3 – காற்றின் நுண்ணுறவு
வீட்டிற்கு வந்த பாலவதனியும் வல்லகியும் பொருட்களை எடுத்துக்கொண்டு லிப்டிற்காக காத்திருந்தனர்.
அந்த சமயம் வல்லகிக்கு கண்முன்னே சில நிழல்கள் நடமாடுவதுப் போலத் தோன்றியது.
கைகளில் இருந்த பைகளை இறுக்கியபடி வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டிருந்தாள்.
அவளின் சுவாச மாறுபாட்டை கவனித்த பாலா, அவள் கைகளை பிடித்து உலுக்கினாள்.
“வகி…. வகி…. என்னாச்சி…? ஏன் இப்படி மூச்சு வாங்குது? “, என பதற்றமாகப் பேசினாள்.
“பாலா… பாலா…. இங்க ….இங்க…. யாரோ ரொம்ப அழுதிருக்காங்க…. மனச கனமாக்கற ஏதோ ஒன்னு நடந்திருக்கு….. யாருக்கு என்னாச்சின்னு தெரியல…. எனக்கு அழுகையா வருது பாலா…. “, என தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
“அழாத வகி…. ஒன்னும் ஆகாது…. நீ அமைதியாகு…. வா லிப்ட் வந்துரிச்சி ப்ளாட்டுக்கு போலாம்”, என அவளை இழுத்தாள்.
வல்லகி அவ்விடம் விட்டு நகர்ந்து மூச்சை ஆழமாக இழுத்துவிட ஆரம்பித்தாள். சில நொடிகளில் மெல்ல வல்லகியின் சுவாசம் தானாகச் சீரானது.
லிப்டில் இருந்து இருவர் ஒரு பெண்ணை தூக்கிக்கொண்டு வெளியே வந்தனர்.
“என்னாச்சி ண்ணா? “, பாலா.
“அவர் ஹஸ்பெண்ட் வந்து இவங்க குழந்தைய தூக்கிட்டு போயிட்டாங்க … இவங்க அழுதழுது மயக்கமாகிட்டாங்கம்மா…. டிவோர்ஸ் குடுக்கமாட்டேன்னு சொன்னதால பெரிய பிரச்சினை பண்ணிட்டாங்க… மதியம் எல்லாம் இங்க ஒரே ரகளை… அந்த ஆளு வீட்டு ஆளுங்களும் வந்துட்டாங்க… குழந்தைய இவங்க கிட்ட இருந்து வலுகட்டாயமா பிரிச்சி கூட்டுட்டு போயிட்டாங்க…. “, என உடன் வந்த வாச்மேன் இவர்களுக்கு நடந்ததை விளக்கினார்.
இதைக் கேட்ட பின் வல்லகியைப் பார்த்த பாலாவிற்கு என்ன சொல்வதென்றே புரியாமல் மலங்க மலங்க விழித்தபடி ப்ளாட்டிற்கு வந்துச் சேர்ந்தனர்.
“வகி… உன்னால எப்படி அப்படி சொல்ல முடிஞ்சது?”, மண்டைக்குள் குடைந்துக்கொண்டிருந்த சந்தேகத்தைக் கேட்டாள்.
“எனக்கு தெர்ல பாலா… இந்தமாதிரி எதாவது நடந்த இடத்துக்கு நான் போனா என்னால பீல் பண்ண முடியுது…. மூச்சு முட்டுது…. “, யாதென்றே உணரமுடியாத குரலில் கூறினாள்.
“நாம நாளைக்கு ஈஎன்டி டாக்டர போய் பாத்துட்டு வரலாம் வகி. உன் உடம்புக்கு எதாவது வந்துட போகுது… “, உண்மையான வருத்தத்தில் பாலா கூறி அவள் கைப்பிடித்தாள்.
“ஒன்னும் ஆகாது பாலா.. அவ்ளோ பெரிய ஆக்சிடெண்ட்லயே தப்பிச்சிட்டேன்…. “, அவள் கையைத் தட்டிக்கொடுத்துவிட்டு எழுந்துத் தன்னறைக்குச் சென்றாள்.
முகம் கழுவி வேறுடை மாறி அவள் வெளியே வரும்பொழுது பாலா சமைத்துக்கொண்டிருந்தாள்.
“நான் வரதுக்குள்ள நீயே ஏன் பாலா எல்லாத்தையும் பண்ற? நான் வர்க் ஷேர் பண்ணிப்பேன்ல…”, செல்லமாக கடிந்தபடி சமையலில் தன்னை மூழ்கடித்துக்கொண்டாள்.
சமைத்து முடித்து ஹாலில் இருவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.
“பாவம்ல அந்த அக்கா….. குழந்தை ஒன்னு தான் அவங்களுக்கு இருக்க சந்தோஷம்னு அன்னிக்கு நம்ம விளையாடிட்டு இருக்கறப்ப கேம்ல கூட சொன்னாங்க. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமா எப்படி தான் நடந்துக்கறாங்களோ….. பொண்டாட்டி வேணாம் புள்ள மட்டும் வேணுமாம்…. “, பாலா தன் ஆதங்கத்தை வெளிக்காட்டினாள்.
“நாம இப்பதான் வீட்ட விட்டு வெளிய வந்து இருக்கோம் பாலா…. வாழ்க்கையே இனிமேல தான் புரிய ஆரம்பிக்கும்…. அப்பா அடிக்கடி சொல்வாரு…. சம்பாதிக்க ஆரம்பிச்சா தான் நாலும் புரியும்னு…. நாமலும் ஒன்னொன்னா புரிஞ்சிக்கலாம்”, அமைதியாகப் பதிலளித்தாள்.
“ம்ம்…. ஒன்னு ஒன்னா முதல் நான் உன்னைத் தான் புரிஞ்சிக்கணும்….. வர வர உன்கிட்ட நிறைய மாற்றம் தெரியுது வகி…. உன்னோட துறுதுறுத்தனம் எல்லாம் எங்க போச்சின்னே தெரியல…. இவ்ளோ அமைதியான வகி எனக்கு ரொம்ப புதுசா இருக்கா….”.
வகியும் அமைதியாக ஒரு மென்சிரிப்பை உதிர்த்துவிட்டு சமையல் அறையை ஒழுங்குப்படுத்த எழுந்துவிட்டாள்.
இரண்டு நாட்கள் கழித்து அக்ரா பாயிண்ட்……
“பாஸ்…. இங்க யாரும் அந்த லொகேஷன் கிட்ட நெருங்க முடியாம திணர்றாங்க…. லொகேஷனுக்கு 5 கி.மீ முன்னாடியே சுழல் இருக்கு…. எந்த படகும் அதை தாண்ட முடியல”, சார்லஸ் இரண்டு நாட்களாக தோற்றுப் போய் கொண்டிருக்கும் செய்தியைக் கூறினான்.
“நீ என்ன பண்ணுவியோ தெரியாது…. அந்த இடத்துக்கு நீங்க போயே ஆகணும்…. “, யோகேஷ் கட்டளையிட்டான்.
“பாஸ்…. அந்த இடத்த தாண்டினா தான் நீங்க சொல்ற லொகேஷன நாங்க நெருங்க முடியும். அதுவே இங்க கஷ்டமா இருக்கு…. “, தங்களின் இக்கட்டான நிலையை விளக்க முயன்றான் சார்லஸ்.
“ஐ நீட் பாசிடிவ் ரிசல்ட் அட் யுவர் நெக்ஸ்ட் கால் சார்லஸ்”, எனக் கூறி பட்டென யோகேஷ் போனை வைத்துவிட்டான்.
“என்னாச்சி சார்லஸ்?”, ஜேக்.
“அந்த வெங்காயம் இங்க வந்திருக்கணும் டா…. நாம இரண்டு நாளா எவ்வளவு கஷ்டப்படறோம். ஏற்கனவே ஒரு போட் ஆளுங்களோட காணாம போச்சி… மத்த ஆளுங்க நம்ம கூப்பிட்டா வரவே யோசிக்கறாங்க… அவன் அந்த இடத்துக்கு போயிட்டு கால் பண்ணுன்னு சொல்றான்”, தலையை அழுந்தக்கோதி தன் காலை உதைத்தான்.
“நான் போறேன். என்கூட ஒருத்தன் வந்தா போதும்”, ஜேக் கிளம்பத் தயாரானான்.
“டேய்… அன்னிக்கே பாத்தல்ல…. உயிர் போயிடும் டா”, சார்லஸ் படபடப்புடன் கூறினான்.
“நாம என்ன உலகத்துக்கு நல்லதா பண்றோம்? பணத்துக்காக எது வேணா செய்யற கூட்டத்துல இருக்கோம். உயிருக்கு பயந்தா நமக்கு பணம் கிடைக்காது. நான் கேக்கற போட் அப்பறம் பயப்படாம என்கூட வரதுக்கு ஒரு ஆள் தான் தேவை”, எனக் கூறி லைப்ஜாக்கெட் அணிந்துக் கொண்டான்.
சார்லஸ் எவ்வளவு பேசியும் ஜேக்குடன் கடலுக்கு செல்ல யாரும் முன்வரவில்லை.
பின் சார்லஸே உடன் ஏறினான். அந்த போட்-இற்கான பணத்தை கொடுத்துவிட்டு பைலட்டை தங்களுக்காக காத்திருக்க கூறிவிட்டு கடலில் இறங்கினர் இருவரும்.
“ஜீசஸ்…..”, என சிலுவையை கையில் பிடித்துக்கொண்டு சார்லஸ் கண்கள் மூடி வேண்ட ஆரம்பித்தான்.
“தப்பு பண்றவனுக்கு ஜீசஸ் வரம் குடுப்பாரா சார்லஸ்?”, கிண்டலையும் அழுத்தமாகவே கேட்டான்.
“நாம இப்ப என்ன பெரிய தப்பு பண்ணிட்டோம் ஜேக். நம்ம மொதலாளிக்கு விசுவாசமா இருக்கோம். அவ்வளவு தானே”.
ஜேக் எதுவும் பேசாமல் போட்டைக் கிளப்பினான்.
தூரத்தில் இருந்தே சுழல் தோன்றும் இடத்தை பார்த்துக்கொண்டே வந்தவனுக்கு ஏதோ வித்தியாசமாகத் தென்பட்டது.
சுழல் அருகில் சென்று அதை படம்பிடிக்க ஆரம்பித்தான்.
சுழலைச் சுற்றிக்கொண்டு செல்ல முயலும் பொழுது புதிதாய் மற்றொரு சுழல் திடீரென உருவானது.
அதில் அந்த போட் சிக்கிக்கொள்ள ஜேக்கும் சார்லஸூம் படு பிரயத்தனப்பட்டு அந்த சுழலை விட்டு வெளியே வந்தனர். சார்லஸிடம் இருக்கும் டேப் வாங்கி தாங்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து சுழலை நெருங்காமல் சுற்றிச் செல்ல ஆரம்பித்தான்.
அவர்கள் செல்லவேண்டிய இடத்தில் இருந்து ஐந்து கி.மீ சுற்றளவில் அந்த சுழல்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
மேலோட்டமாக பார்ப்பதற்கு சாதாரணமாகத் தெரிந்தாலும் சுழலானது நீரில் இருப்பது ஏதேனும் படகு செல்லும் போது தான் தெரிகிறது.
ஜேக் ஏற்கனவே பல கடற்பயணங்கள் மேற்கொண்டவன் என்பதால் ஓரளவு கடலின் தன்மைகளை அறிந்து வைத்திருந்தான்.
ஜேக் கண்ணில் தென்பட்ட அனைத்தையும் குறித்துவைத்துக்கொண்டு அந்த நீர்ச் சுழல்களை படமும் பிடித்துக்கொண்டு கரையை நோக்கித் திருப்பினான்.
“என்ன ஜேக்?”
“இது நாம நினைக்கற மாதிரி ஈஸியா முடியாது சார்லஸ்…. நிறைய மெனக்கெடணும்”
கரைக்கு வந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்த்து விட்டு போட்டை பழுது பார்க்க ஆரம்பித்தனர்.
ஜேக் குளித்துமுடித்து சாப்பாட்டை ஆர்டர் கொடுத்துவிட்டு சுழலை எடுத்த படங்களை ஆராய ஆரம்பித்தான்.
சார்லஸும் குளிந்துவந்து ஜேக்கை பார்த்தபடி அமர்ந்தான்.
“சார்லஸ்… எனக்கு ஒரு ப்ரொஜெக்டர் வேணும்”
“ஏற்பாடு பண்றேன் ஜேக். நீ அங்க என்ன பாத்த ? அதை சொல்லு”
“ப்ரொஜெக்டர் வரட்டும் நீயே பாத்து தெரிஞ்சிப்ப”
சற்று நேரத்தில் ஹேண்ட் ப்ரொஜெக்டர் வர அதை தன் டேப்பில் கனெக்ட் செய்து வெற்றுச் சுவரில் வெளிச்சம் பாய்ச்சினான்.
ஜேக் எடுத்த படங்களையும், வீடியோவையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
ஒரு படத்தை நிறுத்தி ஜூம் செய்து பார்க்க போட் செல்லும் வேகத்தில் அலைகள் சுற்றும் பரவுவதை வைத்து அவர்கள் அந்த இடத்தை கடக்கும்முன் சுழல் உருவாகிறது.
ஒரு வீடியோவில் மட்டுமே அது பதிவாகி இருந்ததால் அதை தனியாக வைத்துவிட்டு அடுத்த வீடியோவை ஓடவிட்டனர்.
நீரில் சுழல் உருவாவது சகஜமான விஷயம். தரைதளத்தில் வெற்றிடம் உருவாகும் போது அவ்விடத்தை ஆக்கிரமிக்க நீர் சுழன்று பாயும். நீரில் இருக்கும் காற்று தான் நீர் சுழல காரணமாகிறது.
தரை தகட்டிற்கு அடியில் வெற்றிடம் ஏற்பட்டால் தான் சுழல் பலமானதாக உருவாகி ஆட்களை விழுங்கிவிடும்.
ஜேக் தன் அனுமானத்தை உறுதி செய்ய நாளையும் கடலோடி பார்க்க முடிவு செய்தான்.
சார்லஸூம் ஜேக்கும் சில விஷயங்களைக் கலந்துரையாடிவிட்டு அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளையும் முன்னேற்பாடு செய்துவிட்டு தூங்கச் சென்றனர்.
அடுத்த நாள் மாலை வல்லகியை கட்டாயமாக பாலா ஈ.என்.டி டாக்டரைக் காண அழைத்துச் சென்றிருந்தாள்.
“வேணாம் பாலா… சொன்னா கேளு…. “.
“நீ கம்முன்னு இரு வகி. உனக்கு எப்படி மூச்சு திணறுது… எனக்கு பயமாவும், கவலையாவும் இருக்கு… செக் பண்ணிக்கலாம்”.
டாக்டர் நிரல்யன் எனும் பெயர் பலகை டேபிளில் மின்னியது.
“சாக்க்ஷி….. என்ன இது? என் நேம்போர்ட் இப்படி க்ளிட்டர் ஆகுது… என்ன செஞ்ச?”, நிரல்யன்.
“சின்னதா சைன்ஸ் எக்ஸ்பெரிமண்ட் செஞ்சேன் அண்ணா…. நல்லா இருக்கு தானே….”, சிரித்தபடி பதினைந்து வயது சிறுபெண் அவன் அருகில் வந்தாள்.
“வர்ற பேஷன்ட்ஸ் என்னடான்னு பார்ப்பாங்க டா…. இதை நீயே வீட்ல வச்சிக்க… நான் வேற போர்ட் ரெடி பண்ணிக்கறேன்”.
“அப்படின்னா நானே உனக்கு ரெஸின் அண்ட் வுட் மிக்ஸ்ல ஒரு போர்ட் ரெடி பண்ணி தரேன். டீலா?”, சாக்க்ஷி.
“டீல்… நீ வீட்டுக்கு கிளம்பறியா ட்ரைவரை கூப்பிடவா?”.
“இல்லண்ணா….. வீட்ல தனியா போர் அடிக்கும். உன்கூடவே இருக்கேன். லாஸ்ட் பேஷண்ட் தானே இருக்காங்க.. பாத்துட்டு வா ஒன்னாவே போலாம்”, எனக் கூறி பக்கத்தில் இருந்த சிறு அறையில் அமர்ந்து கொண்டாள்.
நர்ஸ் வந்து அழைத்ததும் வகியும் பாலாவும் உள்ளே சென்றனர்.
“வாங்க… உட்காருங்க… என்ன ப்ராப்ளம் ?”
“டாக்டர் இவளுக்கு திடீர் திடீர்ன்னு மூச்சு விட சிரமம் ஆகுது. வேகவேகமா பெருமூச்சு விட்றா… அப்படி மூச்சு வேகமா வந்தா ஏதேதோ சொல்றா….”, பாலா.
“லெட் மீ செக்….. மூச்சு நல்லா இழுத்து விடுங்க…. “.
நன்றாக மூச்சை ஆழமாக இழுத்து விட்டாள். மூச்சை விடும்பொழுது அவள் இதழ்கள் புன்னகையைப் பூசிக் கொண்டன.
அவள் சிரிப்பதைக் கண்டவன், “என்னாச்சி ஏன் சிரிக்கறீங்க மிஸ்? “.
“இல்ல உங்க மனநிலை சந்தோஷமா இருக்கு. நீங்க ஆழமா நேசிக்கறவங்க இங்க வந்திருக்காங்களா டாக்டர் ?”, வகி.
நிரல்யன் சற்றுத் திகைத்து, “மிஸ் உங்க நேம்?”.
“வல்லகி”
“என் மனநிலைய உங்களால உணர முடியுதா? என்ன சொல்றீங்க?”, இன்னும் திகைப்பு நீங்காமல் கேட்டான்.
“மூச்சு ஆழமா உள்ள இழுத்தப்ப எனக்கு தோணிச்சி டாக்டர். இன்னுமே ஏதோ சில நிழல் உருவங்கள் மங்கலா தெரிஞ்சது”
“திஸ் இஸ் அன்பிலீவபுள்…. உங்களுக்கு எத்தனை நாளா இப்படி இருக்கு?”, நோட்டில் குறிப்பெடுத்தபடி கேட்டான்.
“இப்ப ஒரு மாசமா டாக்டர்”
“படி படியா மாற்றம் தெரியுதா இல்ல முதல்ல இருந்தே ஒரே மாதிரி இருக்கா?”
“முதல்ல ஒன்னும் புரியல. இப்ப கொஞ்ச நாளா புரிஞ்சிக்க முடியுது…. இதுக்கு மேல எப்படின்னு தெரியல டாக்டர்”
“நீங்க நாளைக்கு என் வீட்டுக்கு வர முடியுமா? அதுக்கு முன்ன இன்னிக்கு சில டெஸ்ட் எல்லாம் எடுத்துடுங்க… “, எனக் கூறி அவர்கள் செய்யவேண்டிய டெஸ்ட் லிஸ்ட் கொடுத்து நர்ஸை உடன் அனுப்பிவிட்டு அவசரமாக ஒருவருக்கு போனில் அழைத்தான்.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு,” டாக்டர்…”
“ரிசல்ட்?”
“இன்னும் இரண்டு ரிசல்ட் மூனு நாள் ஆகும்னு சொல்லி இருக்காங்க டாக்டர்”, நர்ஸ் பதிலளித்தார்.
“ஓக்கே…. இந்த ரிசல்ஸ்ஸோட இன்னொரு காப்பி எனக்கு தனியா பைல் பண்ணிக்குடுங்க…. அவங்கள வரச்சொல்லுங்க”
“உடம்புக்கு எந்த பாதிப்பும் இருக்கறமாதிரி தெரியல. கொஞ்சம் இன்னொருத்தரோட டிஸ்கஸ் பண்ணணும். நாளைக்கு என் வீட்டுக்கு வரமுடியுமா?”
“நாளைக்கு முடியாது டாக்டர். இன்னிக்கு ஊருக்கு போறோம்”, பாலா.
“சரி. நீங்க வந்து டெஸ்ட் ரிசல்ட் வாங்கிட்டு என்னை வந்து பாருங்க. வீசிங் மாதிரி அதிகம் வந்தா மட்டும் இந்த மருந்து எடுத்துக்கோங்க”, எனக்கூறி சீட்டை நீட்டினான்.
“தேங்க்ஸ் டாக்டர்”, வல்லகி.
“மிஸ் வல்லகி உங்க நம்பர் தரீங்களா? “
ஏதோ பேச வாயெடுத்த பாலாவை அடக்கிவிட்டு தன் கைப்பேசி எண்ணை கொடுத்துவிட்டு டாக்டர் நம்பரையும் வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
இரவு எட்டு மணி…. நாச்சியா கிளம்ப அத்தனையும் தயாராக வைத்துக்கொண்டுக் காத்திருந்தாள்.
இருவர் அடர்ந்த காட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த கிராமத்தை பார்வையிட்டவாறு டென்ட்டை நோக்கி வந்தனர்.
“நாச்சியா…. ராகவி….”, கையில் இருந்த போனினைப் பார்த்து பெயர் கூறி அழைத்தான்.
“நான் வரேன்ல… அவ எதுக்கு?”,நாச்சியா விழிகளை உருட்டியபடி கேட்டாள்.
“ஆர்டர பாலோ பண்ணு”, வந்தவனில் ஒருவன் அதிகாரமாகக் கூறினான்.
“இல்ல… அவள நான் அழைச்சிட்டு வரமாட்டேன்”, நாச்சியா திடமாகக் கூறினாள்.
உடனே அவளது கைபேசியில் அழைப்பு வந்தது.
“ராகவிய கூட்டிட்டு வரலன்னா அவள கொன்னுட சொல்லியிருக்கேன்”, ஒரு குரல் கர்வமும் அதிகாரமுமாக ஒலித்தது.
“உங்களுக்கு தேவையானத நான் கொண்டு வரேன். ராகவிக்கு ஒன்னும் தெரியாது”, நாச்சியா அழுத்தமாகப் பேசினாள்.
“கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்….. 10 9 8 7 ….”.
ஒருவன் ராகவியை இழுத்துவந்து துப்பாக்கியை அவள் தலையில் வைத்தான்.
“ஓக்கே…. கூட்டிட்டு வரேன்”, நாச்சியா பேசிவிட்டு கைப்பேசியை வீசி எறிந்தாள்.
அவள் வீசி எறிந்ததில் கைப்பேசி சுக்குநூறாக உடைந்திருந்தது. அழைத்துச்செல்ல வந்தவர்கள் தலைமையிடம் அதைக் கூறிவிட்டு வேறு கைபேசியை கொடுத்து பத்திரமாக வைத்திருக்கக்கூறினர். அதில் அவர்கள் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் .
ராகவியும் நாச்சியாருடன் பயணப்பட ஆயத்தமானாள்.
ரிஷியும், வினோத்தும் கண்களில் கோபம் பொங்க நின்றிருக்க இளவெலிழி சுற்றிலும் பார்வையைச் சுழற்றியபடி அருகில் இருந்தவனை அழைத்துக்கொண்டு பின்னால் சென்றாள்.
அவர்கள் இடம்விட்டு நகர்ந்ததும் பத்து பேர் அவர்களைச் சுற்றி வளைத்தனர்.
“ம்ம்….. டென்ட் உள்ள போங்க… இனி நாங்க இங்க தான் இருப்போம்”, புதிதாக வந்தவர்களில் ஒருவன் மிரட்டி அவர்களை டென்டிற்குள் அனுப்பிவிட்டு பழையபடி மரங்கள் மறைவில் மறைந்து நின்று காவல் காத்தனர்.
“இளவெழிலி…..”, ப்ரோபசர் அழைத்தார்.
“சார்…..”.
“நாச்சியா திரும்ப வரவரைக்கும் எதுவும் செய்யாத…. குடுத்த வேலையை மட்டும் பாருங்க…”, ப்ரோபசர்.
“ப்ரோபசர் தசாதிபன்…. எப்படி இருக்கீங்க?”, என்று கேட்டபடி ஒருவன் அவர் இருந்த டென்டிற்குள்ளே வந்தான்.
அவன் வெளியே செல்லும்போது தசாதிபன் தலை தொங்கியிருந்தது.