26 – காற்றின் நுண்ணுறவு
“சொன்னா கேளு பாலா…. உன் உயிருக்கே ஆபத்து வரலாம்…. அந்த மனுஷன் என்ன பண்ணப்போறார்-னு எனக்கும் தெரியல. அப்பா அம்மாவுக்கு நாச்சியாவாது முழுசா கிடைச்சிட்டா பரவால்ல…. அப்பா எப்படி இந்தாள நம்பினாருன்னு தெரியல. அவங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது… யாராவது அவங்க பக்கத்துல இருக்கணும்”, வல்லகி தலையைப் பிடித்தபடிக் குனிந்துக்கொண்டுப் பேசினாள்.
“அவங்கள நாங்க பாத்துக்கறோம் வல்லகி….. நீங்க இப்ப எங்களோட கிளம்புங்க”, என ஏஞ்சல் அவ்விடம் வந்தாள்.
புதிதாக ஒரு யுவதி நிற்பதுக் கண்டு தோழிகள் இருவரும் சந்தேகமாகப் பார்த்தனர்.
“யார் நீங்க?”, பாலா தான் முதலில் கேட்டாள்.
“இத பாத்தா தெரியலாம்”, என பிறைசூடனுக்கு வீடியோ கால் செய்துக் கொடுத்தாள்.
அங்கே பிறைசூடன் உடல் முழுக்க ஆங்காங்கே இரத்தம் வழிய மண்டியிட்டு அமரவைக்கப்பட்டிருந்தார்.
அருகில் ஒரு வெளிநாட்டுக்காரி கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி புகைப் பிடித்துக்கொண்டிருந்தாள்.
வல்லகியும் பாலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “யார் நீங்க? எதுக்கு அவர அடிச்சி இப்படி உக்கார வச்சிருக்கீங்க?”, வல்லகி இறுகிப்போன குரலில் கேட்டாள்.
“சத்தம் போடாம வந்தா எல்லாமே தெரியும்”, என ஏஞ்சல் பாலாவின் முதுகில் துப்பாக்கியை வைத்தாள்.
“நல்லா தமிழ் பேசற…. ஆனா பாக்க வேற நாட்டு ஆளு மாதிரி இருக்க”, வல்லகி பாலாவின் கைப்பிடித்து நடந்தபடிக் கேட்டாள்.
“நல்ல தைரியம் தான்…. போலீஸ் கிட்ட ஓடலாம்ன்னு ப்ளான் இருந்தா ட்ராப் பண்ணிடு .. உன் அப்பா அம்மாவும் எங்க கஸ்டடில தான் இருக்காங்க”, ஏஞ்சல் கூறிவிட்டு அருகில் இருந்த தடியனை அவர்கள் பின்னால் கண்காணித்தபடி வரச் சொல்லிவிட்டு அவர்கள் இருவருடன் சேர்ந்தே நடந்தாள்.
அந்த காரிடோரில் இருந்து திரும்பும் போது, “மிஸ்.வல்லகி….”, என முகுந்தன் அழைத்தான்.
“ஹலோ மிஸ்டர் முகுந்தன்…. எப்படி இருக்கீங்க?”, வல்லகி சிரித்தபடி அவனுக்கு கைககொடுத்துவிட்டு, அவன் கையில் அழுத்தம் கொடுத்தாள்.
“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? உங்கள அன்னிக்கு அப்பறம் பாக்கவே இல்ல”, சகஜமாக பேசியபடி அவளுடன் நின்றவர்களை ஆராய்ந்தான்.
“ஊருக்கு போயிட்டேன் முகுந்தன். அதுக்கப்பறம் இப்ப போன வாரம் தான் பெரியப்பா வீட்டுக்கு வந்தேன்…. அவர் பாரின்ல இருந்து போன வாரம் தான் வந்தாரு”, வல்லகி பாலாவின் கைகளை இறுக்கிப் பிடித்தபடி ஏஞ்சலைவிட்டு சற்றுத் தள்ளி நின்றாள்.
“ஓஓ….. அவர் பேரு என்ன? எங்க இருக்காரு?”, முகுந்தன் யாருக்கோ அழைத்துவிட்டு அப்படியே அழைபேசியை கையில் பிடித்துக்கொண்டான்.
“இங்க தான் நாம ஒருதடவ போன பீச் ரெஸ்டாரெண்ட்ல இருந்து இரண்டு கி.மீ கடற்கரையோரமா நடந்தா வரும்… நாம கூட யாரு இந்த பெரிய ஏரியால இவ்வளவு பெரிய வீடு கட்றாங்கன்னு பேசிட்டு போனோமே…”, வல்லகி.
“அதான் நான் கூட சொன்னேனே நாலு காணி இடம் வரும்னு… அது தான்…. “, பாலா பேச்சில் கலந்துக்கொண்டாள்.
ஏஜ்சல் கண்காட்டியதும் ஒருவன் பாலா அருகில் வந்து எதையோ வைத்து அவளது முதுகில் கீறிவிட்டு நகர்ந்துச் சென்றான்.
“அதுவா… சரி சரி…. ஆமா இவங்க எல்லாம் யாரு… பாரினர்ஸ் மாதிரி இருக்காங்க”, முகுந்தன் ஏஞ்சல் மற்றும் மற்ற அடியாட்களைப் பார்த்துக் கேட்டான்.
“வீ ஆர் பாடிகார்ட்ஸ்…. டாக்டர் பிறைசூடன், இவங்களுக்காக எங்கள அப்பாயிண்ட் பண்ணி இருக்காரு…. நாங்க கிளம்பணும் நேரமாச்சி… பாஸ் காத்துட்டு இருப்பாரு”, என ஏஞ்சல் தானே முன்வந்து பேசினாள்.
“டாக்டர் பிறைசூடன்?”, முகுந்தன் சந்தேகமாகப் பார்த்தான்.
“அவர் சைன்டிஸ்ட்…. இப்ப இந்தியால செட்டில் ஆகிடலாம்னு வந்துட்டாரு”, என வல்லகி கூறிவிட்டுக் கண்காட்டினாள்.
பாலாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக தன் உடலில் ஏதோ வித்தியாசம் தெரிந்து வல்லகியின் கைகளை அழுத்தினாள்.
அவள் கண்கள் சிவப்பேறுவதைக் கண்டு வல்லகி,” ஓக்கே முகுந்தன் அப்பறம் பாக்கலாம்”, என முன்னே பாலாவைப் பிடித்தபடி நடந்தாள்.
முகுந்தன் செல்பவர்களைப் பார்த்துக்கொண்டே காதில் போனை வைத்தான்.
“நம்ம கெஸ் சரி…. வல்லகிய பாலோ பண்ணு முகுந்த்… அவங்க இரண்டு பேருக்கும் எதுவும் ஆகக்கூடாது….”, இனியன் அந்த பக்கம் இருந்துக் கட்டளையிட்டான்.
“பாலாவுக்கு எதுவோ குடுத்திருக்காங்க சார். அவங்க நிக்கமுடியாம வல்லகி மேல சாஞ்சிட்டே நடந்து போறாங்க… “, என முகுந்தன் பாலாவின் முகத்தில் ஏற்படும் வித்தியாசங்களைப் உள்ளுக்குள் நினைவுக்கூர்ந்துப் பார்த்தபடிக் கூறினான்.
“ஷிட்…. ப்ளடி *****க்கர்ஸ்”, இனியன் அந்த பக்கம் கோபத்தில் கத்தினான்.
“சரி…. வல்லகிய பாலோ பண்ணுங்க… அவகிட்டா எப்படியாவது கான்டாக்ட் பண்ண பாருங்க. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது…. அந்த புதுசா வந்த பொண்ண பத்தின டீடைல்ஸ்ஸும் கலெக்ட் பண்ண சொல்லு முகுந்த்”, என கட்டளையிட்டுவிட்டு அருவியில் குதித்தான்.
இனியன் இட்ட கட்டளைகளை சோழனுக்கும், மாவழுதிக்கும் பகிர்ந்தபடி மேற்கொண்டு என்ன செய்வதென கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தான்.
“முகுந்த்…. நம்ம தேட்ற தலை நம்மல ரொம்ப ஷார்ப்பா வாட்ச் பண்ணுது…. தர்மனுக்கும் இனியனுக்கும் தகவல் குடுத்து ஜாக்கிரதையா இருக்க சொல்லு… புதுசு புதுசா ஆளுங்கள இறக்கறாங்க…. இவ்வளவு செய்ற அளவுக்கு அவங்க எதை தேடறாங்க?”, மாவழுதி.
“வழுதி …. அந்த நாலு பொருளும் எங்க இருக்கு?”, சோழன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தபடிக் கேட்டார்.
“நீங்க சொன்ன இடத்துல தான் பத்திரமா இருக்கு”, வழுதி.
“அந்த டைரி மட்டும் எப்படியாவது வல்லகி கைல குடுக்க முயற்சி பண்ணசொல்லு”
“அதுவா? ஏன் சீப்?”, வழுதி எதற்கென காரணம் அறியக் கேட்டான்.
“நாச்சியார கடத்தினதும், இப்ப பிறைசூடன் வச்சி வல்லகிய டார்கெட் பண்றதும் ஒரே ஆளுங்களா இல்லையான்னு நாம தெரிஞ்சிக்கணும்”, சோழன்.
“அப்படி இருக்கும்னு நீங்க நினைக்கறீங்களா சார்?”, முகுந்த் கேட்டான்.
“அப்படி இருந்தா?”, சோழன் நிலைக்குத்தியக் குரலில் கேட்டார்.
“நம்ம வேலை சுலபம் ஆகும்”, எனக் கூறியபடி தர்மன் அங்கே வந்தான்.
“ஹே தர்மா… நீ எப்படி இங்க? காட்டுக்குள்ள போறதா தானே ப்ளான்?”, வழுதி கேட்டார்.
“நம்ம விக்டர் கேங்க்ல புதுசா இருந்தவன் யாருன்னு தெரிஞ்சிரிச்சி சீப்”,என ம்ரிதுள்ளின் புகைப்படத்தை டேபிளில் போட்டான்.
“யாரு இவன்?”, முகுந்த் யோசனையுடன் கேட்டான்.
“இவன் தான் விக்டர் கேங்க்ல புதுசா ஜாயின் பண்ணவன். ஜிதேஷ் வல்லகிய கடத்திட்டு காட்டுக்குள்ள போனப்ப இவனும் அதுல இருந்திருக்கான்”, தர்மதீரன்.
“பாத்தா நம்ம நாட்டு பையன் மாதிரி தான் இருக்கு…. இவனுக்கும் நாச்சியாவ கடத்திட்டு போனவங்களுக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றியா?”, மாவழுதி.
“நிச்சயமா இருக்க வாய்ப்பிருக்கு… இவனே தான் நாச்சியாவோட ப்ரோபஸர கடத்தி இருக்கான். அங்க அவர கடத்திட்டு, உடனே இங்க விக்டர் கேங்க்ல ஜாயின் ஆகி ஜிதேஷ் கூட காட்டுக்கு போயிருக்கான். ப்ரோபஸர கடத்தின இடத்துல இருந்த சிசிடிவி ஃபூட்டேஜ் நேத்து தான் கிடச்சது “, என பென்டிரைவைக் கம்ப்யூட்டரில் இணைத்து அந்தக் காட்சிகளை ஓட்டினான்.
“கொஞ்சம் கெட் – அப் மாத்தி இருக்கான் போல. பாத்தா ரொம்பவே பலசாலி மாதிரி தான் இருக்கான்…. “, மாவழுதி.
“புத்திசாலியும் கூட வழுதி… ஒரு நாளைக்குள்ள அங்க அவங்கள அஸெம்பல் பண்ணிட்டு, இங்கயும் வந்து ஒன்னும் தெரியாத மாதிரி இருந்திருக்கான்…. அக்யூரெட் கால்குலேசன் போட்டு வேலை செய்றான்”, சோழன் அவனது முகத்தையும், அதில் தெரிந்த கூர்மையும் ஆராய்ந்தபடிக் கூறினார்.
“சார்…. ஜிதேஷோட அல்லக்கை சிக்கிட்டான்”, என ஆபீஸில் அவனுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருந்த ஒருவனை மற்றொரு டிடெக்டீவ் ஒருவர் இழுத்து வந்தார்.
“நீ சத்தீஷ் தானே”, என தர்மதீரன் கேட்டான்.
“ஆமா சீனியர்… ப்ளீஸ் என்னை விட்றுங்க…. நான் எதுவும் பண்ணல… அந்த ஜிதேஷ் கூட சுத்திட்டு குடிச்சிட்டு இருந்தேன் அவ்வளவே தான்”, எனப் பயந்தபடிக் கூறினான்.
“இவன நீ பாத்திருக்கியா ?”, என ம்ரிதுள்ளின் போட்டோவைக் காட்டினான் தர்மதீரன்.
“இல்ல எனக்கு தெரியாது…. என்னை விட்றுங்க”, என மீண்டும் பினாத்தினான்.
முகுந்தன் ஓங்கி ஒன்று அறைந்து, “நல்லா கண்ண தொறந்து பாத்து சொல்லு… இவன நீ ஜிதேஷ் கூட பாத்திருக்கியா? “, என அருகில் அந்த போட்டோவைக் காட்டினான்.
சத்திஷ் கண்களைக் நன்றாக கசக்கி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அந்தப் போட்டோவைப் பார்த்தான்.
“இவன்…. இவன…. நான் ஜிதேஷோட கெஸ்ட் ஹவுஸ்ல அடிக்கடி பாப்பேன். பயங்கரமா வாள் சண்டை போடுவான். ஜிதேஷ்க்கு வாள்சண்டை கத்து குடுத்துட்டு இருந்தான்”, திக்கித் திணறிக் கூறினான்.
“வாள் சண்டையா?”, தர்மன் சந்தேகமாகக் கேட்டான்.
“ஆமா… இவனுக்கு வாள் சண்டை , சிலம்பு, வர்மக்கலைன்னு பழைய கால வித்தையெல்லாம் நல்லா தெரியும்னு ஜிதேஷ் சொல்வான். அதுல்லாம் ஜிதேஷ்க்கு கத்துக்கணும்னு ஆசை. அவங்க மாமாகிட்ட சொன்னப்ப அவர் தான் இவன அனுப்பினாரு”, என தனக்குத் தெரிந்ததைக் கூறினான்.
“மாமா-வா? அது யாரு? கம்பெனி போர்ட் மெம்பர் சக்தி ஈஸ்வரனா?”, தர்மதீரன்.
“இல்ல…. சேர்மேன் வைப் லீலாவதி மேடமோட அண்ணன் விஜய்சௌந்தர்”
“விஜய் சௌந்தர்?”, என சோழன் யோசனையுடன் கேட்டார்.
“ஆமா சார்…. அவர் அராப் ஸ்டேட்ஸ் ல இருக்காரு”, சத்தீஷ்.
“அவர் எப்படி ஜிதேஷ்க்கு சொந்தம்?”, முகுந்தன்.
“அது தெரியல சார்…. அவங்க அம்மா வழில சொந்தம்னு ஒரு தடவை சொல்லிருக்கான். ஆனா அவன் குடும்பத்துல யாரும் இப்ப இல்ல… எல்லாரும் இறந்துட்டாங்க. சக்தி ஈஸ்வரன் சார் தான் அவனுக்கு கார்டியன்.. அவரும் இவன் நடந்துக்கறது சரியில்லன்னு இவன்கூட பேசறது இல்ல”
“வழுதி…. அந்த விஜய் சௌந்தர் பத்தி விசாரிக்க சொல்லு”, சோழன்.
வழுதி யாருக்கோ அழைத்து விவரங்கள் கூறி தகவல் கிடைத்ததும் அழைக்கச் சொல்லி அழைப்பை முடித்தார்.
தர்மதீரன் கண்காட்டவும் சதீஷை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர்.
“பிறைசூடன் கடைசியா எங்க இருந்து இந்தியா வந்தாரு முகுந்த்?”, சோழன்.
“அவரு ரஷ்யால இருந்து வந்திருக்கறதா தெரிஞ்சது சார். தவிர அவருக்கு இந்தியால செட்டில் ஆகலாம்னு வந்து இருக்கறதா வல்லகி சொன்னாங்க… கூட இருந்தவங்க எல்லாருமே பாரினர்ஸ்…. எந்த நாட்டுக்காரங்கன்னு கெஸ் பண்ண முடியல… ஆனா அந்த பொண்ணு நல்லா தமிழ் பேசிச்சி”, என ஏஞ்சலின் போட்டேவைக் காட்டினான்.
“பாத்தா ப்ரெஞ்ச் பொண்ணு மாதிரி இருக்கு…. ஆனா தமிழ்நாட்டு சாயலும் இருக்கு”, மாவழுதி அந்த போட்டோவைப் பார்த்துக் கூறினார்.
“சரி… அப்ப இது எல்லாமே செய்யறது ஒரே டீம் தான். இப்ப வல்லகிய எதுக்கு டார்கெட் பண்ணணும்?”, தர்மதீரன் கேள்விக்கு வந்தான்.
“ஒன்னு நாச்சியார எதாவது செய்ய வைக்க வல்லகிய வச்சி மிரட்ட தேவையா இருக்கலாம். இல்லைன்னா வல்லகி பத்தி தெரிஞ்சி அவள வேற எதுக்காவது யூஸ் பண்ண முயற்சி பண்ணலாம்”, முகுந்த்.
“கரெக்ட்…. பிறைசூடன வச்சி அவங்க ஏன் டார்கெட் பண்ணணும்?….. வல்லகிய பத்தி அவர் இந்த ஐஞ்சு நாளுல எல்லாத்தையும் அலசிட்டாரு…. அவளோட திறமை அவங்களுக்கு எந்த இடத்துல தேவைபடுது?”, தர்மதீரன்.