88 – ருத்ராதித்யன்
மூன்று உருவங்களையும் அவன் நீரில் விட்ட ஈட்டி தொடும்படியான தூரத்தில் நடு புள்ளியில் வந்து நின்று படக்கினை வட்டமாக செலுத்தினான். அப்படி செலுத்தும் போது தான் அவனுக்கு இன்னொரு விஷயம் கண்களில் பட்டது. முதலில் ஒரு உருவம் பின்னே செல்ல அதற்கு இரு நொடிகள் வித்தியாசத்தில் மற்ற இரண்டு உருவங்களும் பின்னால் சென்றன. நீரில் அவை பின் செல்வது நடுவில் இருந்து பார்த்தவனுக்கு இன்னல் தீர்க்கும் மார்க்கமும் புரிந்தது.
நீரில் பின்னால் அடித்து செல்லப்பட்ட முதல் உருவத்தினை குறித்துக் கொண்டு அதை நோக்கி படகை செலுத்தினான். நிஜமான மகதன் அங்கே நீரில் நீந்திக் கொண்டிருந்தான். படகு அருகே வருவதைப் பார்த்து அவனும் படகின் அருகே வந்தான். உள்ளிருந்த மீன் பிடிக்கும் வலையை நீரில் வீசி மகதனை பற்றிக் கொள்ளும்படி கூறிவிட்டு தீவினை நோக்கி படகை செலுத்தினான்.
கரையை நெருங்க நெருங்க பெருமழை தூரலானது, மகதனும் வலையை விட்டு விட்டு கரையினை நோக்கி நீந்தி சென்றான். நரசிம்மன் கரையை அடைந்ததும் படகை நிலத்தில் இழுத்து பாதுகாப்பாக வைத்துவிட்டு அங்கிருந்த பாறையில் அமர்ந்தான்.
“என்னடா மகதா இது? இப்படியும் சோதனைகள் வருகிறதே.. உன்னை பத்திரமாக அழைத்து வரவேண்டும் என்று நமது தாய் கிளம்பும்போது கூறியதன் அர்த்தம் இது தானா? அப்படியென்றால் மகாராஜாவும் இப்படி பல இன்னல்களை கடந்து உடன் வந்த உயிரை பத்திரமாக காப்பாற்றி அழைத்து சென்று தான் சேர்ந்தாரா?” எனப் பேசியபடி மகதனை கட்டிக் கொண்டான். மகதனும் அவனது மார்பில் தலையை முட்டி அவன் மேலே படுத்துக் கொண்டான்.
மகதன் படகில் இருந்து விழுந்ததும் நரசிம்மன் சற்று துடித்து தான் போனான். எத்தனை மனிதர் இருந்தாலும் அவர்களிடம் சண்டையிட்டு மகதனை காப்பாற்றி விடலாம். இயற்கையன்னையின் முன்னே எந்த உயிரினமும் மோதி வெல்லமுடியாதே. சீறி எழும் கடலில், புயல் சுழலில் சிக்கிவிட்டால் எப்படி அவனைக் காப்பது என்ற எண்ணம் அவனுக்கு எழாமல் இல்லை. அதில் மனவுளைச்சல் கொண்டதும் உண்மை தான். மகதனும் சற்றே பயந்துவிட்டான் என்று தான் கூறவேண்டும். அப்படியான பெருமழையும், காற்றும், கடலும் அவர்களை புரட்டி எடுத்துவிட்டது.
ஒரு நாழிகை நேரம் இருவரும் அங்கேயே படுத்துக் கிடந்தனர். கடலின் ஆர்ப்பரிப்பு குறைந்து அலைகள் வழக்கமான கீதம் இசைக்கத்தொடங்கியது. அதில் நரசிம்மன் முதலில் எழுந்து மகதனை எழுப்பிவிட்டான். இருவருக்கும் நல்ல பசி எடுத்தது. அந்த தீவில் வேட்டையாட முடியுமா என்று இருவரும் மெல்ல கண்களைச் சுழற்றியபடி உள்ளே நடக்கத்தொடங்கினர்.
சிறிது தூரத்தில் ஓர் காட்டுப் பன்றி மகதன் கண்களில் பட்டது. அவன் அதை வேட்டையாட அந்த பக்கம் சென்றதும், நரசிம்மன் கிழங்கு ஏதேனும் கிடைக்கிறதா என்று ஓர் மரத்தின் கிளையை உடைத்துக் கூராக சீவிக் கொண்டு நிலத்தினை கிளரியபடி வந்தான். பத்து நிமிடத்தில் அவனுக்கு ஓர் சுனை தென்பட்டது. அதனைச் சுற்றி பல வகையான கிழங்குகள் முளைத்திருந்தன. அதைக் கண்டவன் தன் உடலில் இருந்த கச்சைகளை எல்லாம் கழற்றிப் பத்திரமாக வைத்துவிட்டு சுனையில் மூழ்கி எழுந்தான். உடலை அறித்துக் கொண்டிருந்த கடல் நீரின் உப்பு அந்த சுனையில் இறங்கியதும் மாயமாக மறைந்தது.
சுமார் அரை நாழிகை நன்றாக நீந்தி நீராடியவன் மெல்ல எழுந்து வந்து உடைகளை காய வைக்க மரத்தினில் வேர்களை கோர்த்துக் கட்டி காற்று வரும் திசையில் உலர்த்தினான். பின்னர் காய்ந்திருந்த விறகுகளைத் தேடினான். அடித்து பெய்த மழையில் அத்தனையும் நீரில் ஊறிக் கொண்டிருந்தன.
தனது இடை கச்சையில் இருந்து ஓர் கல்லை எடுத்தவன் கத்தியுடன் உரசினான். ஒரு பொட்டலத்தை எடுத்து அதில் இருந்த இலையை பற்ற வைத்ததும், அது சட்டென தீ பற்றியது.
அந்த இலையை ஒரு பாறையின் மேல் வைத்து அதன் மேல் சில பச்சை இலைகளை நீரில்லாமல் சுற்றி வைத்தான். தன் கச்சையில் இருந்த மூங்கில் குடுவையை எடுத்து நெருப்பின் மேல் மெல்ல சுற்றிலும் காட்டினான். கடலில் விழுந்ததால் முற்றிலும் நனைந்திருந்த மூங்கில் குடுவையானது லேசாக தீ பட்டதும் முற்றிலும் காய்ந்து உள்ளிருக்கும் மற்ற பொட்டலங்களையும் உலர்த்திக் கொண்டது. மூன்று துளி நீர் மட்டும் பக்கவாட்டில் இருந்த சிறு ஓட்டையின் வழி வெளியே சொட்டியது.
பின் கிழங்குகளை மெல்ல ஆராய்ந்து பார்த்துவிட்டு அருகிருந்த செடி கொடிகளையும் ஆராய்ந்து சாப்பிடக்கூடிய கொடிகளை எடுத்து நெருப்பில் காட்டினான். சிறு சிறு கட்டைகளாக அருகே விழுந்திருந்த மரத்தின் கிளையை வெட்டி நெருப்பை நிலத்தில் மூட்டி கிழங்குகளை மண் பூசி நெருப்பின் உள்ளே வேகவைத்தான்.
சுமார் மூன்று நாழிகை அதில் கழிய மெல்ல சூரியன் உச்சியை தொடும் நேரத்தில் மகதன் நரசிம்மன் அருகே வந்தான்.
“என்னடா சாப்பிட்டு அங்கேயே படுத்து உறங்கிவிட்டாயா?” என நரசிம்மன் கேட்டதும் மகதன் உருமலில் அவனிடம் பதில் கொடுத்துவிட்டு அவன் சுட்டு வைத்திருந்த கிழங்கினையும் எடுத்து உண்டான்.
“அடேய் அது எனக்கு வேகவைத்தேன். நீ பெரும் உணவு பந்தியை முடித்துவிட்டு என்னிடமும் வருவது சரியல்ல..”
“உர்.. ர் .. ர்..”
“நானும் தானடா கடலில் விழுந்து அல்லாடினேன். எனக்கு பசிக்காதா? நான் தேவியை காண செல்லவேண்டும். அதனால் வேட்டையாடாமல் அமைதியாக கிழங்கினை உண்ண வந்தால் என்னிடமும் நீ பங்கிற்கு வருகிறாய். உன் உணவில் எனக்கு பங்கு தருகிறாயா நீ?” என இருவரும் மாறி மாறி வாயாடியபடி உண்டு முடித்து மலர்கள் சேகரிக்கத் தொடங்கினர்.
அந்த தீவில் வெள்ளையைத் தவிர அத்தனை நிற மலர்களும் பூத்து குலுங்கின.
“பார்த்தாயா மகதா.. இந்த தீவில் எங்குமே வெள்ளை நிற மலர்கள் தென் படவில்லை.. இயற்கையின் அமைப்பு தான் எத்தனை அற்புதமானது. நமது நிலத்தில் இருக்கும் சாதாரண வெள்ளை மலரின் செடிகள் கூட இங்கே வேறு நிறங்களில் தான் பூக்கின்றன. இந்த அதிசயங்களை எல்லாம் எப்படி தான் நாம் புரிந்து கொள்வது? இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இந்த இயற்கை எனும் விஷயத்தை மட்டும் எந்த உயிரினமும் வெல்லவே முடியாது, முழுதாக புரிந்து கொள்ளவும் முடியாது..” என ஏதேதோ மகதனிடம் பேசியபடி இருவரும் மலை ஏறத் தொடங்கினர்.
“உனக்கொன்று தெரியுமா? ஆருத்ரா தேவி இந்த இடங்களுக்கு எல்லாம் என்னுடன் வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். திருமணம் முடிந்தபின் யுவராஜா பட்டம் காட்டுவார்கள் என்று நானும் நினைத்திருந்தேன். அப்படி கட்டியிருந்தால் இளவரசியையும் அழைத்து வந்திருப்பேன். இந்த கணங்கள் எல்லாம் எங்களது வாழ்வில் பெரும் பொக்கிஷங்களாக சேமிக்கப்பட்டிருக்கும். ஆனால் பார் உன்னுடன் மட்டுமே வரவேண்டிய சூழலை அனைவரும் உருவாக்கி விட்டனர்..” என அவன் கூறியதும் மகதன் அவனை முறைத்துவிட்டு வெடுவெடுவென மேலே ஏறினான்.
“நில் மகதா.. ஏன் இத்தனை வேகம்? ஓஹோ .. கோபம் வந்து விட்டதா உனக்கு? நாளை இளவரசியை சந்தித்தால் அவரிடம் உடலை ஒட்டிக்கொண்டு தானே போய் நிற்பாய். என்னை முழுதும் மறந்து விடுவாய். நாம் கிளம்பும் போது யாத்திரையுடன் அப்படி தானே நடந்து கொண்டாய் நீ..”
மகதன் வேறு விதமாக அடி வயிற்றில் இருந்து ஒலி எழுப்பிவிட்டு நிற்காமல் அங்கிருந்து ஓடினான்.
“வெட்கமா மகதா ? நில்.. சொல்வதை கேளடா.. சரி நான் ஏதும் கூறவில்லை.. உன்னுடன் வந்ததில் சந்தோஷம் தான்.” எனக் கூறியதும் மகதன் அவனிடம் திரும்பி வந்து நெஞ்சினை முட்டிவிட்டு மீண்டும் மேலே ஓடினான்.
நரசிம்மன் இம்முறை அவனை பின்தொடர்ந்து வேகமாக மலை ஏறினான். அப்போது உச்சியில் இருந்து ஓர் ஒளிகற்றை சரியாக தேவியின் மேல் விழுந்துக் கொண்டிருந்தது. அதில் சூரியனையும் மறைக்கும் பிரகாசத்துடன் மிளிர்ந்துக் கொண்டிருந்தார் வனதேவி.
அதைக் கண்டதும் நரசிம்மன் இன்னமும் வேகமாக முன்னே சென்று நெடுஞ்சாண்கிடையாக நிலத்தில் வீழ்ந்து மலர்களை பாதத்தில் சொரிந்தான்.
அவனது கைகளில் வெள்ளை தாமரையும், பாரிஜாதமும் வந்து சேர்ந்தன. இரு கை அகலம் தாண்டிய தாமரையும், ஓர் கை அகலம் தாண்டிய பாரிஜாதமும் கண்டவன் கண்களில் ஏனென்றே அறியாமல் நீர் வழிந்தது.
உடலில் புதுவித ரத்தமும், சக்தியும் பாய்வது போல உணர்ந்தவன் அங்கேயே அப்படியே தரையில் முகம் புதைத்து அமர்ந்துக் கொண்டான். அந்த நிலமும், அவன் மேல் இருந்த வானமும், முன்பிருந்த வனதேவியும் ஒரே நேரத்தில் அவனுடலில் ஊடுருவி பாய்வதைப் போல இருந்தது அவனுடல் கொண்டிருந்த நடுக்கம். மகதன் அவன் அருகே வந்து முன்னே படுத்து, காற்றில் மற்ற உடமைகள் பறக்காமல் பார்த்துக் கொண்டான்.
கிட்டதட்ட நான்கு மணிநேரம் நரசிம்மன் அப்படியே அமர்ந்திருந்தான். அவன் உடலில் இருக்கும் ஒவ்வொரு நரம்பும் வலியினால் துடித்துக் கொண்டிருந்தது. விரலையும் அசைக்க முடியாமல் உடல் உறைந்து போனது போல அசையாமல் அமர்ந்திருந்தான்.
மகதன் ஓர் ஜாம நேரம் கடந்தபின் மெல்ல நரசிம்மன் அருகே வந்து தலையால் நெஞ்சில் முட்டினான். அதில் நிலை தடுமாறி நிலத்தில் சாய்ந்தவன் கண்கள் மெல்ல மூடின.
அதன்பின் மகதன் தேவியின் பாதம் பணிந்து, அங்கேயே தாடையை நிலத்தில் வைத்து படுத்துக் கொண்டான். அவனுடலிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. முக்கியமான ஓர் விஷயம் ஒளி மூலமாக அவனது புத்தியில் புகுத்தப்பட்டது.
அன்று நாள் முழுதும் இருவரும் தேவியின் காலடியில் நன்றாக உறங்கினர். அடுத்த நாள் சூரிய உதய கிரணங்கள் அவர்களின் முகத்தில் அடித்தபின் தான் இருவருமே நினைவுத் திரும்பி எழுந்தனர்.
“மகதா…” நரசிம்மன் கண்விழித்ததும் மகதனை எழுப்பினான்.
மகதன் மெல்ல சோம்பல் முறித்து எழுந்து நின்று, தேவியை மீண்டும் வணங்கிவிட்டு மலை விட்டு இறங்கத்தொடங்கினான்.
இருவருமே அதீத பசியில் இருந்தனர். மகதன் நல்ல இரையை எதிர்பார்த்தபடி அங்கும் இங்கும் கண்களை ஓடவிட்டான். நரசிம்மனும் வேட்டையாட ஏதேனும் மிருகம் கண்களில் படுகிறதா என்று பார்த்தபடி வந்தான். அப்போது கூட்டமாக காட்டுக்கோழிகள் அவர்கள் கண்களில் பட்டன. அதைக் கண்டதும் நரசிம்மன் மடக்கி வைத்திருந்த வில்லில் நானேற்றி குறிப்பார்த்து அடித்தான். கணிசமாக அவர்கள் பசி அடங்கும் அளவில் வேட்டையாடி சுட்டு உண்டுவிட்டு முதல் நாள் படகை கவிழ்த்து வைத்த இடத்திற்கு வந்தனர்.
“மகதா அடுத்து சதுப்பு மலைக்கு செல்ல வேண்டும். படகிலேயே சென்று விடலாமா?” எனக் கேட்டதும் மகதன் படகை நீரினை நோக்கி இழுக்கத்தொடங்கினான்.
நரசிம்மனும் மறுப்பக்கம் சென்று இழுக்க, படகு அடுத்த பயணத்தை தொடர்ந்தது.