7 – காற்றின் நுண்ணுறவு
அடுத்த நாள் அலுவலகத்தில் நுழைந்த வல்லகியை ஜிதேஷின் டீமிற்கு கீழே பயிற்சி எடுக்க அனுப்பினர்.
அவர்கள் பணி செய்யும் இடத்தில் நுழைந்ததும் ஒருவன் பாலாவை அழைத்தான்.
“ஹாய் …. “, பாலா.
“என்னம்மா ஸ்கூல் பொண்ணு…. எந்த ஊரு நீ? நீங்க தானே நேத்து அந்த சிடுமூஞ்சிகிட்ட வம்பிலுத்தது?”, என அவன் பாலா அருகில் வந்து நின்றுக் கேட்டான்.
“நாங்க வம்பிலுக்கல… அதுவா வந்துச்சி நாங்க பிடிச்சோம் அவ்வளவு தான்”, பாலா அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தபடிப் பதிலளித்தாள்.
“பேச்சுல திமிர் ஓவரா இருக்கு…. சீனியருக்கு வணக்கம் வைக்கணும்னு உன் காலேஜ் ல சொல்லி தரலியா? “
“காலேஜ்ல இருந்து வரப்ப நான் தானே சீனியர். அதனால எனக்கு எல்லாரும் வணக்கம் வைப்பாங்க. ஆனா பாருங்க நான் யார்கிட்டயும் கேட்டு வாங்கமாட்டேன்”, பாலா சிரித்தபடி கூறினாள்.
“ஓய்… நக்கலா…. ஒழுங்கா இல்லைன்னா அவ்வளவு தான். நான் யாருன்னு தெரியுமா ?”, அவன் கடுப்புடன் குரல் உயர்த்தி பேச ஆரம்பித்தான்.
வல்லகி மற்றொரு பெண்ணிடம் பேசியபடி பாலாவை கவனித்துக்கொண்டிருந்தாள்.
“நான் மேகலா…. உங்களோட கோச் ஜிதேஷ். அவர் இன்னிக்கு லீவ். நீங்க அந்த கேபின்ல போய் ட்ரைனிங் ஸ்டார்ட் பண்ணுங்க”, என பாலா நின்ற இடத்திற்கு பின்னே இருந்த கேபினைக் காட்டிக் கூறினார்.
“தேங்க்யூ மிஸ் மேகலா”, எனக் கூறிவிட்டு தங்களது ஐடி கார்ட்டை வாங்கிக் கொண்டு பாலா அருகில் வந்தாள்.
“பாலா… வா அந்த கேபின்”, என வல்லகி அவளை அழைத்தாள்.
“ஹலோ மேடம். இங்க விசாரிச்சிட்டு இருக்கேன்ல.. நில்லுங்க…”, பாலாவிடம் பேசிக்கொண்டிருந்தவன் வல்லகியை நிறுத்தினான்.
“இதென்ன போலீஸ் ஸ்டெஷனா, கோர்ட்ஆ விசாரனை நடத்தறதுக்கு?”, வல்லகி பாலா கழுத்தில் ஐடி கார்டை அணிவித்தபடி பதில் கேள்விக் கேட்டாள்.
“என்ன பாப்பா இரண்டு பேருக்கும் புதுசுங்கற பயமே இல்ல போல… வாய்க்கு வாய் சரியா பேசறீங்க”, அவன் பாலாவையும், வல்லகியையும் மாறி மாறி பார்த்தபடிக் கூறினான்.
“புதுசா வந்தா பயப்படணும்னு எதாவது ரூல்ஸ் இருக்கா?”, வல்லகி.
“ஆமா… சீனியர் நாங்க இருக்கோம்ல…. நாங்க சொல்றபடி தான் செய்யணும்”
“ஓஓ… எங்களுக்கு சம்பளம் கம்பெனி குடுக்கலியா? நீங்க தான் குடுக்கறீங்களா… சரி பாலா இவர் கிட்டயே நம்ம விஷயத்த பேசலாம்… “, பாலாவை இழுத்துவிட்டாள் வல்லகி.
“என்ன பேசணும்?”, அவன்.
“சீனியர் நீங்களே முதல்ல சொல்ல வேண்டியத சொல்லுங்க”, வல்லகி.
“எந்த நேரத்துல ஆபீஸ்ல காலடி எடுத்த வச்சமோ வரிசையா வாங்கி கட்டிக்கறதுக்குன்னே வரானுங்க இவகிட்ட”, என பாலா முணுமுணுத்தபடி அவனைப் பார்த்தாள்.
“என்ன முணுமுணுப்பு?”, அவன்.
“இல்ல நீங்க சொல்றத எல்லாம் அவளே செய்யப்போறாளாம். நான் போறேன்.. நீங்க அவகிட்ட பேசிக்கோங்க சீனியர்”, வல்லகி.
“இங்க பாரு பாப்பா… டெய்லி வந்து குட் மார்னிங் சொல்லிட்டு எனக்கு சூடா ஒரு கப் காப்பி வாங்கிட்டு வந்து என் டேபில்ல வைக்கணும். நான் சொல்ற வேலையெல்லாம் செஞ்சி குடுக்கணும். அப்படி நீ சரியா செஞ்சா உனக்கு வேலைய நான் பெர்மனென்ட் பண்றேன். சரியா?”, என பாலாவை பார்த்தபடி அவன் கூறிக்கொண்டிருக்க, பாலா வல்லகியைப் பார்த்தாள்.
“என்னை ஏன் பாக்கற? உனக்கு தானே சொல்றாங்க.. நீயே பாத்து பண்ணு. நான் போறேன்”, எனக் கூறிவிட்டு பாலா கையில் அவளது பொருட்களைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
“ராட்சசி… இப்படி மாட்டி விட்டுட்டு போயிட்டாளே”, என பாலா மனதிற்குள் புலம்பியபடி அவனிடம் மண்டையை ஆட்டிவிட்டு தன் இடத்தைத் தேடி வந்தமர்ந்தாள்.
“ஏன்டி அவன் என்னை ஆயா வேலை பார்க்க சொல்றான். நீ அவன எதுவும் சொல்லாம நீ பாட்டுக்கு வந்து உக்காந்துட்டு இருக்க.. நீயெல்லாம் ஒரு பிரண்ட்ஆ?”, பாலா பொறிந்தாள்.
“நேத்து சாயங்காலம் நீ தானே சொன்ன… யார்கிட்டயும் வம்புக்கு போக கூடாது. யாராவது வம்பிலுத்தாலும் நான் சண்டை போடக்கூடாதுன்னு…. இரண்டு மணி நேரம் எனக்கு க்ளாஸ் எடுத்தல்ல… நான் ஏன் அவன எதாவது சொல்லணும்? உன்கிட்ட பேசினா நீ தான் பதில் சொல்லணும்”, எனக் கூறிவிட்டு தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.
“வல்லகி…. இந்தாங்க உங்களோட ட்ரைனிங் கோட்ஸ்… நாளைக்கு வரைக்கும் இதை கோட் பண்ணி ரன் பண்ணுங்க.. உங்க ட்ரைனர் வந்தப்பறம் மத்தது சொல்வாரு… “, என ஒருவன் வந்து இரண்டு பைல்களைக் கொடுத்து விட்டுச் சென்றான்.
மாலை வரை வல்லகி யாரிடமும் பேசாமல் தன் வேலையில் மூழ்கிவிட்டிருந்தாள்.
தர்மதீரன் இரண்டு மூன்று முறை அவளருகில் வந்தும் கூட அவனை அவள் கவனிக்கவில்லை.
அந்த அலுவலகத்தில் தன்னைத் தவிர வேறு எந்த மனிதரும் இல்லை என்பது போல வேலையில் மட்டுமே கண்ணாக இருந்தாள்.
மாலையில் பாலாவும் அவளும் அலுவலக நேரம் முடிந்து கிளம்பும் பொழுது, தர்மதீரன் எதிரில் வந்தான் சுதாகரிடம் பேசியபடி.
வல்லகி அவனைப் பார்த்தும் ஏதும் சட்டை செய்யாமல் பாலாவிடம் பேசியபடி நின்றிருந்தாள். தர்மதீரன் அவளது அலட்சியமான செய்கையில் கோபம் கொண்டிருந்தாலும் தன்னைக் கட்டுப்படுத்தியபடி நின்றிருந்தான்.
நால்வரும் லிப்டில் ஏற நின்றிருந்தனர். சுதாகர் உள்நுழையும் சமயம் லிப்டில் கோளாறு ஏற்பட்டு சுதாகர் பாதி உள்ளே பாதி வெளியே எனத் தொங்கியபடி இருந்தான்.
கண நேரத்தில் தர்மதீரனும், வல்லகியும் ஆளுக்கு ஒரு பக்கம் அவனின் கைபிடித்து மேலே இழுத்ததும் லிப்ட் கம்பிகள் முழுதாக அறுந்து லிப்ட் கீழே வேகமாக சென்றுத் தரைத் தட்டியது.
சட்டென்று ஏற்பட்ட விபத்தினால் அனைவரும் சில நிமிடங்கள் ஸ்தம்பித்து நின்றிருந்தனர். வல்லகி சுதாகரை ஓரமாக ஒரு பக்கம் அமரவைத்து அவன் உடலைப் பரிசோதித்துக்கொண்டிருந்தாள்.
தர்மதீரன் அங்கு நடந்த விபத்தை நிர்வாகத்திடம் கூறி சட்டென அதற்குன்டான அவசரகால உதவிகளைச் செய்ய ஏற்பாடு செய்து விட்டு சுதாகரைத் தேடினான்.
சுதாகரின் கை ஒரு பக்கம் வலி எடுப்பதாக அவன் கூற வல்லகி மெல்ல அந்த கரத்தை அசைத்துப் பார்த்தாள்.
“ஏய் என்ன பண்ற… விடு… அவனுக்கு ப்ராக்சர் ஆகி இருக்க போகுது. நீ எதாவது செஞ்சி அத பெரிசு பண்ணிடாத…”, என பதற்றமாகக் கூறினான்.
வல்லகி அவனை திரும்பியும் பார்க்காமல், “எங்க வலி இருக்குன்னு சரியா சொல்லுங்க சுதாகர்… இந்த இடமா… இந்த பாயிண்ட்ஆ?”, என அவன் கையை இஞ்ச் இஞ்ச்சாக தொட்டு பார்த்தபடிக் கேட்டாள்.
“இல்ல … இல்ல…. அய்யோ…. ஆ… அம்மா….”, என அரற்றியபடி முழங்கைக்கு மேலிருந்து தோள்பட்டை வரையில் வலி இருப்பதாகக் கூறினான்.
“ரிலாக்ஸ்… கைய லூசா விடுங்க…. சரி ஆகிடும்… பாலா… சார் கழுத்த பிடிச்சிக்க….”
“என்னடி பண்ணப் போற?”, பாலா சுதாகரின் கழுத்தை பிடித்தபடிக் கேட்டாள்.
“ஹேய் என்ன பண்ணப்போற நீ?”, தர்மதீரன்.
“மிஸ்டர் சுதாகர் உங்க பிரண்ட்-அ கம்முன்னு இருக்க சொல்லுங்க. மனுசன்னா பொறுமை வேணும்”, எனக் கூறியபடி அவன் உடலில் ஒரு இடத்தை அழுத்தியபடி, கையை ஒரு முறை இழுத்து மடக்க அவன் அலறியே விட்டான்.
“அம்மா…. அப்பாஆஆஆஆஆ”, சுதாகர்.
“அடிப்பாவி என் ப்ரண்ட் கைய ஏன்டி உடைச்ச?”, தர்மதீரன் ஆத்திரமாக கேட்டான்.
“மிஸ்டர் சுதாகர் உங்க ப்ரண்ட வாய மூடிட்டு இருக்க சொல்லுங்க”, எனக் கூறிவிட்டு அவன் கையை மீண்டும் இரண்டு இடத்தில் அழுத்தம் கொடுத்து இழுத்ததும் அவன் கை வலி முக்கால் வாசி குறைந்திருந்தது.
“ஏய்…. யார பாத்து என்ன சொல்ற நீ? கொஞ்சமாது மரியாதை தெரியுதா உனக்கு?”, தர்மதீரன் அவள் கூறிய வார்த்தைகளில் கொதித்துக் கொண்டிருந்தான்.
“அது உங்களுக்கு தெரியுமா மிஸ்டர்? முதல்ல நீங்க மரியாதை குடுக்கறத பத்தி தெரிஞ்சிக்கோங்க. மிஸ்டர் சுதாகர் உங்க கைவலி கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும். விளக்கெண்ணெய மட்டும் கொஞ்சம் சூடு செஞ்சி இராத்திரி தடவுங்க .. காலைல சுடுதண்ணி ஊத்திக்கோங்க போதும். வலி இருந்தா எண்ணெய் சூடு பண்ணி தேய்ச்சிக்கோங்க. பாலா ….. நாம போலாம்”, எனக் கூறிவிட்டு தர்மதீரனை கண்டிப்பும் கோபமும் நிறைந்த பார்வைப் பார்த்துவிட்டு அங்கிருந்துச் சென்றாள்.
சுதாகர் கையை ஆட்டி பார்த்துவிட்டு, “மச்சான்…. கைவலி இப்ப ரொம்பவே குறைஞ்சிடுச்சு டா…. நான் கூட கை உடைஞ்சே போச்சின்னு நினைச்சேன். இரண்டே நிமிஷத்துல அந்த பொண்ணு வலிய குறைச்சிட்டா டா”, என வலி குறைந்த சந்தோஷத்தில் கூறினான்.
“வாயமூடிட்டு வந்து சேரு… லிப்ட் தானா அப்படி ஆகல…. எவன் வேலைன்னு விசாரிக்கணும்”, என சுதாகரை இழுத்துக்கொண்டு படிகளில் இறங்கினான்.
“டேய் டேய்….. அந்த பொண்ணு சரி பண்ண கையை நீயே உடைச்சிடுவ போல…. விடுடா நானே வரேன்”, என கத்தியபடி சுதாகர் படிகளில் ஓடினான்.
தர்மதீரன் அவனை முறைத்துவிட்டு முன்னிலும் வேகமாக இழுத்துக்கொண்டு கீழே லிப்ட் ஆபரேடிங் ரூமிற்கு வந்தான்.
அங்கே ஜிதேஷின் கையாள் ஒருவன் லிப்ட் சரி செய்ய வந்தவரிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தான்.
சுதாகரும் தர்மதீரனும் வருவதைப் பார்த்து அங்கிருந்து சென்றான்.
“இவனுக்கு இங்க என்ன வேலை? இது இவன் ஷிப்ட் இல்லையே”, சுதாகர் தர்மனின் காதில் முணுமுணுத்துவிட்டு ஆப்பரேட்டர் அருகில் சென்றனர்.
“மாணிக்கம்…. என்னாச்சி… எப்படி இப்படி நடந்தது?”, தர்மதீரன்.
“யாரோ மேனுவலா கம்பில என்னமோ செஞ்சி இருக்காங்க சார். அப்பறம் லிப்டர் மேல வெண்டிலேட்டர்ல இது இருந்தது”, என ஒரு பார்சலைக் கொடுத்தான்.
ஜிதேஷின் கையாள் ஒளிந்திருந்து பார்த்து தர்மதீரனின் கையில் அந்த பார்சல் சென்றதை ஜிதேஷிடம் கூறிவிட்டு, அடுத்த உத்திரவை நிறைவேற்றச் சென்றான்.
வல்லகியும் பாலாவும் தாங்கள் தங்கி இருக்கும் ஹாஸ்டல் வந்து தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தங்களது வீட்டிற்கு அழைத்தனர்.
பாலா, “அம்மா….. என்ன பண்றீங்க…? இப்ப என்ன வெங்காய பஜ்ஜியா போடறீங்க? வாசனை எனக்கு இங்க வரைக்கும் வருதே”, என தன் தாயிடம் உரையாட ஆரம்பித்தாள்.
வல்லகி, “அப்பா….”
“செல்லம்…. முதல் நாள் ஆபீஸ் எப்படி இருந்தது டா? உனக்கு எல்லாம் ஓக்கேவா? எதுவும் பிரச்சினை இல்லையே… நேத்து போல இன்னிக்கு எதுவும் இல்லையே”, என பரிவும் பாசமும் கலந்த குரல் வல்லகியை மென்னகை கொள்ளச் செய்தது.
“எனக்கு எல்லாமே நல்லா போச்சிப்பா…. ஒன்னும் நடக்கல. நீங்க கவலை படாதீங்க.. அம்மா அக்காலாம் என்ன பண்றாங்க?”.
“இருடா ஸ்பீக்கர்ல போடறேன்”
“ஹேய் வல்லூறு…. என்னடி நேத்து போல இன்னிக்கும் எவனாவது உன்கிட்ட வாங்கி கட்டிகிட்டானா?”, அக்கா.
“இன்னிக்கு யாரும் பெருசா சிக்கல…. ஒருத்தன காப்பாத்தி மட்டும் விட்டேன்”
“என்னாச்சிடா செல்லம்?”, அப்பா பதற்றமாகக் கேட்டார்.
வல்லகி லிப்ட் விபத்து பற்றி விளக்கியபின்,” செல்லம் இனிமே நீ நடந்தே போடா…. லிப்ட் எல்லாம் வேணாம்”, என தந்தை கூறவும் வல்லகி சிரித்தாள்.
“பண்ணெண்டு மாடி அவ ஏறி போனா அப்பறம் தூங்கிடுவா. யார் அவள எழுப்பறது? அவளே சாக இருந்தவனை காப்பாத்தி இருக்கா.. அதை பாராட்டாம நீங்க பயப்படறதும் இல்லாம அவளையும் பயமுறுத்தாதீங்க…. வல்லா…. அந்த பையனுக்கு ஒன்னும் ஆகலையே… அடி எதுவும் பட்டுச்சா?”, என அம்மாவின் குரல் கேட்டதும் தனக்குள் ஊறும் உற்சாகத்தை அனுபவித்தாள்.
“அதுலாம் ஒன்னும் இல்லைம்மா. பிசகி இருந்தது. இரண்டு தட்டு தட்டி இழுக்கவும் சரி ஆகிரிச்சி. இன்னொருத்தரும் அவனை பேலன்ஸ் பண்ணி இழுத்ததால அவன் தப்பிச்சான். நீங்க என்ன பண்றீங்கம்மா? அக்கா நீ எப்ப கிளம்பற?”
“நீ இங்கிருந்து போயிட்டா நானும் கிளம்பணுமா ? நான் எனக்கு தோணறப்ப தான் போவேன். இப்ப அம்மா சுட்ற தேன்குழல் சாப்டுட்டு இருக்கேன். சுட சுட… ஜீரால ஊறவச்சி அப்படியே இதமான சூட்டுல சாப்பிட்டா அப்படி இருக்கு…. ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் “, அவளின் அக்கா அவளை கடுப்பேற்றியதில் கடுப்பானவள் , “அப்பா…… அவள கம்முன்னு இருக்க சொல்லுங்க”
“சும்மா இருடி…. வல்லா… நீ எப்ப வர்ற ஊருக்கு? இந்த வாரம் லீவ் தானே”, அம்மா.
“தெர்லம்மா…. பாத்துக்கலாம்….சரி நான் போய் காப்பி குடிச்சிட்டு ஒரு வாக் போயிட்டு வரேன். நீங்க அவள சீக்கிரமே பேக் பண்ணி அனுப்பிடுங்க”, எனக் கூறிவிட்டு வைத்தாள்.
பாலாவும் பேசி முடித்துவிட்டு வர, இருவரும் வெளியே செல்லலாம் என கடற்கரை நோக்கி நடந்தனர்.
அவர்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து இரண்டு கி.மீரில் பீச் இருந்தது.
இருவரும் மெல்ல நடந்துவிட்டு கடற்கரையில் சிறிது நேரம் அமர்ந்து கடலின் அழகில் லயித்திருந்துவிட்டு, கிளம்பலாம் என எழுந்தபோது…..