வாசகருடன் சில நிமிடங்கள் ..
1.பெயர் –பிரியங்கா ராஜா
2. படிப்பு – முதுகலை வணிகவியல் (M.Com)
3. தொழில்/வேலை – ஆயில் டீலர் ஆபிஸ்ல என்ன வேலை பார்க்குறேன்னே தெரியாம அக்கவுண்ட்ஸ்ல இருந்து ஸ்டாக் வரைக்கும் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்…
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? சின்ன வயசுல இருந்தே வாசிக்குறதுன்னா ரொம்ப பிடிக்கும்… பள்ளிக்கூடம் படிக்கும் போதே என்னோட குரலும், வார்த்தை உச்சரிப்பும் நல்லா இருக்கும்னு சொல்லி ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தை வாசிக்க சொல்லி பழக்கிவிட்டுடாங்க… அதனால தமிழ், ஆங்கிலம் ரெண்டுமே வாசிக்க நல்லா வரும்…
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?
தனிமையை உணரும் தருணங்கள்ல தான்…
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
புத்தகமா வாங்கி நுகர்ந்து பார்த்து, ஒவ்வொரு பக்கத்தையும் தொட்டு திருப்பி படிக்க தான் விருப்பம்… ஆனால் சூழ்நிலை கணினி வழியாகவும், மொபைல் திரை வழியாகவும் தான் வாசிக்க வைக்குது…
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
இத்தனை புத்தகங்கள்ன்னு கணக்கு வழக்கு இல்லைப்பா… என் பாக்கெட் மணிய சேர்த்து வச்சு எவ்ளோ வாங்க முடியுமோ! அவ்ளோக்கு வாங்குவேன்… நெனைக்குற நேரம் படிப்பேன்… அவ்ளோ தான்…
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
கண்டிப்பா PAPERBACK தான்…
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
கற்பனையை வளர்த்துவிட்டு என்னையும் கொஞ்சம் எழுத சொல்லி, எழுத்துலகத்துக்கு அழைச்சுட்டு வந்து நிறுத்திருக்கு…
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
அப்டியெல்லாம் இதுவரைக்கும் இல்ல… ஒருவேளை இருந்திருந்தாலும் அதை நான் இன்னும் உணரலைன்னு நெனைக்குறேன்…
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
ஆசிரியர், தலைப்பு… இதை வச்சு தான் தேர்ந்தெடுப்பேன்… எனக்கு பரிட்சயமில்லா புது எழுத்தாளரோட எழுத்துன்னா புத்தகத்தை பிரிச்சு ஏதாவதொரு பக்கத்தை வாசிச்சு பார்ப்பேன்… அப்புறமும் என்னை ஈர்த்தா தான் வாங்குவேன்…
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் ,சரித்திரம் , etc….)
குடும்பம் சார்ந்த கதைகள் தான்… கொஞ்சம் காதல் இருக்கலாம்.. அதுவும் கூட விரசமில்லாத எழுத்தா இருந்தா தான் தொடர்ந்து படிப்பேன்… வரலாறும், திகிலும் கூட பிடித்த வகையறா தான்….
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
எங்கள்ல ஒருத்தவங்களா தான் தெரியுறாங்க…
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
காத்திருந்த கண்களேன்னு ஒரு கதை.. கண்மணி புத்தகத்துல வந்தது… அண்ணன் வாங்கி வச்சு எதார்த்தமா நானும் ஒருநாள் படிச்சேன்.. அதுல ஹீரோவும் ஹீரோயினும் லவ் பண்ணுறத பார்த்துட்டு நானும் அது போலவே லவ் பண்ணனும்.. அப்டி இல்லைன்னா ஒரு கதையாவது எழுதணும்னு லூசுமாதிரி நெனச்சுருக்கேன்… லவ் பண்ண வாய்ப்பு அமையல.. கதை எழுதிட்டு இருக்கேன்…
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
அவங்க அவங்க காலகட்டத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப எழுதுறாங்க… முன்னவெல்லா எழுத்துநடையும், வார்த்தை பிரயோகங்களும் வேற மாதிரி இருக்கும்… இப்போ பேச்சுவழக்குலையே கதைகள் இருக்கதால வாசிக்கவும் நல்லா இருக்கு…
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
கண்டிப்பா வளருதுன்னு தான் எனக்கு தோணுது…
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி” இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
பேச்சுமொழியும், வழக்கு மொழியும் தான்… அப்டி இருக்க எழுத்துக்களை வாசிக்கும்போது அவங்க கூடவே சீக்கிரமா பயணிக்க ஆரம்பிச்சுடுவோம்…
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
வாசிப்பேன்… சிவகாமியின் சபதம்…
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
அது அது அந்த அந்த ஜோனர்ல இருந்துட்டு போறதே நல்லதுன்னு நெனைக்குறேன்…
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
வித்தியாசமான கரு கொண்ட கதைகள் பிடிக்கும்…. அறிவியல் எனக்கு புரியுற அளவுக்கு இருந்தா கண்டிப்பா வாசிப்பேன்..
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
நெனைக்குற நேரம் வாசிப்பேன்… நேரம் கிடைக்கும் போது எல்லாம்…
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ?எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
விமர்சனம்னா ஒருமுறை போட்டிக்கதைக்காக கொடுத்து அந்த எழுத்தாளர் சார்பா அவங்க புத்தகத்தையே பரிசா வாங்கி இருக்கேன்…
23. உங்களுக்கு மிகவும் பிடித்த பு த்தகங்கள் / கதைகள் (5)
நிறைய இருக்கு… குறிப்பிட்டு சொல்லணும்னா பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அன்புடன் அதியமான் அண்ணாமலை, உயிர்விடும்வரை உன்னோடு தான், காதல் கலைவாணியே…
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள்என்ன?
சிவகாமியின் சபதத்தில வாதாபில இருந்த சிவகாமியோட நிலையை நெனச்சா இன்னைக்கும் எனக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கும்… முதல் முறை படிச்சுட்டு ஒரு வாரத்துக்கு அழுதேன்…
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
அந்த அளவுக்கு எல்லாம் நான் இன்னும் வளரலப்பா…
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களைகொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
இதே கேள்வி எனக்குள்ளேயும் ஓடிட்டே தான் இருக்கு… சிலரோட ஒண்ணுமே இல்லாத எழுத்துக்கு கிடைக்குற ஆரவாரமும் அங்கீகாரமும், மெனக்கெடலோடு நிறைய தகவல்களை தேடித்தேடி எழுதுற எழுத்தாளர்களுக்கு கிடைக்கிறது இல்ல…
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர்&இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
அன்றைய எழுத்தாளர்கள் – கல்கி, சாண்டில்யன், ரமணிச்சந்திரன், அனுராதாரமணன், இந்திராசௌந்தரராஜன்..
இன்றைய எழுத்தாளர்கள் – வநிஷா, அமுதவல்லி நாகராஜன், தமிழ்மதுரா, ராணிதென்றல், ராஜலக்ஷ்மி நாராயணசுவாமி
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
கதாப்பாத்திரங்களும், கண்டெண்டும் தான்…
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
பிரிச்சு எல்லாம் பேச முடியாதுப்பா… எல்லாருமே சமம் தான்…
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
இதுவரைக்கும் யார்க்கிட்டேயும் வாங்கினது இல்லை… அப்டி வாங்குறதுன்னா! பாரபட்சம் பார்க்காம வாங்கிடுவேன்… ராஜலக்ஷ்மி நாராயணசுவாமி அக்காவோட ஆட்டோக்ராப் வாங்கணும்… அதுவும் அவங்களோட தமிழ்கதை புத்தகத்துல…
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்கு எப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
கஷ்டமா தான் இருக்கு… ஆனாலும் கதைக்கு அந்த முடிவு தான் சரியாக இருக்கும்னா ஏத்துக்க தானே வேணும்…
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
மியூசிக் எல்லா அதிகமா போடாம இயல்பா வாசிக்கிறது போல இருந்தாலே போதும்… எனக்கு ஆடியோ கதைகளை விட நானாகவே வாசிக்கிறது தான் பிடிக்கும்… அதனால கேட்கிறது இல்லை…
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
தவறெல்லா இல்லையே… கற்பனை எப்படி எதை நோக்கி போனா என்ன? வாசிக்கிறவங்க இத்தனை பேரு இருக்கும் போது தாராளமா எழுதலாம்…
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
ம்ம்ம்ம்… வாசகர்களோட விமர்சனங்கள் எதுவா இருந்தாலும் அதை தலைக்கு மேல ஏத்திக்காதிங்க… பாசிட்டிவோ! நெகட்டிவோ! இயல்பா கடக்க பாருங்க… பாஸிட்டிவ் விமர்சனங்களுக்கு நன்றி சொல்லி சந்தோசப்படுறது போல, எதிர்மறை விமர்சனத்தையும் மனசளவுல ஏத்துக்கிட்டு இனி என்ன பண்ணுனா அதை இனி செய்யாம இருக்கலாம்னு யோசிச்சு திருத்திக்கப் பாருங்க… இப்டில்லா சொல்லுறேன்னு போர்க்கொடியை தூக்கிக்கிட்டு வந்துடாதிங்க தங்கங்களே… நானும் எழுத்தாளர் தான்.. என்னையும் தினம் தினம் கழுவி ஊத்திட்டு தான் இருக்காங்க… நானும் என் தவறுகளை மாத்திக்க முயற்சி எடுத்துட்டு இருக்கேன்…
நன்றிகள்….
ரொம்ப அற்புதமான பேச்சு பிரியங்கா சிஸ்.. உங்களோட இயல்பான பேச்சும், பதில் சொன்ன விதமும் ரொம்ப இணக்கமா இருந்தது.
நெறைய புது எழுத்தாளர்கள் புத்தகமும் நீங்க வாங்கணும், நெறைய வாசிப்பு நேரம் உங்களுக்கு கிடைக்கணும்.
வாசிப்பை நேசிப்போம்…