19 – ருத்ராதித்யன்
நன்னிலன் தன் அறையில் படுத்தபடி ஏதோ சிந்தனையில் இருந்தான். அந்த பெரியவர் கூறிச் சென்றதன் பொருள் புரியாமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.
திருவானைக்காவலில் அவனுக்கு கிடைத்த சுவடி அவன் மேஜையில் கிடந்தது.
அதைப் பற்றிய சிந்தனை தான் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
அவனால் அதை முழுதாக புரிந்துகொள்ள இயலவில்லை. தமிழ் பயின்றவன் தான் ஆனாலும் தமிழி எழுத்துக்குக்களை அவனால் புரிந்துக் கொள்ள இயலவில்லை.
அவனது உள்மனதின் சொற்படி அவன் கடலில் உள்ள ஏதோ ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும்.
மனதில் தீராத உத்வேகம் அலையாய் அவனை அறைந்தபடியே இருக்க, இது அவன் தனியாய் ஆற்றும் காரியமுமில்லை என்பதை சற்றுமுன் தான் உணர்ந்தான்.
“தம்பி நிலன்…. இங்க வாப்பா….”, அரங்கநாதன் அழைக்கும் குரல் கேட்டு எழுந்து சென்றான்..
“சொல்லுங்கப்பா…. எதாவது வாங்கிட்டு வரணுமா?”
“இல்லப்பா…. அம்மா உன்னை கூப்பிட்றா… முழிச்சிட்டு தான் இருக்கா… நீ போய் அவளோட கொஞ்சம் பேசிட்டு இரு நான் வெளியே போயிட்டு வந்துடறேன்”, என ஒரு மஞ்சள் பையுடன் வெளியே சென்றார்.
“சரிங்கப்பா…. பாத்து போயிட்டு வாங்க”, என கதவடைத்துவிட்டு அம்மாவின் அறைக்குச் சென்றான்.
உள்நுழையும் முன் ஒரு நொடி தன்னை நிலைப்படுத்திக்கொண்டு சிரித்த முகமாக உள்ளே நுழைந்தான்.
“அம்மா…. என்ன பண்றீங்க? மருந்து எல்லாம் சரியா சாப்டீங்களா?”, எனக் கேட்டபடி அவர் அருகில் அமர்ந்தான்.
அவருக்கு கால் மட்டும் முழுதாக செயல்படவில்லை. கைகள் நன்றாக இப்போது வருகிறது. வீல்சேரில் அமர்ந்தபடி அவரால் முடிந்த வேலைகளை கணவருக்கும் பிள்ளைக்கும் செய்ய ஆரம்பித்திருந்தார்.
இந்த ஒன்றரை மாதம் அவர்கள் வாழ்வையே மொத்தமாக புரட்டி எடுத்து இருந்தது.
தான் ஈன்ற மகளை கண்முன்னே சாகவிட்ட வலி அவரை வருத்தினாலும் மகனுக்காகவும், கணவருக்காகவும் தன்னை தேற்றிக்கொள்ள ஆரம்பித்திருந்தார்..
மனம் தேற ஆரம்பித்தாலே உடலும் உடன் எழ ஆரம்பிக்கும். மனம் தானே அத்தனைக்கும் தலைமை செயலகம்.
“சாப்டியா?”, என பாதி வார்த்தை வெளியே வந்தது. குரல் வளமும் சற்றே பாதிப்படைந்திருந்தது. இப்போது பாதி வார்த்தை சத்தமாக வருகிறது.
“சாப்டேன் மா…. நான் கேக்கறதுக்கு நீங்க பதில் சொல்லாதீங்க… என்னையே கேளுங்க…. “, என அவரிடம் செல்லம் கொஞ்சியபடி பேசிக்கொண்டிருந்தான்.
“அம்மா… அந்த தடியன் கணேஷ் இருக்கான்ல… அவன் இன்னிக்கு என்ன பண்ணான் தெரியுமா? “, என சற்றே இடைவெளி விட்டு தாயைப் பார்த்தான்.
அவள் இவன் முகத்தை இமைகொட்டாமல் பார்த்தபடி, “என்ன பண்ணான்?”, என செய்கையில் பாதி வார்த்தையில் மீதியாக கேட்டார்.
“அவன் லவ் பண்ற பொண்ணுக்கு லெட்டர் குடுக்கறேன்னு போய் நல்லா வாங்கி கட்டிகிட்டான்ம்மா…. நல்ல வேலை அந்த பொண்ணு அவன திட்றதோட விட்றுச்சி… இல்லைன்னா பெரிய பிரச்சினை ஆகியிருக்கும்… அது காலேஜ் போர்ட் மெம்பர் பொண்ணு வேற…. நாங்களும் இனி கணேஷ் சீட் கிழிச்சி அனுப்பிடுவாங்கன்னு தான் நினைச்சோம்… கணேஷோட புண்ணியமோ அவங்க வீட்ல யார் பண்ண புண்ணியமோ அவன் தப்பிச்சிட்டான்”, என கல்லூரியில் நடந்தவைகளை அவருடன் பகிர்ந்தபடி ஒரு மணி நேரம் ஆனது கூட கவனிக்கவில்லை இருவரும்.
நிலன் இப்பொழுது தன்னை நிலைப்படுத்திக்கொண்டான். கஷ்டங்களை ஏற்று, அதில் இருந்து வெளியே வந்து, அதை கடக்கவும் பழகி வருகிறான்.
இவன் முகத்தில் தோன்றும் சிரிப்பிற்காகவே தாயும், தந்தையும் தங்களது கஷ்டநஷ்டங்களை மறைக்கிறார்கள் என்பது இப்போது புரிந்தது.
தாயின் மருத்துவ செலவிற்காக கையிலிருந்த இருப்பு மொத்தமும் கரைந்து கொண்டிருந்தது.
அரசாங்க ஊழியராக இருந்து மகளின் திருமணத்திற்கு விருப்ப ஓய்வு பெற்றவர் அரங்கநாதன்..
வந்த பணத்தில் மகளுக்கு திருமணமும் நடத்தி, மனைவியின் பெயருக்கு ரொக்கமாகவும் போட்டு வைத்தார்.
இப்போது கையில் சுத்தமாக பணம் இல்லை…. அதனால் தான் அரங்கநாதன் வீட்டை அடமானம் வைக்க முயன்று வருகிறார் அவனுக்கு தெரியாமல்.
“அப்பா எங்கம்மா இன்னும் வரல?”, என நேரம் ஆவதை உணர்ந்துக் கேட்டான்.
“தெர்ல”, என அவர் கூறிவிட்டு அவனுக்கு பால் வைக்க வீல்சேரை நகர்த்தியபடி சமயலறைக்குச் சென்றார்.
சும்மா இருக்கும் மனமும், உடலும் கண்டதை போட்டு உடைத்து பிரச்சினையை மட்டுமே கொடுக்கும் என்பதால் சிறு சிறு வேலையை அவர் செய்ய தந்தையும், மகனும் அனுமதித்தனர்.
தாய் சென்றதும் அங்கிருந்து எழுந்தவன் கண்ணில் பீரோ சாவி பூட்டப்படாமல் தொங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது.
அவன் அதை மூடும் போது ஒரு ஜெராக்ஸ் பேப்பர் கீழே விழுந்தது.
அதை எடுத்து பார்த்தவன் வீட்டின் பத்திரம் என்பதை அறிந்தான். பீரோ திறந்து பார்த்ததில் பத்திரங்கள் கலைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் பத்திரம் இல்லை என்பதை அறிந்ததும், அதன் காரணமும் யூகித்து தந்தைக்காக காத்திருந்தான்.
அரங்கநாதன் அரை மணிநேரம் கழித்து வந்து நாற்காலியில் தலைசாய்த்தார்.
“என்னப்பா வீட்ட அடமானம் வைச்சிட்டீங்களா?”, என அவர் முன்னால் வந்து கேட்டான்.
அரங்கநாதன் சட்டென மனைவியை பார்த்தார்.
“அம்மா தூங்கிட்டாங்க… ரூம் கதவ சாத்திட்டேன். நாம பேசறது கேக்காது”, என அவரின் தேடலுக்கான பதிலை கொடுத்தான்.
“அம்மாவோட மருந்து செலவுக்கு தான்ப்பா….”, என அரங்கநாதன் மெலிந்த குரலில் கூறினார்.
“அதுக்கு வீட்ட கூட விக்கலாம்ப்பா… ஆனா என்கிட்ட ஏன் சொல்லல? நான் உங்களுக்கு எதுவும் பண்ணமாட்டேனா?”, என்ற அவன் கேள்வியில் வேதனையும் கோபமும் வழிந்தது.
“உனக்கு சிரமம் வேணாம்னு தான் பாத்தேன் தம்பி… நீ மேல படிக்கணும்னு ஆசைபடற… நீ நல்லா படிச்சி சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டா எல்லாம் நீ பாத்துக்குவப்பா…. அதுல எந்த சந்தேகமும் எங்களுக்கு இல்ல”, என அவன் தலையை தடவியபடி பதில் கூறினார்.
“என் படிப்பு இந்த வருஷத்தோட முடியுதுப்பா…. மேல் படிப்புக்கு உடனே போக முடியாது. நாலு வருஷம் வேலை பார்த்த அனுபவம் வேணும். நான் வேலைக்கு தான் போகப்போறேன்…. வீட்ட அடமானம் வைக்காதீங்கன்னு நான் சொல்லமுடியாது…. ஆனா கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க… இப்ப கடனா மட்டும் வாங்கலாம்ப்பா”.
“தம்பி நீ உன் கனவை அடையணும்… இதுக்காக நீ அதை தொலைக்ககூடாதுப்பா”.
“கண்டிப்பா தொலைக்கமாட்டேன்ப்பா… உங்களையும் அம்மாவையும் தான்…. நாளைக்கு இருந்து எங்க காலேஜ்ல இன்டெர்வ்யூ நடக்குது. நான் கலந்துக்க போறேன்ப்பா….. இந்த வீடு உங்களோட கனவு … அதையும் நீங்க விடக்கூடாது ப்பா…. “, எனக் கூறிவிட்டு தன்னறைக்குச் சென்று கதவை ஒருகழித்து வைத்துவிட்டு படுத்தான்.
உதவி என்று கேட்டால் அவனுக்கு கேட்கவேண்டும் என்பதற்காக கதவடைப்பதில்லை.
அரங்கநாதன் கலவையான உணர்வுகளை சுமந்தபடி வீட்டின் முன் கதவை அடைத்துவிட்டு தன்னறைக்கு சென்றார்..
சக்தி ஆருத்ரா கூறிய டேம் பிராஜெக்ட்காக பார்க்கவேண்டிய ஆட்களை பார்த்து, பேச வேண்டிய விதத்தில் பேசி முடித்திருந்தான்.
அன்று டென்டர் யாருக்கென்று அறிவிக்கும் நாள்.
அதிபனும், விதுரனும் தங்களுக்கே அது வந்தாக வேண்டுமென்ற வெறியில் காத்திருந்தனர்.
ஆருத்ரா நடத்தி வரும் பல்வேறு தொழில்களில் இதுவும் ஒன்று. திறமையான ஆட்களை அமர்த்தி, வேலையை வாங்கும் கலையை ரணதேவ் அவளுக்கு ஆழமாகவே போதித்திருந்தார்.
வேலை செய்பவருக்கு வேண்டிய வசதிகளுடன், தப்பு செய்தால் கொடுக்கும் தண்டனை வரை அவளின் நேரடி பார்வையில் நிகழும்.
எப்போதும் சிறு பிரச்சினை தான் பெரும் அழிவிற்கு காரணமாகிறது என்பதால், சிறு தவறென்றாலும் அது அவளின் பார்வைக்கு வந்தே அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
“அதிரன்” குரூப் ஆப் கம்பெனி எம்.டி அண்ட் எக்ஸிக்யூட்டீவ் ஹெட் தான் அதிபன் அண்ட் விதுரன்..
இருவரும் இரட்டையர்கள்… குணமும் ஏறத்தாழ ஒரே போல தான். விதுரனுக்கு எதிலும் அவசரம், அதிபனுக்கு நிதானமே பிரதானம்.
தங்கள் வழியில் யார் குறுக்கே வந்தாலும் தயை இன்றி தூக்கி போட்டுவிட்டு முன்னேறி சென்றுக்கொண்டே இருப்பர்.
இப்போது இவர்களுக்கு முன் ஆருத்ரா நிற்கிறாள். அவர்களும் பல துறைகளில் வணிகம் செய்து வருகிறார்கள். இவர்கள் அளவிற்கு இல்லையென்றாலும் , காலடி பதித்த துறையில் முதன்மையாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம்.
வேறு சில துறைகளிலும் இருவருக்கும் மோதல் அவ்வப்பொழுது நிகழும். இது அவர்களின் பெரும் கனவு. இதை செய்துவிட்டால் அவர்களின் மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து நிற்கும். அதற்காகவே இத்தனை போராட்டம்.
ஆருத்ரா மக்களின் நலனை கருத்தில் கொண்டு இதை தன்வசப்படுத்தப் பார்க்கிறாள். அதிரன் கம்பெனி சுயநலத்திற்காக மட்டுமே வசப்படுத்த முனைகின்றனர்..
“என்ன மேடம் தலை தொங்கி போக இவ்வளவு ஆர்வமா வந்திருக்கீங்க?”, என்றபடி விதுரன் கிண்டலாக அவள் அருகில் வந்து பார்த்தான்.
ஆருத்ரா அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அவனை கடந்து சென்றதில் உள்ளுக்குள் கொதித்து எழுந்தான் விதுரன்.
“உனக்கு எதுக்கு இவ்வளவு அவசரம் விது…. டென்டர் முடிச்சிட்டு பேசிக்கலாம்…. வா”, என அதிபன் அவனை அழைத்துச் சென்றான்..
“அந்த டேம் உடைஞ்சதா இல்லையா?”, விது.
“தகவல் வரல…..உடையலன்னு நினைக்கறேன்…. அப்பறம் அதபத்தி பேசிக்கலாம்… டென்டர் ஆரம்பிக்க போறாங்க”, என அங்கே கவனமானான் அதிபன்.
“அது உடைஞ்சா தானே நாம இதை வாங்க முடியும்?”, விதுரன் கோபமாக கேட்டான்..
“இப்பவும் இது நமக்கு தான் கிடைக்கும்…. அமைதியா இரு”, என அழுத்தமாக மொழிந்துவிட்டு ஆருத்ராவைப் பார்த்தான்.
கால் மேல் கால் போட்டபடி ஆழிமதியிடம் எதையோ கூறிக்கொண்டிருந்தாள்.
ஆருத்ராவிற்கு சேலை தான் பிடித்தமான உடை. அதை அவள் அணியும் விதமும், அவ்வுடை அவளை காட்டும் விதமும் பார்ப்பவரை கைகட்டி நிற்க வைக்கும்.
அதிபன் அவளின் தோரணைக்காகவே அவளை அடைய நினைத்தான். உடன் அவளின் கணக்கில்லாத சொத்தும், மரியாதையும் அவனுக்கு போதை ஏற்றியது.
அவளிடம் தன் பக்க தூதனுப்பி, அது பலனின்றி திரும்பி வந்ததும், அவனுக்கு அவளை அடக்கியாள வேண்டும் என்கிற வெறி தான் ஊறிக்கொண்டு இருக்கிறது.
“ஒரு நாள் உன்னை அடக்கறேன் டி”, என இப்போதும் மனதிற்குள் கூறிக்கொண்டான்.
“டென்டர் கோஸ் டூ…….”, என்ற அறிவிப்பு வந்தது.
அதிபன் முகத்தில் வெற்றிப்புன்னகை மிளிர்ந்தது….
ஆருத்ராவின் முகத்தில்…..
Nice epi…