5 – வலுசாறு இடையினில்
நங்கையிடம் சவால் விட்டுவிட்டு தோப்பிற்குச் சென்றவன், கண்ணில் பட்டத்தை எல்லாம் எடுத்து வீசினான். வேக வேகமாக கோடாலி எடுத்து மரத்தை வெட்டத் தொடங்கினான் .
‘பொட்ட கழுதை என்ன பேச்சு பேசிறா, ஏதோ பாக்க சுமாரா இருக்கா, கட்டினா நமக்கு தோதா இருக்கும்ன்னு நினைச்சி பேசினா என்னை ஆம்பள இல்லைன்னு சொல்றா .. அவள சும்மா விட கூடாது ..’ இப்படியாக தனக்கு தானே பேசிக்கொண்டு அரை மணி நேரத்தில் அங்கிருந்த பெரிய மரக்கட்டைகளைப் பொடிப்பொடியாக வெட்டி வீசி இருந்தான்.
அப்போது அங்கே வந்த வட்டி, “ அய்யோ மச்சான் .. என்ன பண்ணிட்டு இருக்க நீ ? போச்சி என்னை கெழவி உசுரோட பொதைக்க போகுது “, என புலம்பியபடி, தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.
“என்னடா ?”, கொஞ்சம் கோபம் மட்டுபட்டு பொறுமையாகக் கேட்டான்.
“உன் அப்பத்தா வாங்கி போட்ட மரத்த ஏன் இப்படி சக்கையாட்டம் ஒடச்சி போட்டு இருக்க ?”
“அந்த கெழவி எதுக்கு வாங்கி வச்சி இருக்கு ?”
“போய் அத தான் கேக்கணும் .. போச்சி என்னை தோல் உறிக்காமயே உப்பு கண்டம் போட போகுது.. நான் வேற மரலோடு வந்துரிச்சின்னு இப்பதான் சொல்லிட்டு வந்தேன் .. “, எனத் தலையில் துண்டைப் போட்டு அமர்ந்தான்.
“விடு .. இன்னொரு லோடு அனுப்ப சொல்லு .. அப்பறம் அந்த ராஜன் சூப்பர்மார்க்கெட் ஆளோட எல்லா வெவரமும் நாளைக்கு எனக்கு வரணும். அந்த ஆள தொட்டா எவன் வருவான், வரமாட்டான், எங்க எல்லாம் அந்த ஆளு வம்பு வளத்து இருக்கான் எல்லாமே தெரிஞ்சிட்டுவந்து சொல்லு.. நான் பக்கத்து ஊரு பஞ்சாயத்துக்கு போறேன் .. கெழவிகிட்ட சொல்லிடு “, அங்கிருந்த குழாயில் முகம் கைக்கால் கழுவி, 5 நிமிடத்தில் தனது வாகனத்தில் கிளம்பிவிட்டான்.
அவன் செல்வதையே பார்த்தபடி நீலாயதாட்சி அங்கே வந்தார்.
“எங்க டா போறான் ?”, என வட்டியிடம் கேட்டார்.
“உன் பேரனையே கேக்க வேண்டியது தானே .. போற வரைக்கும் வேடிக்கை பாத்துட்டு, அவன் அங்க போனதும் நீ இந்த பக்கம் வர்ற“
“கொழுப்பு கூடிபோச்சி உனக்கு .. எங்கடா மரம் வந்துச்சின்னு சொன்ன .. எல்லாம் சில்லு துண்டா கடக்குது “
“உன் பேரன் கைங்கரியம் தான் .. முழுசா வந்த மரத்த பிச்சி போட்டுட்டு, மனுசன பிச்சி போட போயிட்டான் .. “, வட்டி நான்கு அடி தள்ளி நின்றுக்கூறினான்.
“நீ தானே பொனத்த அள்ளி போட போவ .. இங்க ஏன் நிக்கற ?”
“சரிதான் .. இல்ல நான் தெரியாம தான் கேக்கறேன் .. நீயும் அவனும் இப்படியே எங்க உசுர எத்தனை நாளைக்கு தான் எடுப்பீங்க ?”
“நான் செத்தாலும் வந்து உன் உசுர தான் எடுப்பேன்டா பேராண்டி.. இந்த எடத்த சுத்தம் பண்ணிட்டு, இன்னொரு லோடு நான் ஏற்கனவே சொல்லிட்டேன். அத வீட்ல எறக்க சொல்லு ..“
“ஏதே .. செத்தாலும் நிம்மதியா இருக்க விடமாட்ட.. அப்புறம் எதுக்கு இந்த லோடு பத்தி கேட்டுட்டே இருந்த நீ ?”
“எல்லாம் அப்பறம் சொல்றேன் .. இந்த மரத்த குப்பைல போடாம நம்ம கொளம் இருக்கற காட்டுல ஊணி வைக்கசொல்லு. இது பட்டு போனாலும் மொளைக்கும் .. அஞ்சு அடி தள்ளி தள்ளி நாலு துண்டா போட்டு நடுங்க ..”, எனக் கூறிவிட்டு வீடு நோக்கி நடந்தார்.
“அத்த எங்க போய் இருக்காங்க ?“, எனக் கேட்டபடி ஒருவர் திண்ணையில் நின்று இருந்தார் .
“என்னடா செங்கல்வராயா .. என்ன இந்த பக்கம் ?”, பாட்டி கேட்டபடி வந்தார்.
“ என்ன அத்த எப்படி இருக்கீங்க ? இன்னும் தெம்பு கொறையாம தான் பண்ணையம் பாக்கறீங்கா போல .. “, சற்றே பேச்சில் எள்ளல் கலந்துக்கேட்டான்.
“நல்ல வார்த்தையும், நல்ல நெனப்பும் இருக்கற எல்லாருமே தெம்பா தான் இருப்பாங்க .. உன் ஆத்தா எப்டி இருக்கா ?”, சற்றும் இலகாமல் பதில் கொடுத்தார் ஆச்சி.
“படுக்கைல தான் அத்த .. அப்பறம் நான் நம்ம ஊருக்கே திரும்ப குடிவந்துட்டேன் .. “, எரிச்சலுடன் பதில் கொடுத்தார் அந்த பெரிய மனிதர்.
“ஏன் உன் வியாபாரமெல்லாம் என்ன ஆச்சி ?”, என அவரை திண்ணையில் அமரவைத்தே பேசினார் பாட்டி.
“முன்ன போல இல்ல அத்த .. எனக்கும் வயசு ஆகுது. பொண்ணு தலைக்கு மேல நிக்கறா .. நம்ம ஊருக்கு வந்துட்டா நீங்க எல்லாம் பாத்துக்குவீங்க.. “
“ உனக்கு ஒரு பொட்ட புள்ள தானா ? “
“பையன் படிச்சிட்டு இருக்கான். பெங்களூரூல இருக்கான் . பொண்ணுக்கு படிப்பு எதுக்குன்னு பன்னெண்டாவது முடிச்சதும் இங்க வந்துட்டேன்”
“எங்க போனாலும் உங்க புத்தி மாறாதாடா ? படிக்கற புள்ளையா இப்ப பட்டிக்காட்டுக்கு இழுத்துட்டு வந்து என்ன பண்ண போற ?”, பாட்டி சற்றுக் கோபமாகவே கேட்டார்.
“நம்ம மாப்பிள்ளைக்கு கட்டி வைக்கதான் .. அவருக்கும் வயசு ஆகுதுல .. காலா காலத்துல நடக்க வேண்டியது நடக்கணும்ல அத்த .. “, செங்கவராயன் விஷயத்தைக் கூறினார்.
“அதானே பாத்தேன் ஏண்டா பெருச்சாளி அம்மணத்த கட்டிக்கிட்டு வருதுன்னு .. இங்க பாரு செங்கல்வராயா .. நான் இருக்கற வர இந்த வீட்டுக்கு எந்த கெட்டதும் நடக்க விடமாட்டேன். என் பேரனுக்கு எப்போ யார கட்டி வைக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்.. இந்த நெனைப்போட இந்த பக்கம் வராத .. “, முகத்தில் அடித்தாற்போல கூறினார் நீலாயதாட்சிபாட்டி.
“இன்னும் எத்தன நாளைக்கு அத்த இப்படி சொல்லிட்டு இருப்பீங்க ? மருமவன பத்தி நல்லா விசாரிச்சிட்டு தான் வந்தேன். எங்க மாமன உரிச்சாப்புல இருக்காறாம்ல .. இந்த தடவ என் கணக்கு தப்பாது அத்த .. அதுவரைக்கும் நீ உசுரோட இருக்கணும்ணு நான் கருப்பன் கிட்ட வேண்டிக்கறேன் “, செங்கல்வராயன் சிரித்தபடி பேசிவிட்டுச் சென்றான்.
நீலாயதாட்சி பாட்டி செல்பவனை உதட்டில் வழியும் புன்னைகையுடன், உள்ளே சென்று பூஜை அறையில் இருந்த முருகனை பார்த்தார்.
“ஒரு முறை அடி வாங்கிட்டேன் .. மறுபடியும் என்னை அடி வாங்க விடமாட்டன்னு நினைக்கறேன். இந்த வீட்டுக்கு ஏத்த பொண்ண சீக்கிரம் என் கண்ணுல காட்டு டா முருகா .. “, என மனதில் பிரார்த்தனை வைத்தார்.
அடுத்த நாள் காலை ஒருவன் வந்து ஏதோ கூறிவிட்டு போனபின், நீலாயதாட்சி பாட்டி வட்டியை அழைத்தார் .
“என்ன ஆச்சி .. எதுக்கு கூப்ட ? உன் பேரன் மாந்தோப்புக்கு வர சொன்னான். அவன் அங்க போறதுக்குள்ள நான் அங்க போகணும். சீக்கிரம் சொல்லு. வெத்தலை கொண்டு வரணுமா ?”, வழவளத்த படியே வந்தான்.
“நேத்து அவன் ஏன் மரத்த சில்லாக்குனான்னு உனக்கு தெரியும்ல .. யார் அந்த பொண்ணு ?”, நேரடியாக விஷயத்திற்கு வந்தார் பாட்டி.
‘ஆத்தி .. பேரன விட இது பயங்கரமா இருக்குதே .. ரெண்டு பேரும் ஒரே குடும்பத்துக்கு கட்டம் கட்றாங்களே .. பாவம் அந்த ஏகம்பரம் .. ‘, என மனதில் நினைத்துக்கொண்டான்.
“வாய தொறக்கறியா இல்ல உலக்கைய வச்சி இடிச்சி தொறக்கணுமா ?”, கையில் உலைக்கையை எடுத்துப் பார்த்தபடிக் கேட்டார்.
“நம்ம சூப்பர் மார்கெட்டுக்கு போட்டியா ஒரு சூப்பர்மார்க்கெட் வச்சி இருக்க ஏகாம்பரம் தான். நமக்கு பக்கத்து ஊரு தான். ஒரு பொண்ணு, ஒரு பையன். பொண்ணு காலேஜ் படிக்குது. கடைசி வருஷம், அதனால மாப்ள பாக்க ஆரம்பிச்சி இருக்காங்க .. இன்னிக்கி தான் பொண்ணு போட்டோ எடுக்க கூட்டிட்டு போய் இருக்காங்க “, அறிந்த விஷயத்தைக் கொட்டினான்.
“சரி .. வண்டிய எடு .. நகைக்கடை வரைக்கும் போய்ட்டு வருவோம் “, எனக் கூறிவிட்டு எழுந்து உள்ளே சென்றார்.
“ஆச்சி .. அங்க அவன் கத்துவான் .. நீ பாட்டுக்கு வா-ன்னு சொல்லிட்டு உள்ள போற .. அவனுக்கு யார் பதில் சொல்றது ?”, வட்டி தனக்கு விழப்போகும் அடியை நினைத்து புலம்பிக்கொண்டு இருந்தான்.
“சும்மா கத்தாத .. நான் ஆளுகிட்ட அவனுக்கு சொல்லி அனுப்பிட்டேன்”, என மஞ்சள் பையுடன் தயாராகி வெளியே வந்தார்.
“உங்க கிட்ட வந்து சிக்கினேன் பாரு .. வழக்கமான கடைக்கு தானே ?”, என பேசியபடி காரை எடுத்தான் வட்டி.
இவர் சென்ற நேரம் நங்கை குடும்பத்துடன் அங்கே வந்தது , விசாரித்தது எல்லாம் நாம் அறிந்தது தான்.
கடையில் இருந்து வெளியே வந்தவர், “ஏலேய் பேராண்டி .. “, என பாசமாக அழைத்தார்.
“இங்க பாரு ஆச்சி நீ என்னை கேட்ட வார்த்தைல கூட திட்டு ஆனா இப்டி பாசமா கூப்பிடாத எனக்கு திக்குன்னு இருக்கு “
“கிறுக்குபயலே .. சொல்றத கேளு .. எந்த தரகர் கிட்ட அந்த பொண்ணு ஜாதகம் இருக்குன்னு பாத்து வாங்கிட்டு வா .. “
“இல்ல எனக்கு ஒரு சந்தேகம் .. “
“என்ன டா ?”
“நீயும் உன் பேரனும் பேசி வச்சிக்கிட்டு எல்லாம் பண்றீங்களா ?”
“அவன் கிட்ட நான் ஏண்டா பேச போறேன் ? எப்போ என் பேச்ச மீறி போனானோ அப்பவே அவன் கிட்ட நான் பேசறத நிறுத்திகிட்டேன்.. இப்போ நான் சொல்றத நீ பண்ணு .. “, என அவன் காதில் சில விஷயங்களைக் கூறினார்.
வட்டி, பாட்டி சொன்னதைக் கேட்டுத் திகில் பிடித்து நின்றான் ..