப்பை காட்டினான்.
நுவலி அதை நன்றாக மனதில் பதியவைத்துக் கொண்டாள். பின் அங்கிருந்து தெற்கே அரைகாத தூரத்தில் அவளது தந்தையின் படகு இருக்கும் இடம் மற்றும் அடையாளங்களைச் சொல்லியனுப்பிவைத்தாள்.
“வருகிறேன் பெண்ணே.. கவனமாக செயல்படு. உனக்கென்று ஓர் வாழ்வை அமைத்து கொள். இயற்கையன்னை எப்போதும் உன்னுடன் இருப்பாள்.” என அவளை வாழ்த்திவிட்டு அங்கிருந்து மகதன் மீதேறி புறப்பட்டான்.
இரண்டு நாழிகையில் அந்த பெண் கூறிய இடத்தினை அடைந்து அந்த படகினை அடையாளம் கண்டெடுத்து கடலில் செலுத்தினான்.
அவன் கடலில் பயணிக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் தூரல் விழத் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பெருமழையாக கொட்டத்துவங்கியது. மகதன் நீரின் வேகம் கண்டு உட்காரும் பலகைக்கு அடியே சென்றுப் பதுங்கிக் கொண்டான்.
“மகதா.. நடுவே வந்து படு. அப்போது தான் படகின் கணம் சரியாக இருக்கும்.” எனக் கூறியபடி துடுப்புகளை பெரும் அலைகளை நோக்கி போட ஆரம்பித்தான்.
பெருமழை கொட்டிக்கொண்டிருக்க, அங்கே தீவின் உச்சியில் இருந்து தேவி அவள் புன்னகை மாறா முகத்துடன் இன்னமும் இன்னல்கள் பலதை அவன் பாதையில் இழுத்துவிட்டுக் கொண்டிருந்தாள்.
ஒரு இடத்தில் வந்த பெரும் அலையில் படகு கவிழ்ந்து இருவரும் நீரில் இருவேறு பக்கம் அடித்துச் செல்லப்பட்டனர்.
மகதன் முடிந்தவரையிலும் நரசிம்மனை அவனது பார்வையில் வைத்து அவனருகே நீந்தி செல்ல முயன்றான். நரசிம்மன் கவிழ்ந்த படகினை மேல்பக்கமாகத் திருப்ப முயன்றுக் கொண்டிருந்தான்.
நரசிம்மன் எப்படியோ மீண்டும் படகிலேறி மகதன் இருக்கும் பக்கமாக துடுப்புகளை போட ஆரம்பித்தான். மகதன் அடுத்தடுத்து வந்த பெரிய அலைகளினால் வெகுதூரம் அடித்துச் செல்லப்பட்டிருந்தான்.
நரசிம்மன் சூழ்ந்திருந்த இருட்டில் மகதனின் கண்ணை மட்டுமே தேடிக் கொண்டிருந்தான். இருள் அதிகமாகமாக மகதனின் உடலில் இருந்த பச்சை கோடுகள் மிளிரத் தொடங்கின. அவனது கண் இரண்டும் அடர்பச்சை விளக்கென மின்னியது.
அலைகளின் நடுவே பச்சை ஒளி வீசும் இடத்தினை கவனமாக பார்த்தபடி துடுப்பினை வேகவேகமாக துழாவியபடி கடலினை கிழித்துக் கொண்டு மகதன் இருக்குமிடம் சென்றுக் கொண்டிருந்தான்.
சட்டென சிறிது தூரத்தில் இன்னொரு பச்சை ஒளி வீசியது. அங்கும் ஓர் மகதன் நீந்திக் கொண்டிருந்தான். நரசிம்மன் இரண்டு வெளிச்சத்தின் மத்தியில் நின்று எந்த பக்கம் செல்வதென யோசித்தான். இதில் ஏதோ மாயை நிகழ்கிறது.
“தாயே வனதேவி.. நீயே துணை எப்போதும். இங்கிருக்கும் இரு உருவத்தில் எது நிஜமென உணர்த்து..” என வாய்விட்டு அவன் கும்பிடும் வேலையில் இரு ஒளி வீசும் இடத்திற்கும் சம்பந்தமில்லாத தூரத்தில் இன்னும் ஒரு மகதன் மிளிர்ந்தான்.
நரசிம்மன் மனம் எதிரே தெரிந்த மூன்று புலிகளையும் பார்த்து கவலையுற ஆரம்பித்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருந்தது. நேரம் செல்ல செல்ல ஒவ்வொன்றின் தூரமும் அதிகரித்தபடி இருந்தது.
‘இப்படியே போனால் சரி வராது. இதற்கான உண்மைதன்மை அறியும் மார்க்கம் தான் என்ன?’ என நரசிம்மன் தான் இருக்கும் இடத்தில் தன்னை முடிந்தவரை நிலைநிறுத்தி மூன்று ஒளிவீசும் உருவங்களையும் பார்த்தான்.
“அத்தான்.. ஒன்று போல பல உருவங்கள் கண்களுக்கு தெரியும் மாயவித்தை அறிவீர்களா?” என யாத்திரை அவனுடன் குருகுலத்திருந்து கோட்டைக்கு செல்லும் வழியில் பேசிக்கொண்டு வந்தாள்.
“அது மாயவித்தை இல்லை யாத்திரை.. அது ஒன்றுக்கு மேற்பட்ட கனிமங்கள் மற்றும் நீரின் திணிப்பில் வாயுக்களும் கலப்பதினால் நிகழும் மாயத்தோற்றம்..”
“அது செயற்கையாக தான் செய்யமுடியுமா?”
“இல்லை. ஒரு சில இடங்களின் அதீத நீரின் போக்கோடு, கனிமங்கள் மற்றும் வாயுக்களின் கலப்பினால் இயற்கையாவும் நிகழும். நீர் பகுதிகளில் இது அதிகம் நிகழ வாய்ப்பிருக்கிறது.”
“கனிமங்கள் மலைகளில், நிலங்களில் தானே இருக்கும்?”
“ஆம். நிலமும், வேகம் கொண்ட நீரும் சேரும் இடங்களில் கனிமங்களில் ஒரு சில வாயுக்கள் வேகமாக திணித்து உட்புகுத்தப்படும். அப்படி புக வைக்கும் முக்கிய காரணி வேகமான காற்று தான். மலைகளில் அதீத மழை பெய்தால் வரும் காட்டாற்று வெள்ளம் வரும் இடங்களில் இது போன்ற சில மாய தோற்றங்கள் பிரதிபலிக்கும். அதை சில மனிதர்கள் பார்த்துவிட்டு பேய், பூதம், ராக்காட்டேரி என்று கூறி பயப்படுவது உண்டு.”
“ஆனால் இந்த பேய் பூதம் எல்லாம் நிஜமாகவே இருக்கிறது தானே அத்தான்?”
“இருக்கிறது யாத்திரை. இயற்கையும் நல்ல சக்தியும் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதற்கு எதிர்மறையான சக்திகளும் இருப்பது உண்மை தான்.”
“ஓர் இக்கட்டான சூழ்நிலையில் தங்களுக்கு இப்படி ஒரு மாய பிம்பங்கள் தோன்றினால் தாங்கள் எப்படி நிஜத்தை அறிவீர்கள்?”
நரசிம்மன் அன்று கூறிய பதில் இன்று நினைவில் எழுந்தது. அதன்படி அவன் நீளமான கயிற்றினை அங்கிருந்த ஈட்டி ஒன்றில் கட்டி, அங்கு தெரிந்த மூன்று உருவங்களையும் தாண்டி சென்று ஈட்டியை நீரில் வீசி மறுமுனையை உள்ளிருக்கும் பலகை காலில் இறுக்கிக் கட்டினான்.
முக்கோண வடிவத்தில் அந்த உருவங்கள் சமதூரத்தில் தெரிந்தன. வேகமாக அந்த உருவங்களை ஓர் வினோத நேர்கோட்டில் அவனது பார்வையில் நிறுத்தி அதற்கேற்ப உருவங்கள் அருகே செல்ல வேகமாகத் துடுப்பைத் துழாவினான்.