17 – வலுசாறு இடையினில்
“என்ன நங்க போற போக்க பார்த்தா அந்த காலம் மாதிரி மாப்ள உடைவாளுக்கு பூ வைக்க சொல்லி கல்யாணம் முடிஞ்சதுன்னு, உன்ன கையோட கூட்டிட்டு போயிடுவாங்க போல“, வினிதா பத்திரிக்கை படித்து முடித்ததும் கேட்டாள்.
“அவங்க என்ன வேணா பண்ணட்டும் .. என்ன நடக்குதுன்னு பாப்போம் வினி.. நான் ஒரு முடிவுக்கு வந்து இருக்கேன்”, என நங்கை தன் தந்தையை பார்த்தபடி தீவிரமாக கூறினாள்.
“என்ன முடிவு நங்க?”
“அப்பறம் சொல்றேன்.. “, என நங்கை அத்துடன் அமைதி ஆகி விட்டாள்.
‘இந்த பக்கி என்ன முடிவு செஞ்சி இருக்கு? இவளுக்கு திடீர்னு அவளோ தைரியம் எப்டி வரும்?’, என வினிதா நங்கை கூறியதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருந்தாள்.
பத்திரிக்கை படித்து முடித்ததும் உணவு பந்திக்கு அனைவரும் சென்றனர்.
நங்கையும், வினிதாவும் அறைக்கு செல்லலாம் என மாடி ஏறினர். அப்போது யாரோ வினிதாவை அழைக்கவும், நங்கையை முன்னே செல்ல கூறிவிட்டு வினிதா கீழே சென்றாள்.
“என்ன இரத்தினம் இது? நாலு நாள்ல கல்யாணம் எப்டி பண்றது? பத்து நாள் தானே முன்ன சொன்னீங்க? என்ன நடக்குது? எதுக்கு இவ்ளோ அவசரப்படணும்?”, என ஏகாம்பரம் பேசிக் கொண்டு இருந்தார்.
“எல்லாம் உனக்கே தெரியும் ஏகாம்பரம்.. நம்ம செங்கல்வராயன் கிட்ட பணம் வாங்கறப்போ அவரு போட்ட கண்டிஷன் ஞாபகம் இருக்குல்ல?”, என கேட்டுவிட்டு இரத்தினம் ஏகம்பரத்தை பார்த்தார்.
“அவரு என்ன சொன்னாரு? அவர் கேக்கறப்போ பணம் முழுசா தந்துடணும் அவ்ளோ தாணு ?”
“அவரு இப்போ பணத்த முழுசா கேக்கறாரு.. முப்பது லட்சம் முழுசா வச்சி இருக்கியா?”
“அவளோ பணம் இப்போ நான் பொரட்ட முடியாது தான். ஆனா நெலத்த விலைக்கு விட்டு இருக்கேன் அது வித்தா ஓரளவு நல்ல பணம் வரும். அவருக்கு இப்போ கைல காசு இல்லாம இல்லையே இரத்தினம். நான் பணம் வாங்கறப்போ நெலம் வித்து பணம் தரேன்னு சொன்னதுக்கு அவரும் ஒத்துகிட்டாரே ..”
“இப்போ அவசரமா வேணுமின்னு கேக்கறாரு ஏகாம்பரம்.. நம்ம ஒடனே குடுக்க முடியாது. ஆனா தேவராயன் குடுப்பான். தங்கதுரை நினைச்சா குடுக்க முடியும். அதுக்கு தான் உனக்கு இந்த சம்பந்தம் செங்கல்வராயன் பேசினது”
“இந்த சம்பந்தம் நீ தானே பேசினதா நேத்து சொன்ன இரத்தினம்?”
“எனக்கு முன்ன செங்கல்வராயன் பேசிட்டாரு ஏகம்பரம்.. பெரிய எடத்துல நம்ம பொண்ண குடுக்க போறோம். பொண்ணு அவங்களோடது ஆகிட்டா உன் கஷ்டம் இனிமே அவங்க கஷ்டம். முப்பது லட்சம் எல்லாம் அவங்களுக்கு தின செலவு மாதிரி.. எதுவும் யோசிக்காத .. நீ பொண்ணுக்கு வாங்க வேண்டியது மட்டும் பாரு மிச்சம் நாங்க பாத்துக்கறோம் ..”
“பையனுக்கு தான் இன்னும் கால குணம் ஆகலியே அது குணமானதும் வச்சிக்கலாம் ல ?”
“அட என்னப்பா நீ? பத்திரிக்கை குடுத்த அப்பறம் இவ்ளோ பேசிக்கிட்டு இருக்க? உனக்கு எல்லாம் சம்மதம்ன்னு சொன்னதால தாணு, நானும் முன்ன நின்னு இத பாக்கறேன்.. உனக்கு பொண்ண சீக்கிரம் கட்டி குடுக்கணும்ன்னு சொன்ன.. அதுக்கு தக்கன நானும் ஒரு எடம் இருக்குன்னு வந்து சொன்னதும் நீயும் சரின்னு சொன்ன அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க.. இதுக்கு மேல என்ன? அவசர கல்யாணம் எல்லாம் கொஞ்சம் அப்டி இப்டி தான் இருக்கும்.. வர்மன எதுக்கற ஒரே ஆளு இவங்க தான்.. இவங்கள மீறி வர்மன் வந்து பிரச்சனை பண்ண முடியாது .. அவன் பிரச்சனை பண்றதுக்கு முன்ன வந்து அடுத்து ஆகறத பாரு வா “, என இரத்தினம் ஏகம்பரத்தை அதற்கு மேல் பேசவிடாமல் அங்கிருந்து அழைத்து சென்றார்.
வர்மனின் பேச்சு வந்ததும் ஏகாம்பரம் அமைதியாக சென்றார்.
நங்கை அங்கு நடந்த அனைத்து பேச்சு வார்த்தைகளும் கேட்டு விட்டு தனது அறைக்குள் நுழைந்தாள்.
வெகுநேரமாக அமைதியாக இருந்தவள் ஒரு முடிவுடன் தனது சான்றிதல்கள் எல்லாம் ஒரு பையில் எடுத்து வைத்துக் கொண்டாள். செலவிற்கு தனது சேமிப்பு பணத்தை எடுத்து வைத்து கொண்டு, இனி எப்படி நடப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
“என்ன முத்தமிழ் நங்கை கல்யாண கனவுகள் ஆ?”, என கேட்டபடி இளவேணி அங்கு வந்தாள்.
“நீ எப்டி இங்க ?”, என நங்கை யோசனையுடன் கேட்டாள்.
“என் அப்பா தலைமைல தானே இந்த கல்யாணம் நடக்குது.. நான் வராம இருந்தா எப்டி?”, என கேட்டபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.
“ஓ.. அந்த ஆளு உங்கப்பாவா?”, என நங்கையும் தன்னை திடப்படுத்தி கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“என் அப்பாவ மரியாதை இல்லாம பேசாத நங்க..”, இளவேணி கோபத்துடன் கூறினாள்.
“இங்க எதுக்கு இப்போ வந்த?”, நங்கை அவளது கோபத்தை அலட்சியப்படுத்தி பேசினாள்.
“உன் கழுத்துல தாலி கட்டுவேன்-ன்னு சபதம் போட்டவர போய் பாத்தேன். பெருசா எந்த ரியாக்சணும் இல்ல. இங்க நீ உன் சபதத்துல ஜெயிக்க போற சந்தோஷம் இருக்கான்னு பாக்க வந்தேன்”
“ஸ்ஸ் .. உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா ? எனக்கு கல்யாணத்துலயே விருப்பம் இல்ல.. மொத நீ கெளம்பு .. நான் டிரஸ் மாத்தனும்.. “, நங்கை எரிச்சலுடன் பேசினாள்.
“ரொம்ப தான் சலிச்சிக்கர.. நீ கல்யாணம் பண்ண போறது யார தெரியுமா? தேவராயன் .. மேலூர்-ல பாதி அவங்களோடது தான்.. உங்க வசதிக்கு நூறு மடங்கு“
“அவ்ளோ வசதி இருக்கறவங்க எதுக்கு இங்க பொண்ணு எடுக்கணும்? அவங்க வசதிக்கு ஏத்த இடத்துக்கு போகவேண்டியது தானே ?”
“எவ்ளோ வசதி இருந்து என்ன பண்றது ? பையன் கால் ஒடஞ்சி படுத்து இருக்காரு.. ஒடச்சது யாரு தெரியுமா? என் சிங்க மாமா”, என இளவேணி சிரிப்புடன் கூறினாள்.
நங்கை அவளை ஆழ்ந்துப் பார்த்தாள்.
“அவங்க ரெண்டு பேருக்கும் சுத்தமா ஆகாது.. வேற எங்க உன்ன கட்டி குடுக்க நினைச்சாலும் என் மாமா வந்து தடுப்பாரு.. அதான் உன்ன அங்க கட்டி குடுத்துட்டா எனக்கும் பிரச்சனை இல்ல, எங்கப்பாவுக்கும் இல்ல.. அதான் இந்த ஏற்பாடு.. கவலப்படாத அங்க போய் கூட நீ சந்தோஷமா இருக்கலாம்.. தேவராயனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல. ஆனா ஒரே ஒரு பழக்கம் இருக்கு..”, என கூறிவிட்டு இளவேணி அமைதியானாள்.
‘என்ன’, என்பது போல நங்கை அவளைப் பார்த்தாள்.
“அவனுக்கு சொந்தமான பொருளை யாராவது தட்டி பறிக்க நினைச்சா அந்த பொருளை பதுக்கி வச்சிட்டு அவனே காணோம்ன்னு தேடி, யாரு அது மேல ஆசபட்டாங்களோ அவங்கள ஒரு வழி பண்ணிட்டு தான் அடுத்த வேலை”
“உன் மாமன் தானே இதனால கஷ்டப்படுவான்”, நங்கை இடையில் கேள்வி கேட்டாள்.
“ஹாஹாஹா.. என் மாமன் உன் கழுத்துல தாலி ஏறிட்டா திரும்பி கூட பாக்காது.. தவிர தேவராயன் கிட்ட மறுபடியும் மோதாது…. தங்கதுரை மாமா அதுக்கு தக்கன பஞ்சாயத்து பேசி முடிச்சி இருக்காரு..”
“ஹாஹாஹாஹா.. நான் பொருள் இல்ல இளவேணி.. மனுஷி.. மொதல் நீ இங்க இருந்து வெளிய போ”, நங்கை பல்லை கடித்துக்கொண்டு கூறினாள்.
“எங்க வீட்டு பிள்ளைய இப்போவே வெளிய போக சொல்ற?”, என கூறியபடி மரகதம் உள்ளே வந்தார்.
“நான் ரூம் விட்டு தான் போக சொன்னேன்.. பொடவை மாத்தணும்”
“இப்போவே எதுக்கு மாத்தணும் ? நாங்க எல்லாம் இன்னும் இங்க தானே இருக்கோம்..” , என மற்றொரு பெண்மணி கூறினார்.
“பெரியம்மா.. பாவம் பொண்ணு .. நழுங்கு வச்சத்துல அரிசி எல்லாம் பொடவைக்குள்ள புகுந்து இருக்கும். அவங்க அவுத்துட்டு கட்டட்டும் .. வாங்க நம்ம வெளிய இருக்கலாம்”, என இளவேணி அந்த பெண்களை சமாதானம் செய்து அழைத்து சென்றாள்.
வினிதா செல்பவர்களை பார்த்தபடி நங்கை இருந்த அறைக்குள் வந்து, “அந்த சில்வண்டு என்ன பண்ணுது நங்க?”, என கேட்டாள்.
“அவ அப்பன் தான் அந்த செங்கல்வராயன் .. அவன் தான் இந்த சம்பந்தம் பேசி இருக்கான்…”, என ஆரம்பித்து தான் கேட்ட பேச்சுவார்த்தைகள் முதல் இளவேணி பேசியது வரை கூறி முடித்தாள்.
“எனக்கு வாய்ல நல்லா வருது நங்க.. உங்கப்பனுக்கு அறிவுங்கறது நாலன்னா அளவுக்கு கூட இல்ல”
“அந்த ஆளுக்கு இதுக்கு மேல வந்து மட்டும் என்ன ஆக போகுது.. “, நங்கை எங்கோ வெறித்தபடி பார்த்துகொண்டு பேசினாள்.
“நாம இப்ப என்ன பண்றது நங்க?”, வினிதா அவளருகில் வந்து கேட்டாள்.
“நாலு நாள்ல கல்யாணம் வச்சிக்கிட்டு நான் மட்டும் என்ன பண்ணுவேன்? எனக்கு ஒண்ணுமே புரியல வினி.. இங்க இருந்து ஓடிபோயிரலாம்ன்னு தான் இருக்கு..”, என கூறியபடி தலையில் கைவைத்து அமர்ந்துக் கொண்டாள்.
“ஏன் அப்படி பண்ண கூடாது?”, என வினிதாவும் கேட்டாள்.
“எங்க போறது வினி? இன்னும் செம் முடியல.. கிடைச்ச வேலைக்கு போகணும்னா கூட டிகிரி முடிச்சா தான் போக முடியும்.. அதுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு”
“ஆமால்ல .. வேற என்ன பண்ணலாம்?”
“எனக்கும் ஒண்ணும் புரியல.. ஆனா எனக்கு இந்த கல்யாணம் மட்டும் வேணாம் வினி.. ஏதாவது செஞ்சி இந்த கல்யாணத்த நிறுத்தணும்..”, என நங்கை வினிதாவிடம் புலம்ப ஆரம்பித்தாள்.
“என்ன பண்றதுன்னு யோசிக்கலாம் நங்க.. அந்த ஊரு ஆளுங்க வேற ஒருமாதிரி.. அதுவும் பாக்கணும்..”
“நான் இல்லைனா இன்னொரு பொண்ண கட்டி வைப்பாங்க அவளோ தானே .. “
“உனக்கு தங்கச்சி இருந்தா கட்டுவாங்க உன் தம்பிய யாரு கட்டுவா? அப்டி அது பொண்ணா பொறந்து இருந்தா கூட அந்த குடும்பத்துல தள்ளி விட்டு இருக்கலாம். இதுக்கு மேல உன் தம்பிக்கு ஆபரேஷன் செஞ்சா கூட அதுக்கு வாய்ப்பு இல்ல தானே நங்க?”
“கிறுக்கு தனமா பேசாம ஒழுங்கா ஏதாவது சொல்லு.. அப்பவும் பொண்ணா பொறந்ததால மட்டும் தான் அந்த கஷ்டம் படணுமா? ஆம்பளைங்க எல்லாம் கஷ்டமே படக்கூடாதா?”, நங்கை வினிதா தலையில் கொட்டு வைத்தாள்.
“ஏய் எரும எதுக்கு இப்டி கொட்டுற? வலிக்குது டி.. அந்த ஜென்மம் வேற எப்டி தான் கஷ்ட படுமாம்? ஊருல நடக்கறத தானே நான் சொன்னேன்.. “, தலையை தேய்த்து கொண்டு பதில் கூறினாள் வினிதா.
“இந்த வழக்கத்த கொண்டு போய் எங்கயாவது ஆத்துல கொட்டு.. நாலாவது நாள் கல்யாணம் .. நம்ம ஊரு வழக்க படி நம்ம தான் கல்யாணம் செய்வோம் .. ஆனா இவங்க வசதி பாத்தா அவங்க ஊர்ல வச்சிக்குவாங்க போல .. நம்ம என்ன பண்றது?”, நங்கை.
“நிஜமா நீ இந்த கல்யாணத்த நிறுத்தணும்னு நினைக்கறியா நங்க?”, வினிதா அவளின் எண்ணத்தைப் புரிந்து கொள்ள கேட்டாள்.
“ஆமா வினி.. எனக்கு இவன மட்டும் இல்ல யாரையும் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல… எப்பிடியாவது இந்த கல்யாணத்த நிறுத்தணும் ஏதாவது வழி சொல்லேன்..”
“இந்த கல்யாணம் ஒடனே நிக்க ஒரே வழி நீ ஓடி போறது தான்.. ஆனா நீ எங்க போவ? ஏதாவது காதல் கீதல் இருந்தா கூட அந்த நாய் ஏதாவது செய்யும் .. உனக்கு தான் அப்டி யாரும் இல்லயே .. தனியா ஓடி போய் என்ன செய்வ?”
“காதல் கீதல் இருந்தா தான் ஓடணுமா ? கல்யாணம் பிடிக்கலன்னா ஓட மாட்டாங்களா?”
“நான் வழக்கத்த தானே டி சொல்றேன்.. எங்க தங்குவ? எப்டி வாழ்க்கைய ஆரம்பிப்ப? படிச்சி முடிச்சி இருந்தா கூட பரவால.. இந்த மூளை கெட்ட ஜென்மங்க செம் எழுதறதுக்கு முன்ன இந்த கல்யாணம் வச்சி சாவடிக்கறாங்க.. உன்ன அனுப்பி வச்சிட்டு நான் எப்டி நிம்மதியா இருக்க முடியும்?”
“அப்போ வேற என்ன தான் வழி வினி”
“யோசிக்கலாம்.. ஏதாவது வழி கிடைக்கும்.. இல்லைனா நானே உன் கூட ஓடி வரேன்.. நான் சொன்ன மாதிரி ஆளுக்கு ஒரு வேலை தேடிக்கலாம்.. வீட்ல இருக்க பணத்த செலவுக்கு எடுத்துக்கலாம் “, என வினிதா கூறியதும் நங்கை கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தாள்.
நங்கையின் சிரிப்பு சத்தம் வெளியே கேட்கவும் நிறைய பேர் மனதில் நிறைய எண்ணங்கள் தோன்றின.
அவரவர் எண்ணம் அவரவர் வாழ்வை நிர்ணயிக்கும் அல்லவா??