23- ருத்ராதித்யன்
கண்மயாவும், சகஸ்ராவும் அன்றைய விபத்திற்கு பின் இன்னும் அதே வாகனத்தில் தான் இருக்கின்றனர்.
ஒரு வாரமாகியும் அவன் அவர்களை கொல்லவும் இல்லை, விடவும் இல்லை.
அவன் அருகில் வைத்துக்கொண்டே அவர்களை ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு பேச்சிலும் கொல்லாமல் கொன்றுக் கொண்டிருந்தான்.
“கண்மயா….. இது பாரு… நம்மலோட அடுத்த ப்ராஜெக்ட் இதான். இந்த ஹூலாக் கிப்பான் ஜீன்ல கொரில்லா மிக்ஸ் பண்ணா எப்படி இருக்கும்?”, என தன் லேப்டாப்பில் இருந்த உருவப்படத்தைக் காட்டினான்.
“நிறைய வேறுபாடு இருக்கும் சார். தவிர முன் கை கொரில்லாவுக்கு அவ்ளோ நீளம் இல்லை… கிப்பான்னுக்கு ரொம்ப நீளமா இருக்கும்… இப்படி செஞ்சா இயற்கைக்கு எதிரா இருக்கும். அதனால பல பிரச்சனைகள் எழ வாய்ப்பிருக்கு?”
“இயற்கை… இயற்கை… இயற்கை…. “, எனக் கூறியபடி சகஸ்ரா அருகில் வந்தவன் அவள் பின்கழுத்து நாடியை தடவியபடி, “இன்னொரு தடவை நீ…. இயற்கை…. அதுக்கு எதிரானதுன்னு பேசினா…. உன் டார்லிங் சகஸ்ரா வேற மாதிரி மாறுவா மாயா…. ப்ளீஸ்… என்னை புரிஞ்சிக்க…. உனக்காக தான் இவளுக்கு ஒன்னுமே தெரியலன்னாலும் வேலை குடுத்தேன்…. நீ என்னை இப்படி அப்செட் பண்ணக்கூடாது மாயா… “, என சிணுங்கியபடி சகஸ்ராவின் பின்கழுத்தில் இருந்த ஒரு நரம்பில் சிறிதாக ஒரு ஊசியை குத்தி எடுத்தான்.
“ஆஆஆஆஆ……”, என சகஸ்ரா அடிவயிற்றில் இருந்து கத்தினாள்.
அவளது அலறலில் கண்மயா கலங்கி எழ முடியாமல் கைகட்டுகளை பார்த்துவிட்டு அவனையும் பார்த்தாள்.
“வேணாம் சார்… அவ பாவம்….அவள விட்றுங்க…. அவள ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க? அய்யோ சரா…. “, என கண்மயா கதறினாள்.
அவளது அலறல் நேரம் கூட கூட அதிகரித்ததே தவிர குறையவில்லை.
கண்மயா தன் கட்டுக்களை அவிழ்க்க முடியாமல், “சரா சரா”, என கத்திக்கொண்டிந்திருந்தாள்.
ஐந்து நிமிடங்கள் சகஸ்ராவை கதறவிட்டு , மற்றொரு ஊசியை எடுத்து அவள் கழுத்தில் குத்தியதும் அவள் வாய் கப்பென மூடி விழிகள் நிலைகுத்தி நின்றது.
“ம்ம்…. பர்பெக்ட்… ஸ்விச் அன் பண்ணிட்டு ஆப் பண்ண மாதிரி ரியாக்ஷன் நடக்குது…. உன் கண்டுபிடிப்பு எப்பவும் தனி ரகம் தான் மாயா… ஐ லவ் யூ சோ மச்…. “, என கண்மயாவின் அருகில் வந்து அவள் முகத்தை கைகளால் அளவளாவி விட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
“எங்கள விட்டுட்டுங்க சார்… ப்ளீஸ்…. நாங்க எங்கயாவது போய் எங்க வாழ்க்கைய நடத்திக்கறோம்… ப்ளீஸ் சார்”, என கண்மயா அவனிடம் மன்றாடினாள்.
“நோ நோ … ஏன் மாயா…? அழாத…. இந்த அழற உணர்வுக்கு பதிலா கஷ்டத்துல சிரிச்சா நல்லா இருக்கும்ல”, எனக் கேட்டபடி கண்மயாவின் அருகில் அமர்ந்து அவள் கைக்கட்டுகளை அவிழ்த்தான்.
“சார் ப்ளீஸ்… நீங்க என்ன கேட்டாலும் செய்யறேன்.. என் சராவ மட்டும் எதுவும் பண்ணாதீங்க சார் … அவ பாவம் சார்… குழந்தை மாதிரி”, என அவனிடம் கெஞ்சினாள்.
“குழந்தை… ஆமா மாயா… எனக்கு இந்த குழந்தை விஷயத்திலும் பெரிய அதிருப்தி இருக்கு… நீ சொல்ற இயற்கை இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் ஏன் குழந்தைய உருவாக்கற தகுதிய குடுத்திருக்கு? உனக்கு குடுக்கலாம்… எனக்கு குடுக்கலாம்… பாரு.. எவ்வளவு ஓரவஞ்சனை இந்த இயற்கைக்கு…. அப்படிபட்ட ஒன்ன நீ ஏன் எப்பவும் பெருசா சொல்ற மாயா? ஐ கான்ட் கெட் தட் பாயிண்ட்”, என அவள் அருகில் நெருங்கி தலைமுடியை ஒதுக்கியபடி கேட்டான்..
“ப்ளீஸ் சார்… எங்கள விட்றுங்க….”, கண்களில் வழியும் நீரை துடைக்கக் கூடத் தோன்றாமல் அவனிடம் இருந்து விடுபட முயன்றாள்.
“நோ க்ரையிங் மாயா…. நீங்க போய் தூங்குங்க.. ரொம்ப டயர்ட்ஆ இருக்கீங்க…. நாம நாளைக்கு நம்ம ஸ்பெஷல் லேப்க்கு போயிடுவோம்… அங்க நிதானமா பேசிக்கலாம்…. குட் நைட் ஸ்வீட் ஹார்ட்”, என அங்கிருந்து எழுந்துச் சென்றான்.
அவன் சென்றதும் அவசரமாக கண்மயா சகஸ்ரா அருகில் சென்று முகத்தைத் தட்டிப் பார்க்க அவள் பார்வை மாறாமல் அப்படியே இருந்தாள்.
அருகில் இருந்த ஒரு மருந்தை ஊசியில் ஏற்றி அவள் நரம்பில் செலுத்த மெல்ல கருவிழிகள் அசைந்தது.
சில நொடிகளில் சகஸ்ரா உணர்வு பெற்று, “மாயா…. “, என அழைத்தபடி சுயநினைவிழந்தாள்.
கண்மயா அவளை கைகளில் ஏந்தியபடி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றாள்.
“சரா….சரா….. இங்க பாரு…. இங்க பாருமா…. “, என கன்னத்தை தட்டியும் உணர்வில்லாமல் கிடப்பவளைக் கண்டு அச்சம் கொண்டு வாய்மூடி அழுதாள்.
ஒரு மணிநேரம் கழித்து மெல்ல கண்விழித்து எழுந்த சகஸ்ரா கண்மயாவை தொட்டு அழைத்தாள்.
“சரா… சரா…. எந்திரிச்சிட்டியா…. நான் ரொம்ப பயந்துட்டேன் மா…. உனக்கு உடம்பு எப்படி இருக்கு இப்ப? பரவால்லயா? “, என அவளை மெல்ல எழுப்பி அமரவைத்தாள்.
“உடம்பு வலிக்குது அவ்வளவு தான் மாயா… நீ ஏன் இப்படி அழற…. அழாத … நாம வந்த வேலைய பாக்கலாம்… நாளைக்கு லேப் போனதும் லோகேஷன் அனுப்ப ஏற்பாடு பண்ணிடணும்.. அதுக்கு யோசி”, என மெல்லிய குரலில் கூறிவிட்டு அவள் மடியில் படுத்துக்கொண்டாள்.
கண்மயா அவள் தலையை வருடியபடி நேராக படுக்கவைத்து, அமர்ந்தநிலையில் யோசனை செய்ய ஆரம்பித்தாள்.
பரத் அந்த எரிந்த லேப்பில் இருந்து ஒரு வாராமாக கிடைக்கும் பொருட்களை எல்லாம் தங்களது தனியிடத்தில் சேமித்து வைத்துக் கொண்டிருந்தான்.
டீம் ப்ளாக் …
அர்ஜுன் மற்றும் யாத்ராவின் முயற்சியில் உருவான ஒரு புது டிடெக்டீவ் டீம். இதில் சுமார் ஏழு பேர் வேலை செய்கின்றனர்.
சேரலாதனிடமும், பாண்டியனிடமும் கைப்பற்றிய பணத்தில் ஒரு பாகத்தை இந்த டீமிற்காக ஒதுக்கி வைத்து ஆட்களை சல்லடைபோட்டு தேர்ந்தெடுத்து உருவாக்கி இருக்கின்றனர்.
இதற்கு தலைமை வகிப்பது கஜேந்திர நெடுமாறன்.. தன் தந்தையிடம் இருந்த ஆட்களில் ஒரு சிலரை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து அனுப்பி வைத்தான்.
கையில் உள்ளவர்களை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தி வருகிறான்.
இருளின் நிழலாக டீம் ப்ளாக்கில் உள்ளவர்கள் பணிபுரிவார்கள்.
யாத்ராவிற்கு கொடுக்கப்படும் பயிற்சியும், அர்ஜுனுக்கு கிடைத்த பயிற்சியுடன், நெடுமாறனும் அவன் அறிந்த தற்காப்பு கலைகளை அவர்களுக்கு போதித்திருந்தான்.
பரத் தான் இந்த டீமிற்கு நேரடியாக ஆணையிட்டு வேலையை முடித்து வாங்குவான்.
அவர்கள் கொண்டு வந்து சேர்ப்பதை இவன் தான் மற்றவர்களிடம் (யாத்ரா , அர்ஜுன், கஜா) கொண்டு சேர்ப்பான்.
அர்ஜுன் தன் முகம் காட்டாமல் இந்த டீமை உருவாக்கினான். யாத்ரா அவ்வப்பொழுது வந்து பயிற்சி கொடுப்பாளே தவிர, அதை உருவாக்குபவர்களில் ஒருத்தியாக காட்டிக்கொண்டதில்லை.
ஏழு பேரில் இருவர் தான் இப்போது இந்த விஷயத்திற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
சாரதி மற்றும் பாரதி…. இருவரும் ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள்.
தாய்தந்தை குடும்பம் என்று ஏதுமற்றவர்கள். பரத்தினால் இந்த டீமிற்கு தேர்வு செய்யப்பட்டனர்..
சாரதி 25 வயது இளைஞன், பாரதி 24 வயது மங்கை.
“டேய் சாரதி…. இன்னும் எத்தன நாளைக்குடா இந்த வெந்து போன இடத்துல கிளறிட்டு இருக்கணும்?”, என எரிந்து போயிருந்த லேப்பில் ஒவ்வொன்றாக கிளறியபடி கேட்டாள்..
“நமக்கு தேவையானது இன்னும் கிடைக்கலன்னு தான் நம்மல தேட அனுப்பறாங்க… வாய் பேசாம தேடு”, சாரதி அங்கிருந்த அறையின் பாதி வெந்திருந்த கதவை தள்ளியபடி கூறினான்.
“தேடிட்டு தானே இருக்கேன்… “, என்றபடி அந்த நீல நிறத்தேளை எரித்த பெட்டியின் அருகில் வந்தாள்.
“சாரதி… இந்த பெட்டிய பாரு… வித்தியாசமா இருக்கு…. உள்ளயும் ஏதோ இருக்கு…. “, என அழைத்தாள்.
“இங்க ஒரு பீரோ இருக்கு… இதுவும் தொறக்க முடியல… உள்ள தீ போன மாதிரியும் தெரியல…. “, எனக் கூற இருவரும் ஆள் மாறி ஆள் இரண்டையும் பார்த்துவிட்டு அதை பெயர்த்தெடுக்க ஆயுத்தமாயினர்.
இவர்களுக்கு அதிநவீன கருவிகள் அனைத்தும் பயன்படுத்த பயிற்சி கொடுத்திருப்பதால் நால்வர் செய்யும் வேலையை இவர்கள் ஒருவரே சில மணி நேரத்தில் செய்துவிடுவர்.
லேசர் டார்ச் வைத்து இருவரும் அவரவர் கண்டெடுத்த பொருளை பெயர்த்தெடுக்க ஆரம்பித்து பதினைந்து நிமிடத்தில் ஒன்று கூடினர்.
சாரதி அந்த பீரோவை திறந்து அதற்குள் இருந்த சிறுபெட்டியை எடுத்து வந்தான்.
பாரதி அந்த எரிக்கும் மெஷினில் சாம்பல் கொட்டும் பகுதியை வெட்டி எடுத்து வந்தாள்.
“இன்னிக்கு உருப்படியா கிடைச்சி இருக்குன்னு நினைக்கறேன்…. வா போலாம்…”, என இருவரும் வந்த தடம் தெரியாமல் மாற்று வழியில் அந்த லேப்பை விட்டு வெளியேறினர்.
அர்ஜுனும் நந்துவும் டெல்லியில் நரேன் திவாகர் முன்னால் அமர்ந்திருந்தனர்.
“என்னடா இது? கேஸ் கைல எடுத்து ஒரு வாரம் ஆச்சி இன்னும் ஒரு ஸ்டெப்பும் முன்னாடி போகாம இருக்கீங்க?”, நரேன் இருவரையும் திட்டிக் கொண்டிருந்தான்.
இருவரும் அமைதியாக அவன் முகத்தையே பார்த்தனர்.
“பதில் சொல்லுங்கடா…. ஏன் இதுல இன்னும் ப்ராக்ரஸ் காட்டல?”
அர்ஜுனும் நந்துவும் டேபிள் மேல கை வைத்து கன்னத்தை தாங்கியபடி அவனை பார்த்தனர்.
“என் மூஞ்சில படமா ஓடுது… வாய தொறந்து பேசி தொலைங்கடா”, என நரேன் டென்சனில் கத்தினான்..
“எதுக்கு கத்தறீங்க?”, என நந்து காதை அடைத்தபடி கேட்டான்.
“இங்க ஒருத்தன் உயிர் போற அளவுக்கு பிரச்சினை பத்தி கேக்கறேன் பதில் சொல்லாம ஏன் கத்தறேன்னு கேப்பியா டா நீ?”
“இவ்வளவு டென்ஷன் ஆனா பீபி வரும்…. பீபி வந்தா சுகர் வரும்… சுகர் வந்தா கேன்சர் வரும்”, நந்து தீவிரமாக முகத்தை வைத்தபடி கூறினான்..
“சுகருக்கு அப்பறம் கேன்சர் எப்படிடா வரும்?”, நரேனும் தீவிரமாக கேட்டான்..
“சுகருக்கு மாத்திரை போடுவீங்க… அது பழகிடும்… உங்க உடம்பு அந்த மாத்திரை எடுத்து எடுத்து கிட்னிய பைலியர் பண்ணிடும்… கிட்னி பெயிலியர் ஆனது தெரியாத நீங்க வேற மாத்திரை எடுத்தா வயிறுல கேன்சர் வரும்…. இல்லையா குடல்ல வரும்…. இப்ப சொல்லுங்க சுகருக்கு அப்பறம் கேன்சர் தானே வரும்?”
“நான் என்ன கேட்ட நீ என்னடா சொல்ற? டேய் அஜ்ஜு… என்னடா இவன் இப்படி பேசறான்?”, நரேன் குழப்பமாக கேட்டான்.
“இந்த கேஸுக்காக படிச்சி படிச்சி அவன் இப்படி ஆகிட்டான்…. இந்த கேஸ் எதுக்கு எங்களுக்கு குடுத்தீங்க? யார் குடுக்க சொன்னா?”, அர்ஜுன் நேரடியாக விஷயத்தை ஆரம்பித்தான்.
நரேனின் ஆபீஸ் ஜன்னலருகில் நிழலாடியதுக் கண்டு அர்ஜுன் சத்தமாக பேச ஆரம்பித்தான்.
“வழக்கமா வர்ற மாதிரி தான்டா உங்களுக்கு அலாட் ஆச்சி…. “
“எங்களுக்கு முன்ன இரண்டு சீனியர் டீம் இருக்கறப்ப எங்களுக்கு ஏன் குடுத்தாங்க? “
“ஏன்டா வேலை பாருன்னு சொன்னா யார் குடுத்தான்னு எதுக்கு குடுத்தான்னு கேட்டு எல்லா விளக்கமும் தெரிஞ்சா தான் பண்ணுவீங்களா?”
“தேவைப்படுது … அது சொல்லுங்க அப்பறம் இந்த கேஸ் பத்தி பேசலாம்… வா நந்து…”, என்றுவிட்டு இருவரும் கிளம்பினர்.
“இங்க நான் ஹெட்ஆ இவன் ஹெட் ஆ?”, நரேன் தனக்கு தானே கேள்வி கேட்டபடி செல்பவர்களைப் பார்த்தான்.