15 – காற்றின் நுண்ணுறவு
அருகில் இருந்த காரிடாரில் அமர்ந்திருந்தவன் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அங்கிருந்து நகர்ந்து வல்லகி இருந்த அறையை பார்வைப் பார்த்தபடிச் சென்று வந்தான்.
மீண்டும் மயங்கியவள், நான்கு மணிநேரம் கழித்து வல்லகி கண் முழித்துப் பார்த்தாள்.
வழக்கத்திற்கு மாறான அமைதி அவள் முகத்தில் தெரிந்தது. பார்வையும் தீராத தேடலோடு தென்பட்டது.
பாலா அவசரமாக ஓடி வந்து கட்டிக்கொண்டாள். யாழினியன் முகுந்தனுக்கு சைகை காட்டிவிட்டு உள்ளே சென்றான்.
“வகி…. வகி…. எப்படி இருக்க? இப்ப எப்படி இருக்கு? இன்னும் உடம்பு வலிக்குதா? “, அவளை கண்களால் அளந்தபடிக் கேட்டாள்.
“நல்லா இருக்கேன் பாலா…. நீ ஏன் இப்படி ஆகிட்ட? ஒழுங்கா சாப்பிடலியா?”, குரலில் மென்மையும், அன்பும் வழக்கத்திற்கு மாறாக வழிந்தது.
“அதான் நீ இப்ப எழுந்துட்டல்ல… இனி சரி ஆகிடுவேன். உட்கார்றியா? ஹெல்ப் பண்ணவா?”,பாலா.
“கேக்ககூடாது. செய்யணும்…. அவங்கள பிடிச்சி எழுப்புங்க…. நான் தலகாணி வைக்கறேன்…..”, யாழினியன்.
பாலா வல்லகியை நிமிர்த்தி ஒரு கையில் பிடித்தபடி பாதி பெட்டை மேலே எழுப்பி அவள் அமர வாகாக்கி திருவினாள்.
யாழினியன் சற்றே அசடு வழிந்தபடி பாலாவை பார்த்துவிட்டு வல்லகிக்கு உதவி புரிந்தான்.
“எதாவது குடிக்கறியா வகி? “, பாலா மிகுந்த அக்கறையுடன் கேட்டாள்.
“வேணாம் பாலா…. தண்ணி மட்டும் கொஞ்சம் குடு போதும். அம்மா இப்ப எப்படி இருக்காங்க? அக்கா எங்க இருக்கான்னு தெரிஞ்சதா?”, மெதுவாக பொறுமையாக கேட்டாள்.
முதலில் அதிர்ந்து யாழினியனைப் பார்த்தாள். அவள் பார்வை புரிந்தவன், “உங்க அம்மாக்கு இப்ப பரவால்ல. நார்மல் ஆகிட்டு வராங்க. கேஸ் பைல் பண்ணி இருக்கு. சீக்கிரமே உங்க அக்காவ கண்டுபிடிச்சிடுவாங்க…. நீங்க உங்கள ஸ்ட்ரெஸ் பண்ணிக்காம இருங்க போதும்…. பாலா இவங்க என்ன சாப்பிடலாம்னு டாக்டர கேட்டுட்டு வாங்க.. நான் போய் வாங்கிட்டு வரேன்”, எனக் கூறி பாலாவை அனுப்பி வைத்தான்.
அவள் வெளியேறிய நொடி முகுந்தன் உள்ளே வந்தவன் அவள் கையில் போனை கொடுத்துப் பேச சொன்னான்.
பத்து நிமிடம் அமைதியாக அனைத்தையும் கேட்டவள் திருப்பி முகுந்தனிடம் கொடுத்துவிட்டு கண்மூடி பின்னால் சாய்ந்துக்கொண்டாள்.
முகுந்தன் சற்று நேரத்தில் கிளம்பிவிட, பாலா எளிதில் ஜீரணம் ஆகும் உணவு வகைகளை கேண்டீனில் வாங்கி வந்திருந்தாள்.
“நான் வாங்கிட்டு வரேன்னு தானே சொன்னேன்… “, இனியன் முறைத்தபடிக் கேட்டான்.
“ஏதோ பேசணும்னு தானே என்னை வெளியே அனுப்பினீங்க… அதான் நானே வாங்கிட்டு வந்துட்டேன். இந்தாங்க உங்களுக்கும்…”, என அவனுக்கும் கொடுத்துவிட்டு வல்லகிக்கு மெதுவாக ஊட்டிவிட்டாள்.
“நானே சாப்பிடறேன் பாலா”, சற்று சிரமத்துடன் கூறினாள்.
“வழக்கமா நாம செய்யறது தானே வகி. ஆ காட்டு… உன்ன பத்திரமா பாத்துப்பேன்னு சொல்லி இருக்கேன். அதை காப்பாத்தணும்ல….”, என ஏதேதோ கதைகள் பேசி வல்லகியை உணவருந்தவைத்துவிட்டு தானும் சாப்பிட அமர்ந்தாள்.
“பாலா… அப்பா பேசினாறா?”
“ஆமா வகி. இந்தா பேசு”, என அவள் மொபைலை கொடுத்தாள்.
டயல் செய்தபின் சற்று மனதை திடப்படுத்திக்கொண்டு, “அப்பா….”, என்றதுமே மீண்டும் குரல் உடைய ஆரம்பித்தது.
“எப்படி டா கண்ணா இருக்க? உடம்பு பரவால்லயா? சாரிடா செல்லம். அப்பாவால வரமுடியல…. “, அவரும் குரல் உடைய பேசினார்.
“எனக்கு ஒண்ணுமில்லப்பா…. நீங்க எப்படி இருக்கீங்க? அம்மா…. அம்மா எப்படி இருக்காங்க?”
“அம்மா இப்ப பரவால்ல டா. கொஞ்சம் பொலம்பிட்டே இருக்கா அவ்வளவு தான். உன் உடம்பு எப்படிடா இருக்கு? காயமெல்லாம் ஆறிடிச்சா?”
“காயம் எல்லாம் மறைஞ்சிரிச்சிப்பா”, எனக் கூறி அவளுக்கு நிகழும் மர்மத்தை அவரிடமும் கூறினாள்.
அதையெல்லாம் கேட்டவர், “செல்லம்… உன் உடம்புக்கு ஒண்ணுமில்லையே…. அந்த செடி எல்லாம் உன் பக்கத்துல தான் இருக்காடா இப்பவும்? வதனிம்மா இதபத்தி என்கிட்ட எதுவும் சொல்லவே இல்லடா…. உனக்கு உடம்பு நல்லா இருக்கு தானே கண்ணா?”, கவலையுடன் கேட்டார்.
“நல்லா இருக்கேன் ப்பா…. முன்ன விட பலமா இருக்கறமாதிரி தான் உணர்றேன். நான் நேர்ல வரேன் ப்பா…. உங்கள அம்மாவ பாக்கணும்”
“சாரி மிஸ் வல்லகி…. நாங்க சொல்றவரைக்கும் நீங்க இந்த ஊரவிட்டு போக கூடாது”, என அவளிடம் கூறிவிட்டு அவளின் தந்தையிடம் உரையாட ஆரம்பித்தான்.
அவருக்கு தேவையானதை மட்டும் கூறிவிட்டு ,” நாங்க சொல்றவரைக்கும் அவங்க சென்னை விட்டு எங்கயும் போககூடாது. நீங்க அங்க ஜாக்கிரதையா இருங்க சார்”, எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
“நீங்க தான் சஸ்பென்ட்ல இருக்கீங்களே …. நீங்க எப்படி இப்படி சொல்லலாம்?”, பாலா கோபத்துடன் கேட்டாள்.
“இந்த கேஸ் நான் எடுத்ததது. நான் சொல்றபடி தான் போகும் நான் அங்க இல்லைன்னா கூட. இவங்க உயிருக்கு இன்னமும் ஆபத்து இருக்கு. நாங்க சொல்றபடி நடந்துக்கறது தான் நல்லது”, எனக் கூறி வேகமாக வெளியே சென்றுவிட்டான்.
யாழினியன் சென்றபின் காலையில் வந்தவன் அந்த பக்கம் வந்து வகியின் அறையை நோட்டம் விட்டபின் சென்றுவிட்டான்.
இரவும் யாழினியன் காவலுக்கு அங்கே அமர்ந்திருந்தான்.
வல்லகியின் அறையின் ஜன்னல் வாயிலாக ஒரு உருவம் உள்ளே வந்தது.
ஸ்லைடிங் வின்டோவாக இருந்ததால் உள்ளே நுழையும் அந்த உருவத்திற்கு எந்த சிரமும் இல்லாது போனது.
வல்லகியின் கட்டில் அருகிலேயே அமர்ந்தபடி முன்னே கைவைத்து வல்லகியைப் பிடித்தபடி படுத்திருந்தாள் பாலா.
அந்த உருவம் இருவரையும் பார்த்துவிட்டு வல்லகியை எழுப்பியது.
கண் திறந்த வல்லகி சத்தம் போடாமல் தன் கையை மெல்ல உருவ முனைய பாலா அசையவும் அமைதியாக வந்திருந்த உருவத்தை கூர்ந்துப் பார்த்தாள்.
அந்த உருவம் அவளிடம் ஒரு சிறிய சுருக்கு பையை கொடுத்துவிட்டு அதை அவளிடம் வைத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு திரும்பும் சமயம் இன்னொரு உருவம் உள்ளே வந்தது. வகி சட்டென அந்த பையை கட்டிலுக்கு அடியில் சொருகிவிட்டு முதலில் வந்த உருவத்தை மறையும்படி பணித்துவிட்டு அரைக்கண் மூடி நடப்பதை கவனித்தாள்.
அந்த புது உருவம் சுற்றிலும் பார்வையை சுழற்றிவிட்டு பாலா அருகில் நின்று அவளது கழுத்தில் எதையோ வைத்து அழுத்த அவள் சுயநினைவு தப்பி கீழே சரிந்தாள்.
அடுத்து வல்லகியைச் சுற்றி உள்ள செடிகளை ஆராய்ந்தபடி அவளது கால் கட்டை விரல் அருகில் சின்ன ஊசியால் குத்தப் போக சட்டென வல்லகி கட்டைவிரலை திடமாக்கி அந்த உருவத்தின் நெஞ்சுக்குழியில் அடித்து அழுத்த அவன் சுவாசிக்க முடியாது சில நொடிகள் திணறிய நேரத்தில் வலது தோள்பட்டையின் மையத்தில் அழுத்தி பின்னங்கழுத்தில் அடித்தாள்.
அவன் உடல் செயல் இழந்து சுயநினைவுடன் கீழே சரிந்தான்.
டொம்மென்ற சத்தம் கேட்டு யாழினியன் தடவை தட்டும் போது ஒளிந்திருந்த உருவத்தை வெளியேற கூறிவிட்டு மெல்ல எழுந்து அறைக் கதவைத் திறந்தாள்.
பாலா ஒரு பக்கமும் முகமூடி அணிந்த உருவம் ஒரு பக்கமும் வீழ்ந்து கிடந்தனர்.
“என்னாச்சி வல்லகி? யார் இது?”, என பதற்றத்துடன் உள்ளே வந்தவன் நேராக ஜன்னல் அருகில் சென்று அவசரமாக கண்களை சுழற்றிவிட்டு வல்லகியின் அருகில் வந்து நின்றான்.
“தெர்ல…. பாலா என் கைய பிடிச்சபடி படுத்திருந்தா அவ கை என்னை இழுக்கவும் எழுந்து பார்த்தா இந்த உருவம் நிக்குது. அவன் சுயநினைவோட தான் இருக்கான். விசாரிங்க. நான் பாலாவை பாக்கறேன்”, என பாலாவைத் தூக்கி தான் படுந்திருந்த கட்டிலில் கிடத்தி அவள் கழுத்தை பரிசோதித்தபின், டாக்டரை அழைத்துவர வெளியே சென்றாள்.
அவள் டாக்டரை அழைத்துக்கொண்டு வரும் சமயம் காலையிலிருந்து வேவு பார்ப்பவன் கண்களில் விழுந்தாள்.
அவளின் உடல்வாகும், நிமிர்வும் அவனை ஏதோ சிந்தனையில் ஆழ்த்த, அங்கிருந்து கிளம்பி ஜிதேஷை அடைத்து வைத்திருக்கும் காட்டு பங்களா நோக்கிப் புறப்பட்டான்.
டாக்டர் வந்து பாலாவிற்கு மாற்று சிகிச்சை செய்து, அவள் கண்விழிக்க இரண்டு மணிநேரம் ஆகும் என கூறிவிட்டுச் சென்றார்.
யாழினியன் முகுந்தனுக்கு அழைத்து வரச் சொன்னான்.
“முகுந்தா …. சீக்கிரம் ஹாஸ்பிடல் வா”
டாக்டர் சென்ற பின் அங்கே மறுபக்கம் படுக்கவைத்திருந்தவன் அருகில் சென்றனர் இருவரும்.
முகமூடியை அவிழ்த்த பின் அந்த முகத்தை எங்கோ பார்த்ததாக யாழினியனுக்கு தோன்றியது.
“உன் முகம் எங்கயோ பார்த்து இருக்கேனே…. எந்த ஊர்டா நீ?”
கை கால்கள் அசைக்கமுடியாமல் கண்கள் பரிதவித்தபடி இருந்தது.
“யார் அனுப்பினா உன்ன? என் அக்கா எங்க இருக்கா?”, வல்லகி நேரடியாக கேள்விக்கு வந்தாள்.
சிறிது நேரம் பதில் இல்லாது போக வல்லகி அவன் உடம்பில் ஒரு இடத்தில் அழுத்தம் கொடுத்து தலையில் அடிக்க திரும்பி இருந்த கைகால்கள் நேரானது.
அவன் கைகளை முழுதாக அசைக்கும்முன் அவன் விழா எழும்பு பகுதியில் விரலால் அழுத்தம் கொடுத்து முதுகெழும்பில் அடிக்க வலியில் கதறினான்.
“ஆஆஆஆஆ….. வேணா….. ஆஆஆஆஆ”
“என் அக்கா எங்க?”, குரலில் தீவிரம் கூடி இருந்தது.
“ஆஆஆஆஆஆ… தெரியாது….. “
“யார் உன்ன அனுப்பினா?”, யாழினியன்.
“தெரியாது…..”.
“தெரியாதா “, எனக் கேட்டபடி சற்று கீழே முதுகெழும்பிற்கு பக்கவாட்டி அடிக்க துடிதுடிக்க ஆரம்பித்தான்.
“ஆஆஆஆ…. அய்யோஓஓஓஓஓ….. அம்மாஆஆஆஆஆ….. எனக்கு நிஜமா தெரியாது…….”, வலியில் அலறினான்.
வல்லகி மாற்றி மாற்றி உடலில் அழுத்தம் கொடுத்து அவனை வலியில் துடிக்கவைத்து விசாரிக்கும்போது முகுந்தன் உள்ளே வந்தான்.
“சார்….. இவன் நம்ம காட்டுக்கு போனப்ப அந்த பழங்குடி மக்கள் கூட்டத்துல இருந்தவன்ல”, என கேட்டபடி வந்தவனை இனியன் சட்டென திரும்பி பார்த்துவிட்டு, “வல்லகி… கொஞ்சம் அவன நார்மல் பண்ணுங்க”, எனக் கூறினான்.
யோசனையுடன் வல்லகி இனியனை பார்க்க,” ப்ளீஸ்… இப்படி செஞ்சி அவனுக்கு எதாவது ஆகிட்டா அப்பறம் அந்த ஜிதேஷ் கூட்டத்த பிடிக்க முடியாது…. கொஞ்சம் பொறுமையா இருங்க….”, என இனியன் எடுத்துரைத்தான்.
“முகுந்தன்…. அவன்கிட்ட இருக்க மருந்து என்னனு டெஸ்ட் பண்ண அனுப்பு….. ஒரு மணிநேரத்துல ரிப்போர்ட் வேணும். இவன நம்ம இடத்துக்கு கொண்டு போ…. நான் வந்து பேசிக்கறேன்”, என முகுந்தனுக்கு சைகையும் கொடுத்துவிட்டு வல்லகி அருகில் வந்தான்.
“என்னங்க நீங்க பாட்டுக்கு அவன கொன்னுடுவீங்க போல… இது எங்க கத்துகிட்டீங்க? தர்மா சொன்னாரு வர்மக்கலை உங்களுக்கு தெரியும் னு…. ஆனா இப்படி அலற வைப்பீங்கன்னு நான் எதிர்பாக்கல….. “, எனக் கூறியபடி அருகில் வந்து நின்று, “நான் உள்ள வர்றப்ப ஒருத்தன் வெளியே போனானே அவன் யாரு?”, என சிரித்தபடிக் கேட்டான்.
“தெரியாது”
“தெரியாதவன ஏன் காப்பாத்தறீங்க வல்லகி? “
“அவன் என்னை கொல்ல வரல”
“அப்ப எதுக்கு வந்தான்?”
“தெரியாது”
“பொய் சொல்லாதீங்க வல்லகி. எனக்கு வர்மக்கலை தெரியாம இருக்கலாம்…. ஆனா பொய் சொன்னா தெளிவா தெரியும். உங்களுக்கு அவன தெரியாது, ஆனா அவன் எங்கிருந்து வந்திருக்கான்னு உங்களுக்கு தெரியும். சொல்லுங்க… யார் அனுப்பி வந்தான்?”, இனியன் கிடுக்கியாக கேள்வியைக் கேட்டான்.
“நாச்சியா அனுப்பி தான் வந்தான்”, எனக் கூறி தன்னிடம் கொடுத்துச் சென்ற சுருக்குப் பையை அவனிடம் கொடுத்தாள்.
இனியன் அதை பார்த்துவிட்டு தர்மனுக்கு புகைப்படம் அனுப்பினான்.
சிறிது நேரத்தில் இனியனும் தர்மனும் கூடி பேசி அடுத்த நாள் காலையே வல்லகியை வீட்டிற்குச் செல்லக் கூறினர்.
அவளது வழக்கமான வாழ்விற்கும் ஒருசில நிபந்தனைகள் விதித்துத் திரும்பக் கூறினர்.
வல்லகி அனைத்தையும் ஒருவித அமைதியுடன் கேட்டுக்கொண்டு அவர்கள் சொல்படி நடக்க சம்மதித்தாள்.
பாலாவிற்கு சமாதானம் கூறி அடுத்த நாள் முதல் அலுவலகம் செல்ல வேண்டும் என்று மட்டும் கூறிவிட்டு, அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யச்சொன்னாள்.
அன்றிலிருந்து மூன்றாம் நாள் காலை வல்லகியும் பாலாவும் தங்களின் அலுவலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தனர்.
பஸ்ஸில் இருந்து இறங்கி வீடு வந்து சேரும் முன் அனைத்தும் படமாக மனதில் ஓடியிருந்தது வல்லகிக்கு…