35 – அர்ஜுன நந்தன்
சரியாக 11.30 மணிக்கு அர்ஜுன், யாத்ரா, தாஸ் மற்றும் ஜான் அந்தப் பாருக்கு புறப்பட்டனர்.
11.45க்கு அங்கு பாரில் அமர்ந்து இருந்தனர் நால்வரும். இரண்டு இரண்டு பேராக டேபிளில் அமர்ந்து இருந்தனர்.
சரியாக 11.55க்கு அவன் உள்ளே வந்தான். அவனைக் கண்டதும் தாஸ் அர்ஜூனிடம் அடையாளம் காட்டினான்.
“அவன் பேர் என்ன?”, அர்ஜுன்.
“ஜேம்ஸ் சார்”, தாஸ்.
“சரி அவன இங்க உக்கார வச்சி அவன்கிட்ட பேச்சுகுடு”, அர்ஜுன்.
“சார்…..”, தாஸ் தயங்கினான்.
“சொன்னத செய்”, அர்ஜுன் அதட்டினான்.
“சரி சார். அவன் இரண்டு ரவுண்ட் அடிக்கட்டும்”, எனக் கூறினான்.
ஜேம்ஸ் அவர்களுக்கு இடையில் இருந்த டேபிளில் அமர்ந்து இரண்டு பெக் குடித்தபின் தாஸ் அவனை அழைத்தான்.
“ஜேம்ஸ் ண்ணா…. “, தாஸ்.
“யாரு? ஹே தாஸ்… நீ போலீஸ்கிட்ட மாட்டலியா?”, ஜேம்ஸ்.
“கஷ்டப்பட்டு தப்பிச்சி போனேன் ண்ணா. ஆனாலும் வுடாம தொரத்துறாங்க. எங்க மறைஞ்சு இருக்கறது?”, தாஸ்.
“கம்முன்னு ஹார்பர்ல வந்து இரு கொஞ்ச நாள்”, ஜேம்ஸ்.
“இல்லன்னா.. அப்பறம் ஜாக்சன் அண்ணனுக்கு பிரச்சினை வரும். வேற எதாவது இடம் சொல்லு”, தாஸ்.
“அதுவும் சரிதான். அவன் உன் ஆளுங்க போலீஸ்கிட்ட மாட்டினதுலயே காண்டா இருக்கான். நீ எங்க போனா சேப்”, என யோசித்தான்.
யாத்ரா மெல்ல ஜேம்ஸ் பின்னால் நகர்ந்து வந்து அமர்ந்தாள்.
“தாஸு…. நீ நம்ப நீலாங்கரை ரெட்டி வூட்ல போய் இரு. அங்க எந்த போலீசும் வராது”, ஜேம்ஸ்.
“அது ரொம்ப பெரிய இடமாச்சே ண்ணா. அங்க எப்படி என்ன ஒளிய விடுவாங்க?”, தாஸ் அவனுக்கு ஊற்றிகுடுத்துக் கொண்டே நூல் விட்டான்.
“அது நம்ப ஜாக்சன் கஸ்டமர் வூடு தான். எதாவுதுன்னா நம்ம கிட்ட தான் வேலை சொல்வாங்க. அங்க இல்லன்னா இன்னும் எத்தனையோ இடம் இருக்கு. நீ ஏன் கவலை படற?”, ஜேம்ஸ் போதையில் உளறத் தொடங்கினான்.
“யார் யார் ண்ணா இருக்காங்க? நம்ம ஜாக்சன் அண்ணாத்தைக்கு அவ்ளோ செல்வாக்கு இருக்காண்ணா?”, தாஸ்.
“இருக்காதா பின்ன. எம்புட்டு சைடு வேலை அன்டர்கிரவுண்ட் வேலை பாத்து கொடுத்து இருக்கோம். சென்ட்ரல் ஹோம் மினிஸ்டர் வரை நம்ம ஆளு தான்”, ஜேம்ஸ்.
“அப்படியா ண்ணா… என்னால நம்பவே முடியல. இம்புட்டு செல்வாக்கு இருக்கறப்ப நம்ப ஜனங்களுக்கு தேவையானத கேட்டு செஞ்சி குடுக்கலாம்ல ண்ணா. ஏன் இன்னும் நம்ப குப்பத்து ஜனங்க கஷ்டப்படனும்?”, தாஸ்.
“ம்ம்ம்…. ஆமால்ல… நானும் ஜாக்சன் கிட்ட ரெம்ப தடவ சொன்னேன் அவன் கேக்கல. இப்ப இந்த சிட்டில பாதிக்கு மேல நம்ப கஷ்டமர், நம்ப ஆளுங்க தான். அவ்ளோ பேர் இருக்கு நமக்கு தெரியுமா”, ஜேம்ஸ்.
“யார் யார்லாம் ண்ணா?”,தாஸ்.
“நீ ஏன் கேக்கற?”, ஜேம்ஸ்.
“சும்மா. நம்ப இமேஜ் தெரிஞ்சிக்கதான் ண்ணா”, தாஸ்.
“அதுவா…. சொல்றேன் இரு”, என அடுத்த பாட்டில் ஆர்டர் செய்தான்.
அர்ஜூனும் யாத்ராவும் கண்களால் சைகை செய்து அவனைத் தூக்க முடிவு செய்து தாஸையும் ஜானையும் வைத்து அவனை தூக்கிக் கொண்டுச் சென்றனர் யாருக்கும் சந்தேகம் வராமல்.
கடற்கரையில் ஒரு படகின் மறைவில் அவனை உட்கார வைத்தனர்.
யாத்ரா கண் காட்டியதும் ஜான் ஒரு ஊசியை ஜேம்ஸ்க்கு செலுத்தினான்.
“என்ன மேடம் அது?”, என தாஸ் ஊசியைக் காட்டிக் கேட்டான்.
“உண்மைய சொல்ல வைக்கற ஊசி”, யாத்ரா.
“அப்ப அத எனக்கும் போட்டீங்களா?”, தாஸ்.
“ஆமா”, யாத்ரா.
தாஸின் தொண்டைக்குழி கீழே இறங்கியது இதை கேட்டதும்.
“இப்ப பேச்சு குடு தாஸ்”,என அர்ஜுன் கூறினான்.
“ஒரு நிமிஷம் செழியன். இவன நம்ம இடத்துக்கு தூக்கிட்டு போயிடலாமா?”, யாத்ரா.
“ஏன்?”, அர்ஜுன்.
யாத்ரா யோசனையாக அவனை பார்த்தாள். அதைப் புரிந்துக் கொண்ட அர்ஜுன் அவனை தூக்கிக் கொண்டு போகலாம் என கூறினான்.
“என் செல்லத்துக்கு நான் சொல்லாமயே புரியது”, என யாத்ரா மனதினில் நினைத்து சந்தோஷித்தாள்.
“எனக்கு எல்லாம் புரியுது, நீ தான் என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கற”, என அர்ஜுன் அவளின் காதருகில் இரகசியமாகக் கூறினான்.
திடீரென மிகவும் நெருக்கத்தில் அவன் குரலைக் கேட்டதும் பதறி சற்று விலகி நடந்தாள்.
“இப்ப வந்த வேலைய பாத்தா போதும்”, யாத்ரா.
“நான் தொலைநோக்கு பார்வையோட பாக்கறேன்”, என அர்ஜுன் கண்ணடித்தபடி கூறினான்.
“அந்த கரிதரனுக்கு கால் பண்ணி வரசொல்லுங்க செழியன்”, என வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.
“அவன ஏன் நீ கரிதரா ன்னு கூப்பிடற?”, அர்ஜுன்.
“அது சிவி அவன எனக்கு இன்ட்ரோ குடுக்கறப்ப அவன் அப்படி தான் சொன்னான். அதான் அப்படியே நான் கன்டினியூ பண்றேன்”, யாத்ரா.
“ஓஓ….. ஜான். நமக்கு எதாவது வாங்கனுமா?”, அர்ஜுன்.
“இல்ல சார். சக்தி வாங்கிப்பான்”, ஜான்.
“சரி நேரா வீட்டுக்கு போலாம்”” அர்ஜுன்.
“டேய் கிரி. நீ உடனே கிளம்பி நம்ம இடத்துக்கு வா”, அர்ஜுன்.
“என்னடா இந்த நேரத்துல?”, கிரி தூக்க கலக்கத்தில் பேசினான்.
“உனக்கு இன்னிக்கு நைட் டியூட்டி வந்து சேரு”, அர்ஜுன்.
“இம்சடா உங்களால. வந்து தொலைக்கறேன்”,கிரி.
“போலீஸ்காரன் நீயே தொலைச்சா யாரு டா உனக்கு கண்டுபிடிச்சி குடுப்பா?”,என யாத்ரா நடுவில் பேசினாள்.
“அதான் நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்களே. செத்தவன கூட எமன்கிட்ட சண்டைபோட்டு தூக்கிட்டு வந்து, அவன மறுபடியும் அடிச்சே கொல்லுவீங்க”, கிரி.
“புகழ்ந்தது போதும் கிளம்பிட்டியா?”, அர்ஜுன்.
“கிளம்பிட்டேன் போனை வை”, கிரி காரில் கிளம்பினான்.
“அப்படியே மாஜிஸ்திரேட்அ ரெடி பண்ணி வாக்குமூலத்த ஒரு காப்பி குடுத்து நைட்டோட நைட்டா ஜாக்சன அரெஸ்ட் பண்ணிட்டு தான் தஞ்சை போகணும்”, யாத்ரா.
“ஓ அவனயும் பார்சல் பண்ணனுமா?”, அர்ஜுன்.
“அந்த யோகிய மடக்க முக்கியமான ஆதாரம் இவன்தான். இவனவச்சி அவன முடிச்சிறலாம்”, யாத்ரா.
“யோகிய பிடிக்க சேரலாதன பிடிச்சாலே போதுமே”, அர்ஜுன்.
“இல்ல பத்தாது. ஜாக்சன்கிட்ட பெரிய நெட்வர்க் இருக்கு. சென்ட்ரல் மினிஸ்டர் இதுல எப்படி இன்வால்வ் ஆகறானு நீ தான் சொல்லனும்”, யாத்ரா.
அர்ஜுன் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு, ” உன் கண்ல எதுவும் தப்பறது இல்ல. நரேன இங்க நேரடியா வரவிடாம பண்ணது ஹோம் மினிஷ்டர் பையன் இஷான் சர்மா. அதுவும் இல்லாம நாங்க முதல்ல பிடிச்ச ஒருத்தன ஆர்யன் சொல்லி தான் அவன் எங்ககிட்ட அனுப்பினான். அவன் மூலமா ஒரளவு விஷயம் தெரிஞ்சது”, எனக் கூறி முன் நடந்ததைச் சுருக்கமாக உரைத்தான்.
“இவ்வளவு நடந்து இருக்கா? அப்ப பெரிய லிஸ்ட் இருக்கு”, யாத்ரா.
“லிஸ்ட் பெருசு தான். பட் நீ சொன்னமாதிரி ஜாக்சன பிடிச்சாலே போதும் மத்தவங்கள லாக் பண்ணிடலாம்”, அர்ஜுன்.
“சரி நாம நாளைக்கு சாயங்காலம் தஞ்சைல இருக்கணும் அதுக்கு தகுந்தாமாதிரி வேலைய சீக்கிரம் முடிக்கணும்”, யாத்ரா.
“ஜான் அவன தனி ரூம்ல கட்டி வை. தாஸ் நீ இங்க வா”, என அர்ஜுன் அழைத்தான்.
“என்ன சார்?”, தாஸ்.
“உன் குப்பத்துல மொத்தம் எத்தனை பேர் இருக்காங்க?”, அர்ஜுன்.
“மொத்தம் 350 பேர் சார்”, தாஸ்.
“சரி அவங்க குடும்பம் குட்டி பத்தின விவரமெல்லாம் எனக்கு ரெடி பண்ணி குடு. யாத்ரா சொன்னமாதிரி நான் இடம் பாக்கறேன்”, அர்ஜுன்.
“சார். நிஜமாவா சார்..”, எனக் கண் கலங்கினான் தாஸ்.
“அட என்ன நீ கண்ண தொட. நாங்க சொன்னத செஞ்சி தருவோம். நீங்க எல்லாரும் உடனே கிளம்பி தேனி போங்க. அங்க உங்கள ஒருத்தர் வந்து கூப்டுப்பாரு. அங்க உங்களுக்கு தங்க டெம்பொரரியா இடம் குடுத்து வேலை குடுப்பாங்க”, என அர்ஜுன் கூறினான்.
“கொஞ்ச நாள்ள தனி இடத்துல வீடும் கட்டி தர ஏற்பாடு பண்ணுவோம்”, என யாத்ரா சம்பாஷனையில் கலந்துக் கொண்டாள்.
“ரொம்ப நன்றி மேடம் நன்றி சார்”, என உணர்ச்சி பெருக்கில் கை எடுத்து கும்பிட்டான் தாஸ் .
“அர்ஜுன் சார் அவனுக்கு மருந்து பவர் குறையப் போகுது”, என ஜான் கூறினான்.
“வாங்க சார் நான் எல்லாத்தையும் சொல்ல வைக்கறேன்”, என தாஸ் முன்னே நடந்தான்.
அர்ஜூனும் யாத்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டே ஜேம்ஸ் அருகில் சென்றனர்.
கிரியும் சரியாக வந்து சேர்ந்ததால் கையில் கேமிராவோடு ஜேம்ஸ் அருகில் சென்றனர்.
தாஸ் கேட்க கேட்க ஜேம்ஸ் போதையில் அனைத்தும் மடைதிறந்த வெள்ளமாகக் கொட்டினான்.
இந்த ஐந்து ஆண்டுகளாக தான் ஜாக்சன் ஹார்பரில் இருக்கிறான். இதற்கு முன் அவன் எங்கிருந்தான்? என்ன என்ன குற்றங்கள் செய்தான்? யாரையெல்லாம் கொன்றான் ? என அவனது வரலாறு படமாக்கப்பட்டது.
இதைக் கேட்டவர்க்ள் ஜாக்சனைத் தூக்க இதைவிட சிறந்த சமயம் கிட்டாது எனப் புரிந்து கொண்டனர்.
“ஜான் நீயும் தாஸும் இங்கயே இவன மயக்கம் தெளியாம பாத்துகோங்க”, என யாத்ரா கூறிச் சென்றாள்.
“சரி பூவழகி. உனக்கு பசிச்சா டேபிள்ல சாப்பாடு ரெடியா இருக்கு எடுத்து சாப்பிடு”, என கூறினான் ஜான்.
“சரி ஜான் பாத்துக்க”, என சிரித்தபடி ஜானின் தோளில் தட்டிச் சென்றாள் யாத்ரா.
“என்ன ராங்கி உனக்கு மட்டும் உபசரிப்பு எங்க இருந்தாலும் பலமா இருக்கு”, கிரி.
“அது அப்படி தான். இப்ப நீ என்ன பண்ண போற?” யாத்ரா.
“ஏதோ பிளான் பண்ணிட்ட நீயே சொல்லு”, கிரி சேரில் அமர்ந்தான்.
“இந்த எவிடென்ஸ் வச்சி மாஜிஸ்திரேட் கிட்ட உடனே வாரண்ட் வாங்கி ஜாக்சன அரெஸ்ட் பண்ணு”, அர்ஜுன்.
“இப்பவா”, கிரி.
“ஆமாம் அவன அரெஸ்ட் பண்ணி எங்ககிட்ட குடுத்துடு”, யாத்ரா.
“ஏன்?, கிரி.
“சில பல வேலைகள் இருக்கு அவன வச்சி. இவன் சொன்ன லிஸ்ட்ல இருக்கறவங்கள எல்லாம் விசாரி எல்லாரையும் லாக் பண்ண பாயிண்ட் பிடி. எவனும் ஜாக்சன தேடி வரக்கூடாது. வந்தா அவனுங்க உயிருக்கு கியாரண்டி இல்ல”, யாத்ரா.
“டேய் என்னடா பிளான்?”, கிரி.
“எங்களுக்கு ஜாக்சன் வேணும். ஆனா ஊருக்கு முன்னாடி அவன் தப்பிச்சிட்டதா இருக்கணும்”, அர்ஜுன்.
“ம்ம்…. சரி செய்றேன் எத்தனை நாள் டைம்?”, கிரி.
“நாளைக்கு காலைல நாங்க தஞ்சை கிளம்புறோம் அப்ப ஜாக்சன் எங்ககிட்ட இருக்கணும்”, யாத்ரா.
“டேய்… இப்பவே மணி ஒன்னு டா. எப்படி?” கிரி.
“சரி நாங்க மதியம் 1 மணிக்கு தான் கிளம்பறோம். அப்ப அவன் இருக்கணும். உனக்கு முழுசா 12 மணி நேரம் இருக்கு”,என அர்ஜுன் தன் வாட்சைப் பார்த்தபடிக் கூறினான்.
கிரி அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு மாஜிஸ்திரேட்க்கு கால் செய்தான்.
அவன் வேண்டுகோளின்படி ஆதாரங்கள் ஏற்கப்பட்டு ஜாக்சனை அரெஸ்ட் செய்ய ஜாமின் இல்லா வாரண்ட் வழங்கபட்டது.
போலீஸ் காலை 3 மணிக்கு ஜாக்சனை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
அவனை கைது செய்ததும் வந்த போன் கால் லாயர் குரூப்ஸ் மற்றும் பல பிரச்சினைகளை கிரி தூசி போல தட்டிக் கொண்டு இருந்தான்.
“பெரும் புள்ளிகளை அவர்களின் இமேஜை வைத்து மிரட்டி ஒடுக்கினான், தன் மேலதிகாரிகளை மதிக்காது தன் போக்கில் (அதாவது அர்ஜுன் யாத்ரா திட்டப்படி) நடந்து கொண்டான்.
காலை 10 மணிக்கு அவனை கோர்ட்டில் ஆஜர் படுத்தக் கொண்டுச் செல்லப்பட்டான்.
டிராப்பிக்கில் சிக்கியவேலை அர்ஜூனும் யாத்ராவும் போலீஸ் வண்டியின் முன் தகராறு செய்யத் துவங்கினர்.
“யோவ். கண்ணு தெர்ல வந்து வண்டில இடிக்கற?”, யாத்ரா.
“ஒழுங்கா பேசு. நீ சரியா வராமா தப்பா வந்தா நான் என்ன பண்ணட்டும்?”, அர்ஜுன்.
“நீ தான் வண்டிய இடிச்ச ஒழுங்கா பணம் குடு”, யாத்ரா.
“நான் ஏன் குடுக்கணும். நீ தான் ராங் சைட் வந்த என் தப்பு இதுல இல்ல”, அர்ஜுன்.
இவர்கள் இங்கே சண்டை போடக் கூட்டம் கூடியது. போலீஸ் வேனில் இருந்த காவலர்கள் ஒவ்வொருவராக இறங்க கடைசியில் ஒருவன் மட்டும் இருந்தான்.
ஜானும் சக்தியும் முகமூடி அணிந்தபடி வந்து அந்த போலீஸை தாக்கிவிட்டு ஜாக்சனை அழைத்துக் கொண்டு ஓடினர்.
ஜாக்சனும் தன்னை சேர்ந்தவர்கள் என்ற நினைப்பில் உடன் ஓடினான்.
ஜாக்சன் தப்பியதும் அர்ஜூனும் யாத்ராவும் அங்கிருந்து கிளம்பினர்.
வண்டிக்கு திரும்பியவர்கள் ஜாக்சனைக் காணாது தேடத் தொடங்கினர்.
மதியம் டிவியில் பிரேக்கிங் நியூஸ் என ஜாக்சன் தப்பியது ஓடிக் கொண்டிருந்தது.
ஜாக்சன் சுயநினைவின்றி தஞ்சை நோக்கி செல்லும் வாகனத்தில் படுத்துக் கொண்டு இருந்தான்.
ஜான் வண்டியை ஓட்ட அர்ஜூனும் யாத்ராவும் சீட்டில் சாய்ந்தபடி இருந்தனர்.
“இன்னும் எவ்வளவு நேரமாகும் ஜான்?”, யாத்ரா.
“இன்னும் 5 மணி நேரமாகும் பூவழகி”, ஜான்.
“சரி நான் தூங்கறேன்”,எனத் தூங்க ஆரம்பித்தாள்.
அர்ஜூனும் ஜானும் அவ்வப்போது பேசியபடி வந்தனர்.
யாத்ரா உறங்குவதைக் கண்ட அர்ஜுன் உதட்டில் மென்னகைப் படர்ந்தது.
“சரியான ராங்கி . செய்யறத எல்லாம் செஞ்சிட்டு எப்படி தூங்கறா . ஆனாலும் உன்கிட்ட இப்படி நான் சிக்குவேன்னு நானே எதிர்பாக்கல டார்லிங். இன்னும் என்ன என்ன பண்ணுவன்னு பாக்க நான் ஆவலா இருக்கேன். லவ் யூ எப்ப சொல்லட்டும்”, என மனதினில் பேசிக் கொண்டே வந்தான் அர்ஜுன்.
அர்ஜூனின் பார்வை யாத்ராவை வருடுவதைக் கண்ட ஜான் புன்னகையுடன் வண்டியைச் செலுத்தினான்.
இங்கே சேரலாதன் யோகியின் முன்பு பயத்தில் நின்றுக் கொண்டு இருந்தான்.
ஜாக்சனை காணவில்லை என்று தெரிந்ததில் இருந்து யோகியின் கோபம் எரிமலையாக குமுறிக் கொண்டு இருக்கிறது.
“எப்படி நம்ம ஆளுங்க மிஸ் பண்ணாங்க?”, யோகி.
“கோர்ட்ல வச்சி தூக்க பிளான் பண்ணது யோகி ஜி. ஆனா அவன் கோர்ட்டுக்கே வரலை. போலீசும் நாலா பக்கம் தேடிட்டு இருக்கு. எங்க போனான்னு தெரியல”, சேரலாதன் பம்மி பம்மி கூறினான்.
“இந்த டீல் மட்டும் வெளியே தெரிஞ்சா நாம மட்டும் இல்ல இன்னும் பல பெரும் புள்ளிகள் பேரும் வெளிய வரும் அப்பறம் பிரச்சினை நம்ம கைய மீறிடும். யார் உயிருக்கும் கியாரண்டி இல்ல .சீக்கிரமே அவன பிடிக்கணும் ஆள அனுப்பு”, என யோகி கர்ஜித்தான்.
சேரலாதன் பயந்து வெளியே வந்து சென்னையில் தன் அடியாட்களுக்கு கால் செய்து வேகப்படுத்தினான்.
“சே… எங்க போய் தொலஞ்சான் அவன்? இந்த பரிதி வேலையா இருக்குமோ? அவள பாலோ பண்றவனுக்கு போன் பண்ணி கேப்போம்”, என தனக்குதானே பேசிக்கொண்டு உளவாளியை அழைத்தான்.
“அந்த பரிதி என்னடா பண்றா? எதாவது தெரிஞ்சதா?”, சேரலாதன்.
“இல்லைங்கய்யா. எப்பவும் போல இங்க தான் இருக்கா. எங்கயும் போகல. யாரையும் தனியா பாத்து பேசவும் இல்லங்க”, உளவாளி.
“சரி. இன்னும் கொஞ்சம் கிட்ட இருந்து கண்காணிக்க முயற்சி பண்ணு. எதாவுதுன்னா உடனே போன் பண்ணு”, சேரலாதன்.
“சரிங்கய்யா”, உளவாளி.
“இப்ப என்னதான் பண்றது. இந்த ஆளு இப்படி கத்தறான்”, என யோசிக்கத் தொடங்கினான் சேரலாதன்.