17 – மீள்நுழை நெஞ்சே
“துவாரகா… துவாரகா… கதவ தொற…. எங்கடி என் மகன்? “, என வைரம் மரகதம்மாவின் வீட்டுக் கதவை உடைத்தார்.
உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்த மைனா பயத்துடன் கனியைப் பார்க்க, துவாரகா தட்டில் இருந்த நெத்திலி மீனை உறிஞ்சிக்கொண்டே எழுந்து கதவிடம் சென்றாள்.
“நீ உள்ள போ துவா… நான் பேசிக்கறேன்…”, கனி அவளைத் தடுத்தபடிக் கூறினாள்.
“உன்ன முன்ன விட்டு என்னை பின்ன நிக்க சொல்றியா? நீ உள்ள போ… இத நான் பாத்துக்கிறேன். இந்நேரம் எங்கப்பாவும் இங்க வந்திருப்பாரு…. “, துவாரகா கண்டிப்புடன் கூறி, அவளை முற்றத்தில் நிறுத்திவிட்டுக் கதவைத் திறந்தாள் கையில் இருந்த மீனைச் சாப்பிட்டபடி.
“என்னத்த… என்ன இந்த பக்கம்…? ஓஹோ… மீன் குழம்பு வாங்கிட்டு போக வந்தீங்களா? இருங்க நிறைய போட்டு சம்படத்துல தரசொல்றேன்”, எனப் பேசியபடி உள்ளே திரும்பினாள் துவாரகா.
“எம்மவன் எங்க துவாரகா?”, வைரம் அழுது வடிந்த கண்களைத் துடைத்தபடிக் கேட்டார்.
“என்னைய கேட்டா? எனக்கு என்ன தெரியும்? நான் ஆஸ்பத்திரி போயிட்டு இப்ப தான் வரேன்… பிராது குடுத்திருக்க நேரத்துல உங்க மகன எங்க அனுப்பி வச்சீங்க நீங்க?”, துவாரகா முறைத்தபடிக் கேட்டாள்.
“நீ தான் எம்மவன எங்கயோ மறைச்சி வச்சிருக்க…. சொல்லு எங்க அவன்..? இல்லைன்னா இங்க நடக்கறதே வேற…”, என ஆங்காரமாகக் கத்தினார்.
“என்ன நடக்கும்? சொல்லுங்க என்ன நடக்கும்? உங்க புள்ளைய ஒழுங்கா வளக்காம ஊர் மேயவிட்டு ஒரு அநாதை புள்ள வாழ்க்கைய சீரழிச்சிருக்கான். அவன என்ன ஏதுன்னு கேக்காம என்கிட்ட வந்து எகிறிகிட்டு இருக்கீங்க…. அய்யா பஞ்சாயத்துகாரங்களே.. என்ன இது? என்னைய வந்து கேட்டா நான் என்ன சொல்றது? பொண்ண தான் என் மரகதம் அத்த பாதுகாப்புல வச்சிருக்க சொல்லிருந்தது அத செஞ்சோம். தப்பு பண்ணவன் எங்க போனான் ? எங்க இருக்கான்னு கூடவா நீங்க கவனிக்க மாட்டீங்க? என்னங்க பஞ்சாயத்து இது?”, என துவாரகா யாரையும் பேச விடாமல் பேசிக்கொண்டிருந்தாள்.
“இரு துவாரகா… நீ பாட்டுக்கு பஞ்சாயத்துகாரங்கள பேசிக்கிட்டே இருக்க…”, முதலியார் தலையிட்டார்.
“வேற என்ன மாமா பண்றது? அந்த புள்ளைக்கு நேத்து ராத்திரி முழுக்க உடம்பு சரியில்லாம இருக்குன்னு விடியங்காட்டியும் ஆஸ்பத்திரி கூட்டிட்டு போய் பாத்துட்டு இப்பதான் வந்தே சாப்புட உக்காந்தோம் . அதுக்குள்ள இங்க நின்னு பஞ்சாயம் பேச வந்துட்டாங்க.. மொத அவன கண்டுபிடிக்கற வழிய பாருங்க…. அந்த புள்ளைக்கு இவங்க பதில் சொல்லியே ஆகணும். அந்த புள்ள இன்னிக்கு அநாதரவாக நிக்குது… இதுக்கு யாரு பொறுப்பு?”
“சாப்புடறப்ப வந்தது தான் பிரச்சனையா கனி?”, மைனா மெதுவாகக் கேட்டாள்.
“ஆமா… மேடம் செம பசில இருக்காங்க… எல்லாரும் இன்னிக்கு என்ன ஆகறாங்கன்னு பாப்போம்…. நீ தட்ட எடுத்துட்டு இங்க உக்காந்து சாப்புடு… இந்நேரத்துக்கு இது முடியாது…. “, என இருவரும் உள்ளே சாப்பிட்டபடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
“அவ அநாதை ஆனதுக்கு எம்மவனா காரணம்?”, வைரம் கத்தினார்.
“இல்லைன்னு சொல்லுங்களேன் பாக்கலாம்”, என துவாரகாவும் எகிறினாள்.
“இரும்மா.. வைரம் நீ மொத வீட்டுக்கு போ… துவாரகா.. நீ சாப்டு அந்த புள்ளையோட மொதலியார் வீட்டுக்கு வந்துடு… எல்லாரும் ஒரு மணிநேரம் கழிச்சி பேசிக்கலாம்”, என அருணாச்சலம் அங்கிருந்தவர்களைக் கலைந்துப் போகச் சொன்னார்.
வைரம் கண்களில் வன்மம் நர்த்தனம் ஆடியபடி இருக்க, மனதோ மகனை நினைத்து குமைந்துக் கொண்டிருந்தது.
அனைவரும் அங்கிருந்துக் கலைந்துச் சென்றபின் அருணாச்சலம் துவாரகாவுடன் வீட்டின் உள்ளே வந்தார்.
“டாக்டர் என்னம்மா சொன்னாங்க..?”, அருணாச்சலம்.
“அவன் தான் குழந்தைக்கு காரணம் ப்பா.. நல்ல வேல அதுவே கலைஞ்சிடிச்சி… ஆனாலும் அவங்கம்மாவ வண்டில இடிச்சி கொன்னதும் அவன் தான்… “, என நிறுத்தி மீண்டும் தொடர்ந்தாள், “இந்த கர்ப்ப சிதைவுனால மைனா உடம்பு ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கு… இவ உடம்பு தேற இன்னும் ஆறு மாசம் ஆகும்னு சொல்லிருக்காங்க… தொடர்ந்து ஒரு மூனு மாசம் ஆஸ்பத்திரி போக வர இருக்கணும். அந்த செலவு எல்லாம் எப்படி இவ பண்ணுவா…? அது கூட நாம பாத்துக்கலாம். ஆனா இவளுக்கு பாதுகாப்பு.. இதுக்கு மேல இவ வாழ்க்கை எப்படி இருக்கும்னு தான் யோசிக்கணும் ப்பா”, என அமைதியாகக் கூறிவிட்டு தந்தையின் காலடியில் அமர்ந்து மடியில் தலைவைத்துக் கொண்டாள்.
“கவலபடாத துவா.. மைனா என் பொறுப்பு…”, என அவர் கூறியதும் ஒரு பக்கம் மனம் அமைதியடைந்தாலும், அவளின் இந்நிலைக்கு தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே காரணம் என்பதையும் மறுக்கமுடியாதல்லவா…
“சரி சாப்டு சீக்கிரம் முதலியார் வீட்டுக்கு வந்துடுங்க…. பேசிக்கலாம்”, என எழுந்து மரகதத்தைப் பார்த்து இரண்டொரு வார்த்தைப் பேசிவிட்டுச் சென்றார்.
“அங்க என்ன நடக்கும் துவா? என்னை அவனுக்கு கட்டி வச்சிட மாட்டாங்க-ல்ல?”, என மைனா ஒருவித பயத்துடன் கேட்டாள்.
“அதுலாம் நடக்காது மைனா… நீ தைரியமா அங்க பேசினா போதும்… மத்தது நாங்க பாத்துக்கறோம்… “, என துவாரகாவும் பதிலுரைத்துவிட்டு மீண்டும் சாப்பிட அமர்ந்தாள்.
“ஏன்டி.…. நாடு விட்டு போகுமுன்ன உங்கத்தைய ஒரு வழி பண்ணிடுவ போல”, என மரகதம் அவளுக்குப் பரிமாறியபடிக் கேட்டார்.
“அவங்க மூனு பேத்தையும் ஜெயில்ல போடணும் அந்த… ஆனா அது எங்கப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் இன்னும் வேதனைய தான் குடுக்கும். அதான் இத்தோட விடறேன். நானும் இந்த விஷயத்துல கொஞ்சம் சுயநலவாதி தான் அத்த…. எங்கப்பா ஏற்கனவே இவங்களால வருஷக்கணக்கா வேதனையோடு தான் இருக்காரு…. இந்த தடவ இவங்களுக்கு கொஞ்சம் பயம் காட்டினா தான் அடங்குவாங்க…”
“அப்படின்னு நீ நினைக்கிற”, என கனி அங்கே வந்தாள்.
“ஆமா .. நான் தான் நெனைக்கிறேன்… இவன வேற என்ன பண்றது? “, துவாரகா கனியின் முகம் பார்த்துக் கேட்டாள்.
“இது பாரு”, எனத் தனது மொபைலைக் கொடுத்தாள்.
துவாரகா அதைப் பார்த்தபோது மைனாவும் பார்த்துவிட்டு அழுக ஆரம்பித்துவிட்டாள்.
“இது எப்படி கெடச்சது?”
“என்கிட்ட ட்யூஷன் வர பசங்க குடுத்தாங்க… அவங்க வீடியோ எடுத்துட்டு இருந்தப்ப இதுவும் ரெக்கார்ட் ஆகி இருக்கு….”, கனி கூறிவிட்டு அவளின் முகம் பார்த்தாள்.
“என்ன பண்ணலாம்?”, துவாரகா கனியிடமே திரும்பக் கேட்டாள்.
“இது வச்சி அவங்கள கொஞ்சம் அடக்கலாம்… நீ சாப்டு வந்து ரெடியாகு”, எனக் கூறிவிட்டு மைனாவை தன்னோடு அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
மரகதம் துவாரகாவின் மனதை உணர்ந்து, ” இப்பவும் பயங்காட்டு… ரொம்ப துள்ளினா உங்கப்பாவே அடுத்தத பாத்துப்பாரு”, எனக் கூறி அவளை உண்ணச் சொன்னார்.
இங்கே நால்வரும் தயாராகி மருத்துவமனையில் கொடுத்த மைனாவின் உடல்நிலை சம்பந்தமானக் கோப்பை எடுத்துக்கொண்டு முதலியார் வீட்டுக்கு சென்றனர்.
இவர்களுக்கு முன் அங்கே அவளின் அப்பத்தா, அத்தை என அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு கூட்டம் நின்றிருந்தது.
இன்னொரு பக்கம் திண்ணையில் பஞ்சாயத்து ஆட்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
கனி மைனாவை தனக்கும் துவாரகாவிற்கும் இடையில் விட்டு அரணமைத்தபடி அழைத்து வந்தாள்.
இவர்களை கண்டதும் அப்பத்தா கிழவி பேச ஆரம்பித்துவிட்டது.
“இந்தா வரா பாரு சிறுக்கி மவ… இவ என்னிக்கு பொறந்தாளோ அன்னிக்கு இருந்து என் குடும்பத்துக்கு கஷ்டம் வந்து ஒட்டிகிடுச்சி… இவளால தான் என் பேரன் இப்ப காணோம். அய்யா பஞ்சாயகாரங்களா இவள பிடிச்சி கேளுங்க… இவ தான் எங்கயோ கடத்திட்டு போய் வச்சிருக்கணும்…”, என அப்பத்தா கிழவி வாய் ஓயாமல் அரற்றியது.
“உன் அப்பத்தாவுக்கு எப்படி டி இது தெரியுது?”, என கனி துவாரகாவின் காதில் கிசுகிசுத்தாள்.
“ஓசோன் ஓட்டை, சுனாமி, வெள்ளம்னு எது வந்தாலும் அதுக்கு நான் தான் காரணம்னு அது சொல்லும் டி… சில நேரம் சரியா தான் கெஸ் பண்ணுதுல்ல….”, என வாயிற்குள் சிரிப்பை அடக்கியபடிக் கூறினாள்.
மரகதம்மா முன்னால் வந்து அனைவருக்கும் வணக்கம் கூறி, “மைனாவ என் பொறுப்புல எடுத்து அதை சரியா பண்ணிட்டு வரேன்னுங்க… நேத்து ராத்திரி முழுக்க அந்த பொண்ணுக்கு இரத்தபோக்கு அதிகமா இருந்துச்சு, அதான் காலைலயே ஆஸ்பத்திரி கூட்டிட்டு போயிட்டு வந்தாங்க. கரு கலைஞ்சி போச்சின்னு டாக்டருங்க சொல்லிட்டாங்களாம்…”, என மரகதம்மா கூறியதும் வைரம் பெரும் ஆசுவாச பெருமூச்சு விட்டுக்கொண்டார்.
“பாத்தீங்களா ஐயா… நேத்து வரைக்கும் கர்ப்பம் னு சொன்னாங்க இன்னைக்கு இல்லைங்கறாங்க…. அதுக்கு யாரு அப்பன்னு அந்த சிறுக்கியவே கேளுங்க… என் பையன் அப்படிப்பட்டவன் இல்ல. அவன் மேல் அபாண்டமா பழி போடாதீங்க”, எனப் பேசியபடி வைரம் முன்னே வந்தார்.
“உண்மை தான். நேத்து வரைக்கும் கர்ப்பமா இருந்த பொண்ணுக்கு எப்படி திடீர்ன்னு கர்ப்பம் கலைஞ்சது?”, எனத் துவாரகாவும் இப்போது முன்னே வந்துப் பேசினாள்.
“அது எனக்கு எப்படி தெரியும்? இப்ப என் பையன காணோம்.. அத மொத பாருங்க ஐயா”, என அலைபாய்ந்த கண்களுடன் பேசினார் வைரம்.
“நீங்க நேத்து அவளுக்கு என்ன குடுத்தீங்க?”, எனத் துவாரகா நேரடியாக வைரத்தைப் பார்த்துக் கேட்டாள்.
“நான்… நான்… என்ன குடுத்தேன்.. ஒன்னும் … ஒன்னும் குடுக்கலியே….”, எனத் திணறியபடிக் கூறினார்.
“பஞ்சாயத்துகாரங்க இத கொஞ்சம் கவனிக்கணும். நேத்து சாயங்காலம் மைனா இவங்கள பாத்து கர்ப்பமா இருக்கேன்னு இவங்ககிட்ட சொல்ல வீட்டுக்கு போயிருக்கா.. அப்ப இவங்க அவளுக்கு கர்ப்பம் கலைக்கற மருந்து குடுத்ததால தான் கரு கலைஞ்சதுன்னு டாக்டர் ரிப்போர்ட் குடுத்திருக்காங்க. இவங்கள பாத்த அப்பறம் தான் இவ உங்ககிட்ட வந்து பிராது குடுத்தா…. எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சி பாத்தா தெரியும் யாரு கர்ப்பத்துக்கு காரணம், யாரு அது கலைஞ்சதுக்கும் காரணம்னு… “, எனக் கூறிவிட்டு அங்கிருந்த டாக்டர் ஒருவரிடம் காட்டினாள்.
அவர் அந்த ஊரிலேயே முப்பது வருடமாக இருப்பதால், பஞ்சாயத்து ஆட்களுக்கு உண்மையான நிலவரத்தை எடுத்துக்கூறினார்.
“உன் பையன் காரணமா இல்லாதப்ப நீ ஏன் மருந்து குடுத்த வைரம்?”, என மூத்த பஞ்சாயத்துக்காரர் கேட்டார்.
“அது… அது…. அவ சொல்றது பொய்ங்க… அவ என்னை வந்து பாக்கவே இல்ல”, என வைரம் மழுப்பினார்.
“என்ன வைரம்… நேத்து நான் உங்கிட்ட வட்டி குடுக்க வரப்ப தானே மைனாவும் வந்தா… நான் அங்க தானே இருந்தேன்.. இப்ப வரலங்குற …. “, என பொது மனிதர் ஒருவர் கூறியதும், அருணாச்சலம், “இந்த தப்புக்கு தண்டனை எதுவா இருந்தாலும் அந்த குடும்பம் ஏத்துகிட்டு தான் ஆகணும்… அடுத்து ஆக வேண்டியத பேசலாம்”, எனக் கூறினார்.
“அய்யா.. அருணாச்சலம்… என்னய்யா இப்படி சொல்லிட்ட… அவ உன் கூட பொறந்த பொறப்பு யா…”, என அப்பத்தா கிழவி கூறியது.
“அதுக்குன்னு ஒரு பொட்ட புள்ள வாழ்க்கைய சீரழிச்ச குடும்பத்த நான் காப்பாத்துணுமா? நீ அமைதியா வீட்டுக்கு போம்மா… மனோகரா.… நீ அம்மாவ அனுப்பி வச்சிட்டு வா”, எனக் கோபமாகப் பதில் கொடுத்தார்.
“ஐயா…. அந்த புள்ள வந்து சொன்னது நெசம் தான்.. ஆனா என் புள்ளைய காணோம் … அவன எங்கன்னு மொத தேட வழிபண்ணுங்க”, என வைரம் சரணடைந்தார்.
“இந்த புள்ளைக்கு என்ன பதில் இப்ப சொல்ற வைரம் நீ?”, என் பஞ்சாயத்துக்காரர் கேட்டார்.
“நான் என்னங்க சொல்றது?”, என ஒன்றும் புரியாமல் நின்றார்.
“அந்த பொண்ணுக்கு நீ குடுத்த மருந்தால கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கு… ஆறு மாசம் ஆஸ்பத்திரி செலவு பண்ணணும்… “
“அதுக்கு எவ்ளோ பணம் தேவையோ அத நான் குடுத்திடுறேனுங்க…”, என வைரம் கூறினார்.
“எனக்கு அவங்க பணம் வேண்டாங்க ஐயா… பணம் மட்டுமில்ல அவங்க பையனும் வேண்டாம். எப்ப என்னை கொல்லவும் இரண்டு பேரும் துணிஞ்சிட்டாங்களோ அந்த வீட்ல என்னால வாழ முடியாது…”, என மைனா இப்போது வாய்திறத்தாள்.
“வேற என்ன புள்ள பண்ணணும் இப்ப?”, முதலியார் கேட்டார்.
“இனிமே என் வாழ்க்கைல இவங்கள நான் பாக்கக்கூடாதுன்னு நினைக்கறேனுங்க… என்னை மாதிரி இன்னொரு பொண்ணு இந்த ஊர்ல ஏமாறக்கூடாது… எல்லாருக்கும் நெசம் என்னனு தெரியணும் அதுக்கு தான் இந்த பஞ்சாயத்த கூட்டினேன்… “, எனக் கூறிவிட்டு கனியின் அருகில் சென்று நின்றுக் கொண்டாள்.
வைரம் செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். அவரின் அழுகைக்கு இப்போது அங்கே மதிப்பில்லை, அவருக்குமே…
தலை குனிந்தபடி அழுது கொண்டிருந்தவரைக் கண்டு அருணாச்சலமும் மனதிற்குள் வருந்திக் கொண்டிருந்தார்.
சரியான நேரத்தில் பிள்ளைகளைக் கண்டிக்காமல் விட்டால், இப்படித்தான் மொத்த குடும்பமும் வருத்தப்பட நேரிடும்…..