12 – காற்றின் நுண்ணுறவு
குழியில் புதைக்கப்பட்ட வல்லகி மெல்ல சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேற்றியபடி சுயநினைவின்றிக் கிடந்தாள்.
அவள் உடலில் பல மாற்றங்கள் குழியில் புதைத்த நொடிகளில் ஆரம்பித்து வேகமாக நடந்தேறிக்கொண்டிருந்தது.
சுவாசக்குழாயுடன் மூளை நரம்பின் சில மர்ம முடிச்சுகள் கோர்க்கப்பட்டது.
அந்த சமயங்களில் அவளது சுவாசமானது இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை தான் சுழற்சிக் கொண்டது.
உள்ளிழுத்த காற்று அவள் உடல் முழுதும் சுற்றிய பின் மூளையும், கண்ணும், இதயமும் இணையும் மர்ம புள்ளியில் நின்று தனது நடனத்தை தொடங்கியது என்றே கூறவேண்டும்.
காற்று அவளின் உடலுக்குள்ளே புதுவிதமாக மெல்ல மெல்ல உறவாடத் தொடங்கியது.
சற்று நேரத்தில் ஆஞ்யாவிற்கு சற்று மேலே புதைந்திருந்த மர்மப்புள்ளியில் காற்றின் அணுக்கள் அதனோடு முழுதாக இரண்டறக் கலக்க முடியாமல் மூச்சுத் திணற ஆரம்பித்தது.
அவள் அருந்திய மூலிகை ரசமும், நாசியில் பிழிந்து விட்ட வேரின் சாறும் , உள் புதைந்திருந்த மர்மப்புள்ளியை, காற்றே ஜதி மாறாமல் உடலில் நடனமாடியபடியே மேலெழுப்ப தொடங்கியது.
அப்புள்ளியானது மேலே எழ எழ திணறிய சுவாசமானது சீராக மீண்டும் சுழற்சிக் கொண்டது.
உள்ளிழுக்கும் காற்று அப்புள்ளியில் நின்றதும், அவளுக்குள் பல மாற்றங்கள் ஏற்படுத்திக் கண்களுக்குள் ஏதேதோ காட்சிகளைக் காட்டியதும், அவள் கருவிழிகள் அசைந்தது.
இப்படி பல மாற்றங்கள் அவளுடலில் ஏற்பட்ட பின், சுயநினைவின்றி கிடந்தவள் மூன்று மணி நேரத்திற்கு பின், அதே இரண்டு சித்தர்களால் அம்மூலிகை குழியில் இருந்து மேலே கொண்டு வரப்பட்டாள்.
அதே அஞ்சனக் கல்லின் மேல் படுக்க வைத்து, கீழே அதனைச் சுற்றி உடைந்திருந்த பூந்தொட்டிகளை ஒட்டி, அதில் மண் நிரப்பி, அவளுக்கு தேவையான சில மூலிகைச் செடிகளை நட்டு அவளைச் சுற்றி வைத்துவிட்டு அரூபமாக அவளருகே அமர்ந்து அவளுக்கு வேண்டிய மருத்துவ உபசரனைகள் செய்துக் கொண்டிருந்தனர்.
அதிகாலை ஐந்து மணியளவில் கண்விழித்த தர்மதீரனும், யாழியனும் எல்லை கடக்க அனுமதி பெற்றுக் கொண்டு மற்றவர்களையும் எழுப்பி ஒன்றாகவே வல்லகியைத் தேடிச் சென்றனர்.
மனதில் தோன்றிய பாதையில் தர்மனும் இனியனும் முன்னே நடக்க விமலும், முகுந்தனும் சுற்றிலும் பார்வையைச் செலுத்தியபடி முன்னும் பின்னும் பாதுகாப்பு வளையத்தை உறுதி செய்தபடி நடந்தனர்.
மற்றவர்களின் முகத்தில் சோர்வு இருந்தாலும் மனதில் வைராக்கியமும், கடமையுணர்ச்சியும் மிகுந்திருக்க, எதையும் பொருட்படுத்தாது கவனமாகவே பாதையில் முன்னேறினர்.
எடுத்து வந்திருந்த நீரும் ஒரு மணி நேரத்தில் தீர்ந்துவிட, “முகுந்தன்.. பக்கத்துல தண்ணி இருக்கற இடம் எதாவது இருக்கா பாருங்க…. “, இனியன் கட்டளையிட்டான்.
“ஓகே சார்..”
“நானும் இன்னொரு பக்கம் பாக்கறேன் சார்”, என விமலுடன் இன்னும் இருவரும் ஆளுக்கொரு திசையில் சென்றனர்.
“தர்மா ப்ரோ… அவனுங்க எப்பவோ பார்டர தாண்டி இருப்பானுங்க… எப்படியும் நாம ஆறு ஏழு மணிநேரம் அவங்கள விட பின்தங்கி இருப்போம். ஆந்திரா பாரஸ்ட் செக்போஸ்ட் தகவல் குடுத்திருந்தாலும் இங்க மாதிரி அங்கயும் அவங்களுக்கு கைகூலிங்க இருக்கற வாய்ப்பு தான் அதிகம். அடுத்து என்ன பண்ணலாம். ஐடியா வச்சிருக்கீங்களா?”, இனியன் உடன் வந்தவர்களின் சோர்வைக் கவனித்தபடிக் கேட்டான்.
“பார்டர் தாண்டி அந்த பக்கம் செக் போஸ்ட் வரை பாக்கலாம் இனியன். அந்த பொண்ணு உயிருக்கு நாம கண்டுபிடிக்கறவரை எதுவும் ஆகாம இருந்தா போதும்”, மனதை அரிக்கும் எண்ணத்தைக் கூறினான்.
“அவ்வளவு சீரியஸான பொண்ண இவனுங்க ஏன் சிரமப்பட்டு தூக்கிட்டு போகணும்? நிஜமா ரொம்ப சீரியஸா? இன்னும் என்னால அந்த பொண்ண பத்தி நீங்க சொன்னத நம்ப முடியல ப்ரோ”, சுற்றியும் பார்வையை சுழற்றியபடியே தர்மாவையும் கண்பார்த்துக் கேட்டான்.
“ஆமா சார். அந்த பொண்ணோட கண்டிஷன் படி இப்ப வரை உயிர் இருந்தாலே பெருசு. இவங்க வேற பூந்தொட்டிய உடச்சிட்டே போய் இருக்காங்க. காட்டுக்குள்ள இருந்தாலும் அந்த பொண்ணுக்கு மூச்சு விடறதுல சிரமம் ஏற்பட்டா கஷ்டம் தான்”, டாக்டரும் சம்பாஷணையில் கலந்துக் கொண்டார்.
“ஆக்ஸிஜன் மாஸ்க் போட்டு இருப்பீங்களே … அவனுங்களும் மாஸ்க் வச்சி தான் தூக்கி இருக்கணும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கறப்ப…”, இனியன் யோசனையுடன் கேட்டான்.
“இல்ல சார். அந்த பொண்ணுக்கு உடம்புல ஏதோ மாற்றம் ஏற்பட்டிருக்கு. சுத்தமான செடில இருந்து வர்ற ஆக்ஸிஜன் தான் சுவாசிக்க முடியுது. சிலிண்டர் காத்த சுவாசிக்க முடியாது………”, என முன்தினம் ஆஸ்பத்திரியில் நடந்ததைக் கூறினார் டாக்டர்.
“ரேர் பினாமினான் போலவே… இப்ப கொஞ்சம் நம்பறேன்”, என சத்தமாக கூறி, “ஆனா நேர்ல பாத்தா தான் முழுசா நம்ப முடியும்… “, என தனக்குள் சொல்லியவன் கண்களில் முகுந்தன் அடிபட்டு ஓடிவரும் காட்சி கண்களில் பட்டது.
“காய்ஸ் அலர்ட்….”, என கத்திய இனியன் முன்னே ஓடிவந்து முகுந்தனை கைப்பற்றி தன் பின்னே தள்ளி விட்டு அவன் பின்னால் துரத்தியபடி வந்த ஓநாயைச் துப்பாக்கியால் சுட குறி வைத்தான்.
அவன் ஒன்றைச் சுட்டதும், பின்னால் கூட்டமாக வந்த ஓநாய்கள் அங்கிருந்தவர்களைக் கண்டு வெறி கொண்டு பாய்ந்து வந்தன.
அவனை நோக்கி பாய்ந்த ஓநாயை தூர வீசிவிட்டு, தன் துப்பாக்கி எடுக்க முனைய, அடுத்தடுத்த ஓநாய்களின் பாய்ச்சலில் அவன் துப்பாக்கி காணாமல் போனது. அனைவரும் துப்பாக்கி உபயோகப்படுத்த முனைந்து பின், சுட முடியாமல் ஆளுக்கொரு திசையில் ஓடினர்.
சிறிது நேரத்தில் உயரமான மரத்தில் ஏறும்படி இனியன் குரல் கொடுத்ததும் அங்கிருந்த மரங்களில் ஏற ஆரம்பித்தனர்.
அடர்ந்த காட்டுப்பகுதியாகையால் பல விசித்திர பூச்சிகளும் , சிறிய விலங்குகளும் இவர்கள் மரங்களில் ஏறியதும் வெளிப்பட்டன. அதில் பலருக்கு காயங்களும், விஷக்கடியும் ஏற்பட்டது.
வல்லகி இருந்த இடத்திற்கு அரை கிலோமீட்டர் தூரத்தில் தான் இவர்களும் மரத்தில் ஏறி தங்களை ஓநாய்களிடம் இருந்து தற்காத்துக்கொண்டு இருந்தனர்.
இவர்கள் போட்ட சத்தம் அரூபமாக இருந்த சித்தர்களுக்கு கேட்டதும், இருவரும் விசித்திரமான குரல் எழுப்ப பத்து நிமிடத்தில் இனியன் குழு இருந்த இடத்திற்கு சில பழங்குடி மக்கள் வந்தனர்.
ஓநாயை விரட்டியடிக்கும் உபகரணங்களோடு வந்து அவற்றை துரத்திவிட்டு, அடிப்பட்டிருந்தவர்களையும், விஷக்கடி வாங்கியவர்களையும் அறிந்து அவசரகால விஷமுறிவு மூலிகையை வாயில் செலுத்தியபின், சிலரைக் கைத்தாங்கலாகவும் , சிலரை தூக்கிக் கொண்டும் , பின்தொடறுமாறு தர்மனிடம் சைகை செய்துவிட்டு முன்னே நடந்தனர்.
தர்மனும் இனியனும் தங்களுக்கு ஏற்பட்டிருந்த சிராய்ப்புகளில் வழிந்த இரத்தத்தை துடைத்தபடியே அவர்களைப் பின்தொடர ஆணையிட்டு ஒருவர் மற்றவரை தாங்கியபடி நடந்தனர்.
சுற்றிலும் பழங்குடி மக்கள் ஒருவித புகையை பரப்பியபடி அவர்களை தங்கள் இருப்பிடம் நோக்கி அழைத்துச் சென்றனர்.
“ப்ரோ.. இவங்க உங்க ப்ரண்ட்ஸ் ஆ?”, இனியன் சிரிப்புடன் ஆர்வமாக கேட்டான்.
திரும்பி முறைத்தவன் ,”ம்ம்…. உங்க ப்ரண்ட்ஸ் னு நினைச்சேன் இனியன்… வாங்க போலாம். இந்த விமல் எங்க போனான்னு தெர்ல… வாக்கி குடுங்க… “, என விமலை தொடர்பு கொள்ள முயன்றான்.
பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு அடிபட்டு இருந்தது. அவர்களுக்கெல்லாம் வைத்தியம் பார்க்கப்பட்டு ஓரிடத்தில் படுக்க வைத்தனர்.
இந்த கலவரத்தில் சித்தர்கள் வல்லகியையும் அங்கிருந்த ஒரு குடிசையில் கிடத்திவிட்டு தர்மனிடம் வந்தனர்.
“பூகோலம் பிளக்கும் நேரம் வந்தது… யாழின் இனியவனுடன் நேராக நரசிம்ம துவாரம் செல். நாச்சியாளின் கரம் சேர வேண்டிய பொருளின் முதல் தடயத்தை கண்டுபிடி… அந்தகாரனை வதைக்காவிடில் அனைத்தும் அந்தமகாரத்தில் மூழ்கிவிடும்”, எனக் கூறிவிட்டு வல்லகி இருக்கும் குடில் வாயிலில் அவனை விட்டு விட்டு அங்கிருந்து குடில் பின்னால் சென்று மறைந்துப் போயினர்.
தர்மதீரன் அவர்கள் கூறியது ஒன்றும் புரியாமல் குடிசைக்கு பின்னே சென்று அவர்களைத் தேடினான்.
“ப்ரோ… அங்க என்ன பண்றீங்க? விமல் வந்துட்டான்”, எனக் கூறியபடி இனியன் அவ்விடம் வந்து பாதி திறந்திருந்த குடிசைக் கதவைத் திறந்துப் பார்த்தான்.
உள்ளே சென்று அங்கு படுத்திருந்தவளை உற்று நோக்கி விட்டு, “ப்ரோ. .. இங்க பாருங்க”, என ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்து தர்மனை அழைத்தான்.
இதழில் மென்னகை சூடியபடி வல்லகி ஆழ்ந்த உறக்கத்தில் லயித்திருந்தாள்.
இனியனின் சத்தம் கேட்டு உள்ளே வந்த தர்மனும் ஆச்சரியம் கொண்டு வல்லகியைப் பார்த்தான்.
அவள் உடலிலும் முகத்திலும் ஏதோ மாற்றம் வந்திருப்பது போல தெரிந்தது அவனுக்கு.
“இனியன்…. இவ எப்படி இங்க? இவ கூட யாரும் இல்லையா நீங்க பாத்தப்ப?”
“நான் உங்கள தேடி தான் வந்தேன். கதவு பாதி தொறந்து இருந்தது. யாரோ நம்மாளுங்கள படுக்க வச்சிருக்காங்கன்னு நினைச்சி உள்ள பாக்கலாம்னு வந்தேன். நீங்க யாரோ பெரியவங்க கூட இந்த பக்கம் வந்தீங்களே அவங்க எங்க? அவங்க தான் இந்த பொண்ணு இங்க இருக்கறத சொன்னாங்களா… ?”
“அவங்க புரியாத பாஷைல என்னமோ சொன்னாங்க…. ஒன்னும் புரியல. சொல்லிட்டு பின்னாடி போனாங்க ஆள காணோம். அதான் தேடிட்டு இருந்தேன். ஒரே மர்மமா இருக்கு… இவ எப்படி இங்க வந்தான்னு தெரியல. அவனுங்க என்ன ஆனானுங்கன்னும் தெரியல….”, தர்மதீரன் விமலுக்கு குரல் கொடுத்து டாக்டரை அழைத்து வரச் சொன்னான்.
“சார் டாக்டருக்கு ரொம்ப அடிபட்டு இருக்கு. இப்ப நடக்க முடியாது”, எனக் கூறியபடி வல்லகியைப் அவ்விடத்தில் பார்த்துவிட்டு வினவினான்.
தர்மனும் இனியனும் நடந்ததைக் கூறியும் அதை நம்பமுடியாமல், “சார்… இங்க எல்லாம் மர்மமாவே இருக்கு. அந்த பொண்ண நாம கொண்டு போகணும். ஆந்திரா பாரஸ்ட்கிட்ட ஹெல்ப் கேட்டு நம்ப ஊருக்கு போலாம். நிறைய பேருக்கு அடிபட்டு இருக்கு பாதி பேருக்கு மேல நடக்க முடியாது “, விமல் அடுத்து தேவையான நடவடிக்கைகளை ஞாபகப் படுத்தினான்.
“ம்ம்…. நாம முதல்ல இங்கிருந்து சென்னை போலாம். இங்க வண்டி வருமான்னு தெர்ல. நான் போய் விசாரிக்கறேன். நீங்க பாருங்க…”, என யாழினியன் மற்றவர்கள் இருந்த பக்கம் சென்றான்.
“எப்படி சார் இந்த பொண்ணு இங்க வந்தது? “, நம்பமுடியாமல் மீண்டும் கேட்டான் விமல்.
“அதான் சொன்னேனே தெர்ல டா….. ஒரே குழப்பமா இருக்கு. அந்த பெருசுங்க வேற எங்கயோ என்னை போக சொல்லிட்டு போனாங்க… நாச்சியாவுக்கும் இதுக்கும் ஏதோ தொடர்பு இருக்கு. வழுதி சார கான்டாக்ட் பண்ண முடிஞ்சதா? அந்த ஆர்க்கியாலஜி டீம் பத்தி எதாவது தெரிஞ்சதா?”, இரு கைகளாளும் பின்னந்தலையைப் பிடித்தபடி கேட்டான்.
“இல்ல சார் இங்க ரேஞ்ச் இல்ல… வாக்கி தான் எடுக்குது. இந்த பொண்ணு சுத்தி இத்தனை செடிய வச்சிருக்காங்க…. என்னவா இருக்கும்?”, என செடிகளைத் தொட அருகில் சென்றவனை அவ்வறையில் அதுவரை அரூபமாக இருந்த ஒருவர் அவனை பின்னே இழுத்தார்.
சட்டென ஒரு மூதாட்டி கண்முன்னே காற்றில் இருந்து உருவம் பெற்று வந்ததைக் கண்டு தர்மதீரன் ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.
விமலும் சற்று பயந்து அலறிட அவ்விடம் வந்துக்கொண்டிருந்த இனியன் வேகமாக உள்ளே ஓடிவந்தான்.
” என்னாச்சி விமல்?”
“யாழினும் இனியவா.…. உன் ஜென்ம கடமையானது உன் கண் முன்னே இருக்கிறது. உன் பிறப்பின் பயனை நிறைவேற்ற தயாராக இரு. தர்மத்தின் தீரனே…. இருவரும் நரசிம்மர் ஸ்தூபம் சென்று காத்திருங்கள். அடுத்த தகவல் வந்து சேரும். காலமானது வேகமெடுத்து இப்புவியை இருளுக்கு சமர்ப்பிக்கும் முன்னே கடமையை நிறைவேற்றுங்கள். புத்தியும் மனமும் இணைந்து செயல்பட்டால் செல்லும் பாதையை உணரமுடியும்”, எனக் கூறிவிட்டு வல்லகியை இவர்கள் இருவர் தவிர மற்றவர்கள் நெருங்கக் கூடாது எனவும், அச்செடிகளை யாரும் தொடக் கூடாது எனவும் கட்டளையிட்டு புன்னகையுடன் மீண்டும் காற்றில் கலந்து அரூபமானார்.
இம்முறை மூவரும் திகைத்து மூச்சு விடவும் மறந்து சிலை போல நின்றனர்.
ஆந்திர எல்லை கடந்த ஜிதேஷின் கூட்டம் அந்த வரைபடத்தின் குறிப்பிட்டு இருக்கும் குகை அருகில் வந்து நின்றனர்.
குகையின் மறுபக்கம் நீர்வீழ்ச்சி இருந்தது.
“சார்…. நீங்க சொன்ன இடம் இதுவா? “, விக்டர் கேட்டான்.
“மேப் ல இந்த மார்க் தான் காட்டுது விக்டர்….. பக்கத்துல எதாவது வீடு மாதிரி இருக்கா பாரு…. “, சந்தேகமாக சுற்றிலும் பார்த்தபடி அவனும் மற்றொரு பக்கம் பார்க்கச் சென்றான்.
பத்து நிமிடத்தில், “சார்…..”, என ஒருவன் கத்த அனைவரும் அவனருகில் ஓடினர்.
அந்த குகையின் ஒரு ஓரத்தில் இருந்து சென்ற ,சிறு நீரோடைப் பாதையில் நூறு அடி தூரத்தில் ஒரு நுழைவாயில் இருந்தது.
அந்த நுழைவாயில் அருகில் அனைவரும் நின்றதும் சட்டென அங்கே வாயில் அருகில் நின்றவர்கள் தலை மண்ணில் உருண்டது.
ஜிதேஷ், விக்டர் மற்றும் ஒருவன் தவிர மற்றவர்கள் தலை உடம்பில் இல்லாமல் முண்டமாக நிற்பதுக் கண்டு, அவர்களுக்கு தலை சுற்றி மயக்கம் வர ஆரம்பித்தது.
அத்தோடு அந்த நுழைவாயில் தாண்டி வரிசையற்று வளர்ந்திருந்த செடிகளில் இருந்து வந்த வாசம் அவர்கள் நாசியில் புகுந்து நரம்பு மண்டலத்தை அடைந்து, அவற்றை மெல்ல மெல்ல செயல் இழக்கச் செய்தன.
ஜிதேஷ் இரண்டடி கூட எடுத்து வைக்கமுடியாமல் தள்ளாடி விழ, விக்டர் சிரமப்பட்டு இன்னும் சில அடிகள் முன்னேறி காட்டுக் கொடிகளின் தோரணத்தை அடைந்து அம்மாளிகையின் படிகட்டை தொட்டதும் மயங்கி சரிந்தான்.
மற்றொருவன் சிரிப்புடன் இவர்கள் இருவரையும் தூக்கிக் கொண்டு உள்ளே சென்று இருவரையும் தனித் தனியே அடைத்து வைத்துவிட்டு யாருக்கோ தொடர்புக் கொண்டான்.