22 – மீள்நுழை நெஞ்சே
மாலை வரை நடந்தபடியே ஊர் சுற்றிய வில்சனும் துவாரகாவும், மெட்ரோ நிலையத்திற்குச் சென்றனர்.
“என்ன சொல்லு வில்ஸ்… உங்க ஊரு கழுவி வச்ச மாதிரி நல்லா சுத்தமா தான் இருக்கு… இந்த மெட்ரோ ஸ்டேஷன் பாக்கவே சூப்பரா இருக்கு…”, என ஸ்டேஷனை சுற்றிலும் கண்களை ஓட்டியபடிக் கூறினாள்.
வில்சன் இருவருக்கும் டிக்கெட் எடுப்பதை அவளும் அறிந்துக் கொள்ளக் கூறி அருகில் நிற்கவைத்து விவரம் கூறினான்.
“உங்க ஊர்ல மெட்ரோ இல்லையா?”, வில்சன் ப்ளாட்பார்ம் நோக்கி நடந்தபடிக் கேட்டான்.
“இருக்கு… இப்பதான் சிட்டீஸ்ல விட ஆரம்பிச்சி இருக்காங்க…. இங்க இருக்க அளவுக்கு வர இன்னும் கொஞ்ச வருஷம் ஆகலாம்…”, எனக் கூறியபடி ஆங்காங்கே இருந்த இயந்திரங்கள் பற்றிக் கேட்டபடியே நடந்தாள்.
“என் ரூம்ல டின்னர் ரெடி பண்ணவா?”, வில்சன் அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டான்.
“நல்லா நடந்திருக்கேன். ப்ரெட் எல்லாம் எனக்கு கட்டுப்படி ஆகாது வில்ஸ்… நல்லா சாப்டணும். மதியம் போன ரெஸ்டாரெண்ட் போலாமா?”, சிறிதாகத் தலைசாய்த்துக் கேட்டாள்.
“அவ்வளவு காரம் என்னால முடியாது ராக்ஸ்”
“இப்ப டிபன் ஐட்டம் சாப்டுக்கலாம்… நான் உனக்கு எங்க ஊர் சாப்பாட்ட சாப்பிட கத்து தர்றேன்… வா”, என அவனைப் பேசியே சம்மதிக்க வைத்து மெட்ரோவில் ஏறினர்.
“நீ பேசி பேசியே ஆள கொல்ற ராக்ஸ்…. என் காதே போச்சி இன்னிக்கு….”, எனக் கூறியபடிக் காதைத் துடைத்தான்.
“ரொம்ப பண்ற வில்ஸ்… அப்பறம் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் பாத்துக்க…. கம்பு சுத்த சொல்லி தரவா வேணாமா?”, எனக் கேட்டு மிரட்டினாள்.
“ஓ மேன்… அது மறந்துட்டேன்.. சாரி…. இனிமே கிண்டல் பண்ணல”, எனக் காதைப் பிடித்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டான்.
“பொழச்சி போ…. கம்பு சுத்தறப்ப உன்ன கவனிச்சிக்கறேன்”, எனச் சிரித்தபடிக் கூறினாள்.
“அடுத்த ஸ்டேஷன்ல இறங்கிக்கலாம்”, என வில்சன் கடந்து வந்த இடங்களைப் பற்றி பேசியபடி மெட்ரோ நின்றதும் இறங்கினான்.
“இங்கிருந்து நம்ம வீடு பக்கமா?”
“இல்ல… உன் ரூம் பக்கம்… நீ சாப்டு ரூம் போய் நல்லா ரெஸ்ட் எடு… நான் அப்பறமா வீட்டுக்கு போயிக்கறேன்…”, எனப் போனைப் பார்த்தபடி பதில் கூறினான்.
“என்ன டா உனக்கும் லவ்வர் இருக்கா?”
“வாட்?”, அதிர்ந்துக் கேட்டான்.
“இல்ல போன் பாத்துட்டே பேசறியே அதான் கேட்டேன்…. நீ இன்னொரு ஸ்வீட்டியோ-ன்னு”, எனக் கண்ணடித்துச் சிரித்தபடிக் கூறினாள்.
“ஹாஹா… நோ நோ…. ஃப்ரெண்ட்ஸ் பார் (Bar) வரச்சொல்லி மெஸெஜ் பண்ணி இருக்காங்க… எனக்கு லவ்வர் இருந்தா நான் ஏன் உன்கூட சுத்தறேன் ராக்ஸ்… ஐ வில் லிவ் இன் ஹெவன் யூ நோ ( I will live in heaven you know)”, என அவன் இப்போது கண்ணடித்துப் பதிலளித்தான்.
“கேடி தான்டா நீங்க எல்லாம்…..”, என அவன் முதுகில் அடித்தபடி ரெஸ்டாரன்ட் உள்ளே சென்றாள்.
“நீ எவ்வளவு பெரிய கேடின்னு கொஞ்ச நாள்ல நானும் தெரிஞ்சிக்குவேன் ராக்ஸ்”, என இருவரும் மாறி மாறித் தங்களைக் கிண்டல் செய்தபடி ஒரு டேபிளில் அமர்ந்தனர்.
“நாண் சொல்லவா? வித் உனக்கு பட்டர் சிக்கன் க்ரேவி… எனக்கு ஸ்பைஸி செட்டிநாட் சிக்கன் க்ரேவி… அப்பறம்… பிஷ் ஃப்ரை… இந்த ஸ்டார்டர்… க்ராப் ரோஸ்ட்… ஓக்கே தான?”, என அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“உனக்கு நான்வெஜ் ரொம்ப பிடிக்குமா ராக்ஸ்….”
“ம்ம்…. ஆனா பீஃப், போர்க் சாஃப்ட் மாட்டேன்…..”
“அது செம்ம டேஸ்டா இருக்கும். நான் உனக்கு போர்க் ஃப்ரை செஞ்சி தரேன்… சாப்டு பாரு….”
“எங்கம்மா என்னை வீட்டுக்குள்ள சேத்திகலன்னா நான் நடுரோட்ல தான் நிக்கணும் வில்ஸ்”
“ஏன் வீட்டுக்குள்ள சேத்திக்க மாட்டாங்க?”, அவன் புரியாமல் கேட்டான்.
“எங்கூர்ல மாடு எருமை பன்றி எல்லாம் சாப்ட கூடாதுன்னு சொல்வாங்க……………”, என ஆரம்பித்து அவளுக்கு தெரிந்தக் காரணத்தைக் கதையாகக் கூறி, மேலும் வில்சன் காதில் இருந்து இரத்தம் வலிய வைத்தாள்.
“போதும்… இதுக்கு மேல நான் உன்கிட்ட ரீசன் கேக்கல ராக்ஸ்…. இன்னிக்கு இது போதும்….ஓ கேர்ள்… யூ ஆர் சச் எ சேட்டர் பாக்ஸ் ( you are such a chatterbox) “, எனக் கூறிவிட்டு காரம் கம்மியாக அவனுக்கு கூறிய உணவை சாப்பிட ஆரம்பித்தான்.
வயிறார உண்டு விட்டு இருவரும் பணத்தைக் கட்டிவிட்டு வெளியே வந்தனர்.
“இன்னும் ரெண்டு நாள் நான் இப்டி வெளிய சாப்டேன் எங்கப்பா தான் எனக்கு சாப்பாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டியதா இருக்கும்…. எவ்வளவு செலவு…. அப்பப்பப்பா….. நமக்கு சம்பளத்த ஏத்த சொல்லணும் வில்ஸ்…. இது கட்டுப்படி ஆகாது”, எனப் புலம்பியபடி நடந்தாள்.
“மொத நீ ஆபீஸ்ல ஜாயின் பண்ணு ராக்ஸ்… அப்பறம் சம்பளத்த ஏத்தறத பத்தி பேசு…”, வில்சன் சிரித்தபடிக் கூறி அவள் தங்கியிருக்கும் ஹோட்டல் வாசலில் நின்றான்.
“நான் இப்டியே கிளம்பறேன்… டோர் நல்லா லாக் பண்ணிக்கோ… நாளைக்கு மதியம் வரேன்… உன் திங்க்ஸ் கொஞ்சம் எடுத்துட்டு போய் என் வீட்ல வச்சிடலாம். ஓக்கே?”
“டபுள் ஓக்கே வில்ஸ்… தேங்க்ஸ் பார் த டே… (Thanks for the day) “
“உன் கூட இன்னிக்கு டைம் ஸ்பெண்ட் பண்ணதுல எனக்கு தான் ரொம்ப சந்தோஷம். எப்பவும் தனியா போற வீக் எண்ட் இன்னிக்கு நான் கொஞ்சம் கூட தனிமைய நினைக்காம போச்சி… தேங்க் யூ… பாய்… டேக் கேர்”, என அவளை இதமாக அணைத்து விடுவித்து நடக்க ஆரம்பித்தான்.
அவன் அந்த வார்த்தைகளைக் கூறும் போது அவன் கண்களில் இருந்த உணர்வுகளைத் துவாரகா நன்றாக உணர்ந்துக் கொண்டாள்.
அவனைப் பற்றி நினைத்தபடி தனது அறைக்கு வந்தவளுக்கு கைப்பேசியின் சத்தத்தில் நினைவு வந்துக் கதவை நன்றாக பூட்டிவிட்டு வந்து அழைப்பை ஏற்றாள்.
“ஃபோன் எடுக்க இவ்ளோ நேரமா? எங்க டி போன?”, எனக் கனிமொழிக் கேட்டாள்.
“காலைல இருந்து ஊர் சுத்திட்டு இப்ப தான் சாப்டு ரூமுக்கு வரேன் கனி….. ஒரு நிமிஷம் லைன்ல இரு… நான் கொஞ்சம் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்….”
“நீ போனா மணிநேரம் ஆகுமே… நீயே ரெப்ரெஸ் ஆகிட்டு கால் பண்ணு… நான் வைக்கறேன்…”, எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
“மேடம் ஒரு அஞ்சு நிமிஷம் காத்திருக்க மாட்டாங்க… அவ்ளோ பிஸி பசங்கள பாஸ் பண்ண விடாமா பண்றதுக்கு…. வாத்தியாரம்மாவுக்கு ரவுஸு அதிகமா தான் இருக்கு “, என வாய்விட்டுப் புலம்பியபடி உடைமாற்றி முகம் கைகால் கழுவிக்கொண்டு வந்து கனிமொழிக்கு அழைத்தாள்.
“என்ன அதிசயம் அரைமணிநேரத்துல வந்துட்ட… “, கனி தாயின் மடியில் படுத்தபடிப் பேச ஆரம்பித்தாள்.
“கொழுப்பு தான் டி உனக்கு…. எங்கத்த மடிமேல படுத்து அட்டனக்கால் போட்டு ஆட்டிகிட்டு பேசற நீ”
“நான் எங்கம்மா மடில படுத்திருக்கறது உனக்கு எப்புடி தெரியும்? எனக்கு தெரியாம என் வீட்ல கேமிரா வச்சிட்டியா டி?”, எனக் கனி சுற்றிலும் பார்த்தபடிக் கேட்டாள்.
“உன்ன தெரியாதா எனக்கு? எந்த நேரத்துல எந்த மரத்துல தொங்குவன்னு? எங்கத்த கிட்ட போன் குடு”, என அதட்டினாள்.
“எல்லாம் நேரம் டி…. இந்தாம்மா….”, எனக் கனிமொழி தன் தாயிடன் போனைக் கொடுத்துவிட்டு, அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு இருந்தாள்.
ஊர் அரட்டையில் ஒரு மணிநேரம் போன பிறகு, “எப்ப வேலைல சேரணும்?”, எனக் கேட்டார் மரகதம்.
“வந்ததும் ஆபீஸ் போய் ஜாயின் பண்ணிட்டேன் அத்த… திங்கக்கிழமைல இருந்து ஆபீஸ் போகணும்….”
“சரி… பாத்து சூதானமா இரு…. யாரையும் டக்குன்னு நம்பாத…. தனியா வேற இருக்கங்கற… தெரியாத ஊரு … எவ்ளோ ஜாக்கிரதை இருக்கணுமோ அப்படி இருந்துக்க…. இரு கனி கிட்ட தரேன்”, எனப் போனை மகளிடம் கொடுத்துவிட்டு எழுந்து உள்ளே சென்றார்.
கனி பேசியபடியே தனது அறைக்கு வந்து அமர்ந்துப் பேச்சைத் தொடர்ந்தாள்.
“அந்த பய வில்சன் பரவால்லயா? எதுவும் விவகாரமான ஆள் இல்லையே…?”
“அதுலாம் இல்ல… நல்லா தான் பழகறான்… வெளிப்படையா பேசறதால பிரச்சன இல்ல… சரி நான் தூங்கறேன்… வீடு எல்லாம் ஷிப்ட் பண்ணிட்டு வீடியோ கால் போடறேன்… நாளைக்கு கொஞ்சம் லக்கேஜ் எல்லாம் அங்க கொண்டு போய் வைக்கணும்…. சாவி எப்ப தருவாங்கன்னு நாளைக்கு தான் தெரியும்… நாளைக்கு பேசறேன்”
“சரி… வீட்டுக்கு பேசிட்டு தூங்கு…”, என கனியும் அழைப்பை வைத்தாள்.
தனது தந்தைக்கு அழைத்து அறைக்கு வந்துவிட்ட விவரத்தைக் கூறிவிட்டு தாய், சித்தி, சித்தப்பா, தம்பி, தங்கைகள் என அனைவரிடமும் பேசிவிட்டு மணி பார்க்க மூன்று மணிநேரம் ஓடியிருந்தது.
“வாட்ஸ்அப் கண்டுபிடிச்ச புண்ணியவானால மணிகணக்கா பேசியாச்சி.. இல்லைன்னா ரிங் விட்டாலே பத்து ரூபா போகும். நாம் பேசறதுக்கு சொத்த தான் விக்கணும்…”, எனத் தனக்குத் தானே பேசியபடிப் பாடல்களை ஓடவிட்டு தூங்க ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் மதியம் போல வில்சன் வந்து அவளின் பொருட்களைப் பாதிக்கு மேல் எடுத்துக்கொண்டுச் சென்று, தனது வீட்டில் வைத்துக் கொண்டு அவள் சமைத்துச் சாப்பிட தேவையானப் பொருட்களை வாங்க கடைக்கு அழைத்துச் சென்றான்.
அன்றைய பொழுது இந்த வேலைகளில் கழிய, திங்கட்கிழமை காலையில் வேலைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு டாக்ஸி பிடித்துச் சென்றாள்.
அன்று முதல் அந்த அலுவலகத்தில் துவாரகாவின் குரலும், உடன் பல சிரிப்பு சத்தங்களும் அவ்வப்பொழுது எழுந்துக்கொண்டே இருந்தது.
அடுத்த வாரத்தில் வீடு தயாராகிவிட வில்சன் மற்றும் இனியாவின் உதவியுடன் தனது வீட்டை ஒழுங்குப்படுத்திக்கொண்டாள்.
தாய் தந்தை கூறிய நல்ல நாளில், சொன்ன நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி, பால் காய்ச்சினாள்.
“உங்க கல்ச்சர் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு ராக்ஸ்”, என அவள் கொடுத்த பால் டம்ளரை எடுத்தபடிக் கூறினான்.
“தேங்க் யு வில்ஸ்”
“வீடு சிம்பிள் அண்ட் நீட் லுக்ல சூப்பரா இருக்கு ராக்ஸ் “, என இனியா கூறியபடிச் சுற்றி வந்து போட்டோ எடுத்தாள்.
அன்று துவா வீட்டிற்கு வீடியோ கால் போட்டு பேசி இருவரையும் தன் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
“வீட்ட சுத்தமா வச்சிக்க டி.. தெனம் காலை மாலை வெளக்கு ஏத்தி வை.. “, என அவளின் தாய் மீண்டும் கூறிவிட்டு வைத்தார்.
மெல்ல மெல்ல அமெரிக்க வாழ்க்கை முறையுடன் தனது வாழ்க்கை முறையையும் இணைத்து, அவளுக்கு சவுகரியமாக பல விஷயங்களை மாற்றிக் கொண்டு அங்கே வாழ ஆரம்பித்தாள். வீட்டிலே முடிந்தவரை சமைத்து கொள்வதால் உணவு பிரச்சனை இன்றி அவளின் நாட்கள் நகர்ந்தது.
தினம் தினம் ஒரு புதிய விஷயம் கற்றுக்கொண்டாள், உடன் இதுவரை அறிந்திடாத பிரச்சனைகளையும் தெரிந்துக் கொண்டாள். தனது சுய கட்டுபாட்டின் அளவை அவளே அங்கிருந்த நாட்களில் நன்றாகத் தெரிந்துக் கொண்டாள் என்று தான் கூறவேண்டும்.
அனைத்து இடங்களுக்கும் சென்றாலும் தனது வரையறையைத் தெளிவாக உணர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.
வில்சனுக்கு வார இறுதி நாட்களில் கம்பு சுற்றவும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருந்தாள்.
“வாவ்…. ராக்ஸ்… யூ ஆர் ராக்கிங்…. எவ்ளோ வேகமா சுத்தற… கை எவ்ளோ வலைஞ்சு குடுக்குது…. “, என அவள் கம்புச் சுற்றுவதைக் கண்டு வாய்பிளந்துக் கூறினான்.
“சின்ன வயசுல இருந்து நான் பண்றதால ப்ளக்ஸிபிலிட்டி இருக்கு… உனக்கு இப்ப கொஞ்சம் கஷ்டமா இருக்கும்… பழக பழக வந்துடும்… வா அடிப்படை சொல்லித் தரேன்… குரு வணக்கம் இப்படி தான் போடணும்”, எனக் கற்றுக்கொடுத்தாள்.
இப்படியாக ஆரம்பித்து இருவரும் நல்ல நண்பர்களாக மாறி இருந்தனர். மாதங்கள் பறக்க கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு அனைவரும் தங்களின் குடும்பத்தைச் சந்திக்க உலகத்தின் பல திக்குகளுக்கும் விடுமுறை எடுத்துக் கொண்டுப் பறக்கச் சித்தமாயினர்.
துவாரகாவிற்கு அவர்களின் வாழ்க்கை முறை பிரம்மிப்புடன் கலந்த வருத்தத்தைக் கொடுத்தது. ஒரு வயது வந்ததும் சொந்த காலில் நிற்க பிள்ளைகள் தனியாக இருந்தாலும், தாய் தந்தையைப் பார்க்க நாள் மற்றும் நேரம் கேட்டுக் காத்திருந்து பார்ப்பது மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது. தனது நாட்டில் பிள்ளைகள் தான் எல்லாம் என்று அவர்களைச் சுற்றியே வாழும் பெற்றவர்களுக்கும், இங்கும் பெரும் வித்தியாசம் மற்றும் இரண்டிற்கும் நடுவே இருக்கும் சமுதாய மாற்றங்களை உணர்ந்தாள்.
வில்சனின் அண்ணனும், தங்கையும் அவனைக் காண அன்று வருகிறார்கள் என்று அவனும் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்துவிட்டான். இன்று தனியாகத் தான் செல்லவேண்டும் என்று நினைத்தபடி தனது வேலையைப் பார்த்தாள்.
அன்றிரவு பேருந்தில் செல்லும் வழியெல்லாம் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் கண்டுக் களித்தபடி வீடு வந்து சேர்ந்தாள்.