9 – அகரநதி
விடிகாலையில் ஊருக்கு வந்த நதியாள் ஊர் எல்லையிலேயே பஸ்விட்டு இறங்கி நடக்கத்தொடங்கினாள்.
அன்று நாம் பார்த்ததை போல எல்லையில் இருந்தே பச்சைகம்பளம் பரந்து விரிந்து இருந்தது. வயல்வெளிகளில் அதிகாலை பனித்துளிகள் ஒவ்வொரு பயிரின் தலையிலும் அமர்ந்திருக்க, மரகதத்தின் உச்சியில் வைரம் வைத்தது போல காட்சியளித்தது. ஆங்காங்கே பறந்து பறந்து தன் இரையை தேடியபடி பறவைகளின் நாளும் ஆரம்பமானது.
இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் பூமித்தாயின் மரகத உடையில் ஒற்றை காலுடன் வாழ ,தவம் இயற்றிக்கொண்டிருந்தது கொக்குகள்.
நாரைகள் ஒரு பக்கமும், வயலைத் தாண்டி இருந்த தென்னை தோப்புகளில் இருந்து மயில்கள் கூட்டம் கூட்டமாக தனது காலை நடைபயிற்சியைத் தொடங்கியது. தூரத்தில் இருக்கும் கொய்யா மரத்தில் கிளிகள் கீச்சிட்டு கொண்டிருப்பதும், குயில் தனது கானக்குரலை கோடி முறையாக இன்றும் நிரூபித்தது இயற்கை சுப்ரபாதம் பாடி.
வயல்வெளியில் தண்ணீர் பாய்ச்சியபடி பயிரை வாஞ்சையுடன் தடவிக் கொடுக்கும் கரங்களிலும், கண்களிலும் தான் எத்தனை ஆனந்தம். இவையனைத்தும் நதியாளுக்கு அந்த அதிகாலைச் சூரிய உதயத்தை மிக ரம்யமாகக் காட்டியது.
“ஹாஆஆஆஆஆ”, என நதியாள் ஆழ மூச்சிழுத்து வெளியிட்டாள்.
“எத்தனை நாள் ஆச்சி இந்த வாசனைய முகர்ந்து… என்னதான் சிட்டில சுத்தினாலும் இந்த மாதிரி பயிரோட வாசனையும், மண்ணோட வாசனையும், இந்த சூர்யோதயமும் எத்தனை கோடி கொட்டி அரண்மனையே கட்டினாலும் கிடைக்காது. லீவ்ல நல்லா என்ஜாய் பண்ணணும்”, தனக்குத் தானே பேசியபடி தன்வீட்டை நோக்கிப் போகும் வரப்பில் நடக்க ஆரம்பித்தாள்.
“எலே யாருப்பா அது வரப்புல ? ஊருக்கு புதுசா?”, வயலில் இருந்த ஒரு தாத்தா கத்தினார் நதியாளைப் பார்த்து.
“ஓய் மாந்தோப்பு காரரே… சௌக்கியமா? இன்னும் அந்த சரோஜாதேவிய தான் நினைச்சிட்டு இருக்கீரா?”, நதியாள்.
“ஏமோய் யாரது என் சரோஜாவ பேர் சொல்லி கேக்கறது?”, தாத்தா.
“கிட்ட வந்துட்டீங்கள்ள பாத்து தெரிஞ்சிகோங்க மாந்தோப்புகாரரே”, நதியாள் இடுப்பில் கைவைத்து அவரை பார்த்துச் சிரித்தபடிக் கூறினாள்.
“யாரும்மா நீ? முகத்த பாத்தா எங்கயோ பாத்தமாதிரி இருக்கு”, கண்களைச் சுருக்கிப் பார்த்துக் கேட்டார் மாந்தோப்புக்காரர்.
“இன்னுமா தெரியல? உங்க தோப்புல மாம்பழம் பழுத்து இருக்கு போல. வாசரை ஊர் எல்லை வர வருது. வந்தா ஒரு கோணில அள்ளிட்டு போலாம் போலவே… எப்ப வரட்டும் மாம்பழம் திருட?”, நதியாள்.
“அட யாளு கண்ணு… என்ன இது ஆம்பள புள்ளயாட்டம் குழாய மாட்டிகிட்டு இருக்க? எப்படி இருக்க கண்ணு? எந்த ஊர்ல இருக்க இப்ப?”, எனக் கேட்டபடிமாந்தோப்பு தாத்தா வாஞ்சையுடன் அவளது தலையைத் தடவினார்.
“நான் நல்லா இருக்கேன் தாத்தா நீங்க எப்படி இருக்கீங்க? நம்ம சரோஜாதேவி எப்படி இருக்காங்க?”, நதியாள் அவர் பாதங்களைத் தொட்டு வணங்கியபடிக் கேட்டாள்.
“என்ன கண்ணு இது என்ற காலுல உழுந்துகிட்டு. மகராசியா இருப்ப. உன்ன சின்ன புள்ளையா பாத்தது இப்ப அடையாளம் தெரியல ஆனா இந்த சிரிப்பும் அந்த கண்ணும் மட்டும் அப்படியே இருக்கு”, மாந்தோப்பு தாத்தா.
“ஏன் ஆசிர்வாதத்தோட உங்க தோப்பையுமா கேக்கப்போறேன்? பாதிய எழுதி வச்சா தான் என்ன? உங்க பேத்தி தானே”, நதியாள் உரிமையாகச் சண்டையிட்டாள்.
“ஹாஹா…உனக்கு இல்லாமயா கண்ணு. எடுத்துக்க. நல்லா படிக்கறியா கண்ணு? படிப்பு முடிஞ்சதா?”, மாந்தோப்பு தாத்தா.
“இல்ல தாத்தா. இது கடைசி வருஷம் அடுத்து வேலைல சேரணும்”, நதியாள்.
“நீ ஏன் கண்ணு இன்னொருத்தன் கிட்ட வேலைக்கு போகணும். உன்ற அப்பா இத்தனை சொத்து உனக்காக தானே சேத்திட்டு இருக்கான். நீ நூறு பேருக்கு வேல குடு கண்ணு”, மாந்தோப்பு தாத்தா பேசியபடி அவளை அழைத்துக்கொண்டுத் தென்னந்தோப்பு அருகில் வந்திருந்தார்.
“நூறு பேருக்கு என்ன ஆயிரம் பேருக்கு வேலை குடுக்கலாம் அதுக்கு முன்ன நான் கத்துகிட்டா தானே கவனமா இருந்து நான் மத்தவனுக்கு வேலை குடுக்க முடியும்”, நதியாள்.
“எலேய் முனியா நல்ல செவ்வெளனியா வெட்டிட்டு வாடா”, எனக் கூறியவர் நதியாள் புறம் திரும்பி,” நல்லா வெவரம் தெரிஞ்சிகிட்ட கண்ணு. எதுவானாலும் நாலு பேருக்கு நல்லது நடந்தா சரிதான். இந்தா இளநிய குடி”,என முனியனிடம் இருந்து வாங்கி நதியாளின் கையில் குடுத்தார்.
“சூப்பர் தாத்தா… இன்னும் டேஸ்ட் அப்படியே இருக்கு. என்ன உரம் போடறீங்க?”, நதியாள்.
“நம்ம மண்ணுல இல்லாத உரமா கண்ணு. என் பாட்டன் பூட்டன் காலத்துல இருந்து அவங்க சொல்லிகுடுத்த இயற்கை உரம் தா கண்ணு. கண்டத போட்டு மண்ண மலடாகிட்டு பின்னாடி வருத்தப்படுறதுல என்ன இருக்கு? சரி எத்தனை மாசம் இருப்ப?”, மாந்தோப்பு தாத்தா.
“மாசமா? தாத்தா நான் திருவிழா பாக்க தான் வந்தேன் திருவிழா முடிஞ்சதும் கிளம்பிடுவேன்”, நதியாள்.
“உடனே கிளம்பணுமா என்ன? எத்தனை வருஷமாச்சி உன்ன பாத்து. சரி தோப்பு பக்கம் வந்துட்டு போ கண்ணு. சரோஜா உன்ன பாத்தா சந்தோஷப்படுவா. வா வீடு வரைக்கும் விட்டுட்டு வரேன் உன்ன”, மாந்தோப்பு தாத்தா கூறிக்கொண்டே எழுந்து நடக்கத்தொடங்கினார்.
“ஐயா… இந்த தேங்காய் எங்க போடறதுங்க?”, முனியன் கேட்க,” தாத்தா நீங்க இத பாருங்க நான் அப்புறமா தோப்புக்கு வரேன் இப்ப நான் கிளம்பறேன். பாய்”, என நதியாள் கூறிக் கிளம்பினாள்.
“சரி பாத்து பத்திரமா வரப்புல போ. அத்த பூட்ஸ கழட்டிடு. தடுக்கிவுட்ற போவுது பாத்து”, மாந்தோப்பு தாத்தா.
“சரி தாத்தா”, நதியாள் கத்திபயடி ஓடினாள்.
வரப்பு வழியாக சென்றவள் தன் வீட்டின் பின்புறம் சென்று மரத்திற்கு பின்னால் ஒளிந்து நின்றாள்.
அங்கே அவளின் தாய் ராதா தலைக்கு குளித்ததால் முடியை உலர்த்தி கொண்டிருந்தார். மஞ்சள் பூசிய முகம், நெற்றியில் குங்குமம் இட்டு அதற்கு மேல் விபூதியில் ஒரு கீற்றிட்டு தழைய தழைய அரக்கு நிறத்தில் காஞ்சி பட்டுபுடவையில் யாரும் கையெடுத்து கும்பிட வைக்கும் தோற்றத்தில் இருந்தார்.
முடியை உலர்த்தியவர் அதன் கொனையில் முடியிட்டு உள்ளே சென்று தலையில் பூ வைத்து துளசிமாடத்திற்கு தீபம் ஏற்ற தேவையான பொருட்களுடன் வந்து தீபமேற்றி துளசி மாடத்தை சுற்றி வந்து கண்மூடி நின்றார்.
சத்தமில்லாமல் சென்ற நதியாள் தன் தாயை அலேக்காக தூக்கி சுற்றத்தொடங்கினாள்.
“ஆஆஆஆஆ… யாரது… விடுங்க விடு….”, ராதா.
“நான் தான் உன் காதலன் உன்ன கடத்திட்டு போக வந்து இருக்கேன். என்னை ஏமாத்தி நீ கல்யாணம் பண்ணிட்டா விட்றுவேனா?”, நதியாள் சற்று குரல் மாற்றிப் பேசினாள்.
“ஏய் வாலு… இறக்கிவிடு அம்மாவ”, என கண்ணன் நதியாளுக்கு பின்னால் வந்து நின்றார்.
“யாரு யாளா?”, என ராதா கீழே இறங்கி அவளைப் பார்த்தார்.
“எரும எரும.. இப்படியா பயமுறுத்துவ? கீழ விழுந்தா என்னாகறது?”, ராதா நதியாளை திட்டியபடி அவளைக் கட்டிக்கொண்டார்.
“அப்படி விழுந்தா உன்ன எனிடைம் கைல ஏந்திட்டு இருக்க என் அப்பா இருக்கார் ராதா கவலபடாத”, எனத் தாயைப் பார்த்து கண்ணடித்துக் கூறினாள்.
“உனக்கு வாய் மட்டும் குறையாதே…”, என அடிக்கத் துரத்தினார் ராதா.
“விடும்மா . டேய் தங்கம் ஏன்டா ஊர் எல்லையில இறங்கி நடந்துவர? மாந்தோப்பு தாத்தா சொன்னாரு வரப்புல போயிட்டு இருக்கன்னு. இன்னும் நாலு நாள் கழிச்சி வரதா தானே சொன்ன”, கண்ணன் தன் மகளை அரவனைத்தபடிக் கேட்டார்.
“அப்படிதான் செய்யலாம்னு இருந்தேன்பா . என் வேலையெல்லாம் முடிஞ்சது அடுத்த மாசத்துல இருந்து எக்ஸாம் இந்த வாரத்துல இருந்து படிக்க லீவ் விட்டுடாங்க அதான் கிளம்பி வந்துட்டேன்”,நதியாள்.
“பரிட்சையா யாள். அப்படினா பரிட்சை முடிஞ்சு வந்து இருக்கலாம்ல?”, ராதா.
“பரிட்சை முடிஞ்சி வரமுடியாது ராதா. கம்பெனில இன்டர்ன்ஷிப்கு ஜாயின் பண்ணணும். அதான் இப்பவே வந்துட்டு போலாம்னு வந்துட்டேன்”, நதியாள்.
“என்ன கம்பெனி? இன்னும் படிப்பே முடியல”, ராதா.
“இதுவும் படிப்பு தான்மா. ஒரு கம்பெனில வேலை செஞ்சிட்டே படிக்கறது. நாங்க படிக்கறத அங்க செஞ்சி பாப்போம் அப்படி பண்ணா அனுபவம் கிடைக்கும் புதுசா நிறைய செய்யவும் ஐடியா கிடைக்கும். இதுக்கும் மார்க் இருக்கு”, நதியாள்.
“அப்படியா…. சரி . முதல்ல உள்ள வா. இரு முன்வாசல் வழியா வா”, ராதா.
“பாருப்பா அம்மாவ. இப்படி வந்தா என்னவாம்?”, நதியாள் சலுகையாக கண்ணனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
“அம்மா சொல்றத கேளு டா. ரொம்ப நாள் கழிச்சி வர என் மகாலட்சுமி முன்வாசல் வழியா உள்ள வாடா”, கண்ணன்.
“ஆஆஆ .. இதுலயும் செண்டிமென்டா? உங்கள வச்சிட்டு…. வரேன் நீங்களும் கூடவே வாங்க”, எனக் கண்ணனையும் இழுத்துக் கொண்டு சுற்றி முன்வாசலுக்கு வந்து நின்றாள்.
“இரு இரு”, ராதா கையில் ஆரத்தி தட்டுடன் வந்தார்.
“என்னம்மா இது? எதுக்கு இதுல்லாம் புதுசா?”, நதியாள் முறைத்தபடி கேட்டாள்.
“உன்மேல எத்தனை பேர் கண் பட்டதோ. இரு சுத்தி போடறேன்”, என ஆரத்தி சுற்றத்தொடங்கினார்.
நெற்றியில் திலகமிட்டு அவளை உள்ளே போக சொல்லிவிட்டு ஆரத்தியை கொட்டினார்.
நதியாளின் வீடு அன்று பார்த்தது போல இருந்தாலும் வீட்டை நவீனமயமாக்கி இருந்தார் கண்ணன். மேல் பார்வைக்கு மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை யென்றாலும் முன் முகப்பிலிருந்து ஒவ்வொரு இடத்திலும் பழமை கலந்த புதுமை தெரிந்தது. முன்பு இருந்ததை விட பின்பக்கம் வீட்டின் கட்டிடம் நீண்டு இருந்தது. மாடியில் அவளது அறையுடன் மூன்று பக்கமும் பால்கனியும் இருந்தது.
“அப்பா…. வீடு சூப்பர்”, வீட்டை சுற்றி பார்த்துவிட்டு வந்து கூறினாள் நதியாள்.
“உன் ரூம் பிடிச்சி இருக்காடா?”, கண்ணன்.
“ரொம்ப நல்லா இருக்குப்பா இங்க இருந்து நம்ம ஊரு வயல் தோப்புன்னு எல்லாத்தையுமே பாக்கலாம். யாருப்பா இது டிசைன் பண்ணது?”, நதியாள்.
“நம்ம சிதம்பரம் மாமா மகன் தான்டா”, கண்ணன்.
“அவங்களா… அவங்கள எல்லாம் பாத்து ரொம்ப வருஷம் ஆச்சிப்பா. ஒரு தடவை சுந்தரம் தாத்தாவ தான் பாத்தேன் காலேஜ் சேரறதுக்கு முன்ன”, நதியாள்.
“சரிடா இப்ப போய் பாக்கலாம்”, கண்ணன்.
“யார பாக்க போறீங்க அப்பாவும் மகளும்?”, பசும்பாலை ஆற்றியபடி கேட்டுக்கொண்டு வந்தார் ராதா.
“நம்ம சுந்தரம் தாத்தாவ தான்”, நதியாள்.
“எல்லாரையும் பாக்கலாம் இந்தா பால குடி. எப்படி இளச்சிட்ட பாரு”, என கால் லீட்டர் டம்ளரை முன்னால் நீட்டினார் ராதா.
“அச்சோ அம்மா… கால் லீட்டர் பால குடுக்கற. இப்பத்தான் வரவழில செவ்வெளநி குடிச்சேன். இவ்வளவு வேணாம்மா”, நதியாள்.
“அது எம்புட்டு நேரம் தாங்கும்? இந்தா குடி. வீட்ல நான் குடுக்கறத சாப்டணும்”, ராதா அதட்டி அவள் வாயில் ஊற்றினார்.
“சரி போதும் விடு ராதா. டிபன் சாப்டணும்ல அவ”, கண்ணன்.
“அதுக்கு இன்னும் நேரமிருக்கு. போய் வெரசா குளிச்சிட்டு வா. கோவிலுக்கு போகணும்”, ராதா.
“அம்மா வந்ததும் ஆரம்பிக்காதம்மா. அப்பறம் பொறுமையா நான் கோவிலுக்கு போறேன். நைட்லா தூங்கல. பர்ஸ்ட் தூங்க போறேன். யாரும் தொந்தரவு பண்ணாதீங்க நானே ரெடியாகி வந்துடறேன்”, எனக் கூறித் தன்னறைக்குச் சென்றாள் நதி.
“யாள்….”, என ராதா ஆரம்பிக்க,”விடு ராதா. புள்ள களைப்பா இருக்கா தூங்கட்டும். நீ ரெடியாகு நாம போலாம்”, எனக் கண்ணன் கூறி ரெடியாகச் சென்றார்.
“சரி. மதிய பூஜைக்கு நீங்க கூட்டிட்டு போயிட்டு வாங்க. ஐய்யனார்கிட்ட காத்து கருப்பு அண்டாம இருக்க தாயத்து வாங்கணும். அப்படியே ஒரு பாடம் போடணும்”, ராதா.
“அவள அவபோக்குல விடு ராதா. புள்ளை நல்லாதானே இருக்கா அப்பறம் எதுக்கு பாடம்?”, கண்ணன்.
“அதுல்லாம் இங்க வரப்ப போடறது தான். நீங்க கூட்டிட்டு போங்க அவ்வளவு தான்”, எனக் கூறி அடுக்களைக்குள் நுழைந்தார் ராதா.
“ம்ம்…”, கண்ணன்.
தூங்கி எழுந்த நதி டவலை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள். அவளை எழுப்ப வந்த ராதா, அவள் குளிப்பதை அறிந்து அவள் அணிய புது உடையும் நகையும் கொண்டு வந்தார்.
“அம்மா என்ன இது?”, என அவர் கையில் இருந்த தாவணி பாவாடை, நகைகளையும் பார்த்துக் கேட்டாள்.
“பட்டு பாவாடை ,பட்டு தாவணி. உனக்கு வாங்கின வைர நெக்லஸ் இது ஆரம் தங்க வளையல் ஒட்டியாணம்”, என சொல்லிக்கொண்டே இருந்தார் ராதா.
“ஏம்மா நான் என்ன நகைகடை பொம்மையா இத்தனையும் மாட்டிக்க?”, நதியாள்.
“பொண்ணு தான் போட்டுக்கணும் பொம்மை இல்லை. இந்தா போடு உனக்காக ஆசையா வாங்கினோம் நானும் அப்பாவும். வைர ஆரமும் சொல்லிட்டு வந்து இருக்கோம் செட்டா. அது திருவிழாக்கு போட்டுக்க வந்துடும்”, ராதா.
“அம்மா அம்மா… இங்க வா… இங்க உக்காரு. இதுல்லாம் எனக்கு தானே வாங்கின ஒவ்வொன்னா ஒவ்வொரு நாள் போட்டுக்கறேன். ஓரே நாள்ல இவ்வளவும் போட்டுக்க முடியாது. என் செல்ல அம்மால்ல. சொன்னா சரின்னு கேட்டுக்கணும்”, நதியாள் தன் தாயின் தாடையைப் பிடித்துக் கொஞ்சினாள்.
“ம்ம்…. சரி உனக்கு பிடிச்சத போட்டுட்டு வா. நானும் அப்பாவும் காலை பூஜைக்கு போயிட்டு வந்துட்டோம். மதியம் அபிஷேகம் இருக்கு போயிட்டு வா”, ராதா.
“சரிம்மா. நீ வரலியா?”, நதியாள்.
“இல்லடா இங்க திருவிழாக்கு நம்ம வீட்ல இருந்து தான் நெல் போகும் இன்னிக்கு அனுப்பனும். இன்னும் மத்த சாமானும் பாத்து அனுப்பனும். அப்பா மில்லுக்கு கொண்டு போறதுக்கு முன்ன எடுத்துக்க சொல்லி இருக்காங்க. நீங்க போயிட்டு வாங்க”, ராதா.
“சரிம்மா. நான் ரெடி ஆகி வரேன். இதுல இந்த நெக்லஸ் போதும் இந்த வளையல் தோடு போதும். மத்தது கொண்டு போயிடுங்க”, என தனக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு கூறினாள்.
“யாள் இந்த ஒட்டியாணம் போட்டுக்க நல்லா இருக்கும்டா”, ராதா.
“பெருசா இருக்குமா. சின்னதா இருந்தா பரவால்ல. இது புடவைக்கு தான் போடணும்”, நதியாள்.
“அப்படியா. சரி நீ ரெடியாகு நான் வந்துடறேன்”, என மற்ற நகைகளை எடுத்துக் கொண்டு கீழே சென்றார் ராதா.
ஸ்கை புளூ கலர் பாவாடையும் ஜாக்கெட்டுடன் பிங் கலர் தாவணி அணிந்து கழுத்தில் அழகான வைர நெக்லஸ் அதனுடன் இருந்த வைர தோடு அணிந்து தலைசீவி நடுவில் கிளிப் போட்டு லூசாக பின்னல் இட்டு இருந்தாள். முகத்தில் லேசாக பவுடர் அடித்து, புருவ மத்தியில் வட்ட பொட்டு இட்டு, கண்களில் மைதீட்டி அழகோவியமெனத் தயாராகினாள்.
தயாராகி கீழே வந்த தன் மகளை பார்த்து இருவரின் மனமும் குளிர்ந்துப் போனது. பாவாடை தாவணியில் தேவதைகளின் ஒட்டுமொத்த உருவமாக நடந்து வந்தாள் நதியாள்.
“அம்மா அப்பா… நல்லா இருக்கா?”, என அவர்கள் முன் நின்று கேட்டாள்.
“அடி என் ராசாத்தி ….என் கண்ணே பட்டுறும் போலவே. இரு கண்ணு வரேன்”, என ராதா அவளை நெட்டி முறித்து உள்ளே சென்று காய்ந்த மிளகாயைக் கொண்டு வந்தார்.
“கெழக்க பாத்து நில்லுடா”, கண்ணன் இழுத்து நிறுத்தினார்.
மிளகாயை அவளுக்கு சுற்றி அதை விறகடுப்பில் இடச் சொன்னார் ராதா பணியாளிடம் கொடுத்து.
“ஏங்க மறக்காம ஐய்யனார்கிட்ட கூட்டிட்டு போயிட்டு வாங்க”, என நியாபகபடுத்தி அனுப்பினார் ராதா.
காரில் ஏறிய நதியாளும் கண்ணனும் கோவில் வந்ததும் கீழே இறங்கினர்.
அங்கே அந்த சமயம் சிதம்பரமும் குடும்பத்துடன் வந்திறங்கினர்.
கண்ணன் ,”யாள் அங்க பாரு சிதம்பரம் மாமா குடும்பத்தோட வந்து இருக்காரு. நீ தட்ட எடுத்து காளியப்பன் கிட்ட குடுத்து கோவிலுக்கு கொண்டு போக சொல்லிட்டு அங்க வா. நான் முன்ன போய் பேசிட்டு இருக்கேன்”.
“சரிப்பா வந்துடறேன்”, நதியாள்.
“காளியண்ணா….”, அங்கே தூரத்தில் இருந்த காளியப்பனை அழைத்தாள்.
“வந்துட்டேன் பாப்பா. எப்படி இருக்கீங்க? எப்ப வந்தீங்க?”, துண்டை உதறி இடுப்பில் கட்டியபடி வந்து நின்றார் காளியப்பன்.
“எத்தன தடவை சொல்றது என்னை பாத்ததும் துண்ட இடுப்புல கட்டாதீங்கன்னு. இந்தாங்க கோவில்ல குடுங்க. நானும் அப்பாவும் வந்துடறோம்”, நதியாள்.
“சரி பாப்பா”, எனக் கூறியபடி தட்டை வாங்கினார்.
“காளியண்ணா அப்பறமா மாலதிய வரசொல்லுங்க வீட்டுக்கு. நான் நல்லா இருக்கேன். வீட்ல மத்தத பேசிக்கலாம்”, சிரித்த முகமாக கூறியனுப்பினாள்.
“சரி பாப்பா”, எனக் கூறி நகர்ந்தார்.
“வாங்க மாமா அத்த…. வாங்க மச்சான் வாமா திலகா”,எனக் கண்ணன் அவர்களை வரவேற்றார்.
“அடடே கண்ணா… வரோம்பா. எப்ப வந்த?”, சுந்தரம் கேட்க மற்றவர்கள் புன்னகையுடன் தலையசைத்தனர்.
“இப்பத்தான். யாள் வந்து இருக்கா அதான் கூட்டிட்டு வந்தேன்”, கண்ணன்.
“அப்படியா… எத்தனை வருஷம் ஆச்சி அவள பாத்து.எங்க அவ?”,மீனாட்சி.
“அதோ அங்க வரா”, என நதியாளை கைக்காட்டினார் கண்ணன்.
சிறுபிள்ளையாக கண்டவர்கள் இன்று வளர்ந்து இளமையின் பூரிப்பில் இருப்பவளைக் கண்டதும் அப்படியே உறைந்து நின்றனர் மொத்த குடும்பமும்.
“நம்ம யாளா இது? தங்க சிலையாட்டம் இருக்காளே…. “,மீனாட்சி.
“ஆமாங்கத்தை “, திலகவதியும் அவளைப் பார்த்துக் கொண்டே கூறினார்.
“ஹாய் சுந்தா…. ஹாய் மீனா…..ஹாய் திலாத்தை… ஹாய் மாமா”, என அங்கிருந்து கைகாட்டி கத்தியபடி வந்தாள் நதியாள்.
மீனாட்சி பாட்டி அவளை அருகில் நிறுத்தி மேலிருந்து கீழேவரை பார்த்து, மனம் நிறைந்து போயினர் அத்தனை பேரும்.
“என்ன மீனா என்னை அடையாளம் தெரியலியா? இப்படி மேலயும் கீழயும் பாக்கற”, நதியாள்.
“அடியே என் ராசாத்தி…. நிஜமா நீயா இது? என் கண்ணே பட்டுறும் போலவே. எப்படி இருக்க டி?”, என நதியாளை நெட்டி முறித்தபடிக் கேட்டார்.
“அதான் பாக்கறியே நீயே சொல்லு எப்படி இருக்கேன்னு”, இடுப்பில் கைவைத்து கேட்டாள் நதி.
“இளவரசியாட்டம் இருக்க டி”, மீனாட்சி.
“ஹாஹா…காமெடி போதும். சுந்தா பக்கத்துல நில்லு”, என இழுத்து நிறுத்தியவள் இருவரின் காலிலும் விழுந்து ஆசி பெற்றாள்.
“மகாராணியாட்டம் இருப்படா”, என சுந்தரம் தாத்தா உச்சி முகர்ந்தார்.
“இருங்க அத்தை மாமாகிட்டயும் ஆசி வாங்கிட்டு வரேன்”, என அவர்கள் இருவரையும் அருகருகில் நிற்கச்சொல்லி காலில் விழுந்தாள்.
சிதம்பரமும் திலகாவதியும் ,”எல்லா வளமும் நலமும் பெற்று வாழு டா”,என ஆசிர்வதித்தனர்.
“இப்ப சொல்லு சுந்தா உன் காப்பு எனக்கு குடுப்பியா?”, சுந்தரம் தாத்தாவிடம் கேட்டாள்.
“என்ன சாதிச்சன்னு முதல்ல சொல்லு”, மீனாட்சி.
“உனக்கு சர்டிபிகேட் குடுத்தா தான் நம்புவியா மீனா?”, நதியாள்.
“யாள் குட்டி பாட்டிய பேர் சொல்லி கூப்பிடக்கூடாது”, கண்ணன்.
“விடுங்க மாப்பிள்ளை அவ அப்டி கூப்டாதான் நல்லா இருக்கு”, சுந்தரம் தாத்தா.
“இங்க பாரு மீனா என்ன செஞ்சா குடுப்பன்னு சொல்லு”, நதியாள்.
“எதாவது உருப்படியா செய். எனக்கு குடுக்க தோணினா குடுக்கறேன்”, மீனாட்சி.
“இதுல்லாம் ஒத்துக்க முடியாது. சரியா ஒரு பெட் கட்டு”, நதியாள்.
“சரி வீட்டுக்கு வாடா பேசிக்கலாம் அத பத்தி”, சுந்தரம்.
“சரி. டன். வாங்க உள்ள போலாம்”, என முன்னே ஓடினாள் நதி.
சிதம்பரத்தையும் திலகாவையும் முன்னே அனுப்பிவிட்டு மீனாட்சி கண்ணனை அழைத்தார்.
“மாப்பிள்ளை யாளுக்கு ஜாதகம் விடற யோசனை இருக்கா?”, மீனாட்சி.
“இல்லைங்க அத்தை இந்த வருஷம் தான் படிப்பு முடியும் . அதுக்கப்பறம் அவ வேலைக்கு போகணும்னு சொல்லிட்டு இருக்கா. இன்னும் அதபத்தி யோசிக்கல”, கண்ணன்.
“சரி. எப்ப எடுத்தாலும் முதல்ல என்கிட்ட குடுங்க. எங்க பேரனுக்கு நாங்க கேக்கறோம்”, மீனாட்சி.
“அத்தை….”, என சந்தோஷத்தில் திகைத்து அப்படியே நின்றுவிட்டார் கண்ணன்.
“ஆமாப்பா…. எங்களுக்கு யாள ரொம்ப பிடிச்சி இருக்கு. ரெண்டு பேரும் படிச்சவங்க, முன்னமே தெரியும். அவங்க விருப்பப்பட்டா மேற்கொண்டு பேசலாம்”, சுந்தரம்.
“சரிங்க மாமா. நான் ராதா கிட்ட கலந்துட்டு சொல்றேன்”, கண்ணன்.
“சரிப்பா. நானும் சிதம்பரம்கிட்ட பேசிட்டு பேரன் இந்த வாரம் வரான் அவன்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்”, சுந்தரம்.
“சரிங்க மாமா”, கண்ணன்.
அனைவரும் தரிசனம் முடித்து கிளம்பினர் .
“அடியே வாயாடி வீட்டுக்கு போனதும் உன் அம்மாவ சுத்தி போட சொல்லு. அத்தனை சிறுக்கிங்க கண்ணும் உன்மேல தான் இருக்கு”, மீனாட்சி.
“அவ்வளவு அக்கறை இருந்தா நீயே வந்து சுத்திபோடு மீனா”, நதியாள்.
“என் வீட்டுக்கு வா எல்லாமே உனக்கு பண்றேன்”, இரு அர்த்தத்துடன் கூறினார் மீனா.
“ஹம்ம்… சரி அப்பறம் வீட்டுக்கு வரேன் மீனா. சுந்தா. மாமா திலாத்தை . போயிட்டு வரேன்”, நதியாள்.
“வரோம் மாமா அத்தை” ,என அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினார் கண்ணன்.
இரண்டு நாட்களில் அகரனும் ஊருக்கு வந்தவன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தான். அந்த சமயம் நதி அந்த வீட்டிற்கு வந்தாள்.
“மீனா…. சுந்தா…. திலாத்தை….”, என அழைத்தபடி உள்ளே வந்தாள்.
“எங்க யாரையும் காணோம்?”,எனத் திரும்பி திரும்பி பார்த்தபடி உள்ளே வந்தாள் நதி.
அந்த சமயம் அகரன் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான்.
பின்னாள் பார்த்து கொண்டே வந்தவள் அகரனின் மேல் மோதினாள். அவள் மோதியதில் அவனும் படிகளில் விழுந்தான் அவனின் மேல் அவளும் விழுந்தாள்.
“ஹேய்…. “, என கத்திய அகரன் அவளை பார்த்தவுடன் அமைதியானான்.
இருவரின் கண்களும் ஒன்றை இன்னொன்றை தழுவியபடி அப்படியே உறைந்து இருந்தது.
கண்களில் தான் எத்தனை காவியம்….
கண்மணியின் கருவென இருவரும் ஒருவரை ஒருவர் தன்னுள் புதைத்துக் கொள்ள….
சுற்றம் மறந்து …..
தங்களை மறந்து….
அவர்களை அவர்களுள் அறிந்திடும் தேடல் தொடங்கியது…. 💖💖💖💖💖💖