14 – ருத்ராதித்யன்
மிதிலன் நின்றிருந்த மரக்கிளையில் இருந்து தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த பாம்பு அவன் தலைக்கு பக்கவாட்டில் வந்து ஸ்ஸ்ஸ் என சத்தம் எழுப்பியது.
மிதிலன் முதலில் திகிலடைந்து திரும்பும் முன் பறவைகள் கீச்கீச்கீச் என பதற்றமாக சத்தமிடவும், அந்த பாம்பு அவனுக்கு பின்னிருந்த பாறையில் விழுந்து வேகமாக ஊர்ந்துச் சென்றது.
சட்டென ஓடும் பாம்பையும், கத்தும் பறவைகளின் ஒலியையும் கண்டு அருகில் வேறு மிருகம் வருகிறதா எனப் பார்த்தான்.
எதிரே ஏதோ அசைந்து சென்றதை பார்த்தான் அல்லவா அது அவன் அருகில் வந்திருந்தது.
ஆனால் அதன் உடல் தூரமாக தான் இன்னும் தெரிகிறது. தலைமட்டும் இவன் நின்ற பாறைக்கு கீழே தெரிகிறது.
மிதிலன் அசையாமல் நின்று பார்வையை மட்டும் கூர்மையாக்கினான்.
கீழே ஒரு பாம்பின் தலை தெரிந்தது.
சருகுகளின் மத்தியில் அதன் முழு நீளம் அவனுக்கு அவ்விரவில் தெரியவும் இல்லை. பாறை இடுக்குகளாய் இருக்கும் இடத்தில் பாம்பின் உடல் முழுதாய் காணும் வாய்ப்பும் இல்லை.
மிதிலன் அந்த பாம்பின் தலையை கவனித்துவிட்டு அடுத்த பாறையில் தாவி நின்று மற்ற இடங்களை பார்வையால் அலசினான்.
காட்டுக்குரங்கின் கூச்சலும் , பறவைகளின் ஒலியும் இன்னும் பதற்றமாக ஒலித்தது.
எந்த பெரிய மிருகம் அருகில் இருக்கிறதென தெரியவில்லை. பொதுவாக காட்டில் வழக்கத்திற்கு மாறான ஒலி எழுந்தால் ஆபத்து என்று பொருள்.
மிதிலன் சுற்றிலும் கண்ணையும், காதையும் கூர்மையாக்கியபடி மெல்ல சத்தம் எழுப்பாமல் நடந்தான்.
அந்த பாம்பும் அவன் பின்னோடே சத்தமில்லாமல் தொடர்ந்தது.
சிறிது தூரம் கடந்ததும் மர இடைவெளியில் பந்தம் எரிவது கண்டு மிதிலன் வேகமாக அவ்விடம் நகர்ந்தான்.
அந்த பாம்பும் அவன் பின்னோடே சத்தமில்லாமல் அவனை பின்தொடர்ந்து மரத்தில் ஏறி கிளைகளின் ஊடே தன் உடலை மறைத்துக்கொண்டு வெளிச்சம் பாய்ந்திருக்கும் இடத்தைக் கண்டது.
“ஏய் புள்ள….எங்கிருக்க? “, மிதிலன் அழைத்தான்.
சத்தமில்லாது போகவும் சுற்றிலும் பார்வையை பதித்தான். மலைவேம்பு குச்சியில் பல வண்ண நிற துணி சுருட்டி பாறை இடுக்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
அதைக் கண்டு சிரித்த மிதிலன், “ஆத்தா நுவலி…. வாத்தா…. ஐயன் செஞ்சது தப்பு தான்….உன்னை விட்டுட்டு ராணியம்மாவ பாக்க போயிட்டேன்.. பெரியய்யா என்னை தேடி வந்துட்டு போனாங்கன்னு தெரிஞ்சதும் ஓடிட்டேன் … அடுத்த தடவை கூட்டி போறேன்….இப்ப குடிசைக்கு போலாம் வாத்தா….”, என மென்மையாக பேசினான்.
“ஐயன் பேச்சுக்கு மதிப்பு குடுத்து தான் ஒரு வாரமா நானும் பேசாம இருந்தேன். ஆனா நீரு இரண்டு தடவை ஐயாவை பாக்க போயிருக்கீரு….. அப்ப கூட என்கிட்ட சொல்லல… இன்னிக்கு ஏரனய்யா சொல்லலன்னா எனக்கு எதுவும் தெரிஞ்சிருக்காதுல்ல…. ஏன் பொய் சொன்னீங்க ?”, என ஒரு பெண் குரல் மட்டும் வந்தது.
“ஐயா வேற வேலையா கூப்டாங்க… அதான் போனேன்…. சொல்லக்கூடாதுன்னு இல்லத்தா…. நீ மொத என் முன்ன வா.. இந்த இடத்துல பெரிய உருப்படி ஏதோ இருக்கு… காட்ல எல்லாம் பயந்து கத்துதுக…. சீக்கிரம் நாம இங்க இருந்து போலாம்த்தா”.
“முடியாது…. ஐயா இன்னும் ஊருல தானே இருக்காரு…. என்னை நாளைக்கு கூட்டிட்டு போறேன்னு வாக்கு குடுங்க . இல்ல நானே போய் ஐயாவ பாத்துக்கறேன்”.
“சரித்தா… ஐயாகிட்ட கூட்டி போறேன்….சீக்கிரம் என் பக்கம் வா குடிசைக்கு போலாம்… இந்நேரத்துல இங்க வந்து உக்காந்திருக்கியே புள்ள…. “, என கவலையுடன் கூறினான்.
“இது என் வீடு… என் வீட்ல எனக்கு யாரு கெடுதல் செய்யப்போறா ?”, எனக் கூறியபடி எதிரில் இருந்த மரத்தில் இருந்து குதித்தாள் நுவலி.
ஐந்து அடி உயரத்தில் இறுகிய தேகமும், கூர்மையான கண்களும், அளவான கூந்தலுடன் காட்டில் மலர்ந்த செந்தாமரையாக நின்றாள்.
பதினைந்து வயதிற்குட்பட்ட அழகும் மெறுகும் அவள் உடலில் கூடியபடி இருந்தாலும், அவள் வெளிர்நீலம் கலந்த கண்கள் அவளை முற்றிலும் கடல்தேவதையாக காட்டியது.
“ஏன் புள்ள நீ பாட்டுக்கு இந்த இடத்துல வந்து உக்காந்திருக்க…. இது பாம்பு அதிகம் இருக்கற இடமுன்னு தெரியாது? உன்ன பாக்கற வரை எனக்கு உசுரே இல்ல”, என கடிந்துக் கொண்டான் மிதிலன்.
“இது என் காடு… இங்க இருக்க ஒரு சருகு கூட எனக்கு தீங்கு நினைக்காது ப்பா….. உங்களுக்கு முயல் சுட்டேன்… இருங்க எடுத்துட்டு வரேன்…. “, என ஒரு இலைக்குவியலை தூக்கியபடி அந்த குச்சியில் இருந்த துணியை அவிழ்த்து இடையில் சொருகி கொண்டாள்.
பள்ளி முடிந்து வந்ததும் தாவணி மாற்றும் பழக்கமுள்ளதால் தாவணி தேவதையாக தந்தையுடன் பேசியபடி நடந்தாள்.
“நான் வந்தப்ப வெளிச்சமா தான் இருந்துச்சி…. முயல பிடிக்க ஓடினதுல இவ்வளவு தூரம் வந்துட்டேன். முயல்கறி நல்ல ருசிப்பா…. நான் ஏற்கனவே சாப்டுட்டேன்… நீங்களும் இதையே சாப்டுங்க…. ஆச்சிக்கு தனியா எடுத்து வச்சிருக்கேன் நீங்க முன்ன குடிசைக்கு போங்க நான் இத குடுத்துட்டு வரேன்”, என முன்னே ஓடினாள்.
அவள் பாதத்தை தொடர்ந்தபடி அந்த பாம்பும் வந்து காடு முடிவதற்கு சில அடிகள் முன் நின்று தனக்கு முன் செல்லும் மிதிலனையும் , நுவலியையும் பார்த்துக் கொண்டிருந்தது.
மிதிலன் திரும்பி திரும்பி பார்த்தபடி ஏரன் ஐயா குடிசை நோக்கிச் சென்றான்.
“வா மிதிலா… நுவலி எங்கிருந்தா?”, ஏரன்… அந்த ஊரின் தலைவர்.
“நம்ம நாககாட்டுல தான் ஐயா…. பயமில்லாம அங்க போய் உக்காந்திருக்கு…. கைல மூலிகை இருந்தாலும் என் மனசு பதறுது…”, எனக் கூறியபடி அவருக்கு அந்த முயல்கறியைச் சாப்பிட கொடுத்தான்..
“நுவலி பிடிச்சாளா?”, என ஏரன் ஐயா சிரித்தபடி அந்த கறியை சுவைக்க ஆரம்பித்தார்.
“ஆமாங்கய்யா….. கைல எப்பவும் பொருளோடவே போரா வாரா… பள்ளிகூடத்துக்கு கூட தூக்கிட்டு போகுது. சரியான கத்தி பைத்தியம்”, என மிதிலன் கூறியபடி உண்ண ஆரம்பித்தான்.
“நுவலிக்கு அப்படியே அவ தாத்தன் கைபக்குவம்…. அவரும் இப்படி தான் இடுப்புல எந்நேரமும் ஒருபக்கம் கத்தியும், ஒரு பக்கம் மூலிகையும் கட்டிகிட்டு சுத்துவாரு… அப்ப எல்லாம் பெரிய காடையும், வேற பறவையும் வேட்டையாடி வருவாங்க. அதை அவரு தான் நெருப்புல சுட்டு தருவாரு… அவ்ளோ ருசியா இருக்கும்… அந்த கைமணம் நுவலிக்கு வந்திருக்கு”, என தன் வாழ்நாளில் இனிமையாக கழிந்த நாட்களை நினைத்தபடிக் கூறினார்.
“நான் தான் என் ஐயனை பாத்தது இல்லைங்களே…. “, என ஒரு நொடி நிதானித்தவன், “ஐயா… பெரிய உருப்படி ஏதோ அந்த பக்கம் இருக்கு போல… இன்னிக்கு நான் நுவலிய தேட போனப்ப ஏதோ என் பின்னாடியே வந்த மாதிரி இருந்தது. ஆனா என் கண்ணுக்கு ஒன்னும் தட்டுப்படல…. ஒரு பாம்பு தான் என் கிட்ட வந்துட்டு பயந்து ஓடிச்சி…. நான் நின்ன பாறைக்கு கீழ இன்னொரு பாம்பு தல மட்டும் தெரிஞ்சது…. உடம்பு கண்ணுக்கு தெர்ல.. நாளைக்கு பகல்ல போய் பாக்கணும்… நம்ம குடிசைக்கு வந்துட்டா பிரச்சினை தான்”, என அவன் உணர்ந்த விஷயத்தினை தனக்கு தோன்றிய சந்தேகத்தோடு கூறினான்.
“எந்த இடத்துல பாத்த மிதிலா?”, ஏரன் ஐயா திடுக்கிட்டு கேட்டார்.
“நம்ம பாறைக்குகை கிட்ட ஐயா”.
“நான் வரேன்…. மத்தவங்கள கூப்புட வேணாம்…. குடிசை சுத்தி மூலிகைய புதுநடவு பண்ண சொல்லணும்…. புள்ளைங்கள காட்டுக்குள்ள அனுப்ப வேணாம்”, என தனக்குள் எதையோ நினைத்து பயந்தபடி அவரது குரல் ஒலித்தது.
“என்னாச்சி ஐயா ஏன் இப்படி உடம்பு நடுங்குது?”, நடுங்கும் கரத்தை பற்றியபடி கேட்டான்.
“நாளைக்கு பாத்துட்டு சொல்றேன் மிதிலா… ஐயா எப்ப ஊருக்கு கிளம்பறாங்க?”, எனக் கேட்டு பேச்சை மாற்றினார்..
“தெர்ல ஐயா… நம்ம ஆயி கல்யாண விஷயமா வாக்கு கேக்கலாமுன்னு சொன்னேன்.. பௌர்ணமிக்கே இன்னும் நாள் இருக்கு… அமாவாசை அப்ப வரேன்னு சொன்னாரு….. அப்பறம் நம்ம தமிழரசன் ஐயாவோட மூத்த பையன பத்தி தகவல் சேத்த சொன்னாரு…. “, பேசியபடி இருவரும் உண்டு முடித்து கைக்கழுவ எழுந்தனர்.
இவர்கள் இருவரையும் தூரத்து மரக்கிளையில் ஊஞ்சல் ஆடியபடி அந்த பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது.
அது உடலை அசைத்ததில் அந்த மரமே ஒரு நொடி இலைகளை உதிர்த்து நிலைபெற்றது.
பெரிய பெரிய மூச்சாக அது ஸ்ஸ்ஸ் எனும் சத்தத்தை மெதுவாக இழுத்துவிட்டபடி நுவலி சென்ற திசையைப் பார்த்தது.
“ஆச்சி…. இந்தா உனக்கு முயல்கறி சுட்டுட்டு வந்துட்டேன்”, என அந்த கிழவியின் குடிசைக்குள் வந்தாள்.
“நான் கேட்ட முயல்கறியா?”, என தீனமாக ஒலித்தது அந்த குரல்..
குச்சிக்கு போர்வை சுற்றி இருப்பது போல் இருந்தது அந்த கிழவியின் உடல்.
அதற்கு நூத்து இருபது வயதாகிறது என்று பேச்சுண்டு. உண்மையில் அந்தக் கிழவியின் வயது யாருக்கும் தெரியாது. கிழவி அதை கூறியதும் கிடையாது.
அத்தனை சுருங்கிய தோளும், இறுகிய தசைகளும், கிழவிக்கு நிமிர்ந்தே நடக்கும் வரத்தை தான் அருளி இருந்தது.
அது சாமியாடும் போது மட்டும் குரல் காட்டையே அதிர வைக்குமாம். இக்கிழவியின் மேல் வனயட்சி இறங்கினால் எந்த நொடியில் என்ன நடக்கும் என்பது இன்று வரையில் மர்மமாகவே உள்ளது.
அக்கிழவியிடம் நுவலி ஒரு விஷயத்தை கறக்கவே அவர் கூறியபடி பிறந்து சில மாதங்கள் ஆகி, இந்த எடை, இந்த அடையாளத்துடன் இருக்கும் முயலை பிடித்து ஒரே நொடியில் அதன் உயிரை பிரித்ததும் இத்தனை மணிதுளிகளுக்குள் அதனை நன்றாக தீயில் வாட்டி, குறிப்பிட்ட இலையின் சாற்றை பிழந்துவிட்டு, மற்றொரு இலையின் நடுவில் ஊறவைத்து எடுத்துவரக் கூறியதால் அது போலவே செய்துக் கொண்டு வந்திருந்தாள்.
“என்ன ஆச்சி… நீ சொன்னபடி செஞ்சி இருக்கேனா?”, என அந்த கிழவியின் வாயைப் பார்த்தபடி கேட்டாள்.
அக்கிழவி முழுதாக உண்டுவிட்டு, “ஒரு நிமிஷம் தாமதம் பண்ணிட்ட…. அடுத்த தடவை சரியா செஞ்சிட்டு வா… நீ கேக்காததும் ஒன்னு சொல்வேன்”, என மர்மமாக புன்னகைத்துவிட்டு எழுந்து சென்றார்.
“இங்க பார் ஆச்சி… நீ சொன்னபடி நேரத்த சரியா கணக்கு போட்டு தான் பண்ணேன். நீ எனக்கு போக்கு காட்டாத”, என கோபம் வந்து கேட்டாள்.
“பொறுமை இல்லாத சிறுக்கி என் முன்னால நிக்க கூடாது… ஓடு உன் குடிசைக்கு… காலைல நிறைய வேலை இருக்கு”, எனக் கூறி அவளை வெளியே தள்ளி கதவடைத்துக்கொண்டாள் கிழவி.
“ஆச்சிஈஈஈஈஈ”, என கத்திவிட்டு தன் தந்தையைத் தேடி ஓடினாள்.
அவள் வருவதை மரத்தில் இருந்து பார்த்த பாம்பு பெரிதாக மூச்சை வெளியிட்டு சத்தமாகவே ஸ்ஸ்ஸ்ஸ் எனும் சப்தத்தை எழுப்பியது.
அந்த சத்தம் கிழவியின் காதில் தெளிவாக விழுந்ததும் மர்மமாக மீண்டும் சிரித்தார்.