21- காற்றின் நுண்ணுறவு
அடுத்த நாள் காலை நிரல்யன் சீக்கிரம் தயாராகி மாமல்லனின் இருப்பிடம் நோக்கிக் கிளம்பினான்.
“அண்ணா…. ஆல் தி பெஸ்ட்….”, என சாக்க்ஷி வாழ்த்துக் கூறி வழியனுப்பி வைத்தாள்.
மாமல்லனிடம் எப்படி வல்லகி வராததன் காரணம் கூறுவது என்கிறக் குழப்பத்துடன் கார் ஓட்டியபடி வந்தான்.
பிறைசூடன் மாலை கிளம்பி இரவிற்குள் சென்னை வந்து சேர்ந்தவர் பெண்கள் இருவரையும் தன் இருப்பிடம் நோக்கி அழைத்துச் சென்றார்.
அவர்கள் இருவருக்கும் தங்க ஒரு தளத்தையே கொடுத்தவர். அதில் அனைத்து வசதிகளும் செய்துகொடுத்தார்.
அவர்கள் இருவரும் தங்கியிருந்தது இரண்டாவது தளம். அவர் முதல் தளத்தில் தங்கி இருந்தார். அது தவிர மேலே இரண்டு தளமும், அன்டர்க்ரவுண்ட் இரண்டு தளமும் இருந்தது.
சுற்றிலும் தோட்டம் ஆங்காங்கே சில பயிற்சி கூடங்கள் என புத்தம் புதிதாய் காணப்பட்டது அந்த இடம்.
முதல் நாள் இரவு உணவை வெளியேவே முடித்துக்கொண்டனர். காலையும் அவர்களின் அறைக்கே உணவுச் சென்றிருந்தது.
சாப்பிட்டு முடித்ததும் ஒரு மினி ரோபோ வந்து அவர்கள் சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்துவிட்டுப் பாத்திரங்களை எடுத்துச் சென்றது.
இருவரும் தயாராகி அந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர்.
எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு பிறைசூடனைத் தேடிக் கொண்டு வந்தனர்.
“பெரியப்பா…. இதுலாம் இப்ப தான் நீங்க ரெடி பண்ணீங்களா?”, எனக் கேட்டபடி வல்லகி அவரின் லைப்ரரிக்குள் வந்தாள்.
“வாடா வல்லகி…. ஆமா… இங்க வந்து செட்டில் ஆகணும்னு முடிவு பண்ணதால இரண்டு வருஷம் முன்னயே இதை ரெடி பண்ண ஆரம்பிச்சேன். இது தவிர நார்த் இந்தியாலையும் இரண்டு ரிசர்ச் லேப் கட்டிட்டு இருக்கேன்…”
“உங்களுக்கு அவ்வளவு வருமானம் வருதா ?”, எனக் கேட்டபடி பாலாவும் உள்ளே வந்தாள்.
பிறைசூடன் மெலிதாக சிரித்தார். வல்லகி பாலாவை முறைத்தாள்.
“என்னை ஏன்டி முறைக்கற… இத்தனை ப்ளோர் கட்டி எல்லா வசதியும் இருக்கு… இதுல இவரோட ரிசர்ச் லேப் லைப்ரரி வேற ப்ராக்டீஸ் ஏரியான்னு இதுவே பாரு நாலு காணி அளவுக்கு இருக்கு…. அதான் கேட்டேன்… நாம ஹாஸ்டலுக்கு தங்கவே அவ்வளவு கேக்கறாங்க… இங்க இவ்வளவு பெரிய இடம் வாங்கி பில்டிங் கட்டறதுன்னா சும்மாவா? வெளிநாட்ல கொள்ளை அடிச்சிட்டு வந்திருப்பாரோன்னு தான் எனக்கு தோணுது”, பிறையைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தபடிக் கூறினாள்.
“ஆமாடி என் சீமாட்டி…. உன்ன தான் அடுத்த தடவ பேங்க்ல கொள்ளை அடிக்க அனுப்ப போறேன். அதுக்கு நீ ரெடி ஆகு…”
“எந்த பேங்கல கொள்ளை அடிக்க போறோம்?”, ஆர்வம் மின்னக் கேட்டாள்.
“எந்த பேங்க்ல அடிக்கலாம் நீயே சொல்லு”, பிறைசூடன்.
தலையில் கை வைத்து யோசித்தவள்,” ஹான்ன்ன்…. போன வாரம் ஒரு தெலுங்கு டப்பிங் படம் பாத்தேன். அதுல ஒரு பேங்க் வரும். அந்த பேங்க்ல மினிமம் பேலன்ஸ்ஆ ஐயாயிரம் கோடி வச்சிருந்தா தான் அக்கவுண்டே ஓபன் பண்ணுவாங்களாம். அந்த பேங்க்ல கொள்ளை அடிக்கலாம் பெரியப்பா”, கண்கள் மின்னக் கூறியவளின் முகபாவம் கண்டு பிறைசூடன் அவளை ஆரத்தழுவிக் கொண்டார்.
“நிஜமா உன்ன பெத்தவங்க ஏதோ புண்ணியம் செஞ்சி இருக்காங்க…. மனுஷன் எந்த கஷ்டத்துல இருந்தாலும் உன் பார்வையே அத ஓட வச்சிடுது … சரி வாங்க ப்ராக்டீஸ் ஆரம்பிக்கலாம்”, என இருவரையும் அழைத்துக்கொண்டு கீழே பயிற்சிக் கூடத்திற்கு வந்தார்.
பாலாவும் வல்லகியும் அந்த லேப்பை பிரப்மிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஒரு சுவற்றில் உலகின் பிரசித்தி பெற்ற பல பல்கலைகழகங்கள் பிறைசூடனுக்கு கொடுத்த பரிசுகள், கோப்பைகள், பாராட்டுப் பத்திரங்கள் என நூற்றுக்கணக்கில் ப்ரேம் செய்யப்பட்டு இருந்தது. பிறைசூடன் பற்றி அவர்கள் இருவரும் ஒன்றும் அறியாததால் அவரது ஞானமும், அதன் விசாலமும் அறியாமல், சிறுகுழந்தை போல இவர்களுடன், அவரும் உரையாடுவதால் சாதாரணமான ஆளை விட சற்று உயர்ந்தவர் என்று மட்டுமே எண்ணி இருந்தனர்.
இப்போது அவரின் பட்டங்கள், அவருக்கு கிடைத்திருக்கும் மரியாதைகள், பரிசுகள் என அவரின் சாதனைகளின் பட்டியலைக் கண்டுப் பிரமித்து தான் நின்றனர்.
“ஹேய் க்யூட் பேர்ட்ஸ்…. இங்க வாங்க… முதல்ல உங்களுக்கு வார்ம் அப் தான்…. இங்க முதல் டோர்குள்ள வாங்க”, எனக் கூறிவிட்டு உள்ளே சென்றார்.
இவரும் தடதடவென ஓடிச் சென்றனர்.
“நான் தான் பர்ஸ்ட்….”
“இல்ல நான் தான் பர்ஸ்ட்”
“இல்ல நான் தான்…”
“நான் தான்…”
முதலில் இருவரும் எதனால் சண்டை போடுகின்றனர் என்று ஒரு நொடி நிதானித்துக் கவனித்தவர், பின் “நான் தான் முதல்ல வந்தேன். நீங்க இரண்டு பேருமே லேட் தான்”, எனக் கூறிச் சிரித்தார்.
பெண்கள் இருவரும் சிரித்துவிட்டு அவரின் அருகில் சென்று நின்றனர்.
“இது என்ன பெரியப்பா?”, என வல்லகி அங்கிருந்த கலவையான பொருட்களைப் பார்த்துவிட்டுக் கேட்டாள்.
அங்கே எழுதுவதற்கு ஸ்லேட் முதல் டிஜிட்டல் ஸ்லேட் வரை அனைத்தும் இருந்தது.
விளையாட்டு பொருட்களிலும் அனைத்தும் இருந்தது. சிலம்பம், மான் கொம்பு, ஜிம்நாஸ்டிக் செட்டிங் ஒருபக்கம், ஜிம் வைட் ஒரு பக்கம், வாலிபால்,ஸ்கேட்டர்,பேஸ்கட் பால், புட் பால், ஹேண்ட் பால், ஹாக்கி, க்ரிக்கெட் பேட் , இப்படி பல வகையான பொருட்களும் இன்னொரு பக்கம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
செஸ், கேரம், ஸ்நூக்கர்,என உள்விளையாட்டு பொருட்களும் இன்னொரு பக்கம் இருந்தது.
“இதுல்லாம் நீங்க தினம் விளையாடுவீங்களா பெரியப்பா?”, பாலா ஆச்சரியமாகப் பார்த்தபடிக் கேட்டாள்.
“ஆமா…. போர் அடிச்சா அப்ப அப்ப விளையாடுவேன்”, என்றபடி சிலம்பம் இருக்கும் பக்கம் சென்று மணல் வளையத்திற்குள் சென்று நின்று வல்லகியை அழைத்தார்.
வல்லகியும் மற்றொரு சிலம்பத்தை எடுத்துக் கொண்டு அவருக்கு சிலம்ப முறையில் வணக்கம் வைத்துவிட்டுப் போட்டிக்குத் தயாராக நின்றாள்.
பிறைசூடன் ஆரம்ப கட்டத்தில் இருந்து ஆரம்பித்து வல்லகியின் உடல் அசைவுகளையும், நேர்த்தியாக அவள் சிலம்பும் சுழற்றுவதையும் படம்பிடிக்க உத்திரவிட்டார்.
“யார்கிட்ட போட்டோ எடுக்க சொன்னீங்க பெரியப்பா?”, பாலா சுற்றிலும் பார்த்துவிட்டுக் கேட்டாள்.
“இது ஹைலி சிஸ்டமைஸ்டு ஸ்மார்ட் ஜோன். வாய்ஸ் ஆர்டர் குடுத்தா போதும். இங்க சுத்தி சிசிடிவி கேம் இருக்கு … வல்லகிய ஸ்பெஷல் கேம்ல ரெக்கார்ட் பண்ண சொன்னேன். அது 360°ல 3 டைமன்சன்ல வீடியோ அண்ட் போட்டோ எடுக்கும்… “, எனக் கூறியபடி அடுத்தக் கட்ட சிலம்பாட்டத்திற்குச் சென்றார்.
வல்லகி முன்பை விட வேகமாகவும், விவேகத்துடனும், துள்ளியமான கணக்கிடுதல்களோடு தன்னை நோக்கி வரும் சிலம்பத்தை தட்டிவிட்டும், தற்காத்துக்கொண்டும் இருந்தாள். அதை அவளே புதிதாய் உணர்ந்தும் கொண்டிருந்தாள்.
அவளுக்குள் உற்சாகம் பொங்கப் பொங்க, அவளது செயல்திறன் முற்றிலும் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இருந்தது.
பிறைசூடன் கலைத்துப் போனதால், அங்கிருந்த ரோபோவை ஏவி விட்டு வல்லகியைக் கண்காணித்தார்.
சிலம்பம் முடிந்து மான் கொம்பை வைத்து அதிலும் சிறப்பாக செயல்பட்டாள். ரோபோ அசுர வேகத்தில் சுழன்று சுழன்று அவளை தாக்க முனைந்தும், அவளை சிறிது கூட நெருங்க முடியாமல் தோற்றுக்கொண்டே இருந்தது.
இது போல வல்லகிக்கு தெரிந்த விளையாட்டுகள் அனைத்தும் அடுத்த நான்கு மணிநேரமும் வல்லகியும் ரோபோவும் ஆடிக்கொண்டே இருந்தனர்.
ரோபோவிற்கு சார்ஜ் இறங்கி அது கீழே தொப்பென்று விழுந்தது. வல்லகி அப்போதும் புத்துணர்ச்சியுடன் நின்றிருந்தது தான் பிறைசூடனுக்கு மிகுந்த ஆச்சரியம் கொடுத்தது.
பாலா அவளை வாயைப் பிளந்துக் கொண்டுப் பார்த்திருந்தாள்.
“மனுஷியாடி நீ….. புல் ஜார்ஜ்ல வந்த பெரியப்பாவ டயர்ட் பண்ண.. அதுக்கப்பறம் டபுள் ஜார்ஜ்ல வந்த ரோபோவ ஜீரோ பண்ணிட்ட…. இன்னும் இப்ப தான் குளிச்சி மேக்அப் பண்ணிட்டு வந்த மாதிரி ‘ஈ’ன்னு பல்ல இளிச்சிட்டு நிக்கற…. உனக்கு டயர்டே ஆகலையா?”
“டயர்ட் ஆகல பாலா … ரொம்ப உற்சாகமா இருக்கு… வாயேன் நீயும் ஒரு ரவுண்ட் விளையாட”, வல்லகி சிரித்தபடி அழைத்தாள்.
“உன்கிட்ட ரோபோ பட்ட பாடு போதும்.. நான் வேறயா? அதுக்குலாம் என்னை எதிர்பாக்காத…. என்னோடது பிஞ்சு உடம்பு … உன் வேகத்துக்கெல்லாம் தாங்காது…. யம்மாடி… என்ன பெரியப்பா இவ இப்படி இருக்கா? இன்னிக்கு வரைக்கும் கும்பகர்ணியாட்டம் தூங்கறாளே என்னத்த செஞ்சி கிழிச்சான்னு நெனைப்பேன்…. இப்ப இந்த கிழி கிழிக்கறா… இன்னும் பத்து ரோபோ வாங்கி வச்சிக்கலாம்… இவகிட்ட மல்லுகட்ட நம்பலால ஆவாது பெரியப்பா”, பாலா படபடவென பேசித் தள்ளினாள்.
“வதனி சொல்றது சரி… உன் வேகம் விவேகம் இரண்டு அட்டகாசமா இருக்கு… இத நாம சிஸ்டம் ல ரன் பண்ணி உன் பாடி பங்ஷனிங் பாக்கலாம் வாங்க”, என தன் லேப்பிற்கு அவர்களை அழைத்துச் சென்றார்.
“பெரியப்பா… பெரியப்பா”, பாலா மெல்ல அவரின் தோளைச் சுரண்டினாள்.
“என்ன?”, என அவர் சிஸ்டமில் கவனத்தைப் பதித்தபடியே கேட்டார்.
“இங்க கிட்சன் எங்க இருக்கு? சாப்பிட எதாவது செஞ்சிட்டு வரட்டா?”, என அவள் கேட்டதும் டக்கென திரும்பியவர் , “சாரிடாம்மா…. நான் லேப் வந்தா எல்லாத்தையும் மறந்துடறேன். ஒரு நிமிஷம் … வல்லகி இத அப்லோட் பண்ணு வந்துடறேன்”, என அவளிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியே சென்றார்.
வல்லகி அவர் கூறியது மட்டுமின்றி அவளின் கண்களில் பட்ட அனைத்தையும் செயல்படுத்திப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
பாலா, “அடியே… நீ பாட்டுக்கு ஏதேதோ பண்ணிட்டு இருக்க.. அவர் நிறைய சேவ் பண்ணி வச்சிருக்காரு…. அதையெல்லாம் டெலீட் பண்ணிடாத… ஏய்ய்… இப்ப ஏன்டி சிஸ்டம் ஓ.எஸ் அ நோண்டற? இது ஐ.ஓ.எஸ் டி…. வேணாம். சிஸ்டம் கரப்ட் ஆகிட்போகுது….”, என பாலா கத்த கத்த வல்லகி ஓ.எஸ் ஸில் இருந்து சில விவரங்களைச் சேகரித்து வைத்துக்கொண்டு இருந்தாள்.
சென்றவர் அரை மணி நேரத்தில் சமைத்த உணவு வகைகளை கொண்டு வந்து டைனிங் ஏரியாவில் வைத்துவிட்டு இன்டர்காமில் அழைத்தார்.
“லஞ்ச் ரெடி… இரண்டு பேரும் வாங்க”, எனக் கூறினார்.
“வா… போலாம் …. போதும் நீ நோண்டினது”, என பாலா வலுகட்டாயமாக அவளை இழுத்துச் சென்றாள்.
மாமல்லனைக் காணச் சென்ற நிரல்யன் வல்லகியின் ரிப்போர்ட் மற்றும் வல்லகி செக்-அப்பிற்கு வந்த நாளின் சிசிடிவி ரெக்கார்டிங் உடன் மட்டும் அங்குச் சென்றிருந்தான்.
வாசலில் இருந்து அனுமதி பெற்று உள்ள வந்தவனை ரித்விக் நிறுத்தினான்.
“அந்த பொண்ணு எங்க?”
“அவங்க சொந்த ஊருக்கு போய் இருக்காங்க… வந்ததும் கூட்டிட்டு வரேன். இப்ப டாக்டர்கிட்ட முக்கியமான விஷயம் டிஸ்கஸ் பண்ணணும்…”, முகத்தில் ஏதும் காட்டாமல் பதிலளித்தான்.
“சப்ஜெட் இல்லாம வந்து எதபத்தி டிஸ்கஸ் பண்ணப்போற நீ?”, ரித்வித் திமிராகக் கேட்டான்.
“மிஸ்டர்.. அவங்க உயிருள்ள பொண்ணு…. அடாப்ஸி சப்ஜெட் இல்ல… மைண்ட் யூவர் வேர்ட்ஸ்”, நிரல்யன் சற்றுக் கடினமாகக் கூறினான்.
ரித்வித் பதில் கூறும்முன் மாமல்லன் அழைக்கவும் இருவரும் உள்ளே சென்றனர்.
“நீங்க தானே நிரல்யன்? அந்த சப்ஜெட் எங்க? கொண்டு வந்தீங்களா?”, எனக் கேட்டான் மாமல்லன்.
இப்போது நிரல்யனை ரித்விக் நக்கலான பார்வை பார்த்துவிட்டு ,”அந்த பொண்ணு சொந்த ஊருக்கு போய் இருக்காங்களாம் டாக்டர். வந்ததும் இவர் கூட்டிட்டு வருவாராம். இப்ப ஏதோ உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணணும்னு சொல்றாரு”, எனக் கூறிவிட்டு நிரல்யனைப் பார்த்துச் சிரித்தான்.
“ஓஓஓ … அந்த சப்ஜெட் எப்ப வரும்? இன்னிக்கு வந்திருந்தா இன்னிக்கே நாம ரிசர்ச் ஸ்டார்ட் பண்ணி இருக்கலாம்… லேட் பண்றது எனக்கு பிடிக்காது நிரல்யன். வேற என்ன டிஸ்கஸ் பண்ணணும்?”, என மாமல்லன் கூறும் வார்த்தையும், முகபாவனையும் கவனித்தபடி இருந்த நிரல்யன் தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தான்.
“அந்த பொண்ணால நிஜமா காத்த படிக்க முடியுதான்னு எனக்கு சந்தேகமா இருக்கு. இது அனதர் லெவல் ஆப் ஹேலோசினேஷனா கூட இருக்கலாம்லயா?”, நிரல்யன்.
“நீ அந்த பொண்ணு உன் மனநிலைய அப்படியே சொன்னதா நீ சொன்னியே நிரல்யன்”, மாமல்லன் சந்தேகமாகக் கேட்டான்.
“ஆமாம்… ஆனா அது ஜஸ்ட் ப்ளூக்கா கூட இருக்க வாய்ப்பிருக்கலாம்ன்னு தோணுது”, நிரல்யன்.
“ஓஓஓஓ….. ரித்விக்”, என ஒரு குரல் கொடுத்ததும் நிரல்யன் மயங்கிச் சரிந்தான்.
அவன் கண்விழித்துப் பார்க்கும்போது வல்லகி அன்று அவனது மனநிலையை ஆழ்ந்து மூச்செடுத்து கூறுவது மீண்டும் மீண்டும் திரையில் ஓடிக்கொண்டிருந்தது.
அதைப் பார்த்து மாமல்லன் கண்களில் தன் முயற்சி வெற்றிப் பெறப் போகும் வெறி மின்னியது.