14 – காற்றின் நுண்ணுறவு
“வாவ்….. “, என இனியன் அவளின் அதிரடி நடவடிக்கையில் மெய்மறந்து நின்றான்.
“நீங்க என்ன பண்ணீங்க இப்ப?”, ஆச்சரியம் விலகாமல் கேட்டான்.
“இவங்கள அட்மிட் பண்ணிட்டு உள்ள வாங்க…. பாலா… கொஞ்சம் தண்ணி வேணும். சாப்பிட எதாவது இருக்கா?”, என தலையை உலுக்கி எதையோ நியாபகப்படுத்த முயன்றபடி நடந்தாள்.
யாழினியன் அடிபட்டு கிடந்தவர்களுக்கு சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டு, தன் அசிஸ்டெண்ட் முகுந்தனுக்கு அழைத்து விவரம் கூறி வரச்சொன்னான்.
“இந்தா வகி… சாப்பிடு…. “, என அவள் சாப்பிட உணவை கொடுத்தவள் அவள் முகத்தை பார்த்தபடி அப்படியே நின்றாள்.
முதலில் தண்ணீர் தொண்டையில் இறங்க இறங்க வலி எடுத்தது. பின் இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தபோது அவளுக்கு முதலில் சிகிச்சை கொடுத்த டாக்டர் எதிரில் நின்றார்.
“மிஸ் வல்லகி… உங்க உடம்புல எதாவது மாற்றம் தெரியுதா ?”
“தெரியல டாக்டர். நான் எத்தனை நாளா மயக்கத்துல இருக்கேன்? அன்னிக்கு கார் ஆக்ஸிடண்ட் அப்பறம் என்ன நடந்துச்சி?”, என யோசித்தபடிக் கேட்டாள்.
டாக்டர்கள் அவளைச் சூழ்ந்து கொண்டு பல சோதனைகள் செய்ய தேவையான இரத்தம் முதல் அனைத்தும் எடுத்துக் கொண்டு அவளது சுவாசப் பிரச்சினை இப்பொழுது எப்படி உள்ளதென வினவினர்.
அப்பொழுது தான் அவளைச் சுற்றி அத்தனை செடிகள் இருப்பதைக் கவனித்தவள் ஏன் என வினவினாள்.
முன்னர் சிகிச்சை கொடுத்த டாக்டர் விவரம் கூறியபின் நம்பாத தன்மையோடு அவரைக் கண்டாள்.
அன்று விபத்திற்குப் பிறகு என்ன நடந்ததென யோசிக்க யோசிக்க தலைவலி எடுத்தது. டாக்டர்கள் அவளை பரிசோதித்துவிட்டு நேற்று உடலில் இருந்த காயம் ஏற்பட்ட தழும்புகள் கூட இல்லை என்பது கண்டு வியந்தனர். பின் ஏதேனும் நோய் இருக்கிறதா எனவும் சோதித்து, எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய இரண்டு நாட்கள் காத்திருக்கக் கூறினர்.
சுவாசத்தில் மட்டும் ஏதோ மாறுதல் இருப்பதாக அவள் கூறியதால் அதை அதிக கவனம் கொண்டு ஆராய்ந்தனர்.
அவர்கள் கொண்டுள்ள உபகரணங்கள் கொண்டு அவளுக்கு ஏற்பட்டிருக்கும் மாறுதலை அவர்களால் வரையறுக்கமுடியாமல் திகைத்தனர்.
ஆனாலும் அவள் உடலில் ஏதோ மாற்றம் உள்ளே ஏற்பட்டுள்ளது எனவும், அதை அவள் உணர சில காலம் ஆகலாம் எனவும் கூறி ஓய்வெடுக்க கூறிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தனர்.
“ஸ்ஸ்ப்பப்பா…… எத்தனை மருந்து…. எத்தனை ஊசி….எப்படிதான் இதுலயே டாக்டர்ஸ் எல்லாம் வாழ்றாங்களோ…. கொடுமைடா சாமி…..”, யாழினியன் தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தப்படிக் அங்கலாய்த்துக் கொண்டான்.
“நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?”, வல்லகி நேரடியாக கேட்டாள்.
“ஏங்க…..இவங்களுங்க்கு எதுவுமே நீங்க சொல்லலியா?”, யாழினியன் அதிர்ச்சியாக கேட்டான்.
“அவளே இப்பதான் கண்ணு முழிச்சா. கண்ணு முழிச்சதும் சண்டை சச்சரவு ஆரம்பமாகிடிச்சி… வகி.. இவர் அசிஸ்டண்ட் கமிஷ்னர், இன்டெலிஜென்ஸ் ப்யூரோ. இவர்தான் தர்மா சார் கூட சேர்ந்து உன்னை தேடி கண்டுபிடிச்சி தூக்கிட்டு வந்தாங்க… “, என ஆரம்பித்தவள் அவளுக்கு தெரிந்த விவரங்களை முழுதாகக் கூறினாள்.
“நீ சொல்றது எல்லாம் நிஜமா பாலா?”, நம்பாத பார்வையுடன் அவளைக் கேட்டாள்.
“என் அம்மா மேல சத்யமா நிஜம்டி… அப்பறம்… “, என இழுத்தாள்.
“தர்மதீரன் எங்க?”, அடுத்த கேள்விக்குச் சென்றாள்.
“அவர வேலைய விட்டு தூக்கிட்டாங்க.. அது மட்டும் தான் இப்போதிக்கு தெரியும். அந்த ஜிதேஷ் பத்தி உங்களுக்கு வேற எதாவது தெரியுமா?”, இப்போது யாழினியனின் குரலும் தோரனையும் முற்றிலும் மாறி இருந்தது.
“இல்ல.. அவன்கிட்ட நேரடியா பேசினது கூட இல்ல. அன்னிக்கு ரெஸ்டாரெண்ட்ல அவன அடிச்சதோட சரி. அதுக்கப்பறம் அவன பாக்கவும் இல்ல… தர்மதீரன் சுதாகர் இரண்டு பேரும் என்ன ஆனாங்க? அவங்க நிஜமா யாரு?”, வல்லகி தன் சந்தேகங்களைக் கேட்டாள்.
தர்மதீரன் மற்றும் சுதாகர் இருவரும் தனியார் புலனாய்வுத்துறைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒரு கேஸ் சம்பந்தமாக அந்த கம்பெனியில் வேலையில் அமர்த்தப்பட்டார்கள் எனவும் அவளுக்கு தேவையான விவரங்களை மட்டும் கூறி அவளைப் பார்த்தான்.
யாழினியன் கூறியதைக் கேட்டவள் ஏதோ பெரிய சதி நடக்கிறது என நன்றாக புரிந்துக் கொண்டாள்.
“பாலா…. வீட்ல இருந்து கால் பண்ணாங்களா… எப்படி சமாளிச்ச?”, என யோசனையுடன் கேட்டாள்.
பாலாவிற்கு இப்பொழுது எப்படி அங்கு நடந்த விஷயங்களை கூறுவதென புரியவில்லை. தயங்கி தயங்கி யாழினியனைப் பார்த்துவிட்டு வல்லகியைப் பார்த்தாள்.
“வகி…. நான் சொல்றத கேட்டு ஷாக் ஆகாத….. மனசையும் உடம்பையும் நீ நல்லா வச்சிருந்தா தான் பரவால்ல… அது…. அது வந்து…. அக்கா…… அக்காவ…..”, என அவள் திக்கித் திணறுவதிலே ஏதோ விபரீதம் என உணர்ந்தவள் கண்களைக் கூர்மையாக்கி பாலாவை விழிகளால் மேலே கூறச் சொன்னாள்.
“அக்காவ யாரோ கடத்திட்டாங்களாம். அம்மா காப்பாத்த போனப்ப சுட்டுட்டாங்களாம். இப்ப நல்லா இருக்காங்க…. அப்பா தான் அங்க பாத்துட்டு இருக்காரு. உனக்கு அடிபட்டது அவருக்கு இன்னும் சொல்லல… தர்மா சார் சொல்லவேணாம்னு சொன்னாரு…. எங்கம்மாவ அங்க பாத்துக்க சொல்லி இருக்கேன்… ஆனா….”, எனக் கூறி தயங்கி வல்லகியைப் பார்த்தபோது அவள் மயங்கிச் சரிந்திருந்தாள்.
யாழினியன் அவசரமாக டாக்டரை அழைக்க ஓட பாலா பதறியபடி வல்லகியை எழுப்ப முயன்றாள்.
“என்னாச்சி…. பேஷண்ட் இப்ப நல்லா தானே இருந்தாங்க…. எப்படி திடீர்னு மயங்கினாங்க?”, டாக்டர் பாலாவை கேட்டபடி வல்லகியை பரிசோதித்தார்.
“அவங்க வீட்ட பத்தி கேட்டா டாக்டர். அங்க நடந்த பிரச்சினைய கேட்டதும் மயங்கிட்டா….. “, பாலா அழுதபடிக் கூறிவிட்டு வல்லகியின் கையை பிடித்தபடியே நின்றாள்.
“நான் தான் அவங்கள ஜாக்கிரதையா பாத்துக்க சொல்லிட்டு போனேன்ல… எதுக்கு அதுல்லாம் சொல்லி அவங்கள டென்ஷன் பண்றீங்க? படிச்சி இருக்கீங்களே தவிர அதுக்கு தகுந்தமாதிரி நடக்கறது இல்ல…. நர்ஸ்…. அந்த செடிகளை இவங்க பக்கம் எடுத்து வைங்க…. இவங்க உடம்புல என்ன என்ன மாற்றம் நடக்குதுன்னு நாம கண்காணிச்சிட்டே இருக்கணும்… வழக்கமா பண்ற ட்ரீட்மெண்ட் இவங்க உடம்பு ஏத்துக்காது…. பக்கத்துல சீப் நர்ஸ் ஒருத்தங்க இருக்கச் சொல்லுங்க”, என படபடவென உத்திரவிட்டு அவளுக்குத் தேவையான முதலுதவிகளைச் செய்துவிட்டு டாக்டர் நெற்றியைத் தடவியபடி வல்லகியின் அருகில் அமர்ந்தார்.
பாலாவும் யாழினியனும் அறைக்கு வெளியே காத்திருந்த நேரம் அந்த அரூவ பாட்டி டாக்டரின் உடலில் புகுந்து அவளைச் சுற்றி இருந்த செடிகளில் இருந்து சில இலைகளைப் பறித்து கசக்கி , அந்தச் சாற்றை அவள் வாயில் ஊற்றச்செய்தார்.
நர்ஸ் உள்ளே வரும் சமயம் டாக்டர் அவளது நெற்றிக்குச் சில பச்சிலைகளை இட்டுவிட்டு அதன் ஈரம் காய காய மற்றொரு இலையை கசக்கி அதன் மேல தடவுமாறு உத்திரவிட்டுச் சென்றார்.
அடுத்த இருபத்திநான்கு மணிநேரம் வல்லகி மயக்கத்திலேயே இருந்தாள்.
ஆனால் அவள் உடல் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவது கண்டு டாக்டர் சற்று ஆசுவாசமடைந்து யாழினியனை தொடர்புகொண்டார்.
“மிஸ்டர் இனியன்…. அந்த பொண்ணு உடம்புல நல்ல முன்னேற்றம் இருக்கு. இன்னும் சில மணிநேரங்கள்ல கண்ணு முழிச்சிடும்…. ”
“தேங்க்யூ டாக்டர். இப்ப அங்க தான் வந்துட்டு இருக்கேன். நேர்ல வரேன்”, எனக் கூறி வைத்தவன் யாருக்கோ அழைத்து அதைக் கூறிவிட்டு ஹாஸ்பிடல் நோக்கிக் கிளம்பினான்.
அன்றிரவு பாலா தன் தாயிற்கு அவள் மயக்கத்தில் இருந்து எழுந்து அக்கா அம்மா பற்றிய விஷயங்களை அறிந்ததும் மீண்டும் மயங்கியதைக் கூறி இருந்தாள்.
இப்போது தாயிடம் இருந்து அழைப்பு வருவது கண்டு போனை எடுத்துக்கொண்டு நடந்தபடியே, “கண்ணு…. வல்லகி பாப்பா எழுந்துரிச்சா டா ?”
“இல்லம்மா… ஆனா உடம்புல நல்ல முன்னேற்றம் தெரியுதுன்னு டாக்டர் இப்ப சொன்னாரு. கொஞ்ச நேரத்துல கண்ணு முழிப்பான்னு சொல்லி இருக்காரு.. அங்க அவங்க அம்மா எப்படி இருக்காங்கம்மா?”, கேட்டபடி பாலா கேண்டீனில் அமர்ந்திருந்தாள்.
“அவங்க காலைல கண்ணு முழிச்சிட்டாங்க…. பொண்ணு நினைப்பு வந்ததும் அழ ஆரம்பிச்சிட்டு அவள கண்டுப்பிடிக்கச்சொல்லி அடம் பண்ணிட்டு இருந்தாங்க. டாக்டருங்க வந்து மயக்க ஊசி போட்டுட்டு போனாங்க… பாக்கவே பாவமா இருக்கு கண்ணு… அவங்க அப்பாரும் உடைஞ்சி போய் இருக்காரு. நல்ல வேல வல்லகிய பத்தி அவரு எதுவும் இப்பவரை கேக்கல….”, என அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வல்லகியின் தந்தை அவரிடமிருந்து போனை வாங்கினார்.
“வதனிம்மா… நான் வல்லகியோட அப்பா பேசறேன்…. இப்ப அவ எப்படி இருக்கா டா?”, என உடைந்த குரலில் அவர் கேட்டதும் பாலா மிகவும் கலங்கித் தவித்துப் போனாள்.
“அப்பா…. உங்களுக்கு….. எப்படி…. அம்மா இன்னும்…. உங்ககிட்ட சொல்லலன்னு … சொன்னாங்க…. “, தயங்கித் தயங்கி லேசாக தேம்பியபடிக் கேட்டாள்.
“தெரியும் டா. நாச்சியாவ காணோம்னு போலீஸ் கிட்ட கம்ப்ளையண்ட் பண்ண போனப்ப அங்கயே சொன்னாங்க… திரும்பி போகலண்ணா அங்க சின்னப்பொண்ணு இப்ப பாதி உசிரோட இருக்கறதும் இல்லாம போயிடும்னு மிரட்டினாங்க டா…. அவ எழுந்துட்டாளா?”, மனதில் அழுத்திய பாரமும், அடக்கப்பட்ட கோபமும் அவரது குரலில் மாறி மாறி ஆட்சி செய்தது.
“இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிடுவாப்பா … முன்ன இருந்தத விட அவ உடம்புல நல்ல முன்னேற்றம் இருக்குன்னு டாக்டர் இப்ப தான் சொன்னாரு.. அவ கண்ணு முழிச்சதும் சொல்றேன்ப்பா… அம்மா எப்படி இருக்காங்க…?அவங்களுக்கு…..”, எனக் கேட்க வந்து தயங்கினாள்.
“அவளுக்கு தெரியாது. தெரியவும் வேணாம்…. இங்க நான் பாத்துக்கறேன். அங்க நீங்க ஜாக்கிரதையா இருங்க… தர்மதீரன் ன்னு ஒருத்தர் இன்னிக்கு என்கிட்ட பேசினாரு. உங்களுக்கு பாதுகாப்பு போட்டு இருக்காராம். அதே மாதிரி இங்கயும் போட்டு இருக்கறதா சொன்னாருடா…. நீங்க கவனமா இருங்க. அவ கண்ணு முழிச்சிட்டா அவளே சமாளிச்சிடுவா… நீ தனியா ரொம்ப கஷ்டப்படறடா வதனிம்மா … ரொம்ப நன்றிடா இந்த சூழ்நிலைல அவகூட நீ இருக்கறதுக்கு”, என மனதின் ஆழம் தொட்டு நன்றியுரைத்தார்.
“என்னப்பா பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க…. சீக்கிரம் வகி கண்ணு முழிச்சி அக்காவ கண்டுபிடிச்சிடுவாப்பா…. தைரியமா இருங்க….”, அவரைத் தேற்றினாள்.
“சரி டா. ஹாஸ்பிடல் பில் கட்ட பணம் உன் அக்கவுண்ட்ல அனுப்பிட்டேன் வதனிம்மா…. அதை எடுத்துக்க… மேல் செலவுக்கும் அனுப்பி இருக்கேன். அவ நல்லா குணமான அப்பறம் இங்க வந்தா போதும். பத்திரமா இருங்க டா…. அம்மாகிட்ட தரேன்”, என பாலாவின் தாயிடம் போனை கொடுத்துவிட்டு தன் மனைவி அருகில் சென்று அமர்ந்துக்கொண்டார்.
பாலாவிடம் சில நொடிகள் உரையாடிவிட்டு வல்லகியின் தந்தையிடம் சென்றார்.
“அண்ணே….. சின்னபாப்பாவுக்கு அடிபட்டது உங்களுக்கு முன்னமே தெரியுமா?”
“தெரியும்மா….”, சுரத்தே இல்லாமல் பதில் வந்தது.
“நீங்க போய் பாத்துட்டு வாங்கண்ணே.. நான் இங்க பாத்துக்கறேன்”
“இல்லம்மா… அவ சீக்கிரமே கண்ணு முழிச்சி வருவா… இங்க இவள விட்டுட்டு என்னால போக முடியாது. அப்ப அப்ப வதனிம்மாகிட்ட பேசிட்டே இருங்க. பாவம் சின்னக்குழந்தை…. ரொம்பவே கஷ்டப்படறா….”
“இக்கட்டான சூழ்நிலைய சமாளிக்க கத்துகட்டும் ண்ணே…. அவ சமாளிப்பா…. நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன். அவரு வயக்காட்டுல இருந்து இப்ப வந்துடுவாருண்ணே…. நீங்க மனசு விடாம இருங்க… சீக்கிரம் பிரச்சினை எல்லாம் தீரும்”, என ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார்.
சிறிது நேரத்தில் வல்லகி கண் முழித்ததும் பாலா வகியின் அப்பாவிற்கு அழைத்துக் கூறினாள்.
“சரிம்மா…. டாக்டர் அவ பேசலாம்னு சொன்னா போன் போட்டு குடு…. “, எனக் கூறி வைத்துவிட்டார்.
“டாக்டர்…வகிக்கு….”, அவளை பரிசோதித்து விட்டு வெளியே வந்தவரைக் கேட்டாள்.
“ஒன்னும் பிரச்சினை இல்லை. அவங்க உடம்புல என்ன மாற்றம் நடக்குதுன்னு தெரியல. ஆனா அது அவங்க உடம்ப கெட்டவிதமா பாதிக்கல. இவங்க விஷயத்த பொறுத்தவரை எல்லாமே மர்மமா தான் இருக்கு.. கொஞ்ச நேரத்துல உள்ள போய் பாருங்க. ஷாக் ஆகற விஷயத்த மட்டும் இப்ப உடனே சொல்ல வேணாம்”, எனக் கூறிவிட்டுச் சென்றார்.
பாலா வல்லகியைக் காண காத்திருக்கையில் யாழினியனும் வந்து சேர்ந்தான் முகுந்தனுடன்.
“வாங்க சார்…. வகி இப்ப தான் கண் முழிச்சா…. நீங்களும் வந்துட்டீங்க….”
“டாக்டர் என்ன சொன்னாங்க….?”, முகுந்தன்.
“ஷாக் ஆகற விஷயம் மட்டும் உடனே எதுவும் சொல்லவேணாம்னு சொல்லிட்டு போனாரு. கொஞ்ச நேரத்துல உள்ள போய் பாக்கலாம்னு சொன்னாரு… “
யாழினியன் சுற்றிலும் பார்வையைச் சுழற்றியபடியே நின்றிருந்தான்.
முகுந்தனும் அந்த காரிடோரரில் நடந்தபடியே அங்கிருந்தவர்களைக் கண்காணித்தபடி இருந்தான்.
பாலா சீக்கிரம் வல்லகியைக் காணவேண்டும் என்பதில் மட்டுமே குறியாய் இருந்ததில் இவர்களின் நடவடிக்கைகளை கவனியாமல் ரூம் வாசலையே பார்த்தபடி இருந்தாள்.
சாதாரண மனிதன் போல உடையணிந்து அவன் அந்த மருத்துவமனையின் உள்ளே நுழைந்தான்.
வல்லகி இருக்கும் அறை நோக்கி நடந்தவன் ஆங்காங்கே கண்காணிப்பு ஆட்கள் இருப்பதை உணர்ந்து எத்தனை பேர் உள்ளனர் என மனதில் எண்ணிக்கொண்டே அந்த காரிடோர் வந்தான்.
அங்கே யாழினியன் நிற்பதைக் கண்டு ஏளனமாக உதட்டை வளைத்துவிட்டு அதற்கு அடுத்த காரிடோரில் சென்று அமர்ந்தான்.
வல்லகி கண் முழித்த சில நிமிடங்களில் அவள் உடலில் இருக்கும் மாற்றங்களை, அவளே படிபடியாக உணர்ந்து கையாள ஏதுவாக வகை செய்துவிட்டு அவளை ஆசிர்வதித்துவிட்டு அவ்விடம் விட்டுச் சென்றார் அந்த பாட்டி.
பாட்டி அந்த பக்கம் சென்றதும் கண் விழித்த வல்லகி ஏதேதோ தோன்றவும் மீண்டும் கண்களை மூடி கசக்கிவிட்டு மீண்டும் கண் திறந்தாள்.
மீண்டும் கண்களுக்கு புகை போல ஏதோ தென்பட, நாசியில் மூச்சுக்காற்றை ஆழமாக இழுத்தபோது கண்களில் நீர் வழிந்தபடி இருந்தது.
நெஞ்சுக்குழியில் பொதிந்திருந்த மர்மப்புள்ளியை அவளே சுயமாக முடுக்கிவிட்டாள் மீண்டும் ஆழ மூச்செடுத்து….