9 – ருத்ராதித்யன்
பைரவக்காட்டில் அருவம் தன் முன்னால் உள்ள சுயம்பு லிங்கத்திடம் தன் துயரத்தை கண்ணீர் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
அருவமாயிற்றே….. அதன் கண்ணீர் யாருக்கும் தெரியாது அல்லவா?
ஆனால் எல்லாம் அறிந்த ஈசனுக்கு தெரியாமல் இல்லையே…. அவனே அதன் துயரத்தை துடைக்க வேண்டும்.
வெளியே உறுமல் சத்தம் கேட்டும் அருவம் இன்னும் திரும்பவில்லை.
கார்மேகன் உள்ளே வந்து அருவத்தை மோப்பம் பிடித்து அதன் அருகில் நின்றது.
அருவத்தின் கண்ணீர் கண்களுக்கு புலப்படாவிட்டாலும், அதன் மனவேதனையை நன்றாக உணர்ந்து கொண்டது கார்மேகன்.
“ஏன் இத்தனை துயரம் அமரரே ?”, கார்மேகன்.
“மீண்டும் வஞ்சிக்க, வங்கை கொண்டு வீழ்த்த முயல்கின்றனர் கார்மேகா…. மகதன் அவர்களின் பிடியில் இருக்கிறான்”, அமரன் எனும் பெயர் கொண்ட அருவம் துயரத்திற்கான காரணத்தை விளக்கியது.
கார்மேகன் ஓர் நொடி அதிர்ந்து பின் லிங்கத்தை தரிசித்து, தன் மனதை சமன்படுத்திக் கொண்டது.
“அமரரே…. நடக்கும் யாவும் அப்பனின் செயல்…. நமக்களித்த வாக்கின் படி, இம்முறை அனைத்தும் இம்மி பிசகாமல் நடக்கும். அதில் துளியும் எனக்கு ஐயமில்லை…. வீண் கவலை விடுத்து நாம் தலைவரை மீட்கும் பணியை தொடங்குவோம்”, கார்மேகன் அடுத்த பணிக்கான ஆரம்பம் பற்றி வினவியது.
“உண்மை தான் கார்மேகா… ஆனாலும் மனம் அலைப்புறுகிறது. மகதன் தானே நம் பணியின் முக்கிய திறவுகோல்… அவனை இன்று சிக்கலில் விடுத்து வந்த எனது இயலாமை நினைத்து மனதினுள் எனையே நிந்தித்து வெறுக்கிறேன்”, அருவம்.
“தங்களை தாங்களே நிந்தித்து கொள்வதில் பயனில்லை அமரரே…. நாம் முடுக்க வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கிறது. குறித்த முகூர்த்தத்திற்குள் அனைத்தும் தயாராக இருக்க வேண்டும்…. பைரவன் பிறந்துவிட்டான். அவனுக்கான பயிற்சிகள் அளிக்க நமது கொம்பனை நியமிக்கிறேன்…. பைரவன் இருக்கும் இடத்திலும் ஒரு கொம்பன் இருக்கிறான். அந்த இடத்தில் நம் கொம்பனை இடம்மாற்ற வேண்டும்….”, கார்மேகன் தனது திட்டத்தைக் கூறினான்.
“நல்லது .. அந்த கொம்பனை நமது இடத்திற்கு அழைத்து வந்து வைத்துவிடு…. தீரனின் நிலை அறிந்தாயா?”, எனக் கேட்டபடி அருவம் தன்னை சமன்படுத்திக் கொண்டு அடுத்த பணியைச் செய்ய ஆயத்தமானது.
“தீரன் பற்றி பைரவனும் மகதனுமே அறிவர்”, கார்மேகன்.
“நான் தீரனை அடையாளம் காண முயல்கிறேன்…. மேலும் பல அறிய வகை மிருகங்கள் காக்கப்பட வேண்டும்… இம்முறை எந்த ஒரு உயிரும் அவர்களுக்காகவோ, அவர்களாலோ பலியிட அனுமதிக்கக் கூடாது”, அருவம் கூறி லிங்கத்தை வணங்கி வெளியேறியது.
கார்மேகன் லிங்கத்தை வணங்கிவிட்டு வெளியேறி கொம்பனைக் காணச் சென்றது.
“கொம்பா…… “, என்ற குரல் கேட்டு சீறிவரும் சிங்கமென வந்து நின்றது அந்த பைரவர்.
“வணங்குகிறேன் கார்மேகரே….. “, கொம்பன்.
“வணக்கங்கள்… பைரவன் பிறந்துவிட்டான்……”, கார்மேகன் முகத்தில் மென்னகை பரவ கூறியது.
“எப்பொழுது பயிற்சி அளிக்க நான் கிளம்ப வேண்டும்?”, கொம்பன் நிமிர்ந்து நின்றபடி கேட்டது.
“இப்பொழுதே…. அவன் இருக்கும் இடத்தில் ஒரு கொம்பன் இருக்கிறது. அதை இங்கே மறைத்துவிட்டு நீ அங்கே அவனுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்…. “, கார்மேகன் முகத்தில் பழையபடி உணர்வுகள் அற்ற முகபாவம் வந்தது.
“தாமும் என்னுடன் வருகிறீரா?”, கொம்பன் கார்மேகனின் நிலைப் புரிந்து கேட்டது.
“இல்லை… நீ பயிற்சியை சிறப்பாக கொடு….. அவன் குறும்புக்காரன்… சற்று கடினமான பயிற்சியையே வழங்கு… சிறிதும் மனம் இளகாதே”, எனக் கூறும் போதே, கார்மேகன் எவ்வளவு முயன்றும் அதன் முகத்தில் தோன்றிய குறுநகையை மறைக்க இயலவில்லை.
“அவனை காண தாங்களும் ஆவலோடு இருக்கும் பட்சத்தில் உடன் வந்து அவனைக் காணலாமே?”, என கொம்பன் கேட்டது.
“இல்லை கொம்பா…. அவனைக் கண்டுவிட்டால் அவனை பிரிந்திருப்பது அசாத்தியமாகிவிடும்… அவனும் என்னை பிரிந்திருக்க மாட்டான்… அவனை முதலில் வல்லவனாக வளர்ப்போம்… நீ எப்பொழுது இங்கிருந்து செல்கிறாய்…?”,என காரியத்தில் கண்ணாக இருந்து பேசியது கார்மேகன்.
“உத்திரவிட்டால் இந்நொடி கிளம்ப தயாராக இருக்கிறேன் கார்மேகரே”, என பணிவாக கூறியது கொம்பன்.
“முதலில் அங்கிருக்கும் கொம்பனை கவனித்துக்கொள். அதன் நடவடிக்கை, பழக்க வழக்கங்கள் என அனைத்தும் கவனி. பின் இந்த வாரத்தில் அங்கு சென்று விடு… இன்னும் சில காலம் தான் நமக்கு இருக்கிறது….. அதற்குள் அவனைத் தயார்படுத்திவிடு கொம்பா”, மீண்டும் வலியுறுத்தியது கார்மேகன்.
“நிச்சயமாக கார்மேகரே…. நான் விடைபெறுகிறேன்”, என கொம்பன் பைரவக்காட்டின் எல்லைவரை வந்து அங்கே காவலுக்கிருந்த வேறு பைரவர்களிடம் சிறிது கலந்தாலோசித்துவிட்டு தன் இணையுடன் அங்கிருந்து புறப்பட்டது.
இதழியின் வளைகாப்பு முடிந்து வந்ததும் மிதலன் ரணதேவ்வைக் காண வந்திருப்பதாக கூறினார் வேலன்..
“அவனுக்கு சாப்பிட எதாவது குடுத்தியா வேலா? நான் ஐஞ்சு நிமிஷத்துல வரேன்… பாப்பாகிட்டயும் சொல்லி வரச்சொல்லு”, எனக் கூறிவிட்டு தன்னறை நோக்கிச் சென்றார்.
வேலன் ஆருத்ரா இருந்த அறைக்குச் சென்று கூறிவிட்டு மிதிலனுக்கு பழங்களை நறுக்கி தேன் ஊற்றி கொண்டு சென்று கொடுத்தார்.
“ஏஞ்சாமி…. நான் கொண்டாந்த தேன எனக்கே போட்டு தரீங்களே…. பெரியய்யாவுக்காக தானே நான் இராவுல மலையேறி எடுத்தாந்தேன்…. அவருக்கு குடுங்க… எனக்கு ஒன்னும் வேணாம்”, வேலன் கையில் இருந்ததைக் கண்டதும் கூறினான் மிதிலன்.
“நீ எதாவது சாப்டா தான் ஐயா வந்து பேசுவாரு…. தர்க்கம் பண்ணாம சாப்புடு மிதிலா … சாப்பாடும் சாப்பிடமாட்ட… ஐயா மனச கஷ்டப்படுத்தக்கூடாது”, என வேலன் சற்று உரிமையாகக் கடிந்துக்கொண்டார்..
“ஐயா வீட்ல நான் எப்ப சாமி சாப்டமாட்டேன்னு சொன்னேன்? குடுங்க…”, என அதை இரண்டு நொடியில் சாப்பிட்டு முடித்து இன்னும் கேட்டான்.
வேலன் சிரித்தபடி தான் கொண்டு வந்திருந்த பெரிய கிண்ணத்தை அவனிடன் கொடுத்தார்.
ரணதேவ் விக்கிரமர் சொன்னபடி ஐந்து நிமிடத்தில் அவ்விடம் வந்தார்.
பின்னாலேயே ஆருத்ராவும் வர மிதிலன் பட்டென எழுந்து நின்று சாஷ்டாங்கமாக இருவரின் காலிலும் விழுந்தான்..
“தனுப்பா… அவர எந்திரிக்க சொல்லுங்க”,என ஆருத்ரா சற்று தள்ளி நின்று கூறினாள்.
“மிதிலா… எந்திரி டா… பாப்பா கால்ல ஏன்டா விழுந்து சங்கடப்படுத்தற? அவள விட நீ பெரியவன் டா”, என ரணதேவ் அதட்டினார்.
“சாமி நான் வயசுல மட்டும் தான் பெரியவன்.எங்க ஆயி சாமி இவங்க… இவங்களால தானே நாங்க எங்க மண்ணுல வாழுறோம். அவசரப்பட்டு நான் செய்ய இருந்த தப்ப தடுத்து நிறுத்தி இன்னிக்கு எங்க மண்ண எங்களுக்கே சொந்தமாக்கி கொடுத்தது இவங்க தானே… என் அவசரபுத்தியால தானே சாமி என் பொஞ்சாதியும் இன்னிக்கு இல்ல….கொஞ்சம் தாமஸம் ஆகியிருந்தாலும் என் பொண்ணும் இல்லாம போயிருக்கும்… என்னை அநாதை ஆகாம காத்த எங்க வனயட்சி சாமி இவங்க”, என ஆருத்ராவின் கண்களைப் பார்த்தபடி கூறியவன் மீண்டும் கும்பிட்டான்.
“நுவலி எங்க வரலியா?”, ஆருத்ரா அந்த சூழ்நிலையை மாற்ற பேச்சை ஆரம்பித்தாள்.
“புள்ளைங்க எல்லாம் பள்ளிகூடம் போயிருக்குது ஆயி…. எல்லாம் உங்களால தான்….”, என மீண்டும் கும்பிட்டான்.
“போதும் மிதிலன்னா…. நானும் மனுஷி தான்.. என்னை கும்பிட்டு கும்பிட்டு ஒதுக்கி வைக்காதீங்க”, என மெல்லிய சிரிப்புடன் கூறினாள்.
“அம்மாடி…. ஆயி…. என்ன வார்த்தை சொல்லிட்டீங்க… இனி உங்கள சங்கடப்படுத்தற மாதிரி எதுவும் செய்யமாட்டேன் ஆயி”, எனக் கூறிவிட்டு அவள் முகத்தை பார்த்தபடி நின்றான்.
“சரி ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? இப்ப யாரும் பிரச்சினை பண்றது இல்ல தானே?”, என ஆருத்ரா அடுத்த பேச்சையும் தொடங்கினாள்.
“இல்லைங்க ஆயி… ஆரும் தொந்தரவு பண்ண வரலீங்க…. மூனு வருஷமா எந்த பிரச்சினை இல்லாம போகுதுங்க ஆயி”, பவ்யமாகக் கூறினான்.
“சரி…. நான் ஊருக்கு போறதுக்கு முன்ன ஒரு நாள் வரேன். தனுப்பா நீங்க பேசிட்டு வாங்க. எனக்கு கொஞ்சம் வேல இருக்கு”, என ஆருத்ரா உள்ளே சென்றாள்.
மிதிலன் ரணதேவ்விடம், “ஆயிக்கு கண்ணாலம் பண்றத பத்தி நம்ம வனயட்சி சாமியாடிகிட்ட கேக்கலாமுங்க சாமி”
“அது அமாவாசைல தானே ஆடுவாங்க மிதிலா? பௌர்ணமிக்கே ஒரு வாரம் இருக்கே “, என யோசனையாகக் கேட்டார்.
“ஆயிய அன்னிக்கு கூட்டிவாங்க சாமி…. ஊரையே காக்கற ஆயிக்கு நம்ம வனத்த காக்கற வனயட்சி நல்ல வாக்கு தான் சொல்லுவா”
“சரி அத அப்ப பாக்கலாம் …. நீ ஒரு வேலை பண்ணணும்”, என அவனை அருகில் அழைத்து காதில் ஏதோ சொன்னார்.
அவனும் தலையாட்டிவிட்டுக் கிளம்பினான்.
இங்கே விஷேசம் முடிந்து சகஸ்ரா கண்மயாவிடம் நச்சரித்துக் கொண்டிருந்தாள்.
“வா மாயா போலாம்… இவங்க மேல எனக்கு முழுசா நம்பிக்கை வரல”, சகஸ்ரா.
“நீ யார முழுசா நம்பி இருக்க சரா…? நம்ம கைல எடுத்து இருக்க பிரச்சினை எப்படிப்பட்டதுன்னு தெரியும்ல?”, என கண்மயா சற்றே கோபமுகம் காட்டினாள்.
“அவங்கள நீ ஏன் இவ்வளவு நம்பறன்னு எனக்கு புரியல மாயா… “, எரிச்சலுடன் கேட்டாள்.
“அவங்ககிட்ட பொய் இல்ல… அவங்களால இதை சமாளிக்க முடியுமா முடியாதாங்கற யோசனைக்கு நா போல சரா…. ஆனா இத நாம மட்டுமே சமாளிக்க முடியாது. கண்டிப்பா யார்கிட்டயாவது போய் தான் ஆகணும்… அதான் இவங்ககிட்ட இருந்து ஆரம்பிக்கலாம்னு நினைக்கறேன்”, என கண்மயா தீவிரமான முகபாவத்துடன் கூறினாள்.
“என்ன ஆரம்பிக்க போறீங்க இரண்டு பேரும் ?”, எனக் கேட்டபடி நந்து அருகில் வந்து நின்றான்….