37 – மீள்நுழை நெஞ்சே
அன்று காலை துவாரகா மித்ராவுடன் நடைப்பயிற்சி செய்துக் கொண்டிருந்தாள்.
“மித்ரா…. எட்டு போட்டா நல்லா வித்தியாசம் தெரியும்… அது ட்ரை பண்ணுங்களேன்….”, என ஓரிடத்தில் அமர்ந்தபடிக் கூறினாள்.
“எட்டு போட்டா வீட்டுக்குள்ள மட்டும் தான் போட முடியும். இப்படி வெளிய வந்து இளநீர் குடிக்க முடியாது துவா…. அதுக்கு தான் வெளியே வர்றதே….”, எனக் கண்ணடித்துச் சிரித்துக்கொண்டே இளநீரை நீட்டினாள்.
“அது உண்மை தான். நானும் ஒத்துக்கறேன்….”, என இளநீரை பருக ஆரம்பித்தாள்.
“ஹேய் பப்ளிமாஸ்…. அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டியா? ஏங்க துவாரகா நீங்களாவது அவள இன்னும் ஒரு கிலோ மீட்டர் நடக்க வைக்கலாம்ல… அதுக்குள்ள வயிறு நிரப்ப ஆரம்பிச்சிட்டா… நீங்களும் இப்படி நிரப்பிட்டு இருக்கீங்க… “, என முகிலமுதன் வந்து பேசினான்.
“இளநீர் தானே முகில்…. இதுனால வெயிட் ஏறாது…. “
“என்னமோ போங்க… அவளோட சேர்ந்து நீங்களும் வெயிட் போட்டுட்டு இருக்கீங்க இப்ப…. உடம்ப பாத்துக்கோங்க இரண்டு பேரும்”, என முறைத்தபடிக் கூறிவிட்டு தன் ஓட்டத்தைத் தொடர்ந்தான்.
“ஏன் மித்ரா நான் வெயிட் போட்டுட்டேனா?”, என துவாரகா சந்தேகமாகக் கேட்டாள்.
“அவனுக்கு கண்ணு தெரியல துவாரகா… இப்ப பாக்க நீங்க சூப்பரா இருக்கீங்க…. இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க போதும்… நாம ஒல்லியா இருந்தா மட்டும் மாடலா போகப்போறோமா இல்ல ப்யூட்டி யுனிவர்ஸ்ன்னு பட்டம் குடுக்க போறாங்களா? நமக்கு பிடிச்ச மாதிரி ஆரோக்கியமா இருந்தா போதும்….”, எனக் கூறியபடி வீட்டை நோக்கி நடைப் போட்டனர்.
“கடைசி பாயிண்ட் நான் ஒத்துக்கறேன்… அங்க நுங்கு பார்த்தோமே இப்ப இருக்குமா தெர்ல வாங்க சீக்கிரம் போய் பாக்கலாம்”, எனச் சிரித்தபடிக் கூறிக்கொண்டே நடந்தாள்.
“கவலைப்பட வேண்டாம் துவா… நான் ஏற்கனவே பார்சல் கட்ட சொல்லிட்டு தான் வந்தேன். சோ நமக்கு இருக்கும். பொறுமையா நடக்கலாம்… இந்த ரோட்ல மட்டும் தான் இப்ப மரம் நிறைய இருக்கு…. கொஞ்சம் காலை காத்து நல்லா வாங்கிக்கலாம்….. “, என இருவரும் இரண்டு பக்கமும் இருந்த மரங்களை இரசித்தபடி நடக்க ஆரம்பித்தனர்.
இருவரும் இரணப்பட்ட மனதோடு தான் இங்கே வந்தார்கள். இப்போது இருவருமே நல்ல தோழிகளாக மாறிவிட்டனர். கனிமொழியையும் மித்ரா தோழியாக பாவித்துப் பழக ஆரம்பித்துவிட்டாள்.
அன்பரசியிடம் தன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டிய பின்பு துவாரகாவின் மனம் லேசாக உணர்ந்தது. முன் இருந்த இறுக்கமும் இப்போது பாதியாக குறைந்து, வேலை முடிந்த மிச்ச நேரத்தில் எல்லாம் விகாஷ் அவளை முழுதாக ஆட்கொண்டு இருந்தான். அதனால் அவளுக்கு முன்பைப் போல வெறித்துப் பார்க்க நேரம் கிடைப்பதில்லை. மனதில் இருந்த வெறுமையும் கொஞ்சம் அகன்றிருந்தது.
முகிலிடம் சகஜமாக உரையாடாவிட்டாலும் இப்போது ஒன்றிரண்டு வார்த்தைகள் தேவையான போது தயக்கமின்றிப் பேச ஆரம்பித்திருந்தாள்.
இராஜாங்கத்திடமும் சிறிது தயக்கமின்றி சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாள். பத்மினி அவ்வப்போது அவளைத் தனியாக அழைத்துச் சென்று அவளுக்கு தெளிவைக் கொடுக்க முயன்றுக் கொண்டிருந்தார்.
இவர்களின் உபசரனைகளால் அவள் சற்று தன்னைத் தானே மீட்டெடுக்க ஆரம்பித்திருந்தாள் என்று கூறலாம்.
“துவா…. இங்க வாங்க…. “, என பத்மினி அழைத்தார்.
“வரோம் ஆண்ட்டி…. “, எனக் கூறிவிட்டு அங்கே விளையாடிக் கொண்டிருந்த விகாஷை தூக்கியபடி அங்கே வந்தாள்.
“அவனை மொத கீழ இறக்கிவிடு. இப்பதான் அவனே இறங்கி இருக்கான் மறுபடியும் தூக்காதீங்க இரண்டு பேரும்….”, எனக் கண்டிப்பானக் குரலில் கூறினார் பத்மினி.
“ஏன் மினிம்மா…? இவ்வளவு ஸ்ரிக்ட் ஆபீசரா இருக்கீங்க?”, என மித்ரா அலுத்துக்கொண்டு அமர்ந்தாள்.
“உன்னை செல்லம் குடுத்து கெடுத்தது போதும். அவனையும் அப்படி கெடுக்க முடியாது மித்து பொண்ணு…. பத்தாததுக்கு துவாரகாவும் உங்களுக்கு அதிகம் செல்லம் குடுக்கறா….”, என அவளையும் முறைத்தார்.
“அச்சச்சோ… நான் எஸ்கேப் …. “, என எழுந்து உள்ளே ஓடினாள் துவாரகா.
இத்தனை நாட்களில் பத்மினி தேவியிடம் துவாரகாவிற்கு ஆழமான அன்பும், பிணைப்பும் ஏற்பட்டுவிட்டது. யாரின் பேச்சை தட்டினாலும் அவரின் பேச்சை அவளால் தட்டமுடிவதில்லை.
அவளின் தயக்கங்களை எல்லாம் சரியான இடத்தில் சுத்திக் கொண்டு உடைத்துச் சுக்குநூறாகச் செய்துக்கொண்டு இருக்கிறார்.
அவரின் பேச்சும், சிந்திக்கும் விதமும் அவளை அவருடன் இணைந்து செயல்பட வைத்தது இங்கு வந்த இரண்டாவது நாள் முதல்….
அவளின் காயங்களைக் குத்தி கிளறாமல் சீல் பிடித்த இடத்தை மட்டும் வெட்டி எடுத்து சுத்தம் செய்து, மருந்து கொடுப்பதைப் போல தான் அவரின் ஒவ்வொரு செயலும் இருந்தது.
மித்ரா திடமாகக் காட்டிக்கொண்டாலும் அவளும் நொறுங்கி தான் வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்து கசப்பான மருந்தாக அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார் அவர்கள் இருவருக்கும்.
துவாரகாவை மகளாக இராஜாங்கமும் பாவித்து மித்ராவிற்கு தரும் சலுகைகளைக் காட்டத் தொடங்கினார்.
அந்த சமயத்தில் எல்லாம் அவளின் உள்ளம் ஊரில் உள்ள பெற்றவர்களை நினைத்து ஏங்கும். ஆனாலும் அவள் மனதில் பிடிவாதம் கொண்டு இன்றுவரையிலும் பேசாமல் தான் இருக்கிறாள்.
“உனக்கு எதுக்கு இவ்வளவு பிடிவாதம் துவா..? ஒரு தடவை தான் பேசேன்…. “, எனக் கனிமொழியும் பலமுறை கூறிவிட்டாள்.
துவாரகா இதை மட்டும் கேட்பதாக இல்லை. அவள் அண்ணனும் அழைத்தான்.
“துவா…. நீ இல்லாம என் கல்யாணம் நடக்காது.. ஒழுங்கா வந்து சேரு”
“நான் இல்லாம தானே நிச்சயம் நடந்தது. அதே மாதிரி கல்யாணமும் நடக்கட்டும்….”, எனக் கூறி வைத்துவிட்டாள்.
இப்போது பத்மினி தேவி அவளை ஊருக்கு அனுப்பி வைக்கத் தான் விரட்ட ஆரம்பித்திருந்தார். துவாரகாவும் அவரிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டிருக்கிறாள் ஒரு வாரமாக….
இவர்கள் இருவரும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தை மற்றவர்கள் அமைதியாக சிரிப்புடன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“ஏன்க்கா இரண்டு பேரையும் இப்படி பெண்ட் கழட்டற… பாவம் பொண்ணுங்க கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க விடு…. நீ புடிக்கற புடில ரெண்டும் நாட்ட விட்டு ஓடிரும் போல….”, என அன்பரசி அவர்களுக்காக பேசினார்.
“அதான் ஒருத்தி அடுத்த வாரம் போகணும்னு ஆபீஸ்ல ராவடி கட்டிட்டு இருக்காளே…. நான் என்ன சொல்லிட்டேன்னு இப்ப அவ ஓடறா? ஊருக்கு போய் அண்ணன் கல்யாணத்துல கலந்துக்க தானே சொல்றேன்…. “, கோபத்தை அன்பரசியிடம் காட்டினார்.
“அதான் அவ விருப்பப்பட்டா வரட்டும்னு அவங்கப்பா சொல்லிட்டாரே க்கா…. அங்க போனா அவளுக்கு எந்த மாதிரியான சூழ்நிலை ஏற்படும்னு நமக்கும் தெரியுமே….”
“அதுக்காக எத்தனை நாள் அதை விட்டு ஓட முடியும். இவள பெத்தவங்க அங்க இருக்காங்க அத நினைச்சி பாக்கணும்ல? பயந்து பயந்து ஓடிட்டே இருந்தா ஓடிகிட்டே தான் இருக்கணும் அன்பு… எதையும் நேருக்கு நேரா நின்னு சந்திக்கணும்”
“அம்மா…. துவாரகா இன்னும் முழுசா வெளியே வரல… அங்க அவங்க மனசளவுல ரொம்பவே உடைஞ்சி போய் தானே வீட்ட விட்டு வந்தாங்க. அவங்க மனநிலைய பத்தி கவலைபடாம இருந்தவங்க கிட்ட மறுபடியும் ஏன் போய் கஷ்டப்பட சொல்றீங்க?”, என முகிலமுதன் பேச்சில் புகுந்தான்.
“பெத்தவங்க மனநிலை உங்களுக்கு தான் புரியறதே இல்லையே…. நான் என்ன மனநிலைல இருக்கேன்னு உனக்கு மொத தெரியுமா அமுதா?”, என அவனிடம் கோபமாகப் பாய்ந்தார்.
“அக்கா…..”, என அன்பரசி அவரை சமாதானம் செய்ய ஆரம்பித்தார்.
“இதோ பாரு அன்பு… யாரு என்ன சொன்னாலும் சரி… இவன் இந்த வருஷம் கல்யாணம் செய்து தான் ஆகணும். முப்பது வயசு தாண்டிரிச்சி…. குடும்பம்னு ஒன்ன உருவாக்காம யாருக்காக இவன் இராத்திரி பகலா கஷ்டப்பட்டு சம்பாதிக்கணும்? வாழற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் நாம தான் ஏற்படுத்திக்கணும்…. அது இவனுக்கு ஏன் புரியமாட்டேங்குது…..?”
அன்பரசி முகிலமுதனைப் பார்க்க அவன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கைக்கட்டி வாயில் ஒரு விரலை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
அதைப் பார்த்ததும் அன்பரசி அடக்கமாட்டாமல் சிரித்தார். அவர் சிரிப்பது கண்டு பத்மினி முறைக்க அவரிடம் அவனைப் பார்க்க சைகை செய்தார்.
அவன் அமர்ந்திருந்த நிலை அவருக்கும் சிரிப்பை வரவழைக்க, சிரிக்காமல் முகத்தைக் கோபமாகவே வைத்திருந்தார்.
“என்ன மினி பேபி காலைலயே ட்ரில் ஆரம்பிச்சிட்டியா? இவன் ஏன் இப்படி உக்காந்திருக்கான்?”, எனக் கேட்டபடி ராஜாங்கமும் அங்கே வந்தார்.
“ட்ரில் குடுத்துட்டாலும்… அத இவங்க எல்லாம் செஞ்சிட்டாலும்…. நான் அடுத்த வேலைய பாக்க போறேன்… இந்த வாரம் நான் துவாரகா அண்ணன் கல்யாணத்துக்கு போறேன். வரவங்க வாங்க…. இல்லைன்னா நான் தனியா போயிக்கறேன்….”, எனக் கூறிவிட்டு உள்ளே சென்றார்.
“என்னாச்சி அன்பு? “, என நடந்து செல்லும் தன் மனைவியின் முகவாட்டத்திற்கானக் காரணத்தைக் கேட்டார்.
துவாரகாவின் அடம், பத்மினியின் அறிவுரை, முகிலின் பிடிவாதம் என்று அனைத்தும் கூறிமுடித்தார்.
“துவாரகா பயப்படறா தான்…. அவ பயத்த போக்க அவ அங்க போனா தானே முடியும். இவனுக்கு எல்லாம் நான் ஒன்னும் சொல்ல முடியாது… நான் குன்னூர் போயிட்டு வரேன் அன்பு… நீ ஊட்டி எஸ்டேட் கணக்கு பார்க்கணுமா?”, எனக் கேட்டார்.
“ஆமா அத்தான். அடுத்த மாசம் போனா ஒட்டுக்கா இன்னும் இரண்டு மூனு வேலைய முடிச்சிக்கலாம்…. நீங்க குன்னூர் போயிட்டு எப்ப வருவீங்க?”
“சாயந்தரம் வந்துடறேன் அன்பு…. முகில் ஃபேக்டரில இன்னிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு பாத்துக்கோ…. நான் கெளம்பறேன்”, எனக் கூறிவிட்டு மனைவியைத் தேடிச் சென்றார்.
துவாரகா குளித்துத் தயாராகி கீழே வந்தாள். ஆபீஸ் ஆவணங்கள் சகிதமாக அவள் வருவது கண்டு இராஜாங்கம் மனதில் பூரிப்புக் கொண்டார். வேலை என்று வந்துவிட்டால் அதில் துவாரகாவின் ஆளுமை கலந்த தோரணையை அவர் மிகவும் இரசித்தார். தனக்கு மகள் ஒருத்தி பிறந்திருந்தால் இவளைப் போல இருந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் தான் என்ற எண்ணம் மீண்டும் அவருக்கு வந்தது.
“குட் மார்னிங் மை டியர்….”, என அவளுக்கு காலை வாழ்த்து கூறினார்.
“காலை வணக்கம் அங்கிள்…. இன்னிக்கு எப்படி போச்சி உங்க லாஃப்விங் க்ளப்?”, எனக் கேட்டபடி அவருக்கு தண்ணீர் ஊற்றிக் கொடுத்தாள்.
“வழக்கம் போல சூப்பர் துவாரகா…. நீ தான் வரமாட்டேங்கற.. ஒரு தடவை வாயேன்…. அன்னிக்கு பாத்தியே அந்த மீசை தாத்தா.. அவரு உன்னை கேட்டாரு….”, என இருவருக்கும் பேச்சு ஸ்வாரசியமாக ஆரம்பமானது.
“அவரா… அன்னிக்கே என் காது போயிரிச்சி அங்கிள் அப்படி பேசறாரு…. மறுபடியும் அந்த அறுவை எல்லாம் தாங்கற சக்தி எனக்கில்ல ….”, எனக் கூறிவிட்டு வசந்தியை அழைத்தாள்.
“வசந்திக்கா…. எனக்கு டிபன் கொண்டு வாங்க.. நான் ஆபீஸ் சீக்கிரம் கிளம்பணும்”, என உள்ளே குரல் கொடுத்தாள்.
“இப்பவே வா? ஏன் இத்தனை சீக்கிரம் கிளம்பற துவாரகா?”, என மணியை பார்த்தபடிக் கேட்டார்.
“டெஸ்டிங் செய்யாம ஏமாத்திட்டே இருக்காங்க அங்கிள் … இப்பவே போனா கொஞ்சம் பேசி செய்ய வச்சிடலாம்னு தான்….”, எனக் கூறிவிட்டு கையில் உள்ள ஆவணங்களை சரிபார்த்தாள்.
“சாப்பிடறப்ப டேபிள்ல என்ன இதுலாம்? அதுல்லாம் அங்க வச்சிட்டு வந்து சாப்பிடு…”, என முறைத்தபடிக் கூறிவிட்டு அவளுக்கு தட்டு எடுத்து வைத்தார் பத்மினி தேவி.
அவளும் சமத்தாக தலையாட்டிவிட்டு அனைத்தையும் கொண்டுச் சென்று சோபா அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டுக் கை கழுவிக்கொண்டு வந்தாள்.
அவளுக்கு பிடித்த ராகி களியும், மட்டன் குழம்பும் தட்டில் இருந்தது. இங்கு வந்த பின் அவளின் கிராமத்து உணவு முறையை இவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிட்டாள் துவாரகா.
அவள் கூறிய ரெசிபிக்கள் எல்லாம் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க அதையே வாரத்தில் ஏழு நாளும் ஒரு வேலை உணவாகவாவது இருக்குமாறு பார்த்துக்கொண்டனர் அன்பரசியும், பத்மினி தேவியும்.
அதுவும் அசைவத்தில் நிச்சயமாக் அவள் கூறிய ரெசிபி தான் என்று சட்டமே இயற்றிவிட்டார் இராஜாங்கம். இந்த ஒரு மாதத்தில் உணவுமுறை மாற்றத்தினால் அனைவருக்குமே நல்ல முன்னேற்றம் உடல்நிலையில் தெரிந்தது.
விகாஷ் கிராமிய சமையலை விரும்பி உண்ண ஆரம்பித்துவிட அதுவும் அவர்களுக்கு வசதியாய் போனது.
இரண்டு உருண்டை களியுடன் சில மட்டன் துண்டுகளை வேகமாக விழுங்கிவிட்டு எழுந்தவளைக் கையைப் பிடித்து அமர வைத்து மாப்பிள்ளை சம்பா அரிசியில் அரைத்து செய்த இரண்டு கல் தோசையை வைத்தார்.
அவள் அவரின் முகத்தையும், தட்டையும் பார்த்துவிட்டு இராஜாங்கத்தை பார்த்தாள். அவரோ தீவிரமாக செய்தித்தாளில் தலையை நுழைத்துக் கொண்டார்.
“யாரும் சப்போர்ட் பண்ணல தானே…. சாப்பிடு… “, எனக் கூறிவிட்டு உள்ளே சென்றார்.
எத்தனை சாப்பிட்டாலும் செரிமானம் ஆகும் வயதிது. ஆனாலும் வேலை சமயத்தில் கம்மியாக சாப்பிட்டு பழக்கமானவளை பத்மினி உருட்டி மிரட்டி நன்றாக சாப்பிட வைத்துக் கொண்டிருந்தார்.
அதையும் சாப்பிட்டுவிட்டு பத்மினி தேவி வெளியே வரும்முன்னே வீட்டிலிருந்து வெளியே ஓடிவிட்டாள்.
அவள் ஓடுவது கண்ட ராஜாங்கம் சத்தமாக சிரித்துவிட, பத்மினி தேவி முறைக்கவும் கப்பென வாயை மூடிக்கொண்டார்.
அவசரமாக ஆட்டோ பிடிக்க ரோட்டிற்கு சென்றவளை பின்னால் வந்த பைக் இடித்து தள்ளியது……