43 – மீள்நுழை நெஞ்சே
திடீரென துவாரகா வந்து நிற்பாள் என அப்பத்தா கிழவி நினைக்கவே இல்லை. அவள் இல்லாமலே இந்த திருமணத்தை நடத்திவிட்டு, அவள் மேல் இன்னும் பழிகளை வாரி இரைக்கக் காத்திருந்தார். ஆனால் துவாரகா இப்போது வந்துவிட்டாள். அதை அவர் மூளை உணரவே சிறிது நேரம் எடுத்தது.
மனோஜ் அந்த கிழவியை உசுப்பவும் வாய் திறந்தது.
“எங்கடி போய் ஊர் மேய்ஞ்ச இத்தன நாளா? இன்னிக்கு இங்க எதுக்கு வந்த? இருக்கற கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கலாம்னு வந்தியா? போ டி இங்கிருந்து மொத”, என ஆங்காரமாகக் கத்தியது.
“எங்க போனா என்ன அம்மம்மா சும்மா பளபளன்னு வந்திருக்கா….. யாரு வச்சிருந்தாங்கன்னு கேளு?”, என மனோஜ் கூறியதும் பவானி அவனை அறைந்திருந்தார்.
“யார என்ன வார்த்தைடா சொல்ற? ஊர் மேயற பொறுக்கி நீயெல்லாம் என் பொண்ணப்பத்தி பேச தகுதி கிடையாது…. என் பொண்ணு இத்தன நாள் எங்கிருந்தா? என்ன பண்ணா எல்லாமே எங்களுக்கு நல்லா தெரியும்… இனிமே எவனாவது வாய் தொறந்தீங்க நாக்க இழுத்துவச்சி அறுத்துடுவேன் ஜாக்கிரதை….”, என மிரட்டிவிட்டு துவாரகாவை உள்ளே அழைத்துச் சென்றார்.
“அய்யோ... அய்யோ…. இந்த அநியாயத்தை கேக்க யாருமே இல்லையா? என் பேரனை இப்படி அறைஞ்சிட்டு அந்த ஓடுகாலிக்கு வக்காளத்து வாங்கறாங்களே….. அடேய் அருணாச்சலம் என்னடா நடக்குது இங்க?”, என பின்னால் நின்ற மகனைப் பார்த்து ஒப்பாரி வைத்தது.
“டேய்… இனிமே உன்ன இந்த வீட்டு பக்கம் பாத்தேன் அவ்வளவு தான்… போடா வெளியே…. கொலைகார பொறுக்கி “, என அவரும் அவனை பார்வையால் மிரட்டித் துறத்தினார்.
“அய்யோ அய்யோ…. டேய் அருணாச்சலம் என்னடா இது? என் பேரன இங்க வராதன்னு நீ எப்படிடா சொல்லலாம்? அவன் என் பேரன் டா…. நான் கண்ணுக்கு கண்ணா வளத்தவன்…. அவன் என்னை பாக்க இங்க வருவான் டா…..”
“அப்படின்னா நீயும் உன் பேரனோட போயிடு.. இத்தன நாள் நீ எங்கள பெத்துட்டங்கற ஒரே காரணத்துக்காக தான் பாத்தோம்…. இதுக்கு மேல எதாவது பேசினா நீயும் இந்த வீட்டுக்கு வரமுடியாது பாத்துக்க…..”, என மனோகர் கூறியதும் கிழவி கப்சிப் என வாயை மூடிக்கொண்டது.
துவாரகாவை உள்ளே அழைத்து சென்று அவளுக்கு தன் கையால் சாப்பாடு ஊட்டி விட்டு தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டார் பவானி. அவள் இங்கிருந்து போனதில் இருந்து அவர் உயிரின் ஒரு பாகத்தைத் தொலைத்துவிட்ட உணர்விலேயே தான் இருந்தார்.
தங்கள் மகளைக் காயப்படுத்தி விட்டோம் என்ற நினைப்பே தாய் தந்தை இருவரையும் தூக்கமில்லாமல் செய்திருந்தது.
துவாரகாவின் கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது. இந்த மடிக்காக தானே இத்தனை நாட்களாக ஏங்கினாள். தன் திருமண வாழ்க்கை பிரச்சினை ஆனதும் அவளுக்கு தேவைப்பட்ட ஆறுதலை விட, அவள் தாய் தந்தையை ஆறுதல் படுத்திவிட தான் அத்தனை முயற்சிகளை எடுத்தாள். அதில் ஓரளவு வெற்றியும் கண்டாள்.
நாட்கள் செல்ல செல்ல உள்ளே அழுத்தி வைத்த ரணமும், வலியும் அவளைத் திண்ணத்தொடங்கிவிட்டது.
அவளுக்கான ஆறுதல் கிடைக்கவே இல்லை… அதனாலேயே மனம் இறுகத் தொடங்கி அதுவே பெரும் பாரத்தை மனதில் ஏற்றிவைத்தது.
பல மாதங்களாக ஏங்கிய ஆறுதல் மடி இப்போது கிடைத்துவிட்டது. அதை அவள் மனதார உணர்ந்து தாயின் இடையைக் கட்டிக்கொண்டு உறங்கினாள்.
அருணாச்சலமும், மனோகரும் ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்து துவாரகாவை கண்களில் நிறைத்துக் கொண்டிருந்தனர்.
மாதவி துவாரகாவிற்கு பிடித்த இனிப்பை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார்.
இந்த இரண்டு மாதங்களில் அனைவரின் உள்ளத்திலும் ஒரு மாற்றம் வந்திருந்தது. நிதர்சனத்தை அனைவரும் அவரவர் ஸ்தானத்தில் இருந்து உணர்ந்திருந்தனர்.
“எப்படா அமெரிக்கா போகணும்?”, அருணாச்சலம் தான் பேச்சை ஆரம்பித்தார்.
“வர்ற 25 தேதிப்பா…. “
“அதுக்குள்ளயா? இன்னும் கொஞ்ச நாள் இருக்க முடியாதா துவா?”, மாதவி கேட்டார்.
“இல்ல சித்தி இதுவே பேசி தான் தள்ளி போட்டுட்டு வந்தேன்”
“இதுக்கு மேல ஊர்ல பேசறத எல்லாம் நீ காதுல போட்டுக்காத டா கண்ணு…. நாங்க பாத்துக்கறோம் “, மனோகர்.
“அத நான் எப்பவும் வாங்கினது இல்ல சித்தப்பா… எனக்கு ஒரு இடமாற்றம் தேவைபட்டுச்சு அதான் சொல்லாம கிளம்பிட்டேன். எல்லாரும் அதுக்கு என்னை மன்னிச்சிடுங்க”, எனக் கைக்கூப்பினாள்.
“எங்களுக்கு தான்டா உன் மனசு புரியாம போயிரிச்சி… எங்க நிலைமைய மட்டுமே நினைச்சிட்டோம். உன்னை தேத்தவோ, ஆறுதல்படுத்தவோ எங்களுக்கு தோணாமயே போயிரிச்சி. நீ தைரியமா நின்னத பாத்து நாங்க அத குடுக்க தவறிட்டோம். எங்கள மன்னிச்சிடு டா ராசாத்தி”, என மனோகர் கூறியதும் அவர் வாய் அடைந்தாள்.
“என்ன சித்தப்பா இது பெரிய வார்த்தைலாம்…. விடுங்க… தம்பி தங்கச்சி எல்லாம் எப்ப வராங்க? “, எனப் பேச்சை மாற்றினாள்.
“இன்னிக்கு தான் டா…. போய் கூட்டிட்டு வர தான் கிளம்பினேன் நீ வந்த தகவல் வந்ததும் அப்படியே வந்துட்டேன் …. “
“நீங்க இங்க கல்யாண வேலை பாருங்க நான் போய் கூட்டிட்டு வரேன்…. கார் சாவி தாங்க”, எனக் கேட்டு வாங்கிக்கொண்டாள்.
“இப்பதானே டி வந்த… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்ல”, பவானி கேட்டார்.
“பஸ்ல தூங்கிட்டு தான் வந்தேன் மா… நானும் கனியும் போயிட்டு வந்துடறோம்…”, எனக் கூறிவிட்டுக் கிளம்பினாள்.
“ என்ன மேடம் வீட்டுக்கு வழி தெரிஞ்சிடுச்சு போல ?”, எனக் கேட்டபடி திவாகர் அங்கே வந்தான்.
“அதான் பக்காவா நீயும், பத்மினி ஆண்ட்டியும் பிளான் போட்டு எல்லாத்தையும் செஞ்சிட்டீங்களே திவாகர் சார் ..”, அண்ணனின் தோள் சாய்ந்தபடிக் கூறினாள்.
“என் செல்ல ராட்சசி இல்லாம என் கல்யாணம் எப்படி நடக்கும் ? அதான் நானும் மினி பேபியும் பிளான் பண்ணி உன்ன தூக்கினோம் ..”, தங்கையின் தலையில் மெல்லமாக ஒரு கொட்டு வைத்துக் கூறினான்.
“கொட்டாத டா .. அப்பறம் உயரம் கொறையும் “
“போதும் டி இந்த உயரம் .. இதுக்கு மேல நீ வளர்ந்தா பாக்கறவன் கிட்ட எல்லாம் வம்பு இழுப்ப.. இப்போவே ஊரு முழுக்க பஞ்சாயத்து கூட்டற ..”
“நீ மட்டும் என்னவாம் ?”
“சரி சரி .. போதும் போதும்.. திவா நீ போய் உன் துணி தெச்சி வந்தத போட்டு பாரு .. துவா நீ வந்து உனக்கு எடுத்தா பொடவைக்கு பிளவுஸ் இருக்கா பாரு .. இல்லைன்னா நீ போறப்போ குடுத்துட்டு போயிட்டு, வரப்போ வாங்கிக்கலாம் ..”, என மாதவி அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.
“இதோ மறுபடியும் கிளம்பிட்டா மினுக்கிகிட்டு…. “, என அப்பத்தா கிழவி பேசியதும் பவானி வாய் திறக்க வந்தார். அவரை அமைதியாக இருக்கும்படிக் கூறிவிட்டு துவாரகா பேசினாள்.
“ஏன் அப்பத்தா… எங்கப்பா உன் பையன் தானே?”
“அவன் என் மொத ஆம்பள புள்ள டி….”
“அவர் பெத்த நானு?”
“ம்க்கும்….”, என வக்கணைத்து திரும்பியது.
“என்னைய கட்டி கொடுத்த இடம் எப்படிப்பட்டதுன்னு உனக்கு நல்லாவே தெரியும். ஏன் நீ ஒரு வார்த்தை கூட அதபத்தி சொல்லவே இல்ல?”
“அது.. அது… எனக்கு அந்தளவுக்கு எல்லாம் தெரியாது….”, என மலுப்பியது.
“ஓஹோ…. அப்ப அந்த தெருமொனை வீட்டு கிழவி வந்து பேசினப்ப நீ ஏன் அமைதியா இருந்த? பேச்சையும் அப்படியே மாத்திட்ட…. “
“அவ ஏதோ உளறிட்டு போனா…”
“ஆமா.. உண்மைய உளறிட்டு போனாங்க…. நானும் அன்னிக்கு அங்க தான் இருந்தேன்… பேச்ச எப்படி நீ மாத்தினன்னு எனக்கு நல்லா தெரியும்… நானும் உன் இரத்தம் தானே..? அது உனக்கு கொஞ்சம் கூட ஞாபகமே இல்லைல?”, என நேருக்கு நேராக கண்பார்த்துக் கேட்டாள்.
“…………..”
“இப்ப பதில் பேசு அப்பத்தா….. உன்கிட்ட நான் எப்பவும் பாசத்த எதிர்பாத்தது இல்ல.. எனக்கு வெவரம் தெரியறதுக்கு முன்ன இருந்தே நீ அத குடுத்ததும் இல்ல…. ஆனா இந்தளவுக்கு மனசுல வஞ்சம் வச்சிட்டு இருக்கற அளவுக்கு உனக்கு என்ன நான் கெடுதல் பண்ணேன்?”
“……………..”
“உன் மக வயித்து பேரன போலீஸ்ல புடிச்சி குடுத்தேன்னு தானே இப்படி பண்ண? அவன் ஒரு கொலை பண்ணிட்டு, ஒரு பொண்ணையும் சீரழிச்சி ஏமாத்தி, அவளையும் கொல்ல உன் மகளும் பேரனும் சுத்திட்டு இருந்தாங்க. அவள காப்பாத்தி, அவனையும் இன்னொரு பொட்டபுள்ள சாபத்துல இருந்து காப்பாத்தி விட்டா, எனக்கு நீங்க எல்லாரும் நல்லா செஞ்சிட்டீங்க…. எங்க உன் மக… வரசொல்லு அதையும் நாலு வார்த்தை நல்லா கேட்டா தான் எனக்கு மனசு ஆறும்…..”
“நீ என்னென்னமோ கதை சுத்தாத டி”
“யாரு நானு கதை சுத்தறேன்…. நீயும் உன் மகளும் அவன இன்னும் எப்படி வேணா ஊர் மேயவிட்டு தூக்குல தொங்கவிடுங்க… கடைசில அவன் அப்படி சாவான் இல்லையா எவன்கிட்டயாவது அடிபட்டு தான் சாவான்…. “
“என் பேரன…..”, என வாய் திறக்கும் போது துவாரகா பார்த்த பார்வையில் வாய் மூடியது.
“இங்க பாரு. இது எங்கப்பா சுயமா சம்பாதிச்சி கட்டின வீடு…. நான் இங்க எப்ப வேணா வருவேன் போவேன்…. அத நீ கேக்க முடியாது… தேவையில்லாம இந்த கல்யாணத்துல என்னை வச்சி பிரச்சனை பண்ணலாம்னு நீயும் உன் பேரனும் நினைச்சிருந்தா அந்த நினைப்ப இப்பயே விட்று அதான் உங்களுக்கு நல்லது…. எங்கண்ணன் கல்யாணம் பாக்கறவரை உசுரோட இருக்கணும்னு நினைச்சா வாய மூடிட்டு கம்முன்னு இரு…. இதையும் மீறி எதாவது பேசின நான் என்ன வேணா பண்ணுவேன்… எங்கப்பனுக்கும் யாருக்கும் கட்டுப்படமாட்டேன் பாத்துக்க….”, என அவள் சாட்டையால் அடித்ததைப் போல பேசிவிட்டுச் சென்றாள்.
அவள் அந்த பக்கம் சென்றதும் இந்த பக்கம் அப்பத்தா கிழவி மீண்டும் வாய் திறந்தது..
“பாத்தியா டா இந்த ஓடுகாலி சிறுக்கி பேசறத…. என்னைய கொல்வாளாம்… என்ன பேச்சு பேசறா பாரு…..”
“அவ பேசினது உண்மை தான்… இது எனக்கு முன்னயே தெரிஞ்சும் உன்னை எப்படி கேக்கறதுன்னு சங்கடப்பட்டு அமைதியா இருந்தேன். இன்னிக்கு அவளே கேட்டுட்டா…. இதுக்கு மேல நீ தேவையில்லாம பேசினா ஆஸ்ரமத்துல தான் கொண்டு போய் விடுவேன்…. “, எனக் கூறிவிட்டு வெளியே சென்றார்.
“வந்ததும் என் குடி கெடுத்துட்டாளே .. இத கேக்க யாருமே இல்லையா ?”, எனக் கிழவி ஒப்பாரி வைத்தது.
அப்போது வைரம் சரியாக அங்கே வர, “இதோ உன் மக வந்துட்டா, அவ கூட போய் கொஞ்ச நாள் இரு. நீ இங்க இருந்தா கல்யாண வீட்ட எழவு வீடா மாத்திறுவ ..”, என மனோகர் கூறினார்.
“நான் ஏண்டா என் மக வீட்டுக்கு போகணும்?”
“அம்மா.. வாய மூடு.. நீ போ தம்பி நான் அம்மாவ அடக்கி வைக்கறேன் “, எனப் பவ்யமாகக் கூறினார் வைரம்.
“என்னைய ஏன்டி அடக்கறவ ?”
“அம்மா .. வாய மூடு. நம்ம குட்டு எப்பவோ வெளிய வந்துரிச்சி.. ஏதோ புண்ணியத்துல நீயும் நானும் இன்னும் வீட்ல இருக்கோம். நீ தேவை இல்லாம பேசி எல்லாத்தையும் கெடுக்காத ..”
“அப்ப அவங்க என்ன பேசினாலும் வாய மூடிட்டு இருக்கணுமா நானு ?”
“நமக்கு அது தான் இப்போதிக்கு நல்லது. அவ வெளிநாடு போயிட்டா நமக்கு தான் பரவால்ல .. தம்பிகிட்ட பேசி பேசி நெலத்த என் பேருல மாத்திக்கலாம் .. “, என மீண்டும் கோனையாகவே புத்தி சென்றது.
“ம்ம் .. என் பேரன் எங்க டி ? அந்த எடுபட்ட சிறுக்கி அவன அடிச்சிட்டா .. என்னால அவள இப்ப ஒண்ணும் பண்ணமுடியாது ..”
“அவன் சாராயம் குடிக்க போயிட்டான் .. நீ கொஞ்ச நேரம் என் வீட்ல வந்து இரு”, எனக் கிழவியை அழைத்துச் சென்றார்.
இந்த பேச்சு அனைத்தும் மாதவியும், திவாகரும் உள்ளே இருந்துக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
திவாகர் மனதினுள் சில விஷயங்களைத் திட்டமிட்டுக் கொண்டு வெளியே வந்தான்.
“கனி…. வா போய் ஹாஸ்டல்ல இருந்து தம்பி தங்கச்சிங்கள கூட்டிட்டு வரலாம்….”
“உள்ள வந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டு போ துவாரகா”, மரகதம் அழைத்தார்.
“கல்யாணம் முடிஞ்சி வரேன் த்த… நான் இங்க தான் தங்கிக்கலாம்னு வந்தேன். அம்மா அங்க கூட்டிட்டு போயிட்டாங்க. அதுவும் பரவால்ல தான்…. நாங்க இராத்திரி வெளிய சாப்டுட்டு வந்துடறோம் அத்த… நீங்க ஜாக்கிரதையா இருங்க….”, எனக் கூறிவிட்டு இருவரும் கிளம்பினர்.
அண்ணனுக்கு பரிசாக தங்க செயினும், அண்ணன் மனைவிக்கு வைரத்தில் சிறிதாக பெண்டென்ட் வாங்கினாள். கனிமொழியும் ஆளுக்கு ஒரு மோதிரம் எடுத்தாள்.
அதன்பின் தம்பி தங்கைகளை அழைத்துக்கொண்டு, ஹோட்டலில் சாப்பிட வைத்து இரவு வீட்டிற்கு வந்துச் சேர்ந்தனர்.
காரை வீட்டிலிருந்து சற்று தள்ளி நிறுத்துவிட்டு துவாரகா நடந்துச் சென்றுக் கொண்டிருந்தாள்.
“ஏய் நில்லுடி…. என்ன தைரியம் இருந்தா உங்காத்தா என்னை அடிப்பா? நான் பொறுக்கி தான் டி… உன்னை இப்ப என்ன பண்றேன் பாரு”, என துவாரகாவின் கையை இழுத்தான் மனோஜ்.
“விடு மனோஜ்…. எங்கம்மா ஒரு அறையோட விட்டுச்சி இப்ப நான் கைவச்சா நீ உயிரோட இருக்கமாட்ட….”
“கை வைடி… ரொம்ப தான் சூடா இருக்க போல.. நானும் சூடா தான் இருக்கேன். வா இரண்டு பேரும் தணிச்சிக்கலாம்…”, என அவள் தோளைத் தொட்ட நொடி துவாரகா அவன் கையைத் திருகி பின்னால் இழுத்து உடைத்தாள்.
மனதில் இருந்த கோபமெல்லாம் இப்போது உடைப்பெடுக்க, அவள் அடித்த அடியில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, இரத்தம் வழிய விழுந்தான்.
அவனை அப்படியே பின்னால் இருந்த சேற்று வயலில் தள்ளி விட்டுவிட்டு, வீட்டிற்கு வந்து சுடுநீரில் குளித்து உடைமாற்றிவிட்டு படுத்துக்கொண்டாள்.
அடுத்த நாள் காலை அப்பத்தாவின் ஒப்பாரி சத்தத்தோடு நாள் விடிந்தது.
“வாய மூடு ம்மா… எப்ப பாரு ஒப்பாரி வச்சிகிட்டு… கல்யாண வீட்ட எழவு வீடா மாத்தாத….”, மனோகர் தாயை அதட்டி மனோஜ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
“என்னாச்சி எதுக்கு உன் மாமியார் சங்கூதுது?”, எதுவும் தெரியாதது போல தாயைக் கேட்டாள்.
“ஏன்டி மகளே… அது உன் வேலைதான்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்… அப்பறம் எதுக்கு இந்த நடிப்பு?”, என மாதவி சிரித்தபடிக் கேட்டார்.
“அவன் தான் இராத்திரி சூட்ட தணிக்கலாம் வான்னு கூப்பிட்டான் அதான் சேத்துல தள்ளி விட்டுட்டு வந்தேன்…. உயிரோட தானே இருக்கான்…..?”
“அந்த எடுபட்ட பயலுக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா உன்கிட்ட இப்படி கேட்டிருப்பான்?”, என பவானி கோபப்பட்டார்.
“அம்மா… சும்மா சும்மா டென்ஷன் ஆகாத… இத விட மோசமா பேசுவானுங்க வாய்ப்பு கெடைச்சா…. எவனும் இங்க யோக்கியன் எல்லாம் இல்ல… பொம்பளைங்க இதவிட மோசமா பேசும்ங்க.. அதெல்லாம் காதுல வாங்கினா நாம ஒரு வாய் தண்ணி கூட குடிக்க முடியாது…. “
“எப்படி டி இதெல்லாம் தாங்கிக்கற?”
“வேற என்ன பண்ண சொல்ற? இருக்கற நிலைமைக்கு தகுந்த மாதிரி நம்மல நாம தான் வலுபடுத்திக்கணும்…. இது மாதிரி இன்னும் நெறைய எச்ச பொறுக்கிங்க நல்லவன் வேஷம் போட்டுட்டு ஊருக்குள்ளாற சுத்திட்டு இருக்கானுங்க…. எங்க எப்படி பேசணுமோ அப்படி பேசிட்டு போயிடணும்…”
“ஒரு பொண்ணு வாழ்க்கை சரிஞ்சா இப்படியா நடப்பாங்க?”
“நல்லா வாழற பொம்பள வாழ்க்கையே இங்க ஒரு பிரச்சினை வந்தா அவலா மென்னு தள்ளுவாங்க. என் விஷயமெல்லாம் அவங்களுக்கு குலாப் ஜாமூன் மாதிரி சித்தி…. “
“எப்படி தான்டி இவங்க வாய அடைக்கிறது?”
“நம்ம பாட்டுக்கு உழைச்சி மேல மேலன்னு போயிகிட்டே இருந்தா தானா எல்லா வாயும் மூடும்…. அப்பவும் எதாவது பேசுவாங்க… ஊர் வாய அடைக்கமுடியாதும்மா…. நீ எனக்கு சூடா ஒரு டீ குடு… குடிச்சிட்டு அன்பு ஆண்ட்டி பேமிலிய கூட்டிட்டு வரேன்… கனி வீட்ல தங்க வச்சிடறேன் சரியா?”
“நம்ம வீட்லயே அவங்க தங்கலாம் தான்….”
“அவங்க வசதிக்கு எல்லாம் நம்ம வீட்டுல தங்கறது கஷ்டம். தவிர இங்க கூட்டமா இருக்கும்… அவங்க அங்கயே இருக்கட்டும்”
“என் கையால அவங்களுக்கு சமைச்சி போட்டு நன்றி சொல்லணும் டி துவா….”, பவானி உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
“ரொம்ப உணர்ச்சிவசப்படாத…. பத்மினி ஆண்ட்டிக்கு அதுதான் பிடிக்காது… இயல்பா இரு போதும்….”, எனக் கூறிவிட்டு குளித்துத் தயாராகி சாப்பிட்டுவிட்டு கனி வீட்டிற்கு சென்றாள்.
“கனி…. ரூம் ரெடியா?”
“எல்லாம் ரெடி .. நீ ஒரு தடவ பாத்துக்க.. நம்ம வீடு வசதிபடுமா அவங்களுக்கு?”
“போதும்… அதுலாம் அவங்க இருந்துப்பாங்க… வீட்ட செமையா மெயின்டெய்ன் பண்ற போல…. “, சுற்றும்முற்றும் பார்த்தபடிக் கேட்டாள்.
“ஆமாமா…. “
“என்ன வாய் கோணுது?”
“ஒன்னுமில்ல… அந்த முகிலனுக்கு என்ன பதில் சொல்ல போற?”
“நான் யாருக்கும் எதுவும் சொல்லப்போறது இல்ல. மொத நான் சம்பாதிச்சி எனக்குன்னு ஒரு வீட்ட கட்டணும். அப்பறம் பாக்கலாம்… கல்யாணம் எல்லாம் பண்ணணுமான்னு இருக்கு எனக்கு?”
“அதுக்காக இப்டியே இருக்கலாம்னு இருக்கியா?”
“அது அப்ப பாத்துக்கலாம். வா அவங்க வந்திருப்பாங்க… சூப்பரா கவனிச்சிடணும் “
அன்பரசியும், பத்மினி தேவியும், மித்ரா மற்றும் விகாஸ்வுடன் துவாரகா சொன்ன இடத்தில் காத்திருந்தனர்.
துவாரகா அவர்களை எதிர்சென்று அழைத்துவந்து கனிமொழி வீட்டில் தங்க வைத்தாள்.
“ரொம்ப அழகா இருக்கு துவாரகா உங்க ஊரு….”, மித்ரா சுற்றிலும் பச்சை பசேலென இருக்கும் வயல்வெளிகளைப் பார்த்துக் கூறினாள்.
“மாடிக்கு போய் பாத்தா இன்னும் சூப்பரா இருக்கும் மித்ரா…. இவ நெறைய செடியும் வளத்தறா… உங்க கார்டெனிங் டவுட் எல்லாம் இவள கேளுங்க சொல்லுவா”, எனக் கனிமொழியை கோர்த்துவிட்டு பெரியவர்களிடம் சென்றாள்.
“ஆண்ட்டி… ரூம் வசதியா இருக்கா?”
“இந்த வீடு ரொம்ப அழகா இருக்கு துவாரகா…. எனக்கு இப்படி ஒரு அட்மாஸ்ப்பியர்ல தான் வாழணும்னு ஆசை.. அப்பாவும் மகனும் வரமாட்டாங்க… நான் இங்க நல்லா என்ஜாய் பண்ணுவேன்…. “, பத்மினி தேவி வீட்டை சுற்றிப்பார்க்க கிளம்பிவிட்டார்.
“சாரி ஆண்ட்டி எங்க வீட்ல சொந்தக்காரங்க நெறைய இருப்பாங்க. உங்களுக்கு கொஞ்சம் தொந்தரவா இருக்கும். அதான் கனி வீட்ல தங்கவச்சேன். தப்பா எடுத்துக்காதீங்க ஆண்ட்டி….”
“இதுல என்னடா இருக்கு? கல்யாண வீடுன்னா அப்படிதான் இருக்கும். அடுத்த தெருவுல உங்க வீடு… விஷேசத்துக்கு எல்லாம் முன்னாடியே வந்துடுவோம் கவலைபடாதே…. எத பத்தியும் யோசிக்காம நீ சந்தோஷமா இரு ….”, என அன்பரசி கூறினார்.
“அங்கிள் வரலியா ஆண்ட்டி?”
“அத்தானும் முகிலும் முகூர்த்த நாள் வந்துடுவாங்க டா… நானும் வந்துட்டதால ஆபீஸ் பார்க்கணும்னு அங்க இருந்துட்டாங்க… உன் அங்கிளுக்கு நினைப்பெல்லாம் இங்க தான் இருக்கும்…. அக்கா தான் விட்டுட்டு வந்துட்டாங்க….”, எனச் சிரித்தபடி கூறிவிட்டு மரகதத்துடன் ஐக்கியம் ஆகிவிட்டார்.
அதன்பின் மின்னல் வேகத்தில் திருமணம் நடந்து முடிந்தது. துவாரகா நின்று செய்யவேண்டிய சடங்குகள் எல்லாம் அவள் சித்தப்பாவின் மகள் நின்று செய்தாள். அதில் பவானிக்கு வருத்தம் தான். துவாரகா அதைக் கண்டும் காணாமல் அவ்விடத்தில் இருந்து நகர்ந்துக் கொண்டாள்.
பட்டுச்சேலை கட்டி அலங்காரம் செய்து திருமணத்திற்கு வந்தவர்களை எல்லாம் உணவுப்பந்தியில் சிரித்த முகமாக உபசரித்துக் கொண்டிருந்தாள் துவாரகா.
“பாத்தியா க்கா .. எப்புடி சிங்காரிச்சிட்டு நிக்கறா ?”
“அடுத்த கல்யாணம் பண்ணனும் டி. அப்ப அந்த புள்ளைக்கு கெட்ட காலம் ஏதோ நடந்து போச்சி அதுக்காக அந்த புள்ள மூலைல கெடக்கணுமா ?”, உடன் இருந்தவர் திட்டினார்.
“ஆனாலும் ..”
“நீ ஊர் வம்பு இழுக்காம வந்த வேலைய மட்டும் பாரு ..”
“அந்த மனோஜ் பய ஆஸ்பத்திரில கடக்கறானாம் .. இவ தான் அடிச்சிட்டான்னு கெழவி சொல்லி அழுதுட்டு இருந்துச்சி ..”
“அவன எல்லாம் தூக்குல போடாம விட்டது தப்பு. போன வாரம் உன் பொண்ணுகிட்ட வம்பிழுத்தான் தெரியுமா ? நான் தான் புள்ளைய கையோட கூட்டிட்டு வந்து விட்டேன் .. அவன எல்லா அடிக்கறதுல தப்பே இல்ல ..”
“இத ஏன்க்கா நீ அப்பவே சொல்லல ?”
“சொன்னா .. ஊருல பொண்ணு மானத்த தான் வாங்குவாங்க .. இனிமே புள்ளைய தைரியமா துவாரகா மாறி வளக்கணும். அப்ப தான் எந்த கஷ்டம் வந்தாலும் எந்திரிச்சி நிக்க முடியும் ..”
இப்படியான முணுமுணுப்புகள் கேட்டபடியே இருந்தன, ஆனால் யாரும் அவளிடம் நேரடியா அவனை அடித்தது பற்றி கேட்கவில்லை. வைரம் கூட தாலி கட்டுதல் முடிந்ததும் மருத்துவமனை சென்றுவிட்டார்.
மரியாதையாக நடந்துக்கொண்டவர்களிடம் மரியாதையாக நடந்துக்கொண்டாள். சற்று இளக்காரமாக பேசி நடந்துக்கொண்டவர்களை சின்ன சிரிப்புடன் கடந்து சென்றாள். திவாகர் தன் தங்கையின் மேல் ஒரு கண்ணை வைத்துக்கொண்டே மேடையில் அமர்ந்திருந்தான்.
“துவாரகா அண்ணி எப்பவும் தைரியமானவங்க மாமா… நீங்க கவலைபடாதீங்க.. அவங்களுக்கு சீக்கிரமே நல்ல வாழ்க்கை அமையும்….”, என அவன் மனைவி தீப்தி ஆறுதலாகப் பேசினாள்.
“அது சீக்கிரம் நடக்கணும் தீப்தி…. “, என அவனும் அவள் கைப்பற்றித் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
அனைவரும் வாழ்த்துக் கூறி சென்ற பின், கடைசியாக மேடையேறிய துவாரகா அவள் வாங்கிய பரிசுகளைக் கொடுத்துவிட்டு இருவரையும் மாற்றி அணிந்துக் கொள்ள கூறி, சில கேண்டிட் ஃபோட்டோஸ் எடுக்க வைத்தபின் மீண்டும் பந்தி பரிமாறச் சென்றுவிட்டாள்.
அருணாச்சலமும், பவானியும் அன்பரசியையும், பத்மினி தேவியையும் பார்த்து ஓராயிரம் முறை நன்றி கூறிவிட்டனர்.
“போதும் அருணாச்சலம் சார்…. இதுக்கு மேல நன்றி சொன்னா நாங்க உடனே கிளம்பிடுவோம் பாத்துக்கோங்க”, பத்மினி தேவி மிரட்டினார்.
“அப்படி இல்லம்மா… துவாரகாவ இத்தனை நாளா கண்ணும் கருத்துமா பாத்துகிட்டீங்களே அதுக்கு என்ன செஞ்சா தகும்னு எங்களுக்கு தெரியல…. இந்த நன்றிங்கற வார்த்தை பத்தாது… “, பவானி.
“போதும் ம்மா…. துவாரகா எங்க வீட்டு பொண்ணு. அவள நாங்க பாத்துக்காம…. கல்யாணம் அருமையா இருந்தது. சமையல் எல்லாம் யாரு?”, என இராஜாங்கம் அருணாச்சலத்தை அழைத்துக் கொண்டு வேறு பக்கமாகச் சென்றார்.
“ரொம்ப அருமையா துவாரகாவ வளத்திருக்கீங்க பவானி…. என் பொண்ணு மித்ரா கூட இந்தளவு தைரியசாலி இல்ல… குணமும் தங்கம்….”, அன்பரசி மனம் நிறைந்துப் பாராட்டினார்.
“இன்னும் குணம் போதலன்னு தான் இங்க பக்கட்டு சொல்றாங்க ம்மா…. ஏதோ அவளே அவள சரிபண்ணி தேத்திக்கறா…. எங்களுக்கு அவ்வளவு வெவரம் தெரியாது….”
“அவள அவளே சரிபண்ணிக்க சொல்லிகுடுத்தது தான் முக்கியமான குணம். அது திமிரா தான் எல்லாருக்கும் தெரியும். ஆனா அது என்னமாதிரியான நிமிர்தல்னு எனக்கு நல்லா தெரியும்…. உங்க பொண்ணு தங்கம் தான்…. நெருப்புல எத்தன முறை போட்டாலும் தரம் கொறையாம ஜொலிப்பா…. “, எனக் கூறிவிட்டு அவரும் ஒரு பக்கமாக சென்று அமர்ந்தார்.
முகிலன் திருமணத்திற்கு வரமுடியவில்லை. துவாரகாவும் அவன் வேலைபளு தெரியும் என்பதால் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
ஒரு வாரம் மகளை அருகில் வைத்து உபசரித்தபின் தான் அவளை கோயம்புத்தூர் அனுப்ப சம்மதித்தித்தனர்
“துவா…. ஜாக்கிரதையா இரு…. வில்சன் பய வீட்டுல தங்கறங்கற…. இங்க ஊருக்குள்ள….”, என பவானி ஆரம்பிக்கும் போதே துவாரகா முறைத்தாள்.
“யாருக்கும் என்னை நான் நிரூபிக்கணும்ங்கற அவசியம் இல்லம்மா… உங்களுக்கு கூட
…. சும்மா தேவையில்லாதது எல்லாம் பேசாத… நான் எப்படி இருக்கணும்னு எனக்கு தெரியும்…. ஒரு தடவை ஊருக்காக என்னை பலி குடுத்தது போதும். மறுபடியும் நான் தலைய குடுக்கமாட்டேன்…. என்னை நிம்மதியா வேலை பாக்க விடுங்க போதும்”, எனக் கூறி முடித்துக்கொண்டு கோயம்புத்தூர் புறப்பட்டாள்.
அங்கே இரண்டு நாட்கள் இருந்துவிட்டு அரிசோனா நோக்கிப் பறந்தாள்.
முகிலமுதன் துவாரகாவிடம், “என்கிட்ட ஃப்ரெண்ட் ஆ பழையபடி பேச விருப்பம் இருந்தா பேசலாம்..”
“நான் ஃப்ரெண்டா பாப்பேன். நீங்க என்னை அப்படி பாப்பீங்களா?”
“இல்லைதான்… ஆனா என் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு…. பேசிட்டாவது இருக்கலாம்னு தான் கேட்டேன். மத்தபடி உன் விருப்பம் தான்…. “
“எனக்காக காத்திருக்காதீங்க முகிலமுதன்…”
“அது என் விருப்பம் துவாரகா…. ஜாக்கிரதையா போயிட்டு வாங்க…. லேண்ட் ஆனதும் சொல்லுங்க”, எனக் கூறிவிட்டு தன் அலுவலகம் கிளம்பிவிட்டான்.
மற்றவர்களிடம் பிரியாவிடை பெற்று இம்முறை கனிமொழியுடன் அரிசோனா நோக்கிப் பறந்தாள் துவாரகா..
கனிமொழி மூன்று மாத காலம் மட்டும் அவளுடன் தங்கியிருந்துவிட்டு வருவாள். தோழிகள் இருவரும் திட்டமிட்டபடி முதல் வெளிநாட்டு பயணத்தைத் தொடங்கினர்.
வில்சனும், லில்லியும் ஏர்போர்ட் வந்து அவர்களை வரவேற்று இல்லம் அழைத்துச் சென்றனர்.
அங்கே துவாரகா மீண்டும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டுத தெளிவாகியபடி சுயமாக வாழ ஆரம்பித்தாள்.
எதிர்காலத்தில் அவளுக்கு காதல் வரலாம், திருமணமும் நடக்கலாம் ஆனால் அது முழுக்க முழுக்க துவாரகாவின் விருப்பத்தின் அடிப்படையில் அமையும் என்பது மட்டும் திட்டமாகக் கூறலாம்.
பல சுக்கு நூறாக சிதறியிருந்த துவாரகாவின் வாழ்க்கை, இப்போது அன்பு கொண்ட நெஞ்சங்களின் கதகதப்பினால் மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது.
அவள் எண்ணம் போல, விருப்பம் போல அவளது வாழ்வு அமைய வாழ்த்துகள் கூறி நாம் விடைபெறலாம்…..
********************************************************************************************
இந்த சமுதாயத்தில் பெண்களை எப்போதுமே ஒரு படி கீழே வைத்தே பழக்கிவிட்டனர். பாதுகாப்பு என்ற போர்வையில் அவளை அடிமையாக, முட்டாளாக, விவரம் தெரியாதவளாக, சுருக்கமாக கூறினால் பெண் என்பவள் உடலாக மட்டுமே இன்று வரையும் பெரும்பான்மையான இடங்களில் பார்க்கப்படுகிறாள்.
அவளின் உணர்வுகள், உணர்ச்சிகள், வலி, மகிழ்ச்சி, அறிவு தேடல், இலட்சியம், ஆசை, கனவு என்று எதுவுமே அவள் சுயமாக வைத்துக் கொள்ள கூடாது . அப்படி இருந்தால் அது மாபெரும் பாவமாக பார்க்கப்படுகிறது. பெண் குழந்தையை சீராட்டி வளர்த்து குடும்ப கௌரவத்தின் சின்னமாக மட்டுமே 99.9 % குடும்பங்களில் வைத்திருக்கின்றனர்.
அவள் கனவு அவர்கள் அனுமதித்த ஒன்றாக மட்டுமே இருக்கவேண்டும், அவளின் ஆசை அவர்களின் ஆசையாக மட்டுமே இருக்கவேண்டும். தனியாக சுயமாக நிற்க அவள் கனவு கண்டால் அதை அழிப்பதில் முதலில் செயல்படுவது அவளின் பெற்றவர்கள் தான்.
பெண் என்பவள் சுயமாக நின்றுவிட்டால், அவளை அடக்கி ஆள முடியாது என்ற எண்ணம் இந்த சமுதாயத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது. தைரியம் சற்று அதிகம் இருந்தால் அதன் பெயர் திமிர், சற்று அறிவுபூர்வமாக ஏதேனும் கேள்விக்கு பதில் கூறிவிட்டால், அதை அவர்களால் தாங்கவே முடிவதில்லை, அகங்காரம் என்ற பட்டம் வந்து விடும். ஏதேனும் வீட்டில் உள்ளவர்களை எதிர்த்து கேள்விகள் கேட்டால், அடங்கா பிடாரி, இப்படியாக நிறைய பட்டங்கள் பெண்களுக்கு சுயமாக சிந்தித்து செயல்படும் போது வந்து விடும்.
இதில் கூட இதே பட்டங்கள் ஆண்களுக்கு கொடுத்தால் அது அவனை தூக்கி வைத்து, சமுதாயத்தில் பெரும் அந்தஸ்த்தாக தான் பார்க்கப்படுகிறது. அதற்காக ஆண் அழுவதில்லை, மனம் வருந்துவதில்லை.
பெண்ணை தான் இழிவுப்படுத்தி, மனதளவில் அவளை பலவீனம் செய்து அவள் மேலும் சிந்திக்க முடியாதபடி செய்து, வீட்டு அடுப்படியில் அமரவைத்து விடுகிறார்கள்.
அதிலும் கணவனை இழந்தவர்கள் நிலையும், கணவனை பிரிந்தவர்கள் நிலையும் வார்த்தை கொண்டு விவரிக்க முடியாது. படித்தவர்கள் இன்று சம்பாதிக்க வெளியே செல்கின்றனர். படிக்காதவர்கள், தைரியம் இல்லாதவர்கள் வீட்டிலேயே சம்பளம் இல்லாத வேலைக்காரியாக தான் நடத்தப்படுவார்கள். தைரியம் இருந்தால் இட்லி கடை வைத்து மேலே வந்து விடலாம். படிப்பை விட மிகவும் அவசியம் பெண்களுக்கு தைரியம் தான். இன்றும் கிராமங்களில் பெண்களின் சுயசம்பாத்தியம் தான் குடும்பங்களை வழிநடத்துகிறது. கிராமமாகவும் இல்லாமல், நகரமாகவும் மாறாமல் இருக்கும் ஊரில் உள்ள பெண்களின் நிலை தான் இப்படி நடுவில் சிக்கி தவிக்கிறது.
பெண்களே பெண்களை அடிமைகளாக மாற்ற நினைப்பது தான் இத்தனை வீழ்ச்சிகளுக்கு காரணம்.
அடிபட்ட ஒரு பெண், அவளை அவளே தேற்றி மருந்திட்டு கொள்வது அத்தனை சுலபம் இல்லை. அந்த செயல்பாட்டை அத்தனை இலகுவாக அவளின் குடும்பமும் செய்ய விடுவதில்லை. அவளின் மனநிலை, உடல்நிலை இவை எல்லாம் அடிபட்ட புதிதில் இருப்பதை விட, அந்த அழுத்தத்தில் இருந்து வெளிவர முயலும் பொழுது வெகுவாக பாதிப்பு அடைகிறது.
அதை உடன் உள்ளவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவளின் முயற்சியை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே அவளது அதிர்ஷ்டம் தான்.
இப்படி வெளியே வரும் பெண்களை வெறும் சதை பிண்டங்களாக மட்டுமே பார்ப்பவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. அத்தனை நாட்கள் நண்பனாக இருந்தவன், அவள் உடலை உரச வருவான். பேச்சிலேயே பலாத்காரம் செய்யத்தான் பலர் வருவர்.
அவள் நம்பியவர்கள் அவள் உடலை மட்டுமின்றி, மனதையும் கூறு போட்டுவிடும் அளவிற்கு பேசுவார்கள். இதுபோன்ற சமயங்களில் சாய தோள் கிடைப்பது அரிது. அப்படி கிடைத்தால் மூச்சு விட அவ்வப்போது சாய்ந்து கொள்ளலாம்.
அவளை சுற்றி முற்றிலும் தலைகீழான சமூகம் விரியும். உண்மையைச் சொன்னால் அது தான் நமது உண்மையான சமுதாயம். அதை உணர வழுவான அடிகள் விழத்தான் வேண்டும்.
இக்கதையில் வந்ததை போன்ற அவள் மனதை காயப்படுத்தாத நபர்கள் சூழ்ந்த உலகத்தில் நாம் வாழவில்லை. ஆனால் உங்களை சுற்றி துவாரகா, மைனா, மித்ரா, மரகதம், அன்பரசி போன்ற பெண்கள் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் பார்க்கும் பார்வையும், அவர்களைப் பற்றிய பொதுப்படையான எண்ணமும் மாறினால் அது இக்கதைக்கான வெற்றி, எனக்கான வெற்றி. வாழ்வில் ஒரு முறை தோற்றுவிட்டதால் அவர்கள் வாழ்க்கை அற்றவர்கள் இல்லை. அவர்களின் வலிமை சோதித்த ஒரு தருணம் தான் அது. வலிமை கூடி சுயம்புவாக எழுந்து நிற்பவர்கள் பலம் இப்பிரபஞ்சத்தை அசைக்கும்.
தன்னை தானே மீட்டெழும் அத்தனை உயிர்களுக்கும் இக்கதை சமர்ப்பணம்.
மீண்டும் ஒர் புதிய நாவலுடன் உங்களை சந்திக்கிறேன்.
அன்புடன்,
ஆலோன் மகரி.