11 – ருத்ராதித்யன்
மீண்டும் ஆயுஸால் கடத்தப்பட்ட மகதன் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆயுஸ் கீழே கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் மகதனை வெறித்தவாறே அமர்ந்திருந்தான். அருகில் கிஷான் காயப்பட்டுப் படுத்துக்கிடந்தான்.
அடிக்கூண்டில் அடைக்கப்பட்ட மகதன் மயக்கமருந்தின் வீரியத்தால் படுத்துக் கிடந்தது.
இரத்த வாடை அதன் உடலில் இருந்து வந்தபடியே இருக்க, அந்த மயக்கத்திலும் அது முகத்தை சுளிப்பது ஆயுஸின் கண்களிலும் பட்டது.
பொதுவாகவே புலிகள் தூய்மை விரும்பிகள். தன்னை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ளும்.
ஒவ்வொரு முறை வேட்டையாடி உண்டபின் நீர்நிலைக்கு சென்று தன் கைகால் உடல் என அனைத்தும் கழுவிகொள்ளும். பெறும்பாலும் அது முழுதாக நீரில் குளித்து ஆட்டம் போட்டுவிட்டு தான் வெளியே வரும்.
பூனை குடும்பத்தில் நீருக்கு பயப்படாத மிருகம் புலி தான் என்கிறார்கள்.
லேசான உறுமல் சத்தம் கேட்டபடியே இருந்தது.
இன்னும் சில மணிநேரங்கள் கழித்து இதனை அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.
ஆனால் ஆயுஸிற்கு இதனை உயிருடன் கொடுக்க சுத்தமாக விருப்பம் இல்லை. தன் ஆட்களில் பலரைக் காயப்படுத்தி, திறமையானவர்களைக் கொன்ற மகதனை ஆயுஸ் கொல்லவே நினைத்தான்.
ருதஜித்தின் மிரட்டலும், இதன் உயிருக்கு கூறிய பணமும் அவனை மகதனுக்கு எதிராக செயல்படாமல் வைத்திருந்தது.
கர்நாடகாவில் இருந்து மலையோரமாகவே கேரளா நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது அவர்கள் வாகனம்.
“ஹலோ… ருதஜித் ஜீ…. நாங்க பார்டர் தாண்டிட்டோம்… எங்க வரணும்?”, ஆயுஸ்.
“நான் சொல்றேன்… நீ சாலக்குடில நில்லு”, எனக் கூறி வைத்துவிட்டான்.
உடனே வேறொரு நம்பருக்கு அழைத்து, “ராஜ்…. அந்த புலிய கேரளா கொண்டு வந்துட்டாங்க.. எங்க தங்கவைக்கறது?”, ருதஜித்.
“குடோன் ஒன்னு ரெடி பண்ணிருக்கேன். இனிமே நீ கடத்தறத அங்க அனுப்பிடு… லொகேஷன் அனுப்பறேன்”, எனக் கூறியவன், “ருதஜித்… உனக்கு குடுத்த டைம் போயிட்டே இருக்கு… எப்ப வேணா ரிஷித் வருவான்… அவன் வர்றப்ப எல்லாமே அங்க இருக்கணும்…. புரியுதா?”, என மிரட்டலான குரலில் கூறினான்.
“கண்டிப்பா ரிஷித் சார் வரப்ப எல்லாமே இங்க இருக்கும் ராஜ்…. நான் எல்லா இடத்துலையும் ஆளைவிட்டு தேடிட்டு தான் இருக்கேன்”, எனக் கூறிவிட்டு வைத்தான்.
ருதஜித் முகத்தில் பயமும், உடலில் நடுக்கமும் அடங்க வெகு நேரம் பிடித்தது.
அரைமணி நேரம் கழித்து ஆயுஸிற்கு அழைத்து இடத்தைக் கூறிவிட்டு, அடுத்த வேலையை விரைவில் தருவதாக கூறி புலிக்கு கூறியிருந்ததில் பாதி பணத்தை அவனுக்கு அனுப்பினான்.
“புலிய அங்க பத்திரமா ஒப்படைச்சதும் மீதி உன் அக்கவுண்ட்ல இருக்கும்”, எனக் கூறி வைத்துவிட்டான்.
நானிலன் கல்லூரி சுற்றுலாவில் இருந்து இல்லம் வந்த பிறகும் வாட்டமாகவே இருந்தான்.
“தம்பி நிலன்….”, என அவனது அப்பா அழைத்தார்.
“சொல்லுங்கப்பா…”, என அருகில் சென்று நின்றான்.
“ஏன்ப்பா முகம் வாட்டமா இருக்கு? உடம்பு சரியில்லையா? “, என அவர் முகத்தையும் உடலையும் கண்களால் ஆராய்ந்தவாறே கேட்டார்.
“அதுல்லாம் ஒன்னுமில்லப்பா…. ஊருக்கு போயிட்டு வந்த அலுப்பு தான்….”, நானிலன் சமாளித்தான்.
“போயிட்டு வந்து ஒரு மாசமாச்சே தம்பி… உடம்புக்கு முடியலன்னா சொல்லுப்பா டாக்டர போய் பாக்கலாம்…. “, கண்களில் கனிவும், கவலையும் போட்டிப் போடக் கேட்டார் நானிலன் தந்தை அரங்கநாதன்.
“அதுல்லாம் ஒன்னுமில்லப்பா… வந்ததுல இருந்து வேலை நிறைய இருக்கு… சரியான தூக்கம் இல்லை…. அதான்.. தூங்கினா சரியாகிடும்ப்பா… நீங்க கவலப்படாதீங்க….”, என தன் எண்ணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவரின் முகம் பார்த்துப் பேசினான்.
“சரி தம்பி….. இந்த வம்சத்துல இருக்கறது நீ ஒருத்தன் தான். அதை மனசுல வச்சிட்டு இருய்யா…. அம்மாவுக்கு நான் மருந்து குடுத்துட்டு வரேன்…. நீ அதுக்குள்ள காலேஜ்க்கு ரெடியாகி கிளம்பி வா.. நான் டிபன் எடுத்து வைக்கறேன்”, எனக் கூறிவிட்டு எழுந்து சென்றார் அரங்கநாதன்.
ஐம்பது வயது என்று சொன்னால் நம்ப முடியாத தோற்றம் கொண்டவர் அரங்கநாதன். ஆனால் இப்போது எழுபதைக் கடந்தவர் போல நடக்கிறார். அவரின் மனதில் கவலையும், சோகமும் அளவுக்கு அதிகமாகவே அப்பிக்கிடக்கிறது.
இந்த பத்து நாட்களில் அவர் முழுதும் மாறிப்போயிருந்தார். கண்முன்னால் நடந்த விபத்து அவரை தலைகீழாக கவிழ்த்திருந்தது.
ஒரு கல்யாணத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் போது நெடுஞ்சாலையில் கடையோரமாக நிறுத்தி டீ வாங்க இறங்கி சென்றார்.
அவர் காரை விட்டு இறங்கிய நான்காவது நிமிடம் அவர் வந்த காரின் முன்பக்கம் இன்னொரு கார் எதிரில் தறிகெட்டு வந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே மகளும் மருமகனும் இறந்துவிட்டனர். அவரின் மனைவி பக்கவாட்டில் விழுந்ததில் தலையில் அடிபட்டு சுயநிறைவின்றி போய்விட்டார்.
சத்தம் கேட்டு திரும்பியவர் நெஞ்சம் ஜீவனற்று ஒடிந்துவிழுந்தது.
அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸிற்கு போன் செய்வது முதல் மற்ற வேலைகளை பார்த்தனர்.
அந்த சமயம் தான் நானிலன் குமரியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான். வீடு வந்ததும் செய்தியறிந்து பதறியபடி மருத்துவமனை நோக்கி ஓடினான்.
அக்காவும் மாமாவும் துணிப்பையில் சலனமற்று உறங்கிக்கிடந்தனர். தந்தை கண்ணீரை கட்டுப்படுத்தியபடி நின்றிருந்தார்.
“அழுதுடு அரங்கா… உன் பையனும் பொண்டாட்டியும் உன்ன நம்பி தான் இருக்காங்க… துக்கத்த மனசுல ஏத்திக்காத…. அத இறக்கிடு… அழுதுடு டா”, என அவர் நண்பர் ஒருவர் பேசியபடி அவரை அணைக்கவும், தூரத்தில் ஓடிவரும் மகனைக் கண்டு கண்ணீரை வழிய விட்டார்.
தன் வம்சத்தின் கடைசி குருத்து.. அதையாவது தழைக்கவைக்க வேண்டும் என உள்ளுக்குள் முடிவெடுத்தார்.
“அப்பா… அப்பா… என்னாச்சிப்பா… அம்மா எங்கப்பா….. அக்கா … அக்கா… எந்திரிக்கா…. மாமா.. மாமா…எந்திரிங்க மாமா…. அக்கா…. அக்கா…..”, என இருவரின் உடலின் மீதும் விழுந்து அழுபவனை இழுத்துப்பிடிக்க மூன்று பேர் தேவைபட்டனர்.
நண்பர்கள் அவனுடன் வந்ததால் அவனை இழுத்துபிடித்து மற்ற காரியங்களை செய்ய உதவினர்.
மனைவி இன்னும் கண் விழிக்கவில்லை.. அவள் விழித்து மகளையும் மருமகனையும் கேட்டால் என்ன பதில் சொல்வது? என மனதுள் நொந்தபடி மகளுக்கும் மருமகனுக்கும் தன் கையால் கொள்ளி வைத்தார்.
விரைவில் பேரப்பிள்ளையை வைத்து உங்களை மிரட்டுகிறேன் எனக் கூறியவளின் மேல் நெருப்பள்ளி கொட்ட வைத்துவிட்டானே இந்த ஆண்டவன் என அவனையும் சபித்தார்.
அனைத்தும் முடிந்து மனைவி கண்திறக்கும் கணத்தை எதிர் நோக்கி காத்திருந்தார்.
நர்ஸ் வந்து நிலனை அழைத்து விஷயம் கூறவும் தாயைக் காணாமல் தந்தையை அழைக்க அவசரமாக வந்தான்..
“அப்பா….. அம்மா கண் முழிச்சிட்டாங்க”, என வலி குரலில் வந்து கூறும் மகனைப் பார்த்தார்.
அவன் முகத்தில் பிறந்ததில் இருந்து மென்னகை இல்லாமல் இருந்து பார்த்ததில்லை. ஆனால் இன்று ஜீவனே இன்றி முகமெல்லாம் இருண்டு, தனக்கு தாயாவது மிஞ்சுவாளா என்ற தவிப்பும் நம்பிக்கையும் கொண்டு வந்து அழைத்தவனைக் கண்டு அரங்கநாதன் இன்னும் நொருங்கிப்போனார்.
“தம்பி நிலன்…. அம்மா நம்மகூடதான் இருப்பா… நீ முகத்த இப்படி வைக்காதய்யா … முகம் கழுவிட்டு பழைய நிலன்ஆ அம்மாவ வந்து பாரு”, எனக் கூறி ஐசியூ உள்ளே சென்றார்.
நிலன் தன் மனதை சமன்படுத்த எத்தனை முயன்றும் முடியவில்லை. அவன் மனதை அப்படியே படம்பிடித்துக் காட்டும் முகம் அவனுக்கு.
“போடா குடுக்கமாட்டேன்… நீ வேற வாங்கிக்க….இது என்னது.. “, என அக்கா சண்டையிட்டால் நொடியில் முகம் வாடி நிற்பான்.
அதைக் கண்டு, “இப்படி மூஞ்ச வைக்காத…. உனக்கு கண்ணாடி முகம்… இந்தா இத வச்சிக்கோ”, என அக்கா அவனை தோளணைத்து தலைக் கலைத்து விளையாடுவாள்.
இனி அப்படி யாரும் தோளணைக்கமாட்டார்கள். நான் வம்பிலுக்கவும் முடியாது… வாடிய மனதை எதைக் கொண்டு மலரச் செய்வது? தந்தைக்காகவும் தாயிற்காகவும் முடிந்தளவு தன்றை தெளிவாக்கிக் கொள்ள முயன்றான்.
அவனால் முயல மட்டுமே முடிந்தது. தண்ணீரில் முகம் கழுவி அழுந்த துடைத்தவன் நடிக்க முயன்றான்.
மிதிலன் காட்டுக்குள் சென்றுக் கொண்டிருந்தான். அவன் அருகில் பாம்பின் வாடை எங்கோ வந்தது. அது எங்கென்று அறிய சுற்றிலும் பார்வையைச் சுழற்றினான்.
சத்தம் எழுப்பாமல் அருகிலுருக்கும் பாறையின் மேல் ஏறி கண்களைச் சுற்றினான். தூரத்தில் ஏதோ நெளிவது போல் தெரிந்தது.
அவன் பின்னால் மரத்தின் மேல் இருந்து அவன் தலைக்கருகில் வந்து நாக்கை நீட்டி சத்தம் எழுப்பியதும் திரும்பியவன் மிரண்டு நின்றான்….