9 – காற்றின் நுண்ணுறவு
தர்மதீரனிடம் விடைப்பெற்றுக்கொண்டு தோழிகள் இருவரும் தங்களது அறைக்கு வந்து சேர்ந்தனர்.
“அப்பப்ப்பாஆஆஆ….. எந்த நேரத்துல இந்த ஆபீஸ்ல கால் எடுத்து வச்சமோ அப்ப இருந்து ஒரே ரணகளமா போகுது… ஏன் வகி நாம வேற வேலை தேடிட்டு போயிடலாமா?”, என பாலா தனக்கு தானே பேசிவிட்டு கடைசியில் வல்லகியிடம் நின்றாள்.
“எங்க போவ பேபி? இப்ப தான் நாம ட்ரைனீ-ஆ ஜாயின் பண்ணி இருக்கோம். கொறஞ்சது ஒரு இரண்டு வருஷம் வேலை பாத்தா தான் வேற கம்பெனில நம்மல வேலைக்கு எடுப்பாங்க….”, எனக் கூறியபடி அடுத்த நாள் போட வேண்டிய உடுப்புகளை எடுத்து வைத்துவிட்டு தண்ணீர் பிடிக்க வெளியே சென்றாள்.
“இத மறந்துட்டோமே… நமக்கு இன்னிக்கு தானே நாய்சங்கிலியே குடுத்தானுங்க…. வேற சங்கிலி கிடைக்க இரண்டு வருஷம் வெயிட் பண்ணணுமோ ????? “
“இந்தா பாலா… உனக்கு பாட்டில். நாளைக்கு காலைல ஜாக்கிங் போகணும். சோ ஐஞ்சு மணிக்கு எந்திரிச்சு என்கூட வரணும். போன் நோண்டாம சீக்கிரம் தூங்கு”
“என்ன…. நடுராத்திரில ஜாக்கிங் ஆ? நமக்கு ஷிப்டே பத்து மணிக்கு தானே…. நான் 9.30 மணிக்கு எந்திரிச்சு ரெடி ஆகி போனா போதும். இந்த கெட்ட பழகத்த எல்லாம் எனக்கு சொல்லி குடுக்க ட்ரை பண்ணாத சொல்லிட்டேன்”, பாலா அதிர்ச்சியாகி ஆவேசமாக பேசினாள்.
“நான் சொல்ற மாதிரி நடந்தா தான் உனக்கு சன்டே க்ளாஸ் எடுப்பேன். இல்லைன்னா உன்னை கழட்டி விட்டுட்டு அந்த சிடுமூஞ்சிக்கு மட்டும் தான் கோச்சிங்”, வல்லகி மென் முறுவல் பூத்தபடிக் கூறினாள்.
அடடா….. வல்லகியின் முறுவல் தான் எத்தனை ஈர்க்கிறது…. லேசாக தெரியும் அந்த தெத்துப்பல் தான் எத்தனை அழகு…..
“நீ கோச்சிகிட்டா எனக்கு கோச்சிங் குடுக்கமாட்ட…. எல்லாம் என்னை சொல்லணும்.. என் வாய் இருக்கு பாரு… வரேன்….. விடிய விடிய முழிச்சிட்டு இருந்து உன்கூட ஓடி வந்து தொலையறேன்”, கடுப்புடன் கூறிவிட்டு தலை முதல் கால் வரை போர்த்திக் கொண்டு உறங்கினாள்.
வல்லகி மெதுவாக புன்னகைத்து விட்டு, அறை விளக்கை அணைத்துவிட்டு டேபிள் லேம்ப் உதவியுடன் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்.
ரெஸ்டாரெண்டில் இருந்து கருணாகரன் இல்லத்திற்குச் சென்ற தர்மதீரனும், சுதாகரும் கருணாகரன் சொன்னதைக் கேட்டுத் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டனர்.
“டேய்…. இப்படியே இருந்தா எப்படி? நாம அடுத்து என்ன பண்றது?”, கருணாகரன்.
“நாங்க என்ன சார் பண்றது? நம்மனால சேர்மேன் ரீச் பண்ணமுடியல. ஆனா அவன் எப்படி ரீச் பண்ணான்? இருந்த ஒரு க்ளூவுக்கு இப்பதான் விடை தெரிய ஆரம்பிச்சது. அதுக்குள்ள கேட் போட்டுட்டாங்க…. “, சுதாகர் ஆதங்கமாகக் கூறினான்.
“சுதா… அந்த பார்சல்ல என்ன இருந்தது?”, தர்மதீரன்.
“ஏதோ பழங்கால பொருட்களோட ஒரு டைரி இருந்தது. அப்பறம் வித்தியாசமான சாவி ஒன்னு இருந்தது”, என தான் போட்டோ எடுத்திருந்தவற்றைக் காட்டினான்.
கருணாகரனும் அதைப் பார்த்துவிட்டு ஏதும் புரியாமல் அவர்கள் முகத்தைப் பார்த்தபடி இருந்தார்.
“சரிங்க சார். நாங்க வெளிய போயிடறோம். ஆனா அவனுங்க எங்க கண்காணிப்புல தான் இருப்பாங்க. சேர்மேன்கிட்ட எவ்வளவு சீக்கிரம் பேச முடியுமோ பேசிட்டு ஒரு மீட்டிங் எங்களுக்கு ஏற்பாடு பண்ணுங்க. யாருக்கும் அது தெரியக் கூடாது…. “, தர்மதீரன் மெதுவாகவும் அழுத்தமாகவும் கூறினான்.
“சரி தர்மா…..நான் ஏற்பாடு பண்றேன். ஆமா அந்த புது பொண்ணு வல்லகியா அந்த வித்தை கத்து குடுக்கறேன்னு சொன்னா?”, கருணாகரன்.
“ஆமா சார்…. நல்ல திறமைசாலி. புத்திசாலியும் கூட…. “, சற்றே மென்னகையுடன் கூறினான் தர்மதீரன்.
“எங்க கத்துகிட்டாங்க அதை அவங்க?”, சுதாகர்.
“அவங்க ஊர் பக்கமா இருக்கலாம். அந்த பொண்ணு சவுட் தமிழ்நாடுல இருந்து தானே வந்திருக்கு…. சவுத்ல அந்த வித்தையெல்லாம் இன்னும் சொல்லி குடுத்துட்டு தான் இருக்காங்க…. நாமலும் கத்து வச்சிக்கறது நல்லது”, நடந்தபடியே கூறியவன் கண்களில், எதிரே அவன் பிடித்த எட்டுப் பேரில் மூவர் தள்ளாடியபடி நடந்து செல்வது கண்ணில் பட்டது.
சட்டென சுதாகரிடம் சைகை காட்டிவிட்டு அவர்களைத் தொடர்ந்துச் சென்றான்.
தலையில் அணியும் மாஸ்க்ஐ முகம் மறைத்தபடி அணிந்துக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்ததும் சத்தம் இல்லாமல் அடித்து சாய்த்துவிட்டு யாருக்கோ அழைத்து வரச்சொன்னான்.
இரவு முழுவதும் சுதாகரிடம் இருந்து தப்பித்த இடத்தில் இருந்து அந்த ஜிதேஷின் இல்லம் உள்ள பகுதி முழுவதும் சுற்றியபடியே இருந்தவன் விடியும் நேரத்தில் பீச்சில் ஒரு படகில் படுத்தான்.
அலாரம் இல்லாமலே ஐந்து மணிக்கு எழுந்த வல்லகி பாலாவையும் எழுப்பி தன்னுடன் ஜாக்கிங் அழைத்துச் சென்றாள்.
வழியெல்லாம் தூங்கி வழிந்தபடி வந்த பாலா எதிரில் வந்தவன் மேல் மோதி கீழே விழுந்தாள்.
“ஹேய் பாலா….”, என அழைத்தபடி வல்லகி பாலாவைத் தூக்கிவிட்டாள்.
“ஏங்க பாத்து ஓடிவரமாட்டீங்களா? “, மோதியவனும் ஒரு கை கொடுத்தான்.
“நீ ஏன்யா வந்து இடிச்ச?”, பாலா கொட்டாவி விட்டபடிக் கேட்டாள்.
“அது சரி…. தூக்கத்துல நடக்கற வியாதி தான் நான் கேள்விப் பட்டு இருக்கேன். உங்களுக்கு ஓடற வியாதி இருக்கு போலவே”, என பாலாவைக் கிண்டலாகக் கேட்டவன் வல்லகியைப் பார்த்து மிதமாக சிரித்துவிட்டு, “பாத்து கூட்டிட்டு போங்க. அவங்க நல்ல தூக்கத்துல இருக்காங்க போல”, எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
“ஹேய் வகி… அவன் என்னை கிண்டல் பண்றான் நீ சிரிச்சிட்டு நிக்கற… அவன அடிச்சு என்னனு கேளு”, மீண்டும் அவள் வார்த்தைகளை முடிக்கும் முன் கொட்டாவி வந்திருந்தது.
இம்முறை வல்லகி சற்று சத்தமாக சிரித்துவிட்டு பாலாவின் கைப்பிடித்து மெல்ல ஓட ஆரம்பித்தாள்.
சுதாகர் அதிகாலையில் எழுந்து தர்மதீரனைத் தேடிய படி அவர்கள் எதிரே வந்துக் கொண்டிருந்தான்.
“ஹலோ மிஸ்டர் சுதாகர்… என்ன ஜோடி இல்லாம தனியா வரீங்க?”, வல்லகி.
“தீரன தேடிட்டு இருக்கேன். நீங்க வர்ற வழில எங்கயாவது பாத்தீங்களா?”, சுதாகர் சற்றே கலக்கத்துடன் கேட்டான்.
“இல்ல…. பாக்கல… உங்களோட தானே இருப்பாரு எப்பயும்? அந்த ஜிதேஷ் ஆளுங்க தப்பிச்சிட்டதா சொன்னீங்களே அதுக்கப்பறம் எங்க போனீங்க இரண்டு பேரும்?”, வல்லகி சற்றே யோசனையுடன் கேட்டாள்.
“வேற வேலையா ஒன்னா தான் போனோம். நைட் போனவன் இன்னும் வரல… இது வழக்கம் ஆனாலும் இன்பார்ம் பண்ணிடுவான். இன்னிக்கு எந்த மெஸேஜூம் வரல…. அதான் தேடிட்டு இருக்கேன்”, சுதாகர்.
“நீங்க இரண்டு பேரும் யாரு ? பேசறதும் பண்றதும் ஐடி ப்ரோபஷனல் மாதிரி இல்லையே சீனியர்”, பாலா சந்தேகமாக கேட்டாள்.
“தெரியாம இருக்கறது நல்லது. சரி நான் அவன தேடறேன்”, எனக் கூறிவிட்டு நகர்ந்தவனை வல்லகி தடுத்தாள்.
“நில்லுங்க மிஸ்டர் சுதாகர். நாங்களும் ஹெல்ப் பண்றோம். உங்க நம்பர் குடுங்க எனக்கு கிடைச்சார்ன்னா சொல்றேன்”, எனக் கூறி அவன் நம்பரை சேமித்து கொண்டாள்.
பெரும்பாலும் கடற்கரையில் தான் அதிகாலை வேலையை கடத்துவான் என்பதை அறிந்துக்கொண்டு தோழிகள் இருவரும் அவனைத் தேடியபடியே சென்றனர்.
வெகுதூரம் அவனைத் தேடி கடலோரமாக வந்தவர்கள் ஒரு இடத்தில் நின்று சுதாகரை அழைத்தனர்.
அழைப்பு எடுக்கப்பட்டதும் பெரும் சத்தத்துடன் அது அணைந்து போனது.
ஏதோ விபரீதம் என்ற உணர்ந்த வல்லகி தங்களைச் சுற்றியும் பார்வையை சுழற்றும் பொழுது ஒரு கார் அவர்களை நோக்கி வருவதை உணர்ந்து பாலாவை நடைபாதை மேடையில் தள்ளிவிட்டு இவள் ரோட்டின் மறுபுறம் ஓடினாள்.
எதிர்பக்கம் வந்த இன்னொரு கார் வல்லகியை தூக்கி வீசியது.
சட்டென நிகழ்ந்த விபத்தில் பாலா அதிர்ச்சியில் மூர்ச்சையாகி விழுந்து விட்டாள்.
சுதாகர் தாக்கப்பட்டதை அறிந்ததும் வல்லகியை தொடரக் கூறி தர்மதீரன் ஆட்களை அனுப்பி இருந்தான்.
அவர்கள் அவ்விடத்திற்கு சற்று தூரத்தில் இருந்தபோதே விபத்து நடந்திருந்தது.
வல்லகி தூக்கி எறியப்பட்ட வேகத்தில் அவளது மூச்சு குழாயில் ஒருவிதமான அழுத்தமும் தோன்றி அது அவளது மூளைக்கு கடத்தப்பட்டது.
இராசாயன கலவையும், மின்சார தாக்கமும் ஒருங்கே பெற்றது போலான மாற்றம் அவள் உடலில் ஏற்பட்டு அவளை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்றது.
கண்கள் திறந்த நிலையில் அவள் உறக்கத்தில் இருந்தாள்.
தர்மதீரன் சுதாகருக்கு ஒரு பக்கம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டு வல்லகி மற்றும் பாலாவைக் காண விரைந்தான்.
தர்மதீரனின் முகத்தில் இருந்த ரௌத்திரம் எவரையும் ஒரு நொடி நடுங்கச் செய்ய வைக்கும். அவனது அலைப்புறுதலை இரண்டு பேர் சிரிப்புடன் இரசித்துக்கொண்டு இருந்தனர்.
தர்மதீரன் மருத்துவமனை வந்து வல்லகி மற்றும் பாலாவின் அறையை அறிந்துக் கொண்டு வேகமாக வந்தான்.
அவன் உள்ளே நுழையும் சமயம் வல்லகி எழுந்து அமர்ந்தாள். அருகில் பாலா இன்னும் மயக்கமாக கிடந்தாள்.
தலையில் ஏற்பட்ட அடியின் காரணமாக வலியும், மூச்சு விடுவதில் சற்று சிரமமும் அவளுக்கு ஏற்பட்டது.
“வல்லகி…. உன்ன தானே கார் இடிச்சது?”, தர்மதீரன் பாலாவை பார்த்துவிட்டுக் கேட்டான்.
“ஆமா…. ஆனா…. எனக்கு மூச்சு விட கஷ்டமா இருக்கு. டாக்டர கூப்பிடுங்க”, அவள் குரல் மிகவும் மெலிந்து ஒலித்தது.
தர்மதீரன் டாக்டரை அழைத்துக்கொண்டு வந்து வல்லகிக்கு ஏற்பட்ட விபத்தைப் பற்றி கேட்டறிந்தான்.
“நர்ஸ்… ஆக்ஸிஜன் மாஸ்க் போடுங்க”
அது போட்டதும் வல்லகிக்கு இன்னும் மூச்சு விடுவதில் சிரம்ம் ஏற்பட்டது.
நர்ஸ் படபடத்தபடி மாஸ்க் எடுத்தவுடன் சற்று மூச்சு சீரானது.
இரண்டு மூன்று முறை டாக்டரும் அதைப் பரிட்சித்துப் பார்த்துவிட்டுக் குழம்பினார்.
பின்னர் நர்ஸ்ஸை ஒரு சிறிய தொட்டியில் இருக்கும் செடியை கொண்டு வரச்சொல்லி அதை சுவாசிக்க வைத்தார்.
இப்பொழுது அவளது மூச்சு முழுதும் சீராக வந்து சென்றது. வல்லகி இருக்கும் அறையில் இருந்த ஜன்னல்களை திறந்துவிடச்சொல்லிவிட்டு நிறைய தொட்டிச்செடிகளை ஜன்னலில் இருந்து சூரிய வெளிச்சம் வரும் இடம்வரை வைக்கச்சொல்லி வல்லகியை அதற்கு அருகில் படுக்க வைத்தார்.
வல்லகி கொஞ்சம் கொஞ்சமாக உறக்க நிலைக்கு சீரான சுவாசத்துடன் செல்வதைப் பார்த்துவிட்டு, டாக்டர் வல்லகியை முழுதாக டெஸ்ட் எடுக்கச் சொல்லி கூறினார். பாலாவைச் சோதித்து விட்டு சிறிது நேரத்தில் கண்விழித்து விடுவாள் எனக் கூறிச்சென்றார்.
இரண்டு மணிநேரம் கழித்து பாலா கண்விழித்தாள்.
“வகி… வகி… உனக்கு என்னாச்சி டி? அய்யய்யோ…. இப்படி ஆகிடிச்சே….. டாக்டர்….. டாக்டர்….. வகிக்கு என்னாச்சி? “, என உறங்குபவளை எழுப்பினாள்.
“மேடம் இருங்க இருங்க… அவங்க தூங்கிட்டு இருக்காங்க…. ஒன்னும் இல்லை… சின்ன அடி தான்…. உங்களுக்கு இப்ப உடம்பு எப்படி இருக்கு? பரவால்லயா? அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம இருங்க டாக்டரை அழைச்சிட்டு வரேன்”, நர்ஸ் அவளை சமாதானம் செய்துவிட்டுச் சென்றாள்.
சிறிது நேரத்தில் டாக்டர் வந்து பாலாவை செக் செய்துவிட்டு, “உங்களுக்கு அதிர்ச்சினால தான் மயக்கம் வந்திருக்கு. வேற எந்த பிரச்சனையும் இல்ல… உங்க பிரண்ட்-ஆ அவங்க?”, என வல்லகியைக் காட்டிக் கேட்டார்.
“ஆமா டாக்டர். அவளுக்கு என்னாச்சி…. அடி ரொம்ப பலமா? ஒன்னும் பிரச்சனை இல்லையே…. வகிக்கு எதுவும் இல்லைதானே”, என சிறுகுழந்தையைப் போல தேம்பியபடி கேட்டாள்.
“பெருசா எதுவும் இல்லம்மா…. புல் செக்அப் செய்ய சொல்லி இருக்கேன்.. வீட்டுக்கு சொல்லி யாராவது வரசொல்லுங்க… நர்ஸ் இவங்க திங்க்ஸ் குடுங்க…. டேக் கேர். நத்திங் டூ வௌர்ரி”, மெலிதாக முறுவலித்துவிட்டுச் சென்றார்.
தன் போன் வந்ததும் பாலா அவசரமாக வல்லகியின் வீட்டிற்கு அழைத்தாள். அங்கே மற்றொரு அதிர்ச்சியான தகவல் காத்திருந்தது….