வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர் – வினுமணிகண்டன் (vinayagakumaramanikandan)
2. படிப்பு – MCA கம்ப்யூட்டர்படிப்பு
3. தொழில்/வேலை – மாஸ்டர் படத்துல விஜய் வேலை பார்ப்பாரே.. personality and skill development trainer
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
நாங்க எல்லாம் 90s கிட்ஸ். பேப்பர் படிக்கும் அப்பா, குமுதம், குங்குமம், வாரமலர் முதல் மளிகை சாமான் கட்டின பேப்பர்ல இருக்குற குட்டிகதை வரை படிக்கும் அம்மா, கவிதைகள் படிக்கும் பக்கத்துவீட்டு அண்ணன் என்ற சூழலில் வளர்ந்தவர்கள்.
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?
பேசுவதற்காக சிறப்பு தகவல்களை புத்தகங்கள் மூலம் படித்து தெரிந்து கொள்வோம், கையில் மொபைல் இல்லாத பொழுது புத்தகத்தை கையில் எடுப்பேன். யாராவது புது நட்பு கதை எழுதி இருக்கிறேன் படித்து பாருங்கள் என்று சொன்னால் படிப்பேன்.
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
தொட்டு பார்த்து புரட்டி காகிதத்தை முகர்ந்து பார்த்து படிப்பதில் சுகம்.. ஆனால் புதுமையை வரவேற்கும் விதமாக mobile வழி வாசிப்பும் உண்டு.
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
குறைந்தது ஐந்து. முன்று வரை படித்து முடிப்பேன்.
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
மேலே சொன்னதுபோல் paperback தான்.. நீங்கள் வைத்திருக்கும் காதல் கடிதங்கள் போல் காதல் குறுஞ்செய்திகள் அவ்வளவு பத்திரமாக இருப்பதில்லை..
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
வாசிப்பு ஒரு மனிதனை நிதானப்படுத்தும். ஒரு புத்தகத்தின் இறுதி பக்கத்தை படித்து முடித்துவிட்டு மூடிவைக்கும்போது இருக்கும் நிறைவு ஏதோ எவெரெஸ்ட் மலையில் கொடி நட்டது போல இருக்கும். அந்த நிறைவை தான் எனது முதல்வாசிப்பு தந்தது.
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
புத்தகங்களில் பல வகைகள் உண்டு. உங்கள் மனசுக்குள் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு தரும் புத்தகங்கள் கண்டிப்பாக நம் எண்ணங்களையும் செயல்பாட்டினையும் மாற்றும். அந்த மாதிரி புத்தகங்கள் என்னை மாற்றியதுண்டு.
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
ஏற்கனவே படித்தவர்களின் விமர்சனங்கள் வைத்து முடிவு செய்வேன். நானாக புதிதாக படிப்பதாக இருந்தால் முதல் இரண்டு பக்கங்களை படித்து பார்த்து முடிவு செய்வேன். அந்த இரண்டு பக்கங்கள் தான் தொடர்ந்து நூறு பக்கங்களை கூட படிக்க வைக்கும்.
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
கவிதை, சிறுகதை பிடிக்கும்.. நாவல் என்றால் துப்பறியும் நாவல், குடும்ப நாவல் பிடிக்கும்..
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
எழுத்து எனக்கு நிறைய உறவுகளை பெற்றுத்தந்துள்ளது. சகோ எனும் ஒரு வார்த்தையில் அன்பை பகிரும் பல எழுத்தாளர்கள் இன்னும் நட்பில் உண்டு.
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
பார்த்திபன் கனவு
இந்த நாவலை எனது கல்லூரியில் பாடமாக வைத்திருந்தார்கள். இந்த நாவலை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரின் முன்பும் படிக்க சொல்லி நடத்துவார். அதை படிக்கும்போதே எனது வாசிப்பு தெளிவானது. வசனங்களை அந்த கதாபாத்திரம் பேசுவதை போலவே பேசி படித்து காண்பிக்க ஆரம்பித்தேன்.. கைதட்டல்களும் பாராட்டும் கிடைத்தபொழுதுகள் மறக்கமுடியாது.
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
அப்போது இருந்த எழுத்தாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களுக்கு என்று ஒரு தனிபாணி இருக்கும். அந்த தனித்துவம் பெயர் போடாத கதைகளில் கூட இவர்தான் எழுதி இருக்கிறார் என்று தெரியும்.. இப்போது உள்ள எழுத்தாளர்களும் தங்களுக்கு என்று ஒரு ஸ்டைலை வைத்துகொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
ஆம். சில எழுத்தாளர்கள் ஒரு சில குறிப்பிட்ட வார்த்தைகளை எவ்வளவு அழகான தமிழில் எழுதலாம் என்று தேடுகிறார்கள். தமிழ் மட்டுமே பயன்படுத்துவேன் என்று உறுதியாக இருக்கிறார்கள். இவர்களால் நாம் மறந்து போன நல்ல தமிழ் வார்த்தைகளை மீட்டு எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி” இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
வழக்கு வட்டார பேச்சுமொழி அந்த கதாபாத்திரத்துக்கு உயிரூட்டி வேறு வேறு முகங்களை அறிமுகப்படுத்தி நம்மனதில் பதியவைக்கும்.. செந்தமிழ் தேன் போன்றது. அதையும் அளவாக படிப்பேன்.
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
ரஜினிகாந்த் மாதிரிதான். பக்கம் எத்தனை என்று பார்ப்பேன். அவராவது பொன்னியின் செல்வனை முழுவதுமாக படித்து முடித்துவிட்டார். நான் அந்த நாவலை திரையில் தான் முதலாக பார்த்தேன்.
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
அடிப்படை எப்போதும் ஒரேமாதிரிதான் இருக்கும். திரைக்கதை போல அதில் ஏதேனும் புதுமை இருந்தால் இப்போது உள்ள நாவல்கள் பலம் பெரும். நீங்கள் உருவாக்கிய கதாபாத்திரம் இன்னும் எத்தனை பேர் நினைவில் நிற்கிறார்கள் என்று கேட்டு பாருங்கள்.
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
ஆம். வாசிப்பேன்.
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
நேரம் ஒதுக்கீடு என்று எழுதுவதிலும் படிப்பதிலும் நான் வைத்தது இல்லை. அது போக்கில் விட்டுவிடுவேன்.
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
கண்டிப்பாக பாராட்டுவேன். பெரும்பாலும் முதல் சந்திப்பிலேயே தவறுகளை சொல்லமாட்டேன். தவறு என்று நான் மட்டும் முடிவெடுப்பது சரியானது அல்ல. அதனால் அவர் எழுத்துக்களை மேலும் வாசிப்பேன்.
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
– சுஜாதாகதைகள்
– புதுமைப்பித்தன்சிறுகதைகள்
– மேத்தாகவிதைகள்
– கி.ரா கதைகள்
– நா.முத்துக்குமார் கவிதைகள்
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள் என்ன?
நா. முத்துக்குமார் எழுத்துகளை படிக்கும்போதே அவரே பக்கத்தில் உக்கார்ந்து சொல்வது போல் இருக்கும்.
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
இரண்டு வருடத்திற்கு முன் எழுதுபவர்கள் குறைவாகவும் படிப்பவர்கள் அதிகமாகவும் இருந்தார்கள். இப்பொழுது எழுதுபவர்கள் அதிகமாகவும் படிப்பவர்கள் குறைவாகவும் உள்ளனர். என் கதையை நீ படி உன் கதையை நான் படிக்கிறேன் என்று பரிமாறிகொள்வது கொஞ்சம் நன்றாகதான் இருக்கிறது.
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களைகொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
நானே அந்த கொண்டாடப்படாத எழுத்தாளர்களின் ஒருவராக இருக்கிறேன் என்ற மனநிலை இன்றும் உள்ளது.
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர்&இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
சுஜாதா
புதுமைபித்தன்
சாருநிவேதிதா
மதன்
கி.ரா
ஆலோன்மேரி
அன்னபூரணிதண்டபாணி
மீராஜோ
இன்னிலா
சசி
வீணாராஜ்
தீக்சிதா
(ஏன் என்றால் இவர்கள் தான் எனக்கு பழக்கம்)
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
முதல் இரண்டு பக்கங்களில் நம்மை கதையோடு ஒன்ற வைக்கவேண்டும். ஏதாவது புதுமை இருக்கவேண்டும்.
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
எழுத்துக்கு பேதமில்லாமல் இருப்பதால் தான் அன்று அவ்வையார் முதல் இன்று ஆலோன் மகரி வரை எழுதி வருகின்றனர். (நம்மல பாராட்டறாங்களா இல்ல …… )
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
சுஜாதா, நா .முத்துக்குமார் அவர்களிடம் வாங்க நினைத்தேன். இருவரும் இப்போது நினைவில் மட்டும் வாழ்கிறார்கள்.. பார்த்திபன் ராதாகிருஷ்ணன் அவர்களிடமும் சத்யராஜ் மற்றும் கௌண்டமணி அவர்களிடம் வாங்க வேண்டும்.
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்குஎப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
முடிவு எதிர்மறையாக இருந்தாலும் வாசகர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அதுவும் சிறந்த முடிவு தான். அந்த எதிர்மறை முடிவை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக மாற்றும் அளவிற்கு எழுத்தாளரின் திறமை இருக்க வேண்டும்
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
ஆடியோ கதைகள் இதுவரை இதுவும் கேட்டதில்லை, கேட்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். குரல் தெளிவாகவும், கேட்கக் கேட்க ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்க வேண்டும்.
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
இரண்டு கதைகளில் ஒரு கதையாவது மக்கள் மனதை சென்றடைந்து விடும் மூன்று கற்பூரத்தை பொருத்தும் பொழுது ஒரு கற்பூரத்தை பற்ற வைத்து மீதி கற்பூரங்களும் பற்றி கொள்வதைப் போல..
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
உங்களுக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கும், உங்களது வாசகர்களுக்கும் ஒரு உறவை எப்பொழுதும் தக்க வைத்துக் கொள்ளுங்கள். இரசிகர்களால் தான் எழுத்தாளர்கள் எழுத்தாளர்களாக இருக்க முடியும், ஆகவே இந்த இடத்தில் உயர்ந்தவர்கள் ரசிகர்களே..
மிகவும் அருமையான உரையாடல் வினு மணிகண்டன் சகோ. ரொம்பவும் ரசிக்கும் படியான பதில்களை நிறைய கேள்விகளுக்கு கொடுத்து இருக்கீங்க. நிச்சயம் இதை படிக்கத்தும் எல்லார் இதழிலும் மென்னகை விரியும்.
ஒரு கதையில் மற்றொரு கதையின் தொடக்கம் பத்தி நீங்க சொன்னது அபாரம். நீங்க personality கூட நல்ல பிசினஸ் கோச்சிங் குடுப்பீங்க போல.. ஒத்துக்கறோம் நீங்க சத்யராஜ் ரசிகர் தான் .. எதுவும் சொல்லாத முடியாத அளவுக்கு எழுத்தாளர் பேதம் பத்தின கேள்விக்கு பதில் குடுத்துட்டீங்க சகோ..
இறுதியா நீங்க சொன்னது போல எழுத்தாளனுக்கு வாசகர்கள் தான் எழுத்தாளன்ங்கற அடையாளத்தை தராங்க..
எழுத்தாளர்கள் பெயரை சொல்லிட்டு கடைசியா இப்டி சொல்வீங்கன்னு எதிர்பாகக்கல சகோ.. இன்னும் நிறைய எழுத்தாளர்களோட எழுத்தை நீங்க படிக்கணும். நீங்களும் நிறைய எழுதணும். நிச்சயம் நேரம் ஒதுக்குங்க வாசிப்பிற்கும், எழுதுவதற்கும்..
நீங்களே வந்து இந்த நேர்காணலில் கலந்துக்கிட்டது மிகவும் மகிழ்ச்சி சகோ. நனி நன்றி.
வாசிப்பை நேசிப்போம்…