3 – அகரநதி
அப்படி இப்படி என காலாண்டு தேர்வும் முடிந்தது. அனைவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் சமயம்,” அகன்…. அகன்….. நில்லு ” என நதியாள் அழைத்து கொண்டே ஓடி வந்தாள்.
“என்ன நதிமா? ஏன் இப்படி ஓடி வரீங்க?”, அகரன்.
“நீ நாளைக்கு இங்க வருவியா? நாம விளையாடலாம்”, நதியாள்.
“நாளைக்கு லீவ் தானே . இங்க ஏன்டா வந்து விளையாடனும்?”, அகரன்.
“வீட்ல போர் அடிக்கும் அகன். நானும் மீராவும் விளையாட வரோம் நீயும் வா”, நதியாள்.
“நீ என் வீட்டுக்கு வா நாம விளையாடலாம்”, அகரன்.
“அம்மா விடுவாங்களா?”, நதியாள்.
“அப்பாகிட்ட கேளு. திரும்ப நானே உன்ன வீட்ல கொண்டு போய் விடறேன். சரியா?”, அகரன்.
“சரி. அம்மா விடலன்னா நாங்க இங்க தான் விளையாடிட்டு இருப்போம் நீயும் வா. டாடா”,என கூறி ஓடினாள் நதியாள்.
“என்னடா லீவ்ல கூட இந்த குட்டிபிசாசு உன்ன விடாது போல?”, சரண்.
“அவளுக்கு என்னமோ என்கூட இருக்க பிடிச்சி இருக்கு. நாம அடுத்த வருஷம் முடிச்சிட்டு காலேஜ் போய்ருவோம். இதுல ஸ்வீட் மெமரீஸ் டா. இப்படி இருந்தா தான் நல்லா இருக்கும்”, அகரன்.
“என்னமோ போ… ஆனா யாருக்கும் அடங்காதவ நீ சொன்னா அப்படியே கேக்கறா.அதுவரைக்கும் நல்லது. அப்படியே அவள நல்ல பொண்ணா மாத்திரு இல்லன்னா கட்றவனுக்கு தான் கஷ்டம்”, சரண்.
“டேய் அவளுக்கு இப்ப தான் ஒன்பது வயசு. குழந்தை டா. வளர வளர சுபாவம் மாறிடும். அப்ப பாக்கறப்ப நீயே ஆச்சரியம் படுவ நம்ம நதியாள் ஆ இதுன்னு. இப்ப பேசறமாதிரி அப்ப இவ பேசுவாளான்னு கூட தெரியாது”, அகரன் உண்மையை உணர்ந்து கூறினான்.
“அதுவும் உண்மை தான். வயசுக்கு வந்துட்டா ஆயிரம் தடை போடறாங்க. பாவம் நிறைய பொண்ணுங்களுக்கு படிப்ப முடிக்கறதுக்குள்ள கல்யாணம் செஞ்சிடறாங்க. நம்ம தலைமுறைல மாற்றம் வரணும் டா”, சரண்.
“ம்ம்… சரி அப்பறம் பாக்கலாம்”, அகரன் கூறி விடைபெற்றான்.
அகரனின் இல்லம் அந்த கால பண்ணைவீடு. மூன்று கட்டுகள் கொண்ட பெரிய மச்சு வீடு. முதல் கட்டில் விருந்தினர் ஊர் பெரியவர்கள் வரை வந்து அமரும் இடம். இரண்டாம் கட்டு சொந்தங்கள் வந்தால் அங்கு தங்கவைக்கப்பட்டு உபசரிக்கப்படுவர். மூன்றாம் கட்டு வீட்டினர் புலங்கும் இடம் சமையலறை மற்றும் மச்சு கொண்டது. அதில் அகரனின் தாத்தா பாட்டியின் அறை ,அம்மா அப்பாவின் அறை மற்றும் அகரனின் அறை மாடியில் என வசித்து வருகின்றனர்.
அகரனின் அறையில் இருந்து கீழே இறங்க இரண்டு வழிகளும் இருந்தன. ஒன்று வீட்டிற்குள் இருந்து மாடியேறும் வழி மற்றொன்று வீட்டின் பக்கவாட்டில் வெளியே இருந்து ஏறும் வழி.
அகரன் ஒரே வாரிசு. பலநாள் தவத்தின் பயனாய் பிறந்தவன். நல்ல நிறம் கொஞ்சம் கன்னத்தை அழுத்தி கிள்ளினால் இரத்தம் வந்துவிடுமோ என்று நினைக்கும் அளவிற்கு , இப்பொழுதே ஐந்தரை அடிக்கு மேல் உயரம் இருக்கிறான் இன்னும் வளர்வான். கூர்மையான கண்கள், எடுப்பான நாசி, வளர்ந்த ஒன்றிரண்டு மீசை முடி என ஆண்மையின் ஆரம்பத்தில் இருக்கிறான்.
அமைதியான குணம் ஆனால் எடுக்கும் முடிவுகளில் உறுதியும் நியாயமும் இருக்கும். சுயகட்டுப்பாடு சுயமரியாதை என அனைத்தும் தன்னில் வளர்த்து வருபவன். ஊரார் மெச்சும் பிள்ளை.
அந்த ஊரில் மதிப்புமிக்க குடும்பம். அவர்களின் பேச்சிற்கு தனி மரியாதையும் உண்டு.
“வா ராசா…. அம்மாடி திலகா பிள்ளை வந்துட்டான் சாப்பிட ஏதாவது குடும்மா”, அகரனின் அப்பத்தா மீனாட்சி உள்ளே சத்தம் கொடுத்தார்.
“சரிங்கத்தை . வா கரன் கை கால் அலம்பிட்டு வா சாப்பிடுவியாம்”, அம்மா திலகாவதி.
“சரிம்மா “, என கூறி தன்னறைக்கு சென்று உடை மாற்றி முகம் கழுவி புத்துணர்ச்சி பெற்று வந்தான் அகரன்.
“வாடா அகரா… பரிட்சை முடிஞ்சதா? எத்தனை நாள் லீவ்?”, அப்பா சிதம்பரம்.
“ஒரு வாரம் லீவ் அப்பா. ஆனா ரெக்கார்ட் வர்க் குடுத்து இருக்காங்க”, அகரன் பதிலுரைத்தான்.
“சரி இரண்டு நாள் உன் அம்மாச்சி வீட்டுக்கும் அத்தை வீட்டுக்கும் போயிட்டு வா”, சிதம்பரம்.
“ஏய்யா… அதான் பிள்ளை படிக்கற வேலை இருக்குன்னு சொல்றான்ல அடுத்த லீவுல போயிகட்டும்”, மீனாட்சி.
“இல்லம்மா போயிட்டு வரட்டும். பெரிய லீவ்லயும் இவன் அங்க போய் இரண்டு நாள் தான் இருந்தான் இப்பயும் அது மாதிரி போயிட்டு வரட்டும்”, சிதம்பரம்.
“அப்பதான் டவுனுக்கு ஏதோ படிக்கணும்னு போய் சேந்துட்டான்.அங்கயே நீயும் தங்க வச்சிட்ட. இப்ப தான் வீட்ல இருக்கான். அதுவும் ஒரு வாரம் தான். இங்கயே இருக்கட்டும் விடுய்யா”, மீனாட்சி.
“ஹே மீனு… நான் போயிட்டு ரெண்டு நாள்ள வந்துடறேன். அங்க காமுவும் , சீதாவும் எனக்காக காத்துட்டு இருப்பாங்கள்ள”, அகரன் தன் பாட்டியை சமாதானம் செய்தான்.
“சரி.. போயிட்டு வா . இரண்டு நாள் தான். வந்துடணும் சரியா?”, மீனாட்சி.
“சரி”
“அப்பத்தாவும் பேரனும் என்ன பேசிட்டு இருக்கீங்க?”,என்றபடி வந்து அமர்ந்தார் சுந்தரம்.
“அகரன் ஊருக்கு போயிட்டு வர பர்மிஷன் கேட்டுட்டு இருக்கான் . பாட்டியும் பேரனும் ரகசியமா ஏதோ பேசிட்டு இருக்காங்க”, என கூறினார் சிதம்பரம்.
“என்னடா பேராண்டி என் பொண்டாட்டி கிட்ட ரகசியம் பேசிட்டு இருக்கற? என்கிட்ட சொல்லு நான் சொல்லிக்கறேன்”, சுந்தரம் வம்பிலுத்தார்.
“நான் என் மீனு குட்டி கிட்ட பேசுவேன் உங்களுக்கு என்ன? எங்களுக்கு நடுவிலே நீங்க வராதீங்க”, அகரனும் வம்பிலுத்தான்.
“என் பொண்டாட்டி டா அவ. நீ உன் பொண்டாட்டி கிட்ட வேணா இரகசியம் பேசிக்க யார் வேணாம்ன்னு சொன்னா?”, சுந்தரம்.
“யார் தாத்தா அகன் பொண்டாட்டி?”, என கேட்டபடி உள்ளே வந்தாள் நதியாள்.
“அடடே வாங்க வாங்க மகாராணி. என்ன இந்த பக்கம்? “, சுந்தரம் நதியாளை தன் மடியில் அமர்த்தி கொண்டார்.
“நான் அகன் கூட விளையாட வந்தேன் சுந்தா”,நதியாள்.
“ஹேய் வாயாடி. பெரியவங்கள அப்படி பேர் சொல்லி கூப்பிடாதன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்”, என மகளை கண்டித்தபடி உள்ளே வந்தார் ராதா கூடவே கண்ணனும்.
“வாம்மா ராதா. வா கண்ணா” என அனைவரும் வரவேற்றனர்.
அகரனும் எழுந்து நின்று வரவேற்றான்.
“சுந்தா என் பிரண்ட் நான் பேர் சொல்லி கூப்பிடலாம்”, பதில் கொடுத்தாள் நதியாள்.
“சொன்னா கேக்கணும் யாள்”, ராதா.
“விடும்மா. நம்ம குழந்தை தானு. இப்படி என்னை உரிமையா பேர் சொல்லி கூப்பிட என் பேத்திய தவிர யார் இருக்கா சொல்லு?”, சுந்தரம் மகிழ்வுடன் வினவினார்.
“ஏன் நான் இல்லையா மிஸ்டர் சுந்தரம்”, என அகரன் அவன் பங்கிற்கு வந்தான்.
“நீ மிஸ்டர் சொல்ற. என் பேத்தி எவ்வளவு அழகா சுந்தா ன்னு செல்லமா கூப்பிட்றா”, சுந்தரம் விடாது பதில் கொடுத்தார்.
“கொஞ்சம் நிறுத்துங்க சின்ன புள்ளைங்களுக்கு சரிசமமா பேசிகிட்டு. நீ சொல்லு கண்ணா என்ன விசேசம் குடும்பத்தோட வந்து இருக்க”, மீனாட்சி.
“ஒன்னும் விசேசம் இல்லைங்கத்தை. நதியாள் அகரன பாக்கணும்னு சொன்னா அதான் ராதாவும் பாத்து ரொம்ப நாள் ஆச்சின்னு கூட்டிட்டு வந்தேன்”, கண்ணன்.
“சரி சரி. அடியே யாள் நீ எதுக்குடி என் பேரன பாக்கணும்?”, மீனாட்சி அவளிடம் வம்பிலுத்தார்.
“என் அகன் நான் பாக்க வருவேன். நீ ஏன் கேக்கற மீனா?”, நதியாள்.
“ஒழுங்கா பாட்டி இல்லன்னா அம்மாச்சி ன்னு கூப்பிடு பேர் சொல்லி கூப்பிட்டா அடி வெலுத்துருவேன்”, மீனாட்சி.
“யாள் பெரியவங்கள மரியாதையா கூப்பிடணும்”, ராதா.
“விடும்மா நான் தான் அவகிட்ட வம்பிலுத்தேன். எங்க கிட்ட இப்படி பேசர ஒரே புள்ள இவ தானே. இப்படி இருந்தா தான் வீடும் கலகலன்னு இருக்கும்”, மீனாட்சி.
“அதில்ல பெரியம்மா கொட்டம் அதிகம் பண்றா. சொல் பேச்சு கேக்கறதே இல்லை. செய்யறதெல்லாம் செஞ்சிட்டு அவங்க அப்பா பின்னாடி ஒளிஞ்சிட்டு தப்பிச்சி ஓட்றா”, ராதா.
“விடுங்க அண்ணி. சின்ன குழந்தை தானே. போக போக சரியாகிரும். இந்தாங்க காப்பி. நீங்களும் எடுத்துக்கோங்க அண்ணே”, திலகாவதி.
சிதம்பரமும் கண்ணனும் ஒரு பக்கம் பேச, ராதாவும் திலகவதியும் சமையல்கட்டிற்குள் நுழைந்து கொள்ள மற்ற நால்வரும் அங்கேயே அமர்ந்து இருந்தனர்.
நதியாளுக்கு கொடுத்த பாலை அகரன் ஆற்றி சுடு போதுமா என கேட்டு அவளிற்கு கொடுத்தான். பிஸ்கட் சாக்லேட் என தன்னிடம் இருந்ததை பகிர்ந்து கொண்டான். நதியும் அவனுக்கு சாப்பிட எடுத்து கொடுத்தாள். இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு முடித்தனர்.
இதை கண்ட பெரியவர்கள் இருவரும் ,” இதுக ரெண்டும் ஜோடி சேர்ந்தா நல்லா தான் இருக்கும்ல”, மீனாட்சி.
“அது நம்ம கைல இல்ல மீனாட்சி. கடவுள் சித்தம் எப்படின்னு பாப்போம். ஆனா ரெண்டும் ஜாடிக்கு ஏத்த மூடி தான்”, என சிரித்து கொண்டே கூறினார் சுந்தரம்.
“என்ன தாத்தா சொன்னீங்க?”, அகரன்.
“ஒன்னும் இல்ல நீ இன்னும் சாப்பிடல? “, சுந்தரம்.
“நானும் பாலும் பிஸ்கட் சாப்பிட்டேன் தாத்தா. நதிய என் ரூம் கூட்டிட்டு போய் காட்றேன் “, அகரன் நதியை கை பிடித்து அழைத்து சென்றான்.
“சரி பாத்து போங்க”, மீனாட்சி.
“நாளைக்கு நீ விளையாட வரியா அகன்?”, நதியாள்.
“இல்ல நதிமா. நான் அம்மாச்சி பாக்க ஊருக்கு போறேன். இரண்டு நாள்ள வந்திடுவேன் அப்பறம் விளையாடலாம்”,அகரன்.
“2 டேஸ் நீ என்கூட விளையாட வரமாட்டியா?”, முகத்தை சோகமாக வைத்து கொண்டு கேட்டாள் நதியாள்.
“இங்க பாரு நதிமா. நீ மீரா கூட விளையாடிட்டு இரு. சீக்கிரமே இரண்டு நாள் போயிடும். நானும் வந்துடுவேன். இப்ப சிரிங்க”, அகரன் அவளை சமாதானம் செய்தான்.
“சரி. சீக்கிரமே வந்துடனும். இது என்ன? அது ஏன் அப்படி இருக்கு? இது ஏன் இங்க இருக்கு?”, என அவனறையில் இருந்த அனைத்திலும் ஒரு கேள்வியை முன்வைத்தாள் அவள். அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையுடன் அவளுக்கு புரியும் விதத்தில் பதிலளித்தான் அகரன்.
“தூக்கம் வருது அகன் “, என கூறி அவனறையில் தூங்கிவிட்டாள்.
வீட்டிற்கு செல்ல அவளை அழைத்த சத்தம் கேட்டு அவள் தூக்கம் கலையாமல் தன் கைகளில் ஏந்தி கொண்டு கீழே வந்தான் அகரன்.
“என்னாச்சி அகரா?”, திலகவதி.
“தூங்கிட்டா மா. அதான் தூக்கிட்டு வந்தேன். ஸ்கூல்ல ஒரு இடத்துல நிக்காம ஓடிட்டே இருப்பா. காலே வலிக்காது போல இவளுக்குன்னு நினைப்பேன். அந்த டயர்ட்ல இப்பவே தூங்கிட்டா”, அகரன் நதியை கண்ணன் கைகளில் கொடுத்து கொண்டே பேசினான்.
“ஆமா தம்பி. நைட் கால் வலிக்கு தூக்கத்துல பெனாத்துவா. பாவமா இருக்கும் ஆனா விடிஞ்சி விடியறதுக்குள்ள ஓட ஆரம்பிச்சிருவா”, ராதா.
“தவமிருந்து பெத்த புள்ள அப்படித்தான் இருக்கும் ராதா. ஒரே பொண்ணு சந்தோசமா வளரட்டும் விடு “, சுந்தரம்.
“சரிங்க பெரியப்பா. பெரியம்மா அண்ணா அண்ணி நாங்க கிளம்பறோம்”, ராதா.
“அகரா வரோம் நாங்க”, கண்ணன்.
“சரிங்க மாமா அத்தை”, அகரன்.
“ஏன்மா இத்தனை வருஷமா இந்த பாப்பாவ நான் பாக்கவே இல்லயே. இப்ப தான் பாக்கறேன்”, அகரன்.
“நீ ஹாஸ்டல்ல படிச்சிட்டு இருந்த கரன் அதான் பாத்து இருக்க மாட்ட. இப்பதான் உனக்கும் இவங்க யாருன்னு வெவரம் தெரியுது”, திலகவதி.
“ஆமாம்மா. நல்ல சுட்டி அந்த பாப்பா. என்கூடவே தான் இருக்கும் ஸ்கூல்ல”, அகரன்.
“அவளுக்கு கிளாஸ் இருக்காதா?”, மீனாட்சி.
“இருக்கும் ஆனா இவ என் கிளாஸ்ல தான் இருப்பா முக்கால்வாசி நேரமும். என்கூடவே படிக்கறது சாப்பிடறதுன்னு”, அகரன்.
“வாத்தியாருங்க திட்டமாட்டாங்களா?”, மீனாட்சி.
“எல்லாம் செஞ்சி பாத்துட்டாங்க இவ கால் ஒரு இடத்துல நிக்கமாட்டேங்குதுன்னு பிரின்ஸியே அவள கண்டுக்காம விடுங்க ன்னு சொல்லிட்டாங்க. இப்ப நான் அங்க சேந்ததுல இருந்து ஒரே இடத்துல நிக்கறா ன்னு என்கூடவே இருக்கட்டும்னு விட்டுட்டாங்க”, அகரன்.
“நீ படிக்கறத தொந்தரவு பண்ண போறா பாத்து”, மீனாட்சி.
“அதுல்லாம் பண்றது இல்ல மீனு. சொன்னா கேட்டுக்கறா. பல நேரத்துல நான் தூங்கினாலும் எழுப்பி படிக்க சொல்றா”, அகரன்.
“ஹாஹா… நல்ல புள்ளைங்க. நல்லா பாத்துக்க ராசா. ஒத்த பொண்ணு தவமா இருந்து பெத்தாங்க”, மீனாட்சி.
“சரி மீனு. நான் இப்பவே ஊருக்கு கிளம்பறேன் இரண்டு நாள்ல வந்துடறேன்னு நதிக்கும் பிராமிஸ் பண்ணி இருக்கேன்”, அகரன் கூறிக்கொண்டு தன்னறைக்கு சென்று தன் பையை எடுத்து வந்தான்.
இரண்டு நாள் கழித்து ஊருக்கு வந்த அகரன் நதியாளை தேடி புறப்பட்டான். அவள் தன் நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்தாள் பள்ளி மைதானத்தில். சற்று நேரத்தில் அமைதியாக இருந்த இடம் சண்டைக்களமாக மாறியது.