23 – அர்ஜுன நந்தன்
நவோடலில் ரூம் புக் செய்தபின் செந்தில் மற்றும் அர்ஜுன் லிப்டில் ஏறினர்.
எதையோ மறந்தது போல் இருக்க அர்ஜுன் தன் உடையில் எதையோ தேடினான்.
“என்ன அர்ஜுன்? என்ன தேட்ற?”, செந்தில்.
“நான் பென் அ மறந்து வச்சிட்டு வந்துட்டேன். நீங்க முன்னாடி போங்க. நான் எடுத்துட்டு வரேன்”, அர்ஜுன்.
“சரி வா”, என செந்தில் கூறி லிப்டை இயக்கினான் செந்தில்.
10ஆம் தளத்தில் ஜானின் உதவியாளர்கள் செந்தில் இருந்த லிப்டில் ஏறினர்.
“சே… எப்ப பாரு எதையாவது கேட்டுகிட்டே இருக்கு அந்த பொண்ணு. எத்தனை தடவை தான் நடக்கறது?”, எரிச்சலுடன் பக்கத்தில் இருந்தவனிடம் கூறிக் கொண்டு வந்தான் .
“இப்ப தானே படம் பாத்துட்டு வந்துச்சி அதுக்குள்ள என்ன கேக்குது ?”, இன்னொருவன்.
“நைட் டின்னர்க்கு அவன்ஜர்ஸ் செட்டப் பண்ணி அதுக்கு நடுவுல உக்காந்து சாப்பிட்டாதான் செரிக்குமாம்” , முதலாமவன்.
“என்னடா சொல்ற? இதுக்கு எல்லாம் எப்படி நம்ம பாஸ் கம்முன்னு இருக்காரு?”, மற்றவன்.
“என்னமோ போ. நைட்கு மொட்டை மாடில ஏற்பாடு பண்ண சொல்லி இருக்காங்க .அதுக்கு தான் உன்ன கூட்டிட்டு போறேன்”,முதலாமவன்.
இதை அனைத்தும் செந்தில் கேட்டுக் கொண்டு வந்தான். பின்னால் இவன் நின்றதை கவனிக்காமல் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே 15ஆம் தளத்தில் இறங்கினர்.
அதற்கு பின் செந்தில் அவன் எடுத்த அறைக்குச் சென்றான்.
செந்தில் சென்று சிறிது நேரம் கழித்து அர்ஜுன் அறைக்குள் வந்தான்.
“என்ன அர்ஜுன் இவ்வளவு நேரம்?”, செந்தில்.
“யாத்ரா பத்தி தான் எதாவது தகவல் கிடைக்குமான்னு விசாரிச்சி பாத்தேன் கீழே . சந்தேகபட்ற ஆக்டிவிட்டீஸ் எதுவும் இல்ல”, அர்ஜுன்.
“அங்க எப்படி இருக்கும்? ஆக்டிவிட்டீஸ் எல்லாம் 10 – 15 ப்ளோர்ல தானே நடக்குது “, எனக் கூறி தான் கேட்ட விஷயத்தைக் கூறினான் செந்தில்.
“அப்ப இன்னிக்கு நைட் நாம யாத்ராவ பாக்கமுடியுமா?”, அர்ஜுன் ஆர்வமாக வினவான்.
அர்ஜுன் கண்களில் தெரிந்த ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் மனதில் குறித்துக் கொண்டு பதிலளித்தான் செந்தில்,” நாம இங்க இருக்கோம்ன்னு அவளுக்கு தெரியவச்சிட்டா அவளே வருவா “.
“எப்படி தெரிய வைக்கறது?”, அர்ஜுன் யோசனையாக இருந்தான்.
“யோசிச்சிட்டே இரு நான் பிரஸ் ஆகிட்டு வந்துட்டறேன்”, செந்தில்.
சட்டென்று ஏதோ தோன்ற அர்ஜுன் தன்னிடம் இருந்த லேப்டாப்பை ஆன் செய்து அவள் ரூமில் அவள் கிறுக்கி வைத்த வார்த்தைகள் ஒன்று இரண்டை பேப்பரில் எழுதி வைத்துகொண்டான்.
அவள் 10வது தளத்தில் இருந்து 15 தளத்திற்குள் தான் இருக்க வேண்டும் யாரை வைத்து இதைத் தெரிந்து கொள்வது என சிந்தித்தான்.
அந்த சமயம் அவனுக்கு கதிர் கால் செய்தான்.
“சொல்லு கதிர் வந்துட்டியா?”, அர்ஜுன்.
“வந்துட்டேன் சார். அந்த ஹோட்டலுக்கு வெளிய தான் நிக்கறேன்”, கதிர்.
“சரி வெயிட் பண்ணுங்க பக்கத்தில எதாவது பேக்கரி காபி சாப் இருக்கா?”,அர்ஜுன்.
“இந்த தெரு முனைல ஒரு பேக்கரி இருக்கு சார். அங்க வெயிட் பண்றேன்”, எனக் கூறி கட் செய்து விட்டு நடந்தான்.
“என்ன பிளான் அர்ஜுன்?”, செந்தில் .
“யோசிச்சிட்டு சொல்றேன் செந்தில் .எதாவது பண்ணலாம் நீங்க இங்க இருந்து வேற தகவல் கிடைக்குமான்னு பாருங்க. நான் கதிரை பாத்துட்டு வரேன்”,அர்ஜுன்.
“கதிர் ?”, செந்தில்.
“என் டீம் தான். நாம கிளம்பறப்ப அவனையும் கிளம்பச் சொல்லிட்டேன். இங்க நமக்கு உதவியா இருக்கும்”, அர்ஜுன்.
“சரி அர்ஜுன். ரூம் கீ உங்களுக்கு ஒன்னு இந்தாங்க. நானும் ஹோட்டல பாக்க போறேன்”, செந்திலும் தயாராகி ரூமை லாக் செய்துவிட்டுக் கிளம்பினான்.
அவன் நேராக சென்றது மொட்டை மாடிக்கு தான். அங்கே நைட் டின்னர்காக அனைவரும் அவன்ஜர்ஸ் செட் போல தயார் செய்துக் கொண்டு இருந்தனர். அருகில் சென்று விசாரித்தான் செந்தில்.
(அவன் ஹிந்தியில் உரையாடினான். நாம் நமது புரிதலுக்காக தமிழில் பார்க்கலாம்)
“என்ன நடக்குது இங்க?”,அங்கே வேலை செய்து கொண்டு இருந்தவனிடம் கேட்டான் செந்தில்.
“செட் போடறோம் டின்னர்காக”, வேலையாள்.
“என்ன விஷேசம்? யாராவது விஐபி வராங்களா?”, செந்தில்.
“எங்க முதலாளி கூட ரொம்ப வேண்டியவங்க வராங்கன்னு சொன்னாங்க”, வேலையாள்.
“இந்த ஹோட்டல்ல தங்கி இருக்கற மத்த கெஸ்ட்டும் வரலாமா?”, செந்தில்.
“அது அவரை கேளுங்கன்னு”, இன்னொருவனை கைகாமித்தான் அவன்.
“வணக்கம் நானும் இங்க தான் தங்கி இருக்கேன். இந்த விஷேஸ செட் டின்னர்ல நாங்களும் கலந்து கொள்ளலாமா?”,செந்தில்.
“வணக்கம். நான் இந்த செட் மட்டும் தான் போடற ஆளு. இது எல்லாம் மேனேஜ்மென்ட் கிட்ட கேளுங்க சார்”, செட் இன்சார்ஜ்.
“சரி இது எப்ப தயாராகும்?”, செந்தில்.
“இன்னிக்கு நைட்க்கு கேட்டாங்க ஆனா ரெடி ஆகாதுன்னு சொல்லி அனுப்பி இருக்கோம். கேட்டுட்டு வர போய் இருக்காங்க. நாளைக்கு தான் முழுசா தயாராகும் சார்”, செட் இன்சார்ஜ்.
“சரி சரி” ,என அங்கிருந்து நகர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தான் செந்தில்.
தன் போனை வைத்து செல்பி எடுத்துக் கொண்டு இருந்தான். அதை கண்டவர்கள் அவனை கண்காணிக்காமல் அவரவர் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
“நல்ல வேலை செல்பி எடுக்கறதால எவனும் நம்மல கண்டுக்கல. இந்த பைத்தியகாரத்தனமும் நமக்கு யூஸ் ஆகுது. இப்படியே இன்னும் கொஞ்சம் எதாவது செஞ்சி வைட் பண்ணலாம் “ மனதில் தனக்கு தானே பேசிக்கொண்டு போட்டோ எடுத்தான்.
அங்கே வேலை செய்து கொண்டு இருந்தவர்களையும் பார்க்க செய்து சேர்ந்து எடுத்துக் கொண்டான்.
அந்த சமயம் ஜான் அங்கு வந்தான். அவனைக் கண்ட செந்தில் எங்கோ பார்த்தது போல தோன்ற அவர்கள் பேசுவது கேட்கும் தொலைவில் நின்று கொண்டான்.
“இன்னிக்கு செட் ரெடி ஆகாதா?”, கோபமாக வினவினான் செட் இன்சார்ஜ்யிடம்.
“இல்ல சார். நாளைக்கு நைட் முழுசா ரெடியா இருக்கும். இப்ப பாதி வேலை கூட முடியல. சினிமா செட் போல வேணும்னு சொல்றீங்க அதுக்கு தகுந்த டைமும் குடுத்தா தான் நாங்களும் செய்ய முடியும்”, செட் இன்சார்ஜ் தன் பக்க நியாயத்தை கூறினான்.
“நீ சொல்லி நான் கேட்கலாம் . ஏன் முதலாளி கூட அட்ஜஸ்ட் பண்ணலாம். ஆனா அவ கேட்க மாட்டாளே”,என தனக்கு தானே தமிழில் வாய்விட்டு புலம்பினான் ஜான்.
இதை கேட்ட செந்தில் வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான். யாத்ரா இங்க தான் இருக்கா அதுவும் இவன் கன்ட்ரோல்ல தான் இருக்கனும்.
“சரி நாளைக்கு மதியம் செட் ரெடியா இருக்கணும்”, என செட் இன்ஜார்ஜிடம் கூறியவன் அங்கிருந்துச் சென்றான்.
அவன் பின்னேயே சென்றான் செந்தில் . ஜான் சென்ற லிப்டில் அவனும் ஏறினான். ஜான் பத்தாம் தளத்தில் இறங்கிக் கொண்டான்.
செந்தில் தரைதளம் வந்தவன் அந்த ஹோட்டல் முதலாளி அறை எங்குள்ளது என்று விசாரித்தான். 5ஆம் தளத்தில் இருக்கிறது அப்பாயின்மெண்ட் இல்லாமல் சந்திப்பது கஷ்டம் எனக் கூறினர் அங்கிருந்த ரிசப்ஸனிஸ்ட்.
அப்ப ராங்கி 10வது தளத்தில் இருக்கா. அங்கு ரூப்டாப் ரெஸ்டாரெண்ட் இருப்பதால் தான் அங்கு செட் போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
அந்த செட்டில் நாங்களும் கலந்து கொள்ளலாமா என அங்கிருந்த ரிசப்சன் மேனேஜரிடம் கேட்டான்.
சிறிது யோசித்த மேனேஜர் மேலிடத்தில் கேட்டுச் சொல்வதாகக் கூறினான்.
சரியென செந்திலும் தன் அறைக்குச் சென்றான்.
அங்க அர்ஜுனும் கதிரும் என்ன பண்றாங்கன்னு போய் பாக்கலாம் வாங்க நண்பர்களே…
“குட் ஈவினிங் சார்”, கதிர்.
“ம்ம்… விசாரிச்சீங்களா?”, அர்ஜுன்.
“எஸ் சார். நீஙக் கால் பண்ணதும் இங்கிருந்த என் பிரண்ட் மூலமா விசாரிக்க ஆரம்பிச்சிட்டேன். இந்த ஹோட்டல் நரசிம்ம ரெட்டியோடது தான். ஆனா இப்ப இது ஆர்யன் மல்ஹோத்ரா கைல இருக்கு. ஆர்யன் ஓட அப்பா சித்தேஷ்யோகி மல்ஹோத்ரா கிட்ட நரசிம்ம ரெட்டிக்கு ஏதோ பிஸினஸ் டீல் இருக்கு. இப்ப 6 மாசமா ஆர்யன் இங்க தான் இருக்கான்”, கதிர்.
“ஆர்யன் புல் டீடைல்ஸ் எப்ப கிடைக்கும்?”,அர்ஜுன்.
“நாளைக்கு மார்னிங் அவங்க டோட்டல் பேமிலி பத்தி டீடைல்ஸ் கிடைச்சிடும் சார்”,கதிர்.
“இந்த சித்தேஷ்யோகி மல்ஹோத்ரா நம்ம கேஸ் லிஸ்ட்ல இருக்காறா?”, அர்ஜுன்.
“இல்ல சார். அவருக்கு ஓரளவு நல்ல இமேஜ் தான் இருக்கு. எந்த இல்லீகல் ஆக்டிவிட்டீஸ்ம் இருக்கறதா இப்பவரை கம்ப்ளைண்ட் இல்ல. பக்தி அதிகம் கோவிலுக்கு நிறைய டோனேசன் பண்ணுவாருன்னு பேர் இருக்கு”, கதிர்.
“சரி அவர் டொனேட் பண்ண கோவில் லிஸ்ட்ம் ரெடி பண்ணுங்க. நாளைக்கு நீங்க நான் சொல்றப்ப ஹோட்டலுக்கு உள்ள வரணும் வேற கெட்டப்ல. அதுக்கு ரெடி பண்ணிகோங்க”, அர்ஜுன்.
“சரி சார்”, கதிர்.
“கிளம்புங்க”, அர்ஜுன்.
அர்ஜுன் மேலும் சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு சாப்பிட்ட பொருட்களுக்கு பில் கட்டிவிட்டு நடந்தான்.
அந்த ஹோட்டலின் பின்பக்க தெருவிற்கு சென்றான். மிக பிரம்மாண்டமான ஹோட்டல் தான். 5 ஸ்டார் தரம் பெற தேவைப்படும் அத்தனை வசதிகளும் இருந்ததோடு இரண்டு பக்க தெருவையும் ஆக்கிரமித்து பிரம்மாண்டமாக இருந்தது. அந்த ஹோட்டலுக்கு பின் சிறிய வனப்பகுதியும் இருந்தது. அத்தனை எளிதில் யாரும் அந்த தெருவில் நுழையமுடியாதபடி செக்யூரிட்டி அங்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். போனில் பேசுவதை போல அங்கும் இங்கும் தெருமுனையில் நடந்து இவையனைத்தையும் மனதில் குறித்துக் கொண்டான்.
அங்கிருந்து ஹோட்டல் நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஹோட்டலில் உட்புகும் சமயம் ஆர்யன் அங்கிருந்து வெளியேறினான்.
ஓரமாக நின்று ஆர்யனை எடைப் போட்டான் அர்ஜுன். இதுவரை அவனை இவன் கண்டதில்லை ஆனாலும் மனதில் ஏதோ நெருடலாகவே இருந்தது சித்தேஷ்யோகி எனும் பெயரை கேட்டதிலிருந்து. ஆர்யன் சென்றபின் தன் அறைக்குச் சென்றான் அர்ஜுன்.
“வா அர்ஜுன் . சாப்பிட ஆர்டர் பண்ணி இருக்கேன். உனக்கு என்ன வேணும்?”, செந்தில்.
“சப்பாத்தி சிக்கன் கிரேவி பிஸ் பிரை போதும்”, அர்ஜுன்.
“சரி”, எனக் கூறி செந்திலும் ஆர்டர் செய்தான்.
“நான் குளிச்சிட்டு வந்துடறேன் செந்தில்”, அர்ஜுன்.
குளித்து வந்தபின் டின்னர் வர அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.
“என்ன தெரிஞ்சது செந்தில்?”, அர்ஜுன்.
“நாளைக்கு யாத்ரா மாடிக்கு வரா டின்னர்க்கு ஆர்யன் கூட”, செந்தில்.
“ஆர்யன் தான் கடத்திட்டு வந்து இருக்கான். அவன் ஏன் இது எல்லாம் பண்ணணும்? இந்த செட் படம் லா ரொம்ப புதுசா இருக்கு. கடத்திட்டு வந்தா கொடுமை படுத்துவாங்க. இங்க தலைகீழா இருக்கு நீங்க சொல்றது”, அர்ஜுன்.
“ஹாஹா… சிம்பிள் அர்ஜுன் யாத்ரா ஆர்யனை கவுத்துட்டா. ஆனா எப்படின்னு தெரியல. இன்னும் அவள தனியா ஆளுங்க நடுவுல தான் வச்சி இருக்கான். ஆனா அவ கேக்கறது எல்லாம் செய்யவும் ஆர்டர் போட்டு இருக்கான். நாளைக்கு நாம யாத்ராவ பாக்கணும் “, செந்தில்.
ஏனோ அர்ஜுனுக்கு ஆர்யன் மேல் பொறாமை எழுந்தது அவளுடன் டின்னர் என்றதும். அதை மனதில் மறைத்துக் கொண்டு சிந்திக்கத் தொடங்கினான்.
பின் கதிர் கூறிய விஷயங்களையும் செந்திலிடம் பகிர்ந்துக் கொண்டான்.
“என்ன பேரு சொன்னீங்க?”, செந்தில்.
“சித்தேஷ்யோகி”, அர்ஜுன்.
“இந்த பேர எங்கயோ கேட்டு இருக்கேன்”, செந்திலும் சிந்திக்கத் தொடங்கினான்.
பின்னர் இருவரும் தனித் தனியாக அந்த ஹோட்டலின் தளங்களில் நடைபயில்வதை போல் சென்றனர்.
10வது தளத்தில் செந்திலும் அர்ஜுனும் எதிர் எதிராக நடந்து வந்தனர். அந்த சமயம் லிப்டில் இருந்து ஒரு குழந்தை வெளியே வந்து ஓட ஆரம்பித்தது.
அர்ஜுனிடம் அந்த குழந்தையின் தாய் உதவி கேட்க அவனும் அந்த குழந்தையின் பின்னால் ஓடினான்.
அந்த குழந்தை சட்டென்று யாத்ரா இருந்த அறையில் நுழைந்தது அங்கிருந்த பொம்மைகளைக் கண்டதும்.
பின்னாலேயே ஓடி வந்த அர்ஜுனும் அந்த அறையின் உள்ளே நுழைய யாத்ரா தூங்கும் அறையில் இருந்து வெளியே வர இருவரும் ஒருவர் மேல் ஒருவர் மோதிக் கீழே விழுந்தனர்.
பதறி வந்த ஜான் அர்ஜுனை விளக்கிவிட்டான்.
அர்ஜுன் தன் மேல் விழுந்ததும் யாத்ரா தன்னுள் ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர ஆரம்பித்தாள்.
அர்ஜுன் எழுந்து நிற்கவும் அந்த குழந்தையின் அம்மா உள்ளே வரவும் சரியாக இருக்க அர்ஜுன் அங்கே பொம்மையிடம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி கொடுத்தான்.
பின் யாத்ராவை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு ஜானிடம் சாரி கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.
“யார் இவன்?”, என ஜான் மனதில் நினைக்க யாத்ரா ,” ஜான் யார் இது? இவ்ளோ ஹேன்சம்மா இருக்கான்!” .
“உன் லவ்வர் தான். ஏன் பூவழகி இப்படி அடம் பிடிக்கற? சொன்னா கேளு. இங்கிருந்து போயிடு”, ஜான்.
“என்ன நீ ? நீயே கடத்திட்டு வந்துட்டு இப்ப தப்பிச்சி போன்னு சொல்ற. என்ன திடீர் பாசம் என்மேல உனக்கு?”, யாத்ரா முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள்.
“என்ன பண்ண? நீ செஞ்ச டார்ச்சர்ல பைத்தியம் ஆகிட்டேன். இப்ப போ. பசங்க வரதுக்குள்ள “, ஜான் வெளியே பார்த்துக் கொண்டே கூறினான்.
“சரி இப்ப வந்தான்ல அவன எனக்கு கரெக்ட் பண்ணிவிடு அவன்கூடவே போறேன். இப்ப நான் சாப்பிடணும் பசிக்கிது. நீயும் வா “, என ஜானின் கைபிடித்து அழைத்துச் சென்று அவனுக்கு பரிமாறிவிட்டு தனக்கும் பரிமாறிக் கொண்டு சாப்பிடத் தொடங்கினாள் யாத்ரா.
ஜான் அவளைப் பார்த்து முறைத்தான். அதைக் கண்ட பூவழகி, “நமக்கு சாப்பாடு முக்கியம் பாஸ், சாப்பிடு ”