6 – ருத்ராதித்யன்
பரிதியும், செந்திலும் உளவுத்துறையின் முக்கியப் பதவி வகிக்கும் நபரைக் காணச் சென்றுக்கொண்டிருந்தனர்.
“என்ன விஷயம் பரிதி? நம்மல ஏன் அந்த ஆளு வர சொல்றான்?”, செந்தில்.
“அது தான் எனக்கும் தெர்ல செந்தில்…. அவன உள்ள தூக்கி போட நாம முயற்சி பண்ணிட்டு இருக்கோம்னு அவனுக்கே நல்லா தெரியும்.. போனா தெரியப் போகுது… பாக்கலாம்…..”, பரிதி யோசனையுடன் கூறினாள்.
சிறிது நேரத்தில் அவர்களின் தலைமை அலுவலகம் வந்தவர்கள், மேலதிகாரியைக் காணக் காத்திருந்தனர்.
“குட் ஈவினிங் ஷின்டே”, என இருவரும் கூறி அமர்ந்தனர்.
“ஈவினிங்….. என்ன நடக்குது உங்க டிபார்ட்மெண்ட்ல? யார கேட்டு இந்த கேஸ்-அ பைல் பண்ணீங்க? “, என ஒரு பைலை அவர்களை நோக்கி வீசியெறிந்தார் அவர்.
பரிதி அந்த பைலை பார்த்துவிட்டு, “தப்பு நடக்கறப்ப அத தடுக்க தான் சார் எங்கள கவர்மெண்ட் வேலைக்கு வச்சிருக்காங்க”, சிறிதும் அசராமல் பதில் கொடுத்தாள்.
“யார் என்ன பண்ணாலும் உங்கள கேஸ் போட்டு பின்னாடியே துப்பு துலக்க போக சொல்லல….. ஒழுங்கா எங்க தள்ளி இருக்கணுமோ அங்க தள்ளி நிக்க கத்துக்கோங்க”, சூடு குறையாமல் பேசினார் ஷின்டே.
“ஓஓ… யார் கிட்ட தள்ளி நிக்கணும்? யார் பின்னாடி போக கூடாதுன்னு நீங்களே சொல்லிட்டா எங்களுக்கும் ஈஸியா இருக்கும் சார்”, குரலில் பரிகாசம் காட்டி, முகத்தில் பவ்யம் சேர்த்துக் கூறினாள் பரிதி.
“ஏய்ய்….. என்கிட்ட தேவையில்லாம வச்சிக்காத…. நீ வேலைக்கு வந்து ஒரு மாசம் தான் ஆகுது…. மறுபடியும் வேற இடத்துக்கு போகணுமா? இல்ல ஒரே அடியா மேல போகணுமா?”, ஷின்டே நக்கலாக கேட்டார்.
“நீங்க வரசொன்னத பத்தி சொன்னா நாங்க கிளம்புவோம் ….”, என பரிதி திமிர் பார்வையுடன் கூறினாள்.
அவர் கோபத்துடன் அவளை முறைத்துவிட்டு, “இதோ…. இந்த கேஸ்-அ சீக்கிரம் சால்வ் பண்ணுங்க….”, என ஒரு பைலை டேபிலில் வீசினார்.
“மிஸ்டர் ஷின்டே…… அடுத்து நீங்க இங்க இருந்தா மீட் பண்ணலாம்… வாங்க செந்தில்”, எனக் கூறி எழுந்து நின்றாள் பரிதி.
“நீ அந்த கேஸ் முடிக்கறவரை உயிரோட இருந்தா பார்க்கலாம்”, ஷின்டே வன்மத்துடன் கூறினார்.
தன் மொபைலில் குறுஞ்செய்தி வந்ததைப் பார்த்துவிட்டு, “குட் லக் மிஸ்டர் ஷின்டே…. பை த வே… இந்நேரம் உங்களுக்கு ஒரு பேக்ஸ் வந்திருக்கும்”, எனக் கூறி சிரித்தாள்.
அவள் கூறி முடிக்கும்முன் பேக்ஸ் வந்திருந்தது. அதில் ஷின்டே பதவி பறிக்கப்பட்டிருப்பதாக போட்டிருந்தது. அந்த அறையில் சிபிஐ ஆபீசர்ஸ் சிலர் உள்ளே வந்நு ஷின்டேவை அரெஸ்ட் செய்து அழைத்துச் சென்றனர்.
ஷின்டே பரிதியை முறைத்தபடி அவர்களுடன் வெளியேறினார்.
“பரிதி… என்ன நடக்குது இங்க?”, செந்தில் புரியாமல் கேட்டான்.
“நம்ம கேடி வந்துட்டா…..வாங்க வெளியே நிக்கலாம்”, எனக் கூறி பரிதி செந்திலுடன் வெளியே வந்தாள்.
“ஹலோ மேடம்…. இந்த பைல் நீங்க மிஸ் பண்ணிட்டு போறீங்க”, என ஒருவன் பின்னிருந்து அழைத்தான்.
“ஹேய்…. நந்து….. எப்படி இருக்க? நீ தான் இந்த கேஸ் ஹேன்டில் பண்றியா?”, பரிதி சந்தோஷத்துடன் கேட்டாள்.
“கலெக்டர் மேடம் இன்னும் பைல் தூக்க பிஏ கூட வராங்கன்னு நினைப்புல இருக்கீங்க போலவே”, நந்து சிரித்தபடி பரிதியைக் கிண்டலடித்தான்.
“டேய்….. வாய் கொழுப்பு மட்டும் உனக்கு குறையாதே…. நீ மட்டும் இருக்க எங்க உன் உயிர் நண்பன காணோம்?”, பரிதி அவனின் முதுகில் தட்டிவிட்டு கேட்டாள்.
“செந்தில் எப்படி இருக்கீங்க?”, நந்து செந்திலுடன் கைக்குலுக்கினான்.
“பைன் நந்தன்….. “, செந்தில்.
“அவன் மாமனார் மாமியார் வீட்டுக்கு வராங்கன்னு போனான்…. கல்யாண தேதி பிக்ஸ் பண்ணிட்டு தான் வருவான் போல”, நந்து அவர்களுடன் பேசியபடி வெளியே வந்தான்.
“பொண்ணே இங்க இருக்கு அப்பறம் எப்படி அவன் கல்யாண தேதிய பிக்ஸ் பண்ணுவான்?”, செந்தில் சிரித்தபடிக் கேட்டான்.
“தாலி கட்றப்ப நான் அங்க இருந்தா போதுமே சீனியர்… இப்பவே நான் எதுக்கு அங்க இருக்கணும்?”, எனக் கேட்டபடி வாயில் லாலிபப் வைத்து சப்பு கொட்டியபடி வந்து நின்றாள் நம் யாத்ரா.
“ஏய்….உன்ன என்ன பண்ண சொன்னா நீ என்ன பண்ணிட்டு வந்திருக்க? நான் அவங்கள பாலோ பண்ணி எவிடன்ஸ் கலெக்ட் பண்ண சொன்னா நீ பாட்டுக்கு விருந்துக்கு போறமாதிரி அவனுங்க வண்டில போயிட்ட…. உனக்கு எதாவது ஆச்சின்னா நான் என்ன பதில் சொல்றது?”, செந்தில் யாத்ராவை பார்த்ததும் பொறிந்துத் தள்ளினான்.
யாத்ரா லாலிபப் சாப்பிட்டபடி செந்தில் திட்டுவதை சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“யக்கா…. நிஜமா இது பொண்ணு தானா? அவர் அந்த கிழி கிழிக்கறாரு இவ லாலிபப் சாப்டுட்டு இருக்கா?”, நந்து பரிதியிடம் இரகசியமாகக் கேட்டான்.
“இரண்டு வருஷமா நீயும் பாக்கறல்ல… என்னை ஏன் கேக்கற? வேணும்னா உன் நண்பன கேளு இவ பொண்ணா இல்லையான்னு”, பரிதி.
“எதுக்கு அன்னிக்கு நான் வாங்கினதே போதும். அவன் அக்யூஸ்ட்-அ அடிக்கற மாதிரி என்னை அடிக்கறான் க்கா…. இதுங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டு எங்கயாவது ட்ரான்ஸ்பர்ல அனுப்பிடலாம். அப்ப தான் நாம நிம்மதியா இருக்க முடியும்”, நந்து.
“நான் இல்லாம நீ தனியா இருக்க முடியாது டா நண்பா…. அப்படியே நாங்க எங்க போனாலும் உன்னையும் இழுத்துட்டு தான் போவோம்”, என அர்ஜுனின் குரல் யாத்ராவின் போனில் இருந்து ஒலித்தது.
“கிராதகி…. மறுபடியும் போட்டு குடுத்துட்டா”, என நந்து யாத்ராவை முறைத்தபடி நின்றான்.
“நண்பா…..உன்ன விட்டுட்டு நான் இருப்பேனா? நீ எப்படி இருக்க? அங்கிள் ஆண்டி வந்துட்டாங்களா? எப்ப கல்யாணம்?”, நந்து மலுப்பியபடிப் பேச்சை மாற்றினான்.
“ஆதிக்கு பண்ணாம நாங்க எப்படிடா கல்யாணம் பண்றது? அவனுக்கு பொண்ணு தேடிட்டு இருக்காங்க. உனக்கு ஒரு அக்காவோ தங்கச்சியோ இருந்து இருந்தா இந்நேரம் கட்டி வச்சி இருக்கலாம். நீ கம்முன்னு பொண்ணா மாறிடு… உன்னையே கட்டி வச்சிடறேன் பிரச்சினை சால்வ்”, அர்ஜுன் சிரிக்காமல் கூறினான்.
“ஏன்டா உங்களுக்கு இந்த நல்லெண்ணம்? உங்க அண்ணன்கிட்ட பத்து நிமிஷம் பேசறதுக்குள்ளயே எனக்கு உயிர் பத்து தடவை போயிட்டு வரும்… இதுல வாழ்க்கை பூரா நான் அவர் கூட இருக்கறதா… முடியாது…”, நந்து பதறியபடிக் கூறினான்.
“செழியன்…. அத்தானுக்கு ஒரு டேஸ்ட் இருக்கு… போயும் போயும் நந்துவ அவர் பார்ப்பாரா? நான் என் அத்தானுக்கு சூப்பரா ஒரு பொண்ணு பாக்கறேன். இல்லைன்னா நானே கூட அவர கட்டிக்கறேன். நீ வேற பொண்ண தேடிக்க”, யாத்ரா.
“யாது மா…. அடிக்கடி நீ இப்படி சொன்னா அத்தான் மனசு தாங்காது டா…. “, ஆதி பேசினான்.
“அத்தான்…. நீங்களா…. எப்படி இருக்கீங்க? உங்கள பாக்க விடாம உங்க தம்பி சதி பண்றான் அத்தான்”, யாத்ரா சிறு குழந்தை போல புகார் வாசித்தாள்.
“அவன் கடக்கறான் விடு. நானே கூட கட்டிக்கலாம் தான். பட் இளா ஆசைப்பட்டு என்கிட்ட கேட்டப்பறம் இல்லைன்னு சொல்ல முடியாதே யாது மா…. ஒரு தடவை அவன கட்டிக்க… அடுத்த ஜென்மத்துல நாம கல்யாணம் பண்ணிக்கலாம் “, ஆதியும் சிறுகுழந்தையிடம் கதை சொல்வது போல சொல்லிக்கொண்டு இருந்தான்.
“இவ கூட இந்த ஜென்மம் இல்லாம அடுத்த ஜென்மத்துல வேற குப்ப கொட்டணுமா? கொடுமை டா”, என நந்து கூற செந்திலும் தலையசைத்து ஒப்புக் கொண்டான்.
“டேய்….என்னடா நடக்குது அங்க? அண்ணனும் தம்பியும் ஒரே பொண்ணுகிட்ட கடலை போடறீங்க…. ஆதி உனக்கு வேற பொண்ணா கிடைக்கல?”, பரிதி போனை வாங்கிக் கேட்டாள்.
“கிடைக்கல தான்…. நீ தான் எனக்கு ஒக்கே சொல்ல மாட்டேங்கறியே… சரி கஜாக்கு சொல்வன்னு பாத்தா அவனுக்கும் சொல்லமாட்டேங்கற…. நீ என்ன தான் பண்ண போற?”, ஆதித்யா சலிப்புடன் கேட்டான்.
“இளா…. உங்கண்ணன் சரியில்ல இன்னிக்கு…. இரண்டு பேர் மட்டும் ஸ்பீக்கர் போட்டு பேசிட்டு இருக்கீங்களா இல்ல லைசண்டா யாராவது பக்கத்துல இருக்காங்களா?”, பரிதி கேலியுடன் கேட்டாள்.
“கரெக்ட் மை லார்ட்… நான் இருக்கேன். நான் சொன்ன மாதிரி நீங்க தான் இந்த கேள்விய கேட்டீங்க. மத்த இரண்டும் வேஸ்ட்…. “, என சிவி குரல் கொடுத்தான்.
“ஆதி இப்படி பேசறப்பவே புரிஞ்சிக்கிட்டேன். பக்கத்துல யாராவது இருப்பாங்கன்னு…. அவன் எப்ப எப்படி டோன் மாத்தி பேசறான்னு இன்னுமா உங்களுக்கு புரியல?”, பரிதி யாத்ராவையும் வந்துவிடும் பார்த்துக் கேட்டாள்.
“அத்தான்கிட்ட பேசினா அதுலாம் நியாபகம் வரமாட்டேங்குது டார்லிங்… டேய் வளந்துகெட்டவனே… உன் நொண்ணணும் இருக்கானா?”, யாத்ரா.
“அவன் சென்னைல இருக்கான்…. நீ எப்ப இங்க வர?”, சிவி.
“டார்லிங் லீவ் குடுத்தா இப்பவே கூட கிளம்பி வந்துடுவேன் அத்தான பார்க்க”, யாத்ரா கண்ணடித்துக் கூறினாள்.
“அர்ஜுன் பேசாம நீங்க வேற நல்ல பொண்ணா பார்க்கலாம்…. இவ உங்க அண்ணன பாக்க தான் வருவாளாம்… இந்த பொண்ணு வேணுமா?”, செந்திலும் பேச்சில் கலந்துக் கொண்டான்.
“பார்க்கலாம் தான் செந்தில் பட் யாத்ரா விட கெத்தா ஒரு பொண்ணு இருந்தா சொல்லுங்க உடனே கல்யாணம் பண்ணிக்கறேன்”, என அர்ஜுனும் விளையாடினான்.
“டேய்… போதும் டா… ரீல் சுத்தனவரைக்கும் போதும். நைட் பிளைட்ல நானும் யாத்ராவும் வரோம். வந்து பிக்கப் பண்ணிக்க”, நந்து.
“ஹாஹாஹா…. நான் சொல்லல…. நந்து தான் இத முடிப்பான்னு” எனக் கூறி ஆதி அந்தப் பக்கம் சிரித்தான்.
“அடியேன் தேவிக்காக காத்திருக்கிறேன்”, அர்ஜுன் குரலில் காதல் வழியக் கூறினான்.
அவன் குரல் மாற்றத்தை உணர்ந்து அந்த பக்கம் ஆதி, சிவி இருவரும் கிளம்பிவிட, இங்கே யாத்ரா கையில் ஸ்பீக்கர் ஆப் செய்துவிட்டு போனை கொடுத்துவிட்டு மற்றவர்கள் விலகினர்.
“ஏய் ரவுடி…. என்னை பார்க்க வான்னா என் அண்ணன பார்க்க வரேன்னு சொல்ற நீ”, அர்ஜுன் கொஞ்சலாக மிரட்டினான்.
“நீ தானே என்ன வராதன்னு சொன்ன”, யாத்ராவும் காதல் மொழி பேச ஆரம்பித்திருந்தாள்.
“சொல்றது தான். அதுக்காக மாமாவ பார்க்காம இருப்பியா நீ?”, அர்ஜுன்.
“நீ ம்ம் சொல்லு உடனே உன்ன கடத்திட்டு வேற எங்கயாவது போயிடறேன் செல்லம்”, யாத்ரா.
“பேபி… இது நான் சொல்ல வேண்டிய டையலாக் டா”, அர்ஜுன்.
“நீ தான் சொல்ல மாட்டேங்கறியே டா…. அப்ப நான் தான் சொல்வேன்”, யாத்ரா.
“ரது பேபி….. “,அர்ஜுன்.
“ம்ம்…..”, யாத்ரா.
“ரது செல்லம்….”, அர்ஜுன்.
“ம்ம்ம்ம்”, யாத்ரா.
“ரதும்மா…..”, அர்ஜுன்.
“அடச்சீ…. என்னன்னு சொல்லு முதல்ல… சும்மா நொய் நொய்னு”, யாத்ரா ஆத்திரமாக கேட்கவும் அர்ஜுன் வாய்விட்டு சிரித்திருந்தான்.
“இது தான் என் ரது…. உனக்கு லவ் லேங்குவேஜ் செட் ஆகல பேபி”, அர்ஜுன் கலாய்த்தான்.
“செழியன்… இதுக்கு நீங்க என்கிட்ட நல்லா வாங்கப்போறீங்க… சீ யூ சூன்”, எனக் கூறி கால் கட் செய்துவிட்டாள் யாத்ரா.
“கிளம்பலாமா?”, நந்து கேட்டான்.
“நீ கிளம்பு அவளுக்கு வேலை இருக்கு”, பரிதி.
“டார்லிங்…. இரண்டு நாள் லீவ் குடேன்”, யாத்ரா அடம்பிடித்தாள்.
“முடியாது. முதல்ல ரிப்போர்ட் பண்ணு இன்னிக்கு மிஷன் பத்தி. அடுத்த கேஸ் கைல இருக்கு. அத பாத்துட்டு அப்பறம் லீவ் குடுக்கறேன்”, பரிதி.
“இதானே பைல் வா கார்ல உட்கார்ந்து பாக்கலாம்”, என தரதரவென அவளை இழுத்துச் சென்று நந்துவின் காரில் அமர்ந்தாள்.
பத்து நிமிடத்தில் பரிதி யாத்ராவிற்கு பத்து நாட்கள் விடுமுறைக் கொடுத்து அனுப்பிவிட்டாள்.
நந்துவும், கதிர் மற்றும் பாலாஜிக்கு அழைத்துக் கூறிவிட்டு நரேனை அழைத்தான்.
“சார்….. நான் ஊருக்கு கிளம்பறேன்”, நந்து.
“சரி லீவ் என்ஜாய் பண்ணிட்டு பொறுமையா வா”, என நரேன் கூறி வைத்துவிட்டான்.
“இவருக்கு குளிர் விட்டுப்போச்சி… அப்பறம் பாத்துக்கறேன்”, என நந்து தனக்குத் தானே பேசிவிட்டு வைத்தான்.
யாத்ரா தனியாகவும், நந்து தனியாகவும் அடுத்தடுத்த ப்ளைட்டில் மதுரை வந்து சேர்ந்தனர்.
ஆருத்ரா தன் உதவியாளர் பணிக்கு ஆழிமதி எனும் பெண்ணை தேர்ந்தெடுத்திருந்தாள்.
நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த பெண், வேலை செய்தபடி தொலைதூரக் கல்வியும் பயிலும் எண்ணத்தில் நேர்காணல் வந்து தேர்வாகி இருந்தாள்.
அன்று மாலை எஸ்டேட் லீஸ் சம்பந்தமாக பேச ஆதித்யனும் கணேசன் உடன் வந்திருந்தான்.
ஏலக்காய் உடன் முந்திரி மற்றும் வேறு பழ வகைகளும் ஆதி இயற்கை முறையில் விவசாயம் செய்துக் கொண்டு இருக்கிறான்.
அவன் நிலத்தின் அருகில் தான் ரணதேவ்வின் நிலமும் இருப்பதால் அதை அவன் லீஸ் கேட்க வந்திருந்தான்.
“வணக்கம் தேவ் ஐயா… எப்படி இருக்கீங்க? உங்கள பாத்து ரொம்ப வருஷமாச்சி… உங்க பேத்தி சவுக்கியமா? “,என கணேசன் நலம் விசாரித்தார்.
“நல்லா இருக்கோம் கணேசன். உங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? உங்க பையன் வெளிநாட்டுக்கு போறதா சொன்னீங்களே…. “, ரணதேவ் வரவேற்று விசாரித்தார்.
“அவன் கிளம்பி போய் ஒரு வருஷம் ஆச்சிங்க ஐயா. இங்க வரமாட்டேன்னு சொல்லிட்டான். சொந்த மண்ண விட்டு அவ்வளவு தூரம் போய் என்ன சம்பாதிச்சி என்ன பிரயோஜனம்?”, கணேசன் குரலில் வருத்தம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“இந்த காலத்து பசங்களுக்கு நம்ம மண்ணோட அருமை பெருமை தெரியறது இல்ல … இந்த மண்ணோட வளமும் பசுமையும் விட்டு, தன் சொந்த அடையாளம் விட்டு போறவங்களுக்கு இப்ப புரியாது…. நாளைக்கு அவன் விரட்டறப்ப தான் புரியும் சொந்த ஊரோட அருமையும் மதிப்பும் “, ரணதேவ் சற்றே காட்டமாக கருத்தை முன்வைத்தார்.
“இந்த மண்ணோட அருமையும், பெருமையும் காப்பாத்த நினைக்கிற எங்கள போல பசங்களும் இங்க இருக்கோம். அவங்களுக்கு உங்க அனுபவமும் அறிவும் சொல்லி வழிநடத்துங்க”, ஆதித்யா தன் கருத்தை முன் வைத்தான்.
அப்போது தான் அவனை முழுதாய் கண்டார் ரணதேவ். வஜ்ர தேகமும், இதழில் மாறாத இளநகையும், ரணதேவ்வை தலை நிமிர்ந்து பார்க்க வைக்கும் உயரமும், கண்களின தீட்சண்யம் என அனைத்தும் அவரை வெகுவாகக் கவர்ந்தது.
“நீங்க யார் தம்பி…..?”, ரணதேவ் தன் கம்பீர குரலில் ஓர்வித மகிழ்ச்சி பொங்கக் கேட்டார்.
“இவர் ஆதித்ய கரிகாலன். நம்ம ஊர் தலைவர் தமிழன்பனோட மகன். அவர் தொழில் எல்லாம் இவர் தான் பாத்துக்கறாரு… இயற்கை முறையில விவசாயமும் தனியா செஞ்சிட்டு இருக்காருங்க ஐயா.. ரொம்ப நல்ல பையன்”, கணேசன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
“வணக்கம் தம்பி…. கணேசன பாத்த சந்தோஷத்துல உங்கள விசாரிக்க தாமதம் ஆகிரிச்சி. ரொம்ப சந்தோஷம். வழிநடத்த நாங்க தயாரா இருக்கோம்…”, எனக் கூறிச் சிரித்தார்.
“நன்றிங்க சார்”, ஆதித்யனும் புன்சிரிப்புடன் கூறினான்..
“தாத்தான்னு கூப்பிடுங்க தம்பி…. அப்பா அம்மா எல்லாரும் சவுக்கியமா?”, ரணதேவ்.
“எல்லாரும் நல்லா இருக்காங்க. தங்கச்சிக்கு வர சனிக்கிழமை வளைகாப்பு. உங்கள அழைக்கணும்னு வீட்ல சொன்னாங்க ஒரு வேலையா நானும் உங்கள பாக்கணும்னு நானே வந்துட்டேன்”, ஆதித்யா.
“என்ன விஷயம் சொல்லுங்க தம்பி”, ரணதேவ்.
“உங்க நிலத்த எனக்கு லீஸ் குடுத்தா பரவால்லயா இருக்கும். உங்க நிலம் பக்கம் தான் என் நிலம் இருக்கு… இப்ப எக்ஸ்போர்ட் ஆர்டர் எடுத்து இருக்கேன். உங்க நிலத்துலயும் பண்ணா சரியா இருக்கும்”, ஆதித்யா நிதானமாகக் கூறினான்.
“இனிமே நாங்களே பாத்துக்கலாம்னு இருந்தோம் தம்பி…. நான் என் பேத்திகிட்ட கலந்து பேசிட்டு சொல்றேன்”, ரணதேவ்.
“சரிங்க தாத்தா…. அம்மா அப்பா கொஞ்ச நேரத்துல வருவாங்க… நானும் இப்ப அழைக்கறேன். என் தங்கச்சிக்கு வர சனிக்கிழமை வளைகாப்பு நீங்க குடும்பத்தோட வந்து ஆசீர்வதிக்கணும்”, ஆதித்யா எழுந்து நின்று அழைத்துவிட்டுக் கிளம்பினான்.
ரணதேவ் ஒருவித இரசனையுடன் அவனைப் பார்த்துவிட்டு கணேசனிடம் விசாரித்தார்.
“பையனுக்கு கல்யாணம் ஆகிரிச்சா கணேஷா?”, ரணதேவ்.
“இல்லைங்க ஐயா. பாப்பாக்கு நான் பாத்து வச்சி இருக்கறது தம்பிய தானுங்க ஐயா…. உழைச்சு மேல வந்த குடும்பம். இவர் தான் மூத்தவர். இவருக்கு இளையவர் ஒருத்தர் அப்பறம் கடைசி பொண்ணு. நம்ம பாப்பாவ நல்லா பாத்துப்பாங்க ஐயா. தமிழன்பன் கயல பத்தி உங்களுக்கே நல்லா தெரியும்… உங்க முடிவு தான். நான் இன்னும் அவங்ககிட்ட பேசல… இவருக்கு பொண்ணு தேடிட்டு தான் இருக்காங்க”, கணேசன் விவரங்களை வரிசையில் அடுக்கினார்.
“நல்லது…. பாக்கலாம்…. என் ஈசன் யாருக்கு யாருன்னு முடிச்சி போட்டு இருக்கான்னு….. “, என ரணதேவ் வேறு விஷயங்களைப் பேச ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் தமிழன்பனும், கயலும் ரணதேவ்வை விஷேசத்திற்கு அழைத்துவிட்டு சென்றனர்.
சனிக்கிழமை காலை ஆருத்ரா மேகமலை வந்திறங்கினாள்.
ரணதேவ் அவளையும் அழைத்துக் கொண்டு இதழியின் வளைகாப்பிற்குக் கிளம்பினார்.
அங்கே……….