சற்று நேரம் முன்பு தான்….
உன் மார்சாயும் ஏக்கம் கொண்டு ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன்….
கடந்து போன காலத்தை நினைத்து….
அப்படி நடந்திருந்தால் ….
இன்று நீயும் நானும்….
ஒன்றாய் அமர்ந்து பேசியிருக்கலாம்…..
ஓர் மழை மாலை வேளையில்….
எனது தேநீரில் உன் இதழும் சுவைத்திருக்கலாம்…..
எனக்கு பிடித்த புத்தகத்தின் வரிகளை….
உன்னுடன் கலந்துரையாடி ஊடல் கொண்டிருக்கலாம்….
நீயோ நானோ….
கோபமாய் அருகில் அமர்ந்து முகம் திருப்பும் போதெல்லாம்…..
‘இச்’சென்ற சத்தமில்லா சமாதானங்களை செய்திருக்கலாம்…..
இருக்கலாம்….
இருக்கலாம்…
இப்படி பலதை நினைத்து பொய்யாய் மனதை சமாதானம் செய்த வேளையில்…..
நீயும் உன் துணையும் ஒன்றாய் வெளிக்கிளம்புவதை பார்த்தபின்….
பொட்டில் அடித்து இதயத்தில் பரவியது ஓர் வலி…..
ஒரு வேளை அன்று நான் பேசியிருந்தால்….
இன்று நான் உன்னுடன் இருந்திருக்கலாமோ ? என்ற மற்றோர் பொய் சமாதானத்தை தான் மீண்டும் சொல்கிறேன் மனதிற்கு…..
வலி கொண்டு அடைக்கும் குரல்வளையை….
நீராய் மாற்றி சீராக்கி கொள்கிறேன் …
ஒற்றையாய் விட்டுவிட்ட உணர்வெழும் போதெல்லாம்….
– ஆலோன் மகரி