வாசகருடன் சில நிமிடங்கள் …
1. பெயர் –செங்கிஸ்கான்
ஆகுபெயர், ஆனபெயர், பட்டபெயர், இயற்பெயர், புனைப் பெயர் எல்லாமே செங்கிஸ்கான் தான்.
2. படிப்பு – B.Sc., Mathematics, MBA மேல ஒரு கோடு.
3. தொழில்/வேலை- Medical Representative. Neuro-Psychia segment.
எல்லா வெயிலும், எல்லா மழையும், எல்லா காத்தும் தரிசிக்குற ஒரு வேலை.
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
சரியான வயசு தெரியாது. சிறுவர் மலர், சிறுவர் மணியில இருந்து துவக்கம். ஆனா அந்த புத்தகங்களை தேடிப் போறதுக்கு காரணம், என் தாத்தாகிட்ட கதைக் கேட்டுப் பழக்கமானது தான். இப்போ ஆடியோ நாவலும் வாசிப்புல சேரும்னா, நான் கதை கேட்டதும் அப்படித்தானே.
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?
தொடங்குன புத்தகத்தை முடிக்குற வரைக்குமான சூழல் மட்டுமே தான் என் வாசிப்பு. அது எழும் போது, சாப்பிடும் போது, தூங்கும் போதுனு போயிட்டே இருக்கும். தொடங்குற நேரம் மட்டும் தான் கேள்விக்குறி.
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
கடந்த காலத்துல இருந்து இப்போது வரை மொத்தமாக பார்த்தால் புத்தகங்கள் தான் அதிகமா இருக்கும். எதிர்காலத்துல கண்டிப்பா கணினியா தான் இருக்க முடியும். ஏன்னா, இப்போ அதிகமா இ.புக் தான் படிக்க முடியுது.
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
அதிகமாக புத்தகங்கள் வாங்குவது இல்லை. மூடப்பட்ட பெரிய நூலகத்தில் இருந்த அத்தனை புத்தகங்களும் அப்பாவின் நண்பர்கள் குழுவில் சுற்றிக் கொண்டே இருப்பதால், வீட்டில் எப்போதும் புத்தகக் குவியல்கள் இருந்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் ஒரே வாரத்தில் ஐந்து புத்தகங்கள் வரையிலும், சில நேரங்களில் புத்தகங்களில் சிலந்திகள் இடம் பிடிக்கவும் நேரிடும்.
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
என்னுடைய பயணப் பொழுதுகளில் துணையாகவும் சுமைகளை குறைப்பதுமாய் இருப்பது EBook மட்டுமே. எண்ணவோட்டத்திற்கான அத்தனை வகை புத்தகங்களையும் உள்ளங்கயில் கொடுப்பது Ebook மட்டும் தான். மரங்களை பாதுகாப்பதும் நம் கடமை தானே. முழுமை பெறும் உணர்வுகளெல்லாம் எழுதியவரின் எழுத்துக்களில் தானே ஒழிய எழுதிய ஊடகத்தில் இல்லை. இதையெல்லாம் தாண்டி, நாமெல்லாம் எழுந்தது கூட இந்த ebook காலத்தில் மட்டுமே தானே.
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
என் பொழுதுகளை அழகாய் மாற்றியதில் பெரும் பங்கு புத்தகத்திற்கு மட்டுமே உண்டு. மற்ற எல்லாமே தற்காலிகம் தான்.
இதில் நான் தாக்கம் என்பதை உணராமல் இருந்த போது, சக மனிதர்களிடமோ அல்லது ஏதோ ஒரு சூழ்நிலையிலோ நம்மின் அணுகுமுறையின் வேறுபாடு தான் வாசிப்பின் தாக்கமாக இருக்குமோ என்றெண்ணினேன்.
ஆனால், தேர்ந்த வாசகர் அல்லது எழுத்தாளரின் சில செயல்பாடுகளை காணும் போது, வாசிப்பில் தாக்கம் என்ற ஒன்று உண்டா இல்லையா என்று மீண்டும் கேள்விக்குறியாக தோன்ற செய்கிறது.
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
எல்லாமே மாறிக்கொண்டே தான் இருக்கும். வயது, அனுபவம், சூழ்நிலை என்று காரணங்களுக்கு ஏற்றவாறு. அதில் எந்த மாற்றம் வாசிப்பில் நிகழ்ந்தது என்பது புரியாத ஒன்றுதான். கடந்து பழகுவதும், மறந்து பழகுவதும் இருக்கும் வரை வாசிப்பின் வேறுபாட்டை எங்கணம் உணர்வது.
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
வாசிப்பு தொடங்கிய காலங்களில் வெள்ளைப் பக்கத்தை தவிர மற்ற அத்தனையும் வாசிப்பேன். பின்பு எனை ஈர்த்த ஆசிரியர்களின் எழுத்துக்களின் பின்னால் திரிந்தேன். இப்போது பிரத்யேக பரிந்துரைகள் மட்டுமே என்னை வாசிக்க வைக்கிறது.
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு வகையான புத்தகங்களை தேடித் திரிந்து படித்த பொழுதுகளில், சில வகை புத்தகங்கள் விடுபட்டவைகளாக ஆகின. எழுத்தாளர் ராகவனின் புத்தகங்களை (மாயவலை) வாசிக்கும் போதுதான் எந்தவகை புத்தகங்களையும் வாசிக்க வைக்கும் ஆர்வத்தில் எழுத முடியும் என்று தெரிந்தது. இருப்பினும் காட்சிகள், உரையாடல்களின் ஊடே எண்ண ஓட்டங்கள் கலந்து இருப்பது எனது மனதை அதிகம் ஈர்க்கின்றன.
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
தயக்கங்களும், குழப்பங்களும், சந்தேகங்களும் நிறைந்த சூழலில், நல்ல ஒரு வெளிப்படையான நட்பாக தெரிவது எழுத்தாளர்களின் எழுத்துக்கள் தான். மூடி கிடக்கும் ஆயிரம் சிப்பிகளில், உள்ளே முத்தை சுமக்கும் பொக்கிஷங்களை எழுத்துக்களில் இனம் காண முடிகிறது.
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
எண்டாமூரி வீரேந்திரநாத் அவர்களின் ‘பதியன் ரோஜா’ புத்தகம். மரணத்தின் தேதி தெரிந்த மனிதனின் ‘வாழ்க்கையை எதிர்நோக்கும் பக்குவத்தை’ தன் எழுத்தால் நிறைத்திருப்பார். அதன்பின்னே வந்த திரைப்படங்கள் கூட அந்த அளவிற்கான தாக்கத்தை இன்னும் தந்த பாடில்லை.
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
அன்று இன்றென்று பிரித்தறிவது வயதை வைத்தா அல்லது எழுத்துக்களை வைத்தா!?
வயதுதான் என்றால், என் கண்களுக்கு ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், தமிழ்வாணன் etc எல்லாம் எப்போதும் இளமையானவர்கள் தான். மதன் கார்க்கி, தாமரை, யுகபாரதி எல்லாம் எழுத்தில் முதிர்ந்தவர்கள் தான்.
எனில், நான் எவ்வாறு அன்று இன்றென்று பிரித்தாள்வது. ஒருவேளை என் அறிவுக்கு எட்டாதபடியால் சங்ககால எழுத்தையும், மரபு கவிதைகளையும் அன்றென்று சொல்லி விடுவேனேயானால் இன்றய இலக்கியவாதிகளையும், மரபு கவிஞர்களையும் ஏதேன்று சொல்வது.
என்னை பொறுத்தவரை எழுத்தில் அன்று, இன்று என்று இல்லாமல் அத்தனையையும் பாதுகாத்திட வேண்டும், படித்திடவும் வேண்டும்.
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
நம்மோட கருத்துக்களை, அனுபவங்களை, உணர்வுகளை பரிமாறிக் கொள்வதற்காக உருவான மொழி, கால போக்கில் அந்தந்த சமுதாயத்தோட அடையாளமாவும் அவங்க கலாச்சாரத்தை தாங்கி நிற்பதாகவும் மாறி இருக்கு. இன்னும் சொல்லணும்னா, ஒருவர் பேசுற மொழியின் விதம் தான் அவரோட பண்பை கூடத் தீர்மானிக்கிறது.
அப்படிப்பட்ட மொழிக்கு ஒளி உருவம் கொடுக்குறது எழுத்துக்கள் மட்டும் தான். அது எவ்வளவுக்கெவ்வளவு எழுதப் படுதோ அந்த அளவுக்கு அந்த மொழி உயரும். தமிழோட வளர்ச்சிக்கும் இயல், இசை, நாடகத்தின் பங்கும் இருக்குது. அதனால கதை, கவிதை, கட்டுரைனு ஏது வருதோ அதை எழுதிட்டே இருக்கணும்.
புதிய பொருட்களுக்கு காரணப் பெயர்கள், வினைபெயர்கள்னு இருந்த தமிழ் மொழியில, இந்த காலத்து அறிஞர்கள் கூட்டு முயற்சியில அர்த்த பெயர்கள் சூட்டிட்டு வராங்க. இது ரொம்பவும் வரவேற்க கூடியது.
எழுத்துக்கள் இல்லாத பல மொழிகள் அழிஞ்சு போயிருக்கு. இப்பவும் சில குறுமொழிகள் எழுத்துக்கள் இல்லாமலும் பேச்சு வழக்குல தொடர்ந்து இருக்குறது ஆச்சர்யம் தான். அதையும் பாதுகாத்திட துணைபுரியலாம்.
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி” இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
செந்தமிழ்ல நான் இன்னும் செம்மை பெறல. வழக்கு மொழி தான் அதிகமா கையாள்கிறேன்.
பேச்சு மொழியும், வட்டார மொழியும் இன்னும் சிறப்பு. இலங்கை, திருநெல்வேலி, கோயம்பத்தூர், மதுரை, பாலக்காடு, சென்னை இன்னும் சில உரையாடல்கள் நமக்கு ஒரு நெருக்கத்தை கொடுப்பதை உணர்ந்து இருக்கேன்.
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
வரலாறு கண்டிப்பா பிடிக்கும். செங்கிஸ்கான் பத்தி கூட மூனு விதமான புத்தகங்கள் படிச்சு இருக்கேன். படிச்ச வரலாறு புத்தகங்களோட வரிசை நிறைய போகும். பிடிச்ச புத்தகங்களையும் ஒற்றைப் படைல சொல்ல முடியாது.
வேணும்னா ஜவஹர்லால் நேரு எழுதின உலக சரித்திரம் புத்தகம் நான் பரிந்துரைக்கிறேன். உலகத்தோட எல்லா வரலாற்றையும் பெட் டைம் கதை மாதிரி சின்னச் சின்னதா தன்னோட பொண்ணுக்கு எழுதின கடிதத்தோட தொகுப்பு தான் அந்த புத்தகம். அவர் சிறையில் இருக்கும் போது. வரலாறு இதுவரை படிக்காதவங்க அங்க இருந்து ஆரம்பிக்கலாம். அப்பறம் மதனோட வந்தார்கள் வென்றார்கள்-ம் வாசிக்கலாம்.
அம்பேத்கார், வேலுநாச்சியார், புலித்தேவன், குற்றப் பரம்பரை, உத்தம்சிங், களப்பிரர், டாலர் தேசம் இது எல்லாம் தெரிஞ்சு இருக்கணும்னு என்னோட அபிப்ராயம்.
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
எல்லாக் கதைகளும் குடும்பத்துல ஆரம்பிச்சு காதலத் தாண்டி தான் சமுதாயம் பக்கம் போகும். இந்த உலகம் ரொம்ப பெருசு. அதனால, சின்ன வட்டத்தோட நிக்காம செவ்வாய் கிரகம் வர நம்ம எழுத்தை கொண்டு போனா கொஞ்சம் நல்லா இருக்கும். அதே சமயம் வித்தியாசமான கதைக்களமா இருக்க மாதிரி கூட குடும்ப, காதல் கதைகள் எழுதலாம்.
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
நான் அதிகம் விரும்பியது வித்தியாசமான கதைகள் தான். நான் எழுதின கதைகள்ல கூட பாதி அறிவியல் சார்ந்ததுதான்.
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
காலநிலைக்கும் வேலை பளுவுக்கும் ஏற்ப மாறும். இப்போதைக்கு நான் பண்ணுறது தினமும் காலைல எழுந்த உடனே குறைந்த பட்சம் ஒரு கவிதை வாசிப்பது. மத்தபடி யோசிச்சா, ரொம்ப கம்மி தான். கடைசியா வலசை போகும் விமானங்கள் படிச்சேன்.
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
இன்னைக்கு சூழ்நிலைக்கு பிடிச்சு இருந்தா பரிந்துரை செய்வேன். இல்லனா அப்படியே விட்ருவேன். மதிப்பீடு இருக்குற பட்சத்துல எல்லாருக்கும் எழுதின முனைப்புக்காகவே முழு மதிப்பீடு செய்வேன்.
முன்னெல்லாம் எழுத்து பிழையும், தவறான கண்ணோட்டப் பிழையும் மட்டும் சுட்டிக்காட்டுவேன். ஆனா நிறைய பேருக்கு ஏற்றுக்கொள்ள மனபக்குவம் இருக்குறதில்ல. அதனால விட்டுட்டேன்.
ஆனா கதை நிகழ்வையோ, அவங்க கருத்தையோ மாத்திக்க சொல்லவே மாட்டேன். நமக்கோ, இல்ல வேறு சிலருக்கோ பிடிக்காதது எங்கோ ஒருத்தருக்கு பிடிக்க வாய்ப்பு இருக்கு. அது போல எழுத, எழுத அவங்களே நிறைய கத்துப்பாங்க. நாம சொல்லித் தரணும், மாத்தணும்னு எந்த அவசியமும் இல்ல.
நல்லா இருந்தா தொடர்ச்சியா படிப்போம். இல்லனா அவங்கள படிக்குறத நிறுத்திப்போம். குறை சொல்லாம, நல்லதா நாலு வார்த்தை சொல்லி இன்னும் எழுத வைப்போம். எல்லாம் நல்லபடியாவே நடக்கும்.
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
பதியன் ரோஜா
மெலுஹாவின் அமரர்கள்
அந்தர் முகம்
சுகுமாரன் கவிதைகள்
ஆந்தை விழிகள்
அறிந்ததினின்றும் விடுதலை
முடிவிலியாய்
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள் என்ன?
நான் எல்லாத்தையும் மறந்துருவேனே. பெயர்கள், வருடங்கள் இது எல்லாம் அடிக்கடி மறந்துருவேன். பொன்னியின் செல்வன் கூட படம் பார்க்கும் போது தான் கதை ஞாபகம் ஒன்னு ஒன்னா வந்துச்சு.
ஜென் கதைகள் படிக்க ஆரம்பிக்கும் போது ஏதோ புதுசா உணரந்த அனுபவம் வந்து இருக்கு.
சில வரலாறுகள் படிக்கும் போது, இதுவரை நமக்கு பாடப் புத்தகம் வழியா ஏதோ சொல்லி தந்து திணிக்க பட்ட பொய்யான பிம்பம் இருப்பதையும் புரிஞ்சுக்க முடிஞ்சது.
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
தினம் தினம் புதுசா ஒரு நபர பார்க்க முடியுது. அவ்ளோ எழுத்தாளர்கள் சேர்ந்து இருக்காங்க. நம்மோட தலைமுறை ஏதோ ஒன்றுக்கு ஆரம்பமா இருப்பாங்கன்னு நிச்சயம் நம்புறேன்.
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களை கொண்டாட மறுக்கும் காரணம் என்ன?
எனக்கு அப்படி தோணல. வாசகர்களின் எண்ணிக்கை கண்டிப்பா மாறுபடும் அதுல மாற்றுக் கருத்து இல்லை. ஆனா, எந்த ஆசிரியர் புத்தகம் அதிகம் வரவேற்பு பெறுகிறதுனு இப்போ நாம நினைக்கிறமோ, அவங்களும் “அச்சோ நம்ம புத்தகம் சரியா போகலையே”னு நினைச்சு அத கடந்து வந்தவங்களா தான் இருப்பாங்க.
போன ஆண்டு விருது வாங்கிய ஒரு ஆங்கில நாவல் ஆசிரியர் (பேரு மறுபடியும் மறந்துட்டேன்) தன்னோட ஐம்பத்தி எட்டாவது புத்தகத்திற்கு அவ்விருது பெற்றார். அவர் பேசும் போது ஐம்பத்து ஏழு தடவையும் நிராகரிக்கப் பட்டு இப்போ தான் இங்க வந்து இருக்கேன். நீங்களும் தொடர்ச்சியா எழுதிட்டு மட்டும் இருங்கனு சொன்னார்.
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
*எண்டமூரி வீரேந்திரநாத்
கதையின் நகர்வு தன்மை, முன்னிலைனு கலந்தே நகரும். என்னோட favt.
*ராஜேஷ் குமார்
சிறுகதைல இருந்து நாவல் பக்கம் என்ன வர வைச்சவர். இப்போதான் தமிழ் சினிமா வித்தியாசமான screenplay பண்றாங்க. அவர் அப்போவே பண்ணவரு. போன வருஷம் அவர்கிட்ட உங்க புத்தகங்கள்ல உங்களுக்கு பிடிச்சது எதுன்னு கேட்ட போது, அவர் சொன்னது ஆன்மிகம் சம்மந்தமா எழுதின ஒற்றை புத்தகத்தை. ரத்தம் தெறிக்க தெறிக்க எழுதின ஆசிரியர் குள்ள சாந்த சொரூபம்.
*சாண்டில்யன்
வர்ணனை. கல்கி விட இவர் மேல எனக்கு பிரியம் ஜாஸ்தி.
*ஜெயகாந்தன்
எழுத்தாளர் மட்டுமில்ல. எனக்கு பிடிச்ச சிந்தனைவாதி.
*J கிருஷ்ணமூர்த்தி
இவர் நிஜமா மனுசபிறவி தானானு யோசிக்க வைச்சவரு. இவர் எழுத்துக்கள இப்போ வர புரிஞ்சுக்க அவ்ளோ கஷ்டமா இருக்கு. ஏற்றுக்கொள்ளவும் கஷ்டமா இருக்கு. ஆனா, நான் உடைஞ்சு போன சமயத்துல இவர் எழுத்துக்கள் தான் எனக்கு உதவுச்சுனு சொல்லுவேன்.
*பா. ராகவன்
எந்த வகை புத்தகத்தையும் படிக்க எளிமையா ஆக்க முடியும்னு எனக்கு நிரூபிச்சவர்.
*ஜனனி
உணர்ச்சிபூர்வ காதல்.
*லேனா தமிழவாணன்
எளிமை, இனிமை. ஆந்தை விழிகள், மஞ்சள் புள்ளி போட்ட கழுத்துப் பட்டை ரொம்ப பிடிச்ச புத்தகங்கள்.
தற்போதைய எழுத்தாளர்கள் நம்ம நட்பு வட்டாரமே சொல்லிறேன்.
சாய்வைஷ்ணவி – என்னை வியக்க வைச்ச கவிதைகள்.
அர்பிதா – Fantasy Queen.
ஆலோன் மகரி – விடாமுயற்சி, கவிதைகள், கதை மாந்தர் பெயர்கள்.
இணைய காதலி – அறம்.
செழிலி – குட்டிக் குட்டி சம்பவங்கள் வைச்சு கதை சொல்றது. என்னை மாதிரியே.
லக்ஷனா – கவிதை ஆழத்திற்கு நிறைய வரிகள் தேவை இல்லைனு எனக்கு சொல்லி குடுத்தவர்.
பூகா – ப்ரதிலிபில என்னோட முதல் ரசிகை. நிறைய ஊக்குவிச்சவங்க. இவங்க கவிதை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நித்யா மாரியப்பன் – திருநெல்வேலி ஸ்லாங்ல ஒரு சிறுகதை.
சுரா – Recent poems.
ஷிஜோ – உணர்ச்சிபூர்வமான கட்டுரை எழுத்தாளர்.
Tanisha amy – கதை மொத்தத்தையும் கவிதையா எழுதுறவங்க.
தேனிலா – கனவுக் காதலன்.
மகிமகள் – கவிதை நாயகி.
நந்தியா – வர்ணனை செம்மையா பண்வாங்க. எனக்கு குரு. அவங்க வர்ணனை பார்த்திட்டு மேகவதி-னு சொல்லிருக்கேன்.
பானுரதி – போட்டோக்ராபர். ஸ்ரீலங்காவ எழுத்து மூலமா கண்ணுல நிறுத்தினாங்க.
மேகலா – பாசக்கார எழுத்தாளர்.
தா ரா – தன்னம்பிக்கை எழுத்தாளர்.
கோமதி சம்யுக்தா – கவிதை மழை.
தாரிகா – கவிதைக் கொஞ்சல்.
மத்த நட்புகள் விடுபட்டதுக்கு உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சுக்கோங்க.
நந்தினி நீயும் மன்னிச்சுரு. ஐந்துன்ற வரைமுறை தாண்டி இருப்பேன். பொதுவா எழுத்துக்கும், எழுத்தாளர்க்கும் வரைமுறை இருக்க கூடாதுனு நினைக்கிறன்.
இப்போலாம் கவிதை போட்டின்னு சொல்லி வரிகள், வார்த்தைகள், கற்பனைகள்னு எல்லாத்துக்கும் வரைமுறை குடுக்குறாங்க. ஹைக்கூ இல்லனா மத்த எழுத்துக்களுக்கு அது சரி தான். ஆனா புதுக்கவிதைய வரைமுறைக் குள்ள ஏன் கொண்டு வரணும்னு நினைக்கிறாங்களோ. சும்மா தோணுச்சு சொன்னேன்.
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
புதுமை. மொதல்ல நாயகன், நாயகி, வில்லன்னு எழுதுறத மாத்தணும். நாம சந்திச்ச பிரச்சனைகள எழுதிட்டு, அத தாண்டிய உலகத்தையும் எழுத உத்வேகிக்கணும். அதுக்கு நிறைய வாசிக்கணும். கதை மாந்தர்களோட இரு பக்க எண்ண ஓட்டமும் எழுதணும். இரு பக்கமும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும்.
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
07/12/2022 புதன்கிழமை. எதுக்காகனா, இன்னைய தேதி வர பெண்கள் மேல அடக்குமுறை இருந்துட்டு தான் இருக்கு. அதையும் தாண்டி நிறைய எழுத்தாளர்கள் சாதிச்சும் இருக்காங்க. அந்த அடக்குமுறை தான் அவங்கள குடும்பம், காதல் குள்ள சிக்க வைச்சு இருக்கலாம். ஆனா இப்போ முகநூல்ல நிறைய பெண்கள் உலக அரசியல் பேசுறது ரசிக்க வைக்குது. இன்னும் சில வருசங்கள்ல உங்களோட இந்த பேதமை கேள்விக்கு இடம் இருக்காது.
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
ஆட்டோகிராப் இல்லை. ஆனால் ஒரே மேடையில் லேனா தமிழவாணன், பட்டுக்கோட்டை பிரபாகர், நிகரன், N C மோகன்தாஸ் இவங்கள ஒன்னா சந்திக்குற சந்தர்ப்பம் கிடைச்சது.
அதுல லேனா தமிழவாணன் என்னோட முதல் புத்தகத்தை எனக்கு வழங்கினார். என் பெயர் பிடிச்சுருக்குனு சொல்லி வாழ்த்தினார். அடுத்த முறையும் சந்திப்போம் இன்னும் எழுதுங்கனு சொன்னாரு. எனக்கு பேச்சை வரல.
விழா முடிஞ்சதும் எல்லா நட்பு எழுத்தாளர்கிட்டயும் நிறைய நேரம் பேசிட்டு சுயமி எடுக்கவும் அனுமதிச்சார். ஒரு அவசர வேலைனால என்னால அந்த சந்திப்பு பண்ண முடியல. அடுத்த வாய்ப்புல கண்டிப்பா பேசி அவர் மணிமேகலை பிரசுரம்ல இடம் பிடிக்கலாம்னு இருக்கேன்.
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்கு எப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லாம இருப்பது நல்லதுன்னு நினைக்கிறன்.
சிலர் எதிர்மறைனு நினைக்கிறத நான் எதிர்மறையா பார்க்க மாட்டேன். அதுனாலயே அதிகமா தர்க்கமும், தவறான கண்ணோட்டமும் தான் மிஞ்சுது. அதனால அத நான் குறிப்பிட்டு சொல்ல விரும்பல. கன்பூசியஸ் வாசிக்க ஆரம்பிச்ச பிறகு இதுதான் என்னோட நேர் அல்லது எதிர்மறைனு திணிப்பு பண்றத நிறுத்தி வைச்சுட்டேன்.
இரண்டு புள்ளிகளை வைச்சு இதுல ஆரம்பிச்சு இதுல முடிஞ்சா தான் அது கதையினு சொல்ல மாட்டேன். எத்தனையோ கதைகள் எதிர்மறை முடிவுனால தான் பிரபலமும் ஆகியிருக்கு.
இரவு, தனிமை, சோகம், பிரிவு, மரணம் இது எல்லாமே வாழ்க்கையோட நிகர் பாதி தான். கண்டிப்பா எதிர்மறை இல்லை.
“நீங்கள் தோல்வியென்று
பிரகடனப் படுத்தியதை.,
நான் இதுவே வெற்றியென்று
மார்தட்டி சூளுரைப்பேன் . . .
வாழ்ந்து பார்த்த, பார்க்கும்
அலாதி தைரியம் . . .”
-SK
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
ஹலோ FM ல நான் கேட்ட செல்வாவோட டைரிதான் என்னோட முதல் ஆடியோ கதை. இப்போ தேனருவில நிலா வாசிக்குற கவிதைகள் கேக்குறேன்.
ஆடியோ கதைகள் நீளமா இல்லாம இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லுவேன். நாவல் கூட சின்னச் சின்ன பகுதிகளா குடுக்கலாம்.
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
கண்டிப்பா வரவேற்பேன். இரண்டாம் கதைல வந்து சேர்ந்த வாசகர முதல் கதைக்கு கூட்டிட்டு போகிற யுக்தி. அதுவே கொஞ்சம் வித்தியாசமா ராஜேஷ்குமார், கதை மாந்தர்கள திரும்ப திரும்ப பயன்படுத்துவார்.
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
நிறைய எழுதுங்க. அதைவிட நிறைய வாசிங்க. உங்க எழுத்து பேசப் படவே இல்லனு நினைக்காதீங்க. ஏதோ ஒரு மூலைல ஒரு ஜீவன் உங்க எழுத்த கொண்டாடிக் கிட்டே தான் இருப்பாங்க. முக்கியமா எல்லாவிதமான விமர்சனமும் ஏற்றுக்கொள்ளுங்கள். மறக்காம நல்லா சாப்பிட்டு, நல்லா தூங்குங்க.
“ஜீவித சதுப்பு நிலங்களை கடந்ததும்,
வரப்புகள் பிரித்தாளும் காணிநிலங்கள் தொடரும்.,
எல்லை வாதங்களின் மத்தியிலும்,
ஒற்றையாய் ஒன்றிணைக்கும் வாய்க்கால்களும் ஓடும்.,
முல்லைகள் மருதமாகும் போதும்,
மாற்றுயிரை மறுக்காமல் மண்ணும் உயிர்பிக்கும்.,
கந்தக பூமியை களம் கண்டதும் கதிரறுப்போம்,
சித்தாந்த கனவுகளால் நாமும் . . .”
-SK
செங்கி அவர்கள் வழக்கம் போலவே அவரோட கண்ணோட்டத்தை இங்க அழகா சொல்லி இருக்காரு. அங்கங்க அவரோட குழப்பத்தையும், சந்தேகத்தையும் கூட நம்ம கூட பகிர்ந்து இருக்கார்.
நிறைய புத்தகங்கள் படிக்கர வாய்ப்பு வாய்த்தவர், இதுவே பெரும் பாக்கியம் செங்கி அவர்களே..
நீங்க படிச்ச புத்தகங்கள் வழி உங்களுக்கு ஏற்பட்ட சிந்தனைகளையும், அதன்பின் வந்த கண்ணோட்டத்தையும் எங்களோட பகிர்ந்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சி.
நீங்க பரிந்துரைத்த புத்தகங்கள் எல்லாமே எனக்கு நிஜமா புதுசு தான் ஒன்று இரண்டு ஆசிரியர்கள் தவிர..
ஆசிரியர்கள் கூட நீங்க அவங்க எழுத்துல உணர்ந்த விஷயங்களை கூறியது ரொம்ப அருமை.
வார்த்தை வரைமுறைகள் பற்றி நீங்க சொன்னதை நானும் நிறைய முறை சொல்லி இருக்கேன். உள்ள இருந்து வரும் வெள்ளத்தை அளவீடு வைத்து நிறுத்த முடியாது. ஆனா வியாபார நோக்கத்தில இங்க நிறைய வார்த்தை மற்றும் வரி வரைமுறைகள் தொடர்ந்து உபயோகத்தில் தான் இருந்து வருது. போட்டிகளுக்கு அது தேவையும் கூட..
எதிர்மறை முடிவுகள் பற்றிய உங்க பதில் தைரியமானது தான். இதே தைரியத்தோட உங்க பயணங்கள் தொடரட்டும். இன்னும் நிறைய வாசிங்க .. நிறைய எழுதுங்க ..
இந்த மனம் திறந்த நேர்காணல் கொடுத்ததுக்கு நனி நன்றி.
வாசிப்பை நேசிப்போம் …