அமர்ந்தே இருக்கிறேன்….
ஒற்றைக்கால் திடத்தில்….
மூன்று கால்கள் சமாளித்திருக்கும் இருக்கையின் மேல்…
ஓடத் தொடங்கும் முன் நின்ற ஓட்டம்….
கீற்றாக நினைத்த வெளிச்சம்….
கைப்பிடித்து அழைத்துச் சென்று சூன்யத்தில் தள்ளிவிட்டது….
சூன்யமென்றால் வெறிக்க வேண்டுமா?
மாட்டேன்….
அனைவரும் செய்வதைச் செய்யமாட்டேன்….
சூன்யத்தைச் சுற்றி வர ஆசைப்பட்டேன்…
சூன்யத்தில் தானே பிரபஞ்சம் உருவானது….
வெற்றிடத்தில் தானே அனைத்தும் மிதக்கிறது…?!
வெற்றிடம்…..
வெறுமையான இடம் அல்லவா?
இதை வெற்றியின் இடம் என்றும் கூட சொல்லலாம் தானே?
எந்த கோணத்தில் இவ்வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பர்?
இதன் அர்த்தம் என்னவாக இருக்கும்?
பார்வையில் மாறுபடும் கோணங்கள்….
கோணத்தில் மாறுபடும் அர்த்தங்கள்….
அர்த்தம்….
இது உண்மை தானா?
அர்த்தமே அர்த்தமின்றி போனதோ?
என் புரிதலில் பிழையாகி இருக்கலாம்….
பிழையினால் தானே பெரும் பிழை நிகழ்கிறது….
புரிதலில் பிழை….
பெரும் பிழை…
எவ்விடத்தையும் சரித்துக் கீழே தள்ளிவிடும்…
அது தான்…
என்னையும் தள்ளியது….
பெருமிதப்பில் வாழ்வதாய் நினைத்து …
அடைப்படை புரிதலில் பிழை செய்தேன்….
நொடியில் சக்கரம் சுழன்று கீழே கிடக்கிறேன்…
ஒரு நிமிடம்….
சுழற்சி முழுமை பெறவில்லை அல்லவா?
கீழே தள்ளிய சக்கரம் எனை மேலே ஏற்றும் பணி மீதமுள்ளது….
என் மிச்சம் மீதி வாழ்வும் மேலே ஏற உள்ளது….
சுழற்சியின் முடிவில்….
மீண்டும் புரிதலோடு மேலேறுவேன்…..!
– ஆலோன் மகரி