10 – அகரநதி
அகரனும் நதியாளும் ஒருவரை ஒருவர் மறந்து அப்படியே விழுந்துகிடக்க அந்த சமயம் உள்ளே வந்த சுந்தரம் தாத்தாவும், மீனாட்சி பாட்டியும் அவர்களைக் கண்டு சிரித்து பின் வந்து எழுப்ப தயாராகினர்.
“கண்ணு அகரா… எந்திரிப்பா…. ஏன் இப்படி விழுந்து கிடக்கறீங்க? என்னாச்சி?”, சுந்தரம்.
சுந்தரத்தின் குரல் கேட்டதும் இருவரும் பதறியபடி எழுந்து நின்றனர். அகரன் சென்று சுந்திரத்தின் அருகில் நின்றுக் கொண்டான்.
“என்ன கண்ணு அப்படி பாக்கற? யாருன்னு அடையாளம் தெரியலியா?”, மீனாட்சி அகரனிடம் கேட்டார்.
“இல்ல பாட்டி”, தலையசைத்துக் கூறினான்.
“ஏன்டி வாயாடி உனக்குமா அடையாளம் தெரியல?”, மீனாட்சி நதியாளிடம் கேட்டார்.
அவளும் இல்லையென தலையசைக்க பெரியவர்கள் இருவரும் சோர்ந்தனர் இவர்களின் பதிலில்.
“ஆனா இவங்கள நான் அங்க ஊருல பாத்து இருக்கேன். இவங்க எப்படி இங்க?”, நதியாள்.
“என் பேரன் என் வீட்ல இல்லாம உன் வீட்லயா இருப்பான்?”, என கேட்டு மீனாட்சி அவளது தாடையை இடித்தார்.
“உங்க பேரனா? அப்ப …. அப்ப…. என் அகன் நீ தானா?”, என கண்கள் சந்தோஷத்தில் விரியக் கேட்டாள் நதியாள்.
“ஆமாம் நான் தான் அகரன்”, என மென்னகைப் புரிந்தபடி கூறினான் அகரன்.
“தம்பி நம்ம கண்ண மாமா பொண்ணு நதியாள். நீ இங்க படிக்கறப்ப உன் கூடவே சுத்துமே அந்த வாலு தான்”, சுந்தரம்.
ஆச்சரியத்தில் மென்னகைப் புன்னகையாக “அட அந்த நதியா…. அடையாளமே தெரியல. நல்லா வளந்துட்ட. பை த வே நைஸ் மீட்டிங் யூ அகெய்ன்”, அகரன் தன் கையை நீட்டினான்.
“வெரி ஹேப்பி மீட்டிங் யூ அகன். சாரி அன்னிக்கு உன்கிட்ட… இல்ல உங்ககிட்ட ஹார்ஷா பேசிட்டேன்”, நதியாள்.
“நோ பார்மாலிட்டீஸ் நதிமா. நீ உனக்கு எப்படி கூப்பிட வருதோ அப்படியே கூப்பிடு. ஹாஹஹாஹா… ஆனாலும் இத்தனை வருஷம் கழிச்சிம் உனக்கும் சரணுக்கும் சண்டை மட்டும் மாறவே இல்ல”, என அகரன் சிரித்தபடிக் கூறினான்.
“நான் சண்டை போட்டது தான் சரணா? இன்னுமா அவன் உன்கூடவே சுத்திட்டு இருக்கான்?”, நதியாள்.
“யாரு யார் கூட சுத்தறா?”, எனக் கேட்டபடி சரண் அங்கு வந்தான்.
அங்கு நதியாள் நிற்பதைக் கண்ட சரண் கண்கள் சிவக்க,”ஏய்… நீயா? நீ எப்படி இங்க? துரத்தி துரத்தி சண்டை போட வந்தியா?”,பொறிந்துத் தள்ளினான்.
அகரன் ஏதோ பேச வாயெடுக்கும் முன் நதியாள் கையமர்த்தி அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு கைகளை குறுக்க கட்டிக்கொண்டு சரணை அளந்தாள்.
“அதே பரட்ட தலை, டக்இன்ல ஒரு பக்கம் தொங்குற சர்ட், முகத்துல கால் கிலோ பவுடர், கிளிஞ்ச பேண்ட். இன்னும் 12த் படிக்கறப்ப இருந்த மாதிரியே தான் இருக்கடா சரணா”, நதியாள்.
“ஏய்…அதுல்லாம் நீ சொல்லாத… இரு இரு நீ எப்படி கூப்ட? சரணா வா? வேற ஒரு ரௌடி தான் அப்படி கூப்பிடுவா… உனக்கு எப்படி தெரியும்?”, அவளருகில் வந்து நின்றான் சரண்.
“ஹாஹஹா அகன் இன்னும் இவன் மண்டுவா தான் இருக்கான் . எப்படிதான் சமாளிக்கற ?”, நதியாள் சிரித்தபடிக் கூறினாள்.
“ஏய்….. அந்த ரௌடி நீ தானா?”, அதிர்ச்சியுடன் கேட்டான் சரண்.
“சுந்தா உன் காப்பு ஒரு பத்து நிமிஷம் குடேன் இவனுக்கு நான் தான் நதியாள்னு புரியவச்சிட்டு தரேன்”,நதியாள் அணிந்திருந்த குர்தியின் கை பகுதியை மேலேற்றியபடிக் கேட்டாள்.
“ஹான்ன்னன்…….”, சரண் அதிர்ச்சியில் வாய் பேச முடியாமல் நின்றான்.
“இங்க வாடா என் அன்பு அண்ணா….. நீயெல்லாம் ஒரு அண்ணணாடா? இத்தனை வருஷம் என்னை வந்து பாக்காம இருந்திருக்க. என்னை அடையாளம் தெரியாம என்கிட்டயே சண்டையும் போடுவ. ரௌடின்னு வேற சொல்லுவியா? அப்ப மிஸ் ஆன உன் மண்டைய இப்ப நான் தான் உடைக்கப்போறேன் வாடா இங்க”, நதியாள் பேசிக்கொண்டே அவனை நோக்கி அடியெடுத்து வைக்க அவன் பின்னால் நகர்ந்தான்.
“அய்ய்ய்….. என் தங்கச்சி… என் செல்லம் என் பட்டு என் புஜ்ஜூகுட்டில்ல… அண்ணன அடிக்க கூடாதுடா. அண்ணன் படிக்க இவன்கூட போயிட்டு அப்படியே அவன்கூட செட்டில் ஆகிட்டேன் டா. அண்ணன் பாவம்ல”, சரண் கெஞ்சினான்.
“லீவ்ல வந்தப்போ ஏன் என்னை பாக்கல?”, நதியாள்.
“அது அசைன்மெண்ட் ப்ராஜெக்ட் அப்பறம் ஜாப்னு போயிடிச்சி டா யாள்”, சரண் மென்று விழுங்கியபடிக் கூறினான்.
“ஹேய்… யாரது யாள் குட்டியா?”, எனக் கேட்டார் சரணின் தந்தை பரமசிவம்.
“ஹய்…. பெரியப்பா”, என ஓடிச்சென்றுக் கட்டிக்கொண்டாள் நதியாள்.
“எப்படிடா இருக்க? நல்லா படிக்கறியா?”, பரமசிவம்.
“ம்ம்…அதுல்லாம் சூப்பரா இருக்கேன். உங்க பொண்ணாச்சே படிக்காமயா?அதுல்லாம்”, எனக் கட்டைவிரலை உயர்த்தி காட்டினாள் நதி.
“என் தங்கம். எப்ப ஊருக்கு வந்த?”, பரமசிவம்.
“இப்பதான் பெரியப்பா முன்னாநேத்து. திருவிழா பாக்கலாம்னு வந்தேன். அடுத்த மாசம் பரிட்சை இருக்கு அதுக்கப்பறம் வர டைம் இருக்காது அதான் இப்பவே வந்துட்டேன்”, நதி.
“ஆமாமா…அடுத்த மாசம் செம் எழுதி டைரக்ட்ஆ ஆக்ஸ்போர்டுல எம்.எஸ் படிக்க போறா இங்க வரதுக்கு டைம் இருக்காதாம். யார்கிட்ட சுத்தற?”, சரண்.
“பெரியப்பா அண்ணன் என்கிட்ட சண்டைக்கு வந்துட்டே இருக்கான். ஊருல கூட சண்டை போட்டான் ஆனா என்னை அவனுக்கு அடையாளம் தெரியல பெரியப்பா. இப்பகூட அடையாளம் தெரியலையான்னு கேட்டா சண்டைக்கு வரான்”, முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு நதி கூறவும் பரமசிவம் உக்கிரசிவமாக மாறிவிட்டார்.
“ஏன்டா எடுபட்ட பயலே….என்ன நெஞ்சழுத்தம் இருந்தா நதிய உனக்கு தெரியலன்னு சொல்லுவ?”, பரமசிவம்.
“சண்டாளி வேலைய ஆரம்பிச்சிட்டா…..”, என முனுமுனுத்தவன் ,”அப்பா இல்லப்பா…. யாள் நல்லா வளந்துட்டாளா அதான்பா”, எனப் பம்மினான்.
“போன தடவ வந்தப்ப நதி வீட்ல இருக்கா போய் பாருன்னு அனுப்பினேன்ல நீயும் பாத்துட்டு வந்ததா சொன்ன…. அப்ப எங்க போன அன்னிக்கு?”,பரமசிவம் கிடுக்கியாக கேள்வி கேட்க சரண் முழித்தான்.
“அப்பா…அதுவந்துப்பா….. அவ…..”, என சொல்லும்பொழுதே நதி ,” அப்படியா சொல்லி அனுப்பனீங்க பெரியப்பா? அண்ணன் வீட்டுக்கு வரவே இல்லையே…. உங்ககிட்ட பொய் சொல்லிட்டு வேற யார் யாரையோ பாக்க போய் இருப்பாங்க போல. அண்ணனுக்கு இந்த தங்கச்சி மேல பாசமே இல்லை”, எனக் கண்ணைத் துடைத்தாள்.
“ஏன் நீ வந்து பாக்கவேண்டியது தானே?”, சரண்.
“வாயமூட்றா…. வீட்டுக்கு வா உன்ன கவனிச்சிக்கறேன்”, என உருமிவிட்டு சுந்திரத்தின் அருகில் வந்தார்.
“மாமா இந்தாங்க தலகட்டு வரி நோட்டு. இதுல பணம் இருக்கு. சிதம்பரத்துகிட்ட குடுத்துடுங்க. நான் சாயந்தரம் வரேன் திருவிழா ஏற்பாடு பத்தி பேசிக்கலாம்”, எனக் கூறி மீண்டும் சரணை முறைத்துவிட்டுச் நகர்ந்தார்.
“நதிகுட்டி வீட்டுக்கு வாடா. பெரியம்மா கேட்டுகிட்டே இருக்கா உன்ன”, பரமசிவம்.
“சரி பெரியப்பா நாளைக்கு புல் டே அங்க தான். நல்லா சமைச்சி வைக்க சொல்லுங்க “, எனச் சிரித்தபடிக் கூறினாள் நதி.
“சரிடா… வரேன் . வரேன் மாமா அத்தை”, பரமசிவம்.
“இந்தா டா மோர் குடிச்சிட்டு போ”,என உள்ளிருந்து மீனாட்சி கொண்டு வந்தார்.
அனைவருக்கும் மோர் குடிக்க பரமசிவம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்.
பரமசிவம் வெளியே சென்றுவிட்டாரா என உறுதி செய்தபின் நதியாளிடம் வந்த சரண் ,”ராட்சசி ராட்சசி…. இப்படிதான் கோர்த்து விடுவியா? கொஞ்சமாது உனக்கு மனசாட்சி இருக்கா? இத்தனை வருஷம் கழிச்சி பாக்கறியே உனக்கு கொஞ்சம் கூட பாசமில்லையா?”.
“அதையே நானும் கேக்கலாம்ல சரணா. இத்தனை வருஷம் வந்து என்னை பாத்தியா? உன் பிரண்ட் கூட ஜாலியா ஊர சுத்திட்டு இருந்துட்டல்ல, இந்த தங்கச்சிய மறந்துட்டு”, நதியாள் அகரனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டுக் கூறினாள்.
“அச்சச்சோ வண்டி நம்ம ஸ்டாப்க்கு வந்துரிச்சி”,அகரன் மனதில் நினைத்துக் கொண்டு ,”அதானே நதிமா. அண்ணன்னா அக்கறை வேணாம் இப்படியா தங்கச்சிய கூட தெரியாம இருக்கறது?”, நதிக்கு ஒத்து ஊதினான்.
நதி ஏதோ பேச ஆரம்பிக்கும் முன் ,” போதும் நிறுத்துங்க டா. எல்லாருக்கும் படிப்பு வேலைன்னு பாத்துக்க முடியல அதான் இப்ப பாத்துகிட்டீங்கள்ள இனிமே கேப்பு இல்லாம பழகுங்க”,என மீனாட்சி கூறினார்.
“என்னாது கேப்பா?”,சரண்.
“கேப் டா”, அகரன்.
“ஓ…. இங்கிலிபீஸு…. பாட்டி இங்கிலிபீஸுலா பேசுது”, சரண்.
சரணின் முதுகில் அகரன் மீனாட்சி நதி முவரும் மொத்தினர்.
“அடிக்காதீங்க விடுங்க… விடுங்க…. தெரியாம இந்த கூட்டத்து கிட்ட சிக்கிட்டேனே”, சரண்.
“எவ்வளவு வாங்கினாலும் உனக்குலாம் வாய் குறையுதா பாரு. எரும மாடு சரணா”, நதியாள்.
“ஆமா எனக்கு மட்டும் கொறையணும் உனக்கு லாம் எக்ட்ரா லார்ஜ் சைஸ்ல விரியணும். நீ முதல்ல கம்மி பண்ணு”, சரண்.
“நீ முதல்ல கம்மி பண்ணு”, நதியாள்.
மீண்டும் இருவரும் சண்டையை ஆரம்பிக்க அகரன் நடுவில் புகுந்தான்.
“போதும் போதும் வாங்க மேல போலாம்”, என சரணை முன்னே தள்ளிவிட்டு நதியைக் கைப்பிடித்து அழைத்துக் கொண்டுச் சென்றான்.
அவர்கள் இருவரும் கைப்பிடித்துச் செல்வதைப் பார்த்தபடியே திலகவதியும் சிதம்பரமும் உள்ளே வந்தனர்.
அவர்கள் செல்வதை பெரியவர்கள் இருவரும் குஷியுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
“மீனா… ஜோடி பொருத்தம் பிரமாதம். கண்ணன்கிட்ட பரிசம் போட நாள் பாத்துறலாமா?”,சுந்தரம்.
“என்னப்பா….யாருக்கு பரிசம் போட போறீங்க?”, சிதம்பரம் உள்ளே வந்தபடிக் கேட்டார்.
“அது யாள் தானே.. எப்ப வந்தா அத்தை”, திலகா மேலே பார்த்தபடிக் கேட்டார்.
“ஆமாம்மா… இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்ன வந்தா”,மீனாட்சி, பின் பரமசிவம் வந்தது நதியாள் குற்றப்பத்திரிக்கை வாசித்தது இருவரும் சண்டை போட்டது என அனைத்தும் கூறினார்.
“ஹாஹாஹா….இன்னும் அப்படியே தான் இருக்கா அத்தை. அதே சூட்டிப்பு …”, திலகவதி சிரித்துக்கொண்டே கூறினார்.
“ஆமா கண்ணு. அதான் நம்ம அகரனுக்கு யாள கேக்கலாமான்னு நானும் இவரும் பேசிகிட்டு இருந்தோம்”, மீனாட்சி விஷயத்தை உடைத்தார்.
சிதம்பரமும் திலகவதியும் சற்று திகைத்து தன்னிலை திரும்பினர்.
“இப்ப தானேம்மா அவ காலேஜ் படிக்கறா. கண்ணன் மச்சானுக்கு இன்னும் யாளுக்கு கல்யாணம் பண்ற எண்ணமே வந்து இருக்காது”,சிதம்பரம் எதார்தத்தைக் கூறினார்.
“அதுல்லாம் அன்னிக்கி கோவில்ல கேட்டுட்டேன். இது கடைசி வருஷமாம். ஜாதகம் விட்ற எண்ணம் இருந்தா சொல்லுன்னு மேம்போக்கா சொல்லிட்டேன்”, மீனாட்சி.
“எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லம்மா. அவங்க இரண்டு பேருக்கும் பிடிச்சா போதும். என்ன திலகா?”, சிதம்பரம்.
“ஆமாத்தை நதி நம்ம வீட்டுக்கு வந்தா சந்தோஷம் தான். கட்டிக்க போறவங்க இஷ்டம் தான் முக்கியம்”, திலகாவும் சந்தோஷமாக தன் சம்மதத்தைக் கூறினார்.
“சரி முதல்ல ஜாதகத்த பாப்போம், பொருத்தம் வந்தா கண்ணன் கிட்ட பேசி அகரன் நதிகிட்டயும் பேசலாம்”, சுந்தரம்.
“சரிங்கப்பா… அப்பா பரமசிவம் அத்தான் பைய குடுத்தாங்களா?”, சிதம்பரம்.
“ஆமாப்பா.. இந்தா…சாயங்காலம் வரதா சொன்னான். அப்ப ஏற்பாடு பத்தி பேசி முடிவு பண்ணிக்கலாம்னு சொல்ல சொன்னான்”, சுந்தரம்.
“சரிங்கப்பா… திலகா இத பீரோல வை. பத்திரம் திருவிழா காசு இருக்கு”, சிதம்பரம்.
“சரிங்க… அத்தை என்ன என்ன சமைக்கட்டும்?”,திலகவதி.
“ரொம்ப நாள் கழிச்சி யாள் வந்து இருக்கா அவளுக்கு பிடிச்சதுல்லாம் சமைச்சிடு திலகா”,மீனாட்சி.
“அவளுக்கு மீன் தான் பிடிக்கும் இப்ப திருவிழா அசைவம் செய்ய முடியாதே அத்தை”, திலகவதி.
“அவளுக்கு புளிக்குழம்பு வெண்டைக்காய் போட்டு செஞ்சா பிடிக்கும். அப்படியே சக்கர பூசனிய தாளிச்சிடு அப்பறம் நீ வைக்கிற ரசம் அவளுக்கு ரொம்ப பிடிக்கும் மிளகு சேத்து வச்சிடு அப்பறம் சாப்பிடறப்ப வத்தல் அப்பளம் போட்டுக்கலாம். அடுக்கலைல வள்ளி இருக்கா காய் அரிய சொல்லிட்டேன். நான் தோப்புக்கு போய் நுங்கும் மாம்பழமும் இருக்கான்னு பாத்து பறிச்சிட்டு வரேன். நுங்கு பாயாசம் செஞ்சிடலாம் நானே செய்யறேன் அத”, மீனாட்சி.
“என்னத்தை பேரனுக்கு பொண்டாட்டியாக போறான்னு இவ்வளவு விருந்தா?”, திலகவதி கிண்டலாகக் கேட்டார்.
“இல்லடி. அவ நம்ம வீட்ல சாப்டு எத்தனை வருஷம் ஆகிடிச்சி. அவ மட்டும் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா இன்னும் ஜமாய்ச்சிடமாட்டேன். ஊருக்கே ஒரு வாரம் விருந்து வைப்பேனாக்கும்”, முகத்தில் சந்தோஷம் பொங்கக் கூறினார்.
“என்ன மீனா ஒரு வாரம் போதுமா?”, சுந்தரம்.
“பேசிட்டே இருந்தா நேரம் போயிரும். அவளுக்கு கொஞ்ச நேரத்துல எதாவது சாப்பிட குடுக்கணும் . அப்பறம் வீட்டுக்கு வந்திருக்கேன் கவனிக்க மாட்டியான்னு என்கிட்ட வம்பிலுப்பா… நகருங்க … போயிட்டு வரேன்”, எனக் கூறி அங்கிருந்து பின்வாசல் வழியாகத் தோப்பை நோக்கி எட்டநடைபோட்டார் மீனாட்சி.
“ஏன்மா திலகா உனக்கு இஷ்டம் தானே நாங்க சொல்றோம்னு பாக்காத உன் மனசுல படறத சொல்லு எதுவா இருந்தாலும் பரவால்ல”, திகவதியை கேட்டார் சுந்தரம்.
“எனக்கு இஷ்டம் தாங்க மாமா. கட்டிக்க போறவங்க இஷ்டத்த கேட்டுட்டு நாம பேசலாம். தேவையில்லாம நாம கற்பனை பண்ணிகிட்டு இருக்க வேணாம்னு பாக்கறேன். நாம பேசறப்ப அவங்க காதுல விழுந்தாலும் தேவையில்லாத குழப்பமா போயிரும். சொந்தத்துக்குள்ள சங்கடம் வரக்கூடாது அவ்வளவு தான். நதி எங்க இருந்தாலும் நல்லா இருப்பா நம்ம வீட்ல இருந்தா இன்னும் சந்தோஷம் அவ்வளவு தானுங்க மாமா”,திலகவதி தன் மனதில் பட்டதைக் கூறினார்.
“நீ சொல்றதும் சரிதான். நானும் யோசிச்சேன் திலகா. முதல்ல ஜாதகம் பாத்து மனசு திருப்திபட்டா குழந்தைங்க கிட்ட கேக்கலாம். முன்னகூட்டி மனச கலைக்க வேணாம். இன்னிக்கு சாயந்தரம் கண்ணனையும் ராதாவையும் வரச்சொல்றேன்”, சுந்தரம்.
“சரிங்க மாமா”, திலகவதி.
“சரிம்மா நான் வயக்காடு வரை போயிட்டு வரேன். மதியம் வந்துடறேன்” ,எனக் கூறி கிளம்பினார் சுந்தரம்.
“சரிங்க மாமா”, திலகவதியும் அடுக்கலைக்குள் நுழைந்து கொண்டார்.
மேல போன நம்ம வானரங்கள் என்ன பண்ணுதுன்னு பாக்கலாம் வாங்க…
சரண் ஓரமாக பால்கனியில் கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்து அகரனையும் நதியாளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
(அப்படி என்ன பண்ணுதுங்க… நாமலும் பாக்கலாம்)
அகரனும் நதியும் அந்த பள்ளியை விட்டு சென்றதில் இருந்து எல்லா கதைகளையும் பேசிக்கொண்டு இருந்தனர்.
“அகன்… நான் 12த் படிக்கறப்ப தானே நீ அப்ராட் போன? அங்க என்ன என்ன பாத்த?”, நதியாள் அவன் மடிமீது உட்காராத குறையாக அவன் கைகளை இழுத்து வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
“வெள்ளை காகாயும் பச்சை காகாயும் பறந்தத பாத்தான். அவன் எங்கயாவது ஓடபோறானா என்ன? ஏன் இப்படி அவன் கைய இழுத்து வச்சிட்டு உக்காந்து இருக்க? கைய விடு. இரண்டு பேருக்கும் மனசாட்சி இருக்கா இல்லியா? நான் ஒருத்தன் இங்க இருக்கறதே கண்ணுக்கு தெரியலியா?”, சரண் பொறுமையிழந்து கத்தினான்.
“நீ இன்னும் இங்க தான் இருக்கியா மச்சான்? சரி கீழ போய் அம்மாகிட்ட ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வா”, அகரன்.
“அது மட்டும் போதுமா இல்ல சரக்கு எதாவது வேணுமா?”, சரண் கடுப்புடன் கேட்டான்.
“சரக்கா…. அப்ப எனக்கு கள்ளு கொண்டு வாடா சரணா”, நதியாள்.
“பொண்ணா நீ? ஏன் பட்டசாராயம் குடிக்கமாட்டியா?”,சரண்.
“அது அடிக்கடி குடிக்ககூடாது. தேவைபடற நேரத்துல தான் குடிக்கணும் சரணா. இல்லைன்னா கிட்னி சட்னி ஆகிடும் லிவரும் வெடிச்சிடும்”, நதியாள் குழந்தையைப் போல லயத்துடன் கூறினாள்.
“உங்கள…”,எனக் கையில் கிடைத்த தலகாணியைக் கொண்டு அடிக்கத்தொறத்தினான் சரண்.
அகரனும் நதியும் ஆளுக்கு ஒரு பக்கம் ஓடி மொட்டைமாடிக்குச் சென்றனர்.
“நில்லுங்க இரண்டு பேரும். அப்ப இரண்டு வருஷம் தான் என் உயிரை எடுத்தீங்க மறுபடியும் இப்ப சேந்து எத எடுக்கப்போறீங்க?”, சரண்.
“இனிமே லைப்லாங் அகன் கூட தான் இருக்கப்போறேன் டா சரணா. என்ன பண்ணுவ நீ ?”, நதியாள் அகரனின் தோளில் கைப்போட்டுக்கொண்டு கூற அகரனும், சரணும் ஒரே சமயத்தில் சாக்காகி சிலையென நின்றனர்.
என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டா…என்ன அர்த்தமா இருக்கும் இதுக்கு?