வாசகருடன் சில நிமிடங்கள் …
1. பெயர் – பவானி பாலசுப்பிரமணியம்
2. படிப்பு -உயர்தரம்வரை (A/L)
3. தொழில்/வேலை –
ஆன்மீக சஞ்சிகைக்கு ஆக்கங்கள் எழுதுவது, கவிதைகள் எழுதுவது மற்றும் மேடை அறிவிப்பாளர்களுக்கு உரைநடை எழுதி கொடுப்பது அத்தோடு இல்லத்தரசி.
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
வாசிப்பு சத்தியமாக ஞாபகம் இல்லைங்க. ஏனென்றால் சிறுவயதிலிருந்தே வாசிப்பது தான். எங்கள் தாத்தா (அம்மாவின் அப்பா) வீட்டில் நிறைய புத்தகங்கள் இருக்கும். அம்மா மாமா சித்தி என எல்லோரும் நன்றாக வாசிப்பார்கள். அப்போதே எங்கள் வீட்டில் நிறைய நாவல்கள், வரலாறு சரித்திர கதைகள் என எல்லா வகையான நல்ல புத்தகங்கள் இருக்கும். சிறுவர்கள் எங்களுக்கு பாலமித்ரா, அம்புலிமாமா, சித்திர கதைகள் என வாசிக்க இருக்கும். ஒவ்வொரு மாதமும் புத்தகங்கள் வீட்டுக்கே வந்துவிடும். எனது அப்பா நான் சிறுவயதாக இருக்கும் போதே ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை நான் வாசிக்க அவர் கேட்பார். எனக்கு புரியாது ஆனாலும் வாசிப்பேன்.
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?
அப்படி ஒன்றும் கிடையாது. எனக்கான நேரத்தை ஒதுக்கி வாசிப்பேன்.
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
கணினி மற்றும் புத்தகங்கள்
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
முன்னர் நிறைய புத்தகங்கள் வாங்குவார் என் கணவர், என்னைவிட அதிகம் வாசிப்பவர் என் கணவர். இப்போது அவ்வளவாக இல்லை குறைந்துள்ளது அதனால் இப்போது கணினியில் தான்.
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
மறுக்கமுடியாத உண்மை புத்தகங்கள் தான். அதன் வாசமே மனதை நிறைக்குமே. இன்றுவரை இங்கே கணிணி புத்தகத்தில் படித்தாலும், அவ்வப்போது வாசகசாலை சென்று சங்க இலக்கியங்கள் மற்றும் குறுந்தொகை என வாசித்து கொண்டே இருப்பேன் புத்தகங்களாக.
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
தாக்கம் என்பதை தாண்டி சிறுவயதிலிருந்தே வாசிக்க பிடிக்கும்.
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
அப்படி சொல்வதற்கு இல்லைமா .நான் நானாக தான் இருக்கிறேன்.
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
எனக்கு தலைப்பு முக்கியம் என்பேன். தலைப்பை வைத்து தான் தெரிவு செய்வேன்.
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
எனக்கு எல்லாவகையும் பிடிக்கும். அதிலும் மர்மம், திகில், காதல், குடும்பம், வரலாறு, சரித்திரம், இலக்கியம் அத்தோடு நகைச்சுவை கலந்த கதைகள் மிகவும் பிடிக்கும்.
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள் ?
எழுத்தாளர் என்பவர் முன்பு தொலைதூரமாய் தெரிந்தார். இப்பொழுது அவர்களோடு நட்புறவோடு பழக கிடைக்கிறது. அதனால் உறவாகவே கருதமுடிகிறது.
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
திருப்பம் ஏற்படுத்திய புத்தகம் இல்லை, ஆனால் ஆச்சரியப்பட்ட புத்தகங்கள் இருக்கிறது. அதிலும் ஆசிரியர் அகிலன் அவர்களின் “சித்திரபாவை” அன்றைய காலத்திலேயே ஒரு புரட்சி ஏற்படுத்திய புத்தகம் என்றால் மிகையாகாது. இந்த புத்தகம் எத்தனை முறை வாசித்தேன் என எனக்கே தெரியாது அருமையான கதை. ஞானபீட விருதை வென்ற கதை.
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
அன்றைய எழுத்தாளர்கள் அன்றைய காலத்திற்கு ஏற்ப எழுதினார்கள் . இன்றைய எழுத்தாளர்கள் நவீன காலத்திற்கு ஏற்ப எழுதுகிறார்கள்.
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
நிச்சயமாக கூறமுடியும். இப்பொழுது எல்லாம் இளம் எழுத்தாளர்களை அதிகமாக காண முடிகிறது. அவர்களின் ரசனையான தமிழ் மிகவும் கவர்கிறது. அதனால் மொழி வளர்கிறது என்பேன்.
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி”
இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
நெருக்கமாக வழக்கு மொழி இருந்தாலும், இந்த வட்டார மொழி மிகவும் பிடிக்கும். ரசித்து படிக்கலாம்.
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
ஆமாம். எனக்கு கல்கியின் சிவகாமியின் சபதம், அகிலன் அவர்களின் வேங்கையின் மைந்தன். கலைஞர் கருணாநிதி அவர்களின் பொன்னர் சங்கர் என்பன பிடிக்கும்.
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
சிறந்த பொழுதுபோக்காகவும், ரசிப்பு தன்மையாகவும் இருக்கிறது.
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
வித்தியாசமான கரு மிகவும் பிடிக்கும். அது அறிவியலோடு சேர்ந்து வந்தால் மேலும் சிறப்பல்லவா.
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
மாலை நேரம் எனக்கான நேரம். வாசிப்பது, கவிதை எழுதுவது விமர்சன கவிதை எழுதுவது இந்நேரத்தில் தான்.
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
கண்டிப்பாக நான் வாசிக்கும் எந்த ஆசிரியரின் கதையாக இருந்தாலும் என்னோட கவி விமர்சனம் உண்டு. தவறுகளை விமர்சன வாயிலாக கூறாது தனிப்பட்ட முறையில் சொல்வேன் மா. தவறுகளை தனிமையில் கூறுவது என் வழிமா.
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
எனக்கு பிடித்த புத்தகங்கள் என்றால் நான் வாசிக்கும் அனைத்துமே. விருப்பட்டே வாங்குவதால் வாசிப்பது பிடிக்கும்.
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள் என்ன?
மனதை தொட்ட விஷயங்கள் என்றால். சில தீயவரின் தவறுகளுக்கு தனிப்பட்ட முறையில் நாம் தண்டனை கொடுக்க முடியாது. அதாவது பெண்கள் மீதான வன்செயல்களை சொல்கிறேன். அதற்கு கதையின் ஆசிரியர் கொடுக்கும் போது மனது நிம்மதியுரும்.
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
இன்றைய எழுத்துலகம் ஆரோக்கியமான ஒன்று. நிறைய இளம் எழுத்தாளர்களின் வருகை உவகையாக உள்ளது.
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களைகொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
கொண்டாட மறுக்கவில்லை. அவரவர் ரசனைகளை பொருத்து இருக்கலாம் என தோன்றுகிறது.
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
இது வில்லங்கமான கேள்வியாக இருக்கிறது மா. பொதுவாக எனக்கு.. நான் விரும்பி படித்த, படிக்கும் எழுத்தாளர்களை மிகவும் பிடிக்கும். அவரவர் தனித்துவம் பெற்றவர்கள். இதில் சொல்லப்போனால் தொடரியாய் நீளுமே பெயர்கள். அன்று அகிலன் மணியன், சாண்டில்யன், ரமணிசந்திரன், காஞ்சனா ஜெயதிலகர், ஜெய்சக்தி, உமாபாலகுமார். இன்று முகநூல் கதாசிரியர்களாக ஜேபி, ஆத்விகா பொம்மு, சரணிகா தேவி, உத்ரா சித்தார்த், கோமதி அருண்(கோம்ஸ்), அருணா வேணு, சரண்யா ஹேமா, வேதவிஷால், ஜனனிநவீன், ருதிவெங்கட், சுதாஹரி, ஜியா ஜானவி, அழகி, எழில் அன்பு, தர்ஷிஸ்ரீ, இப்படி பட்டியல் நீளும் மா. ஏனையவர்கள் கோப படவேண்டாம்.
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
எதிர்பார்க்கும் விஷயங்கள் சுவாரசியங்கள் குன்றாமல் எமை அதன் உள்ளே இழுத்து பயணிக்க வைக்க வேண்டும் என்பதே. ஒரு கதை படித்தால் எப்போதடா முடியும் என இருக்க கூடாது. ஐயோ முடிந்துவிட்டதா என இருக்க வேண்டும்.
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
ஆளுமை அன்று நிச்சயமாக ஆண் எழுத்தாளரிடம் இருந்தது. இன்றோ அதை உடைத்து எங்களாலும் முடியும் என பெண் எழுத்தாளர்கள் உருவாகிவிட்டது பெருமையே.
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
ஆட்டோகிராப் வாங்க நினைப்பது ரமணி சந்திரன் அம்மா. வாங்கியவர்கள் ஆத்விகா பொம்மு, சரணிகா தேவி, உத்ரா சித்தார்த், ம்ரிதா மோகன், தர்ஷிஸ்ரீ, ஹாசினி, (கோம்ஸ் சுசிகிருஸ்ணா ஜிய ஜானவி) இந்த மூவரிடம் கையெழுத்து கிடைத்தும் இன்னும் என்னிடம் வந்து சேரவில்லை. நண்பியிடம் இருக்கிறது.
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்கு எப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
எதிர்மறை முடிவுகள் பற்றிய தாக்கம் கஷ்டமாக தான் இருக்கும் கதைக்கரு, எழுத்தாளரின் சிந்தனை இவற்றை மதித்து சமாதானம் ஆகி கொள்வேன்.
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
ஆடியோ கதைகள், குரலுக்கு முக்கியத்துவம் வேண்டும். அதோடு உரையாடல்களை நன்றாகக் கையாள வேண்டும். ஏற்றம் இறக்கம் இருக்க வேண்டும். கத்தி கதை சொல்ல கூடாது. கதை சொல்பவர்களை பொருத்தே அதன் சிறப்பும் உள்ளது.
“உயிரை கேட்காதே ஓவியமே” எழுத்தாளர் அழகி.
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
தவறு இல்லையே. அதே சாயல் வராமல் இருந்தால் சரி. இது அந்த கதையின் ஆசிரியருக்கான சிம்மசொப்பனமும் கூட.
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
எழுத்தாளரிடம் கூற விரும்புவது, தலைப்பை அசத்தலாக வையுங்கள், கூடுமானவரை ஆங்கில வார்த்தைகளின் உரையாடல்களை தவிறுங்கள். காதல் செய்யுமிடத்தில் அயல்மொழியின் அழகும் ரசனையே. ஊறுகாய் மாதிரி தொட்டுக் கொள்ளலாம். அதையே தொடர்ந்து வைப்பது கவலையே. வாசகர்களின் விமர்சனத்திற்காக உங்களின் கதையின் போக்கை மாற்றாதீர்கள். நீங்கள் என்ன நினைத்து எழுத முடிவு செய்தீர்களோ அதையே கொடுங்கள். நன்றிகள் மா. இந்த நேர்காணலில் கலந்து கொள்ள வைத்த ஆசிரியர் உத்ரா சித்தார்த் அவர்களுக்கு நன்றிகள்…
மிகவும் எதார்த்தமான உரையாடல். அதுவும் மேடை பேச்சாளர்களுக்கு உரைநடை எழுதி கொடுக்கும் உங்களோட நேர்காணல் கிடைத்தது மிகவும் சந்தோஷம்.
நீங்க பிறவி வாசகி என்று தான் கூற வேண்டும். உங்களின் தொலைநோக்கான பார்வையும், கடந்த காலம் தொட்டு நாளைய எழுத்தாளர் வரை படித்து கருத்து கூறும் வாசகர் கிடைப்பது இன்றைய நிலையில் அரிதான விஷயம்.
இன்னும் பல புதிய எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உங்கள் கண்களில் படவேண்டும் என்று நான் பிரார்த்தித்து கொள்கிறேன்.
உங்களின் மென்மையான அணுகுமுறை மிகவும் பிடித்து இருக்கிறது அம்மா. உத்ரா சித்தார்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உங்களை அறிமுகம் செய்ததற்கு..
எப்போதும் வாசியுங்கள். வாசித்து கொண்டே இருங்கள். இந்த நேர்காணலில் கலந்து கொண்டதற்கு நனிநன்றிகள் அம்மா.
வாசிப்பை நேசிப்போம் …