16 – ருத்ராதித்யன்
“குட் ஈவினிங் சார்….. “, என கண்மயா கூறிவிட்டு சக்ஸராவை இடித்தாள்.
சகஸ்ரா பேசமுடியாமல் வாயும் தலையும் மட்டும் அசைத்து அவனுக்கு வணக்கம் தெரிவித்தாள்.
சகஸ்ராவைக் கூர்ந்துப் பார்த்தபடி, “இன்னும் உனக்கு இந்த வியாதி சரியாகலியா சகஸ்ரா? நான் குடுத்த டேப்லட் சாப்டல போலவே?”, என கண்கள் விரித்து மென்னகைப் புரிந்தபடிக் கேட்டான்.
ஒருவாறு தன் இதயத்தை இயல்பாக துடிக்க வைத்து, “நான் ஏற்கனவே எடுக்கற மெடிசன் நல்ல ரிசல்ட் குடுக்கறதால அதை நான் எடுக்கல சார்”, என மெல்லக் கூறினாள்.
“இஸ் இட்?”, என அவர்களை சுற்றி வந்து அந்த தேளைப் பார்த்தான்.
அந்த 30 அங்குல நீளமுள்ள தேளை அவன் இரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்ன என்ன இதுல மாடிஃபை செஞ்சிருக்க கண்மயா?”, என அந்த தேளை வெட்டவெளிக்கு கொண்டு வந்து அதன் உடலமைப்பையும், செயல்பாடுகளையும் ஆராய்ந்தவாறுக் கேட்டான்.
“இதோட எடை மூனு கிலோ வரும்… பின் வால்ல தான் விஷம் இருக்கு…. முன் கொடுக்குகள் ரொம்பவே பலமானது… அந்த பெரிய எலியை கொடுக்குல பட்ட வேகத்துல பிச்சி எறிஞ்சிடிச்சி சார்….தவிர இதன் உணர்ச்சிக்கால்களால 200 அடி வரைக்கும் உணரமுடியும்”
அவன் அந்த தேளுக்கு தன் கைகளை கொடுத்து அதை உணர்ந்தபடி தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தான்.
அவனின் அபாயமில்லாத தொடுகையில் அதுவும் அவன் கைவழியே அவன் தோளுக்கு பயணமானது.
கண்மயாவும் சகஸ்ராவும் அவனை பயம் கலந்த பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“கண்மயா…. நான் இதோட முன் கொடுக்குலையும் விஷத்தை குடுக்க சொன்னேன்ல”, எனக் கேட்டான்.
“அது இயற்கைக்கு எதிரானது சார்… அப்படி செஞ்சா அதோட விஷமே அதை சாகடிக்கவும் வாய்ப்பிருக்கு”.
“இயற்கையா…. நான்சென்ஸ் … நாம உருவாக்கறது தான் எல்லாமே…. நமக்கு ஆக்கற சக்தி இருக்கு… ஆற்றலும், திறமையும் இருக்கறப்ப ஏன் இயற்கைய பின்பற்றனும்? இனி வரப்போல நாட்கள்ல நான் உருவாக்கி ப்ரோக்ராம் பண்ண உயிரினம் தான் இந்த பூமில வாழணும்….. ஏன் மனுஷனே நான் உருவாக்கற விதத்துல தான் இனிமே பொறப்பான்…. நான் சொன்னபடி செய்… இது எனக்கு பிடிக்கல”, என பேசியபடி அந்த தேளை அந்த அறையின் மூலையில் இருந்த இரும்புப் பெட்டியில் அடைத்து தீயிட்டு கொளுத்தினான்.
பல்லாயிரம் ஆண்டு கழித்து மீண்டெழுந்த உயிரினம் இயற்கையாக இருந்த காரணத்தினால் மீண்டும் தீயில் மாண்டது.
கண்மயாவும், சகஸ்ராவும் பயம் தொண்டையை அடைக்க வெடவெடத்து நின்றனர்.
“அப்பறம் கண்மயா தேனிக்கு போயிருந்தியாமே…. அங்க எதாவது வித்தியாசமா பாத்தியா?”, என அவள் அருகில் வந்து வினவினான்.
“இல்ல சார்…. ஒரு ப்ரண்ட் வீட்டு விஷேசம் போயிட்டு வந்துட்டோம்”, என சன்னமான குரலில் கூறினாள்.
“ஓஓஓ… அப்பறம் ஏன் இந்த பைல் எல்லாம் வெளியே போச்சி?”, என அவர்கள் தயாரித்திருந்த பைலைக் காட்டினான்.
“அது….அது….. “, என இருவரும் எச்சிலை விழுங்கியபடி அவனைப் பார்த்தனர்.
“இந்த லேப் பத்தி கம்ப்ளைண்ட் குடுக்க போனீங்களா?”, எனக் கேட்டபடி அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்து அவர்கள் தோள் மேல் கைப் போட்டான்.
“இல்ல சார்… அது தெரியாம…. நாங்க…. வந்து…. அது….”, என சகஸ்ராவும் கண்மயாவும் மாற்றி மாற்றி உளறினர்.
“ரிலாக்ஸ் கேர்ள்ஸ்…. வாங்க நாம போற வழில பேசிக்கலாம்”, என இருவரையும் தோளோடு அணைத்தபடி வெளியே அழைத்து வந்தவன் ஒரு சொகுசு வேனில் இருவரையும் ஏற்றினான்.
“அக்தர்….. வண்டிய கர்நாடகா விட சொல்லு” , கதவைத் திறந்தவனுக்கு உத்திரவிட்டு ஏறினான்.
“பாஸ்…. இந்த லேப்?”, என இழுத்தவனுக்கு, “குளிர்காலமா இருக்குல்ல…. குளிர்காயறதுக்கு எரிச்சிடு…. பாசில்ஸ் மத்த முக்கியமான விஷயத்தை மட்டும் எடுத்துக்க…. “, எனக் கூறிவிட்டு கதவை சாற்ற ஆணையிட்டுவிட்டு அந்த வேனில் இருந்த பாத்ரூமிற்கு குளிக்கச் சென்றான்.
படிகட்டாக இருக்கும் கட்டுடலில் மேலிருந்து நீர் அவன் கட்டிய உடல் வழியே பயணித்து தரையை அடைந்தது.
சகஸ்ராவும் கண்மயாவும் நடுங்கியபடி ஓரமாக நின்றிருந்தனர்.
அவர்கள் அங்கிருந்து கிளம்பிய அரைமணிநேரத்தில் அந்த லேப் கொழுந்து விட்டு எரிந்து அப்பகுதி மக்களைக் குளிர்காய வைத்தது.
நீரில் தன்னை மறந்து நின்று நாற்பது நிமிடம் கழித்து வெளியே வந்தவன் அறைக்குச் சென்று உடைமாற்றிக் கொண்டு வந்தான்.
“போய் குளிச்சிட்டு வாங்க கேர்ள்ஸ் சாப்டலாம்”, என மேலாடையை அணிந்தபடிக் கூறினான்.
“இல்ல சார்… நாங்க வீட்டுக்கு போய் பாத்துக்கறோம்”, சகஸ்ரா ஒருவாறு தன்னை சமன்படுத்தியபடிக் கூறினாள்.
“வீட்டுக்கா?”, எனக் கேட்டு சன்னமாக சிரித்தவன், “நீங்க வீடுன்னு ஒன்னு இருக்கறத இனிமே மறந்துடுங்க….. சொல்றத செஞ்சா எல்லாருக்கும் நல்லது… இல்லைன்னா….. “, என அவன் இருவரையும் பார்த்த பார்வையில் இருவரும் ஒடுங்கிப் போயினர்.
“சார் ப்ளீஸ்….. நாங்க எதுவும் பண்ணல… எங்கள விட்றுங்க”, கண்மயா சகஸ்ராவை பிடித்தபடிக் கேட்டாள்.
“கமான் கண்மயா…. ஐ அட்மையர் யூ ஆல்வேஸ்….. நீ ஆவ்ஸம் ஹீயூமன். ஐ மீன்… உங்க பாஷைல இயற்கையாவே நீ மல்டி டேலண்ட் மட்டுமில்ல மல்டி ஜென்டர் பெர்சன்… உன்னால ஆண், பெண் இரண்டு வகையான உணர்வு, உணர்ச்சி இரண்டும் உணர முடியும். உன்ன இன்னும் கொஞ்சம் ட்யூன் பண்ணா நீயே உன் குழந்தைய பெத்துக்கவும் முடியும்… பூக்கள்ல நடக்கற மாதிரி”, என கண்மயா அருகில் நெருங்கி வந்து, தன் கையை அவள் நின்றிருந்த இடத்தில் சற்று மேலே உயர்த்தி வைத்து அவள் கண்களைப் பார்த்தான்.
“இந்த கண்ல ஆணுக்கு இருக்கற டன்னல் வ்யூவும் இருக்கு, பெண்ணுக்கு இருக்கற வைடர் வ்யூவும் இருக்கு… உன்னால இரண்டு பேர் மாதிரி யோசிக்கறது மட்டுமில்ல இரண்டு துருவமாவும் செயல்படமுடியும்…. சச் எ வன்டர்…. “, என அவள் கண்களை பார்த்தபடி பேசி வந்தான்.
“சே சே… ஷிட் ஷிட்…..இந்த நேச்சர பத்தி சொல்லாம இருக்க முடியல…. இந்த நேச்சர் சுத்தமா எனக்கு பிடிக்கல…. ஒருத்தருக்கு அதிகமாவும், ஒருத்தருக்கு கம்மியாவும் குடுத்து இருக்கு… நான் எல்லாத்துக்கும் சமபலம் குடுக்க ஆசைபடறேன்…. அதுக்கு நீ எனக்கு மட்டுமே வேலை செய்யணும் கண்மயா… “, எனக் கூறியபடி ஒரு அறையைக் காட்டினான்.
கண்மயாவும் சகஸ்ராவும் அவனை பார்க்க, “இது உங்க ரூம்.. இரண்டு பேருக்கும் ஒரே ரூம் ஓக்கே தானே? 15 நிமிஷம் ரெடி ஆகி வாங்க.. உங்க திங்க்ஸ் இதுல இருக்கு “, எனக் கூறிவிட்டு வேனின் முன்பகுதிக்குச் சென்றான்.
கண்மயாவும் சகஸ்ராவும் திரண்ட நீருடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அந்த அறையின் உள்ளே சென்றனர்………
தாஸ் பதுங்கிய சிறிது நேரத்தில் இருவர் அவ்வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்தனர்.
வந்தவர்கள் நேராக மாட்டுக் கொட்டகை நோக்கிச் சென்றனர்.
தாஸுடன் வந்த ஒருவன் மாட்டுக் கொட்டகைக்கு அருகில் இருந்த வைக்கோல் புதரில் மறைந்திருந்தான்.
“டேய்.. அந்த கன்னுகுட்டி தான்… சேம்பில் எடு”, என ஒருவன் கைக்காட்டினான்.
பெரிய ஊசியை எடுத்து பொருத்தியபடி கன்றைச் சுற்றி வந்து, அது உறங்குவதை உறுதிபடுத்திவிட்டு மயக்கமருந்தை அடித்தான். அங்கிருந்த மற்ற மாடுகளும் மயங்கி கீழே அமர்ந்த பின்னர் தீரனின் உடலில் இருந்து இரத்தத்தை எடுத்தனர்.
மற்றவன் தீரனின் வாலில் இருந்து முடியை பிடுங்கினான். சற்று மெல்லிய முடியானது வேருடன் வந்தது.
“நிஜமா இது கன்னுகுட்டியா டா?”.
“ஆமாடா… நான் இன்னிக்கு மதியம் பாத்தேன்… எப்படி குதிச்சி வெளையாடுது தெரியுமா.. இது முழிச்சிருந்தா ஒருத்தன் கிட்ட வரமுடியாது.. அப்படி துள்ளுது…. இந்த வீட்டு ஆளுங்களோட உருண்டு விளையாடுது”
“சரி வா… ஒரு நாள் நாம தூக்கிட்டு போயிடலாம்… இத வச்சி சினை சேத்தி இது மாதிரி நிறைய மாட்ட உருவாக்கி வித்தா காசு மழையா கொட்டும்”.
“சரி வா போலாம்”
“இரு இரு… இந்த கேமிராவை வைக்க சொல்லி இருக்காங்க…. எங்க வைக்கறது?”,என சுற்றும் முற்றும் பார்த்தான்.
“இது எதுக்கு?”
“இந்த மாட்டோட பழக்கவழக்கம் பாக்கணுமாம் … நம்ம காசி தான் குடுத்துவிட்டான்”, என அந்த கொட்டகையின் ஒரு ஓட்டில் சொருகிவிட்டு சிறிதாக இருந்த சோலார் ரிசீவரை ஓட்டுக்கு மேலே நீட்டி விட்டான்.
“இதுக்கு கரெண்ட்?”
“சோலார் பவர்ல ஓடும் டா… வா போலாம்”, என இருவரும் வந்த வழியே சென்றனர்.
அவர்கள் சென்றதை உறுதி படுத்திய பின்பு தாஸ் மெல்ல எழுந்து வந்தான்.
“டேய் டேனியல்….பீட்டர்…..”, என அழைத்தான்.
“என்னடா இவனுங்க திருட வந்திருப்பானுங்கன்னு பாத்தா மாட்டுகொட்டாய்ல என்ன பண்ணிட்டு போறானுங்க?”, தாஸ் மயங்கி கிடக்கும் மாடுகளை பார்த்தபடிக் கேட்டான்.
“அண்ணா.. அவனுங்க இந்த கன்னுகுட்டியோட இரத்தத்தையும் முடியும் எடுத்துட்டு ஒரு கேமிரா வச்சிட்டு போயிருக்கானுங்க”, என டேனியல் கூறினான்.
“என்னடா இது? ஒன்னுமே புரியல”, என தாஸ் தலையை சொறிந்தான்.
“அண்ணே…. இது ஏதோ பேஜார் விவகாரமா இக்கீது…. உடனே யாத்ராம்மாவுக்கு போன போடு”, என பீட்டர் கூறினான்.
தாஸும் சற்று தள்ளி வந்து யாத்ராவிற்கு அழைத்தான்.
அவள் அடர்ந்த காட்டிற்குள் சென்றதால் அழைப்பு அவளை எட்டவில்லை.
“போன் பூவல டா”
“நம்ம பசங்களுக்கு போடுண்ணா….”, டேனியல்.
“ஹலோ… டேய் கபீலு…. யாத்ராம்மாவ பாத்தியாடா அங்க?”, தாஸ்.
“அண்ணே… யாத்ராம்மா உள்காட்டுக்கு ஓடுனாங்க… இரண்டு பேர் மட்டும் இப்ப கேரளா பார்டர் பக்கம் ஓடறானுங்க… மத்தவங்க என்ன ஆனாங்கன்னு தெர்ல… யாத்ராம்மாவையும் பாக்கல… நீ சாயீப்கிட்ட கேளு”, ஓடுபவர்களை வண்டியில் தொடர்ந்தபடிப் பேசினான்.
“சரி அவனுங்க எங்க போறானுங்கன்னு பாரு… வுடாத”, தாஸ் பின்னர், “சாயீப்…. யாத்ராம்மாவ பாத்தியா?”, எனக் கேட்டான்.
“இல்லன்னா…. இரண்டு பேரு வடக்கால ஓட்றானுங்க…. யாத்ராம்மா அவங்கள பாலோ பண்ண சொன்னாங்கன்னு போயிட்டு இருக்கேன்”.
“சரிடா… யாத்ராம்மா கடைசியா எப்ப பேசினாங்க?”, தாஸ்.
“பத்து நிமிஷம் முன்ன…. நம்ம பெரியய்யா எஸ்டேட் பக்கம் போறதா சொன்னாங்க… அந்த பக்கம் இரண்டு பேர் போறாங்கன்னு ஜான் பக்கத்துல சொல்லிட்டு இருந்தான்”.
“சரி அவனுங்கள வுடாம தொறத்து…. “, தாஸ் தலையை சொறிந்தபடி வீட்டிற்கு பின்பக்கமாக சென்று அமர்ந்து கொண்டான்.
“என்னாச்சின்னா?”, டேனியல்.
“மேக்கால இரண்டு பேரும் , வடக்கால இரண்டு பேரும் ஓட்றானுங்களாம்…. யாத்ராம்மா பெரியய்யா எஸ்டேட் பக்கம் இருக்கலாம்னு சொல்றான்… “.
“வாண்ணா போய் பாக்கலாம்”, பீட்டர்.
“இல்லடா…. நாம இங்கயே இருக்கலாம்… வூட்ல உள்ளவங்களுக்கு ஒன்னும் ஆவக்கூடாது”.
“அண்ணே….அவனுங்க வந்தது கன்னுக்குட்டிக்காக… அதையும் நாம தான் பாத்துக்கணும்”, டேனியல்.
“சரி… நீங்க முன்பக்கம் இருங்க… நான் மறுபடியும் போன் பண்ணிட்டு வரேன்”, என மீண்டும் யாத்ரா எண்ணிற்கு அழைத்தான்………
ஆருத்ரா தன்னறையில் பைல்களை பார்த்தபடி இருக்க பூஜையறையில் இருந்த லிங்கம் அருகில் இருந்த தீப ஒளியை இழுத்து ஐந்து நொடி பிரகாசித்து பின் பழையபடி ஆனது.
அந்த பிரகாசம் வந்ததும் பறவைகளும், மிருகங்களும் படபடவெட இறக்கைகளை அடித்தபடி அங்கும் இங்கும் பறந்தன.
புதிதாக பிறந்த நாய்குட்டி தட்டுத்தடுமாறி நடந்து வந்து ‘ ஊஊ ஊ’ என ஊளையிட்டது.
இங்கே தோட்டத்தின் பின் வேலிக்கு வெளியே நின்றிருந்த பைரவக்காட்டுக் கொம்பன் கண்கள் மின்னியபடி சிறிய பைரவனைப் பார்த்துக்கொண்டிருந்தது.